கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 8, 2015
பார்வையிட்டோர்: 13,480 
 

தனது சகோதரியின் திருமண விடயங்கள் பற்றிய செய்தியை தன் நண்பர்களுக்கு பேஸ்புக்கில் அறிவித்துவிட்டு சந்தோஷமாக வந்த முரளிக்கு தூரத்தில் மூச்சிரைக்க ஓடிவரும் சிறுவனின் தோற்றம் மனதை என்னவோ செய்வது போல் இருந்தது. அவன் தன்னை நோக்கித்தான் வருகிறான் என்று கணிப்பிட்டுக் கொள்வதற்கு முதல் அந்தச் சிறுவன் முரளியை அண்மித்துவிட்டான்.

‘மஹத்தியா வாசனா சம்பத் ஒன்டு வாங்குங்கோ’

‘வேண்டாம் போ’

‘அனே மாத்தியா. காலைலருந்து ஒன்னும் சாப்பிடலை. அம்மாவும் குட்டித்தங்கச்சியும் வீட்டில பசியில இருக்காங்க. புண்ணியம் கிடைக்கும்’

‘உன் அப்பா எங்கே?’

‘செத்துப்போச்சி மாத்தியா’

முரளி அதற்குமேல் ஒன்றும் பேசவில்லை. திக்கித்திணறி தமிழ் பேசிய அந்த சிங்களச் சிறுவனிடம் வாசனா டிக்கட்டை வாங்காமலேயே நூறு ரூபாயை அவனின் கையில் திணித்துவிட்டு தன் காருக்குள் ஏறிக்கொண்டான். ஹப்புத்தளையிலிருந்து பண்டாரவளை நோக்கி போய்க்கொண்டிருந்த முரளியின் கார் சில்லுகள் லாவகமாக அப்பாதைகளின் வளைவுகளுக்கு ஏற்ப தம்மை வளைத்தும் நெளித்தும் உதவி செய்தன.

பனிச்சாரல்களுக்கு மத்தியில் தேயிலைக் கொழுந்துகளின் வாசனை, காற்றில் வந்து சங்கதி சொல்லியது. முகில் கூட்டங்கள் மலையடிவாரத்தை நோக்கி ஆவலுடன் கீழே வந்துகொண்டிருந்தன. மழையும் இலேசாக தூறிக்கொண்டிருந்தது. ஆங்காங்கே மலைகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்த மண்குவியல்கள் பாதையில் இருபக்கங்களிலும் குவிந்திருந்தன. தலையாட்டும் மானாப்புற்கள் குளிருக்கு நடுங்கியவாறு அங்குமிங்கும் அசைந்துகொண்டிருந்தன.
தூரத்தில் ஒரு ஆடு மழையில் நனைந்த தன் உடம்பை சிலிர்த்தவாறு புல்மேய்ந்து கொண்டிருக்க, தேயிலை மலைகளில் ஆண்களும் பெண்களும் பொலித்தீன் பைகளினால் தங்கள் தலையை மறைத்தவாறு தேயிலை பறித்துக்கொண்டிருந்தார்கள்.

மற்ற நாட்களில் அவனும் இயற்கையோடு இணைந்து தூரத்துப் பச்சையாய் அழகாய்த் தெரியும் மலைகளையும், நீண்டு உயர்ந்து வளர்ந்த மரங்களையும் பார்த்து ரசித்தவாறு வந்திருப்பான். ஆனால் இந்த அழகிய காட்சிகள் எதுவும் இன்று முரளியின் மூளைக்குள் பரவசத்தை ஏற்படுத்தவில்லை. அவன் தன்னுடைய பாடசாலைக் காலத்து வாழ்க்கைக்கு தன் சிந்தனைகளைத் திருப்பிவிட்டிருந்தான்.
அம்மா, அப்பா, இரண்டு அக்காமார்களுக்குப்பிறகு முரளியும், அவனுக்குப்பிறகு ஒரு தம்பியும், தங்கையுமாக மொத்தம் ஏழு பேர்களைக் கொண்டது முரளியின் குடும்பம். அப்பா வேலுச்சாமி குடும்பத்தில் அக்கறை உள்ளவராயினும் கசிப்பு குடித்தே தன் வாழ்நாளை பாதியாக்கிக்கொண்டவர்.

அம்மா முத்தாயி தேயிலைக்கொழுந்து பறிப்பவள். பிள்ளைகள் அனைவரும் பாடசாலைக்குச் செல்பவர்கள். லயத்துக்காம்பறா என்று அழைக்கப்பட்ட முரளியின் குடிசையில் அவர்களைத் தவிர கறையான்களும், எலிகளும்கூட வசித்து வந்தன.

ஒவ்வொருநாளும் விடியற்காலையில் எழுந்து சில்லென்ற நீரில் குளித்து சாமி பூஜைகளைப் பண்ணுவார் வேலுச்சாமி. அம்மாவான முத்தாயி அவருக்கு ஒத்தாசையாக எழுந்து ரொட்டிகளைச் சுட்டு தேங்காய்ச் சம்பலும் செய்துவிட்டு தேயிலை மலைக்குப்போக தயாராகுவாள். பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்ல எழுந்திருக்கும் போது அம்மாவும் அப்பாவும் மலைக்குச் சென்றிருப்பார்கள்.
பெரிய அக்கா எல்லோருக்கும் தேயிலைச் சாயத்தை வடித்துக் கொடுப்பாள். சீனி இல்லாத பல தருணங்களில் முரளி கோபித்துக் கொண்டு பாடசாலைக்குப் போய்விடுவதுமுண்டு. காலம் செல்லச் செல்ல குடும்பத்தின் வறுமை நிலை கோரத்தாண்டவமாடியது. முத்தாயி மேலதிக வேலைகளுக்காக இரவில் வீடுவீடாகச் சென்று மாவிடித்துக் கொடுப்பதுவும், சமையல் வேலைகள் செய்வதுமாக இருந்தாள். அவர்கள் வீட்டில் நான்கு பெட்டைக் கோழிகளையும் வளர்த்து வந்தாள். சின்னக்கா பூச்செடிகளை வளர்த்து விற்பனை செய்து வந்தாள்.

முரளி அப்போது எட்டு வயதை அடைந்தவன். அவனுக்கு பெரிய அக்கா வடைகளைப் பொரித்து கூடையில் போட்டுக்கொடுப்பாள். அவன் அந்திப் பொழுதுகளில் டவுண் பக்கமாகச்சென்று அதைக் கூவிக்கூவி விற்பான். சில நேரங்களில் கொடுத்தனுப்பிய வடைகளில் பாதிகூட விற்பனை செய்ய முடியாமல் அவன் அழுது கொண்டு வீட்டுக்குப் போகும்போது அவனை ஆறுதல்படுத்த வீட்டில் பெரியவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

ஏனெனில் அவர்களும் ஏதாவது வேலைக்காக வெளியில் சென்றிருப்பார்கள். முரளி தன் தம்பி, தங்கையுடனும் அவன் செல்லமாக வளர்த்து வரும் கோழிகளுடனும் தன்பொழுதைக் கழித்துவிட்டு ஏழு மணியானதும் பாடப் புத்தகத்தோடு ஒன்றிப்போயிருப்பான்.

இவ்வாறு இவர்களுடைய வாழ்வு மிக சோகமாக நிகழ்ந்தேறிய காலத்தில், அனைவரினதும் நிம்மதியைக் கொன்றுபோட்டதொரு நிகழ்வு இடம்பெற்றது. ஆம்! மலைக்குச்சென்ற வேலுச்சாமி பாம்பு கடித்து இறந்துபோனார். வாயில் நுரை தள்ளியவாறு காணப்பட்ட அவரின் உடலைப் பார்த்ததும் முத்தாயி வீரிட்டு கதறியழுதாள். அக்காமார் இருவரும் தலையிலும், மார்பிலும் அடித்துக்கொண்டு அழுதார்கள். கீழ் லயத்து செல்லாத்தா ஆச்சி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள். முரளியின் கண்களிலிருந்து ஒருசொட்டும் கண்ணீர் வரவில்லை. அவன் அதிர்ச்சியால் அப்படியே உறைந்து போயிருந்தான்.

அவன் பரீட்சைக் கட்டணம் என்று கேட்டபோதெல்லாம் சந்திக்கடை பண்டாரவிடம் கடன்கேட்டு காசு தந்த அப்பா, மாவு கலந்த தேத்தண்ணி கேட்டு அவன் அடம்பிடித்தழுதபோது டவுணுக்கு கூட்டிச்சென்று ஹோட்டலில் தேநீர் வாங்கித்தந்த அப்பா, அம்மா முரளிக்கு அடித்த போதெல்லாம் அம்மாவை அதட்டி தன் மடியில் அமர்த்தி நெஞ்சோடு அணைத்துக்கொண்ட அப்பா… இனிமேல் அவனுடன் இருக்கப்போவதில்லை… பேசப்போவதில்லை… என்று எண்ணும்போது முரளியின் தொண்டை அடைத்து இதயம் கல்லாகிப்போனது.

அந்தக் கவலையை வெளிப்படுத்தத் தயாராக அவனது நெஞ்சு மிகவேகமாக உயர்ந்து தாழ்ந்தது. யாரும் எதிர்பார்க்காத தருணமொன்றில் ஓவென்று வெடித்தழுதான் முரளி. அவனை கட்டுப்படுத்த யாருக்கும் முடியவில்லை. அவனாகவே மயங்கி விழும் வரைக்கும்!

பிறகு முரளியின் வாழ்க்கையில் பல சோதனைகள் ஏற்பட்டன. அம்மா அவ்வப்போது சுகவீனத்தால் சுருண்டு படுத்துக்கொள்வாள். பலவீனமடைந்திருந்த அவளது உடல்நிலை, காலநிலைக்குளிரால் இன்னும் பாதிக்கப்பட்டது. அதனால் அவன் பாடசாலைக்குச் செல்வதில் அவ்வப்போது சில கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

கிழிந்த மேற்சட்டையையும், துவைத்துத் துவைத்து பழசாகிப்போன காற்சட்டையையும் பார்த்து பாடசாலையிலும் கூட அவனைப்பற்றி பல மாணவர்கள் கேலியும் கிண்டலும் செய்வார்கள்.

பரீட்சைக் கட்டணம் செலுத்த முடியாத பல கட்டங்களில் கணக்குப்பாட ஆசிரியரான சித்ரா டீச்சரின் சொல்லம்புகள் அவன் மனதைக் குத்திக் கிழித்துவிடும். அவர் பாடத்துக்கு வந்தாலே முரளியின் கறுத்த உடல் வியர்வையால் நனைந்து வெடவெடத்துக் கொண்டிருக்கும்.

‘லயத்தான்களுக்கு படிப்பு ஒரு கேடு. காசு கட்ட வக்கில்ல.
வந்திட்டான்கள் படிக்க’

‘ஏய் தோட்டக்காட்டான்! பேசாம மாடு மேய்க்கப் போயிருந்தாலாவது பிரயோசனப்பட்டிருப்பே. வந்திட்டான் இங்க உயிரை வாங்க’
இந்த மாதிரியான பேச்சுக்கள் முரளியின் மனதை அன்றாடம் நோகடித்தாலும் அவன் படிப்பதைக் கைவிடவில்லை. எனினும் அவனது பிஞ்சு மனது பாடசாலைக் கோபத்தையெல்லாம் தாய் மீது காட்டுவதும், அவளிடம் கெஞ்சுவதுமாக இருந்தது.

‘அம்மா! எனக்கு புதுக்காற்சட்டையும், சேட்டும் தச்சுத்தருவியாம்மா?’

‘என்ர ராசா. அடுத்த வருசம் நீ புதிய வகுப்புக்கு போறப்போ அம்மா தச்சுத்தருவேன்டா’

‘போம்மா! எப்ப கேட்டாலும் இதத்தான் சொல்லுவாய். நான் இனி பள்ளிக்கூடம் போறேல்லை’

‘அழாதடா செல்லம். நீ நல்லாப் படிச்சு பெரியாளாய் வர வேணும்.
உன்ர அப்புவும் இதத்தான் விரும்பிச்சி. சம்பளம் போட்டதும் புதுச்சட்டை தாறன் ராசா’

முரளி அம்மாவின் அணைப்பில் சமாதானமாகிவிடுவான். அவனது இலட்சியம், தன் குடும்பத்தாரின் எதிர்பார்ப்பு போல நன்றாக படித்து முன்னேறுவது என்று திடசங்கற்பம் பூண்டான்.

பெரிய அக்கா திருமண வயதை எட்டியிருந்தாலும் அவளுக்கென்று பிறந்தவனை கண்டு பிடிப்பதில் பல சிக்கல்கள் எதிர்ப்பட்டன. சின்ன அக்கா இளமை அழகுடன் இருந்ததால் தோட்டத்து இளைஞர்களை விடவும், சம்பளம் போடும் துரைமார்களின் கண்கள் அவளை மேய இலக்கு பார்த்துக்கொண்டிருந்தன. தங்கையும் பருவ வயதை அடைந்து வாழ்க்கையைப் பற்றின பயத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாள்.

வருடங்கள் சில கடந்தன. அம்மாவின் அன்பான வார்த்தைகள் தந்த தைரியத்தாலும், அக்காமாரினது ஓய்வு ஒழிச்சலற்ற உழைப்பாலும் முரளி உயர்தரத்திலும் சிறப்பாக சித்தியெய்தி மருத்துவத்துறைக்கு தெரிவாகியிருந்தான்.

பல்கழைக்கழகத்தில் கூட அவனுடன் படிக்கும் சக மாணவர்கள் அவனது வறுமையை குத்திக்காட்டத் தவறியதில்லை.

‘மச்சான் இதப்பாருடா. தோட்டக்காட்டான் எல்லாம் டொக்டர் ஆகப்போறான்டா. அப்போ நாம எல்லாம் எங்கப் போறது?’

‘ஆமாண்டா. இவனும் இவன்ட எண்ணெய் தலையும். டாக்டர் ஆக ஒரு பர்சனலிட்டி வேணாம்? நீ எல்லாம் ஏண்டா இப்படி எங்கள படுத்துற?’

இவையெல்லாம் முரளிக்கு பழகிப்போன சமாச்சாரங்கள் ஆகின. சில நாட்கள் கடந்த நிலையில் அவனது கூர்மையான அறிவையும், ஆற்றலையும் பார்த்து மற்ற மாணவர்கள் அவனை தம் நண்பனாக்க பிரயத்தனப்பட்டார்கள். தோட்டக்காட்டான் முரளி, அவர்கள் மத்தியில் டொக்டர் முரளியாக உருவெடுத்தான்.

முரளியின் படிப்புக்காலம் முடியும் தருவாய் வரைக்கும் பெரிய அக்கா வெளிநாட்டுக்குச் சென்று அனைவரினதும் வயிற்றுப்பாட்டை கவனித்து வந்தாள். சின்னக்கா தோட்டப்பாடசாலை ஒன்றில் தற்காலிகமாக கற்பித்துக்கொண்டிருந்தாள். தம்பி உயர்தரமும், தங்கை சாதாரண தரமும் கற்றுக்கொண்டிருந்தார்கள்.

முரளி தனக்கு வைத்திய நியமனம் கிடைத்ததும் பெரிய அக்காவை வரவழைத்து தனது சீனியர் நண்பன் ஒருவனுக்கு அவளை மணமுடித்துக் கொடுத்தான். அனைவரினது அன்பாலும் பராமரிப்பாலும் முத்தாயி உடல்நிலை தேறி இருந்தாள். சின்ன அக்காவுக்கு வரன் தேடிக்கொண்டிருந்த தருவாயில் அவளுடன் படித்து தற்போது வங்கியில் வேலைசெய்து கொண்டிருக்கும் விமலன் அவளை மணமுடிக்க சம்மதம் கூறியிருந்தான். எல்லாம் இறைவனின் நாட்டத்தால் நல்ல படியாக நடந்து கொண்டிருந்தது.
சின்ன அக்காவின் திருமண விடயம் பற்றி தன் நண்பர்களுக்கு பேஸ்புக்கில் மகிழ்ச்சியான செய்தியை அனுப்பிவிட்டு வந்து கொண்டிருந்த முரளிக்குத்தான், வாசனா சம்பத சிறுவனின் சந்திப்பு முந்தின காலத்து வாழ்வை ஞாபகப்படுத்தியது.

000000000

புகையிரத வண்டி செல்வதற்காக பாதை மறிக்கப்பட்டிருந்தது. வாகனங்கள் தொடராக காத்துக்கொண்டிருந்தன. அந்தி சாயும் அத்தருணம், மழைமுகிலின் காரணத்தால் இரவாகிவிட்டதைப் போன்ற பிரம்மையை ஏற்படுத்தியது. இலேசாக காரின் ஜன்னல்களைத் திறந்துவிட்டான் முரளி. பாதையோரத்து மின்குமிழ்கள் அனைத்தும் எரிந்து கொண்டிருந்தன. எங்கிருந்தோ வந்த வெளவால் ஒன்று மின்சார வயர்களில் தொங்கி தன்பாட்டுக்கு அலறிக்கொண்டிருந்தது.

ஒருவாறு பண்டாரவளைக்கு வந்துசேர்ந்துவிட்ட முரளி அங்கிருந்த தனது வீட்டுக்குப் போகும்போது ஆறு நாற்பத்தைந்து ஆகியிருந்தது. அப்போது பெரிய அக்கா அவனுக்கு இஞ்சி பிளேன்டீயும், உழுந்து வடையும் கொண்டு வந்தாள். அவள் மிகவும் வாடிப்போயிருந்தாள். அவளது முகத்தைப் பார்க்க அவனுக்கு கவலையாக இருந்தது. என்ன ஏதென்று விசாரித்ததில், தான் மாமனாகப் போகும் இனிய விடயத்தை அறிந்து மகிழ்ந்தான். அனைவரையும் இரவைக்கு சாப்பிடுமாறும், தான் வர தாமதமாகும் என்றும் கூறிவிட்டு, டிஸ்பன்சரி நோக்கி தன் காரை செலுத்தினான் முரளி.

ஏழரை மணியளவில் டிஸ்பன்சரிக்கு வந்து சேர்ந்துவிட்ட முரளி அங்கிருந்த தாதிப்பெண்ணை அழைத்து ஒவ்வொருவராக உள்ளே அனுப்புமாறு கூறினான். நாட்டு நிலைமை மோசமடைந்தது போல நிறைய நோயாளிகள் அங்கு வந்திருந்தார்கள். அதற்குக் காரணம் டொக்டர் முரளி அம்மாவட்டத்தின் சகல இடங்களிலும் பிரபலம் ஆகியிருந்ததே. அறிந்தவர்கள், புதியவர்கள் என்று பலர் வந்திருந்த அந்த டிஸ்பன்சரி இரவு ஒன்பது மணிக்கு மூடப்பட்டு விடுமா என்று யோசித்துப் பயந்து தாதிப்பெண் அவசர அவசரமாக தனது அலுவல்களைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் மாட்டிக்கொண்டிருந்த முரளி, வந்திருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கான ஆலோசனைகளை சொல்லிக்கொண்டிருந்தான். விடைபெற எழுந்த அந்தப்பெண் இருபத்து மூன்று வயதுடைய சின்னப் பெண்ணாக இருந்தாள். அவளது அம்மாவின் சுகவீனத்தை வேறு பல வைத்தியர்களிடமும் காட்டி அது குணமாகவில்லை. முரளியின் கைராசியாலோ என்னவோ அந்த அம்மையார் இப்போது ஆரோக்கியமாக வாழ்கிறார். அதனால் அந்தப்பெண் முரளியைக் கையெடுத்து கும்பிட்டுவிட்டு பிறக்கப்போகும் தன் பிள்ளைக்கு முரளி என்ற பெயரையே சூட்டுவதாக மகிழ்ச்சியுடன் கூறினாள். முரளியின் இதழோரத்தில் சிறுபுன்னகை தவழ்ந்தது.

இன்னும் பலர் அவ்வாறு வந்து மருந்தெடுத்துக்கொண்டு சென்றுவிட்டார்கள். அதன் பின்னர் வந்த நோயாளியை பார்த்த மாத்திரத்தில் முரளி தன்னையறியாமலேயே அனிச்சையாக எழுந்திருந்தான். நிலைமையை சமாளித்தவனாக தனது காற்சட்டைப் பைக்குள் இருந்து தனது கைத்தொலைப்பேசியை எடுத்து மேசை மீது வைத்துவிட்டு அமர்ந்தான்.

அந்த முதிய பெண்மணி முரளியை சாந்தமாக பார்த்து புன்முறுவல் பூத்துக்கொண்டிருந்தாள். அவளுடன் ஒரு யுவதியும் வந்திருந்தாள். அந்த வயோதிபப் பெண் அவனைப் பார்த்து சிரித்தது இதுதான் முதல் தடவை. அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. முரளியால் நம்பவே முடியவில்லை. அவனும் சிரித்துவைத்தான்.

ஆம்! அவள் தான் முரளிக்கு கணக்குப்பாடம் கற்பித்த சித்ரா டீச்சர். அவளுடன் வந்திருந்த அந்த யுவதி, முரளியுடன் படித்த சித்ரா டீச்சரின் மகள். சற்று நேரம் கடந்த பின்பு அவனுக்கு விடயம் விளங்கிவிட்டது. அதாவது அவர்களிருவரும் முரளியை அடையாளம் காணவில்லை. ஆனால் சித்ரா டீச்சரின் கண்களில் பிரகாசித்த அந்த ஒளி அவனுக்கு புதிதாக இருந்தது.

அடுத்த நாள் அந்திப்பொழுதில் முரளி தன்வீட்டு மொட்டை மாடியில் நின்றிருந்தான். அந்த ரம்மியமான இயற்கைச் சூழல் அவன் மனதை ஆசுவாசப்படுத்தியது.

சிறுவயதிலும்;கூட அவன் தன்வீட்டின் மேற்குப்புறத்தில் அமைந்திருக்கும் ஓடையில் விளையாடிவிட்டு வருவான். ஈரப் புற்களினூடு வளைந்து நெளியும் அட்டைகள் அவனது இரத்தத்தை உறிஞ்சினாலும் அவனுக்கு அது விளங்காது. தூறல்விழும் சில அந்திப்பொழுதுகளில் அவ்வாறு ஓடையில் நனைந்துவிட்டு இரவு முழுவதும் சளியால் அவதிப்படுவான்.

இந்த அந்திப்பொழுதில் முகில் கூட்டங்கள் ஒன்று திரண்டுவந்து சூரியனை விழுங்குவது போல் இருந்தன. அதற்கு பயப்பட்டதாலோ என்னவோ மலையடிவாரத்தினூடாக செக்கச்செவேல் நிறத்திலிருந்த சூரியன் மெதுமெதுவாக மறைந்துகொண்டிருந்தான். அங்கே டக்டக் என்ற உறுமலுடன் மலைகளை ஊடறுத்து ஓடும் புகைவண்டி, பெயருக்கேற்றாற்போல கரிய புகையை உமிழ்ந்துகொண்டு சென்றது.

இவையெல்லாவற்றையும் ரசித்தவாறே சித்ரா டீச்சரின் இந்த மாற்றம் பற்றியும் அசைபோட்டுப் பார்த்துக் கொண்டிருந்தான் முரளி.

இன்னொரு நாள் பாதையோரமாக சித்ரா டீச்சர் சென்றுகொண்டிருந்த போது முரளி தனது காரின் வேகத்தைக் குறைத்து அவரை அதில் ஏறச்சொன்னான். முதலில் மறுத்தாலும் அவனது கரிசனையான வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு சித்ராவும் ஏறிக்கொண்டார். அவன் சித்ரா டீச்சரின் வீட்டருகில் விட்டுவிட்டு விடைபெற்றுச்சென்றான்.

சித்ரா டீச்சர் முரளி பற்றி உயர் அபிப்பிராயம் கொண்டிருந்தார். தன் மகளின் தரத்துக்கு முரளி போன்றதொரு ஆண்மகன் மிகவும் பொருத்தமானவன் என கணிப்பிட்டிருந்தார். முரளியின் வயது, உத்தியோகம், படிப்பு, வசதி பற்றி விலாவாரியாகத் தெரிந்த சித்ரா டீச்சருக்கு முரளியின் குடும்பப் பின்னணி பற்றி தெரிந்திருக்கவில்லை.

தோட்டக்காட்டான் என்று தன்னால் அடைமொழி சொல்லி அழைக்கப்பட்ட மாணவனே முரளி என்று அவர் அறிந்திருக்கவில்லை. ஏனெனில் முரளி சாதாரண தரம் கற்றுக்கொண்டிருந்த போது அவர் வேறு பிரதேசத்துக்கு இடமாற்றம் பெற்றுப் போயிருந்தார். தற்போது ஓய்வு பெற்று சொந்த ஊருக்கு திரும்பி வந்திருக்கிறார். முரளியின் கைராசி பற்றியும் ஊரார் சொல்ல அறிந்தாள். அவன் தனது மகளுக்கு மிகவும் பொருத்தமானவனாக இருப்பான் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எப்படி இந்த திருமண விடயத்தைப்பற்றி கதைப்பது என்று யோசித்துக்கொண்டிருந்தார் சித்ரா டீச்சர்.

திடீரென்று அவர் மனதில் ஆனந்த ரேகைகள் தோன்றி மறைந்தன. ஏனெனில் அன்று முரளியின் டிஸ்பன்சரிக்கு சென்றிருந்தபோது அவன் தன்னையும், தனது மகளையும் பார்த்து லேசாக சிரித்தது ஞாபகத்துக்கு வந்தது. தாயின் முன்னால் மகளுடன் சிரிப்பதெவ்வாறு என்று முரளி சங்கடப்பட்டிருப்பான் என்றும், அன்று பாதையோரத்தில் தன்னைக் கண்டபோது காரில் ஏற்றி வந்ததையும் எண்ணி தனக்குள் வீணான மனக்கோட்டைகளைக் கட்டிக்கொண்டிருந்தார் சித்ரா டீச்சர். ஆனால் அவன் மரியாதை நிமித்தம் அவ்வாறெல்லாம் செய்தான் என்று அவருக்குத் தெரியாது.

சில வாரங்கள் கழித்து திருமணப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக பண்டாரவளையிலுள்ள முரளியின் வீடு நோக்கி பயணமானார் சித்ரா டீச்சர். முரளி டொக்டரின் வீடு எது என்று சிலரிடம் விசாரித்த போது அனைவரும் கூறிய விடை ஷவலது பக்கமாக திரும்பும்போது தென்படும் மூன்றுமாடி வீடு| என்பது.
முரளியின் வீட்டை அடைந்த சித்ராவுக்கு மகிழ்ச்சி இரட்டிப்பாகியது. அங்கே ஒரு காரும், பக்கத்தில் இரண்டு வேன்களும் இருந்தன. சற்றுத்தள்ளி அழகிய பூந்தோட்டம் விசாலமாக அமைந்திருந்தது. அதில் பூத்திருந்த சிவப்பு ரோசாக்கள் சித்ரா டீச்சரை வரவேற்பது போன்று தலையாட்டிக்கொண்டிருந்தன.

எல்லாவற்றையும் ரசித்தவாறே வீட்டினுள் காலடி எடுத்து வைத்த சித்ரா ஆச்சரியமாக சுற்றுமுற்றும் பார்த்தாள். மாபிள் பதித்த அழகிய வீடு. சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டார். அவ்வீட்டின் திரைச்சீலை யாவும் சுவரில் பூசப்பட்ட இளம் பச்சை நிறத்திலே அழகாக இருந்தன. தான் உட்கார்ந்திருந்த சோபாவின் இருக்கைகளை தடவிப்பார்த்தார். அவை உயர் ரக தளபாடங்கள் என்பதில் சந்தேகமிருக்கவில்லை.

‘அம்மாவை அழைத்துக்கொண்டு வருகிறேன் சற்று உட்கார்ந்திருங்கள் மெடம்’ என்று கூறி வேலைக்காரன் உள்ளே சென்றான்.

ஓரிரு நிமிடங்கள் கழிந்து வந்த அந்தப் பெண்ணைப் பார்த்ததும் சித்ரா டீச்சருக்கு அவளை ஞாபகம் வந்தது. முத்தாயி சேலையை இழுத்துப் பிடித்து போர்த்தியவாறு பக்குவமாக வந்துகொண்டிருந்தாள். ‘இவ இங்கதான் வேல செய்றாளா?’ என்று இளக்காரமாக எண்ணிக்கொண்டிருந்தபோது வீட்டு வேலைக்காரன் சித்ராவிடம்
‘இவங்க தான் முரளி ஐயாவோட அம்மா’ என்று கூறிவிட்டுப் போனான். முத்தாயி முரளியின் ஆசிரியையான சித்ராவை அடையாளம் கண்டு அன்புடன் வரவேற்றாள்.

சித்ராவுக்கு ஆணி அறைந்ததுபோல் இருந்தது. ஓ.. இவளின் மகன் முரளியா அந்த டொக்டர்? அப்படியென்றால்.. தோட்டக்காட்டான் என்று சதாவும் நான் திட்டிய அந்தப் பையனா இவன்? இன்று ஊர் போற்ற வாழ்ந்து வரும் இவனையா நான் அன்று மாடு மேய்க்கப் போகச் சொன்னேன்? சித்ரா டீச்சரின் இதயம் ஓராயிரம் முறை உடைந்து சுக்குநூறாகியது.

முத்தாயியிடம் என்ன பேசுவது? எப்படிப் பேசுவது என்று எண்ணிக்கொண்டு பேச வந்த விடயம் தவிர்த்து பொதுவாகப் பேசினார் சித்ரா டீச்சர். இறுதியில் விடைபெறப் போகும் போது முத்தாயி சித்ராவிடம்,

‘டீச்சர். நீங்க நம்ம வீட்டுக்கு வந்தது ரொம்ப சந்தோஷமுங்க. முரளியிருந்தால் இன்னும் சந்தோசப்பட்டிருப்பான். நானும் மவனும் உங்க வீட்டுக்கு வரத்தான் நெனச்சிருந்தோம். ஏன்னு தெரியுங்களா? என்ட ரெண்டாவது பொண்ணுக்கு வாற கிழமை கலியாணம்ங்க. அதுக்கு பத்திரிகை குடுக்கத்தான்’

‘அப்படியா? ரொம்ப சந்தோசம். மாப்புள என்னா பண்றாரு?’

‘பேங்குல வேல பாக்குறாருங்க. அது மட்டுமில்லே. அதே மணமேடையில முரளிக்கும் கல்யாணம் நடக்குமுங்க. கட்டாயம் நீங்க வந்து அவங்களை ஆசீர்வதிக்கனும்…’

முத்தாயி இன்னும் என்னென்னவோ சொல்லிக்கொண்டிருந்தாள். ஆனால் சித்ரா டீச்சரின் காதுகளில் வேறு எதுவுமே விழவில்லை!!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *