தமிழ் மங்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 27, 2022
பார்வையிட்டோர்: 3,189 
 

(1943ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘பூசுந்தரி, தென்னவன் தேவியாகிய நீயா அந்தப் பெண்ணைப் பார்க்க வில்லிப்புத்தூர் போவது?’

‘மன்னவன் மதுருதனன் தேவியைப் பார்க்கப் போவது உமது தோரணைக்குக் குறைவா?’

‘அவள் யார்? அப்படி நீ போய்ப் பார்க்கும்படி அவளிடம் என்ன விசேஷம்?’

‘வேந்தே,நீங்களே இப்படிக் கேட்கலாமா? வைணவத்தை உமக்குப் போதித்து தத்துவார்த்தத்தை விளக்கிய விஷ்ணு சித்தன் கண்டெடுத்து வளர்க்கும் கன்னி கோதை. அவள் மற்றவர் போன்ற பிறவி அல்ல. அவள் உடலும் உணர்வும் தாம் அனுபவித்தறியாத ஒரு தெளிவில் ஈடுபட்டு இயங்குகின்றன. அதனால் அவள், மகளிர் மற்றெங்கும் பாடாத வகையில் பாசுரங்கள் பாடி மகிழ்கிறாள்.

‘தமிழ்ப் பாசுரங்கள் உனக்கு விளங்குகின்றனவா? கங்காராசன் கன்னியா ரத்தினமாகிய நீ இங்கு தென் நாட்டிற்கு வந்து வெகு காலம் ஆக வில்லையே!”

‘ஆவல் இருந்தால் எவ்வளவு காலம் வேண்டும்?’

‘பூசுந்தரி, அவனை இங்கே வரவழைக்கிறேனே?

‘வடபெருங்கோயிலுடையானுக்கு மாவை சூடிக் கொடுக்கும் சுடர்க்கொடி இங்கே வரமாட்டாள்!’

பாண்டியன் மாறவர்மன் ராஜஸிம்ஹன் தன் தேவி கொண்டிருந்த ஆவலைக் கண்டு கொஞ்சம் அதிசயம் கொண்டான்.

‘அவளைப் பார்த்து என்ன ஆகவேண்டும்? எல்லாக் கலைகளையும் கற்றறிந்த நீ அவளிடமிருந்து என்ன புதிதாகக் கற்றுக் கொள்ளப் போகிறாய்?”

‘கற்றதெல்லாம் வீண், கற்காதது ஒன்று இருக்கிறது. அதுதான் கலை களுக்குக் கலை. அதை அறிவுறுத்தக் கூடியவன் அவள் ஒருத்தித்தான்’.

‘அது என்ன?’

‘எனக்குச் சொல்லத் தெரிய வில்லை; ஆனால் ஆண்டாளுடைய வாக்கின் உணர்ச்சியில் அது எனக்குப் புலனாகிறது.’

‘பெரியாழ்வார் தமக்கு அருளிய போதத்தைக் காட்டிலுமா அது சிறந்தது?’

‘அது வெறும் போதம் மட்டுமல்லவே! அது உணர்ச்சி!’

அப்பொழுது மகாசாமந்தன் மாறங்காரி வந்து பெரியாழ்வார் அரசனைக் காண வந்திருப்பதாகத் தெரிவித்தார். உடனே அரசனும் அரசியும் சென்று ஆழ்வாரை வரவேற்றார்கள்.

‘வில்லிப்புத்தூர் விட்டு எவ்வளவு நாட்களாயினவோ?’ என்று பாண்டியன் கேட்டார்.

‘இப்போதுதான் வருகிறோம். எமது மகள் கோதையுடன் திருவரங்கம் செல்கின்றோம். பாதையில் தென்கூடற்கோன் தென்னனைத் தரிசித்து விட்டுப் போகலாமென்று வந்தோம்’.

‘கோதை எங்கே?’ என்று பூசுந்தரி ஆவலுடன் கேட்டாள்.

‘சீடர் ஒருவர் வீட்டில் இருத்திவிட்டு இங்கே வந்தோம்.’

‘ஈரேழு வயதில் எழில் மிக்க பாசுரங்களை இயற்றிய அதிசய மங்கையைக் காண நான் பெரிதும் விரும்புகிறேன்’.

‘மணப் பருவம் வந்தும் மண மகன் ஒருவனை ஏற்க மாட்டேன் என்கிறாள். அரங்கனே ஆருயிர் நாயகன் என்கிறாள். ஊரார் ஏசுகிறார்கள்’.

‘இப்போது எது திருவரங்கம் செல்வது?’

‘கடைசியில் அவள் ஆசையையே நிறைவேற்றுவதெனத் தீர்மானித்து விட்டேன். அவளை அரங்கன் முன்னிலைக்கு அழைத்துச் செல்கின்றேன்.’

‘வீதியில் ஏதோ சத்தம் கேட்கிறதே!’ என்று மாறங்காரி சாளரத்தின் வழியே பார்த்தார். ஒரு கூட்டம் அரண்மனை வாயிலை நெருங்கிக் கொண்டிருந்தது. அரசியும் மற்றொரு சாளரத்தின் வழியாகப் பார்த்தாள்.

கூட்டத்தின் முன்னே பதுமை ஒருத்தி பதினைந்து வயது கொண்டவள். பருவத்தால் பூரித்திருக்க வேண்டிய உடல் மெலிந்து வாடி இருந்தது. ஆனால் முகத்தில் அழகு சொட்டிக் கொண்டிருந்தது. கூந்தல் அவிழ்ந்து துவண்டு கொண்டிருந்தது. ஆடை குலைந்தது கூடத் தெரியாமல் அப்படி மெய் மறந்தவளாய் ஆண்டாள் பாடிக்கொண்டே நடந்து சென்றாள்.

மத்தளங் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துளன் தம்பி மதிசூதனன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்.

பூசுந்தரி நிலை தெரியாமல் வீதிக்கு ஓடி அந்த விசித்திர மங்கையின் கையைப் பிடித்துக்கொண்டு, ‘கண்டாயா அம்மா?’ என்று உருகிக் கேட்டாள்.

‘கண்டேன்!’ என்று மொழிந்து கனவை நினைத்துப் புன்னகையுடன் நின்றாள் கோதை. அந்தத் தளிர் உடலை எத்தகைய தணல் தகித்துக் கொண்டிருந்தது? கனவை நினைந்து கருகி அப்படியே துவண்டு சாய்ந்தாள். பூசுந்தரி சாய்ந்த சுடர்க்கொடியைத் தாங்கிக்கொண்டாள். பெரியாழ்வார் ஓடிவந்தார்.

‘அம்மா, நான் வருவதற்குள் கிளம்பிவிட்டாயா திருவரங்கத்திற்கு சிறிது நேரம்கூடப் பொறுக்கச் சக்தி இல்லையா உனக்கு?’ என்று கதறினார்.

பாண்டியன் வந்தார். அரசியின் கைகளில் அயர்ந்து கிடந்த ஆச்சரிய உருவைக் கண்டு அருள் கொண்டவர் போல ‘ஆ. இப்புண்ணியப் பாவை உலவும் பாண்டிய நாடு புனிதநாடு!” என்றார்.

பூசுந்தரி மெய் சிலிர்ப்பவளாய் மெதுவாகக் கோதையைத் தாங்கி தன் அறைக்கு இட்டுச் சென்றாள்.

ஆண்டாள் அறிவிழந்து போயிருந்தாள்.

‘அம்மா, உடல் எப்படி மெலிந்துபோய்விட்டது! நூறாண்டு காலத்து ஆசையைப் பதினைந்தாண்டில் அனுபவித்து அழிந்துவிட்டது உடல், உடல் கொள்ள வேண்டிய இன்பம் அனைத்தையும் உள்ளத்தே கொண்டுவிட்டாய்! கண்ணே, கண்திற. இன்று மார்கழித் திங்கள் – மதி நிறைந்த நன்னாள்!’ என்றாள் பூசுந்தரி.

கோதை கண்திறந்து ‘இன்றா?’ என்றாள்.

‘மாயனை மன்னு வடமதுரை மைந்தனை…’

என்று ஆரம்பித்து மறுபடியும் மூர்ச்சை அடைந்தாள்.

அவள் பாடிய பாட்டு எங்கும் எதிரொலித்துப் பரவியது.

வேறெங்கும் பெண் பாடாத பேரவாவும் பொலிவும் பெரு துணிவும் கொண்ட பாசுரங்கள் தமிழ் மொழியின் தெள்ளிய அமுது.

– வசந்தம் மே 1943

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *