நிம்மதியை நாடி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 10, 2017
பார்வையிட்டோர்: 8,910 
 

ஃபெர்ரி படகு தன் சக்திக்கு மீறிய கனத்தைச் சுமந்து, மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது. உள்ளே ஒரே துர்வாடை. அதெல்லாம் ரம்லிக்குத் தெரியவில்லை. அவன் மனம் கனவுகளால் நிறைந்திருந்தது.

பெயருக்கு வீடு என்றிருந்த ஒன்றை எரிமலைக்கு — மீண்டும் — பறிகொடுத்துவிட்டு, இனி என்ன செய்வது என்று புரியாது நின்றிருந்தபோதுதான் ஆதான் கூறினான்: “என்னோட மலேசியா வந்துடேன். போன தடவைதான் ஒங்கப்பா, அம்மா ரெண்டு பேரையும் பலிகுடுத்தாச்சு. நீயும் இங்கேயே கிடந்து சாகப்போறியா?”

சுமத்ராவில் இருந்த ஸினபோங் மலை நானுறு ஆண்டுகளாக, `இதுவும் எரிமலைதானா!’ என்று வியக்கத்தக்கதாக இருந்தது. அதற்கே அந்த அமைதி அலுத்துவிட்டது போலும்! கடந்த நான்கு வருடங்களாக, 2013-யிலிருந்து, இடைவிடாது நெருப்புக்குழம்பைக் கக்கிக்கொண்டிருந்தது. எப்போதும் வானத்திலிருந்து சாம்பல் கொட்ட, `இதெல்லாம் சாதாரணமாக நடப்பதுதானே!’ என்பதுபோல, முகத்தைத் துணியால் மறைத்துக்கொண்டு, விவசாயத்தில் ஈடுபட்டிருந்தனர் ரம்லியைப்போன்ற ஒரு சிலர்.

பிறந்ததிலிருந்து பழக்கமாகிவிட்ட இடத்தைவிட்டுப் போவதா! ரம்லி தயங்கினான்.

“பாத்திமாவையும் கூட்டிட்டு வா,” என்று ஆசைகாட்டினான் நண்பன்.

பாத்திமாவா?! டச்சுக்காரர்களின் வழிவந்திருந்த சிவந்த நிறத்துடன், உயரமும் பருமனாகவும் இருந்த அவள் எங்கே, கடும் வெயிலில் ஓடாய் உழைத்து சோனியாகப்போன தான் எங்கே!

“அதோட அய்த்தையும் செத்துட்டாங்க. ஒண்ணும் புரியாம நிக்குது! கூப்பிட்டா வரும்”.

எப்போது எரிமலைக் குழம்பு தன் தலையில் விழும் என்று பயந்துகொண்டு இருக்க வேண்டியதில்லை. அந்த நினைப்பே சற்று நிம்மதியாக இருந்தது.

பாத்திமாவை உடன் அழைத்துக்கொண்டு ஃபெர்ரியில் ஏறியிருந்தான் ரம்லி. “உங்களுக்கெல்லாம் அங்கே வேலை செய்ய அனுமதி இல்லே. சும்மா டூரிஸ்டு விசாவில வர்றீங்க. ஆனா, அங்கே வேலை கிடைக்க நான் ஏற்பாடு பண்ணறேன்! நல்லா சாப்பிடலாம். தங்க எடமும் குடுப்பாங்க,” அவர்களுடன் பயணித்த ஏஜண்டு கூறினார். “ஆனா ஒண்ணு. இமிகிரேஷனிலிருந்து யாராவது வந்தா மட்டும் ஓடி ஒளிஞ்சுக்கணும்!”

“ஏன் ஒளிஞ்சுக்கணும்?” யாரோ கேட்டார்கள்.

“சட்ட பூர்வமா வேலை செய்யற ஆளுங்களுக்கு முதலாளிங்க மலேசிய கவர்மெண்டுக்கு ஆயிரக்கணக்கில பணம் கட்டணுமில்ல? அதோட, ஒங்களை வேலைக்கு வெச்சா, குறைச்சலா சம்பளம் குடுக்கலாம்,” என்ற ஏஜண்டு, “இந்த ஒலகத்திலே எல்லாரும் போக்கிரிப் பசங்க!” என்றான், பெரிய சிரிப்புடன்.

சில மாதங்கள் இன்பமாக கழிந்தன. கட்டட வேலை இடுப்பை ஒடித்தது என்றாலும், பாத்திமாவின் அணைப்பில், அவள் ஒவ்வொன்றையும் அவனைக் கேட்டுச் செய்த மரியாதையில் சொர்க்கத்தையே உணர்ந்தான் ரம்லி.

அன்று காலையிலிருந்தே வாந்தி எடுத்துக்கொண்டிருந்தாள் பாத்திமா. பெருமையுடன் அவளைப் பார்த்தான் ரம்லி. இனியும் ஒற்றை மரமில்லை. தன் குடும்பம் தழைக்கப்போகிறது!

“வாந்தி நிக்கவே இல்லியே! எத்தனை நாள்தான் விடுப்பு எடுக்கிறது!” என்று பாத்திமாவே முனகியபோதுதான், `இது கர்ப்பமாக இருக்காதோ?’ என்ற சந்தேகம் முதன்முறையாக உறைத்தது ரம்லிக்கு.

“அஞ்சு நாளா இப்படியே வாந்தியும் பேதியுமா இருக்குன்னு சொல்றீங்களே! காய்ச்சல் வேற அதிகமாக இருக்கு. இது டெங்கிதான்!” என்றார் டாக்டர்.

பக்கத்தில் நின்றிருந்த நர்ஸ், “ஒங்க வீட்டுக்கிட்டே கொசுத்தொல்லை அதிகமோ?” என்று மெள்ள விசாரித்தாள்.

ரம்லி உதடுகளை இறுக்கிக்கொண்டான்.

மெல்லிய மரப்பலகைகளால் ஆன சுவர். தரைக்கு கனமான அட்டை, கோணல்மாணலான உலோகத்தகடுகளே கூரை. உள்ளே தடுப்புக்கு கிழிந்த ஸாரோங். அதற்கு வீடு என்று பெயர். குளிப்பதிலிருந்து குடிப்பதுவரை அருகிலிருந்த குளத்து நீர்தான். இந்த லட்சணத்தில், கொசு இருக்கிறதா என்று கேட்கிறாள்! கொசுக்களின் இருப்பிடத்தில் அவர்கள் வாழ்கிறார்கள். அவ்வளவுதான்.

“மொதல்லேயே வந்திருக்கணும்!” என்று அதிருப்தி தெரிவித்தார் டாக்டர்.

மருத்துவச் செலவுக்குக்கூட காசில்லை, அதனால்தான் அவள் உடல்நிலையைப் பெரிதாக எண்ணவில்லை என்று ரம்லியால் சொல்ல முடியவில்லை. அவனைப் போன்றவர்களின் துன்பம் வெள்ளையும் சொள்ளையுமாக இருக்கும் இந்த டாக்டரைப்போன்ற பெரிய மனிதர்களுக்குப் புரியுமா? அசட்டுச் சிரிப்புடன் பரிதாபமாக விழித்தான்.

பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட பாத்திமாவின் உடல் பூராவும் பல குழாய்கள். அவளுடைய கைகால்கள் எல்லாம் பருத்திருந்தமாதிரி தோன்றியது ரம்லிக்கு. கைகளோ தன்னிச்சையாக ஆடி, பக்கவாட்டிலிருந்த கட்டிலின் உலோகச் சட்டத்தில் தாளம் போட்டன.

`காலில் வலி,’ என்று உதைக்க ஆரம்பித்தாள். ரம்லி அவள் காலை நீவிக்கொடுக்க ஆரம்பித்தான்.

எத்தனை இரவுகள் அவள் தன் காலைப் பிடித்துவிட்டிருப்பாள், `பாவிங்க, என்னமா வேலை வாங்கறாங்க!’ என்று திட்டியபடி!

`நாம்ப ஏழைங்க, பாத்தி! எல்லாத்தையும் பொறுத்துப்போனாதான் பணம் கிடைக்கும்! வயிறுன்னு ஒண்ணு இருக்கே!’ என்று அவளைச் சமாதானம் செய்தது நினைவில் கசப்பாக எழுந்தது.

“ம்மே..” அடிவயிற்றிலிருந்து பாத்திமாவின் வேதனைக்குரல் எழும்பியது. இருமுறை. வலி பொறுக்காத மாடு ஒன்று கத்துவது போலிருந்தது. எப்போதும் இனிமையாகப் பேசுபவளா இவள்!

ரம்லிக்கு அலுப்பாக இருந்தது. இவளுக்கு சிசுருஷை செய்துகொண்டிருந்தால், இருக்கும் வேலையும் போய்விடும். பசியையும் பட்டினியையும் தாங்க முடியாதுதானே அந்த பணக்கார, அண்டை நாட்டுக்கு வந்திருந்தான்!

“வேலைக்குப் போகணும், பாத்தி!” என்று பொதுவாகச் சொல்லிவிட்டு, தளர்ந்த நடையுடன் வெளியே நடந்தான்.

“ரம்லி! ராத்திரியிலேருந்து யாரோ ஒன்னை கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க! ரொம்ப அவசரமாம்!” மேஸ்திரியின் தொலைபேசி எண்ணைக் கொடுத்திருந்தான் மருத்துவமனையில். வாங்கியவனின் முகத்தில் கலக்கம்.

“உங்கள் மனைவியின் உடல் ரொம்ப மோசமாக இருக்கிறது. உடனே வாருங்கள்!”

நரம்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் அவனுக்காகவே காத்திருந்ததுபோல் இருந்தது. நேரிடையாக விஷயத்துக்கு வந்தார். “மூளையில ரத்தம் கசியறதால, இவங்க தலை பெரிசாகிக்கிட்டே வருது. உடனடியா ஆபரேஷன் பண்ணணும்”.

ஆபரேஷனா!

அஞ்சு, பத்துக்கே இங்கே வழியைக் காணோம்! ஆயிரக்கணக்கான ரிங்கிட்டுக்கு எங்கே போவது!

டாக்டர் தாழ்ந்த குரலில், தன்பாட்டில் பேசிக்கொண்டு போனார்: “ஒரு வேளை, ஆபரேஷன் பண்றப்போ அவங்க உயிர் போயிட்டா, தலையைத் தனியா எடுத்து, ஆராய்ச்சிக்கு வெச்சுக்குவோம். ஆறுமாசம் கழிச்சு, திரும்பவும் உடலோடு சேர்த்துத் தைச்சு ஒங்ககிட்ட குடுத்துடுவோம்! ஆபரேஷன் பண்ணாட்டி, எப்படியும் உயிர் போயிடும்!”

டாக்டர் ஏதேதோ கூறினார், `ஸப்ஸிடி’ (subsidy), உதவி என்று. இந்தப் படித்தவர்கள் பேச ஆரம்பித்தாலே அவனுக்குக் குழப்பம்தான் எழுகிறது. காது அடைத்துப் போகிறது.

மலேசிய அரசாங்கம் மருத்துவச்செலவில் பெரும்பகுதியைக் கொடுத்துவிடும், சில நூறுகளே அவன் கொடுக்க வேண்டியிருக்கும் என்றவரின் விளக்கம் ரம்லிக்குப் புரியத்தானில்லை.

ஒன்று மட்டும் புரிந்தது அவனுக்கு.

தன்னை இறுக அணைத்த பாத்திமாவின் கைகள்! அவை இனி எழாது!

`ஆபாங்! ஆபாங்!’ என்று நொடிக்கு நொடி அழைத்த இதழ்கள் இனி பேசாது!

வெகு மோசமான நிலையில் இருப்பதாகச் சொல்கிறார்களே! பிழைத்தெழுந்து, பழையபடி வேலைக்குப் போய் காசு சம்பாதித்துக்கொண்டு வர முடியுமா அவளால்?

அதுதான் டாக்டர் சொன்னாரே, `தலையில் ஓட்டை போடுவோம். பிழைத்தாலும், கைகால் விளங்காமல் போகலாம். பேச முடியாமல் போகலாம்,’ என்று!

அவளைப் படுக்க வைத்து, இறுதிக் காலம்வரை ஒரு கைக்குழந்தைபோல் பார்த்துக்கொள்ளவேண்டி இருக்கும்.

நடக்கிற காரியமா!

“என்ன முடிவு எடுத்திருக்கீங்க? படிச்சுப் பாத்துட்டு கையெழுத்துப் போடுங்க!” ஏதோ காகிதத்தை நீட்டினாள் தாதி.

“வேணாம்,” என்றான் தயங்கியபடி.

“ஆபரேஷன் வேண்டாமா?”

“எனக்கு.. எனக்கு.. படிக்கத் தெரியாது!” அத்தனை துயரத்திலும் தன் இயலாமை அவனை அவமானத்தில் ஆழ்த்தியது. குரல் வெளியே வரவில்லை.

இன்னும் சில நிமிடங்கள்தாம். சுயநினைவுடன், ஆனால் அசைவின்றி, படுத்திருந்த அன்பு மனைவியின் கன்னங்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி, அவள் நெற்றி முழுவதும் முத்தமிட்டுக்கொண்டே இருந்தான் ரம்லி. நடுநடுவில், தன் கண்ணீரையும் துடைக்க வேண்டியிருந்தது.

“பாத்திமா! ஸாயாங்!” என்று வாய் முணுமுணுத்தபடி இருந்தது.

அடுத்து நடந்ததெல்லாம் ஏதோ கனவுபோல் இருந்தது. ஆறு பேர் பாத்திமாவைத் தூக்கி சக்கரம் பொருத்தியிருந்த கட்டிலில் கிடத்தி, எங்கோ அழைத்துப் போனார்கள்.

இரண்டு மணி நேரம் கழிந்தன.

டிராலியில் நோயாளிகளுக்கான ஆகாரம் வெங்காயத்தழையின் வாசனையுடன் வந்தது. தான் நேற்று இரவிலிருந்து எதுவுமே சாப்பிடவில்லை என்பது அப்போதுதான் நினைவுக்கு வந்தது ரம்லிக்கு.

இங்கேயே இருந்தால், பணத்துக்காக நெரிப்பார்களே! பயம் பிடித்துக்கொண்டது.

காம்பவுண்டை விட்டு வெளியே விரைந்தான். கால்சட்டைப் பையில் பாஸ்போர்ட் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டான். இனியும் அதே இடத்துக்கு வேலை பார்க்கச் செல்ல முடியாது.

இந்த வேலை இல்லாவிட்டால், இன்னொன்று!

`குடுக்கறதைக் குடுங்க!’ என்று பவ்யமாகக் கைகட்டி நின்றால், எந்த செம்பனைத் தோட்டத்திலும், கட்டுமானத் தொழிலிலும் வேலைக்கு வைத்துக்கொள்வார்கள். எங்காவது தொலைதூரத்தில் புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டியதுதான்!

அதற்கென்ன! ஆஸ்பத்திரியில் அவனைக் கூப்பிட்டுப் பார்ப்பார்கள். அவன் கிடைக்கமாட்டான் என்பது உறுதியானதும் பாத்திமாவின் உடலை எப்படியோ உபயோகித்துக்கொள்வார்கள். இனி அவர்கள் பாடு!

கடந்த நாட்களின் துன்பமும் துயரமும் மறைய, ரம்லி நடையை வீசிப்போட்டான். சற்றே நிம்மதியாக உணர்ந்தான்.

ஓரிரு நிமிடங்கள்தாம். நின்ற இடத்திலேயே நின்று, கழுத்தை வளைத்து, சற்று தூரத்தில் தெரிந்த பெரிய, வெள்ளைநிறக் கட்டடத்தைப் பார்த்தான்.

“பாத்தீ! அடுத்த பிறவியிலேயாவது பணக்கார வீட்டிலே பிறம்மா!”

விம்மி விம்மி அழும் அந்த இருபது வயது இளைஞனை வேடிக்கை பார்த்தபடி நகர்ந்தார்கள் தெருவில் போனவர்கள்.

குறிப்பு: ஆபாங் (abang) என்று வார்த்தை அண்ணனைக் குறித்தாலும், கணவனையும் விளிக்கும் வார்த்தை.

சாயாங் = அன்பே

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *