கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 26, 2020
பார்வையிட்டோர்: 4,610 
 

மார்ச் மாத விடியலில் ஐந்து மணிக்குப் புறப்படும் முதல் சென்னை – புதுச்சேரி அரசு பேருந்தில் ஏறி.. குளிருக்கு அடக்கமாய் நடுவில் இடம் பிடித்து உட்கார்ந்து தன் கையில் இருக்கும் மஞ்சள் துணிப்பையை மடியில் பத்திரமாக வைத்து இறுக்கிப் பிடித்துக்கொண்டு அமர்ந்தான் இளைஞன் வாசு. வயசு 25.

இது புறவழிச்சாலை பாயிண்ட் – பாயிண்ட் பேருந்து. கன்னா பின்னாவென்றெல்லாம் நிற்காது. மூன்றரை மணி நேரம் ஓட்டம். சரியாக ஒன்பது மணிக்கெல்லாம் போய் இறங்கி விடலாம். பக்கத்திலேயே நேர்முகத் தேர்விற்கான இடம். பத்து நிமிடங்களில் அந்த இடத்தை அடைந்து விடலாம். பத்து மணிக்குத்தான் நேர்முகத்திற்கான நேரம். இருக்கிற நேரத்தில் பொது அறிவு, அது இதுவென்று புரட்டிப் பார்க்கலாம் ! – மனசுக்குள் கணக்குப் போட்டுக்கொண்டு… அப்பா கொடுத்த முழு ஐநூறு ரூபாய் நோட்டை பயணச்சீட்டு வாங்க எடுத்து கையில் பத்திரமாக வைத்துக்கொண்டான்.

சில்லறை மாற்றி இருக்கலாம். அப்பா கொடுத்தது இரவு ஒன்பது மணிக்கு. கடையெல்லாம் சாத்தி இருந்ததால் சில்லறை மாற்ற வழி இல்லை. நடத்துனர்… அதிகாலையிலேயே சில்லறை இல்லை என்று காயப்போகின்றார். ! – நினைக்கும் போதே மனசு திக் திக்கென்று அடித்துக் கொண்டது.

சிறிது நேரத்தில் பேருந்து குறித்த நேரத்தில் சரியாகப் புறப்பட்டது.

சென்ற மாதம் எழுத்துத் தேர்விற்குச் சென்றபோது இதே வண்டியில்தான் போனோம். பதினைந்து நாட்களில் தேர்வில் ‘ தேர்ச்சி ‘ என்று கடிதம்.

இன்றைக்கு…’ நேர்முகத்தேர்வு ‘ தேர்வு ராசியான வண்டி. வேலைக்கிடைத்து விடும். ! – மனசுக்குள் ஒரு நினைவு வந்து தெம்பு ஊட்டியது.

ஆனால் அதையும் மீறி… ‘ கடவுளே…! நான் கஷ்டப்பட்டது போதும். இந்தத் தடவையாவது இந்த வேலையை எனக்கு வாங்கிக் கொடு ‘ மனசு வேண்டிக்கொண்டது.

” டிக்கெட் ! டிக்கெட் ! ”

” சென்னை ஒன்னு ..” கையிலிருந்த பணத்தை நீட்டினான்.

” சில்லறையா கொடு ” நடத்துனர் டிக்கெட் போட்டுக்கொண்டே பதில் சொன்னார்.

” சில்லறை இல்லே சார் ! ”

”ஏன் தம்பி ! வண்டி என்ன நாலஞ்சி டிரிப்பா அடிச்சிருக்கு. சில்லறை இருக்கிறதுக்கு..?! இதுதான் முதல் டிரிப். இப்படி எல்லாரும் இருநூறும், ஐநூறுமாய் நீட்டினா…. நானெங்கே போறது சில்லறைக்கு..? ” அவர் காயாமல் கடுப்படிக்காமல் நியாயமாகத்தான் சொன்னார்.

எதிர்பார்த்ததுதான். விழித்தான்.

” சரி. சில்லறையை அப்புறம் வாங்கிக்கோ. ” பணத்தை வாங்கி பையில் போட்டுக்கொண்டு, மீதியை டிக்கெட்டின் பின்புறம் குறித்து இவன் கையில் கொடுத்துவிட்டு வேலையைத் தொடர்ந்தார்.

‘ ஏதோ…இதோடு விட்டாரே ! ‘ நினைத்து நிம்மதி மூச்சு விட்ட வாசு…. அந்த இத்தநோண்டு தாளை பணத்தைவிடப் பத்திரமாகப் பாக்கெட்டில் சொருகிக் கொண்டான். காரணம்… அதுதான் அவனுக்கு இப்போது பணம். பையில் பத்துப் பைசா இல்லை.

இந்தப் பணத்திற்காக அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்..?! என்பது அவனுக்குத் தெரியும்.

சென்றமுறை எழுத்துத் தேர்விற்கு கடிதம் வந்தபோதே… பசியும் பட்டினியுமாய் உள்ள வீட்டு நிலை தெரிய…… தயங்கித் தயங்கி அப்பாவிடம்…

” அப்பா..! இன்டெர்வியூ வந்திருக்கு. சென்னைக்குப் போகணும்…” சொன்னான்.

” சென்னைக்காப் போகணும்….?!…” என்று சன்னமாய்க் கேட்டு ஐந்தாறு வருடங்களாக விவசாயத்தில் நொடித்துப் போன அப்பா மோட்டுவளையைப் பார்த்து தாடையைச் சொரிந்தது இவனுக்குக் கஷ்டமாக இருந்தது.

ஆனாலும் அத்திப் பூத்தாற்போல வரும் இன்டெர்வியூவையும் ஒதுக்கித்தள்ள முடியுமா..? ! – அடக்கிக் கொண்டு நின்றான்.

அதிக நேர யோசனைக்குப் பின்….

” எவ்வளவுப்பா வேணும்..? ” கேட்டார்.

” ஐநூறு ..! ” சொன்னான்.

சரியென்று காலையில் சென்றவர் மதியம் நல்ல மழையில் களைப்புடன் திரும்பி வந்து….

” ஏன்ப்பா..! இந்த வேலை கண்டிப்பா கிடைக்குமா…? ஏன்னா… பணம் புரளளை..! ” என்று கவலையுடன் சொன்னார்.

இவனுக்குள் மனசு மளுக்கென்று உடைந்து போனது. இயலாமை ! அவனுக்குள்ளே கண்ணீர் பெருகியது. சோகத்துடன் நகர்ந்தான்.

இவனின் சங்கடம் கண்டு அம்மாதான் அப்பாவைத் தனியே அழைத்து…. ஏதோ சொன்ன பிறகு….

பித்தளைத் தவளையுடன் வெளியே சென்றவர் மாலையில் வந்து இவனிடம் பணத்தைக் கொடுத்து அம்மாவிடம் அடகு சீட்டைக் கொடுக்க… இவன் துடித்துப் போனான்.

அந்தத் தடவை செலவு போக மீந்த பணத்தில்…. பள்ளிக்குச் சென்று திரும்பியதும் கிழிந்த பாவாடையைக் கட்டிக்கொண்டு திரியும் தங்கைக்கு நடை பாதையோர கடையில் மலிவு விலையில் இரண்டு பாவாடை சட்டைகள் எடுத்து வந்து கொடுத்தான்.

பார்த்த அம்மா அப்பாவிற்கும் கண்கள் கலங்கியது. வறுமை என்ன செய்ய முடியும்….? இந்த விவசாயிகள் வறுமையெல்லாம் தண்ணீரை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளுக்குச் சத்தியமாகத் தெரியாது. தெரிந்தாலும் அவர்களுக்கு இது தேவை இல்லாதது.

இந்தத் தடவையும் அப்பாவிடம் கை ஏந்தியபோது வீட்டில் எஞ்சி இருந்த ஒரே பித்தளைக் குடம் மார்வாடிக் கடைக்குப் போய் பணமாக வந்தது. ஆனால் போன தடவை இருந்த சங்கடம் இப்போது இல்லை.

காரணம்…. எழுத்துத் தேர்வுதான் முக்கியமேத் தவிர நேர்முகத் தேர்வு என்பது வேலைக்கான உத்தரவு கொடுக்கும் சடங்கு. அதனால் வேலை கிடைத்து விடும் தெம்பு இவனுக்குள் எதையும் ஏற்படுத்த வில்லை.

பேருந்து எந்த இடத்தில் செல்கிறது…? – வாசு மூடி இருந்த ஜன்னல் ஷட்டரைத் தூக்கி வெளியே பார்த்தான்.

ஊதக்காற்று சடாரென்று முகத்தில் அறைந்தது.

வெளியே இன்னும் முகம் தெரிகின்ற அளவிற்குச் சரியாகப் பொழுது விடியவில்லை.

இந்த ஒரு மணி நேரத்தில் பேருந்து திண்டிவனத்தைத் தாண்டி ஓடிக்கொண்டிருப்பது என்பது மட்டும் நிச்சயம். புரிந்தது.

ஊதற்காற்றில் பாதிக்கப்பட்ட பக்கத்துப் பயணி……

” இந்தாப்பா..! குளிரு தாங்க முடியல. வேடிக்கைப் பார்க்க நேரம் காலம் என்கிற விவஸ்தையே கிடையாதா..? மூடுப்பா..! ” சுள்ளென்று விழுந்தார்.

வாசு ‘ டக் ‘ கென்று மூடினான்.

பேருந்தை என்னவோ வழக்கத்தை விட வேகம் கம்மியாக செல்வது மாதிரி இவனுக்குத் தோன்ற…

பேருந்து சரியான நேரத்திற்குச் சென்னையைச் சென்று அடையுமா….? ‘ சட்டென்று இவனுக்குள் பயம் வந்து மனதை கவ்வியது.

கையில் வேலையை வைத்துக்கொண்டிருக்கும் நேர்முகத்தேர்விற்கு ஒருநாள் முன்னதாகவே சென்றால் இந்த பயம் தேவை இல்லை. ஏழ்மை இல்லாமல் சிறிது வசதி படைத்தவனாகப் பிறந்திருந்தால் ஒரு நாள் முன்னதாகவே சென்று அழகாய் ஒரு தங்கும் விடுதியில் தங்கி எந்தவித பயமுமில்லாமல் சென்றிருக்கலாம். என்ன செய்வது….? கொடுப்பனை இல்லையே..! – பெருமூச்சு விட்டான்.

முதல் பேருந்தைப் பிடிக்க வேண்டும் என்பதற்காக இரவு முழுக்க சரியான தூக்கமில்லாமல் இருந்ததன் தாக்கம் இப்போது அவனுக்கு கண்ணை இழுத்தது. எப்பொழுது தூங்கினானென்று அவனுக்கேத்தெரியாது.

பேருந்து சடக்கென்று நின்று… இவன் நெற்றி பலமாய் முன் இருக்கை கம்பியில் மோதி பொரி கலங்கியபோது… என்ன ஏதென்று இவன் சுதாரிக்கும் முன் உள்ளே ஒரே கூக்குரல்.

தன்னைப் போலவே பலர் முட்டிக்கொண்டும், மோதிக்கொண்டும், விழுந்தும், மண்டை உடைந்து, பல் உடைந்தும், பேருந்து அல்லோலகல்லோலப் பட்டது. பலர் திடுதிப்பென்று கீழே இறங்கி ஓடினார்கள். இவனும் உப்பிய நெற்றியைத் தேய்த்துக்கொண்டு கீழே இறங்கினான். எல்லோரும் பேருந்துவிற்கு அடியில் எதையோப் பார்க்க.. முகம் தெரியும் அந்த விடியல் வெளிச்சத்தில் முன் சக்கரத்திற்கும் பின் சக்கரத்திற்கும் இடையில் ஒரு ரத்தச் சகதி கிடப்பதை பார்த்ததும் அதிர்ந்து போனான்.

விபத்து ! அந்த ஆள் அடிப்பட்டபோதே மரித்துப் போயிருந்தான்.

எல்லோரும் கலவரமாய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள்.

அடுத்து பின்னால் ஏதோ கூக்குரல் கேட்க வாசு திரும்பிப் பார்த்தான்.

இருபது முப்பது கிராமத்து ஆண்களும் பெண்களுமான மக்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு வந்தார்கள். சில துடிப்பான இளைஞர்கள் அந்த கூட்டத்தை விட்டு வேகமாக… அதே சமயம் ஆவேசமாக ஓடி வந்தார்கள்.

அப்படி வந்தவர்கள் ஒருகணம் பேருந்து அடியில் கிடந்த கோரத்தைக் கண்டார்கள்.

” ஐயோ ! மவனே..!!! கருப்பங்காட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு வந்தீயே..! இப்படி போய்ட்டீயே…! ” – ஒருத்தி கூக்குரலெடுத்து அலறினாள்.

அவளுக்குப் பின்னால் வந்த பெண்கள் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு துடித்தார்கள்.

அவலத்தைக் கண்ட இளைஞர்களுக்கு ஆத்திரம் ஆவேசம் வந்தது.

”எங்கேடா அவன்..? எங்கேடா இந்த பேருந்து நடத்துனர், ஓட்டுநர்…? ” கோபமாக கத்தி பேருந்துவிற்குள் புகுந்து அலச….

” வண்டியில ஏறி உட்கார்ந்தா விமானம் ஓட்டும் நெனப்பு…”

” கண்ணு மண்ணு தெரியாத வேகம்…”

” ங்கோத்தா ! அந்தத் தேவடியா மகனுங்களை எங்கே இருந்தாலும் விடாதீங்கடா..! ”

கூட்டம் இறங்கி ஆவேசத்துடன் தேட….

” அதோ…ரெண்டு பேரு ஓடுறானுங்க பாருங்கடா…! ” எவனோ தூரத்தில் கை காட்ட….

பேருந்து நடத்துனரும், ஓட்டுனரும்… வயல் வரப்புத் தெரியாமல் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு திக்குத் திசை தெரியாமல் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

” டேய்…! திருட்டு கொலைக்காரப் பசங்க…. சீருடைகளைக் கழட்டி கையில் வைத்துக்கொண்டு அடையாள தெரியாமல் ஓடுறானுங்கடா…!” கத்தி…அவர்கள் மாட்டினால் துவசம் செய்துவிடும் வெறியில் நாலைந்து இளைஞர்கள் ஓட….

அவர்கள் பின்னால் ஒரு சிறு கூட்டம் ஓடியது.

கீழே இறங்கியிருந்த மொத்தப் பேருந்து பயணிகளும்….. நடந்ததையும் நடப்பதையும் பார்த்துத் திகைத்துப் போனார்கள். காயம்பட்டவர்கள், மண்டை உடைந்தவர்களென்று ரத்தம் கிளம்பியவர்களுக்கெல்லாம் யார் யாரோ முதலுதவி செய்து கொண்டிருந்தார்கள்.

முழுசாக உள்ளவர்கள் சிலர், எந்தவித அடி, அக்குத்தொக்கு இல்லாமலிருந்தவர்கள் வழியில் வந்த பேருந்துகளில் ஏறிப் போனார்கள்.

விபத்தின் அதிர்ச்சி, அமளி, துமளியிலிருந்து விடுபட்ட வாசுவிற்கு நேர்முகத்தேர்வின் நினைப்பு வந்தது. கிடைத்த பேருந்தில் ஏறிப் பயணப்படும் சிலரைப் பார்த்ததும் தானும் அப்படிப் போய் நேர்முகத் தேர்வில் கலந்து வேலை வாங்க வேண்டும் என்று நினைப்பு வர மனசு பரபரத்தது. திடுக்கிட்டுப் பேண்ட் பாக்கெட்டில் கை விட்டான். பேருந்து பயணச்சீட்டு தென்பட்டது.

” ஐயோ மீதி…? ! ” மனசு அலற…. அடுத்த கணம் அவனுக்குத் தன் நிலமை தெரிந்தது. காவல் நிலையத்தை நோக்கி ஓடி சரணடைந்திருக்குக்கும் நடத்துநரைக் கண்டு பிடித்து எப்படி சில்லறை வாங்குவது..? இந்த விபத்து அமளி துமளி அடங்க ஒருமணி இரண்டு மணி நேரமாகும். அதன் பிறகு அவர்கள் காவலர்கள் பாதுகாப்புடன் வ மீதியைப் பட்டுவாடா பண்ண வேண்டியவர்களுக்கெல்லாம் பட்டுவாடா செய்து…. தான் வாங்கிக்கொண்டு எப்போது நேர்முகத் தேர்விற்குச் செல்வது..?

அவ்வளவுதான் ! வேலை அவ்வளவுதான் ! – பாரம் வந்து மனசுக்குள் அழுத்த….

தாங்கமுடியாமல் வாசு ஒரு ஓரம் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழ….

மற்றவர்கள் அவனை விசித்திரமாகப் பார்த்தார்கள். !!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *