எலிகளும் பூனைகளும் மாடுகளும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 2, 2023
பார்வையிட்டோர்: 1,368 
 
 

அந்தத் தனிநபர் பிரேரணைக்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களின் அமோக ஆதரவு கிடைத்தது. பிரேரணை இன்று விவாதத்துக்கு விடப்பட்டிருக்கின்றது.

பிரேரணையை முன்வைத்த உறுப்பினர் தனது உரையை ஆரம்பித்தார்…

பிரேரணைக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கூக்குரல் சபையைக் குலுக்கிக் கொண்டிருந்தது…

“கரு சபாநாயக்கத்து மனி…! நமது நாட்டில் எலிகளின் தொல்லைகள் என்றுமில்லாதவாறு பாதிப்புக்களை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன… மாகாணங்களிலுள்ள அரிசி களஞ்சியங்கள், மாவு களஞ்சியங்கள் இன்னும் உழுந்து, பயறு, பருப்பு, கடலை, சோளம் எல்லா தானியங்களும் நாசமாய்ப் போய்க் கொண்டிருக்கின்றன… அதிகாரிகள் என்னிடம் முறைப்பாடு செய்த வண்ணமே இருக்கின்றார்கள்…

“நாட்டில் உணவு சேதங்கள் மட்டுமல்ல… எல்லா மாவட்டங்களிலும் எலிக் காய்ச்சல் உண்டாகி, வைத்தியசாலைகள் நிரம்பி வழிவதை நேற்று சுகாதார அமைச்சர் இந்த சபையில் உரையாற்றியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம்….”

“கரு சபாநாயக்கத்து மனி… இந்த எலிகளை ஒழித்துக்கட்டுவதற்கு நான் முக்கியமான யோசனைகளையும், திட்டங்களையும் இந்தச் சபையில் முன்வைக்க விரும்புகின்றேன்…” அவர் தனது உரையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்பு, எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவர் எழும்பி சத்தமிட்டுப் பேசினார்…

“கரு சபாநாயக்கத்துமனி…! உணவு அமைச்சர் இப்போது நான்கு கால் எலிகளின் நாசங்கள் பற்றியே பேசினார். அவர் இரண்டு கால் எலிகளைப் பற்றி, குறிப்பாக ஆளுங் கட்சி எலிகளின் நாசங்களைப் பற்றி ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை… பேச விரும்பவுமில்லை …!

“நான்கு கால் எலிகளை ஒழித்துக்கட்டுவதற்கு முன்பு, நாட்டை கடித்துக் கொண்டிருக்கும் எலிகளை, இரண்டே கால் கோடி மக்களைக் கடித்துக் கொண்டிருக்கும் எலிகளை ஒழித்துக் கட்டுவதற்கு, அமைச்சர் என்ன யோசனை வைத்திருக்கிறார் என்பதை இந்தச் சபையில் முதலாவது கூறி விட்டு, அடுத்தக் கட்ட உரைக்குச் செல்லும்படி கேட்டுக் கொள்கிறேன்…” என்றார்.

“கரு சபாநாயக்கத்து மனி… நமது நாட்டை எலிகள் கடித்தாலும் பரவாயில்லை… ஆளுங்கட்சியைச் சேர்ந்த நாங்கள் கடித்தாலும் பரவாயில்லை… இந்த எதிர்க்கட்சிக்காரர்களின் கடிகளைத்தான் தாங்கமுடியவில்லை… முதலாவது இவர்களுக்கு நாங்கள் மருந்து தெளிக்க வேண்டும்… அல்லது மருந்து ஊசி ஏற்ற வேண்டும்…” என்றார்.

பிரேரணையை முன் வைத்த அமைச்சருக்கு தொடர்ந்து பேசுவதற்கு சந்தர்ப்பம் கொடுக்க எதிர்க்கட்சி உறுப்பினர்கள் விடவில்லை.

இன்னொரு எதிர்க்கட்சி உறுப்பினர் எழும்பிப் பேசினார்…

“கரு சபாநாயக்கத்துமனி… நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து இந்த ஆண்டோடு 65 ஆண்டுகள் முடிந்துவிட்டன. எங்களது புள்ளி விபரப்படி ஒரு வருசத்துக்கு பத்து லட்சம் கிலோ என்றாலும், அறுபத்தைந்து வருசத்துக்கு அறுநூற்று ஐம்பது லட்சம் கிலோ உணவுகளையே எமது நாட்டு எலிகள் சாப்பிட்டிருக்கின்றன எனலாம்…”

“ஆனால், நமது ஆளுங்கட்சி எலிகள் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு லட்சம் கிலோவுக்கு பெறுமதியான பணத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றன… இந்த நாசம் நாட்டுக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது கரு சபாநாயக்கத்துமனி…” என்றார்.

சபாநாயகர் கை வலிக்க மேசையைத் தட்டினார்.

“சபை உறுப்பினர்களே… எதிர்க் கட்சிக்காரர்களுக்கு பிரேரணையை எதிர்த்து வாக்களிக்க உரிமையிருப்பதால், இப்போது பிரேரணையை முன்வைத்து பேசும் உறுப்பினருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு தயவாகக் கேட்டுக் கொள்கின்றேன்…” என்றார்.

சபை அமைதியாகியது…

அமைச்சராகிய உறுப்பினர் தொடர்ந்து பேசினார்…

“எலிகளை ஒழித்துக்கட்டும் எனது யோசனைகள், புதிதானதல்ல… இன்று அனைத்து சர்வதேச நாடுகளிலும் பின்பற்றி வரும் நடைமுறைகளிலி ருக்கும் திட்டங்களேயாகும்…”

“கரு சபாநாயக்கதுமனி..! எனது எலிகளை ஒழிக்கும் திட்டத்தை இங்கே வாசிக்க விரும்புகின்றேன்… முதல் நடவடிக்கையாக ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பூனைக் குட்டி வழங்க வேண்டும்…! எலிகளைப் பிடிப்பதற்கென்றே பழக்கவேண்டும். அந்தப் பூனை வகைகளை நாம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டும்…”

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மேசையைத் தட்டி, ஆரவாரம் செய்து ஆதரவு வழங்கினார்கள்.

“இது ஓர் அற்புதமான திட்டம் கரு சபாநாயக்கத்துமனி…” என்று ஆளுங் கட்சியிலிருந்து பல உரத்தக் குரல்கள் ஒலித்தன.

“இரண்டேகால் கோடி மக்கள் வாழும் நாட்டில், ஒரு கோடி வீடுகளுக்கு, ஒரு கோடி பூனைக் குட்டிகளை இறக்குமதி செய்ய வேண்டுமா கரு சபாநாயக்கத்துமனி…?

“வட மாகாணத்திலே காடுகளிலும், அகதி முகாம்களிலும் கிடக்கும் மக்களுக்கு எப்படி பூனைக் குட்டிகளை விநியோகம் செய்வது…? என்பதற்கு உறுப்பினர் விளக்கம் தருவாரா… கரு சபாநாயக்கத்துமனி…?” என்று ஒரு எதிர்க்கட்சி உறுப்பினர் கேட்டார்.

“எனது பூனைகள் வளர்க்கும் திட்டம் ஓர் ஐந்தாண்டுத் திட்டமாகும். ஆரம்பத்தில் இரண்டு லட்சம் பூனைகளை இறக்குமதி செய்து, இனப் பெருக்கம் செய்ய வேண்டும்…! இன்று மிருக வைத்தியசாலைகள் தூங்குகின்றன… மிருகவைத்தியர்களும் தூங்குகின்றார்கள்.”

“இளைஞர்களுக்கு வேலையில்லை… பூனை வளர்ப்புத் திட்டத்தை கிராமங்கள் தோறும் அறிமுகப்படுத்த வேண்டும்… பூனை அபிவிருத்தி நிபுணர்களை நமது நாட்டுக்கு அழைப்பிக்க வேண்டும்… இளைஞர், யுவதிகளுக்குப் பூனை வளர்ப்புப் பயிற்சி முகாம்கள் மூலம் பயிற்சி அளிக்கலாம்… ஒரு பக்கம் வேலை வாய்ப்பு… மறு பக்கம் நாட்டுக்குப் பாதுகாப்பு… என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் கரு சபாநாயக் கத்துமனி…” என்று அமைச்சர் விளக்கமளித்தார்…

“பூனைகளை எந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யலாம் என்று அமைச்சர் கூறுவாரா..?” என்று எதிர்க்கட்சி குரல் எழுப்பியது.

“பூனைகள் வழங்குவதற்கு சீனா முன் வந்துள்ளது. ரஷ்யா முன் வந்துள்ளது… பாகிஸ்தான், வியட்நாம், மியான்மார் போன்ற நாடுகளும் முன்வந்துள்ளன..!”

“இந்தியா பூனைகள் தராதா…?”

“தரும்… ஆனால் த… ரா…து…”

சபையில் ஊ… சத்தம்… கூச்சல்… அமளி… துமளி…!

சபா நாயகர் ஐந்து நிமிடம் சபையை ஒத்தி வைத்துவிட்டு, எழுந்து சென்று விட்டார்…


சபை மீண்டும் கூடியது…

எலிகளை ஒழிப்பதற்கான, விசேஷ பூனைகளை இறக்குமதி செய்யும் திட்டமும், பூனைகள் வழங்கும் நாடுகளுடன் கைச்சாதிடப் போகும் ஒப்பந்தங்கள் பற்றியும் சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு , மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் பெற்று பிரேரணை நிறைவேறியது.

எதிர்க் கட்சிகள் வாயடைத்துப் போய் நின்றன… பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் செயலும் தங்களுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் வாக்கெடுப்பு நேரத்தில் ‘ஒன்றுக்கு இருக்க’ டொய்லெட்டுக்குச் சென்று திரும்பினார்கள்.

மதிய உணவுக்குப் பிறகு, சபை மீண்டும் கூடியது.

வெற்றி வாகை சூடிக்கொண்ட அமைச்சர் தொடர்ந்து பேசினார்…

‘கரு சபாநாயக்கத்துமனி…! தேசத்தைக் காப்பாற்றும் எனது திட்டங்களுக்கு ஆதரவாக வாக்களித்த நமது உறுப்பினர்களுக்கு நன்றி கூறுவதோடு, அடுத்தத் திட்டங்களையும் முன்வைக்க விரும்புகின்றேன்… எலிகளை ஒழிக்கும் திட்டத்தில் பூனைகளை மட்டும் இறக்குமதி செய்து விட்டால் போதுமா…? அவைகளை வளர்ப்பதெப்படி…? மருத்துவம் பார்ப்பதெப்படி…? அவைகளைப் பாலூட்டி வளர்ப்பதற்கு பால் உற்பத்திக்கு என்ன செய்யப் போகின்றோம்…?

“இவை பற்றியெல்லாம் நாம் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்… ஒன்றே முக்கால் கோடி பூனைகளுக்கு பாலுணவு கொடுப்பது சாதாரண காரியமல்ல… அதற்காகவே நான் சென்ற மாதம் அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, சென்றிருந்த போது, 50 லட்சம் கறவை மாடுகளுக்கு டென்டர் வாங்கி வந்திருக்கின்றேன் … அந்த நாடுகள் எந்த நேரமும் மாடுகளை சப்ளை பண்ணுவதற்கு தயாராகவிருக்கின்றன…”

அமைச்சரின் பேச்சை இடைமறித்த ஒரு ஆளுங்கட்சி உறுப்பினர் எழும்பி…

“கரு சபாநாயக்கத்துமனி…! 50 லட்சம் கறவை மாடுகளை மட்டும் இறக்குமதி செய்து என்ன செய்யப்போகிறோம்…? குறைந்தது 25 லட்சம் விசேஷ காளை மாடுகளையும் இறக்குமதி செய்ய வேண்டாமா…?” என்ற வினாவை எழுப்பினார்.

எதிர்க்கட்சி வரிசையிலிருந்து ஊ… சத்தங்கள் கிளம்பின…

“கரு சபாநாயக்கத்துமனி… அந்த உறுப்பினர் கேட்டுக்கொண்டபடி நமது நாட்டுக்கு மிக மிக அவசரமாக காளை மாடுகளே தேவைப்படுகிறது.” என்று அமர்ந்தார்.

சபையில் இரு பக்கங்களிலும் சிரிப்பொலி ஓய்வதற்கு வெகு நேரமெடுத்தன.

அமைச்சர் பேச்சைத் தொடர்ந்தார். “காளை மாடுகளுக்கான டென்டர்களையும் வாங்கி வந்திருக்கிறேன் என்பதையும் இச்சபையில் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்…” என்றார்.

எலிகள் ஒழிப்பு வாரம் நாடு முழுவதும் நடைபெற்றன… மாணவர்களை பிரச்சார வேலைகளில் ஈடுபடுத்துவதற்காக பாடசாலைகள் ஒரு வாரம் மூடப்பட்டன…

சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், வியட்னாம், மியன்மார், ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் தங்களது பூனை கப்பல்களுடன் வந்து இறங்கினார்கள்…

அதே போன்று அவுஸ்திரேலியா, நியுசிலாந்து, நாடுகளின் பிரதி நிதிகளும் தமது கப்பல்களில் கறவை பசுக்களுடனும், காளை மாடு களுடனும் வந்து இறங்கினார்கள்… தொலைக்காட்சிகள் விசேஷ செய்திகளாக ஒளிபரப்பின…


சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பூனைகளும், பசுக்களும், காளைகளும் விநியோகிக்கப்பட்டன. மாடுகளுக்குப் பட்டிகள், தீவனங்கள், மேய்ச்சல் நிலம், தொழிலாளர்கள், மேற்பார்வையாளர்கள், மிருக வைத்தியர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள், வாகனங்கள் என வேலைத் திட்டங்கள் மும்முரமாகின. இவ்வேலைகள் யாவும் ஒழுங்காக நடைபெறுவதற்கும், ஊழல், மோசடிகளைக் கவனிப்பதற்கும் ஆணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒன்பது மாவட்டங்களுக்குரிய தேர்தல் மாவட்டங்களைச் சேர்ந்த தானியக் களஞ்சியங்களுக்கும், உணவு பொருட்கள் பாதுகாக்கப்படும் நிலையங்களுக்கும், எலிகள் ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மூன்று மாதங்களுக்குள் பூனைகள் பெருத்து விட்டன… அவைகளுக்குத் தாராளமாக பசும் பால் சூடேற்றி, நோய்க் கிருமிகள் தொற்றாதபடி கொடுக்கப்பட்டன… வாரத்தில் சனி, ஞாயிறுகளில் பூனைகளுக்கு மீன், இறைச்சி உணவுகள் கொடுக்கப்பட்டன…

எலிகளைப் பிடிப்பதற்கு களஞ்சிய சாலைகளுக்குள் பூனைகளைக் கொண்டு விட்டனர்… பூனைகள் எலிகளைப் பிடிக்காமல் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தன…! எலிகளும் பூனைகளைப் பார்த்துக்கொண் டிருந்தன…

அதிகாரிகள் அதிர்ந்து போனார்கள்… பூனைகளுக்கு எலிகளை விரட்டிப் பிடிக்க வேண்டிய அவசியமேற்படவில்லை… ஓடித்திரியும் நூற்றுக் கணக்கான எலிகளை, அவைகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தன…! ஒரு பூனையாவது ஓடிப்போய் ஒரு எலியைப் பிடித்ததாக மேலதிகாரிகளுக்குத் தகவல் கிடைக்கவில்லை.

மாதங்கள் கடந்தன…!

பூனைகள் தின்று கொழுத்து, நாய்களின் பருமனுக்கு பெருத்துவிட்டன.. எலிகளும் பூனைகள் அளவுக்கு பெருத்து விட்டன… அவைகள் பேரன், பேத்தி, கண்டு பரம்பரைகளை பெருக்கிக் கொண்டிருந்தன…

பூனைகள் தங்களது வசிப்பிடங்களில், சாப்பாட்டுக்குப் பின் சொகுசாக தூக்கம் போட்டுக் கொண்டிருந்தான் … அவைகளுக்கு எலிகளை விரட் டவோ, விரட்டிப் பிடித்துச் சாப்பிட வேண்டிய அவசியமோ ஏற்பட வில்லை … நேரத்துக்குப் பசும் பால், நேரத்துக்கு நேரம் இறைச்சியுடன் சாப்பாடு!

எதிர்ப்பில்லாத உலகத்தில் எலிகள் உண்டு கொழுத்துக் கொண்டிருந்தன.

பூனைகள் நாய் பருமனுக்கு வளர்வதைப் பார்த்து, எலிகள் பூனைகளின் பருமனுக்கு வளர்ந்தன…!

நாட்டில் நாசங்கள் அதிகமாகிக் கொண்டிருந்தன… இறக்குமதி செய்யப்பட்ட எந்த பூனையும், எலி பிடிக்கவில்லை என்ற செய்தி, அரச அவதானிகளுக்கு எட்டியது.

அரசு எலிகள் ஒழிப்புத் திட்டத்தின் மூலம் பெரும் நஷ்டத்தையடைந்தது… பூனைகள் இறக்குமதி செலவு, அவைகளுக்குரிய உணவு, மருந்து செலவுகள், அவைகளுக்குப் பாலூட்டுவதற்குக் கறவை, காளை மாடுகளை இறக்குமதி செய்த செலவுகள், அவைகளுக்கு பட்டி, தொட்டி, தீவனம், மருந்து வைத்தியம், பராமரிப்பதற்கு மனித உழைப்பு செலவுகள், அமைச்சர், அமைச்சு திணைக்கள், வெளிக்கள களஞ்சிய ஊழியர்களின் ஊதியங்கள், அவர்களது ஊழல்கள், மோசடிகளினால் உண்டாகும் பாதிப்புக்கள் யாவும் அரசை பயமுறுத்தின… அரசு விழி பிதுங்கி நின்றது!

இரண்டேகால் கோடி மக்கள் தொகையை விட… எலிகளின் இனப் பெருக்கம் கூடிவிட்டால் என்ன செய்வதென்று குழம்பியது… திட்டத்தைப் பாதியில் நிறுத்தவதற்குப் பயந்தது. எதிர்க் கட்சிக்காரன்கள் எலிகளை விட மோசமானவன்கள்…’ என்று மிரண்டது…

அரசு அவசரமாக பூனைகளை இறக்குமதி செய்த நாடுகளிலிருந்து நிபுணத்துவக் கமிட்டிகளை ஆய்வு செய்வதற்காக அழைத்தது…

ஐந்து நாடுகளிலிருந்தும் நிபுணத்துவக் கமிட்டிகள் விசேஷ விமானங்களில் வந்திறங்கினர். பூனைகள் ஏன் எலிகளைப் பிடிப்பதில்லை என்ற ஆராய்ச்சியில் இறங்கினார்கள்… தற்போதைய எட்டு மாகாணங்களுக்கும் பரிசோதனைக்காக நிபுணத்தவக் கமிட்டிகள் அனுப்பிவைக்கப்பட்டன..

உருப்படியில்லாமல் சீரழிந்துக்கிடக்கும் வட மாகாணத்துக்கு எலிகள் ஒழிக்கும் திட்டம், தேர்தல் முடிந்த பின்னரே ஆரம்பிக்கப்படுமென உணவு அமைச்சர் பத்திரிக்கை மாநாட்டைக் கூட்டி ஏற்கனவே அறிவித் திருந்தார் ! இன்று எட்டு மாகாணங்களிலும், கடந்த மூன்று மாதங்களாக நிபுணத்துவ கமிட்டியின் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இறுதியாக, சீனாவும், ரஷ்யாவும் பூனைகள் எலிகளை சாப்பிடாத காரணத்தைக் கண்டுபிடித்தன… மூன்று நேரமும் பூனைகளுக்கு பாலுணவும், மாமிச உணவும் கொடுப்பதால், பூனைகளுக்குப் பசியெடுப்பதில்லை எனவும், வயிறுகள் மந்தமாகி விட்டதெனவும், அதனால் அவைகளுக்கு எலிகளை விரட்டுவதற்கோ, விரட்டிப் பிடித்துச் சாப்பிடுவதற்கோ விருப்பம் ஏற்படாமல் போய்விட்டது என்ற அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது…

இறுதியில் இந்தியா சமர்ப்பித்த அறிக்கையே உன்னதமான அறிக்கை என்று அரசு பாராட்டியது… ரஷ்யாவும், சீனாவும் பூனைகள் எலிகளைச் சாப்பிடாத காரணத்தை மட்டுமே கண்டு பிடித்தனர் என்றும், அவைகள் எலிகளைச் சாப்பிடுவதற்கான ஆய்வினை மேற்கொள்ளவில்லை என குற்றம் சாட்டியது!

பூனைகளுக்குப் பால் கொடுப்பதையும், மாமிசம் கொடுப்பதையும் நிறுத்திவிட்டு, அரைப் பட்டினி போட்டால், தானாகவே எலிகளை விரட்டிக் கொண்டு ஓட வேண்டிய நிலைமைகள் ஏற்படும் என்று தனது அறிக்கையை சமர்ப்பித்தது…. பசியும், பட்டினியுமே மாற்றங்களை உண்டாக்கும் காரணிகள் என்று இந்தியா அடித்துச் சொன்னது..

எலி ஒழிப்புத் திட்டமும் படு தோல்வியடைந்ததை அறிந்த எதிர்க் கட்சிகள் ஏகோபித்து குரல் எழுப்பின…

“இந்தியா எப்போது பூனை வழங்கியது…? அது எப்போது நிபுணத்துவ கமிட்டிக்குள் நுழைந்தது…?” என்று உரத்துச் சத்தமிட்டார்கள்…

உணவு அமைச்சர் பொறுமையாகப் பதிலளித்தார்…

“இந்தியா தரும்…. ஆனால் தராது… என்றுதான் நினைத்தோம். இறுதி நேரத்தில்தான் தந்தது… இது பற்றி சபையில் கூறுவதற்கு எங்களுக்கு அவகாசம் கிடைக்கவில்லை ! அதுவும் இந்தியா எப்போதும் வலது கையால் செய்யும் உதவியை, இடது கைக்கு தெரியாமலேதான் செய்யும்…!” என்று எலி ஒழிப்பு அமைச்சர் பதிலுரைத்தார்.

பாவம்… எதிர்க் கட்சிகள், அவைகள் ஓலமிடுவதைத் தவிர வேறு எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையிலிருந்தன …


மாகாண மட்டத்தில் செயற்படும் பால் பண்ணைகளில் தொழில் செய்யும் ஊழியர்கள், சிற்றூழியர்களின் குடும்பங்கள் செழிப்பாக வாழ்ந்தனர்… பாலுணவு… நல்ல ஊட்டச்சத்து… அவர்கள் உண்டு… களித்து … மினு மினுப்பான தேஜஸ் பெற்றுக் கொண்டிருந்தார்கள். உயர் அதிகா ரிகள் வெட்ட வெளிச்சமாக அரசவாகனங்களிலேயே தனியார் நிறுவனங் களுக்கு பால் விநியோகம் செய்தனர்…. ஊழலும், மோசடியும் எலி ஒழிப்புத் திட்டத்தின் மூலம் கொடிகட்டிப் பறந்தன …

அரசின் புஜங்கள் வளையத் தொடங்கின…. அடுத்த வரவு செலவு திட்டத்தை முன்வைக்கும் வரை தாங்கிக்கொள்ள முடியாத அரசு, தனக்குத் தானே முதலுதவி சிகிச்சையை செய்துக் கொண்டது….

அன்றைய தினம் இரவோடிரவாக விசேஷ வர்த்தமானியில் டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய், பால் மா , சீனி, கோதுமை மா ஆகிய வற்றுக்கு மரண அடி விழுந்தன…! “சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு எங்களால் ஈடு கொடுக்க முடியாது… தேசத்தின் மகுடம் காப்பாற்றப்பட வேண்டும்… மக்கள் தியாகம் செய்ய வேண்டும்…” என்று அமைச்சர் ஒருவர் காலை வானொலியில் கலக்கிக் கொண்டிருந்தார்…!

(யாவும் கற்பனை?)

– தினக்குரல், ஜூலை 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *