கடலும் கனவும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 29, 2021
பார்வையிட்டோர்: 1,605 
 

ஊரிக் காட்டிலிருந்து விடுபட்ட உடுப்பிட்டி வீதி வழியே வல்வெட்டியை நோக்கி வந்து கொண்டிருந்த அந்த இராணுவ ஜீப் சிவகாமியைக் கண்டதும் திடீர் என நின்றது.

கடையில் அரை இறாத்தல் சீனி தேயிலைப் பாக்கட்டும் வாங்கி சிவந்த அவளுடைய கைகளுள் திணித்திருந்த அவள், ஜீப்பில் இருந்த காப்டன் ஜோசேப்பை கண்டதும் துணுக்குற்றபடி அந்த சீனிச் சரையை இறுகப்பற்றினாள்.

கடைக்காரனுக்கு இளநகையால் விடை பெற்ற படி வீதியில் ஓரடி வைக்க முனைந்த அவள் வெளிச்சம் இன்றி அந்த ஆறு மணிப் பொழுதில் உறுமி வந்த ஜீப்பை உற்று நோக்கியதும் சிறிது கலங்கிப் போனாள்.

காப்டன் ஜோசப் ஜீப்பின் முன் ஆசனத்தில் அமர்திருந்த படி சிவகாமி மீது நெடுநாளாக தன்னிடம் வந்து புகுந்து அந்த ஆசைக் கண்களை வீசிய படி சொண்டுக்குள் இலேசாகச் சிரித்தான். சிரித்த அக்கணப்பொழுதே வன்மம் பாய்ந்த அவன் முகம் சுருகிக் கொண்டிருந்த அந்நேரம் போல் மேலுமாய் கருகியது. நாசித் துவாரங்களை அகலப் பிய்த்தபடி வெளியேறிய மூசிசில் ஏதோ தொனி தோற்றியது. தனது இடப்புறமாக பயத்துடனும் உத்தரவுகளை உடனே நிறைவேற்றும் வேகத்துடனும் இருந்த சாரதியை பார்க்காமலே ஜீப்பைக் கடைப்பக்கமாக விடும்படி சைகை காட்டினான் ஜோசப்.

ஜீப் உறுமியபடி சிவகாமியின் அருகில் வந்ததும் நெற்றி முதல் தன் மெல்லிய பாதங்கள் வரை பனிக்கத் தொடங்கிய வியர்வையை முந்தானையால் தேய்த்தபடி பின்புறமாக நடந்து கடைப்படிகளில் நின்றாள்.

கடைக்காரனுக்கு இராணுவத்தினரின் செய்கை எந்தவித ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை. உள்ளே நின்ற சிறுமிக்கும் அவள் தாய்க்கும் வேண்டியவற்றைக் கொடுத்த வண்ணம் நின்றான் அவன். சிறுமியின் மிரண்ட விழிகள் கடைக்காரன் தாய், சிவகாமி, ஜோசப் ஜீப் சாரதி என்றெல்லாம் சுற்றி வந்தன. அவள் இன்னும் சில விநாடிகளில் கிலி பிடித்தே அழுவாள் போலத் தாய்க்கும் பயம் ஆட்டியது. கடைக்காரன் தனது பொருள்களின் விலையையும் நிலையையும் எண்ணியபடி அசைகின்ற பொம்மையானான்.

சங்கைக்காக மறுபடியும் ‘நான் வாறன் அண்ணை!’ என்று கடைக்கானிடம் விடை சொல்லிப் புறப்பட ஆயத்தமானாள் சிவகாமி.

அந்தக் கடையிலிருந்து ஏழு வீடுகள் தாண்டினால் இராணுவ வாகனங்களின் உறுமல்களுக்கும், இராணுவத்தினரின் அநாகரிகச் செயல்களுக்கும் இலக்கான வீதியில் அமைந்த அவளுடைய வீடு வரும். வீட்டையே இலக்காக வைத்துபடி வெளியே சென்றிருந்த கணவனையும் ஒற்றை பல்ப்பின் ஒளியில் வீட்டில் மரணபயத்துடன் அம்மா, அப்பா ஆகியோரின் வரவை எதிர்பார்த்துக் கிடக்கும் நான்கு பெண்குழந்தைகளையும் எண்ணிய படி அவள் விறுவிறுவென நடந்தாள்.

அவளுடைய கால்கள் சின்ன வயதில் ஓடிய பழக்கத்தில் இப்பொழுதும் ஓட எத்தனித்தன. மனமும் அதற்கு ஒத்தாசையாக இருந்த போதும் அவளையும் அறியாமல் அவளை ஏதோ ஒன்று தடுத்தது.

தன்பிடரியையும் அதனை மூடியிருந்த பெரிய கூந்தலையும் அள்ளியேறிவது விழுந்த ஒளிக்கீற்றுகளையும் வழமையான இயந்திர உறுமலையுந் தொடர்ந்து வந்த ஜீப்பின் ஓட்டத்தை உணர்ந்தபடி மேலும் நடையைக் கூட்டினாள்.

‘உன் புருஷன் எங்கே?’ நீண்ட நாட்களாக யாழ்ப்பாணம் மண்ணின் சுமையை அறிந்து அனுபவித்திருந்த ஜோசப்பின் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாதவளாகச் சிவகாமி சிறிது திணறினாள்.

மௌனம் சம்மத்தை மட்டுமன்றி சந்தேகத்தையும் கிளறி விடும் என்று அறிவால் தன்னைச் சமாளித்த படி ‘அச்சுவேலிக்குப் போயிருக்கிறார்’ என்றாள்.

‘எதுக்கு?’

‘தெரியாது’

‘தெரியாது! சரி! சரி பாக்கிறேன்’ என்றபடி காப்டன் ஜோசப் ஜீப்பை எடுக்கும் படி சைகை காட்டினான்.

ஜீப் எதிரேயுள்ள முடக்கால் திரும்பி எங்கோமறைந்ததும் சிவகாமியின் உதிர ஓட்டத்தைப் பெருக்கிக் கொண்டிருந்த ஒரு காட்சி மறைந்தாலும் மனத்தில் குழப்பமும் கொந்தளிப்பும் புதிதாக ஏற்பட்டன.

‘இவருக்கெண்டு இண்டைக்குத் தான் அவங்களும் வந்தாங்கள். போன மனுஷனை இன்னமும் காணேன்…’

நினைவலைகளின் கதகதப்பில் நெகிழ்ந்து கொண்டிருந்த அவள் மனம் காய்ச்சி வார்த்த இரும்பின் பலத்தை எட்டிப் பிடிக்கத் தொடங்கியது.

‘இன்னமும் காணேன், இன்னமும் காணேன் என்ற ஏக்கப் பெருமூச்சில் இயைந்து விடாத அவள் கணவனை அவன் சொல்லிச் சென்ற இடத்தில் சந்திக்க வேண்டும் என்றும் துடித்தாள்.

உயிர் அல்லது மானம் போக் கூடிய அந்த ஊரில் தப்பித்தவறிப் பிறந்து விட்ட சில ஜீவன்களுக்கு நிரந்தரமாகச் செய்யக் கூடிய சமூகத் தொழில் ஒன்றுமே இல்லை என்ற நிலை இன்று உருவாகி விட்டதால் குறுக்கு வழியில் வாழ்வு தேட ஆரம்பித்தது, அவளைப் பொறுத்த வரையில் பெருங்குறையாகவே இருந்தது.

‘இவங்களுக்கு ஒண்டில் கடல் தொழில் தெரியவேணும். அல்லது கமத்தொழிலாவது தெரிய வேணும். இரண்டும் கெட்டான் நிலையிலை ஊரை விட்டு எங்காவது போயாகிவிட்டு இவங்கள் எண்டால்……..

சிவகாமி தான் கற்ற மகளிர் பாடசாலை அளித்த கல்வியின் வளர்ச்சியின் விளைவாகத் தன்னுள் ஏற்பட்ட சிந்தனைகளை கணவனுக்கு இப்படித்தான் எடுத்துரைப்பாள்.

‘சிவகாமி ஒன்றம் வேண்டா மெண்டு கடையிலாவது நிக்கச் சொன்னாய், நானும் நிண்டன். இப்ப என்னை விலத்திப் போட்டாங்கள். நான் என்ன செய்யிறது.”

நேற்றிரவு குருநாகலில் இருந்து வந்த தனது கணவன் சொன்ன வார்த்தைகள் நெஞ்சிற் புடமிட்டன.

‘சிவகாமி ! உனக்கும் எனக்கும் உள்ள ஒரேயொரு வித்தியாசம் இதுதான். இந்த உலகத்திலை பணத்ததைத் தான் எல்லேரும் மதிக்கிறாங்கள். நீயோ கடவுள் மானம் எண்டேல்லே பிசத்துறாய். நான் சொல்லிப்போட்டன். சுதந்திரமாகத் தொழில் பார்க்கப் போறன்’

‘சுதந்திரமாகவா?’

“பின்ன என்ன? பி.ஏ. படிச்சதுக்கள் கூட இதிலை இப்ப இறங்கியிட்டுதுகள்…’ கணவனின் இழுப்பில் குழந்தைத் தனத்தைக் கண்டசிவகாமி மெல்லச் சிரித்தபடி, அதுகளும் வேலையில்லாமல் தான் இதைச் செய்யுதுகள் என்றாள்.

‘அதுதானே நீ என்ன சொன்னாலும் சரி! நான் வேம்படி வினாசியின்ர மக்களோடை சேரப்போறன்.”

அவன் அப்படிச் சொன்னதும் சிவகாமியின் கண்கள் குளமாகத் தொடங்கின. நித்தமும் கலங்கிக் கலங்கி சிவந்திருக்கும் அவளுடைய கண்களும், நேரிதாக அவளோடு பிறந்து இப்பொழுது நீர் செறிந்து நிறைவதால் சீறப்பட்டுச் சிவந்த நாசிக்கும் மறுபடியும் நோவு.

‘அழாதை சிவகாமி! நேத்தைக்கு வந்தன். இண்டைக்குப் போறான். இனி என்ன நடக்குமோ தெரியாது. இதுக்குள்ளை உன்னை, உன்னுடைய அழகை வடிவாப் பார்க்க வேணும் போலையும் கிடக்கு. அழாதை சிவகாமி’ கரகரத்து வந்த குரலை சரிப்படுத்தியபடி அவன் சொன்னான்.

அடுத்ததாவது ஆம்பிள்ளைப் பிள்ளையாய் பிறக்கடும் எண்டு இருந்து, இருந்து நாலு பெம்பிளைப் பிள்ளையளை பெத்துப் போட்டம். மூத்தது, மஞ்சுளா இக்கணம் பெரிய பிள்ளையாகும். நானோ கதியற்றவன். பணத்திமிர் பிடிச்ச ஊரோடை போட்டி போட்டு ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்க்க எங்களாலை முடியுமே !

‘ஏதோ நாலு காசைச் சம்பாரிச்சுவைச்சிருந்தாத்தான் நாளைக்கு , பின்னடைஞ்ச காலத்திலை தலை நிமிர்ந்து இருக்கலாம்.’

‘உனக்குச் சொல்லுறன். நம்மடை ஊரிலை ஒற்றுமை மட்டும் இருக்குமெண்டால் இந்த இலங்கையே விலைக்கு வாங்கிற அளவுக்கு நிலைமை இருக்கும். சில போக்கிலியள் இருக்கிறாங்கள். தாங்கள் கடலைத் தாண்டுவாங்கள். மற்றவன் போறானாம் எண்டு அறிஞ்ச உடனை பொலிசுக்குச் சொல்லிப் போடுவாங்கள்.’

‘நான் போறதைப் பற்றி எவன் ஆரட்டைச் சொன்னாலென்ன. நான் போறது போறது தான்.’

சிவகாமி நிலத்தை வெறித்தபடி நின்றாள்.

நான்கு பிள்ளைகளுக்கும் தாயாகி நலுங்காத அவளுடைய மேனியின் தசைக் கோளங்கள் அணிந்திருந்த சட்டையையும் பிய்த்துப் பிதுங்க அவள் வெதும்பத் தொடங்கினாள்.

‘நீங்கள் நல்லாவாறது எண்டால் நாம எல்லாரும் தானே சந்தோஷமாக இருக்கிறது. நான் உங்களை மறிக்க இல்லை. ஆனால் உங்களுக்கு ஏதும் நடந்தால் …….. ஐ……… யோ …… நான்….நான்…’

‘பயித்தியக்காரி! நீந்துறதுக்கு மீன் குஞ்சுகள் என்னட்டைப் பிச்சை கேக்க வேணும். காலமை அடைவுவைக்க எண்டு வாங்கின உன்னுடைய நகையளை வித்திருக்கிறான். மூவாயிரம் ரூபா காசு சேந்திருக்கு. இந்த மூவாயிரமும் முப்பதாயிரம் ரூபாவை நாளைக்குக் கொண்டு வரும். அந்தமுப்பதாயிரமும் மறுக்காப்போனா மூண்டுலட்சத்தைக் கொண்டு வரும்.’

‘சும்மா இல்லை சிவகாமி மூண்டு லட்சம் …’ அவன் குரல் சொல்லிச் சொல்லி சிறுத்தது. ‘அம்மா!’ என்ற குழந்தைகளின் ஒருமித்த அழைப்பைக் கேட்டுச் சிவகாமி ஒவ்வொருவருடைய முகத்தையும் வேதனையோடு நோக்கினாள்.

தங்கப்பாளங்கள் போன்று அந்த மின்னொளியில் ஜொலித்த அபபெண்குழந்தைகளை அணைத்த படி – இந்த நாலு லட்சங்களையும் விட்டுப் போட்டு அவர் மூண்டு லட்சம் தேடப்போயிட்டார்…..’ என்று முணுமுணுத்தாள் அவள்.

காட்டிக் கொடுக்கின்ற கயமையிலேயே இன்பத்தையும் காசையும் தேடுகின்ற ஊர் மக்களின் களிப்பை போல நேரம் ஓடியோடி களித்துக் கொண்டிருந்தது.

“நாளைக்குப் பள்ளிக்கூடம் எல்ல…… போய்ப்படுங்கள் உம்… மஞ்சுளா தங்கச்சியை ஏராட்டிப் படுக்கவை நான் தேதண்ணி கொஞ்சம் வைக்கப்போறன் என்ற படி குசினிக்குள் புகுந்தாள் சிவகாமி.

‘ஆனந்தன்!’ என்ற அழைப்பைக் கேட்டதும், ‘ஆரது?’ என்றபடி வெளிப்படலைக்கு வந்தாள் சிவகாமி.

‘அது நான்…மூர்த்தி விநாயகம்’ என்ற படி உள்ளே வர முயன்ற அவனை தடுப்பது போல் என்ன விசயம்?’ என்றாள் அவள்.

‘ஒண்டு மில்லையணை பிள்ளை…. உவன் தம்பி விவேகானந்தன் கொழும்பாலை வந்தான் எண்டு கேள்வி. கொழும்பிலை நேச்சர் என்ன மாதிரி எண்டு கேட்டுப்பேசலாம் எண்டு வந்தனான்….’

வஞ்சச் சிரிப்பொன்றை ஒலி மூலம் உணர்த்தியபடி எங்கை ஆள்?’ என்றார் மூர்த்தி விநாயகம்.

அவர் பகல் போலை யாழ்ப்பாணம் போனவர். இப்ப வந்திடுவார் நான் சொல்லுறன் என்று அழுத்தமாகசி கூறிய சிவகாமியின் அப்பட்டமான வார்த்தைகளை நம்பாதவர் போல , பட வஸ்போய் ஒரு விசயத்தைப் பாத்து இந்த நேரம் வெளிக்கிட்டனான். அவன் இனி எங்க வரப்போறான்!’ என்ற படி அவர் நடந்து மறைந்தார்.

‘கோதாரியிலை போவான்’ என்று மனதுள் வைதாள் சிவகாமி.

‘அவன் இனி எங்க வரப்போறான்?’ என்ற அவருடைய மொழிகள் நாக பாம்பு விஷம் போல் ஏறத் தொடங்கின.

சிவகாமியின் உடல் எல்லாம் புல்லரித்தது. நடுச்சாமங்களிலும் இருட்டிலும் சிறு புல் போல் நடுங்கிய அவள் அந்தச் சின்ன வீட்டின் முற்றத்தில் நிர்க்கதியாய்ச் சென்று அமர்ந்தாள்.

பேராசை பிடிச்ச என்ற மனுஷனாலை நாளைக்கு ஊரிலைதலை காட்டலாமோ தெரியாது. வினாசித்தம்பியின்ரை மக்கள் எதுக்கும் அஞ்சாதவங்கள். ஆமிக்காறங்களும் மற்றவங்களும் அனுசரணையானவங்கள். அதுக்காக துணிஞ்சு வெளிக்கிட்டாச்சு. இந்த மூர்த்தக் கிழவன் ஆமியளிட்டைச் சொல்லிச்சுதெண்டால்…ஐ….யோ..;

சிவகாமி மேலும் மேலும் பொறுத்திருந்தாள். சேவல் வேறு கூவி ஓய்ந்து விட்டது. நெடுநேரமாப் பார்த்திருந்த விடியல் நிலவும் புறப்பட்டிருந்தது. அவளும் புறப்பட்டாள்.

ஊரிக்காட்டில் உள்ள இராணுவத் தளத்துக்குக் கிழக்கே வெகுதொலைவில் அமைந்த பனங்கூடல்களின் இடையிடையே அடர்ந்து நிற்கும் ஈய்ந்து மரங்களும் வடலிகளும் பூவரசும் சிவகாமியின் நடமாட்டத்தை மிக இரகசியமாக வைத்திருந்தன.

பொங்கி மடிந்து ஒலியெழுப்பும் வட கடலின் இரைச்சலும், காற்றின் தாக்குதலைத் தாங்காது காற்றின் இச்சைக்கே தம்மை இரையாக்கிக் கொண்டிருந்த பனையோலைகளின் அசைவொலியும் அவள் காதுகளில் பயங்கரமாக ஒலித்தன.

கடைவீதிக்குப் போகவே அவளை அணு அணுவாகக் குத்தும் ஆயிரமாயிரம் கண்களிலிருந்து கடந்த ஆறு ஆண்டுகளாகத் தப்பிவந்து, இன்றும் பொலிவோடு நிற்கும் அவள் எதற்கோ துணிந்தவளாக அந்தக் கடற்கரையின் ஓரமாய் நின்ற பூவரசின் அடியிற் சென்று தவமிருந்தாள்.

கைகளில் டோர்ச்லைட் வேண்டியளவு ஒளி பெருக்கத் தயாராகவிருந்த போதிலும், அவள் அது தன்னை காட்டிக் கொடுத்துவிடும் என்ற அச்சத்தில் உபயோகிக்கவேயில்லை.

கடற்கரையில் நின்று பார்த்தாலும் கைகொடுக்கத் தயாரென்ற உறுதியில் அருகருகே அமைந்துள்ள சிவன் கோவிலினதும், மாரியம்மன் கோவிலினதும் கோபுரங்கள் ஓங்கிநின்றன.

“முத்துமாரித் தாயே எங்களைக் கைவிட்டுடாதை அம்மா!” என்று பெருமூச்செறிந்த படி வேண்டிக் கொண்டாள் சிவகாமி.

ஊரடங்குச் சட்டமின்றியே நடமாட்டம் குறைந்து விடும் அப்பிரதேசத்தில் அவளின் தனிமை ஒரு விதத்தில் ஐயத்தையும் வியப்பையும் ஏற்படுத்துவதாகவிருந்தது.

கிழக்கே காட்டுவளவுப் பக்கமாகவிருந்த ஒளிப்பிளம்பு அவள் நின்ற திசையை நோக்கி நெருங்கிக் கொண்டிருந்தது. அதே வேளை கடலில் ஒரு கோடியிலிருந்து மூன்று தடவைகளாக ஒளியை வீசி விட்டு ஒரு டோர்ச்லைட் முடங்கியது தெரிந்தது.

வந்துகொண்டிருந்த வாகனம் ஜீப் வண்டி என்பதை உணர்ந்ததும் சிவகாமி சிறிது வெலவெலத்தாள்; எனினும் வந்த வேலை நிமித்தம் அடிக்கடி பலவீனப்படும் அவள் மனம் மறுபடியும் மறுபடியும் தேறி இழந்த பலங்களை மீட்ட வண்ணமிருந்தது.

பூவரசமரத்தை விட்டு, அடர்திருந்த ஆவரசங்காட்டுக்குள் நுழைந்தாள் அவள். நடுவே மணல் திட்டும் சூழை ஆவரச மரங்களும் நிறைந்திருந்த அப்பகுதிக்குள் அவள் புகுந்ததும் அவளைப் பின்புறமாக நின்று பற்றிய இரு முரட்டுக் கரங்களை உதற முயன்றபடி ஓலமிடத் துடித்தாள் சிவகாமி. அது இயலாது போகவே கைகளிலிருந்த போர்லைட்டை அடித்துப் பார்த்த பொழுது ஜோசப் என்று அவளுடைய அதரங்கள் மட்டும் சொல்லி மென்றன.

பதுங்கியிருந்த புலியின் வாயில் அகப்பட்ட ஒரு புள்ளி மான் போல் அவள் வெதும்பினாள்.

“உன்புருஷன்…” தன்னை அவள் திமிறி விடுவிக்கப் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருக்கையில் கூறினான் காப்டன் ஜோசப்.

தன் நிலையையும் சற்று மறந்து “என் புருஷனுக்கு என்ன? என்ன?” என்று விசும்பியபடி கேட்டாள் அவள்.

“ஒண்ணுமில்லை…சாறியளோடை பத்திரமா பிடிபட்டிருக்கான்..” ஜோசப் நிதானமாகக் கூறினான். அவள் மறுபடியும் திமிறவே. “நான் உன்னை விடப்போவதில்லை; உனக்கு உதவயாரும் வரமாட்டார்கள். உன் புருஷனை விடுதலை செய்து சாறிகளும் தருவேன். நீ எனக்கு உதவ வேண்டும்” என்றான்.

சிவகாமிக்குத் தன்னிலை ஒருவாறு தெளிந்தது. எவ்வளவு தவறான காரியத்தை தான் செய்துவிட்டதாகக் கலங்கினாள். அவளின் கலக்கம் தணியுமுன்பே ஜோசப் தன் நெடுநாள் ஆரையைப் பூர்த்தியாக்க முயன்று…முயன்று வென்று கொண்டிருந்தான்.

கலங்கிய அந்த மணல் திடலை நம்பிக்கையோடு விட்டு அவன் வெளியேறுகையில், ‘நீ வீட்டுக்குப் போ…! உன் புருஷனை நானே கொண்டுவந்து விடுகிறேன்…” அன்போடும் ஒரு வித கனைப்புடன் கூறியது அவளுடைய காதில் பட்டும் படாமலும் விழுந்தது.

சிவகாமி தன்னைச் சரிசெய்து கொண்டு எழுந்து நடக்க எத்தனித்தாள். தன் அங்கங்களில் பட்டு ஒட்டியிருந்த மண்ணை ஒருவாறு தட்டிவிட்டாள் அவள். மண்ணை மட்டுமே அவளால் தட்டிவிட முடிந்தது.

ஜோசப் கூறியதில் நம்பிக்கையற்றவளாய் வீடு செல்லவேண்டும், சென்று கணவனைக் காணவேண்டும் என்று துடிதுடித்தாள் அவள். கனவில் நடப்பது போல் அவள் கால்கள் முன்னும் பின்னும் பக்கமுமாக நடந்து கொண்டிருந்தன.

முள்ளொன்று காலின் மேற்புறத்தில் குத்தியது போன்ற உணர்வு, ‘முத்துமாரி அம்மாள்! நீயும் பெண்தானே’ ஈனஸ்வரத்தில் காலைத் தடவியபடி சொன்ன அவள் மேலும் நடக்க எழுந்தாள். கையில் இதுவரையிருந்த டோர்ச்லைட்டும் அவளை விட்டுப் பிரிந்த நிலையில், அவள் ஒருவாறு வீதிக்கு வந்துவிட்டாள்.

தள்ளாடித்தள்ளாடி நடந்துகொண்டிருந்த அவளை அவள்தான் என்று ஊகித்து உணர்ந்து கொண்ட ஒருகுரல் ‘சிவகாமி…” என்று உரிமையோடு அழைத்ததை உதட்டுச் சிரிப்பளவில் வரவேற்ற அவள் உள்ள வேதனையும் உடல் நோவும் மிக வீதியில் விழுந்தாள்.

‘சிவகாமி…’ என்று அவலமாக அழைத்தபடி அருகில் ஓடிய விவேகானந்தன் அவளைத் தாங்கிய வண்ணம் வீடு நோக்கி நடந்தான்.

“சிவகாமி…சிவகாமி… நான் சொன்னேனே…இந்த மூவாயிரமும் முப்பதாயிரம் ரூபாவை நாளைக்குக் கொண்டுவருமெண்டு…நான் கொண்டாந்துவிட்டன் சிவகாமி…ஆமியள் எங்களைப் பிடிச்சிட்டாங்கள்…பேந்து காப்டன் வந்து எங்களை விடுதலையாக்கினான். அவனே வீடுவரைக்குமே துணையாக வந்தான் சிவகாமி…சிவகாமி…”

விவேகானந்தன் கூறியவை எவையுமே அவள் காதில் கேட்கவில்லை. அவனை மெல்ல, ஆனால் திடமாக அணைத்தபடி, அவனது தாங்கலில் நடந்து கொண்டிருந்தாள் அவள்.

வீட்டுக்குச் சென்று விளக்கைப் போட்டதும் விவேகானந்தனின் முகம் சுருங்கியது. நாளைக்கு ஆயிரமாயிரம் ரூபாவுனக்கு அதிபதியாகப் போகிறோம் என்ற களிப்பு நீங்க, கண்களில் சந்தேகம் புகுந்தது.

சிவகாமியின் மூடியிருந்த கண்களை நீவிப் பார்த்து அவன் திகைத்தான். முகம் முழுவதும் நீலம் பாய்ந்திருந்தது. உடல் விறைத்திருந்தது.

சிவந்த அவளுடைய மேனியில் ஏற்பட்டிருக்கக் கூடிய வடு என்ன என்று அவன் தேடினான். அவளுடைய கன்னக் கதுப்புக்களில் இரத்தம் கண்டியிருந்தது. மேற்சட்டை கிழிந்திருந்தது.

விவேகானந்தனுக்கு மன உளைச்சல் அதிகமாகியது. அவளது காற்புறச்சேலையை மெல்ல நகர்த்திக் கால்களை வருடினான். கையில் ஏதோ கசிவது போன்றிருந்ததும் காலைப்பார்த்த அவன்…… சிவகாமி…யோ இரத்தம்…’ என்று வாய்விட்டே கதறினான்.

தந்தையின் அழுகுரல் கேட்டு எழுந்து வந்த மஞ்சுளாவை ஏக்கத்தோடு பார்த்த வண்ணம்…’மஞ்சு..மஞ்சு அம்மாவைப் பார்த்தியம்மா..! அவ…அவ…ஐய்யோ…தெய்வமே..’

வார்த்தைகள் வாய்க்குள் சிக்கிய தவிப்பில் சிவகாமியின் கையை உயர்த்தி தன் முகத்தில் புதைத்தான் விவேகானந்தன்.

அவனிடமிருந்து விடுபட்ட சிவகாமியின் அந்தக் கை நிலத்தில் “தொப்” பென விழுந்தது.

– அங்கையன் கதைகள் (சிறுகதைத் தொகுதி), முதற்பதிப்பு: 2000, அங்கையன் பதிப்பகம், கொழும்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *