உழுபடையும் பொருபடையும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: December 28, 2022
பார்வையிட்டோர்: 3,577 
 

(1959ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அரசன் மிகவும் நல்லவன். ஆனால் அமைச்சர்கள் நாட்டு நலனைக் கருதுபவர்களாக இல்லை. அவனுடைய அருள் உள்ளத்தை நாமெல்லாம் நன்கு அறிந்திருக்கிறோம். பஞ்சம் வந்த காலத்தில் அரச பண்டாரத்தில் பொன் கடன் பெற்ருேம். நம்முடைய நிலங்களை வளப்படுத்தும் பொருட்டே அப்படிப் பெற்றோம். அந்தப் பஞ்சத்தின் விளைவு இன்னும் முற்றும் நீங்கினபாடில்லை. கடனைக் கொடுப்பதென்ருல் நிலத்தையே கொடுத்துவிட வேண்டியதுதான்” என்று குடிகள் தம்முள் பேசிக்கொண்டார்கள்.

“அரசன் நேரிலே இவற்றைக் கவனித்தால் நலமாக இருக்கும். அமைச்சர்கள், ‘இப்போது நிலம் விளைகிறது; கடனைத் தண்டலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதனை உண்மையென்று கருதிய அரசன் கடனைத் தண்ட முயற்சி செய்கிறதாகத் தெரிகிறது” என்றும் பேசிக்கொண்டார்கள்.

கிள்ளிவளவன் என்ற சோழன் ஆட்சியிலே குடி மக்கள் நன்ருக வாழ்ந்து வந்தனர். இடையிலே மாரி பொய்த்துப்போய்ப் பஞ்சம் வரவே, நிலம் விளைவு ஒழிந்தது. குடிமக்கள் துன்பத்துக்கு ஆளாயினர். அப்போது அரசன் வேளாளர்களுக்குப் பொன் கடன் கொடுத்து வேளாண்மை செய்யச் செய்தான்.

அக் காலத்தில் உணவுப் பண்டங்களை விற்றுப் பணமாக மாற்றி வைத்துக்கொள்ளும் வழக்கம் இல்லை.

நாணயத்திற்கு அதிகச் செலாவணி இராது. விளைந்த நெல்லைத் தமக்கும் தர்மத்துக்கும் பயன்படுத்திக் கொண்டனர் மக்கள். எஞ்சியதைக் கடனுக்காகக் கொடுக்கச் சோழ நாட்டுக் குடிமக்கள் எண்ணியிருந்தார்கள்.

சில அமைச்சர்களுடைய வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு அந்தப் பழைய கடனை எப்படியாவது தண்டி விட வேண்டுமென்று மன்னன் நிச்சயித்தான். அப்படிச் செய்வதாக இருந்தால் மக்கள் பட்டினி கிடக்க நேரும். இயற்கையாகப் பஞ்சம் இல்லாவிட் டாலும் செயற்கைப் பஞ்சம் வந்துவிடும். அதனல் . குடிமக்கள் அஞ்சினர். அரசனை அணுகித் தங்கள் நிலையை எடுத்து முறையிடலாம் என்றாலோ, அமைச்சரைக் கடந்து அவனைச் சேர்வது எளிதன்று.

இத்தகைய நிலையில் குடிமக்களுக்குச் சமய சஞ்சீவி போல நேர்பட்டார், ஒரு தமிழ்ப் புலவர். வெள்ளைக் குடி என்ற ஊரிலிருந்து அரசனைப் பார்த்துவிட்டுப் போகலாமென்று வந்தார், அவர். அவருக்கு நாகளுர் என்று பெயர். அவரிடம் குடிமக்கள் தங்கள் நிலையை எடுத்துச் சொன்னர்கள். “எப்படியாவது இதை அரசர் செவியில் ஏறச் செய்ய வேண்டும். அமைச்சர் சுவரைப் போலச் சூழ உள்ளனர். அவர்களை ஊடுரு விக்கொண்டு செல்வது எங்களால் இயலாத காரியம். எங்கள் வாழ்வு உங்கள் வாக்கில் இருக்கிறது” என்று சொல்லி இரந்தனர்.

நல்ல காரியங்களைச் செய்வதில் முன் நிற்பவர் புலவர் நாடு வளம்பெற வேண்டுமானல் உழவர் சிறக்கவேண்டும். ஆகவே அவர்கள் குறையை அரசனுக்குத் தெரிவிப்பது தம்முடைய இன்றியமையாத கடமையென்று உணர்ந்து, எப்படியாவது அவர்கள் காரியத்தை நிறைவேற்றிவிட உறுதி பூண்டார்.

“சோழ நாட்டின் பெருமையை என்னவென்று சொல்வது தமிழ் நாட்டுப் பேரரசர் மூவர். அந்தத் தண்டமிழ் அரசர் மூவருக்குள்ளும் அரசு என்பதற் குரிய இலக்கணங்களெல்லாம் நிரம்பியவன் நீதான். சோழ நாடு வளத்திலே சிறந்தது. மழையில்லாமல் பிற நாடுகளெல்லாம் பஞ்சத்தால் துன்புறும் காலத் திலும் காவிரி வற்ருமல் ஓடுவது. அதன் நீரால் சோழ நாடு வளம் பெறுகிறது. வேற்று நாட்டான் ஒருவன் இந்த நாட்டுக்கு வந்து பார்த்தால், இங்கே காடு போலப் பரந்திருக்கும் கரும்பைக் கண்டமாத்திரத் திலே இந்த நாட்டின் செழிப்பை உணர்ந்துகொள் வான். வறுமைப் பகைவனை வதைக்கும் வேலைப் போல வெள்ளைப் பூவோடு தலை நிமிர்ந்து நிற்கும் கரும்பின் காட்சியே காட்சி’-இவ்வாறு நாகனர் சோழ நாட்டின் வளத்தை எடுத்துச் சொல்லச் சொல் லக் கிள்ளிவளவன் கேட்டுக்கொண்டே வந்தான்; கேட்கக் கேட்க அவன் உள்ளம் பெருமிதம் அடைந்தது.

“இத்தகைய செல்வம் மிக்க நாட்டுக்கு அரசனா இருக்கும் உனக்கு ஒன்று கூற விரும்புகிறேன்” என்று புலவர் நிறுத்தினர்.

“அப்படியா? சொல்லுங்கள் கேட்கிறேன். என்னால் ஆகவேண்டியது எதுவானாலும் செய்கிறேன்” என்றான் அரசன்.

“காவிரிக்கு நீர்வளம் மழையால் உண்டாகிறது. நாம் நினைத்தபோது நினைத்த காரியத்தை ஓரளவு தான் செய்ய முடியும். சில காரியங்கள் நம் கையில் இல்லை. மழை பெய்ய வேண்டுமென்று நாம் எண்ணினால் அது உடனே பெய்யாது. ஆனல் அரசர்கள் மழையைப் பெய்யும்படி செய்வார்கள்.”

“அது எப்படி முடியும்?”

“செங்கோல் செலுத்தும் வேந்தர்கள் அறம் புரி வார்கள். குடிமக்களுக்கு எளியராக இருப்பார்கள். குடிகளுக்கு ஏதேனும் குறை இருந்தால் அவர்கள் அதை முறையிடுவதற்கு வருவார்கள். அந்த முறை யீட்டைக் கேட்பதற்குச் சித்தராக இருக்கும் அரசர்கள் எப்போது மழை வேண்டுமென்று விரும்பினாலும் பெய்யும் என்று பெரியோர் கூறுவர். முறை வேண்டும் பொழுது முன் நிற்கும் அரசர் உறை (மழைத்துளி) வேண்டும்பொழுது மழையும் முன்னிற்குமாம்”.

அரசன் யோசனையில் ஆழ்ந்தான். சில நாட்களாகத் தன்னைப் பார்க்க வேண்டுமென்று சில குடிமக்கள் விரும்பியபொழுது, அமைச்சர்களை விட்டு விடை சொல்லி அனுப்பியது அவன் நினைவுக்கு வந்தது.

“அரசன் ஒவ்வொரு கணமும், குடி மக்களுக்காக உயிர் வாழ்கிருன். அவன் பிடிக்கும் குடை மற்றவர் கள் வெயிலுக்குப் பிடிக்கும் குடையைப் போன்றதன்று. தன்னுடைய அருளினல் குடிமக்களையெல் லாம் அரவணைத்துப் பாதுகாப்பதற்கு அடையாளம் அது. வெயில் மறைக்க நிற்பதன்று, அந்தக்குடை; வருந்திய குடி மறைப்பது.”

அரசனுக்குப் புலவர் பேச்சுக்குள்ளே தனக்கு அறிவுரை ஒன்று இருப்பது தெரிந்தது. தன்னுடைய கடமையை அவர் எடுத்து வற்புறுத்தவே வந்திருக் கிருர் என்பதையும் தெரிந்துகொண்டான்.

“கூர்வேல் வளவ, அரசர்கள் படைகளைத் திரட்டிப் பகைவர்களோடு பொருது வெற்றி பெறுகிறார்கள். பெரிய பெரிய படைகளையெல்லாம் பாதுகாத்து வெற்றி அடைவது எதஞ்லே? உழுபடையால் விளைந்த விளை வி ன் பயன் அது. உழவர் உழுது நெல் விளக்க, அதனைக் கொண்டு வீரர்களைப் பாதுகாக்கிறான் அரசன். அவர்களுக்கு உணவு இல்லாவிட்டால் படை ஏது? வெற்றி ஏது? உழுபடையின் சாலிலே விளைந்த நெல்லைக் கொண்டுதான் பொரு படையின் போரிலே விளைந்த வெற்றியைப் பெற வேண்டும். உலகத்தில் பஞ்சம் தோன்றிலுைம் இயற்கையல்லாத உற்பாதங்கள் நிகழ்ந்தாலும் அரசர் களைத்தான் மக்கள் பழிப்பார்கள். ஆகையால் அரசனாக இருப்பவன் நியாயம் வழங்க எப்போதும் சித்தகை இருக்கவேண்டும். படை வீரர்களைப் பாதுகாப்பதைக் காட்டிலும் பெரிதாக எண்ணி உழவர்களைப் பாதுகாக்கவேண்டும்.”

“புலவர் பெருமானே, என்னிடம் குறையிருந்தால் குறிப்பாகச் சொல்லாமல், நேராகவே சொல்லலாம்” என்று அரசன் முகம் நிமிர்ந்து சொன்னான். அவன் குரலில் பச்சாத்தாபம் தொனித்தது.

“சொல்கிறேன். நான் சொன்ன உண்மைகளை மனம் கொண்டாயானால், மற்றவர்கள் கூறும் வார்த்தைகளைச் செவியிலே கொள்ளக்கூடாது. நாலு பேர் நாலு கூறுவார்கள். அரசன் உண்மையை நேரிலே கேட்டு உணரவேண்டும். குடிமக்களுடைய குறையை உணரும் திறத்தில் நடுவில் அயலாருக்கு என்ன வேலை? தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே அன்பை வாங்கிக் கொடுக்கக் கையாள் எதற்கு? நீ அத்தகையவர்களின் புல்லிய வார்த்தைகளைக் காதிலே வாங்கவே கூடாது. எருதுகளைப் பாதுகாத்து நிலத்தை வளப்படுத்தும் குடியானவர்களின் பாரத்தை நீதான் தாங்க வேண்டும். அவர்களால்தான் நாடுவளம் பெறுகிறது : படை பலம் பெறுகிறது : அரசன் புகழ் பெறுகிறான். இதனை நன்கு உணரவேண்டும். குடிகளின் குறையை உணர்ந்து நீ பாதுகாப்பாயானால் பகைவர்கள் யாவரும் உன் பெயரைக் கேட்டாலே நடுங்குவார்கள். காணிக்கையுடன் வந்து உன் காலில் விழுவார்கள். இதற்கு வழி உன் குடிமக்களை நீயே நேரில் கண்டு குறை கேட்டுப் பாதுகாப்பதுதான்.”

அரசன் முகத்தில் சோகம் தேங்கியிருந்தது. புலவர் பேச்சை முடித்தார். அவன் ஒருவாறு புன்ன கையை வருவித்துக் கொண்டான். “புலவரே, வணக்கம். உங்கள் பொன்னுரை என்னை விழிப்படையச் செய்தது. உங்கள் குறிப்பை உணர்ந்துகொண்டேன். நான் குடிமக்களைப் புறக்கணித்தேன். இனி அப்படிச் செய்யேன். அவர்களை அரசாங்கக் கடனிலிருந்து விடுதலை செய்துவிட்டேன். இதை முரசறைந்து தெரிவித்துவிடுகிறேன். சோழநாடு வளம் பெறட்டும். உங்களைப் போன்ற புலவர்களால் அறிவு வளமும் பெருகட்டும்” என்று தழுதழுத்த குரலோடு சொன்னான்.

பழஞ்செய்க்கடனிலிருந்து குடி மக்கள் விடுதலை பெற்றனர். கோள்சொல்லும் குண்டுணிகளாகிய அமைச்சரினின்றும் அரசனும் விடுதலை பெற்ருன். இந்த இரண்டுக்கும் காரணமாயிருந்த புலவர் வெள்ளைக்குடி நாகனார் பெருஞ் சிறப்புப் பெற்றார்.

– எல்லாம் தமிழ், அமுத நிலயம் பிரைவேட் லிமிடெட், சென்னை-18, எட்டாம் பகிப்பு : ஜூன், 1959

இலக்கிய ஆதாரங்கள்

சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை வெள்ளைக்குடி நாகனர் பாடிப் பழஞ் செய்க்கடன் வீடு கொண்டது என்ற குறிப்புடன் புறநானூற்றில் உள்ள 35-ஆம் பாடலைக் கொண்டு இவ் வரலாறு அமைக்கப் பெற்றது.

அந்தப் பாடல் வருமாறு :

நளிஇரு முந்நீர் ஏணி யாக
வளியிடை வழங்கா வானம் சூடிய
மண்திணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்
அரசெனப் படுவது நினதே பெரும;
அலங்குகதிர்க் கனலி நால்வயிற் றோன்றினும்
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்துகவர் பூட்டத்
தோடுகொள் வேலின் தோற்றம் போல
ஆடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும்
நாடெனப் படுவது நினதே யத்தை ; ஆங்க
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே,
நினவ கூறுவல் எனவ கேண்மதி :
அறம்புரிந் தன்ன செங்கோல் நாட்டத்து
முறைவேண்டு பொழுதிற் பதன் எளி யோர் ஈண்டு
உறைவேண்டு பொழுதிற் பெயல்பெற் றோரே ;
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவுநின் ருங்குக்
கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை
வெயில் மறைக் கொண்டன்ருே அன்றே வருந்திய
குடிமறைப் பதுவே, கூர்வேல் வளவ,
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தருஉம் கொற்றமும் உழுபடை
ஊன்று.சால் மருங்கின் ஈன்றதன் பயனே:
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும்.இக் கண்ணகன் ஞாலம்;
அதுநற் கறிந்தனை யாயின், நீயும்
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருநர் பாரம் ஓம்பிக்
குடிபுறத் தருகுவை யாயின்,
அடிபுறந் தருவர் அடங்கா தோரே.

இதன் உரையில், ‘முறைவேண்டு பொழுதிற் பதனெளியோர் ஈண்டு உறைவேண்டு பொழுதிற் பெயல் பெற்ருேரென்ற கருத்து, நீயும் பதனெளியை யாதல் வேண்டும், அவ்வாறு பெயல் பெறுதற் கென்றவாறாம்’ என்றுள்ள பகுதியும் இந்தக் கதைக்குப் பயன்பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *