கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2023
பார்வையிட்டோர்: 1,831 
 

தண்ணீரில் தாமரை இருந்தும் பட்டும் படாமல் இருப்பது போன்ற இரவு. கருச்சான் குருவிகளின் “கிரிச் கிரிச்…” சத்தம். மின்மினிப் பூச்சிகள் அங்குமிங்கும் மின்னிக் கொண்டிருந்தன. அவைகளோ, நட்சத்திரங்கள் பூமியை வந்தடைந்தது போலிருந்தன. ஆந்தையின் “குக்.. குக்..’ அலறல். சுண்டெலிகள் வேலியோரம் ஊர்ந்து செல்லும் “சர..சர..வென” சத்தம். ஒற்றையடிப் பாதையில் தனியாக வேர்க்கடலைகளை கொறித்துக்கொண்டு வந்தான் தேவேந்திரன்.

காரிருள் சூழ்ந்த வானத்தில் மேகங்கள் பல வடிவங்களில் காட்சியளித்தன. தீபத்தை கையில் ஏந்தியவாறு ஒரு பெண் இருப்பது போல் இருந்தது. ஓரிடத்தில், காற்று வீசவும் அதுவும் கலைந்து போனது. மரத்திலிருந்த ஆள்காட்டிப் பறவை “கூக்கூ… கூக்கூ…” சத்தமிடவும் மற்ற பறவைகளும் கூச்சலிட்டன.

மரத்தோடு ஒட்டிக்கொண்டிருந்த தேவாங்கு “கீங்.கீங்.கீச்ச்…” சத்தமிடவும்; அவனது கண்கள் நாலாப்பக்கமும் சுழன்றன. கண்களுக்கு எட்டிய தூரம் யாருமே தென்படவில்லை. அமாவாசை காலமானதால் இரவும் நன்கு இருட்டியிருந்தது. தனது கைகள் தானாக துடிக்கவும் ஒரு நிமிடம் நின்று மெதுவாக நடக்கலானான். பயமில்லாதவனைப் போல் தன்னை திடப்படுத்திக்கொண்டு இதயம் படபடக்க நடந்தான்.

அவன் எதிரே ஒரு கறுப்பு உருவம் தடியை ஊன்றி மெதுவாக அசைந்து வருவதாக இருந்தது. அந்த நேரம் தேவாங்கு மீண்டும் “கீங்ச் …” என்று கத்தியது. அவனது தாத்தா சொன்ன மராட்டிய மன்னன் சிவாஜியின் கதைகளை நினைத்துக்கொண்டே நடந்தான். இருந்தும் அவன் முகத்தில் முத்துக்களைப் பதித்தது போல் வியர்வைத் துளிகள் முளைக்க ஆரம்பித்து இருந்தன.

இளையராஜாவோட அம்மா அப்பவே சொன்னாங்க “நீ வீட்க்கு போறதுக்குள்ள இருட்டிரும். ஊரே சரியில்ல. காலையில் போடானு சொன்னாங்க. ஒரு வேளை நண்பன் ஊர்லையேத ங்கியிரக்கலாமோ.த ரத்தாம ட்டும்த னியா இருப்பார்னு தானே வந்தோம்.” எண்ணியவாறு வேர்வையை சட்டையால் துடைத்தான். “திரும்பி செல்வோமா” என்று பின்னால் திரும்பிப் பார்த்தான். அடர்ந்த இருட்டு இவனை விழுங்குவது போல் இருந்தது. அரை குறை தைரியத்தோடு நின்று கொண்டு இருந்தான்.

திடீரென்று அந்த உருவம் கீழே உட்கார்ந்தது. சிறிது நேரத்தில் மெதுவாக நடக்க ஆரம்பித்தது. கையில் தடியும் உருவம் வளைந்தும் இருட்டில் வரவும் கறுப்புடைனோசர் வருவது போலிருந்தது. இவனால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. அந்த உருவம் அப்படியே கொஞ்சநேரம் நின்றது.

“போனவாரம் இந்த எடத்துல தானே சிவாவுக்கு பேய் புடிச்சதா சொன்னாங்க. இது பேயா இருக்குமோ. தன்னையறியாமல் நடு நடுங்கிப் போய் நின்றான். உடல் வெப்பமாக கொதித்தது. சட்டையை வியர்வைத் துளிகள் நனைத்து அழுதன.

அந்த உருவம் அவனை நெருங்க ஆரம்பித்தது. திடீரென்று புயல் காற்று வீசுவது போல் இருந்தது.

நெருங்குவதற்குள் “அய்யோ அம்மா நானில்லை என்னக் ….” என்று தன்னை மறந்து கத்தினான்.

“ஏம்பா தேவேந்திரனா” அந்த உருவம் பேசியது. “தாத்தா நீங்களா!” படபடத்த இதயத்தோடு உடல் நடுக்கத்தோடும் கேட்டான்.

“நான் தான்டா. ஏன் கத்துனே. உன்னைக் காணோம்னு இந்த முடியாத வயசுல தேடி வர்றேன்.அப்பமாறியா என்னால் நடக்க முடியது. மெல்ல நின்னு ஒக்காந்து வர்றேன். இங்கே என்னப்பா செய்றே” சொல்லிக்கொண்டே அவனது கையைப் பிடித்தார் தாத்தா.

“என்னய்யா கையி இப்புடி கொதிக்குது. எதையும் பாத்து பயந்துட்டியா”

“இல்லங்க தாத்தா” பேச்சை இழுப்பதற்குள்…

“உன்னாட்டம் வயசுல அதாண்ட இருக்க கொளத்துல. நடுச்சாமத்துல நாமட்டும் போயி வல போட்டு மீன் புடுச்சு வருவேன். உனக்கு ஓடுற பாம்ப மிதிக்கிற வயசு. பயப்படலாமா” தாத்தா சொன்னதும் ஏதோ ஞானஒளி பெற்றவனாய் வேர்வையை துடைத்துக்கொண்டு தைரியத்தோடு இருப்பேன் என்ற நம்பிக்கையோடு தன் தாத்தாவை பிடித்து மெதுவாக கூட்டிச் சென்றான்.

அவன் எதிரே அடர்ந்த இருள் விலகிச் சென்றது.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *