மூன்றாம் விதி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 1,395 
 

“அடடா… சுத்தமா மறந்துட்டேன்…?”

நெற்றியில் உள்ளங்கையால் தட்டிக் கொண்டார் அப்பா முருகனின் தந்தை சிவா.

முருகம் முகம் சுருங்கியது.

சிவா குற்ற உணர்வில் மருகினார்.

வேலை முடித்துக் கிளம்பும் வரைக்கும் அதை இழைத்துப் போடு, இதற்கு ஸ்க்ரூ போட்டு முடுக்கு. கதவுக்குப் படிமானம் பாரு, ஹூக் டைட்டா இருக்கு பாரு லூஸ் பண்ணிவிடு, என்று ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருந்ததில் மகன் அவசியமாகத் தேவை என்று சொன்ன ஜாமெட்ரி பாக்ஸ் வாங்கி வர சுத்தமாக மறந்து விட்டார் சிவா.

“அப்பா…!” மகனின் அழைப்பில் ஒரு வித ஏளனம் இருந்தது.

“ம்…!” என்றார்; குனிந்த தலை நிமிராமல்.

“சொல்றேனேனு வருத்தப்படாதீங்கப்பா… குடும்பத்தலைவர்னு சொல்லிக்கிட்டாப் போதாது. அதுக்குத் தகுந்தாப்பல நடந்துக்கணும்…!”

சுருக்’கெனச் சொல்லிவிட்டான் முருகன்.

“டேய்! பெத்த தகப்பனை இப்படி மரியாதையில்லாமப் பேச உனக்கு என்ன தெகிரியம்..?” கேட்டுக்கொண்டே வந்த மனைவியை அடக்கினார் சிவா.

“வாங்கி வராதது என் தப்புதானே. உப்புத் தின்னவன் தண்ணி குடிச்சித்தான் ஆவணும். தப்புப்பண்ணிட்டா தண்டணை அனுபவிச்சித்தானே ஆவணும்.” என்று மகன் சொன்னதை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டுவிட்டார் ஆசாரி சிவா.

“என்னதான் நல்லாப் படிச்சி, வகுப்புல முதல் மார்க் வாங்கிப் பெருமை சேர்த்தாலும், பெற்றமகன் இப்படி எடுத்தெறிந்து பேசக்கூடாதுங்க உங்கள…!”

“சரி விடு. சின்னப் பையன்தானே.. போகப்போகப் புரிஞ்சிப்பான்…!” மனைவியை சமாதானப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது சிவாவுக்கு.

சீருடையை டக் செய்துகொண்டு ‘டிப்டாப்’பாக சைக்கிளில் கிளம்பினான் முருகன்.

முதல்நாள் அப்பாவை மரியாதையில்லாமல் பேசியதால், முருகனிடம் அவன் அம்மா வழக்கம்போலப் பேசவில்லை.

சைக்கிள் எடுத்துக் கொண்டுப் புறப்படும்போது கடமைக்காக வாசலில் வந்து நின்று கையசைத்தாள்.

முருகன் கிளம்பிய கையோடு, சிவாவும் டி வி எஸ் 50 ல் தொழிலுக்குக் கிளம்பிவிட்டார்.

“அண்ணே…!”

புதுத்தெருத் திருப்பத்தில் யாரோ தன்னை அழைத்ததைப் போல இருக்க, வண்டியை நிறுத்தித் திரும்பிப் பார்த்தார் சிவா.

‘பார்சல் ஆபீஸ் விஸ்வலிங்கம் நம்மை எதுக்கு அழைக்கறாரு?’ என்று முகம் முழுதும் கேள்விக்குறியுடன் யு டர்ன் போட்டு கடைக்கு முன் வண்டியை நிறுத்தினார் சிவா.

பள்ளியில் இறைவணக்கக் கூட்டம் முடிந்து மாணவர்கள் வகுப்புக்குள் சென்றனர்.

மாணவர்களைத் தொடர்ந்து ஆங்கில ஆசிரியர் துரைராமன் வந்தார்.

“ஸ்டாண்ட்…”

“சல்யூட்…”

“சிட்…”

முருகன் சொல்லச் சொல்ல மாணவர்கள் எழுந்து வணக்கம் சொல்லி மீண்டும் அமர்ந்தனர்.

“முருகா…”

“யெஸ் ஸார்…”

“நான் என்ன வருகைப் பதிவா எடுக்கறேன் இப்ப..?”

ஒன்றும் புரியாமல் விழித்தான் முருகன்.

“என்னடா முருகா முழிக்கறே? ‘பயிற்சிப் புத்தக’ பார்சல் பிரிச்சி எல்லாருக்கும் நான் வர்றதுக்கு முன்னேயே விநியோகிக்கச் சொல்லியிருந்தேன்ல.. இத்தனை நேரம் என்ன செஞ்சிக்கிட்டிருந்தே? சரி சீக்கிரம் கொடு…!”

‘அடடா, சுத்தமா மறந்துருச்சே…! இப்போ என்ன செய்யறது?’ கூனிக் குறுகி நின்றான் முருகன்.

“வகுப்புத் தலைவன்னு சொல்லிக்கிட்டாப் போதாது. அதுக்குத் தகுந்தாப்பல பொறுப்பா நடந்துக்கணும். வாங்கி வர மறந்துட்டியா?”

நியூட்டனின் மூன்றாவது விதி நினைவில் வந்து போனது அவனுக்கு. முதல்நாள் இரவு அப்பாவைப் பேசியதற்காக இப்போது வருந்தினான் முருகன்.

“முருகன் பார்சல் வாங்க மறக்கலை சார்.” வகுப்பறையின் வெளியிலிருந்து குரல் வந்தது.

முருகனின் அப்பா சிவா பார்சலோடு நின்றார்.

“பார்சல் ஆபீஸ் லேட்டா திறந்ததுனால, நான் இருந்து வாங்கிட்டு வந்தேன் சார்…!” என்ற சிவா பார்சலை கீழே இறக்கி வைத்துவிட்டு ஜாமட்ரி பாக்ஸை முருகன் கையில் தந்தார்..

அப்பாவின் கண்களை நேருக்கு நேர் சந்திக்க முடியாமல் தலையைத் தாழ்த்திக்கொண்டான் முருகன்.

– அனிச்சம் – மே 2023

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *