கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை முதல் அத்தியாயம்
கதைப்பதிவு: June 6, 2023
பார்வையிட்டோர்: 1,919 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 01 | அத்தியாயம் 02 

பாண்டிய நாட்டிலிருந்து நர்த்தகி ஒருத்தி வந்திருக்கிறாள்;  அரசவையில் ஆட அனுமதி கோருகிறாள் என்ற செய்தி எட்டியது பாஸ்கர ரவிவர்மனுக்கு. சேரமான் அக்கறை காட்டவில்லை. எத்தனையோ எழிலரசிகளான ஆடலரசிகளைப் பார்த்தவன் அவன். சேர நாட்டில் இல்லாத அழகிகளா? ஆடல்கலை வல்லுனர்களா? 

அரசவை நிகழ்ச்சிகள் எங்கனமுள்ளன என்று திருமந்திர ஓலை அதிகாரியை அவன் வினவ, “இன்னும் ஏழு தினங்ளுக்கு நெருக்கமாகத்தான் நிகழ்ச்சிகள் உள்ளன. ஆயினும் மன்னர் விரும்பினால்….” என்று பதில் முற்றுப் பெறாமல் நின்றது. 

“ஏழு என்ன? பத்து நாட்களே செல்லட்டுமே” என்றான் சேரமான் பாஸ்கர ரவிவர்மன். “அதுவரை அந்த நர்த்தகிக்கு உரிய மரியாதை காட்டி நமது விருந்தினர் மாளிகை ஒன்றை ஒதுக்குங்கள். ஒத்திகை பார்த்துக் கொள்ள வசதியாக வாத்தியக்காரர்களுக்கும் ஏற்பாடு செய்து தரலாம்” என்று உத்தரவிட்டான். 

பத்து நாட்கள் பொறுமையாகக் காத்திருந்தாள் வண்டார்குழலி. “பெண்ணே! சிட்டுக்குருவி கருடனாக முடியுமா? நீ ரொம்ப உயரத்தில் பறக்கப் பார்க்கிறாய் என்று எனக்குத் தோன்றுகிறது” என்றாள் அவள் தாய். 

“அம்மா! என் அழகும் என் கலையும் சாமானியருக்கு உரியது அல்ல. மன்னர்களுக்கே ஏற்றது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.” 

“பாண்டி நாட்டிலேயே இரண்டு மன்னர்கள் இருக்கிறார்களே அவர்களை விட்டு விட்டு….” 

“அம்மா இதென்ன பேச்சு. பெயரளவில்தான் அவர்கள் மன்னர்கள். பராந்தக சோழன் காலத்திலேயே பாண்டிய நாடு சோழன் வசப்பட்டு விட்டது. அப்புறம் பல தலைமுறைகளாகப் பல பேர் பாண்டி நாட்டு அரியாசனத்துக்கு உரிமை கொண்டாடி வருகிறார்களே தவிர, சுதந்திரமான மாமன்னர்கள் என்று சொல்லும்படியாக யார் இருக்கிறார்கள்? அவ்வப்போது கிளைத்தெழுவதும் ஒடுக்கப்படுவதுமாய் அவர்கள் காலம் செல்கின்றது. இது போதாததற்கு அவர்களுக்குள்ளேயே உட்பகை வேறு. இல்லாத பேரரசுக்கு அமர புஜங்கனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையில் போட்டி. இதனால்தான் நான் சேரமானை நாடி வந்தேன்.” 

“தஞ்சைக்கே சென்றிருக்கலாமே பெண்ணே?” 

“அங்கே செம்பியன்மாதேவியும் குந்தவைப் பிராட்டியும் கலைகளையும் இறையுணர்வையும் இரு கண்களே போல் வளர்த்து வந்திருக்கிறார்கள். அங்கே என் ஆற்றலுக்கு வரவேற்பிருக்கும். ஆனால் அதனால் யாரையும் வெற்றி கொள்ள முடியாது. நூற்றோடு நூற்றி ஒன்று. இங்கு நிலைமை அப்படியல்ல. நீ வேண்டுமானால் பாரேன், சேரமான் என் அழகிலும் கலையிலும் தன் வயமிழக்கப் போகிறான்!” 

“பார்க்கத்தானே காத்திருக்கிறேன் கண்ணே” என்றாள் தாய். 


வண்டார் குழலி எதிர் பார்த்தபடியே அரசவையில் அவள் அரங்கேறிய போது அசந்துதான் போய்விட்டான் பாஸ்கர ரவிவர்மன். 

நடனத்தின் அழகை ரசிப்பதா அல்லது நங்கையின் அழகை ரசிப்பதா என்று அவன் தடுமாறிப் போனதை வண்டார் குழலி உணர்ந்தாள். உள்ளம் பூரித்தாள். 

வந்து நின்ற கோலத்திலேயே எத்தனை கம்பீரம்! அகன்ற கண்களின் கருவிழிகளைச் சுழற்றி அவையோரை ஒரு பார்வை பார்த்ததில் எத்தனை லாகவம்? அந்த ஒரு கண் வீச்சிலேயே இதயங்களைக் கவ்வி இழுத்து விடுகிறாளே! 

தன் நாட்டின் இயற்கை எழிலில் சேரனுக்கு மிகுந்த கர்வம் உண்டு. ‘தனது போர்க் கப்பல்களை ஊஞ்சலாட்டும் அலைகளின் நெளிவுகள் இவளது உடலில் காணும் வளைவு சுளிவுகளுக்கு ஈடாகாது’ என்று எண்ணினான். நெடிதுயர்ந்து நிற்கும் ‘தென்னை மரங்கள் இவளது கம்பீரத்துக்கு எதிரே எம்மாத்திரம். பசும் வயல்களின் குளிர்ச்சி இவளது தோற்றத்தைக் காணும் போது ஏற்படும் இதத்துக்கு ஈடாகுமா? மாஞ்சோலைகளில் பழுத்து, பறிக்கப்படக் காத்திருக்கும் கனிகள், உப்பங்கழிகளில் துள்ளி விழும் கயல்கள், கடலில் முத்துக் குளிப்போர் அள்ளிக் குவிக்கும் முத்துக்கள் எல்லாமே இவளது அங்கங்களின் எழிலெதிரே சாமானியம்தான். ஏலம், லவங்கம் போன்ற வாசனைப் பொருள்கள் இவளது நெருக்கத்தில் சூழும் நறுமணத்தை விடவா உயர்ந்தவை? வண்டார் குழலி! என்ன அழகான பெயர்! இவளது கண்களே கருவண்டுகளாகி அளகபாரத்தின் மணத்தால் ஈர்க்கப்பட்டு அலைகின்றனவோ!’ 

இப்படி அவன் தன் அழகிலே கிறங்க வேண்டும் என்பதற்காகவே தாமதித்தவள் போல் நின்றவள் பின்னர் அரசனுக்கு வணக்கம் செலுத்தி அவையோரையும் வணங்கினாள். வாத்தியக்காரர்களுக்கும் நட்டு வாங்கத்துக்கும் சமிக்ஞை செய்துவிட்டு ஆடத் தொடங்கினாள். அவளது செழுமையானதும் அளவானதுமான கால்கள் முதலில் அசைந்து சதங்கை ஒலிகளைத் தாளத்துக்கு ஏற்ப எழுப்பின. பின்னர் கரங்களும் ஒத்துழைக்க ஆரம்பித்தன. முகபாவங்களும் சேர்ந்து கொண்டன. பிறகு அப்புறம் உடலின் ஒவ்வொரு பாகமுமே நடனத்தோடு இழைந்து தத்தம் பணிகளை செவ்வனே ஆற்றின. சேர நாட்டின் ஆறுகளின் வேகம், மலை முகடுகளின் கம்பீரம், ஏரிகளின் அமைதி, மலர்களின் புத்துணர்ச்சி போன்ற அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு புது அநுபவமாக இருந்தது சேரமானுக்கு. 

அவையில் நூறு பேர் இருந்தாலும் அவள் தனக்காக மட்டுமே ஆடுவது போலிருந்தது அவனுக்கு. இந்தக் கலையையும் இந்த எழிலையும் இனி உன்னால் மறக்கவோ புறக்கணிக்கவோ முடியுமா என்று கேட்பது போலிருந்தது. நீ என் அடிமை, நான் உன் உடைமை என்று சொல்லாமல் சொல்வது போலிருந்தது. 

எத்தனை நாழிகை சென்றதோ அவனுக்கே தெரியாது. ஒரு கட்டத்தில் ஆவேசமாக “போதும் நிறுத்து” என்றான் மன்னன். அனைவரும் திடுக்கிட்டு திகைக்க, “வண்டர் குழலி, இதற்கு மேல் நீ ஆடினால் என்னால் தாங்க முடியாது! அவையோரும் தாங்க மாட்டார்கள்! ஏன் இந்த அரண்மனையும் நகரமும் நாடுமே தாங்க மாட்டா! இப்படி வா!” என்றான். 

ஆடிக்களைத்த பெருமூச்சுக்களால் மட்டுமின்றி மன்னன் சொல்கேட்டு விம்மித முற்றதாலும் பொங்கித் தணியும் நெஞ்சகங்களுடன் அவள் மன்னனை நெருங்கினாள். தன் கழுத்திலிருந்த முத்து மாலைகளை எண்ணிப் பாராமல் அள்ளி அள்ளி எடுத்தான் பாஸ்கர ரவிவர்மன். நீண்டிருந்த அவள் கரங்களில் அவற்றை உதிர்த்தான். 

“மாமன்னா!” என்று அழைத்தவள் சற்றே தயங்கினாள். 

“என்ன வேண்டுமோ கேள்” என்று பணிந்தான். 

“தங்கள் ஆதரவு என்றென்றும் வேண்டும்” 

“அதில் ஐயம் வேண்டாம். இன்று முதல் நீ இங்கு ராஜநர்த்தகி.” 

“நான் பாக்கியசாலிதான்” என்றாள் வண்டார் குழலி. “மேலும்….” 

“மேலும்….?” 

இதுவரை உரக்கவே பேசியவள் இப்போது குரலைத் தாழ்த்தி அவன் செவிகளுக்கு மட்டும் கேட்கும்படியாகக் கூறினாள்: “இந்த அரங்கில் ஆடியது போல தங்கள் இதய அரங்கிலும் ஆடும் நாளை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!” 

இப்படிக் கூறிய போது ஒளி சிந்திய அவளது கண்கள் அசாதாரண துணிச்சலுடன் அவன் நெஞ்சை ஊடுருவி அந்தரங்கத்தில் புகுந்து கணப்போதில் ஆயிரமாயிரம் ரகசியங்களைப் பேசின; இன்பக் கோட்டைகளை எழுப்பி உல்லாச புரிகளை சிருஷ்டித்துக் காட்டின. 

அவளது அழகுடன் ஆற்றலும் அத்துடன் இணைந்த துணிச்சலும் ஏற்படுத்திய அதிர்ச்சியில் கண்ணிமைக்கும் நேரம் தடுமாறித்தான் போனான் பாஸ்கர ரவிவர்மன். அடுத்த கணமே தன்னை ஒரு நிலைப்படுத்திக் கொண்டான். ‘நான் யார்? இவள் யார்? யாரிடம் என்ன பேசுகிறாள் இவள்? தன் அழகிலும் கலை ஆற்றலிலும் இத்தனை கர்வமா இவளுக்கு? அரங்கத்தின் மத்தியில் அரசனுடன் அந்தரங்கம் பேசுமளவுக்கு மமதையா?’ 

“பெண்ணே!” என்றான் பாஸ்கர ரவிவர்மன் அனைவரும் கேட்க. “உனது தன்னம்பிக்கையை மெச்சுகிறேன். ஆனால் சேரமான் தனக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுப்பானேயொழிய சேரமானை இன்னொருவர் தேர்ந்தெடுக்க அனுமதி இல்லை.  புரிகிறதா?” அவள் பேசிய ரகசியம்  அம்பலத்துக்கு வந்து விட்டது! எவ்வளவு அவமானம். 

ஏளனம் தொனிந்த மன்னனின் குரலில் இப்போது கடுமை ஒலித்தது. ‘சோமேசுவரரே’ என்று தனது மந்திரி பிரதானிகளுள் ஒருவரை அழைத்தான். “தங்கள் அந்தப்புரத்துக்கு இன்னோரு அழகியை வழங்குகிறேன். மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றான். 

அவையினர் அதிர்ந்து போயினர். ஒரு சொல், ஒரு வியப்பொலி ஏதும் எழவில்லை. வண்டார் குழலியின் கர்வம் அவளை எங்கு கொண்டு தள்ளி விட்டது என்பது எல்லோருக்கும் புரிந்தது. மன்னனையே மயக்கித் தன் வயப்படுத்திவிட எண்ணியவள், அவனது இதய பீடத்தில் அமர்ந்து அதன் மூலம் சேர நாட்டிலேயே மன்னனுக்கு அடுத்தபடியாக மிகச் சக்தி வாய்ந்த மானுடப் பிறவியாக விளங்க எண்ணியவள் சோமேசுவரருக்கு அறுபது வயதுக் கிழவனுக்கு ஆசை நாயகியாக்கப்பட்டுவிட்டாள். அதிலும் இவளுக்கு ஒரு தனிச்சிறப்பு கிடையாது. ஏற்கனவே அவருக்குள்ள பல ஆசை நாயகிகளுடன் மேலும் ஒருத்தி அவ்வளவுதான். சோமேசுவரன் ஒரு காமாதுரன். அது அரசனுக்கும் தெரியும். ஆனால் சோமேசுவரனின் கணித அறிவு வேறு யாருக்கும் வராது என்பதால் அவருடைய அந்தப் பலவீனத்தை பொருட்படுத்தாதிருந்தான். இப்போது அவரது பலவீனத்தையே இவளுக்குத் தண்டனையாக்கியும் விட்டான். 

சோமேசுவரன் ஓரடி முன்னால் வந்து மன்னனை அடிபணிந்து வணங்க, வயதான அவனது தோற்றத்தைக் கண்ட உடன் வண்டார் குழலி தன் துர்பாக்கியத்தைப் புரிந்து கொண்டாள். அவையோர் அனைவரும் ஆணவக்காரியான இவளுக்கு வேண்டும்தான் இந்தத் தண்டனை என்று எண்ணிய போதிலேயே, ‘பாவம்’ என்று பரிதாபப்படவும் செய்தனர். ஆனால் வண்டார் குழலிக்கோ அத்தனை பேரும் தன்னைப் பரிகசிப்பதாகவே தோன்றியது. மன்னனின் முன்னிலையில் மரியாதை கருதி வாளாவிருக்கிறார்களே யொழிய மனத்துக்குள் ஏளனமாய்ச் சிரித்துக் கொண்டுதானிருக்கிறார்கள்! 

“மன்னவா! தாங்கள் தகுதி அறிந்து தக்க காரணத்துடன்தான் எதையும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையில் அன்புப் பரிசினை நன்றியோடு ஏற்கிறேன்” என்றார் சோமேசுவரன். அவருக்கே தெரியும் இவ்வளவு உன்னதமான பரிசைப் பெறத் தாம் தகுதியற்றவர் என்று. ஆனால் அவருக்கு மன்னரின் செயலை நியாயப்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம்! 

தான் மட்டும் கர்வத்துடன் பேசாமல் அமைதி காத்திருந்தால் சேரமானே விரைவில் ஒரு நாள் தன்னை நாடி வந்திருப்பார் என்பது இப்போது வண்டார் குழலிக்குப் புரிந்தது. ஆனால் என்ன செய்வது? அழகும் ஆற்றலும் உருவாக்கிய ஆணவம் அதிகார ஆசையையும் தூண்டிவிட வாய்த் துடுக்காக மன்னனிடம் சமய சந்தர்ப்பம் அறியாமல் பேசியாகிவிட்டது. பின் விளைவுகளை இனி ஏற்பது தவிர வேறு வழி? அவளுக்குத் தன்னிடமே கோபம் வந்தது. அதற்கும் மேலாகத் தன்னையும், தன் கலையையும் இப்படி இழிவுபடுத்தி அவமானத்துக்குள்ளாக்கிய சேரமான் மீது ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *