கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 27, 2022
பார்வையிட்டோர்: 5,287 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அவராகச் சரண் புகுந்த அந்தக் காடு அவருக்கு ஒரு கூடாகப் போய் விட்டது.

பிரதாப்சிங் கூட்டில் அடைபட்ட சிங்கம்போல அதில் இங்கும் அங்குமாக இடைவிடாமல் நடந்துகொண்டிருந்தார். வெறி பிடித்தது போன்ற அந்த நடையே அவர் மனம் முற்றும் வேறு எதிலோ ஆழ்ந் திருந்ததென்பதை விளக்கிற்று.

இருட்டிக் கொஞ்ச நேரம் ஆகிவிட்டது. ஜகமே வாயடைபட்டது போல திடீரென்று மௌனமாகிவிட்டது. சுவர்க்கோழிகள் மட்டும்தான் இடைவிடாமல் கத்திக் கொண்டிருந்தன. தூரத்திலிருந்த ஆரவல்லி மலைகளின் சாரல் சதுப்புகளிலிருந்து கிளம்பிய ‘கொள்ளிவாய்ப் பிசாசுகள்” மட்டும் தோன்றித் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. நடு நடுவே ஏதாவதொரு காட்டு மிருகம் அலறிய ஒலி கிளம்பிக் கொஞ்சம் கொஞ்சமாகக் காட்டின் மௌனத்தில் கலந்தது.

அந்த அமைதியும் தனிமையும் ராணாவிற்கு இன்னும் அதிகமாக வெறியூட்டின. அந்த இருளின் வெறிப்பில், அவருடைய வீழ்ச்சி ஒரு பேயுருவம்போல வந்து அவரை ஏளனம் செய்ததுபோலிருந்தது. யானையின் வெறியை அங்குசம் அதிகப்படுத்துவதுபோல அந்தக் காட்டு வாழ்க்கையின் கட்டுப்பாடு அவருடைய ஆக்ரோஷத்தை அதிகப் படுத்திற்று. மாதாவை உபாஸனை செய்யவேண்டிய அன்று என்னமோ ராணா பிரதாபசிங்கின் கோபம் கொந்தளித்து எழுந்தது. ராணி துர்க்கா கூட அவர் அருகில் போக யோசித்தாள்.

ராஜபுத்திர குலம் வீழ்ச்சியடைந்த விபரீதத்தை எண்ண எண்ண மேவார் அரசன் மனது கலங்கிற்று. ஈன ஜாதியினர் போல் ராஜபுத்திரர்கள் மொகலாயருக்குத் தலை வணங்கிப் பணிந்துபோகும் காலமா வந்து விட்டது? ராஜஸ்தானத்தின் மானத்தை அன்னாள்வரை, பெண்டு பிள்ளை களையும் லட்சியம் செய்யாமல், உயிர் கொடுத்துக் காத்த சிங்கங்கள் நரிகளாகிவிட்டனவா? எங்கிருந்தோ நேற்று ஹிந்துஸ்தானத்தில் வந்து நுழைந்த அன்னியனுக்கு ஆளாகி அவர்களிடம் உத்தியோகம் பெறும் துரோகிகளாக ராஜபுத்திரர்கள் மாறிய விந்தைதான் என்ன? அவர் களுடைய குலத்தைக் குன்றின்மேல் விளக்காகத் தூக்கிவைத்த அவர் களுடை அஞ்சா நெஞ்சமும் சுயமரியாதையும் எங்கே போய்விட்டன? மொகலாயரை எதிர்த்துப் போராட அவர்களுக்கு இப்பொழுது ஏன் வலுவில்லாமல் போய்விட்டது? தேவி மாதாவின் அருள் குன்றி விட்டதா?….இல்லை! தேவி மறக்க மாட்டாள்!

ராஜபுத்திரர்கள் தான் தங்களுடைய கடமையை மறந்தார்கள். தியாக புத்தியைப் பறிகொடுத்து விட்டார்கள். டாம்பீகத்தில் ஈடுபட்டு வலிமையை விற்றுவிட்டார்கள்… ஆம்! சந்தேகமில்லை… பரஸ்பர அசூயையாலும் சில்லரை மனஸ்தாபங்களாலும் ஒற்றுமையில்லாமை யாலும் அவர்களிடையே ஐகபத்தியம் போய்விட்டது. சுகவாழ்க்கையாவ் ஏற்பட்ட தளர்ச்சியும் சேர்ந்துகொண்டு ராஜபுதனத்தைச் சீர்குலைத்து விட்டது! ஓரிருவர் தனிப்பட்டு நின்று என்ன பயன்? அவர்களுடைய எதிர்ப்பு எவ்வளவு பலமாயிருந்தாலென்ன? மொகலாயர்களின் சைனியம் சுலபமாக அவர்களை ஒடுக்கி விட்டது.

ஆனால் பிரதாப்சிங் மட்டும் அக்பர் பாதுஷாவிற்கு முடிசாய்க்க மறுத்து விட்டார். அன்னியனுக்கு அடிமையாகாத ஒரு ராஜபுத்திரனாவது இருக்கவேண்டுமென்று தான் அவருக்குப் பணிவதில்லையென்று கங்கணம் கட்டிக் கொண்டார். அந்தத் தீர்மானத்திற்காகத் தீக்ஷை வளர்த்தார். ராஜபுதனம் மறுபடியும் சுயேச்சை பெற்று, ராஜ புத்திரர்கள் பெயர் மறுபடியும் களங்கமற்று ஓங்கும்வரையில் படுக்கையில் படுப்ப தில்லை யென்றும், சுவர்ண பாத்திரத்தில் சாப்பிடுவதில்லையென்றும் விரதம் பூண்டார். ஒரு ராஜபுத்திரன் ராஜ ஸ்தானத்தில் இல்லாமற் போகவில்லை. சித்தூர் வம்சத்தில் இன்னும் ராணா பிரதாப் உயிருடன் இருந்தார்! சித்தூர் போய்விட்டது. ஆனால் ராஜபுத்திர வீரம் ஒரு அமரஜோதி; மேவாரும் போகலாம். எந்தாளும் அன்னியனுக்குப் படியாத ஒரு ராஜபுத்திரன் இருப்பார்!

மேவார் அக்பர் வசமாகிவிட்டால் என்ன? மேவார் மன்னன் அக்பர் வசமாகவில்லை. ராஜ்யத்தை விட்டு வெளியேறி அடுத்த காட்டில் புலிபோலப் பதுங்கியிருந்தான். சில சமயங்களில் அப்படிப் பதுங்கி யிருந்ததே அவருக்கு மகா கஷ்டமாயிருந்தது.

பிரதாப்சிங்கின் ரத்தம் கொதித்தது. அம்பர வம்சத்தைச் சேர்ந்த மான்சிங்/-மொகலாயரின் மைத்துனன்! தன் தங்கையை – அடாடார்- ஜோத்பாயை-தான் பதவி பெறும் பொருட்டு விற்றான் பாவி/

ஆனால் அவனைச் சொல்லுவானேன்? நாள் ஏன் ராஜ்யத்தைவிட்டு இங்கே வந்திருக்கிறேன்? மொகலாயருடன் யுத்தம் புரிந்து போர்க் களத்தில் உயிர் துறந்திருக்க வேண்டியவன், பேடிபோல, இங்கு ஏன் வந்து குடும்பத்தை நடத்திக்கொண்டிருக்கிறேன்? குடும்பம், பெண் சாதி, குழந்தைகள் என்ற பிரமை. அவைகளல்லவா என்னை இப்படிச்செய்துவிட்டன? என் குடும்பத்தைக் காத்து என் மானத்தை இழந்தேன்…சை!…

‘என் மானமா! ராஜஸ்தானத்தின் மானம்! ராஜ புத்திர குலத்தின் மானம்! பிருதிவிராஜன் சொன்னது சரி! நாள்தான் இப்பொழுது ராஜபுதனத்தைக் காக்கவேண்டியவன். நான் இப்படி இங்கே குடும்பப் பிரேமையில் உழன்றுகொண்டிருந்தால் ராஜபுத்திர சரித்திரமல்லவா அதோகதியாகிவிடும்! என் எண்ணமோ. என் குடும்ப நினைவோ இப்பொழுது எனக்கேற்பட்டால் நான் கடைசி துரோகியாவேன்!

‘பவானி ஆணை! நான் அவள் அடி பணிகிறேன். அவன் என்னை மீட்பாளாக! இந்தக் குடும்ப வாஞ்சையிலிருந்து என்னை விடுவிப்பாளாக! ஜயமாதா’

பிரதாப் வெறி பிடித்தவன் போவ் உரக்கக் கத்தினார். அந்தக் காட்டின் ஆழ்ந்த நிச்சப்தத்தில் அவர் குரல் சிம்ஹநாதம்போலக் கிளம்பிற்று.

துர்க்கா அதைக்கேட்டு திகிலடைந்து போனாள். குழந்தைகளுக்கு ஆகாரம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதை அப்படியே வைத்துவிட்டு ஓடிவந்தாள். குழந்தைகளைத் தனியாக விட்டுவிட்டு வருகிறோமே என்ற நினைப்பு கூட அவளுக்கு வரவில்லை. பிரதாப் சிங்கின் குணம் அவளுக்கு நன்றாய்த் தெரியும். அவர் அந்த மாதிரி நடந்துகொண்டால் ஏதோ மகத்தான நிகழ்ச்சிதான் என்று தெரியும்.

‘பிரபோ! ஏன் ஆயாசப்படுகிறீர்கள்? எதற்கும் காலம் சரியாக வேண்டும். காலபலம் சரியாக இல்லை. காலம் மாறும்’ என்று மெதுவாக ஜாக்கிரதையாக முகக்குறிப்பை உற்றுக் கவனித்துக்கொண்டே ஆரம்பித்தாள். ராணா நடப்பதை நிறுத்திவிட்டு ஓரிடத்தில் நின்று கொண்டு துர்க்காவை தலைசாய்த்த வண்ணம் கவனித்தார்.

பாண்டவர்களே காலம் மாறுமென்று காட்டில் காலங் கழிக்க வில்லையா? ஆனால் – ஆனால், இன்று நமது வறுமைதான் தாங்க முடியாததாக இருக்கிறது. நாம் அதை இலட்சியம் செய்யவில்லை நாம் படும் பாட்டைப் பற்றிக் கவலையே இல்லை. குழந்தைகள் தான் ஏமாறுகிறார்கள். வாழ்க்கையின் விபரீதமான ஏற்றத் தாழ்வுகளை அறியாத பருவம் அல்லவா? நமது நிலைமை அவர்களுக்கு அர்த்தமாக வில்லை. எப்படி ஆகும்? கண் கண்டு அநுபவித்த ராஜபோகம் ஒரு கனவுபோல மறைந்து விட்டால் பாவம்! அவர்கள் சவலைப் பின்னைகள் போல ஏக்கம் கொண்டு குன்றுகிறார்கள்!’

‘ஹும்!’ என்று ராணா கர்ஜித்தார். அது துக்கத்தால் ஏற்பட்ட பெருமூச்சா அல்லது கோபக் குறியா என்று துர்க்காவாவ் ஊகிக்க முடியவில்லை.

‘குழந்தைகள் நமது சோகம் கவிழ்ந்த முகங்களைக் கண்டு பீதி யடைந்து மௌனமாகிறார்கள்! அவர்களுடைய திகைப்பைப் காண என்னால் சகிக்க முடியவில்லை, நமக்குத் தெரிகிறது நமது லட்சியத்தின் மேன்மையும் வீரத்தின் கௌரவமும் – நாம் குழந்தைகளல்ல. ஆனால் அவர்கள் அக்ஞானிகள்/ இருக்கட்டும் – ஈசுவரன் – தேவி – கைவிட மாட்டார். தைரியம்கூட நம்மைக் கைவிடாது!’

‘சீ, போ, அந்தப்புரம்! யார் உன் வேதாந்ததைக் கேட்டது? உன்னாலல்லவா நான் மானத்தை இழந்தேன்! உனக்காவது, -நீ ராஜபுத்திர ஸ்திரீ! – மானம் இருந்தால் என்னை அன்றே யுத்தகளத்திற்கு அனுப்பி யிருப்பாய்… உன்னைச் சொல்லுவதில் என்ன பயன்? என் மதியல்லவா மங்கிப்போய்விட்டது! உன்னையும் உன் குழந்தைகளை யும் காப்பாற்ற, இந்த ஈன வாழ்வு வாழச்செய்ய, மானத்தை விற்று விட்டேனே! அடாடா!’

ராணாவின் குரலில் கோபம் தணிந்து பச்சாத்தாபமும் துக்கமும் அதிகமாயிற்று. துர்க்கா கொஞ்சம் தைரியமடைந்து ராணாவின் மனதை மெதுவாக சமாதானப் படுத்துவதற்கு ஆரம்பித்தாள்.

‘ராஜபுத்திர வீரன் இந்த மாதிரி ஏங்குவது வழக்கமில்லை. காலத்திற்கு விட்டுக் கொடுக்கவேண்டியது வீரத்திற்குக்கூட ரொம்ப அவசியம். ஆயிரம் பேருக்கு முன்னால் இருவர் போய் கண்மூடித் தனமாய் விழுவதும் பேதமை, புலி பாய்வதற்காகத்தான் பதுங்கும். அது பயப்படுவதன்று, ஒளிவதன்று.’

‘உனக்கெப்படித் தெரியும் ஒரு வீரன் மனத்து வேதனை? என்ன வானாலும், ராஜபுத்திர குலமானாலும் நீ பெண்-‘ துர்க்கா சட்டென்று கோபமடைந்தான்.

‘நான் மேவார் ராணி!’ என்றாள் கர்வத்துடன்.

‘இல்லையென்றுதான் நிரூபித்துவிட்டாயே! வேறு என்ன அத்தாட்சி வேண்டும்? வீரனுக்கு முன் பின் யோசனையே கிடையாது – கூடாது? எந்த நிமிஷம் யோசனை செய்ய ஆரம்பிக்கிறானோ அந்த நிமிஷம் முதல் அவன் வீரனல்ல, பயங்கொள்ளி!!

‘சித்தூர் வம்சத்தில் பயங்கொள்ளிகள் கிடையாது. என் கையைப் பிடித்த பிரதாப்சிங் பயங்கொள்ளி அன்று!’ என்று துர்க்கா மெய்மறந்து பேசினாள்.

நக்ஷத்திரங்கள் நிறைந்த அந்தக் கிருஷ்ண பக்ஷ இரவில் மேவார் ராணாவின் முகம், மற்றோர் நக்ஷத்திரம்போல ஜொலித்தது.

அருகிலிருந்து குடிசைக்கு வெளியே ஒரு சிறு விளக்கின் வெளிச்சத்தில் குழந்தைகள் இருவர் முன்பும் புல்லரிசியிலிருந்து செய்யப்பட்ட மா ரொட்டி வைக்கப்பட்டிருந்தது. அப்பொழுதுதான் அவர்கள் அதை

சாப்பிட ஆரம்பித்த சமயம். திடீரென்று ஒரு காட்டுப்பூனை அவர் களுக்கு நடுவில் பாய்ந்து ரொட்டியைக் கவ்விக்கொண்டு ஓடிப்போய் விட்டது.

சத்தத்தைக் கேட்டு துர்க்கா வேகமாகப் போய்ப் பார்த்தாள். அங்கே அவள் கண்டது அவளுடைய வீரநெஞ்சைக் கலக்கிவிட்டது.

காலத்தின் கொடுமை ஓரளவில் நிற்கக்கூடாதா? இரவு உணவிற்கு மிஞ்சியிருந்த அற்ப ஆகாரத்தைக் கூடவா அபகரித்துக் கொண்டுபோக வேண்டும்? பட்டினியைக் கூடவா இன்னதென்று அறியவேண்டும். அவள் குழந்தைகள்? அவள் மனம் இடிந்தது. நள தமயந்திகள் நினைவு வந்தது. போதாத காலத்தில் ஒற்றைத் துணியைப் பக்ஷி கொண்டு போகவில்லையா? தன்னையறியாமல் வாய்விட்டு அலறினாள். அந்த சோகத்தின் தவிப்பை அவளால் தாங்க முடியவில்லை.

துர்க்கா அழுத குரலைக் கேட்டு ராணா திடுக்கிட்டார். ‘துர்க்கா அழுதாளா?… என்ன விபரீதம்? இன்று என்ன நேரப்போகிறது?’ என்று நினைத்துக்கொண்டே அவளிருக்கும் இடத்திற்குச் சென்றார்.

துர்க்காவின் துக்கம் ராணாவைக் கண்டதும் மிதமிஞ்சிப் போய் விட்டது. ஒடி வத்து ராணாவின் காலில் விழுந்து கதறினாள்.

‘துர்க்கா, துர்க்கா, என்ன?’ என்றார் ராணா. அவர் தன் கோபத்தையே மறந்தார்.

‘என்னையும் கொன்று குழந்தைகளையும் கொன்று விடுங்கள். நீங்கள் அக்பரை எதிர்த்துச் செல்லுங்கள்! இந்த வாழ்வு இனிமேல் வாழ முடியாது! வேண்டாம்! வேண்டாம்! நானே நெருப்பில் பிரவேசித்து விடுகிறேன். அதுதான் ஹிதம்

‘என்ன நடந்தது?’ என்று கேட்ட பொழுது ராணாவின் குரலில் அமைதியும் தீர்மானமும் தோன்றிவிட்டன.

‘இரவு உணவிற்கு விதியில்லாமல் வாழலாமா?’

‘நாம்தான் உபவாசமாயிற்றே ?’

‘குழந்தைகள்?’

‘குழந்தைகளுக்கு அமர் கொண்டு வந்த ரொட்டிகள்?

‘கொஞ்சம்தான் பாக்கியிருந்தது. அதை அவர்கள் முன் வைத்துவிட்டு உங்களிடம் வந்தேன். அப்பொழுது காட்டுப்பூனை யொன்று அதை எடுத்துக்கொண்டு போய் விட்டது.’

‘குழந்தைகள் பட்டினியா? என்று கேட்டுவிட்டு ராணா அப்படியே அசைவற்று நின்றுபோனார். கொஞ்ச நேரம் அவர் ஒன்றுமே பேசவில்லை.

பிறகு திடீரென்று ‘அமர்!’ என்று கர்ஜித்தார்.

எல்லோரும் நடுங்கிப் போய்விட்டார்கள். அந்தக் குரலைக் கேட்டு, அமர் தூரத்திலிருந்து ஓடிவந்தான்.

‘பிரதாப் பணித்துவிட்டான்; சமாதானத்திற்குத் தயார்’ என்று அக்பரிடம் தெரிவி, போ, நிற்காதே இங்கே….ஓடு!’ என்று சொல்லி விட்டு மகா ராணா தொப்பென்று பூமியில் உட்கார்ந்தார்.

‘துர்க்கா! ராஜபுத்திர ஜாதி நசித்து விட்டது. உளுத்துப்போன மூங்கிலாகிவிட்டது. நாம் அரண்மனைக்குத் திரும்புவோம் வா. காடும் பசியும் கஷ்டமாக இருக்கின்றன. தியாகம் செய்ய உள்ளே சக்தி இல்லை!… துர்க்கா!. க்ஷத்திரியகுல வித்தை அன்று பரசுராமன் அழித்ததென்பது கதை. இன்று அது பூண்டற்றுப்போய் விட்டது. கோழைத்தனம்தான் உண்மையான சத்ரு-அக்பரைக் காட்டிலும் அதிக பலம் கொண்டது.’

‘இல்லை, இன்றும் நாம் தலையெடுக்கலாம்’ என்றாள் துர்க்கா.

‘முடியாது. இதுதான் பரீக்ஷை. அதற்கென்ன நாளைக்குத் திரும்பவும் சுயபுத்தி வத்து திரும்பவும் அக்பரை திராகரிக்கலாம். ஆனால் மறுபடியும் சோர்வு வரும். ஆகா! அக்பர் சாமர்த்தியசாலிதான்! குலைக்க முடியாத ராஜபுத்திர வீரியத்தை எவ்வளவு வகைகளில் இடத்திற்கேற்ற வாறு குலைத்துவிட்டான் ?…’

‘சரி, ராஜஸ்தானத்தின் சரித்திரம் முடிவடைந்து விட்டது. இனி தூங்கலாம் வா’

– 1943

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *