வல்லவனுக்கு வல்லவன்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தென்றல்
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: August 26, 2022
பார்வையிட்டோர்: 12,081 
 

குழந்தைகளே! ஒரு கதை சொல்றேன் கேளுங்க!

அது ஒரு பெரிய காடு. அங்கே விலங்குகள் மிக ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தன. ஒருநாள் யானை ஒன்று காட்டு வாழைகளைத் தின்றுவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. அந்தப் பக்கமாக ஈ ஒன்று பறந்து வந்தது. யானையின் பிரமாண்ட உருவமும், அது துதிக்கையையும் காதுகளையும் அசைத்துக் கொண்டே இருப்பதையும் கண்டு அதற்குச் சிரிப்பாக இருந்தது. அது யானையைச் சுற்றிச் சுற்றி வந்து ரீங்காரமிட்டது. யானை தன் காதுகளை முன்னிலும் வேகமாக அசைத்து அதை விரட்டியது. யானை எத்தனை முயற்சி செய்தும் ஈ போகவில்லை. ஈ கேலி பேசத் தொடங்கியது.

‘யானையாரே! நீர் உருவத்துல பெரியவராக இருக்கலாம். ஆனால் உம்மால என்னை ஒண்ணும் பண்ண முடியலை பார்த்தீரா! ஹா, ஹா! உம்மை நான் ஜெயிச்சுட்டேன். அதனால நான்தான் இனிமே பெரியவன்’ என்று கூறிச் சிரித்தது. யானைக்கு ஆத்திரமாக வந்தது. ஆனால் அதனால் ஈயை ஒன்றும் பண்ண முடியவில்லை.

சிறிது நேரம் சென்றது. சுற்றி சுற்றிப் பறந்து கொண்டிருந்த ஈ, மரத்தில் பின்னியிருந்த ஒரு காட்டுச் சிலந்தியின் வலையில் அகப்பட்டுக் கொண்டது. என்ன முயன்றும் தப்பிக்க முடியாமல் விழித்துக் கொண்டிருந்த ஈயைச் சிலந்தி நெருங்கியது. ‘நீ யானையை விட பலசாலியா? இப்போது நான் உன்னை விட பலசாலி. இல்லையா?’ என்று கேட்டவாறே, தனது விஷக் கொடுக்குகளால் ஈயை வேகமாகக் கொட்டத் துவங்கியது. ஈ பேச முடியாமல் உணர்விழந்தது.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுன்னு அதுக்குத்தான் சொல்லி வைத்திருக்கிறார்கள். கதை நல்லா இருந்ததா? அடுத்த மாதம் இன்னும் ஒரு கதையோடு சந்திக்கலாம். போய் வரட்டுமா குழந்தைகளே!

– செப்டம்பர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *