கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 27, 2024
பார்வையிட்டோர்: 993 
 
 

(1985ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஏற்கனவே நான் பெங்களூருக்குப் போயிருந்தமையினால் நண்பன் மகாலிங்கத்தின் வேண்டுகோளைத் தட்டிக் கழிக்க முடியவில்லை . அவனுக்கு ஆபீஸில் லீவு எடுக்க முடியாத நெருக்கடியென்பதனால்தான் என்னை அவ் விதம் வற்புறுத்திக் கொண்டிருந்தான். அவனுடைய தங்ககை அமெரிக்காவிலிருந்து, அந்த விஷயத்தினை உடனே கவனித்து தனக்கு பதில் அனுப்புமாறு எழுதிய கடிதத்தை பல தடவைகள் எனக்கு காட்டிவிட்டான் மகாலிங்கம்.

“அந்தப் பெண் எப்படி இருப்பாள்?”

எனது கேள்வியைக் கேட்டதும் குறும்பாகச் சிரித்தவாறு, “அவள் கலியாணம் ஆனவளப்பா…” என்று கூறிவிட்டு மேஜையிலிருந்த கவருள்ளிலிருந்து, புகைப்பட மொன்றினை எடுத்து என்னிடம் கொடுத்தான். அழகாகவே இருந்தாள் சங்கரி. இயல்பாகவே தோன்றினாள். இதழ்க்கடையிலே புன்னகை பதுங்கியிருந்தது. அழகான மூக்கு. கண்கள் அரைகுறையாக மூடினாற் போல.

“போட்டோவைக் கொடய்யா…அவ பார்த்தா உன்னை அப்படியே கொதறிப் பிச்சுடுவா”

“அப்படியான பொண்ணா?”

“ஒரு கதைக்குச் சொன்னேன். நான் நேரில் பார்த்ததில்லை. ஆனா ஒரு மாதிரியான பொண்ணாயிருப்பான்னு கீதா எழுதியிருந்தாள். நமக்கென்ன அதைப் பற்றியெல்லாம். நேரே போ. விஷயத்தைச் சொல்லு. என்ன தாராளோ அதை வாங்கி வந்திடு…உன் ரோல் அவ்வளவுதான்…”

“சரிப்பா.”

மகாலிங்கம், எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் என்னோடு ரயில்வே ஸ்டேஷன் வரை கூடவே வந்தான். ஒரு பை நிறைய பழங்கள், பிஸ்கட்டுகள், பிளாஸ்க்கில் பால், வேறு சின்னச் சின்னப் பொட்டலங்கள் சகிதம் வந்தவன்- என்னை எங்கோ தொலைதூர நாட்டிற்கு அனுப்புகிறாற் போல பேசிக் கொண்டிருந்தான். அதுவும் பல வருஷங்களுக்கு நான் அங்கு இருக்கப் போகிறாற் போல அவனது வார்த்தைகள் என்னை உணரச்செய்தன. இவன் இப்படித்தான். கள்ளங்கபடமற்ற நட்பு. இப்படி நேசிக்கப்படுவதனை விட பெரிய விஷயமென்ன இருக்கிறது. உண்மையாக நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் எத்தனை சந்தோஷமான பேறு. இத்தகைய நண்பன் ஆதலால் தான், நானும் ஒரு பெண்ணைச் சந்தித்து வருவதற்காக பெங்களூர் போக சம்மதம் தெரிவித்திருந்தேன்.

சங்கரி ‘மாதர் விடுதலை இயக்க’த்தில் தீவிர ஈடுபாடு கொண்டவளென்றும் சர்வதேச ரீதியான மாதர் விடுதலை இயக்கக் கூட்டங்கள் பலவற்றிலும், இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்திக் கலந்து கொண்ட குழுக்களோடு சென்றிருக்கிறாளெனவும், இன்றைய பிரபல அரசியல் வாதிகளுக்கெல்லாம் நன்கு பரிச்சயம் பெற்றவளென்றும் அவளைப் பற்றிய சிறிய முன்னுரையொன்றினை மகாலிங்கம் எனக்குக் கூறிய போது என் மனதிலே லேசான மிரட்சி ஒன்று ஏற்பட்டதென்பதையும் இங்கே நான் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.

பெங்களூரில் அஜந்தா ஹோட்டலில் ரூம்’ எடுத்துக் கொண்டேன். போய்ச் சேருவதற்கு இரவு எட்டுமணி யாகிவிட்டது. குளித்துச் சாப்பிட்டு விட்டு படுத்தவன் ஆறரை மணிக்கு தான் எழுந்திருந்தேன். ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். உறக்கமில்லாதிருக்கிற பரபரப்பும் வேகமும் கொண்ட பெண்ணாகவே எப் போதும் நான் பெங்களூரை உணர்கின்றேன். இதோ இப் போதும் அதே பரபரப்பும், சுறுசுறுப்புமாய் சிலிர்த்து நட மாடுகிற பெண்.

அதிகாலையிலேயே திடுமென ஒருவரது வீட்டுக்குப் போவது நல்ல விஷயமில்லை. அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். அல்லது எங்களைச் சாப்பிடச் சொல்லிக் கேட்பார்கள். அந்த நேரம் போதிய உணவு இல்லாதிருக்கலாம் பிறகு எல்லோரும் அரைவயிற்றுக்குத் தான் சாப்பிடவேண்டும். அதைவிட காலையில் அவர் களது பல வேலைகள் இன்னொருவரின் திடீர் வருகை யினால் தடைப்பட்டுப் போகலாம். எல்லாவற்றிற்கும் பொதுவாக பத்துமணிக்குப் போவதே உசிதமென நினைத்தேன். சங்கரியின் டெலிபோன் நம்பரும் கையிலிருந்தது. எதற்கும் ஒன்பது மணிக்கு டெலி போனில் முன்னறிவிப்புக் கொடுக்கலாமென நினைத்துக் கொண்டேன்.

காலைக் கடன்களை மெதுவாகச் செய்து முடித்து விட்டு உண்டேன். ஒன்பது மணிக்கே போன் எடுத்தேன். நீண்ட நேரமாக மணி அடித்தது. நான் ரிஸீவரை வைத்து விடலாமா என்று யோசித்த கணத்திலே மறு புறத்திலிருந்து, “யேஸ், சங்கரி ஸ்பீக்கிங்” என்ற குரல் என் காதுகளிலே வந்தது. என்ன குழைவான இனிமை வாய்ந்த மயக்கமூட்டுகின்ற குரல். அந்தப் புகைப்படம் நினைவிலே தோன்றிற்று. கணநேரத் தடுமாற்றத்தின் பின் என்னை அறிமுகம் செய்தேன்.

அவளது ஆங்கிலம், ‘ராணியின் ஆங்கிலம்’, எனக்கு இப்போது இங்கிலீஷ் தடுமாறினாற் போல உணர்ந்தேன்.

“எங்கே தங்கிறாய்?” சொன்னேன். மறுகணமே செல்லமாகக் கடிந்து கொண்டாள்.

“நீ நேரே என்னுடைய வீட்டுக்கு வந்திருக்க வேண்டும். என்னை ஏன் நீ இப்படி ‘இன்சல்ட்’ பண்ணினாய்?”

என்னையறியாமலே, “இல்லைங்க” என்று தமிழிலேயே சொல்லிக் கொண்டு சலனப்பட்டேன். போன் பண்ணிவிட்டு இராத்திரியே அவளது வீட்டிற்குச் சென்றிருக்கலாம்தான். என்ன செய்வது நான் ஒரு ‘ரிசர்வ் டைப்’. மூன்று நிமிஷ நேரத்திற்குள்ளே அவளது வார்த்தைகள் என்னை மிக நேயத்தோடு நட்புரிமை பாராட்டி அவளிற்கு மிக அருகாகக் கொண்டு போய் விட்டாற் போலொரு பிரமை.

“என்னோடேயே காலை உணவு சாப்பிடுகிறாய்….”

அவள் உரிமையோடு கூறினாள். நான் காலை உணவை முடித்துக் கொண்டதை சொல்லி முடியு முன், “முட்டாள்” என்று சாவகாசமாகச் சொன்னாள். எனக்குப் பதில் சொல்லத் தோன்றவில்லை. “சரி பத்துப் பதினைந்துக்கு வந்து விடு” என்று பேச்சை முடித்தாள்.

நான் மீண்டும் தலைவாரிக் கொண்டேன். கண்ணாடியைப் பார்த்துக் கொண்டேன். அணிந்திருந்த ஷேர்ட்டைக் கழற்றி விட்டு புதிய ஷேர்ட்டை மாட்டி னேன். என்னென்ன அவளோடு பேசிக் கொள்ள வேண்டுமென்பதை மனதினுள் ஒத்திகை பார்த்துக் கொண்டேன். ஏனெனில் பலவேளைகளிலும் இங்கிலீஷ்’ எனது காலை வாரி விட்டு வேடிக்கை பார்ப்பதுண்டு. சங்கரி என்ன சரளமாகவும், பாவனையோடும் ஆங்கிலம் பேசுகிறாள்!

புறப்படுவதற்காக வெளியே வந்தவன் மீண்டும் அறைக்குள் போனேன். பூட்ஸ்களை கழற்றி நன்றாக அழுத்தித் துடைத்தேன். கைகளைச் சுத்தமாகக் கழுவி, மீண்டும் கண்ணாடிக்கு அருகாகப் போனேன். என்னையே பார்த்துப் புன்னகை செய்து விட்டு மீண்டும் தலை வாரியபின் வெளியே நடந்தேன்.

2

பஸ்ஸர் குக்கூ என்று வினோதமாக ஒலியிட்டது. யாரும் வரவில்லை. இரண்டு நிமிஷங்களின் பின்னர் மீண்டும் கொஞ்சம் தயக்கத்தோடு அழுத்தினேன். ஒரு நிமிஷங் கழிய கதவு திறந்தது.

எனக்கு அவளைக் கண்டதும் கூச்சமாயிருந்தது. நேராக நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. நைட்கவுனில் இருந்தாள். “சொன்ன நேரத்துக்கே வந்து விட்டாய்…” என்றவாறு கையை நீட்டினாள். எனக்குச் சங்கடமா? யிருந்தது. கையை நீட்டினேன். குலுக்கிக் கொண்டாள்.

“உள்ளே வா” என்றவாறு முன்னே சென்றாள். நான் பின் தொடர்ந்தேன். அவளுடைய அறைக்குள்ளே சென் றாள். கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள். எதிரேயுள்ள சோபாவை எனக்குக் காட்டினாள். கட்டில் தாறுமாறாகக் கலைந்திருந்தது.

“என்னை நீ தான் இன்று தூக்கத்திலிருந்து எழுப்பி னாய். அதுவும் ஒரு தடவையல்ல. இரண்டு தடவைகள்” என்றாள்.

நான் ஒன்றும் பேசவில்லை. வீட்டின் உள்ளே நுழை கிற போது எனக்கே கூச்சமாயிருந்தது. நவீன பாணியில மைந்த புத்தம் புதிய வீடு. ஆனால் இந்த அறை; அதுவும் அவளது படுக்கை அறை …

வரவேற்பறையிலேயே என்னை உட்கார வைத்து இவள் பேசியிருக்கலாம்.

அறையைப் பார்த்தேன். மெல்லிய மஞ்சட் சுவர்கள். கட்டிலில் புத்தம் புதிய விரிப்பு. ஆனால் கசங்கிப் போயிருந்தது. தலையணைகள் அங்கொன்றும் இங் கொன்றுமாக, கட்டிலின் கீழே புத்தகங்களும் சஞ்சிகை களும் இறைந்து கிடந்தன. சுவர் மூலையில் கசக்கியெறி யப்பட்ட காகிதங்கள். கட்டிலடியில் ஆஷ்டிரேக்குள்ளும், வெளியேயும் எரிந்து எஞ்சிய சிகரெட் துண்டு துணுக்கு கள். ஆரஞ்சுப் பழத்தோல்களும், பாதியே உரித்த வாழைப் பழமும் ‘மனுஷி’ பத்திரிகையில் போடப்பட்டி ருந்தன. வாழைப் பழக் கசிவு ‘மனுஷி’ அட்டையில் சிந்தி ஈரமூறியிருந்ததைப் பார்க்க எனக்கு என்னவோ போலிருந்தது.

கட்டிலிலேயே போட்டிருந்த டன்ஹில் சிகரெட் பெட்டியை எடுத்த சங்கரி, “நீ சிகரெட் பிடிப்பாயா?* என்று என்னிடம் கேட்டாள். எனக்குள் அதிர்ச்சி நடுங் கிற்று. மெல்லவே அவளை நிமிர்ந்து நேராகப் பார்த்தேன். தோள்களைக் குலுக்கிக் கொண்டே மீண்டும் கேட்டாள். சிகரெட் பெட்டியை என்னிடம் நீட்டினாள்.

“நான் சிகரெட் பிடிப்பதில்லை…”

அவள் என்னை வியப்போடு பார்த்தாள். பிறகு அந்தப் பெட்டியிலிருந்து சிகரெட் ஒன்றினை உருவி வாயில் பொருத்தினாள். சிகரெட் லைட்டரை வெகு இலாகவமாக ஏற்றி நளினமாகவே சிகரெட்டைப் பற்ற வைத்து புகையை ஊதினாள்.

“நீ மிகவும் அதிசயமானவன்…” என்று கூறிக் கொண்டே என்னைப் பார்த்த பார்வை, நீ ஒரு காட்டு வாசி, நாகரிகம் தெரியாத மடையன் என்று சிரிப்பது போலிருந்தது.

பிறகு என்னைப் பற்றி விசாரித்தாள். தன்னைப் பற்றிச் சொன்னாள். எம்.ஏ.சோஷியாலஜி. அதே துறை யில் பி.எச்டிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறாள். தனது மேற்பார்வையாளன், தன்னோடு படுக்கிற எவளுக்கும் கண்ணை மூடிக் கொண்டு பி.எச் டிக்கு சம்மதம் கொடுக்கக் கூடியவன் என்று கொச்சையாக சொல்லி விட்டு சிகரெட் புகையை ஊதித் தள்ளினாள். புகை நாற்றம் எனக்கு வயிற்றைக் குமட்டிற்று. தலை வேறு லேசாகக் கனத்து வலிக்கிறாற் போலிருந்தது. அவள் அடுத்த சிகரெட்டைப் பற்ற வைத்தாள்.

“மாதர் விடுதலை இயக்கங்களோடு ஏதாவது தொடர்புகள் உண்டா?” என்று பேச்சைத் தொடங்கினாள் சங்கரி.

நான் எனக்கு அவற்றோடு எவ்வித தொடர்புமில்லையெனக் கூறியதும் அவள் எரிச்சலோடு என்னைப் பார்த்தாள்.

“உண்மையிலே சொல்லப் போனால் நீங்களெல்லாம் மோசமான ஆண்கள். மேலாதிக்க குணம் படைத்தவர்கள். பெண்களின் தோள்கள் மேல் உட்கார்ந்திருக்கிறவர்கள்… அவர்களின் சுதந்திரங்களை எல்லாம் பறித்தெடுப்பதையே குறியாகக் கொண்டவர்கள்…”

அவள் ஆங்கிலத்திலே பொரிந்து தள்ளி ‘பாஸ்ரட்’ என்பது போன்ற கெட்ட வார்த்தைகளோடு இகழ்ந்து முடித்தாள்.

இந்தப் பேச்சு வார்த்தைகளை வெளியே யாராவது கேட்டுக் கொண்டு நின்றிருந்தால் வெகு நிச்சயமாக சங்கரி என்னைத்தான் திட்டித் தீர்க்கிறாள் என்று நினைத்திருப்பார்கள்.

சிகரெட் பெட்டியினை மீண்டும் எடுத்து ஒரு சிகரெட்டை உருவி எடுத்தவாறே வெற்றுப் பெட்டியை கசக்கி, அறை மூலைப் பக்கமாக வீசினாள் சங்கரி, சிகரெட்டை அவதானமாகப் பற்றிய போது அவள் தணிந்து போயிருப்பதை உணர்ந்தேன்.

“மன்னித்துக் கொள். நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன்” என்றவாறு சிகரெட் சாம்பலை தட்டினாள் சங்கரி. பின்னர் எழுந்து போய் மேஜை ஓரமாயிருந்த சிறிய சூட்கேஸ் ஒன்றினைத் தூக்கினாள். பளீங்ங் என்றொரு பாட்டில் சத்தம். சின்னப்பாட்டிலொன்று சூட்கேஸின் பின்னாலிருந்தது; சூட்கேஸ் தட்டுப்பட்டு விழுந்து உடைந்து சிதறியிருந்தது.

“நேற்றுத்தான் இது கைக்கு வந்தது. பாரின் விஸ்கி. பாதிகூடக் குடிக்கவில்லை. அதற்குள் அநியாயமாக உடைந்து போயிற்று… த்சொ… த்சொ…”

கவலையோடு அவள் கட்டிலில் வந்து உட்கார்ந்து கொண்டாள். அவளை நிமிர்ந்து பார்க்கவே எனக்கு வெட்கமாயிருந்தது. அவளணிந்திருந்த ‘நைட் கவுன்’ அவள் நடந்து செல்கின்ற போதிலே பளீச்சென்று அவளின் அங்கங்களை தெரியப்படுத்திக் கொண்டிருந்தது.

நான் மீண்டும் அறையினை நோட்டம் விட்டேன். இடது புறத்திலிருந்த கூடையொன்றிலிருந்து மெதுவாக வெள்ளைப் பூனையொன்று எழுந்து உட்கார்ந்து மீசை மயிரைக் கால்களினால் தடவியவாறு சோம்பல் முறித்துக் கொண்டு ‘மியாவ்’ என்றது.

சூட்கேஸைத் துளாவிக் கொண்டிருந்த சங்கரி அந்தப் பூனையைப் பார்த்து “கமான் டார்லிங்” என்றாள். டார்லிங் என்னை ஒரு அற்பனைப் போல பார்த்துக் கொண்டு கட்டில் பக்கமாக நடந்து சென்றது. அது நடந்து செல்கின்றபோதே துர்நாற்றமொன்று தொடர்ந்து போவதை உணாந்த எனக்கு மீண்டும் வயிற்றைக் குமட்டிற்று.

அவள் டார்லிங்கை மடியில் தூக்கிவைத்து அதன் தலையினை வருடிக் கொடுத்தாள். பிறகு திடுமென எதையோ நினைத்துக் கொண்டு பூனையை மெதுவாகக் கட்டிலில் தூக்கிவைத்துவிட்டு எழுந்தாள். நானோ தலையைக் குனிந்து கொண்டேன்.

அவள் மேஜையிலிருந்த புத்தகங்களைத் துழா வினாள். மேஜையிலிருந்த ஆஷ்டிரே ஒன்று புத்தகங் களால் தள்ளுண்டு நிலத்தில் எகிறி விழுந்தது. டொண் டொணாரென்ற சத்தத்துடன் அந்த ஆஷ் டிரே துண்டு துண்டாய் உடைந்து சிகரெட் துண்டுகளும் சாம்பலும் நிலத்தில் பரவிச் சிந்தின.

புத்தகங்கள் சிலவற்றை தூக்கி மேஜையின் கீழே போட்டுவிட்டு, அதன் கீழிருந்து சிகரெட் பெட்டியினை எடுத்தாள் சங்கரி.

மீண்டும் கட்டிலில் வந்து உட்கார்ந்து கொண்டாள். சிகரெட்டைப் பற்ற வைக்கிறபோது முகத்திலே திருப்தி மலர்ந்திருந்தது. புன்னகையோடு என்னைப் பார்த்தாள் சங்கரி.

“நீ மிகவும் வெட்கப்படுகிறாய்…. என்ன… நான் சொல்வது சரிதானே…”

எனக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. புன்னகை செய்தவாறே, “நான் மத்தியானமே திரும்பலா மென்றிருக்கின்றேன். நீங்கள் கீதாவுக்கான புத்தகங்களையும், குறிப்புகளையும், சீக்கிரமாக தந்தால் நல்ல தல்லவா?” என்றேன்.

சங்கரி தோள்களைக் குலுக்கிக் கொண்டு சிகரெட்டை இறுதியாக உறிஞ்சி விட்டு எஞ்சிய துண்டினைக் கட்டிலின் கீழே போட்டாள்.

“என்ன பேச்சுப் பேசுகிறாய் நீ? பெங்களூருக்கு வந்து விட்டு உடனேயே திரும்பிப்போய்விடலாம் என்றா நீ நினைக்கிறாய்? எனக்கு எவ்வளவு அவமானம் இது… நீ என்ன செய்கிறாய், இன்றைக்கு மத்தியானம் என்னோடேயே சாப்பிடப்போகின்றாய், … உன்னிடம் தந்து விட வேண்டிய சில தஸ்தாவேஜுகளை நான் மிஸ். டில்குஷியிடம்தான் வாங்கித் தரவேண்டும். ஆகவே நீயும் நானும் சாப்பிட்டுவிட்டு டில்குஷியிடம் செல்லப் போகின்றோம். டில்குஷி, ஸ்ரீராமபுரத்திலே இருக்கிறாள். அவளுக்கும் போன் செய்கிறேன்…”

சங்கரி போன் செய்ய எழுந்தாள். பின்னர் என்னைப் பார்த்து விஷமந்தொனிக்கச் சொன்னாள்.

“என்ன… நான் எழுந்ததும் நீ தலையைக் குனிந்து கொள்கிறாய்….. என்னிடம் நீ பிடுங்கிச் செல்வதற் கேற்ற ஏதாவது சமாச்சாரம் இருக்கிறதென்றா நீ நினைக்கிறாய்… என்னைப் பொறுத்தவரை அப்படி ஒன்றுமில்லை. இப்படியெல்லாம் நீ செய்து கொள்ளாதே. இது தான் என் போன்றவர்களை மிகவும் சங்கடப் படுத்துகின்ற விஷயம்….. அநாகரிகமாய் நடக்காதே.”

எனக்குத் திக்கென்றது. அசடு வழிய அவளைப் பார்த்தேன். அவள் சொல்லிவிட்டு டெலிபோன் இருக்குமிடத்திற்கு நடந்து சென்றாள். எனக்கு மீண்டும் கூச்சம் வந்தது. அவளின் உடல்வாகு, நைட் கவுனுள் அடங்காமல் தெரிந்தது. நான் குனிந்து கொண்டேன்.

திரும்பி வந்தவாறே சங்கரி வெகு சாவதானமாகக் கூறினாள். “நான் இன்னமும் பல் துலக்கவில்லை. ஐந்து நிமிஷத்தில் பல் துலக்கி குளித்துவிட்டு வந்து விடுகிறேன். இன்றைக்கென்று பார், எங்கள் வீட்டு வேலைக்காரியும் வரவில்லை. பரவாயில்லை நானே உனக்கு காப்பி கலக்கித் தந்து விடுகிறேன்… இப்போதே கலக்கி தரவா… பாவம் நீயும் வந்து ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாகி விட்டது… உனக்கு பால் காபி வேண்டுமா? சர்க்கரை அதிகமாகவா, குறைவாகவா?”

எனக்கு அவள் சொன்ன வார்த்தைகளின் பிற்பகுதி காதிலேயே விழவில்லை. இன்னமும், தான் பல் துலக்கவில்லை என்று சொன்னதுதான் நினைவுதனிலே ஆணியடித்து நின்றது. இவ்வளவு நேரமும் பல்லே துலக்காமல்தானா இவள் என்னோடு பேசிக் கொண்டிருந்தாள். இவ்வளவு சிகரெட்டுகளையும் பிடித்துப் புகைவிட்டாள்? எனக்கு வயிற்றைக் குமட்டியது. ஒரு ஓங்காளம் வயிற்றினுள்ளே திரண்டு தொண்டையினுள்ளிருந்து அவசரமாய்க் கிளம்பிற்று.

நான் சடாரென்று எழுந்தேன். நெஞ்சைத் தடவி அமுக்கியவாறே “பாத்ரூம் எங்கே?” என்று தடுமாறியவாறே கேட்டேன். அவள் வியப்போடு என்னைப் பார்த்துவிட்டு டாய்லட்டைக் காட்டினாள்.

கதவைச் சாத்திக் கொண்டேன். லேசாக மூச்சுவிட்ட வாறே வாஷ் பேஸினுள் கவிழ்ந்தேன். ஆக்க்…

பின்னர் குழாயைத் திறந்து நீரையடித்து வாஷ் பேஷினை சுத்தமாக்கி விட்டேன்.

இப்போது லேசானவிடுபாடு. நிமிர்ந்தேன். அழகான மாபிள் பதித்த டாய்லட். சுடுதண்ணீர், தண்ணீர் பைப்புகள், குளியல் தொட்டி, கழிவிருக்கை. வாஷ் பேஷினை இப்போதுதான் கவனித்தேன். நிறைய ரோமங்கள் சவர்க்கார நுரையோடு. சிகரெட் துண்டுகள். இடது மூலையில் அவளின் அழுக்கான உள்ளாடைகள். அருவருப்பாக நெடிமணத்தது.

வாயை நன்றாக அலம்பிக் கழுவிக் கொண்டு கழிப் பிருக்கைக்கு சென்றேன். குப்பென்ற கெட்ட நாற்ற மடித்து மூளையில் அறைந்தது. சுவாசத்தினுள் எரிச்சலும் அருவருப்பும். மீண்டும் ஓங்காளித்து விடுவேன் போலிருந்ததால் வெளியே வந்தேன்.

கட்டிலில் உட்கார்ந்து ஏதோ யோசனையோடு சிகரெட்டைப் பற்றிக் கொண்டிருந்தாள் சங்கரி. பூனை இடது தொடையில் உல்லாசமாகத் தூங்கிக் கொண்டிருந்தது.

அப்போது குழந்தையொன்று அழுகின்ற சத்தம் கேட்டது. சங்கரி சிகரெட் துண்டைக் கட்டிலடியில் போட்டு காலால் நசித்துவிட்டு, முணுமுணுத்தவாறே சென்றாள். “ரஞ்சனி வராதது எவ்வளவு கஷ்டமாகிப் போய்விட்டது. புருஷனுக்கு லீவென்று வந்துவிட்டால் இரவு பகலாக அவனோடேயே படுத்துக்கிடந்து விடுவாள். மோசமான பெண்… இதை என்ன செய்ய?”

நான் அவள் எழுந்து சென்றதும் அறையைச் சுற்று முற்றுமாய் பார்த்தேன். என்ன அழகாக வடிவமைத்துக் கட்டப்பட்ட அறை. ஆனால் இப்போது ஒழுங்கற்ற அசுத்தமான அறை – இந்தப்புத்தகங்களை உரிய இடத்திலே அடுக்கிவைத்து, பெருக்கித்தள்ளிப் பளீச் சென்று மாற்ற பத்து நிமிஷங்களே போதும். அறை வாசலில் துடைப்பம் சார்த்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதை எடுத்து அறையைப் பெருக்கினால் என்ன என்று யோசித்தேன். பிறகு எனக்குள் நானே சிரித்துக் கொண்டேன் எனது யோசனைக்காக.

உள்ளேயிருந்து குழந்தையொன்றை அலாக்காகத் தூக்கிக் கொண்டு வந்து கட்டிலில் படுக்க வைத்தாள் சங்கரி. குழந்தையின் முகத்தைப் பார்த்தேன். ஜலதோஷம். மூக்குச்சளி கன்னமெல்லாம். சிவந்த முகத்தில் கொசுக்கடியின் புள்ளிகள் செழுமையான ரோஜாப் பூவை சேற்றினுள் தோய்த்தெடுத்தாற் போன்ற குழந்தையை கழுவி விட்டு கொஞ்சிடத் தோன்றிற்று.

“பொறு. பால் கொண்டு வருவேன்…”

அவள் எழுந்தாள். குழந்தை புரண்டு படுத்தது. அதன் காலடியிலிருந்த பூனையும் அசையாமல் உறங்கிக் கிடந்தது. எனக்கு மனதினுள் முட்கள் புரண்டன.

நான் யோசித்துக் கொண்டிருக்கையில், அந்த அறையைத் தாண்டி வாட்டசாட்டமான இளைஞன் ஒருவன் உள்ளே சென்றான். பின்னர் சூட்கேஸ் ஒன்றினோடு திரும்பி அந்த அறையினுள் வந்து இரண்டொரு புத்தகங்களை எடுத்து சூட்கேஸினுள் வைத்தான். கட்டிலிலே துயின்று கொண்டிருக்கின்ற குழந்தையைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது அவனுக்கு. கட்டிலில் சென்று உட்கார்ந்தவாறே அந்தக் குழந்தையின் தலையை வருடினான். பின்னர் கன்னத்திலே குனிந்து முத்தமிட்டு விட்டு எழுந்தான்.

சங்கரி அப்போது அறைக்குள் வந்தாள். அவனுக்கு என்னைப் பற்றிக் கூறிவிட்டு, அவனை எனக்கு அறிமுகம் செய்தாள்.

“ஹீ இஸ் மை ஹஸ்பெண்ட்…”

நான் என் பிடரியில் ஏதோ தாக்கினாற்போல அதிர்ந்தேன். என்னையறியாமல் மறுகணமே சுதாரித்துக் கொண்டேன். புன்னகை செய்தேன்.

“நியூடெல்லியில் டெப்யூட்டி டைரக்டர். ஆசாமிக்கு லீவு முடிந்து விட்டது. இன்று டெல்லி பயணம். சரி… சரி… நீ உடனேயே புறப்படலாம்…… ஏற்கனவே தாமதம்… காப்பி சாப்பிடவில்லை நீ?”

குரலிலே மிகுந்த நேயம் தொனித்திட அவன் என்னிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டான்.

சங்கரி கட்டிலிலேயே உட்கார்ந்திருந்து பூனையின் தலையைத் தடவிக் கொண்டிருந்தாள்.

அப்போது போன் வந்தது. சங்கரி எடுத்தாள். முகத்தில் சின்னதாகக் கோபம் படர்ந்தது.

“டில்குஷி சாயந்தரம் பம்பாய் போக வேண்டுமாம். உடனே வரச் சொல்கிறாள். இரண்டு நிமிஷமே பொறு. நைட்கவுனைக் கழற்றி எறிந்து விட்டு ஜீன்சுக்குள் புகுந்து கொள்வதுதான்…”

சொன்னபடியே இரண்டு நிமிஷத்துள் வந்து விட்டாள். தலையை லேசாக வாரி, ஜீன்சோடு.

சிகரெட் பெட்டியை எடுத்து, எஞ்சிய சிகரெட் ஒன்றை வாயில் பொருத்தி லாவகமாக பற்ற வைத்தபடி என் அருகே வந்தாள் சங்கரி.

எனக்கு திடீரென வயிற்றைக் குமட்டியது. கொஞ்சம் பின் வாங்கினேன். ஆனால் குமட்டலைத் தவிர்க்க முடியவில்லை .

– 1985

– அந்திப் பொழுதும் ஐந்தாறு கதைகளும், முதற் பதிப்பு: டிசம்பர் 1985, தமிழோசைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *