கழுதை சொப்பனத்தில் தபேலா வாசித்த கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 10,919 
 

இசை என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் ஒரு மனநல மருத்துவரை பார்க்க வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்பட்டது. நீங்கள் என்னை வித்தியாசமாய் பார்க்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லாதபடி ஆண்டவன் எனக்கு காதுகளை காதுகள் போலவும், கண்ணை கண் போலவும், ரத்தத்தை ரத்தம் போல சிவப்பாக இருக்கும்படியும் படைத்தான். என்றாலும், நான் ஒரு மருத்துவரை பார்க்க வேண்டியது தவிர்க்க முடியாத நிர்பந்தம் ஆகிவிட்டது.

சாதாரண மனிதர்கள் போல தோற்றத்திலும், உள்ளுக்குள் நிறைய ஓட்டை உடைசலுடனும் நிறைய அப்பிராணிகள் மருத்துவரை பார்க்க உட்கார்ந்திருந்தார்கள். உள்ளே ஒரு மூளைக் கோளாரோடு உரையாடிக் கொண்டிருந்தார் மருத்துவர். வெளியே எவர் முகத்திலும் நாம் இன்னும் சிறிது நேரத்தில் சரியாகிப் போய்விடுவோம் என்ற நம்பிக்கை இல்லை.

இந்த மருத்துவர் தனக்கு உதவியாளனாக ஒரு ஆண் அதுவும் வயது முதிர்ந்த ஒரு கிழடை வைத்திருந்தது எனக்கு பிடிக்கவில்லை. பெண் இருந்திருந்திருந்தால் சந்தோக்ஷப்பட்டிருப்பேன்.

“அடுத்து நீ” கிழவன் சொன்னதும் உள்ளே போனேன். மருத்துவர் ஸ்டெத்ஸ்கோப்பை கழுத்தில் பாம்புபோல் போட்டிருந்தார். அதனால்தான் எல்லா மருத்துவர்களும் தன்னை சிவபெருமான் போல் சர்வ சக்தி படைத்தவர்களாக நினைத்துக் கொள்வதாக நான் நினைத்துக் கொண்டேன். சிவபெருமான் கேட்டார், “ம்… சொல்லுங்க, உங்க பிரச்சினை என்ன?”

“டாக்டர் உங்க கழுத்தில இருக்கிறது உடுக்கை மாதிரி இருக்குது. தருவிங்களா தட்டிப்பாத்துட்டு தந்திடறேன்,” என்றேன்.

எல்லாம் தெரிந்த ஏகாம்பரமோ சர்வ அலட்சியமாக முகத்தை வைத்துக்கொண்டு, “உங்க பிரச்சினை என்னன்னு சொல்லுங்க சார்…” என்றது. ஒருமுறை பாம்புப்பிடாரனிடம் மகுடியைத் தரும்படி கேட்டு அவன் தராததற்காக அவன் பாம்பை பிடித்து தலையை கடித்ததை சொன்னால் உடனே தந்து விடுவார். கொஞ்சம் பயந்த சுபாவமாய்த் தான் தெரிந்தார். ஆனால் நான் சரியாக வேண்டும். அம்மா ரொம்ப வேதனைப்பட்டு அழுவது வேதனையாக இருக்கிறது.

“சொல்லுங்க…”

“டாக்டர் எனக்கு இசைன்னா உசிர். பிடிக்கும்”

“உசிர்ன்னா எல்லார்க்கும் பிடிக்குமே…” என்று சொல்லிவிட்டு சத்தம் வராமல் சிரித்தார். உதடுகள் குவித்து சிரிப்பது அழகு என்று யாராவது சொல்லி இருப்பார்கள்.

“ம்…சொல்லுங்க, உங்களுக்கு அதனால என்ன தொந்தரவு?”

“அதான் சொன்னேனே இசைன்னா உசிர் அதான் பிரச்சினை.”

“என்ன…சதா பாட்டு கேப்பிங்கள?”

“இல்லை வாசிப்பேன்”

“நல்ல விசயம் தானே. என்ன கக்ஷடம் இதில்?”

“அம்மாவுக்கு பிடிக்கலே”

“ஏன்?”

“தெரியலை”

“அவங்க என்ன செய்யறாங்க?”

“கண்ணு தெரியாம செவுத்த புடிச்சிகிட்டு என்னய தேடுவாங்க”

“ஓ… சாரி… நான் என்ன கேக்கறேன்னா… நீங்க இந்த வாசிக்கறதுனால…” எதுக்கு சிரிக்கறாரு. “என்ன பிராப்ளம்ன்னு கேக்கறேன்.” திரும்ப எதுக்கு சிரிக்கறார்.

“அதனால என் வேலையை விடும்படி ஆயிடுச்சு.”

“எதனால? இதனாலயா? நம்பமுடியல. என்ன வேலைக்கு போயிட்டு இருந்திங்க?”

“அலங்கார் கூல்டிரிங்ஸ் பக்கத்து கடையிலே சூடா டீ ஆத்திகிட்டு இருந்தேன். “சொர்… சொர்…,” ஆத்திக் காண்பித்தேன்.

“போதும், போதும், ரொம்ப ஆறிடப் போவுது,” மீண்டும் சிரிப்பு.

“டீ ஆத்தும் போது வர்ற சத்தம் கேக்க நல்லா இருக்கும் டாக்டர். அதனால அத விடாம ஆத்தி ஆத்தி ஆறிப்போனதால பச்சத்தண்ணின்னு எல்லாரும் சண்டைக்கு வர்றாங்க. சார் டீயா சார் முக்கியம்? இசைன்னா எல்லாம் ஏன் ஞான சூன்யமா இருக்காங்க?”

“அத சொல்லு, அதான் வேலைய விட்டு நிறுத்திட்டாங்க… சரியா?” என்று முகத்தை நேர்மையாக பார்த்தார்.

“தப்பு”

“வேற?”

“யாராவது வந்து, “மாஸ்டர் ரெண்டு ஸ்ட்ராங் டீ “ன்னு கேட்டா எனக்கு தெருக் கூத்துல கோமாளி கட்டடிட்டு வருவானே சலங்கை, அந்த ஜலீர் ஒலிதான் கேக்குது. பேசறது சமயத்துல காதுல விழறது இல்லே.”

மருத்துவர் கொஞ்சம் தீவிர முக பாவத்துடன், “ஜலீர்” என்றார்.

“என்ன டாக்டர் கேட்டிங்க?”

“அதனால வேலை காலி… சரியா?”

“தப்பு”

“பின்ன?”

“ஜலதரங்கம் கேட்டிருக்கிங்களா? பீங்கான் கிண்ணத்துல அளவு வித்தியாசமா தண்ணி ஊத்தி, வேற வேற சத்தம் வர குச்சியில அடிப்பாங்களே “டி…டங்…டு…டிங்…”வாயிலும் கையிலும் வாசித்தேன். டாக்டர் வெறுமனே…”

“அந்த சத்தமும் சூப்பர். அதே சத்தம் டீ டம்ளர்லேயும் வரும். டீ போடும்போது ஆறேழு டம்ளர்ல அளவு வித்தியாசமா டீ போட்டு சர்க்கரை ஸ்பூன்லே தட்டினா…அடடா… ஆத்தி குடுத்தா… அடிக்க வராங்க. கால் டம்ளர் டீ அறை டம்ளர் டீன்னு டீயே பயித்தியமா இருக்காங்க”

“அதனால போயிடுச்சா?”

என் வேலை ஏன் போயிற்று என்று கேட்பதிலயே அவர் கவனமாக இருந்தார். அம்மா கூட இத்தனை சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு ஏன் வேலை போயிற்று என்று கேட்கவில்லை.

“டாக்டர் கண்ணாடி ஒடையிற சத்தம் அதைவிட சூப்பர். ஒரே கணம்தான் அந்த சத்தம் கேட்டா ரத்தமெல்லாம் புதுசா ஓடற மாதிரி ஒரு ஜில்லிப்பு. கேட்டு ரசிக்கறவங்களுக்குத்தான் அந்த அனுபவம் தெரியும். அதனால டீ டம்ளர் போட்டு உடைச்சி சத்தம் கேட்டேன். வேலைய விட்டு நிறுத்திட்டான் கிறுக்கன். கேட்டு பாருங்க டாக்டர்.., அந்த சத்தத்தை…” என்று அவர் வைத்திருக்கும் தண்ணீர் டம்ளரை எடுத்தேன்.

“ஏய்.. வை வை… நான் கேட்டிருக்கேன். சரி கை தவறி ஒடைஞ்சிடுச்சின்னு சொல்றதுக்கு என்ன?”

“நான் சொன்னேன். நம்ப மாட்டேன்னுட்டான் கிறுக்கு சூன்யம். ஐம்பது டம்ளர் எப்படிடா ஒரே நாள்ள கை தவறும்னு கேக்கறான்”

“ஐம்பதா? ஒரே நாள்ளையா?”

“டாக்டர் எங்க மொதலாளியோட பின்பக்க..”என்று நான் ஒரு சுவாரஸ்யமான பின்பக்க அவஸ்தைகளை சொல்ல ஆரம்பிப்பதற்குள்; அவர் தன் கழத்து பாம்பை தயிர் கடைவது போல் இழுத்து விட்டுக் கொண்டு தொண்டை செருமியபடி பேச ஆரம்பித்தார். “உன் பிரச்சினை மியூசிக், அதாவது விதவிதமான சத்தத்தை அனுபவிச்சி கேக்கறது. இல்லையா?”

“ஆமாம் டாக்டர். நான் பயித்தியமா?”

“இல்லை. அதெல்லாம் இல்லை. ஆர்வம் அவ்வளவுதான். இது மொதல்ல பிரச்சினையே இல்லன்னு நம்புங்க, பிறகு அப்நார்மலா ஒன்னு ரெண்டு செய்யறிங்க. அத நிறுத்திடுங்க இனிமையான சத்தம் கேட்டுகிட்டே இருக்கணும்னா, பர்மா பஜார் போயி ஒரு வாக்மேன் வாங்கிக்கங்க ஒரு நூத்தைம்பது ரூபாய் இருக்கும். கையில காசு இருந்தா ஒரு சி.டி. சிஸ்ட்டம் வாங்குங்க கேட்டுகிட்டே இருங்க. கண்ணாடி அதுல உண்மையான கண்ணாடி மாதிரி உடையும்”

“அதையும் கேட்டேன் டாக்டர். அத்தனை துல்லியமா இல்லே. குதிரை கனைக்கிற சத்தம் கொஞ்சம் அதேமாதிரி இருந்தது. ஆனா அந்த சிஸ்டம் இருபத்தி அஞ்சாயிரமாமே. அவ்வளவு காசு இருந்தா நான் ஏன் டீக்கடையில மாஸ்டரா கூலிக்கு மாரடிக்கிறேன். அதுவுமில்லாம மூவாயிரம் ரூவா இருந்தாவே போதும் நிஜக் குதிரையே வூட்டு முன்னாடி நாள் பூராவும் கனைக்கும். அந்த சி.டி. சிஸ்டமெல்லாம் கரண்ட் செய்ற மிமிக்ரி. நிஜம் மாதிரி வராது.”

“இல்லைப்பா துல்லியமா இருக்கும்,” என்று சேல்ஸ் மேன் ரேஞ்சிற்கு பேசினார். “குழந்தை அழுதா பக்கத்து வீட்டுக்காரங்க ஏன் குழந்தை அழுதுன்னு கேப்பாங்க,”

“கேப்பாங்களா? அப்ப… சிடியில குழந்தை அழுதா அதுக்கு யாராவது ஊக்கு கழட்டிட்டு பால் குடுப்பாங்களா? சி.டி. சிஸ்டம் முலைப்பால் குடிக்குமா? அது உசிரில்லாததுங்கறது நிஜம் தானே.”

“சரி வேண்டாம் ஒரு ஆர்க்கெஸ்ட்ராவுல சேர்ந்துடேன் வருமானமும் வரும்.”

“சேத்துக்க மாட்டேன்னிட்டாங்க. எதுவுமே வாசிக்கத் தெரியாது பாடத்தெரியாது உன்ன எப்படி சேத்துக்கிடறது. போய் ஏதாவது வாத்தியம் வாசிக்க கத்துகிட்டு வான்னிட்டாங்க.”

“எதுவுமே வாசிக்கத் தெரியாதா? மியூசிக் பிடிக்கும் உசிர்ன்னு சொல்ற ஆனா வாசிக்க தெரியாதா?”

“தெரியாதே..”

“எப்படிப்பா… மியூசிக் ரொம்ப பிடிச்சிருந்தா வாசிக்க கண்டிப்பா தெரிஞ்சிருக்கணுமே…”

“எனக்கு ஆம்லெட்ன்னா ரொம்ப பிடிக்கும் உசிர், ஆனா முட்டை வைக்க தெரியாதே. டாக்டர் முட்டை வைக்க தெரிஞ்சவனுக்குத்தான் ஆம்லெட் புடிச்சிருக்குமா? அதை விடுங்க டாக்டர் நான் வாசிக்கற எதுவும் ஆர்க்கெஸ்ட்ராவுல ஒதவாதுன்னு சொல்லிட்டாங்க தெரியுமா?”

“நீ என்ன வாசிச்சே?”

நான் ஒரு ரப்பர் பேண்டு எடுத்து பல்லில் கடித்து இழுத்து பிடித்து ஆட்காட்டி விரலால் சுட்டினேன் “ப்ரிர்ங்ங்…” என்று வழிந்தது இசை. நன்றாகத்தான் இருந்தது. டாக்டருக்கு ஏனோ பிடிக்கவில்லை. பிறகு அரை பிளேடு ஒன்றை வாயில் கடித்தேன் அதுவும் பிடிக்கவில்லை. முகம் சுழித்தர். சாக்ஸ்போன், புல்லாங்குழல், ட்ரம்ஸ் ஏதாவது வாசித்திருந்தால் முகத்தை அமிர்தம் குடித்த குரங்கு போல் வைத்துக் கொண்டு கேட்டிருப்பார். வயலின் வாசித்திருந்தால் தலையை ஆட்டி கேட்டிருப்பார். எனக்கு வாசிக்கத் தெரியாதது இருக்கட்டும். அவற்றையெல்லாம் வாங்க எங்கு போவேன். காசு வேணுமே. காசுக்கு தேவையே இல்லாம நானா கண்டு பிடித்த இன்னும் ஒன்றிரண்டு வாத்தியங்களை காண்பித்தேன். பேனா மேல்மூடி, பவுடர் டப்பா, இரண்டு சிறிய சீசாக்கள், பிகில், ஒரு பலூன்முட்டை, எதையுமே ரசிக்க வில்லை பணக்கார காது பணக்கார வாத்தியம் கேக்குது.

சின்ன வயசில் தாளம் போடும் குரங்கு பொம்மையை திருடி அம்மாவிடம் இரண்டு கையிலும் ஆழமாய் சூடு வாங்கியிருக்கிறேன். அப்பொழுதும் அந்த குரங்கு போடும் தாளத்தை, மறைந்திருந்து என்னால் பார்க்காமல் இருக்க முடியவில்லை. அந்த பொம்மைக்கு சொந்தக்காரன் என்னை சீண்டியது தான் எனக்கு அழுகையைத் தந்தது. தேவையில்லாமல் என் வீட்டு முன்பாகவே வந்து விளையாடினான். நான் அந்த பொம்மையை பார்த்தால் “திருடா… திருடப்பாக்கிறியா?”என்று மறைத்துக் கொண்டான். அம்மாவிடம் “எனக்கும் வாங்கிக் குடு,” என்று அடம் பிடித்தேன் அம்மா முடியாது என்றோ காசு இல்லை என்றோ கூறவில்லை. வாயின் இரண்டு பக்கமும் சூடு போட்டாள். எனக்கு அப்பாவோ அக்காவோ அண்ணனோ யாருமில்லை அம்மா மட்டும் தான் அவளே இப்படி செஞ்சா யார் தடுக்க முடியும் யார்கிட்ட கேட்பது, அழுவது. நானே மரத்தடிக்கு போய் அழுது சமாதானம் ஆனேன். ஆனால் அந்த குரங்கு பொம்மை?

அதற்கு மாற்றாய் ஒரு வாத்தியம் கண்டு பிடித்தேன். தேங்காய் சிரட்டையில் பசைபோட்டு பேப்பர் ஒட்டி வெய்யிலில் காயவைத்து தட்டினேன் எந்தக் குரங்கு பொம்மையும் அவ்வளவு அழகா தாளம் தட்டாது. பொம்மைக்கு சொந்தக்காரன் அந்த சிரட்டை மேளத்தை கேவலமாக ஒரு பார்வை பார்த்தான். அந்த பார்வைதான் எம்பெருமானாக தன்னை நெனைச்சிக்கிட்டு இருக்கிற டாக்டர்ன்னு சொல்லப்படற இந்த மருத்துவராகப்பட்ட திருவாளர் ஞான சூன்யம் பாக்கற பார்வை.

அந்த பையனுக்கு சிரட்டை பொம்மை யார் செஞ்சி தருவா. அவனுக்கு ஏக்கம் வந்திடுச்சி. எனக்கு கர்வம் வந்திடுக்சி. என் தாளத்தை அம்மா வந்தமும் மறைத்துக் கொண்டேன் இன்னொரு முறை சூடு? அப்படியும் அம்மா ஒருமுறை அதை பார்த்துவிட்டாள.; பயந்தேன். அம்மா அதைவாங்கி பார்த்தாள். என்னை ஒரு முறை பார்த்தாள். அதையும் பார்த்தாள். தட்டிப்பார்த்தாள். கொஞ்சம் அதிசயப்பட்டாள். என்ன நினைத்தாளோ என்னை கட்டிக்கொண்டு அழுதாள், “உன் அப்பா இருந்திருந்தா..”என்று அழுதாள். அதுதான் அம்மா. அடித்தாலும் கட்டிக்கொண்டு அழுவாள். இந்த டாக்டர்மட்டும் மனசு மாறுவதாய்த் தெறியவில்லை இதன் அருமை எருமைக்கு (மன்னிக்கனும் மருத்துவரே..)எங்க தெரியப்போகுது, என் முன் அதே சொரூபத்தோடே கழுதைவந்தது “இவர்கள் கர்ப வாசனை மறந்தவர்கள் ஆதி ஸ்ருதியின் லயம் அதன் தெய்வீகம் தெரியாதவங்க இவர்களை விடு நீ வாசி… வாசி… வாசி…” என்று சொன்னது.

மருத்துவர் என்னை உலுக்கிக் கொண்டிருந்தார்.

“ஹல்லோ… அப்பாடி… பேசிக்கிட்டே தூங்கறிங்க. இதுல கொறட்டை வேற. நல்ல ஆள்” என்றதும் நான் நிமிர்ந்து உட்கார்ந்து வாய் துடைத்துக் கொண்டேன். “எப்ப இருந்து இதெல்லாம் வாசிக்கறிங்க? நல்லாயிருக்கு, “என்றார்.

எனக்கு சந்தோக்ஷம் வந்துவிட்டது “கழுதை வந்து கனவுல தபேலா வாசிச்சதில இருந்து”என்றேன்,

மருத்துவர் அதிசயமாக கேட்டார் “கழுதை தபேலா வாசிக்குதா?”

“ஆமாம் டாக்டர். வெள்ளை நிறம், கத்தை கத்தையா பிடரிமுடி, உள்ளைங்கையிலே வச்சிக்கிற அளவுக்கு சிறுசு அழகா இருக்கும், அற்புதமா வாசிக்கும்; தாளம் தப்பாம, ஸ்ருதி பிசகாம ராத்திரி பூரா வாசிக்கும். அதான் சொல்லிச்சி நீங்க கேக்கற ரேடியோ, டேப்ரிகார்டர், சி.டி. சிஸ்டம், எல்லாம் பொய். யானை கத்தறமாதிரியான வாத்தியம் பொய். குருவி கத்தறமாதிரி ஊதற பிகில் பொய்; இளையராசா, ரஹ்மான், யானி, அனுமாலிக், மோசர்ட, பீத்தோவான் எல்லாம் பொய்யின்னு”

“பீத்தோவன் கூட தெரியுமா அதுக்கு? அந்த கழுதைக்கு…”

“தெரியும். அதுக்கு உலகத்தில இருக்கிற சகல வாத்தியமும் தெரியும். அந்த வாத்தியம் தர்ற நாதமும், அதன் இசைக் கோர்வையும், அதன் மூலமும் தெரியும் அதுக்கு.”

“எப்படித் தெரியும்?”

“போற எடத்துல எல்லாம் தேடித்தேடி அலுக்காம கேக்கும். கொஞ்சம் காசு குடுத்து கொஞ்சம் ஓசியில.”

“எவ்வளவு நாளா கனவுல வருது?”

“ரொம்ப நாளா”

“ரொம்பன்னா… ரெண்டு வருசமாவா?”

“இல்ல நான் ரெண்டாவது படிக்கும்போதிருந்தேன்னு நினைக்கிறேன். சரியா ஞாபகம் இல்ல. ஆனா அந்த கழுதை போன ஜென்மத்திலே இருந்துன்னு சொல்லுது. போன ஜென்மத்திலே நான் ஆந்தை.”

“கழுதை பேசுமா?”

“பாடற கழுதைக்கு பேச தெரியாதா?”

“என்ன பாட்டு பாடும்?”

“அண்டக் குகை இருட்டிக்கிடக்கு
அதிலே ஒலியெல்லாம் சுருண்டு இருக்கு
சுருண்ட சர்பத்தை எழுப்புது நெருப்பு
பாம்ப விழங்கிய சூரியன் கறுப்பு
இரவின் நிலவு பாலாய் ஜெhலிக்கும்
இசை கேளா செவிக்கென
இதயம் வெடிக்கும்

இப்படி அது பாடும்”

“அர்த்தமே இல்லாம பாடும் போல இருக்குதே…என்ன அர்த்தம் இந்த பாட்டுக்கு?”

“அர்த்தமா? செத்ததும் என்ன ஆவிங்க நீங்க? சும்மா சொல்லுங்க… அப்ப உங்க பேரு பொணம். பொணத்துக்கு காது கேக்குமா? கேக்காது. காதுல மந்திரம் சொல்லுவாங்க, சவத்துக்கு முன்னாடி தப்பு அடிச்சி ஆடுவாங்க இதுல அர்த்தம் இருக்கா? கேளா செவின்னா செவிடுன்னு அர்த்தமில்லை செத்த காதுன்னு அர்த்தம் ஒருநாள் எதையும் கேக்க முடியாது சத்தமே சுத்தமா இல்லாம சூன்யமாயிட்டா அதான் நரகம், அதான் சாவு . எல்லாம் கழுதை சொன்னது.”

“இன்னும் என்ன சொல்லுது அந்த கழுதை…” மருத்துவருக்கு அந்த கழுதையின் மேல் ஒரு வெறுப்பு தெரிந்தது.

“டாக்டர் உலகத்துல இருக்கிற எல்லா ஜீவராசியும் ஜென்மம் எடுத்து வாழறதும், மனுக்ஷனோட ஒவ்வொரு நடவடிக்கையும், சின்ன சின்ன ரோம அசைவும் விரைப்பும் கூட பாலுறவை மையமா வச்சித்தான். இல்லைங்களா? சிக்மண்ட் பிராய்டும் அதைத்தானே சொல்லறாரு?”

“கழுதை சிக்மெண்ட் பிராய்டு படிச்சிருக்கா?”

“நானே படிச்சிருக்கேன்”

“பிராய்டா?”

“ம்…பிராய்டு, ரசல், கலில்ஜிப்ரான், காரல் மார்க்ஸ் எல்லாம் படிச்சிருக்கேன். ஓஷோ என்ன சொல்லி…”

“ரெண்டாவது படிச்சவன் ரசல் படிச்சியா?”

“ரெண்டாவதா? நானா? நான் பி.ஏ. பொருளாதாரம்.”

“பி.ஏ. பொருளாதாரமா? அப்புறம் டீ டம்ளர் ஒடைக்கிறே?”

“பி.ஏ. படிச்சவன் ஒடைக்கமுடியாத கண்ணாடி டம்ளர் இருக்கா? ஒடையாதா? என் பொருளாதாரம் டீக்கடைக்குத்தான் என்ன அனுப்புச்சி. அது சத்த வெறி, இசை ஆர்வம் உலகத்திலேயே பெரிய வாத்தியம் எது தெரியுமா டாக்டர்…”

“சொல்லு…”

“லேடிஸ் யாரும் வரமாட்டாங்களே?”

“வரமாட்டாங்க சொல்லு”

“லேடிஸ்தான் டாக்டர். பக்கட்டுல தண்ணி முழுசா நிரப்பி குழாய மூடிட்டா சொட்டு சொட்டா விழுமே உருண்டையா தண்ணிசொட்டு ப்ளக்… பிளக்…னு அந்த சத்தம் எதையோ ஊடுருவி நொழஞ்சமாதிரி… அப்பத்தான் பிராய்டு உதவிக்கு வர்றார்.”

“இதான் பெரிய வாத்தியமா? அந்த லேடீஸ்?”

“ம்…நல்ல பருமனான பிருக்ஷடம் பருத்த பொம்மனாட்டி தபேலா அதிர்வ வெளிகாட்டாத உசுப்பேத்தி மெத்துன்னு ஒரு சத்தம் தட்டி பாத்திருக்கிங்களா? ஒருமுறை ஒதட்டுல ரத்தம் வர தர்ம அடி தந்தாங்க இத்தனைக்கும் அவ எழும்பு, ஒன்னுமே இல்லை,.”

“அட பயித்தியமே.. எதும் சொல்லாத, உன் பிரச்சினை ரொம்ப ஈஸியானது. இத ஏன் மொதல்லயே சொல்லல, உனக்கு பிடிச்சது இசைப்பைத்தியம் இல்ல. கல்யாண ஆசை. அம்மா கிட்ட சொல்லி கல்யாணம் பண்ணி வெக்க சொல்லு.”

டாக்டர் இதை சொன்னதும் எனக்கு அவர்மேலும் என்மேலும் பரிதாப உணர்ச்சி ஒருங்கே எழுந்தது. அடப்பாவமே! ஒரு கத்து குட்டிகிட்டே வந்துட்டமே. “ஏங்க சார்…நீங்க மனநல மருத்துவர்தானே. வெளியே போர்ட பாத்துட்டுதானே வந்தேன்…” என்று என் சந்தேகத்தை கேட்டேன்.

“என்னப்பா சந்தேகம். சாட்சாத் அதேதான், அதான் கரக்ட்டா உன் ப்ராப்ளத்தை கண்டுபுடிச்சிட்டேனே.”

“இல்லை, அது இல்லை. ஏழு வயசிலேர்ந்து எனக்கு இப்படி இருக்கு. ஏழு வயசு பையனுக்கு கல்யாண ஆசைன்னா சிரிப்பாங்க. நான் தேடறது சுத்தமான சத்தம். உண்மையான நிஜமான சத்தியமான இசை. அதை தேடப்போயிதான் நான் பயித்தியம் ஆயிட்டு இருக்கேன். பலபேர் கிட்டே அடி வாங்கியிருக்கேன் புளிய மரத்துல கட்டி வச்சி ஒருமுறை ரத்த விளாராக்கிட்டாங்க. சுவத்தில மரத்துல, மேஜையில, கண்ணாடியில, தண்ணியில, காத்துல, ஆகாசத்துல, சொட்டைத்தலை, பருத்த வயிறு, பிருக்ஷடம் இங்கெல்லாம் நான் தேடறது சுத்தமான ஒலி, அது எழுப்புற உயிருள்ள சத்தம்”

“ராத்திரியில கூரைமேல விழற மழைச்சத்தம் தான் இசை. கிணத்து தண்ணியில வேலிப்பூ விழற மெத்துன்ற சத்தம், தென்னைய காத்து உலுக்குற ஓங்காரம், வைக்கோல் போர் பத்திகிட்டு எரிகிற நெருப்பின் சத்தம் இதுதான் இதுதான்…”

“சின்ன வயசிலேர்ந்து நான் தேடிகிட்டு இருக்கிறது இதைத்தான், அம்மா அவஸ்தைகள் எனக்கு பொருட்டே இல்லாம போயிடுச்சி. அம்மா அடிச்சா, என்ன ஒடைச்சா எதுக்கும் நான் சரிப்பட்டு வரலே.அம்மா தடுக்க தடுக்க நான் வெறிபிடிச்சவன் மாதிரி அதையேதான் தேடிகிட்டு இருந்தேன். யார் தடுத்தும் நிக்காத பிரம்ம ராட்சச தேடல் இது. இதுக்கும் கல்யாணத்துக்கும் உங்க மனநல மருத்துவம் முடிச்சி போட்டா உங்க மனநல மருத்துவம் நாசமா போகட்டும். உங்க படிப்பு எதுக்கும் ஒதவாம போகட்டும். இதைத்தான் கண்டு புடிச்சிங்களா? கல்யாணம் இசைய தருமா? நாராசமாய் இருக்கும். எனக்கு புடிக்காது.”

“உண்மையான லயத்தை, ஸ்ருதிய புடிக்கிற நேரத்திலே என் கன்னத்திலே அறைஞ்சி இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பறம்ன்னு சொன்னாளே அந்த பப்பி, என் நாய்குட்டி அவள விட நீங்க என்னை புரிஞ்சிப்பிங்களா? அவகிட்டே சொன்னது தான் உங்களுக்கும், ‘ஒழிஞ்சி போங்க’ கல்யாணம் வெறும் முடிச்சி. மூணோ, ஆறோ, ஒன்பதோ வெறும் முடிச்சி அது என் தலையில எழுதல, எனக்கு பிடிச்கல.”

“எனக்குள் இருக்கிற ஆர்வத்தை வெறிய எப்படி அடக்கிட்டு இருப்பேன். நான் செய்யறது உபயோகமானது இல்லேன்னு எனக்கு தெரியும், ஆனா உபயோகமா என்ன செய்றதுன்னு அம்மா சொல்லல. மாட்டுக் கொட்டகைய பத்த வச்சி, ஒரு பையன கெணத்துல தள்ளி, பஸ் கண்ணாடிய ஒடைச்சி நான் நெறைய அடி பட்டுட்டேன். நாசம் பண்ணணும்னு எண்ணம் இல்லே.

“ஒரு வருசம் பக்கத்திலே இருந்த காட்டுக்குள்ளே பரதேசி மாதிரி அலைஞ்சேன். மூணு வருசம், சாராயம் காய்ச்சனதா உள்ளே இருந்தேன். நான் தப்பு பண்ணலை அம்மாவுக்கோ யாருக்குமோ புரிய வைக்க முடியல. படிக்கிற காலத்துல… அதான் மிக அசிங்கமான வாழ்க்கை படிச்சதை செய்யமுடியாத விலங்கு, நரகம்… டாக்டர் நான் பயித்தியமா? இங்க பாருங்க எவ்வளவு பெரிசா கிழிஞ்சிருக்கு. சைக்கிள் செயின்ல அடிச்சான் இன்னைக்கு”

“அய்யோ… என்னய்யா இவ்வளவு பெரிய காயம், ரத்தம் வருதேய்யா… நர்ஸ்… இவருக்கு கொஞ்சம் மொதல்ல டிரஸ் பண்ணிவிடுங்க. மொத நீ போய் காயத்துக்கு மருந்து போட்டுக்க போ…”

“வேணாம் டாக்டர்.. இன்னக்கி நான் எதும் செய்யல பொம்மனாட்டி அடிவயித்துல உள்ளங்கை பதிய தட்டறது தப்பா?”

“தப்பில்லே. அது உன் பொண்டாட்டியா இருந்தா தப்பில்லே. எங்க வேணும்னாலும் தட்டலாம், சத்தமெழுப்பலாம். கல்யாணம் பண்ணிக்க. மொதல்ல மருந்து போட்டுக்க,”

“டாக்டர் நான் சரியாகமாட்டேன். என் அம்மாவ காப்பாத்துங்க”

“அவங்களுக்கு என்ன?”

“ஒன்னுமில்லே, குருடு சோத்துக்கு கக்ஷட்டப்படுவா. மூத்திரம் போக வர உதவிக்கு ஆள் வேணும்..”

“நீ இருக்கியே…”

“நான் இருக்க மாட்டேன் டாக்டர்.”

“எங்க போயிடுவே?”

“பிளேடால சதைய ஆழத்துக்கு அழுத்தி கிழிச்சா சத்தம் கேக்குமா?”

“என்னாய்யா பேத்தல் இது. எப்படி கேக்கும்?”

“எனக்கு கேக்குது, மெலிசா ஸ்…ன்னு ஒரு சத்தம். என் கழுதை சொல்லுது குரல்வளையில பிளேடால இழுத்தா உலகமே இல்லாததுக்கு முன்ன இருந்த அந்த ஓங்கார சத்தம் கேக்குமாம். சத்தத்தில பிறந்தது தான் இந்த உலகம் அதை கேக்கணும். நான் இதோ இந்த பிளேடால அந்த சத்தத்தை கேப்பேன். அதுக்காக இப்பத்தான் வர்ற வழியில வாங்கிட்டு வந்தேன்;…”

டாக்டர் பயந்து போய் எழுந்து நின்று, “டேய் குருசாமி… உள்ளவாடா… சர்மிளா.. .நர்ஸ்…” என்று பதற ஆரம்பித்தார். “கொலை வெறியே இருக்கு, சீரியஸ் கேஸ்… பிடிடா அவனை, பாத்து கிழிக்கப்போறான்” என்றார். நான் பிளேடை உள்ளே வைத்துக் கொண்டேன்.

“டாக்டர், பயப்படாதிங்க என் குரல்வளைய சொன்னேன் யார் குரல்வளையையும் அறுக்க மாட்டேன். இவங்களை போகச் சொல்லுங்க. என் அம்மாவ காப்பாத்துங்க.”

டாக்டர் அதற்கு மேல் பொறுமையாக இல்லை, வேக வேகமாக மருந்து எழுத ஆரம்பித்தார்.

“டாக்டர் ஏன் என்ன வெரட்டப் பாக்கறிங்க, மருந்து எழுதி என்ன அனுப்பிட பாக்கறிங்க. நான் தேறாத கேஸ்னு முடிவு பண்ணிட்டிங்க, தெரியுது. போனா போகட்டும் அம்மாவ மட்டும் காப்பாத்துங்க…”

எழுதிவிட்டு நிமிர்ந்து பார்த்தார். பார்வையில் வருத்தமும் பரிதாபமும் தெரிந்தது. எனக்கு ஆறுதலாக இருந்தது.

“நான் வெளியே அனுப்ப பார்கலே. இதைவிட சீரியசானதையெல்லாம் பாத்திருக்கேன். உனக்கு வந்திருக்கிறது தற்கொலை மனோபாவம். அதைத்தான் இசை ஆர்வம்னு நீ தப்பா நெனைச்சிட்டு இருக்கிறே இசைன்றது பொய்; எதையோ தேடற. நீ விரும்பினது ஏதோ உனக்கு கிடைக்கல. உன் கதை தெரியணும். மொத இந்த மருந்த ஒருவாரம் விடாம சாப்பிடு நல்லா தூக்கம் வரும். எல்லாத்தையும் தைர்யமா பாரு தைர்யமா இரு சுலபமா எடுத்துக்கோ சரிபண்ணிடலாம். உன் அம்மாவ நீயே மகாராணி மாதிரி காப்பாத்தலாம் போய் மருந்து சாப்பிடு மனசு ரிலாக்ஸ் ஆகும். உனக்கு வைத்யம் பாக்க கொஞ்சம் காசு செலவு ஆகும். எட்டு பத்து ரூபாய் ஆகும். இப்போதைக்கு இந்த மருந்து மட்டும் போதும் வாங்கிக்க.”

“மருந்துக்கு எவ்வளவு ஆகும்?”

“நானூறுகிட்டே ஆகும்.”

“ஐம்பது ரூபாய்தான் இருக்கு “

“கக்ஷடம், வீட்டுக்கு போய் கொண்டு வார்றியா?”

“வீட்டுலே என் அம்மாவும் அவளோட ரெண்டு குருட்டு கண்ணும் தான் இருக்கு, வேற எதும்; இல்லே. கண்ணோட இருக்கிற வரையில அம்மா என்னென்வோ வேலை செஞ்சி சம்பாதிச்சா. அவளோட கண்ணும் என் இசை ஆர்வத்திலதான் போச்சி. என்னோட செய்கைய பாத்து அவ என்னை காட்டாத மந்தரவாதியுமில்லே காட்டாத டாக்டரும் இல்லே. பூசாரிகள் இந்த தோசம் அந்த தோசம் என்று அம்மாவின் கொஞ்சம் காசையும் தொடைச்சிட்டாங்க. அறுபது வயசில் நூறு வயசு கிழவிபோல் அவள் இருப்பது என்னால் தான்.”

“டீக்கடை வேலையும் போய் வறுமை அதிகமாச்சி. சாப்பாட்டுக்கு வழிதெரியாம போச்சி. எல்லாருக்கும் வயிறு பெரிசு, எனக்கு என் காது பெரிசு. உலகத்தையே விழுங்கிடணும்னு சீறிக்கிட்டு இருந்த என் ஆர்வத்தை அம்மா அடக்கினா. அவள இந்த பாம்பின் பல் கடிச்சிடுச்சி. அவளும் தான், எல்லாம்தான் இதுக்கு காரணம். சிறுவயசில எனக்கு அம்மா ஒரு நல்ல வடிகாலா இருந்திருக்கணும். இப்ப நான் வழிதெரியாம பாதாளம் நோக்கின தண்ணி மாதிரி விழுந்துகிட்டு இருக்கிறேன்.”

டாக்டர் பரிதாபப்பட்டு இலவசமாய் தந்த மருந்தை பெற்றுக்கொண்டு, அவர் வழுக்கைத் தலையிலும் அவர் எதிர்பார்க்காத நேரத்தில் கடம் வாசித்துவிட்டு, இடுப்பொடிந்த அம்மாவிடம் சந்தோசமாய் சொன்னான் “நான் சரியாயிடுவேன். டாக்டர் சரிப்படித்திடுறேன்னு சொல்லியிருக்கார் நான் பயித்தியமில்லை என்று சொன்னார்” என்றேன். அம்மா அப்படியானால் நான் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துவேன் என்று சொன்னாள்.

நடு இரவில் கிழவியின் காதில் “பிரிக் ப்ரிக்..” என்று சத்தம் கேட்கவே “என்னப்பா சத்தம் ?” என்று கேட்டாள்.

“பாரும்மா…டாக்டர் குடுத்த மருந்து பாட்டில்லே மணல் போட்டு, அந்த மாத்திரையும் பிரிச்சி போட்டு அடைச்சி குலுக்கினா, நட்சத்திரம் வானத்திலேர்ந்து விழுற மாதிரி சத்தம் கேட்கிறது” என்று சந்தோசமாய் கூறினான். இசை அவனுக்கு உயிர். இதனால்தான் கிழவிக்கு இசை என்றால் சிறிதும் பிடிப்பதில்லை. அதனால் அவளை மன நல மருத்துவர் ஒருவரிடம் காட்ட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அந்த கழுதை அவன் கனவில் அன்று இரவு நொண்டிக்கொண்டே வந்தது. எவர் ரூபம் அது?.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *