நினைத்ததும் நடந்ததும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 26, 2023
பார்வையிட்டோர்: 1,125 
 

(1958 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பேய்பிசாசுகள் உண்டென்பதில் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஆவி உலகக் கற்பனைகளையும் ஆதரிப்பவனல்லன். எனவே, இரவு பகல் எந்த நேரத்திலும் மற்றவர் போக அஞ்சும் இடங்களில் அச்சமின்றி உலாவுவேன். அல்லது அந்த இடங்களில் மணிக்கணக்காகத் தன்னந்தனியாக அமர்ந்து என் சிந்தனையையே துணையாகக்கொண்டு காலத்தைக் கழிப்பேன்.

அன்றிரவும் அப்படித்தான் இடுகாட்டிற்குப் பக்கத்தில் அந்தக் குன்றில் தனியாக உட்கார்ந்திருந்தேன்.

இப்படிப்பட்ட இடங்களுக்குச்சென்றவுடன் எனக்கு எங்கிருந்தோ தன்னை மறந்தநிலை ஏற்பட்டுவிடும். பொழுதுபோவதே தெரியாது. மீண்டும் சுய உணர்வு பெற எவ்வளவு நேரம் ஆகும் என்று உறுதியாகக் கூற முடியாது.

நேயர்கள் என்னைத் தவறாக மதிப்பிட்டுவிட வேண்டாம். யோகிகளுக்கும் சித்தர்களுக்கும் கைவந்த சமாதி நிலையல்ல என்நிலை. என்நிலை கனவுலக நிலை அல்லது கற்பனை உலக யாத்திரையில் ஈடுபட்டவன் நிலை.

அன்று, அமாவாசை இருட்டு. ஆனால் வானத்து நட்சத்திரங்களின் ஒளியால் சுற்றுப்புறம் வெள்ளெழுத்துக்காரனுக்குத் தோன்றும் பொருட்கள்போல மங்கலா கத் தெரிந்தது. குன்றின் கீழே தூரத்தில் நகரத்தின் மின்சார விளக்குகள் தாரகைகளுடன் போட்டியிட்டன. அவ்விளக்குகள் இருக்குமிடங்களில் குதூகலமும் கொண் டாட்டமும் அல்லது தொழிற்துறை ஊக்கமும் சுறுசுறுப்பும் இருந்திருக்கும். ஆனால், நான் உட்கார்ந்திருக்கும் இந்தச் சீந்துவாரற்ற குன்றிலோ, மரண அமைதி. அதைக் குலைக்க இரவுப்பூச்சிகள் இடையிடையே “கர். புர்” என்று ஒலியெழுப்பிக்கொண்டிருந்தன. எங்கிருந்தோ ஒலித்து காற்றில் கலந்து வந்த கடிகார ஓசை அப்பொழுது இரவு மணி இரண்டென்பதை உணர்த்திற்று.

அந்தச் சமயத்தில்தான் அந்தப்பெண்என்னை நோக்கிவந்தாள். 20 அல்லது 25 வயதிருக்கலாம். அவள் உடுத்தியிருந்த கறுப்புப் புடவையும் கறுப்பு ரவிக்கையும் அவளுடைய தந்தம்போன்ற வெண் மேனியை மிகைப் படுத்திக் காட்டின. ஆனால் அவள் முகம் சோகத்தால் வாடி, களையிழந்திருந்தது.

“இந்த நேரத்தில் இவளுக்கு இங்கே என்ன வேலை? ஒருவேளை… ஒருவேளை … உடலை விற்கும் தொழிலில் ..”

“நீ யாரு தம்பீ?” என்று என் சிந்தனையைக் கலைத்தாள் அவள்.

நான் என் பெயரையும் வசிக்கும் இடத்தையும் சொன்னேன். அவளுக்கு என் பெயர் உற்சாகமூட்டவில்லை. ஆனால், நான் வசிக்கும் இடத்தைச் சொன்னதும் அவள் தடுமாறினாள். உடல் படபடத்தது. ஆழ்ந்த பெரு மூச்சுவிட்டாள்! நிலைகொள்ளாமல் தத்தளித்தாள்!

“ஏன் அம்மா? உங்கள் உடம்புக்கென்ன?” என்று விசாரித்தேன்.

“ஒன்றுமில்லை! ஒன்றுமில்லை! நீ கவலைப்படாதே! அந்தத் தெருவைக் கேட்டதும் எனக்குப் பழைய ஞாபகங்கள் வந்துவிட்டன. அதுதான்…”

“ஓகோ, நீங்களும் அந்தத் தெருவில் வசித்தவர்கள் தானா? இப்போது வேறு இடத்திற்கு குடிமாறிப் போயிருக்கிறீர்களோ? நான் அங்கே சமீபத்தில்தான் குடிவந்தேன். இரண்டு மாதம்கூட இருக்காது.” என்றேன்.

“முப்பது வருடங்களுக்கு முன்னர் நான் அந்தத் தெருவில்தான்…என் கணவருடன்…”

அவள் வார்த்தைகளை முடிக்கவில்லை, “என்னது?” என்று என்னையுமறியாமல் கூவினேன்.

என் ஆயுளிலேயே முதன்முறையாக எனக்கு இனந்தெரியாத அச்சம் ஏற்பட்டது.

இதோ என் முன் நிற்கும் இந்த ஐந்துவுக்கு எவ்வளவு கூடுதலாகப் பார்த்தாலும் 25 வயதுக்கு மேல் இருக்கமுடியாது. இவள் 30 வருடத்திற்குமுன் இருந்ததாகச் சொல்வதென்றால்?

என்கலவரத்தை அறிந்து கொண்டவள் போல் அவள், “தம்பீ, நீ என் வார்த்தைகளை நம்பித்தான் ஆக வேண்டும். 30 வருடங்களுக்கு முன்னர் நடந்த சம்பவத்தைத்தான் சொல்லப்போகிறேன். அதை யாரிடமாவது சொல்லாவிட்டால் என்தலை வெடித்துவிடும்போல் இருக்கிறது. இந்தப்பக்கம் யாருமே வருவதில்லை. நல்ல வேளையாக நீ வந்தாய். உன்னிடம் சொல்கிறேன்.”

என்று அவளாகவே சொல்லிக்கொண்டு, என் முன்னாலேயே புல் தரையில் உட்கார்ந்துகொண்டாள்!

அதன்பிறகு என்வாய் அடைத்துவிட்டது பேசும் சக்தியை இழந்தேன். ஆனால் என் செவிகள்மட்டும் அவள் கூறுவதைக் கவனமாகக் கேட்டன.

அவள் தன் கதையைத் துவக்கினாள் :-

1928-ஆம் வருடத்தில்தான் எனக்குத் திருமணம் நடந்தது. இரண்டாந்தாரமானாலென்ன? என் கணவரின் முதல் மனைவி நீண்ட நாட்களுக்கு முன்னமே இறந்து விட்டாள். அவருடைய ஒரே மகனும் சிறு பிள்ளையல்ல, 20 வயது காளைப் பருவத்தினன். என் கணவருக்கு வயது 50 ஆனாலும் பார்வைக்கு 30 அல்லது 35 வயது மதிப்பிடக்கூடிய இளமைத் தோற்றமுடையவராகவே இருந்தார். இவை எல்லாவற்றையும்விட என்னையும் என் தாயாரையும் கவர்ந்தது அவருடைய திரண்ட சொத்தே. காண்ட்ராக்டில் அவர் கொள்ளை கொள்ளையாக பணம் சம்பாதித்துப் பெரும் செல்வராக இருந்தார். “மகாதேவனுக்கென்ன, லட்சாதிபதி ஒரே பிள்ளை. வேறு பிச்சுப் பிடுங்கல் இல்லை” என்று ஊரார் அவரைப் பார்த்து வயிறெரிந்தார்கள்.

ஆனால் நானோ, அந்தக் காலத்தில் நாளொன்றுக்கு இரண்டு வெள்ளி சம்பாதித்த மேஸ்திரி மாணிக்கத்தின் ஒரே மகள். என் அப்பா மகாதேவரிடம்தான் வேலை பார்த்தார். மகாதேவர் அவ்வப்போது எங்கள் வீட்டுக்கு வந்து போவார். அந்தச் சமயத்தில்தான் அவர் என்னைக் கண்டு மோகம் கொண்டாராம். நீண்ட நாட்களுக்கு முன்னமேயே மனைவியை இழந்து மறுவிவாகம் செய்து கொள்ளமாட்டேனென்று பிடிவாதமாக இருந்த அவருக்கு என்னைக் கண்டதும் அந்த உறுதி குலைந்துவிட்ட தாம்.

நான் மகாதேவர் மனைவியானேன். கலியாணமான மறுநாளே என் தந்தை மாரடைப்பால் மாண்டுபோனார். தாய் என்னுடனேயே வந்து என் கணவர் இல்லத்தில் வசித்துவந்தாள்.

வாழ்க்கைச் சுகமாகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஐந்து வருடங்கள் ஐந்து நாட்களாகப் பறந்தன. இதன் பிறகுதான் சம்பவங்கள் விபரீதப் போக்கில் திரும்பின.

என் தாயார் எனக்குக் குழந்தைப் பிறக்குமென்று எதிர்பார்த்தாளாம். அந்தக் குழந்தைமூலம் என் கணவரின் திரண்ட சொத்துக்கு வாரிசு பெற்று, தானும் தன் மகளும் அதாவது நானும் இறுதிவரை சுகபோக வாழ்க்கை வாழலாமென்று கனவு கண்டாளாம். அது இப்போது பொய்யாய், பழங்கதையாய் கனவாய் மெல்லப் போயிற்றாம். எனது மூத்தாளின் மகன் மோகனசுந்தரம் தன் தந்தைக்குப் பிறகு எங்களை அன்புடனும் ஆதரவுடனும் பாதுகாப்பானென்பது என்ன நிச்சயம்? இப்போதே அவன் என்னையும் என் தாயாரையும் வெறுப்பது நன்கு தெரிகிறது. “தன் தந்தை ஐம்பது வயதுக்குமேல் ஏன் மணம் செய்துகொண்டார்?” என்று அவன் பகிரங்கமாகவே பலரிடம் கேட்டிருக்கிறான். அவர் உயிருடன் இருக்கும்போதே இப்படிப் பேசுகிறவன் அவர் கண் மூடிய பிறகு என்னதான் செய்யமாட்டான்? இதற்கு மாற்று வழி என்ன?

இதுவே எனக்கும் என் தாயாருக்கும் தீராத பிரச்சினையாகிவிட்டது. இரவு பகல் எந்த நேரமும் இதைப் பற்றியே சிந்தித்தோம். ஒரு வழியும் புலப்படவில்லை. கடைசியாக என் அன்னை துணிகரமான ஒரு முடிவுக்கு வந்தாள்.

நினைக்கவே நெஞ்சு திடுக்கிடும் முடிவு அது. ஆம். மோகனசுந்தரத்தை ஒழித்துக்கட்டி விடுவதென்பது தான் அந்த முடிவு. எப்படி?

என் தாய் வாங்கிவரும் நஞ்சைத் தண்ணீரில் கலந்து அவன் சாப்பிடும்போது குடிக்கவைத்து விடுவது. உணவுக்குப்பின் அதை அருந்தி அவன் உயிர் நீப்பான். அவன் எப்போதும் என் கணவருடன்தான் உணவருந்துவது வழக்கம், அதனால் பாதகமில்லை. என் கணவர் எப்போதும் சுடுதண்ணீர்தான் குடிப்பார். ஆனால் அவர் மகனோ வெந்நீர் விரோதி. எப்போதும் தண்ணீரே குடிப்பான்.

ஒருநாள் எங்கள் திட்டத்தைச் செயல்படுத்த முனைந் தோம். என் தாய் இரண்டு மாத்திரைகள் வாங்கி வந்தாள். இரண்டும் நஞ்சுதானாம். ஒன்று மோகனசுந்தரத்திற்கு; மற்றொன்று, ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் எங்கள் தற்காப்பிற்காக.

ஒரு மாத்திரையைத் தண்ணீரில் கலந்தோம். தண்ணீர் நிறம் மாறவில்லை வெற்றி பெற்றுவிட்டதாகவே துள்ளினோம்.

ஐயோ பாவம்! லட்சாதிபதியின் ஒரே மகன் இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் மரண தேவதையின் கோரப் பிடிக்குள் சிக்கப் போகிறான். இதுதான் மானிட வாழ்க்கையோ!

சாப்பாடு பரிமாறப்பட்டது என் கணவருக்கு நான் அருகிலிருந்து பரிமாற வேண்டும். இதுவேறு எங்கள் சூழ்ச்சிக்கு உதவிபுரிந்தது.

மிகவும் பணிவுடனும் பரிவுடனும் பரிமாறுவதாகப் பாசாங்கு செய்தேன். என் கணவருக்கு வெந்நீரும், மோகனசுந்தரத்திற்கு தண்ணீரும் வைத்தேன்.

ஆனால், எங்கள் விதி சதி செய்துவிட்டது! திடீரென்று என் கணவருக்கு விக்கல் ஏற்பட்டது. அவர் அவசரம் அவசரமாக தம் முன் வைக்கப்பட்டிருந்த வெந்நீர்க் குவளையை எடுத்தார். ஆனால், என்ன துர் அதிர்ஷ்டம்! அது உடனே குடிக்க முடியாத சூடாக இருந்தது.

“மோகனா! இது ஒரே சூடாக இருக்கு. அந்தத் தண்ணியை இப்படி நகர்த்து.”

“அது பச்சை தண்ணீராயிற்றே?”

“பரவாயில்லை. விக்கல் உயிர் போகிறது.” என்று கூறிக்கொண்டே கண்மூடி கண் திறப்பதற்குள் தாமே எடுத்து அந்த விஷங்கலந்த தண்ணீரை “மடக் மடக்” கென்று குடித்துவிட்டார்!

அவ்வளவுதான் எனக்குத் தெரியும், மயக்கம் போட்டு விழுந்துவிட்டேன்.

தண்ணீரைக் குடித்ததும் என் கணவருக்கும் மயக்கம் வந்து கீழே சாய்ந்துவிட்டதாகவும், பிறகு ரத்தம் ரத்தமாக கக்கிக்கொண்டு டாக்டர்கள் வருவதற்குள் அவர் உயிர் உடலைவிட்டுப் பிரிந்துபோய்விட்டதென்றும் சொன்னார்கள். அத்துடன் மற்றுமொரு திடுக்கிடும் செய்தியையும் கேட்டேன்.

என் தாயாரும் என் கணவர் இறந்த சில நிமிட நேரத்திற்குப்பின் ரத்தம் கக்கிக்கொண்டு இறந்து போனாராம்.

நான் மயங்கி விழுந்ததும் என்னைக் கொலைக்குற்றத்தினின்றும் காப்பாற்றுவதற்காக அந்தக் குற்றத்தை தானே ஏற்றுக்கொண்டு என்னை ஈன்ற அன்னை தற்கொலை செய்துகொண்டுவிட்டார். ஆம். எஞ்சியிருந்த ஒரு விஷ மாத்திரை அவர் உயிரைக் குடித்துவிட்டது.

டாக்டர் பரிசோதனை; போலீஸ்; கோர்ட் விசாரணையாவும் முடிந்தன. என் தாயின் தியாகத்தால் நான் தண்டனையினின்றும் தப்பினேன்.

இந்தக் கோர சம்பவங்களுக்குப் பிறகு, எனக்கு ஊண் உறக்கமில்லை. நான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைத்துவிட்டது. “பாதகி! நீதானே உன் கணவனைக் கொன்றாய்! உன் பண ஆசையினால்தானே உன் தாயாரும் உயிர் நீத்தாள்!” என்று என் மனச்சாட்சி இடைவிடாது குத்திக்கொண்டிருந்தது. எலும்புந் தோலுமானேன். இந்தக் குன்றுக்குப் பக்கத்தில்தான் அதோ தெரிகிறதே அந்தக் கிணற்றில் 1928 சூலை 8-ந் தேதி குதித்தேன்.


இவ்வளவுதான் எனக்குத் தெரியும். அந்தப் பெண் எப்படி மறைந்தாளோ? இன்னும் என்ன சொன்னாளோ?

இவ்வளவு நேரம் தன்னை மறந்த நிலையில் இருந்த நான் இப்போதுதான் சுய உணர்வு பெற்றேன். ஆம். மணியும் மூன்றடித்துவிட்டது. தூக்கமும் கண்ணைச் சுழற்றுகிறது. இனி வீடு திரும்பவேண்டியதுதான்.

– 1958, காதற் கிளியும் தியாகக் குயிலும் (சிறுகதைகள்), முதற் பதிப்பு: 1977, மறைமலை பதிப்பகம் வெளியீடு, சிங்கப்பூர்.

– கவிஞர் ந.பழநிவேலுவின் படைப்புக் களஞ்சியம் (தொகுதி 2), முதற் பதிப்பு: பெப்ரவரி 1999, ப.பாலகிருட்டிணன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *