கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: December 21, 2023
பார்வையிட்டோர்: 2,833 
 
 

(2010ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

குறிப்பு: ஸ்மார்ட் போன் பயன்பாடு, செல்பி பரவலாக ஆவதற்கு முன்பாக, 2010-ல் எழுதப்பட்டது இந்தச் சிறுகதை – எஸ்.மதுரகவி. 

 காலை பத்து மணி. நல்ல வெய்யில். வியர்த்து விறுவிறுக்க இரண்டு சக்கர ஊர்தியில் அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தாள் இளம்பெண் சுதா. மேற்கு மாம்பலம் தம்பையா தெருவில் உள்ள ஓர் அடுக்கக கட்டிடத்தை நோக்கி விரைந்தாள். வண்டியை நிறுத்தினாள். முதல் மாடியில் இருந்த அலுவலகத்திற்குள் நுழைந்தாள். ஊழியர்கள் தெரிவித்த வணக்கத்தை ஏற்றுக் கொண்டு குளுகுளு அறைக்குள் நுழைந்தாள். அவளுடைய இருக்கையில் அமர்ந்தாள். ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். தண்ணீர் பருகினாள். குளுகுளு அறையில் மற்றொரு இருக்கையில் அமர்ந்திருந்த அவளுடைய கூட்டாளி இளைஞி சுபா கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தாள். கம்ப்யூட்டரிலிருந்து வைத்த கண் வாங்காமல் குட்மார்னிங்பா என்றாள் சுபா. குட்மார்னிங் என்று ஈனஸ்வரத்தில் கூறிய சுதா தன்னுடைய லேப்டாப்பில் மின் அஞ்சல் பார்த்தாள். மூடி வைத்தாள். இப்பொழுது இவளைத் திரும்பிப் பார்த்த சுபா பேச்சுக் கொடுத்தாள். 

‘என்ன ஒரே யோசனை?’ 

‘ம்ஹும் இந்த டிடக்ட்டிவ் ஏஜென்சிய எதுக்கு நடத்தறோம்? பத்து தேதி வரைக்கும் ஒரு ஆர்டரும் வரமாட்டேங்குதே’ 

‘என்ன செய்யலாம்ங்கற?’ 

‘உனக்கு என்ன கம்ப்யூட்டர்ல கேம்ஸ் ஆடிக்கிட்டு இருப்ப. மாசம் பிறந்தா சம்பளம் வாடகைன்னு எல்லாரும் என்கிட்ட இல்ல வந்து நிப்பாங்க’. 

‘சரி எல்லாருக்கும் பைசா பாக்கி இல்லாம செட்டில்பண்ணிட்டு திருமணமலர்ல விளம்பரம் போட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டு ஹவுஸ் ஒஃப் இல்ல ஹோம் மேக்கர் ஆயிடலாம்’ அலட்டிக் கொள்ளாமல் சுபா பேசினாள். 

‘என்ன இப்படி பேசறே?’ கடித்து கொண்டாள் சுதா. 

‘பின்ன என்ன தினசரி வியாபாரமா பண்றோம்? புராஜெக்ட்ஸ் வரும்போது அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கணும். வர்றவரைக்கும் கொக்கு மாதிரி காத்துக்கிட்டுத்தான் இருக்கணும். ஒரு வேலை இருக்கு … நீ இறங்கலாம்னு சொன்னா இறங்கிடலாம்’.

‘என்ன சொல்லு’ என்றாள் சுதா.

‘அசோக் நகர்ல இருக்காங்களே. போலீஸ் அசிஸ்டன்ட் கமிஷனர் ராஜேஸ்வரி அவங்களோட தங்கைய ஒரு வாரமா காணோம். இந்த விஷயத்தை கமுக்கமா அமுக்கி வைச்சிருக்காங்க. ஆனா போலீசால ஒரு துப்பும் கண்டு பிடிக்க முடியல… என்றாள் சுபா.

‘அதனால்…’ 

‘அதனால்… ராஜேஸ்வரிக்கு தங்கச்சி மேல கொள்ளைப் பிரியம். போலீசுக்கு முன்னால நாம முந்திக்கிட்டு காதும் காதும் வைச்சா மாதிரி அவங்க தங்கச்சிய கண்டுபிடிச்சுக் கொடுத்துட்டா, ராஜேஸ்வரி நம்மள நல்லா கவனிப்பாங்க. தாராவை நான் பார்த்தது இல்ல’ என்றாள் சுபா. 

‘கவனிப்பாங்கன்னா வேறு மாதிரி கவனிச்சுடப் போறாங்க… சரி. இறங்கிடலாம்’ என்றாள் சுதா. 

‘சரி நாளைக்கு காலைல சைக்கிள்ல எங்க வீட்டுக்கு வா. அசோக்நகருக்குப் போவோம்.’ என்றாள் சுபா. 

‘சைக்கிள் எதுக்கு?’ என்றாள் சுதா. ‘உன் உடம்பு குறையும் இல்ல அதுக்காக’ என்றாள் சுபா. 


மறுநாள். ஞாயிற்றுக் கிழமை காலை ஏழு மணியளவில் மிதி வண்டிகளில் சுபாவும், சுதாவும் அசோக்நகர் ஏழாவது நிழற்சாலைக்குச் சென்றார்கள். ஒரு வீட்டிலிருந்து தனிப்பயிற்சி முடித்து பள்ளி மாணவிகள் சென்று கொண்டிருந்தார்கள். சுபாவின் மிதிவண்டி, ஒரு மாணவியின் மிதிவண்டியுடன் மோதியது. அந்த மாணவி கீழே விழுந்தாள். சுதா தனது மிதிவண்டியை நிறுத்திவிட்டு அவள் எழுந்து நிற்க உதவி செய்தாள். 

‘என்ன பார்த்து வரமாட்டீங்களா….’ எரிச்சலில் அந்தப் பதின் பருவமங்கை. 

‘இல்லம்மா… அவங்க பார்த்துத்தான் வந்தாங்க. நீ தான் ஏதோ யோசனையில் இருந்துட்டேபோலிருக்கு. நான் சுதா இவங்க பேரு சுபா. துருதுருன்னு இருக்கியே… உன்பேரு… என்ன…’ 

‘கண்மணி…’ யோசனையா வந்தேன்னா சொல்றீங்க. ப்ளஸ் டூ ஃபைனல் எக்ஸாம்… அதனால்… அப்புறம் என் ஃப்ரெண்டு தாரா நல்லா படிப்பா அவ. அவளை ஒரு வாரமா காணோம். அவ நெனப்பாவே இருக்கேன். எங்க போனாளோ என்ன ஆனாளோன்னு அவங்க அம்மாவும் அக்காவும் கவலையா இருக்காங்க அவளோட மொபைலும் ஆஃப்லய இருக்கு…’ 

நோட்டுப் புத்தகத்திலிருந்து வண்ணப் புகைப்படத்தை எடுத்தாள் கண்மணி. 

‘பாருங்க. நானும் அவளும் சேர்ந்து எடுத்துகிட்டு ஃபோட்டோ நாங்க ரெண்டு பேரும் அவ்வளவு நெருங்கினதோழிகள்… சரி நான் வரேன் அக்கா… படிக்கற வேலை நிறைய இருக்கு…’ 

மிதி வண்டியில் ஏறி அமர்ந்து சிட்டாகப் பறந்தாள் கண்மணி. 

‘இது என்ன அந்த பொண்ணு காமிச்ச போட்டோ உன் கையில எப்படி வந்தது?’ சுதா கேட்டாள். 

‘அந்தப் பொண்ணு ரெண்டு மூணு ஆங்கிள்ல போட்டோ வைச்சிருந்துச்சு.. அதுக்கே தெரியாம சுட்டுட்டேன். என் ட்ரிக் ஒர்க் அவுட் ஆயிடுச்சு பார்த்தியா… தாராவோட போட்டோ கிடைச்சிருச்சே.’ என்றாள் சுபா. 

‘நல்ல துப்பறியும் சிங்கம்தான் சரி இப்ப என்ன பண்ணப்போறோம்?’ சுதா கேட்டாள்.

‘முதல்ல டிபன் சாப்பிடுவோம். வா, பசிக்குது.’ 

இருவரும் மிதிவண்டியில் ஏறி அமர்ந்து மேற்கு மாம்பலம் நோக்கிச் சென்றார்கள். 


மாலை நான்கு மணி. சுபாவும் சுதாவும் புறநகர் ரயிலில் பயணம் செய்து தாம்பரம் ரயில் நிலையம் வந்தடைந்தார்கள். சுரங்கப் பாதையில் இறங்கினார்கள். 

‘அந்தப் பொண்ணுக்கு விபரீதமா எதுவும் நடந்திருக்காதே….’ சுதா பேசினாள். 

‘நல்லதை நினை மனமே பொல்லாததை நீ நினைக்காதேன்னு யேசுதாஸ் டிவி பேட்டியில ஒரு பாட்டு பாடினாரு. நீ பார்க்கலையா? நல்லதே நினைப்போம்…’ சுபா பதில் அளித்தாள். 

‘சரி. தாம்பரத்துல அந்தப் பொண்ணு கண்ல தென்படும்னு என்ன நிச்சயம்…’ சுதா கேட்டாள். ‘நிச்சயம் ஒண்ணும் இல்ல. இருட்டு அறையில் கருப்புப் பூனைய தேடறமாதிரி தான். பூனையைப்பிடிச்சுட்டா நாம கில்லிதான்’. சுபா நம்பிக்கையுடன் பேசினாள். இருவரும் சுரங்கப்பாதையிலிருந்து மேலே வந்தார்கள். சுபாவின் கண்களை அவளாலேயே நம்ப முடியவில்லை. நீல நிற பாவாடை தாவணி அணிந்த ஒரு பதின்பருவ மங்கை கையில் காய்கறி மற்றும் சாமான்கள் நிறைந்த பையுடன் அவர்களைக் கடந்து சுரங்கப்பாதையில் இறங்கினாள். சுபாவும் சுதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இருவரும் அவளறியாமல் அவளைப் பின் தொடர்ந்தார்கள். அந்த பதின் பருவ மங்கை முடிச்சூர் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள். சுபாவும் சுதாவும் அதே பேருந்தின் பின் பக்கத்தில் நுழைந்தார்கள். 


மாலை ஆறு மணி. 

முடிச்சூரில் உள்ள கருணாகரன் முதியோர் இல்லம். முதியோர் இல்லத்தின் முகப்புப்பகுதியில் புதர் வேலிகளும் விளிம்புப் புதர்களும் நன்றாக அமைக்கப்பட்டிருந்தன. உள்ளே நுழைந்ததும் பூச்செடிகள் சுகந்தமான நறுமணத்தைப் பரப்பின. பெரியவர் கருணாகரன் நுழைவாயில் அருகே நாற்காலி ஒன்றில் அமர்ந்திருந்தார். சுபாவும் சுதாவும் அவரைப் பார்த்து வணக்கம் தெரிவித்தனர். முதியோர் இல்லத்தைச் சுற்றிப் பார்க்க விரும்புவதாகக் கூறினார்கள். அவர் தலையசைத்தார். இருவரும் உள்ளே சென்றார்கள். சுபா மொபைலில் மெசெஜ் அனுப்பிக் கொண்டிருந்தாள். ‘சின்னப் பொண்ணுங்க மாதிரி எங்க வந்தாலும் எஸ்.எம்.எஸ். பண்ணிக்கிட்டு இருக்கே…’ சிடுசிடுத்தாள் சுதா. அவர்கள் தேடி வந்த தாரா அங்கே இருந்த மூதாட்டிகளிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாள். அவர்கள் கேட்பதை எல்லாம் உடனடியாகக் கொடுத்துக் கொண்டிருந்தாள். தாத்தாக்களும் அவளை அன்புடன் அழைத்து வேலை வாங்கிக் கொண்டிருந்தார்கள். சுபாவும் சுதாவும் அவள் முகமலர்ச்சியுடனும் துடிப்புடனும் பம்பரமாகச் சுழல்வதை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். ஆறரை மணி. மீண்டும் நுழைவாயில் பகுதிக்கு வந்தார்கள் சுபாவும், சுதாவும். பெரியவர் அங்கு இல்லை. நாற்காலி மட்டும் இருந்தது. ‘நீ உன்துப்பட்டாவைத் தூக்கி விட்டுக்கலாம்’ என்றாள் சுதா. பேசாதே என்று சைகை செய்தாள் சுபா. 

துடைப்பத்துடன் அங்கே வந்தாள் தாரா. குனிந்து பெருக்கத் தொடங்கினாள். அவர்களிடம் பேச்சு கொடுத்தாள். ‘நீங்கதான் முதியோர் இல்லத்தைப் பார்க்க வந்தவங்களா… யாரையும் சேர்க்க வரலியே… பணம் நிறைய சம்பாதிக்கறாங்க… அப்பா அம்மாவை இங்க வந்து விட்டுறாங்க. பாருங்க. ஆனா இங்க எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க. கருணாகரன் தாத்தா அப்படி கவனிச்சுக்கறாரு. என்னைமாதிரி சின்னவங்களுக்கும் அடைக்கலம் தர்றாரு. நான் வந்து ஒரு வாரம் தான் ஆச்சு. மாற்று உடையே இல்லாம வந்த எனக்கு பாவாடை தாவணி வாங்கிக் கொடுத்தாரு. இது ஒரு புது உலகம். இவங்களோட நான் சந்தோஷமா இருக்கேன்….’ படபடவென்று மூச்சுவிடாமல் பேசினாள். சுபாவும் சுதாவும் அவளை விழி விரிய ஆச்சரியமாய்ப் பார்த்தார்கள். 

‘நீ நல்லா பேசற தாரா. இந்த நீல தாவணி உனக்கு எடுப்பா இருக்கு…’ என்றாள் சுதா.

‘பெத்தவங்கள தவிக்க விடறாங்கன்னு சொன்னியே. நீ மட்டும் உங்க அம்மாவையும் அக்காவையும் தவிக்க விடலாமா’… என்று கேட்டாள் சுபா. 

‘என்ன சொல்றீங்க… யாரு நீங்க… போங்க…’ துடைப்பத்தைத் கீழே போட்டுவிட்டு உள்ளே போக முற்பட்டாள் தாரா. 

‘இரும்மா தாரா என்று சொல்லி மேடம்…’ என்று குரல் கொடுத்தாள் சுபா. புதர் மறைவிலிருந்து தாராவின் அம்மாவும் அக்கா ராஜேஸ்வரியும் வெளிப்பட்டார்கள். கெடுபிடியான அதிகாரி என்று பெயர் பெற்ற காவல்துறை அதிகாரி ராஜேஸ்வரியின் கண்களில் கண்ணீர். சேலைத் தலைப்பால் துடைத்துக் கொண்டாள். ‘என்னை மன்னிச்சிடு அக்கா’ என்று அக்காவைக் கட்டி அணைத்துக் கொண்டாள் தாரா. 

‘எஸ்.எம்.எஸ் அனுப்பினது இவங்களுக்குத்தானா’ என்று கேட்டாள் சுதா. பெரியவர் கருணாகரன் வந்தார். ராஜேஸ்வரியும் அவளது அன்னையும் பெரியவரை கைகூப்பி வணங்கினார்கள். நன்றி தெரிவித்துக் கொண்டார்கள். 

‘வாங்க நீங்க வரணும்தான் காத்திருந்தேன். பதின்பருவம்ங்கற டீன் ஏஜ்ல படிப்பு சுமையால் நல்லா படிக்கற பசங்களுக்கு கூட விட்டு ஓடினாப் போதும்னு தோணும். ஸ்ட்ரெஸ்னால எஸ்கேபிசம் ரூட்ல போவாங்க. பெற்றோர்கள் அவங்கள ஜாக்கிரதையா கவனிக்கணும். 

தாரா… எல்லார் கிட்டயும் சொல்லிட்டு நீ போய்ட்டு வா. உனக்கு வாங்கின உடைகளை எடுத்துக்க. நீ எப்ப வேணும்னாலும் இங்க வந்து ஒரு நாள் ரெண்டு நாள் இவங்களோட இருந்துட்டுப்போகலாம்.’ நிதானமாகப் பேசி முடித்தார். சரி தாத்தா என்ற தாரா உள்ளே சென்றாள். 

ராஜேஸ்வரியிடம் பெரியவர் ‘நீங்க இந்த சூரிதார் லேடீசுக்குத்தான் நன்றி சொல்லணும்’ என்றார். ராஜேஸ்வரி இருவரையும் பார்த்து நன்றி என்ற வார்த்தையை உதிர்த்தாள். சற்று நேரத்தில் தாரா வந்தாள். அம்மா அக்காவுடன் வெளியே சென்றாள். பெரியவர் கருணாகரன் விடைபெற்று உள்ளே சென்றார். 

சுபாவும் சுதாவும் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள் ‘என்ன வெறும் நன்றியோட முடிச்சுட்டாங்க நல்லா கவனிப்பாங்கன்னு சொன்னியே’ என்றாள் சுதா. 

சுபா துடைப்பத்தைக் கையில் எடுத்து ‘இது வித்தியாசமான துடைப்பமா இருக்கு’ என்றாள். மூதாட்டி ஒருவர் இவர்கள் அருகில் வந்தாள். ‘அய்யா. நம்ம கிட்ட விரும்பி வேலை செய்ய இப்ப ஒருத்தருக்கு ரெண்டு இளவட்டப் பொண்ணுங்க வந்திருக்காங்க பாருங்க’ என்று உரக்கக் குரல் கொடுத்தாள். சுபா துடைப்பத்தைத் கீழே போட்டாள். இருவரும் வாசலை நோக்கி விரைந்து சென்றார்கள். 

ராஜேஸ்வரி இவர்கள் அருகில் வந்தாள். கற்றை பணத்தை சுபாவின் கைகளில் திணித்தாள். ‘சிட்டிக் குத்தானே போறீங்க. வாங்க…எங்க வண்டியிலபோகலாம் என்றாள் ராஜேஸ்வரி. ‘பராவாயில்ல மேடம்’… என்றாள் சுதா. 

‘நீ பஸ் வர்றவரைக்கு காத்துக்கிட்டு இரு நான் மேடத்தோட இந்த கார்லயே போயிடறேன்.’ என்றாள் சுபா. 

‘அய்யிய்யோ.. நானும் உங்களோடயே வறேன்’ என்றாள் சுதா. ராஜேஸ்வரி புன்னகை பூத்தாள். 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *