அந்திப்பொழுது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 25, 2024
பார்வையிட்டோர்: 1,038 
 
 

(1979ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1-10 | 11-20

11

இன்னமும் ஐயனைக் காணாதது அளவுக்கு மீறின கவலையைக் கொடுத்திருந்தது. நேற்று மாலையும் களைத்து விழுந்துதான் ஐயன் வீட்டுக்கு வந்தான். இப் பொழுது ஐயன் மூக்கு முட்டவே சாராயம் குடிக்கிறான் என்ற கவலையும் கிட்டியின் மனதினுள்ளே விதையூன்றி அவளைச் சஞ்சலப்படுத்தியது. தான் குடித்த சாராயப் போத்தல்களின் தொகையை பகிரங்கப்படுத்துவது போல வெற்றுப் போத்தல்களைக் கையிலே கொண்டு ஏதேதோ கதைத்தவாறு அவன் அங்கே வருவதும் அசட்டுத்தன மாகக் கிட்டியைப் பார்த்து இளிப்பதுவும் கிட்டிக்கு மனம் சிணுக்கம் கொள்ளவைக்கின்ற செயலாகிவிட்டது.

அடிவானத்திலே கோழி முட்டையின் சிவப்புக் கருவாக நிலவு மெல்லவே எழுந்து கொண்டிருந்தது. காவற் கொட்டிற் பக்கமாக நின்றவாறு சுற்றுப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கிட்டி. கண்ணாத்தை வயிற்றுவலி என்று கூறிவிட்டு உள்ளே படுத்திருந்தாள். அவளுக்குக் கொஞ்சம் உள்ளியைத் தின்னக் கொடுத்து விட்டுத்தான் கிட்டி ஆறுதலாக வெளியே வந்திருக்கிறாள்.

சோளந் தானியத்தையும் இன்னும் புரையிலிருந்து எடுத்துத் துப்பரவாக்கவில்லை. நாளைக்கு எப்படியும் அந்த வேலையைச் செய்யத் தொடங்கிவிடவேண்டு மென்று தீர்மானித்துக்கொண்ட கிட்டி ஆராய்கின்ற கண் களினோடு காவற் கொட்டிலைப் பார்த்தாள்.

காவற் கொட்டிலின் ஓரத்து வளைந்த வேப்பமரத்தி லுள்ள சிறு கூண்டிற்குள் இருந்து இரண்டு மைனாக் குஞ்சுகள் கீச்சு மாச்சு என்று கத்திக் கொண்டிருந்தன. இது சம்பனின் வேலைதான். மைனாக் குஞ்சுகளுக்கு இரை சேகரிக்கத்தான் அவன் புல்வெளிப்பக்கமாகப் போயிருக்கிறான். நல்ல கொழுத்த தத்து வெட்டிகளை உள்ளங்கையாற் பொத்தி தலையை நசுக்கிவிட்டு அவன் கதை சொல்லிச் சொல்லி இரை தீத்துவான். நேற்று இரவு உதுரன் தனியாகத்தான் இறால் கடலுக்குப் போனான். அவன் கொண்டுவந்த இறாலைப் பொரித்து மிளகாய்த் தூளிலே புரட்டி சிரட்டைக்குள் பத்திரமாக ஐயனுக்காக வைத்திருக்கின்றாள் கிட்டி. ஆனால் பகல் பத்துமணிக்கு அங்கிருந்து பட்டங்கட்டி வீட்டுக்குப் புறப்பட்டுப்போன ஐயன் இன்னமும்தான் வீட்டுக்குத் திரும்பவில்லை. கிட்டிக்கும் இப்போது பசி இல்லை. மனம் எரிச்சலுறக் கிடு கிடுவெனக் காவற் கொட்டிலின் மேல் ஏறினாள்.

சேனைக் காடு எரிகையில் பரவித் தெரிகிற மஞ்சள் ஒளியைப்போல நிலவு அப்பிரதேசம் முழுவதும் பெய்து கொண்டிருந்தது. மிக அமைதியாக அவ் வெளிச்சம் தனில் குளித்துக்கிடந்தது அப்பகுதி. கிட்டியின் மன திலே இதுவரை காலமும் எண்ணற்ற கனவுகள் நிறைந்து கிடந்தன. அவளது ஒவ்வொரு கனவும் அவளது முயற்சி யாலும், உற்சாகத்தினாலும் சித்தரித்திருக்கின்றன. ஆனால், கண்ணாத்தையைப் பற்றிய கனவுகளோ…?

பிச்சன் குளம் சிறியதொரு உருவிலே அவளது கண் களிலே தெரிகின்றது. பிச்சன் குளத்திற்குப் பின்புறமுள்ள இளுப்பை மரத்தோப்பின் ஒற்றையடிப் பாதை வழியாகச் சென்று சிறிது மேலேறினால் கண்ணாத்தைக்கு ஐயன் பார்த்து வைத்துள்ள சேனை நிலத்தினை அடைந்து விட லாம். ஐயன் கிட்டிக்கு அந்தப் பகுதியைக் கூட்டிச் சென்று காட்டியபோது எல்லையில்லாத மகிழ்ச்சியினை அவள் எய்தினாள். என்ன நிம்மதியான சுற்றுப்புறப் பாதுகாப் புள்ள சேனை நிலம். இரு புறங்களுக்கு காட்டுத் தடி களாலும் கிளாக் கொடியாலும் வேலி அடைத்து விட்டால் பிறகு அந் நிலத்திற்கு நிகரென்ன. அந்த மண்ணைத் தொட்டுத் தடவி இலைகுலைகள் உக்கிக் கலந்த கலவையோடு கையிலே அள்ளிப் பார்த்துக் கிட்டிக்கெதிரே நீட்டியபடி ” இதைப் போல மண் இந்தப் பகுதியில் எங்கேயுமில்லை. இதிலே என்ன போட்டாலும் பயிர் குவிஞ்சு விளையும்” என்று மகிழ் வோடு சொன்னான். கிட்டியும் அந்த உண்மையை அறிவாள். அவன் வார்த்தையில் அவளை மீறிய பரவசம் கொண்ட கிட்டி “நீ நல்ல மனிசனையா” என்றாள்.

பழைய அந்த நினைவு ஒரு மரக்கிளையிலிருந்து கீழிறங்கும் பாம்பினைப்போல நெஞ்சினுள்ளே ஊருகை யில் பெரியானின் நினைவும் அரும்பிற்று. என்ன திடம் வாய்ந்த உழைப்பாளி பெரியான். வடிவுள்ள கண்ணாத்தையை அவனெடுத்தானென்றால் எல்லா ருக்கும் தானே சந்தோசம். தானும் கிட்டியை பெண்ணெடுத்தபோது எல்லோரும் சந்தோசமடைந்தார் கள் என்பதை அந்தச் சடங்கே தீர்க்கமாகக் காட்டியது. நல்ல உழைப்பாளியான தனக்கு கட்டுறுதியும் சேனை யைச் செழிக்கச் செய்பவளுமான கிட்டி எல்லா விதத் திலும் மிகவும் பொருத்தமானவள் என்பதனை இன்று வரை அத்தாட்சிப்படுத்திக் கொண்டு வருவதைப் போல கண்ணாத்தையைப் பெரியான் சேர்ந்து வாழ்ந் தால் தன்னுடைய பெருமை எவ்வளவு உயர்வடையும் என்பதை நினைத்துப் பார்க்கையிலே, அவனது நெஞ்சு விம்மிதமடைந்தது. எவ்வளவு சந்தோசமாகக் குரவைக் கூத்துகளோடும் அந்தச் சடங்கினை இரவு பகலாகக் கொண்டாடலாம், அத்தோடு ஐயனுக்கும் கிட்டிக்கும் இன்னுமின்னும் சிறப்பான பரம்பரையொன்று உண்டாகு மல்லவா? கண்ணாத்தை எப்படி வளர்ந்து விட்டாள். அவளுக்கு இனி எல்லாமே விளங்குகிற வயது. கிட்டி தன்னுடைய ஒரு வயதுக் குழந்தையை அவள் சீராட்டு வதை இரகசியமாக ஓரக்கண்ணாற் பார்த்து இவளும் அடுத்த வருஷம் இப்படி ஒரு குழந்தையை வைத்து பால் கொடுப்பாள் என நினைத்து இறும்பூதெய்தினாள் கிட்டி .

பொன்னாளோடு பெரியான் சரசமாடுவதனைக் கண்டதைப் பற்றி கிட்டி எதுவுமே ஐயனுக்குக் கூற வில்லை. ஐயனே அதன்பிறகு இரண்டு முறைகள் பெரியானைப் பற்றிய கதையினைத் தொடங்கிய போது மனதினுள்ளே ஆத்திரத்தை விழுங்கிக்கொண்டு அந்தக் கதையினை மழுப்பி மாற்றிவிட்டாள் கிட்டி, உத்தியாக் களுக்கான சடங்கு முடிந்ததன் பிறகு கண்ணாத்தைக்குச் சோறு கொடுப்பதை வைத்துக்கொள்ளலாமென்று ஒரே முடிவாகச் சொல்லி விட்டாள். ஐயனோ கண்ணாத்தைக்கு இங்கே பெரியானொருவனைத் தவிர வேறு யாருமே பொருத்தமில்லையென்று மனதினுள்ளே உறுதியான முடிவொன்றினைக் கொணடிருக்கின்றான்.

ஒரு கடுமையான உழைப்பாளி, வலிமை வாய்ந்த இளந்தாரி என்பதை விட ஒரு புருஷனுக்கு வேறு என்ன இருக்கவேண்டும் என்று கிட்டியின் தோளில் ஐயன் தட்டிக்கொண்டு கேட்ட வேளையிலே கிட்டிக்கு உடனே பெரியானின் சரசம் நினைவினில் வந்து துருத்தியது.

கிட்டி பெரியானை இப்பொழுது மனசார வெறுக் கின்றாள். அந்த இடத்திலே கண்ணாத்தையின் வடிவை வியக்காதவர் யார்? அப்படியானவளைத் தேடி வருகிற தற்குப் பதிலாக அவளுக்காக இரந்து போய் பெரியானைச் சம்மதம் கேட்பதா? அவ்வளவு துணி வாகப் பொன்னாளோடு சரசம் செய்த பெரியான் கண்ணாத்தையை அவளுக்காகத் துன்புறுத்த மாட்டானா? சேனாதியைப் போலப் பெரியானும் கெட்ட மனிதனாகவே கிட்டிக்குப் புலப்படுகிறான்.

சேனாதிக்கு வல்லியைப் பெண்ணாக்கி விட்ட போதிலும் அவளோடு அவன் சில மாதங்களே ஒன் நாக இருந்தான். நல்ல உழைப்பாளியான வல்லி அவனுடைய தொந்தரவு பொறுக்காமலேயே நோய் வாய்ப்பட்டு இறந்து போனாள். பின்னர்தான் தெரிந்தது சேனாதிக்கு ஏற்கனவே ஒரு தொடுப்பு இருந்த கதை. இதனால் எல்லோரும் சேனாதியைத் தங்களோடு ஒட்டுறவற்றவனாகவே மதித்து வரஅவனுமொரு மாட்டுக்கள்ளனாகிச் சில வேளைகளில் மிகவும் பரிதாபத்திற்குரியவனாகவும் பல சந்தர்ப்பங்களில் தாங்க முடியாத வெறுப்புக்குரியவனாகவும் அங்கே கருதப்பட்டு வருகின்றான். இது போன்ற தொரு பரிதாப கரமான நிலைமையினை எக்காரணம் கொண்டும் தனது மகள் கண்ணாத்தைக்கு வரவிடுவதில்லை என்று உறுதியான முடிவெடுத்துக்கொண்டாள் கிட்டி.

நிலவு நட்சத்திரங்களோடு குஞ்சுகளின் நடுவே மெல்ல ஒரு பெட்டைக்கோழியாக வானிலே முகிற் குவைகளை மேய்ந்தபடி மேலெழுந்து கொண்டிருந்தது. இன்னமும் ஐயனைக் காணவில்லை.

இராக்குருவியொன்று ஒரு நீளத்திற்கு கிர் என்று இரைந்தவாறு மாறி மாறி மரங்களில் உழன்று கொண்டிருந்தது. முண்டனின் குரைப்புச் சத்தம் திடீரென்று உச்சஸ்தாயில் எழுந்தது. கிட்டி வழியைக் கூர்ந்து பார்த்தாள். நிலவிலே உருவமொன்று சற்று வளைந்த நடையோடு வேகமாக வந்து கொண்டி ருந்தது. காவற் கொட்டிலிலிருந்து கிட்டி கீழே இறங்க அவ்விடத்திற்கு முண்டனை “பொபொபொ….. பொறடா…” என்று திக்கியவாறு அடக்கியபடி நீலன் வந்து கொண்டிருந்தான். கடவாய் வழியாக வழிகின்ற வெற்றிலைச் சாற்றினைத் துடைத்தவாறு அன்று இரவு பட்டங்கட்டியாருடன் ஐயன் வேட்டைக்குப் போவத னால் இங்கு படுக்க வரமாட்டான் என்ற செய்தியை நீண்ட நேரத்திற்குத் திக்கித் திக்கிச் சொல்லி முடித்தான் நீலன்.

12

பட்டங்கட்டி சின்னையா இன்று போல என்றுமே தன்னோடு இவ்வளவு பட்சமாகவும், நெருக்கமாகவும் கதைத்ததை ஐயன் அறியவில்லை. தலைமயிரை ஒட்ட வெட்டி, கறுப்பு நிறமான நீளக்கை சுவெட்டருக்குள் பொதுபொதுத்த தேகத்தை அடக்கிய குண்டுக் கரடியாய் அவர் அட்டகாசமிட்டுச் சிரித்தார். பின்னர் ஐயனுக்கு சிகரெட் பக்கற் ஒன்றைக் கொடுத்து, ”எடே ஐயா, இதைக் கொண்டு போய் அங்கை பத்தடா. மடக்கிப் போடாதை. சுருட்டை வாய்க்குள்ளை வைச்சுச் சூப்புறது போலை இதைச் செய்யப்படாது. இதெல்லாம் வெள்ளைக்காரன்ரை விளையாட்டடா… இங்கை பார்…” என்று கூறியவராய் அதே சிகரட் பக்கற்றிலிருந்து சிகரட் ஒன்றை உருவியெடுத்து, கறுத்துத் தடித்த தனது உதடு களிடையே பொருத்திக் கொண்டு, வெகு அவதானத் தோடு நெருப்புக் குச்சியைப் பற்ற வைத்து இரு முறை உறிஞ்சி புகைவளையங்களை அவன் எதிரே ஊதி விட்டார் பட்டங்கட்டி. வளையங்கள்; புகைவளையங் கள்……. மெல்லிய அந்த மணத்தினை ஏற்கனவே நுகர்ந்து, பாலத்தடியிலே சிகரெட்டை வாயில் வைத்து உறிஞ்சி அப்புறத்தை நனைத்து அதைப் புகைக்கத் தெரியாமல், அந்தத் தூளையே புகையிலைக்குள் சேர்த்து கஞ்சாவைப் போலச் சுருட்டோடு சேர்த்துக் குடித்து ஏற்கனவே அனுபவங் கண்டவன் ஐயன். எனவே பட்டங்கட்டியரின் செய்கை முறையினை வெகு அவதானமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“ஐயா, இருந்து கொள்ளடா வாறன், ஒரு விசய மிருக்குது…”

கதிரைக்குள் கிடந்த உருவத்தைத் தூக்கிச் சுமப்பவர் போன்ற பாவனையோடு எழுந்து உள்ளே போன பட்டங்கட்டி சின்னையா நிமிசங்களில் வெளியே ஒரு பார்சலோடு வந்தார். அதனை நீட்டியவராய் “டே ஐயா சரையை விரித்துப் பாரடா?” என்று கட்டளையிடும் குரலிலே கூற ஐயன் அதனை வாங்கிக் கொண்டான்.

புதுக் கடதாசிப் பை சரசரத்தது. பையினுள் மூன்று நாலுமுழ வேட்டிகள். இரண்டு சிவப்புச் சேலைகள். நீலம், பச்சை , மஞ்சளில் தடித்த துணிகள்….. ஐயனுக்கு வியப்புத் தாளவில்லை. ஆவென வாயைப் பிளந்து வெகுளித்தனமாகப் பட்டங்கட்டியைப் பார்த்தான். ஐயனின் பார்வையே குளறிக்குளறிப் பேசுவதைத் தனது சாமார்த்தியமான கண்களினால் கிரகித்துக்கொண்ட பட்டங்கட்டி அட்டகாசமிட்டுச் சிரித்தார்:

“டே ஐயா, இதெல்லாம் உனக்குத்தானடா…. கொண்டுபோய் கிட்டியிட்டைக் குடடா.”

“ஐயா …”

குந்திலே சம்மாளமிட்டவாறிருந்த ஐயன் மனநெகிழ் வோடு எழுந்து அந்தப் பையினை மார்போடு அணைத் துக்கொண்டவனாய் பணிந்த குரலிலே “ஐயா, இதென் னையா இதெல்லாம். எனக்கு காட்டுக்குள்ளை வழி தெரியாமல் நிக்கிறது போலை…” என்று தளதளத்தவன் ‘”ஐயா, இதெல்லாம் நூறு, ஐந்நூறு ரூபாய் பெறுமே…” என அடங்கிய குரலினிற் கூறி முடித்தான். மீண்டும் அட்டகாசமிட்டுச் சிரித்தார் பட்டங்கட்டி.

“உனக்கென்னடா கணக்குத் தெரியும்? ஐயா, பத்து விரலுக்குள்ளை தானடா உனக்குக் கணக்கு. நீ கணக்கு வழக்குகளை என்னோட விட்டுட்டு காரியத்தைப் பாரடா. எல்லாம் நன்மைக்குத்தான்.”

இப்படிப் பேசிக் கொண்டிருக்கையில் சற்று வளைந்த வாறு நடந்து அவ்விடத்திற்கு வந்தான் நீலன். கண் களைக் கூசிப்பார்க்கின்ற, எந்நேரமும் வெற்றிலை போட்டுக் கடவாய் வழியாக சாறு ஒழுகின்ற அவனும் இன்றைக்குப் புதிய நாலு முழத்தினைக் கட்டியிருந்தான். பட்டங்கட்டி சின்னையா நீலனைப் பார்த்து விட்டு பார்வையை இலேசாக ஐயனின் பக்கம் திரும்பி கண்ணைச் சிமிட்டினார்; வழமையாகத் தனது தரத்துக்குச் சமமானவரோடுதான் அவர் அப்படிக் கண் சிமிட்டுவது வழக்கமென்பதை அறிந்திருக்கிற ஐயனின் மனதிலே லேசான வியப்புணர்ச்சி சிறு நுரையாகி எழுந்தது.

‘ஐயா, இவன் நீலனுக்கும் வயது போய்க் கொண்டி ருக்குதடா… ஒரு பொம்பிளை இவனுக்குத் தேவை யில்லையாடா… இந்தக் காலத்தோடை அதைப் பார்த்து, முடிச்சிட வேணும்…”

நீலன் வாயைத் துடைத்தவாறு நாணினான். பட்டங் கட்டி சின்னையா பின்னர் குரலை மாற்றியவராய், ”டே நீலா, இவன் ஐயனுக்கு அதைக் கொண்டுவந்து குடடா” என்றார். நீலன் உள்ளே போய் கலயமொன்றோடு வெளியே வந்தான்.

“நல்ல சாமிப் பிட்டும், இறைச்சியும் குடுவைக் குள்ளை இருக்குது. சாப்பிடப் போறியா அல்லது கொண்டு போகப்போறியா” எனத் தொடங்கிய பட்டங் கட்டி சின்னையா “வேணாம். இங்கேயே வைச்சு சாப்பிடு. உன்னோடை கொஞ்சக் கதையிருக்குது. என்று கூறி முடித்தார். ஐயன் தலையை ஆட்டியவாறு வெளியே போய் வேப்ப மரத்தின் கீழ் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினான்.

பட்டங்கட்டி சின்னையாவுக்கு மூன்று பிள்ளைகள் இரண்டு ஆண்கள். கடைசியாகப் பெண். மூவரையும் நகரத்திலேயே விடுதியிற் சேர்த்துப் படிக்கவைத்து வருகிறார் அவர். மனைவி இறந்ததன் பிறகு வீட்டிலே நீலன், பொன்னு என்ற இரண்டு பேருந்தான் எல்லா வேலைகளையும் செய்து வருகின்றார்கள். சில சமயங் களில் மட்டும் யாராவது விருந்தினர்கள் வந்துவிட்டால் நீலனுக்கும் பொன்னுவுக்கும் உதவியாக இரண்டொரு பெண்கள் அங்கு வேலை செய்ய வந்து நாட்கணக்கிற் தங்கியிருப்பார்கள்.

கணக்கு வழக்கற்ற வயல் நிலங்கள் அவருக்குச் சொந்தமாயுள்ளன. மேட்டு நிலப் பயிர் செய்வதற்காக நான் குபேரை முழு நேரப் பொறுப்பாக விட்டிருக்கிறார். பெரிய அறை நிறைய நெல் மூட்டைகளும், களஞ்சியத் தினுள் சோளமும் நிரம்பியுள்ளன. எந்நாளிலும் புத்தம் புது மரக்கறிகளும் இறைச்சிவகையும் சந்தோசமாகவே அவருக்கு வந்து கொண்டிருக்கும். தினசரி ஒரு போத்தல் சாராயம் குடிக்காவிடில் உடம்பிலே நடுக்கம் தொட்டு விடும் அவருக்கு.

அந்தப் பகுதியிலே வசதிகள் நிறைந்த ஒரே வீடு பட்டங்கட்டி சின்னையாவுக்கே சொந்தமாயுள்ளது. அவரது வீடு ஒன்று மட்டுமே அங்கு ஓடு வேயப்பட்டு அங்குள்ள எல்லோரிலிருந்தும் அவர் வித்தியாசமானவர் என்பதைக் கூறிக்கொண்டிருந்தது. ஓரிருவர் சிறிய அளவிலாயினும் கல்வீடு கட்டவேண்டுமென்று முயற்சி களெடுத்த போதிலும் அந்த எத்தனத்திலே குறுக்கிட்டு அதனைத் தடுத்து விட்டார் சின்னையா…”அததுக்கும் தகுதி வேணுமடா, பட்டங்கட்டியை விட இங்கே பெரிய வனாராவது இருக்கிறானோ? இந்தப் புத்தி கெட்ட எண்ணத்தைக் கைவிட்டுப் பார்க்கிற முயற்சியைப் பாருங்கடா.” தன்னெதிரே பணிவாக நிற்கின்ற ஐயனின் உருவத்தைக் கண்டதும் சிந்தனை கலைந்த பட்டங் கட்டி சின்னையா “ஐயா, அந்தக் குந்திலை கொஞ்சத் திற்கு இரடா”…என்றார்.

ஐயன் வெகு பவ்வியமாக சம்மாளமிட்டு உட்கார்ந்தான்.

“ஐயா, இந்தக் கிழமைக்குள்ளை சோளன் முழுவதை யும் லொறியிலை ஏற்றி விட வேணுமடா. அதோடை ஆர் ஆருக்கு என்னென்ன விருப்பமோ அதையெல்லாம் நீ கேட்டு வந்து என்னட்டை சொன்னால் அதெல்லாத் தையும் நான் வாங்கித் தந்திடுவன்…”

ஐயன் தலையசைத்தான். கொஞ்சநேரம் கதிரைக்குள்ளே யோசனையோடு கிடந்த பட்டங்கட்டி பிறகு தயக்கம் குழைந்த குரலிலே,

“ஐயா, இந்தச் சோளன் வித்து, காசு தரவேணு மென்று யாராவது கேட்கக்கூடியவங்கள் இருக்கிறாங் களாடா…?” என்று கேட்டார்.

ஐயன் தன்னை மறந்து குபுக்கென்று சிரித்தான்: “ஐயா இதென்னையா சொல்லிறீங்கள்? காசை வைச்சு நாங்கள் என்ன செய்யிறது”.

பட்டங்கட்டி சின்னையா திருப்தியோடு நிமிர்ந்து உட்கார்ந்து தலையினைத் தடவியவாறு சிரித்தார். கண்களிலே தீட்சண்யம் ஒளிர்ந்தது. மனதினுள்ளே இலக்கங்கள் ஒன்றையொன்று பெருக்கிக்கூட்டிக்கொண் டிருந்தன. நிம்மதியான பெருமூச்சினை, உறுதியான முடி வெடுத்தமைக்கு அடையாளமாக உதிர்த்தவாறே தலையைச் சொறிந்து கொண்டிருக்கிற ஐயனை உறுத்துப் பார்த்தார் பட்டங்கட்டி சின்னையா.

“ஐயன், குந்திலை இருக்கிற அந்த வெத்திலைத் தட்டத்தை இங்கே எடுத்துக் கொண்டு வாடா…’

துளிர் வெற்றிலைகள் நிறைந்த பளபளவென்று மினுக்கப்பட்ட தட்டத்தை ஐயன் எடுத்துக்கொண்டு வந்து அவருக்குப் பக்கத்திலே மிக மரியாதையோடு வைத்தான். பட்டங்கட்டி சின்னையா ஒரு வெற்றிலையை எடுத்து காம்பையும் நுனியையும் கிள்ளி எறிந்து விட்டு வெற்றிலையின் முதுகிலே சுண்ணாம்பைத் தடவிக் கொண்டே “டே, ஐயா நீயும் வெத்திலை போட்டா…” என்றார். ஐயன் மசிந்தவாறே அவரைப் பார்க்க மீண்டும் அதட்டுகின்ற குரலிலே “ஐயா, நான் சொல்லுறன் பிற கென்னடா” என்றார்.

ஐயன் அவருக்கு முன்னாலே சம்மாளமிட்டு உட்கார்ந்தவாறே, ஒரு வெற்றிலையையும் இரண்டொரு சீவற்பாக்கையும் எடுத்து வெற்றிலையினுள் வைத்து மூடிக் கொண்டு வாய்க்குள் போடப் போகையில் பட்டங் கட்டி சின்னையாவின் குரல் ஓங்கிற்று.

“ஐயா டே, கொஞ்சம் பொறடா…”

அந்தக் குரலால் ஐயன் அதிர்ந்து போய் சுய நிலைக்கு வரமுன்னரே பட்டங்கட்டி சின்னையா “எடே ஐயா, அந்த வெத்திலையைக் காட்டடா” என்றார். ஐயன் கையை விரித்துக் காட்டியதும் கட்டளையிடுகின்ற குரலினிலே அவர் கூறினார்.

“அந்த வெத்திலையை வீசி எறிஞ்சு போட்டு நான் சொல்லுறதைக் கேளடா… ஒரு நாளும் வெத்திலை யின்ரை காம்பையும் நுனியையும் பிடுங்கி வீசாமல் வெத்திலை போடப்படாதடா. வெத்திலைக் காம்பிலை யும் நுனியிலும் விசமிருக்கதடா. உனக்குத் தெரியு மன்டல்லவோ நான் நினைச்சிருந்தேன்…”

ஐயனின் முகத்திலே பயபக்தி மூடிக் கவிந்தது” வெற்றிலையை முற்றப் பக்கமாகச் சென்று வீசி எறிந்து விட்டு வந்தான். வந்ததும் வெகு மரியாதையாக அவரைப் பார்த்துக் கொண்டிருக்க பட்டங்கட்டி சின்னையா வெற்றிலை இந்தப் பூலோகத்திற்கு வந்த கதையினைக் கூறத் தொடங்கினார்:

முன்னாளிலே பூலோகத்திலே வெற்றிலையே இருக்க வில்லை. நாகலோகத்திலேயே வெற்றிலைச் செடி காணப்பட்டது. நாகலோகத்திலிருந்து வெற்றிலைச் செடியைச் பூலோகத்திற்கு கொண்டு வருவதற்கு எண்ணிய பாம்புகளின் அரசனாகிய நாகராசன் நாகலோ கத்திலேயிருந்து செடியிலிருந்த வெற்றிலையொன் றினைப் பறித்தது. நாகராஜன் வெற்றிலையை மடித்துக் காம்பையும் நுனியையும் பற்களினால் கவ்விக்கொண்டு நாகலோகத்திலிருந்து பூலோகத்திற்கு வந்து வெற்றிலையை நாட்டியது. இப்படியே வெற்றிலைக் கொடி பூலோகமெங்கும் பரவிப் படர்ந்து மானிடர்கள் சாப்பிடும் பொருளாகி விட்டது. ஆனாலும் ஒரு பிழை பாடு நடந்துவிட்டது. காம்பையும், நுனி இலையையும் நாகராஜன் தனது பற்களிலே அழுத்திக் கொண்டு வந்த மையால் நாகராஜனின் விஷப் பற்களில் இருந்த விஷம் சிறிதளவு அப்பகுதிகளில் ஊறிவிட்டது. எனவே வெற்றிலை போடுகின்ற மானிடர்கள் அந்த விஷம் சேர்ந்த பகுதிகளைக் கிள்ளி எறிந்துவிட்டே வெற்றிலை போடவேண்டுமென நாகராஜன் விதித்திருக்கின்றான். அதைக் கடைப்பிடித்து வாழ்கிற மனிதர்கள் நாகராஜ னின் கோபத்திற்காளாகாமலும், நீண்ட ஆயுளோடும் இவ்வுலகிலே சந்தோசமாக வாழ்ந்து வருகின்றார்கள்.

ஒரு நாள் விண்ணாங்குத் தோட்டத்திலே களைப் போடு உட்கார்ந்து ஐயன் வெற்றிலை போட்டுக் கொண்டு இருக்கையிலே தனக்கு எதிரே நாகபாம் பொன்று தலைவிரித்து ஆடிக் கொண்டிருந்தது ஐயனின் நினைவில் வந்தது. நாகராஜன் தன்னை எச்சரிக்கை பண்ணத்தான் அப்படி வந்தானோ? இனிக் கவனமாயிருக்க வேண்டும்.

13

சேனாதியைப் பார்த்து விண்ணாங்கன் புன்முறுவல் பூத்ததை ஒரு அதிசயமாகவே மனங்கொண்டான் சேனாதி. விண்ணாங்கன் மிகவும் கனிவாகவே சேனாதியை அணுகிவந்து சுமுகமான குரலிலே “சேனாதி இந்தப் பகுதி மக்களுக்கு நல்ல காலம் வந்திட்டுது. நீயும் அங்கை இங்கையென்று போகாமல் பட்டங்கட்டிய ரோடை சேர்ந்தால் உனக்கொரு கரைச்சலும் வராது’, என்றான். சேனாதி புன்முறுவலும், ஆச்சரியமும் கலக்க “என்ன நீ சொல்கிறாய்” என்ற அர்த்தத்திலே விண்ணாங் கனை ஏறிட்டான். ஒல்லியனான விண்ணாங்கன், பன்றி முள்ளாகக் குத்திட்டு நிற்கின்ற தலைமயிரைக் கையினால் அழுத்தியவாறு சேனாதியைப் பார்த்தான்.

“நீ அங்குமிங்குமெனத் திரி. இப் பக்கத்தில் என்னவும் தெரியாது. இம்முறை இங்கு விளைஞ்ச சோளனெல்லாம் கட்டுப்படுகுது தெரியுமோ…. அதை அளந்து ஏத்திறதுக்கு ஆளுகளெல்லாம் தேவை. சாராயப் போத்தல் நல்லாகத் தருவார் பட்டங்கட்டி”, “அப்படியோ சேனாதி கண்களைக் கூசியவாறு எதையோ நினைத் தவனாய் எதிரே தெரிகின்ற சடைத்துப் பரந்து இலை களைச் சுமந்த புளியமரத்திலே தூங்கிக் கிடக்கின்ற காய்களைப் பார்வையினாற் தடவிக் கொண்டு முணு முணுத்தான். பின்னர் முழங்கையைச் சலிப்போடு தடவி விறாண்டிக் கொண்டான்.

“என்ன மாதிரி ஏத்துப் படுகுது”. விண்ணாங்கன் முழு விபரத்தையும் விஸ்தாரமாகக் கூறிவிட்டு “சேனாதி நீ ஒன்றுக்கும் பயப்படாமல் என்னோடை வா. பட்டங்கட்டியருக்கு சடங்குக்கு நீ. வந்தபிறகு உன்னிலை கோபமில்லை. சோளன் கட்டி லொறியிலை ஏத்திறதும் அவ்வளவுக்கு உடம்பு நோகிற வேலையில்லை . வா”, அவனுடைய கரகரத்த குரலே சேனாதியைக் கைகளாக மாறி பட்டங்கட்டி சின்னையா வீட்டுக்கு தரதரவென்று இழுத்துச் சென்றது.

புரையடியிலிருந்து எடுத்துவந்த சோளனை லொறிக் காரர் எடுத்துவந்த பெரிய படங்குச் சாக்கிலே அளந்து கொட்டித் துப்பரவாக்கிக் கொண்டிருந்தவர்களை அதட்டியவாறு அடிக்கடி கண்களின் மேலே கைவிரல் களைக் குவித்து பிரதானவீதிப் பக்கமாகப் பார்த்தவாறிருந்தார் பட்டங்கட்டி சின்னையா.

இப்படியான நீண்ட சாக்குப் படங்கிலே சோளன் மணிகள் இவ்வளவு தொகையாகக் குவிந்து கிடப்பதை இப்பொழுதான் முதற்தடவையாக ஐயனே காணுகின் றான். எத்தனை வர்ணங்கள் குழைந்த பளீரிடுகின்ற தானிய மணிகள்… இவைகளெல்லாம் நமது மண்ணிலே விளைந்தவையென பெருமிதமுற்ற ஐயனின் மனதின் ஒரு புறத்திலே அவனுக்கே தெரியாத சோகமென்று மெல்லவே பாதம் பதித்தது. இங்கே வெறுமையான புரைகள் என்பன என்றுமே இங்குள்ள மக்களால் அறியப் படாதிருந்தவை. எந்நேரமும் தானியங்கள் நிறைந்திருக்கின்ற குடிசைகளில் இனி அது சாத்திய மாகுமோ…. இந்தத் தானியங்களும் தனது வாழ்வோடு ஒன்றியிருந்த இன்று ஏதோ ஒரு தந்திரத்தினால் தன்னை யும் தனது மக்களையும் விட்டுப் பிரித்தெடுக்கப்படுவது போல வெற்றுணர்வொன்று மனதினை அழுத்தித் துன் புறுத்தியது. ஒரு வெற்றாரவாரத்தோடு அங்குள்ள பலரும் சோளனைப் பட்டங்கட்டியர் வீட்டடிக்கு மூட்டை மூட்டையாகக் கொண்டு வந்தனர். சிலர் விதைக் குரிய சோளனையே போதியளவு கையிருப்பில் எடுத்து வைக்காமல் அவதியவதியாக கைவியளமாக வாங்கிய சாராயப் போத்தில்களை நினைத்து முழுச் சோளனையும் கொண்டுவந்தபோது ஐயனுக்கு எல்லையில்லாத எரிச்சல் மனதிலுள்ளே குமிளி வெடித்துக் கெட்ட சொற் களாகப் பிரபலித்தது. அவனது எந்த நியாயத்தையும் மறுதலிக்காமலே பட்டங்கட்டி சின்னையா ஐயனைப் பார்த்து ‘ஐயா, நீயே எல்லாவற்றையும் பொறுப் பெடுத்துச் சரியாகச் செய்து கொள்” என்று நமுட்டுச் சிரிப்பு முகத்திலே மெல்லத் தெரியச் சொல்லிக் கொண்டார். சாக்குப் படங்கிலே சோளன் அள்ளித் தூற்றிக் கொண்டிருக்கையிலே நெட்டிகளும், கஞ்சல் களும் காற்றுவாக்கிலே பறந்தவாறிருந்தன. பெண்கள் சிறு சிறு குவியல்களாக சோளத் தானிய மணிகளை ஒதுக்க, பறைகளில் தானிய மணிகளை நிரப்பி சாக்கு களிற் கொட்டி அளந்து கட்டிக் கொண்டிருந்தனர் ஆண்கள்.

பெரிய பாலைமரத்தின் கீழே உள்ள முதிரைக் குத்தியில் உட்கார்ந்து பட்டங்கட்டியர் சொல்லச் சொல்ல அப்பெயரை எழுதி பெயருக்கு நேரே எவ்வளவு அவுணம் சோளனை ஒவ்வொருவரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதென்பதனை வல்லியன் அப்பியாசக் கொப்பியில் எழுதிக் கொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்திலே உதுரன், வன்னன், கம்பான் ஆகியோர் கொவ்வம் பழங்களைத் தின்றபடி களைப்பாறிக் கொண்டிருந்தார்கள்.

கிட்டியும் இங்கே நிற்கின்றாள். சுளகொன்றை வீசிக்கொண்டே அங்குமிங்குமாகந் திரிகின்ற கிட்டி கண்ணாத்தை அங்கிருத்து போவதைப் பார்த்து விட்டுப் பொன்னாளிருத்த இடத்திற்குச் சென்றாள். பொன்னாள் கலகலவென்று வேறு சில பெண்களோடு குலுங்கிச் சிரித்துக்கொண்டிருந்தவள் கிட்டியைக் கண்டதும் மௌனமாகி சோளன் தூற்றுவதிலே கவனமானாள். அலைந்து பறக்கின்ற செம்பரட்டைத் தலைமயிரும், சிறிது விரிந்த மூக்கும், ஒழுங்கில்லாத பல்வரிசையுமுடைய பொன்னாளையே ஒருகணம் வெறுப்போடு நோக்கினாள் கிட்டி.

அழுக்கடைந்த பாவாடையும், தோள் மூட்டுக் கிழிந்த மேற் சட்டையும் பொன்னாளை எவ்வளவுக்கு அவலட்சணமாக்குகின்றன. இவளிடம் எதைனைக் கண்டு பெரியான் சரசம் செய்யப் பின்னாலே திரிகிறான். வெறிபிடித்ததொரு நாயினைப் போல. கிட்டி அருவருப் போடு காறித் துப்பினாள்.

காற்று வெளியிலே மிதக்கின்ற நிறப்பூக்களாக வண்ணாத்திப் பூச்சிகளும், தும்பிகளும் அவ்விடத்திலே திரள் திரளாக பறந்து சுற்றின. சம்பன் காவிளாய்ச் செடியொன்றினை வேரோடு பிடுங்கி எடுத்து அங்கு மிங்குமாய் விசிறியடித்துத் தும்பிகளை வீழ்த்திக் கொண்டிருந்தான். அப்பகுதியில் உற்பத்தியான சோளனின் மூன்றிலொரு பங்குவரை இதுவரை சாக்குப் படங்கினிற் போட்டுச் சுத்திகரிக்கப்பட்டு மூட்டையாகக் கட்டப்பட்டுவிட்டது.

இன்று மாலை முதலாவது பகுதி சோளன் தானிய மூட்டைகள் லொறியினில் ஏற்றப்பட்டுவிடும். லொறி யின் வருகையையே பட்டங்கட்டி சின்னையா மிகவும் அக்கறையோடும், ஆவலோடும் எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறார். பார்வையின் தீட்சண்யத்திலே அவசரம் சுடர்விடுகிறது. விண்ணாங்கனும், சேனாதிபதியும் அவ் விடத்திற்கு வந்த போது பட்டங்கட்டி சின்னையா வாய்க்குள் சிரித்தவாறு “ஆ சேனாதியும் வந்திட்டியோ வா வா” என்று கூறியவராய்க் கையாட்டினார். அந்த வார்த்தைகளின் சுமூகமான அழைப்பு சேனாதியின் மனதினுள்ளே கவிந்திருந்த மூட்டத்தினைக் கலைந்து போக வைத்துப் புன்னகையினையும், நம்பிக்கையினை யும் முகத்திலே தோற்றுவித்தது. “டே சேனாதிபதி அங்கே இங்கே கள்ளத் தொழில் பார்க்கிறதை விட்டிட்டு இங்கே கொஞ்ச நாளைக்கு இரடா. சரியான வேலை இருக்குது. தங்க இடமில்லாட்டில் விண்ணாங்கனோடே நிண்டுகொள். தேவையானதை என்னெட்டைக் கேள். இண்டைக்கு இந்த மூட்டைகளெல்லாம் லொறிக்குப் போக வேணும்”. கூறிக்கொண்டு போனவர் எதிரே வந்த நீலனைக் கண்டதும் அவனை அழைத்து விண்ணாங் கனையும், சேனாதியையும் கூட்டிக்கொண்டு போய் சாராயமும், சோறும் கொடுக்கும்படி உத்தரவிட்டார்.

லொறி இன்றைக்கு முதன் முறையாக இங்கிருந்து தானிய மூட்டைகளை ஏற்றிச் செல்வதை முன்னிட்டு ஒரு சடங்கொன்றும் வைக்க வேண்டுமென்று ஐயன் ஆர்வம் ததும்ப விருப்பம் தெரிவித்தபோது பட்டங் கட்டி சின்னையா அதனை ஏற்றுக்கொண்டார். அத்தோடு தனது வீட்டின் முன்னாலேயே அன்று அங்கு வாழுகின்ற முழுப் பேரையும் கூட வேண்டு மென்றும், அவர்களுக்கு தான் சோறு கறியும் கொடுத்து வேறு சில பொருட்களும் வழங்க உள்ள தாய் அறிவித்த போது எல்லோர் மனதிலும் பூரித்த மகிழ்வினை முகத்தின் மலர்ச்சி தெரியப்படுத்திற்று. நகரத்திலிருந்து வருகின்ற போது குணசிங்காவை சேலை, வேட்டி, சீத்தைத்துணி, வெற்றிலை, புகையிலை ஆகியனவற்றை அங்குள்ளவர்களுக்கு வாங்கி வரும்படி தானெல்லாவற்றையும் கணக்குப் பார்த்து அவற்றைச் சரி செய்வதாகவும் பட்டங்கட்டி சின்னையா ஏற்கனவே கூறியிருக்கிறார்.

ஐயன் சோளன் அளக்கிற வேலையை சிறிது நிறுத்திவிட்டு, சடங்குக்கான ஏற்பாடுகள் செய்வதிலே மும்முரமாய் ஈடுபட்டிருந்தான். கிட்டி அவனுக்குப் பின்னாலேயே சிற்றெறும்பின் சுறுசுறுப்போடு அலைந்து கொண்டிருந்தாள்.

தொலைவிலே பார்வை தரித்த பட்டங்கட்டி சின்னையாவின் வாய் அவரின் ஆனந்த பரவசத்தை வெளிப்படுத்திற்று, “லொறி வந்திட்டுது.”

14

கிட்டியின் மனதினுள்ளே பொங்கிய ஆனந்தத்திறகு அளவுகணக்கே இல்லை. கண்ணாத்தை அந்தப் புதிய ஆடைகளினுள் சூரியகாந்திப் பூவைப் போல மலர்ந்து சிரித்தாள். அவளது எல்லாப் பிள்ளைகளும் ஒரே நேரத்தில் புத்தம்புதிய ஆடைகளணிந்து தோன்றியது இன்றைக்குத்தான் முதற்தடவை. புதிய சேலையையும், மேற்சட்டையையும் அணியும்படி ஐயன் தன்னை வற்புறுத்தின வேளை தன்னையறியாத நாணத்தோடு அவள் மறுத்தபோது, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஐயன் அவளது சேலையைப் பற்றி இழுத்து நிர்வாண மாக்க முயன்றபோது…

ஏணையில் கிடந்த ஒரு வயதுக் குழந்தை நித்திரை குலைந்து “ம்ம்மா…” என்று அழத்தொடங்கிய போது கண்ணாத்தை திடுமென உள்ளே வர ஐயன் காட்டுக் கத்தியை எடுத்துக்கொண்டு வெளியே போனான். சேலையைச் சரி செய்தவாறு கிட்டி சுரைக்குடுவையை எடுத்து ஓரத்தில் வைத்துவிட்டு ஏணையிலிருந்த குழந்தையைத் தூக்கி மார்போடு அணைத்துக் கொண்டாள்.

இப்பகுதியிலுள்ள எல்லாப் பையன்களும் வாயினாற் சத்தமிட்டு இரு கைகளையும் லொறியின் ஸ்ரியறிங் வீலை அசைப்பது போல பாவனை செய்து ஓடித் திரிகின் றார்கள்…. எங்குமே லொறிகள்.

அவர்களைப் பார்த்தவாறே அவர்களைப் பார்வை யிலிருந்து நழுவவிட்டவளாய் தன்னை மறந்து நினைவு களிலே தோய்ந்து கொண்டிருந்தாள், கண்ணாத்தை….

எல்லா மூட்டைகளையும் லொறியில் ஏற்றுவதற்கு முன் சடங்கு ஒன்றை மிகவும் பயபக்தியோடு நடத்திக் கொண்டிருந்தான் ஐயன். முதன் முறையாகக் குருவிக் கல்லின் எல்லா மக்களும் பட்டங்கட்டிச் சின்னையாவின் வீட்டின் முன்னாலே இன்றுதான் குழுமி நிற்கின்றார்கள்.. லொறிக்கும் மூட்டைகளுக்கும் இடையே மடை பரப்பி பழங்கள் அடுக்கப்பட்டிருந்தன. பெரிய பெரிய பானை கள் மூன்றிலே அரிசிப் புக்கை பொங்கப்பட்டிருந்தது. சோளன் தானியத்திற் செய்யப்பட்ட அப்பங்கள் வாழை யிலைகளில் நிரம்பி வருந்தது. சடங்கிலேயே மனமொன்றிப் போயிருந்த கண்ணாத்தைக்கு மனதி னுள்ளூர திடீரெனத் தன்னை யாரோ உற்று நோக்குவது போன்ற மனப்பிரமை ஏற்பட்டது. எதேச்சையாக நேரெதிரே உற்றுப் பார்த்தாள். அவளது பார்வையினை திடீரென எதிர்கொள்ள முடியாத குணசிங்கா திணறித் தத்தளித்துவிட்டு சமாளித்துப் புன்னகையினை உதிர்த்தினான்.

அவனைப் பார்த்த அவளின் மனதிலே அவன் இவ்வளவு நேரமும் தன்னையே பார்த்துக் கொண்டிருந் தான் என்ற முடிவிற்கு வருவதிலே அவ்வளவு சிரமம் இருக்கவில்லை. என்னவென்று தெரியாமல் மனம் தடு மாறித் தத்தளித்தது. அவனைப் பார்க்க நினைத்த முகம் நிமிர்ந்தபோது பார்த்துக்கொண்டிருந்த அவன் வேறெங்கோ பார்ப்பது போலப் பார்க்கவும்…. கடைசியில் இருவர் பார்வையும் சந்தித்தபோது சடங்கும் முடிவுற்றது. கிட்டி அன்று உலுப்பியது போல இன்றும் உலுப்பிய போதுதான் கண்ணாத்தை சுயநினைவுக்கு வந்தாள்.

போடு சாமித் தானியத்தை சிறு குட்டானில் அள்ளிக் கொண்டு உரலிருந்த பக்கமாகச் சென்றாள். ஐயனே முதிரை மரத்தைக் குடைந்து தயாரித்த பெரிய உரலினுள் சாமித் தானியத்தைக் கொட்டிவிட்டு உலக்கையை எடுத்துக் குற்றத்தொடங்கினாள் கண்ணாத்தை. இம்முறை குற்றுகின்ற சாமித் தானியம் உமி குறைந்ததாய் மாத்தன்மை நிறைந்திருப்பதை அள்ளிப் பார்த்துத் தெரிந்து கொண்ட அவள் இன்றைக்கு ஐயன் சந்தோச மாகச் சாப்பிடுவான் என்பதை மனதினுள்ளே சித்திர மாகக் கண்டு புன்னகைத்தாள். இன்று நல்ல மானிறைச்சி வந்திருக்கின்றது. ஐயன் இறைச்சியையும், சாமிப் பிட்டை யும் மிகவும் விரும்புவான். காலையில் புறப்படுகின்ற போது இன்று கொஞ்சம் தாமதமாகவே திரும்பிவருவ தாகவும் சொல்லிப் போயிருக்கின்றான். இப்போது மிகவும் உற்சாகத்தோடும் கலகலப்போடும் திரிகின்ற ஐயனைப் பார்த்து மனதினுள்ளே பூரிப்புக் கொண்டிருக் கிறாள் கிட்டி. திடீரென்று முண்டனின் குரைப்புச் சத்தம் ஓங்கிக் கேட்டது. கிட்டி நெடும்பரண் பக்கமாகப் பார்த்து அவ்விடத்தை நோக்கிச் சென்று நெடும்பரணில் ஏறி நின்று எதிரே விரிந்து கிடக்கின்ற வழியைப் பார்த்தாள்.

நெட்டி துருத்தியுள்ள சோளஞ் சேனைகள், மொட்டை மரங்கள், கொடிகள் ஆகியவற்றிலே பார்வை விழுந்தது. பூக்கள் மூடிய வில்வ மரத்தின் அருகாக ஐயன் இன்னுமிருவரோடு நடந்து வந்து கொண்டிருந் தான். ஐயனுக்குப் பக்கத்தில் வளைந்து வளைந்து அவசரமாக வருபவன் நீலன். நீலனுக்கு அருகாக சுற்றுப் புறத்தினை வேடிக்கை பார்த்தவாறு வருபவனை கண் களை இடுக்கி உற்றுப் பார்க்கிறாள் கிட்டி, அந்த முகத் திற்குரியவன் குணசிங்கா, வெள்ளை உடையோடு ஐயனோடு வருகின்ற குணசிங்காவைக் கண்டதும் கிட்டியின் மனம் அந்தரமடைந்து பரபரத்தது. இந்தப் பெரியமனிதன் எங்கள் பகுதிக்கு வந்த பின்னர்தான் எவ்வளவு மாற்றங்கள் வந்துவிட்டன. பட்டங்கட்டி சின்னையாவின் வீட்டிலே சேகரிக்கப்பட்ட சோளந் தானியம் மூன்று தடவைகளாக லொறிமூலம் ஏற்றி அனுப்பப்பட்டுவிட்டது. இந்தப் பகுதியின் வாழ்க்கை முறையிலே வித்தியாசங்கள் பூக்கத் தொடங்கியதைக் கண்முன்னாலேயே காணமுடிகின்றது.

“இங்கையுள்ள எல்லாருக்கும் சேலை சட்டைகளை அள்ளியள்ளி சாமி மாதிரிக் கொடுத்திருக்கின்றார்… நல்ல வெள்ளையான ஆள். இவரெதுக்காக இந்தப் பக்கமாக வரவேணும்!” மனம் துணுக்குற்றது. ஒருவேளை இங்கை தான் வருகிறாரோ.’

நெடும்பரணில் நின்ற கிட்டி இப்பொழுது அவர்கள் தனது குடிசைக்கே வருகிறார்கள் என்பதனை உணர்ந்து கொண்டு விறுவிறுவென்று கீழே இறங்கிக் குடிசைக் குள்ளே சென்றாள். மனம் பரபரத்தது அவளுக்கு.

15

குணசிங்கா தலையை வாரிவிட்டு தன்னை யாரோ பார்க்கின்ற உணர்விலே பின்னே திரும்பிய பொழுது ஐயன் நிற்பதனைக் கண்டு பரபரப்புற்றவனாக என்ன விஷயம் வந்து நிற்கிறது என்று கேட்டான்.

நேற்று மாலையில் ஐயனின் குடிசைக்குச் சென்ற போது ஐயனின் மனைவியும், பிள்ளைகளும் அவன்மீது காட்டிய மரியாதை குண சிங்காவின் மனதினை பெரிதும் கவர்ந்திருந்தது. ஆயினும், கண்ணாத்தை தன் பாட்டிற்கு சின்னக் குழந்தையினைத் தூக்கிக் கொண்டு தன்னைக் கண்டதும் வெளியே போனது ஏதோ ஒரு ஏமாற்றத் தினை அவனது நெஞ்சினுள்ளே திடீரென நிறைவித்தது. ஆயினும் சமாளித்துக் கொண்டு சரளமாக அவர்களோடு பேசிவிட்டு கிட்டி மிகவும் வற்புறுத்திக் கொடுத்ததேன் போத்தலையும் கொண்டு பட்டங்கட்டி சின்னையா வீட்டிற்குத் திரும்பினான் குணசிங்கா.

“நேற்றுச் சொன்ன விசயமாக வந்தனான். பட்டங் கட்டி ஐயாவும் வெளியிலை போயிட்டார். அதுதான் வந்திருக்கிறேன்.”

தன்னைச் சுதாரித்துக் கொண்டே குணசிங்கா ஐயனைப் பார்த்தான். “என்ன சொல்லுங்கோ?”

ஐயன் சொன்னான்:

என்னோட சின்னவன் சம்பன் உங்க லொறியிலை வேலைக்கு வரவேணுமென்று அழுகிறான்… ஐயா அவனைச் சேர்க்க முடியுமோ… எனக்கு காசெல்லாம் தரத் தேவையில்லை…… உங்களோடையே அவன் நிண்டிடட்டும்…”

குணசிங்கா கொஞ்ச நேரம் யோசித்தான். “இதைப்பற்றி நம்ம முதலாளியோடை கதைச்சுத் தான் சொல்ல முடியும். அடுத்த கிழமை சொல்லுவன்…”

“நல்லது ஐயா…” குணசிங்கா சிகரட் பாக்கட் ஒன்றை எடுத்தான். ஐயனைப் பார்த்துப் புன்னகை செய்தான்.

“இது உங்களுக்குத்தான் …”

ஐயன் கூச்சப்பட்டு நெளிந்தான். “எனக்கு இதெல்லாம் எதுக்கு?”

“இல்லை…. நீங்க கொண்டு போங்க…” ஐயன் சிகரெட் பாக்கட்டை வாங்கிக் கொண்டான். பிறகு பணிவான குரலிலே குணசிங்காவைப் பார்த்துக் கூறினான்:

“ஐயா, சம்பனை நான் இங்கை அனுப்பிவைக் கட்டுமா?”

குணசிங்கா சற்று நேரம் எதையோ சிந்தித்து விட்டு இலேசான முகமலர்ச்சியுடன் அவனைப் பார்த்தான்.

“சரி அனுப்பி வையுங்க…”

மூன்று நான்கு முறை சம்பன் குணசிங்காவிடம் வந்து போய் விட்டான். உருண்டு திரண்ட தேகக்கட்டு டைய அவனைக் கண்டால் குணசிங்காவுக்கு ஒரே சிரிப்பாயிருக்கும். சம்பனோடு குணசிங்கா அதிகமாகப் பேசுவதெல்லாம் கண்ணாத்தையைப் பற்றித்தான். கண்ணாத்தையைப் பற்றி அவன் பேசத் தொடங்கி விட்டானென்றால் இலேசிலே நிறுத்திக் கொள்ள மாட் டான். கனவுலகில் சஞ்சரிப்பவன் போல முகம் தோற்றங் கொடுக்கும்.

சம்பனுக்கு என்ன பிடிக்குமென்று ஒரு நாள் குணசிங்கா அவனிடம் கேட்டான். சம்பனுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தலையைச் சொறிந் தான். அடுத்தமுறை சம்பனுக்கு குணசிங்கா விசில் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தான். அந்த விசில் மிகவும் அதிசயப்பொருளாக குருவிக்கல்லுக் கிராமத் தவரால் வியந்து புகழப்பட்டது.

இன்னொருநாள் மெல்லிய குரலிலே சம்பனைப் பார்த்துக் கேட்டான் குணசிங்கா:

“கண்ணாத்தா என்னைப் பற்றி எதுவும் பேசுற தில்லயோ ?”

சம்பனின் உருண்ட முகத்திலே பிரகாசம் மலர்ந்தது. சிரித்துக் கொண்டே சொன்னான்: “அவ பேசமாட்டா. ஆனால் என்ன சொன்னாலும் கேட்டுக் கொண்டிருப்பா.

அதுவும் நான் சொன்னா அவவுக்கு கேட்டுக் கொண் டிருக்க நல்ல விருப்பம்…”

“எனக்கு ஒரு காரியம் செய்வியா சம்பா?” சம்பன் வியப்போடு அவனை ஏறிட்டான்.

“சொல்லுங்க ஐயா…”

“சம்பா…. கண்ணாத்தைக்கு கொஞ்சம் சாமான் தருவன் கொடுத்து விடுவியா…”

“சரி ஐயா ….”

“ஆருக்குந் தெரியாமல்….”

“சரி ஐயா…” தயக்கத்தோடு சொன்னான் சம்பன்.

“சம்பனுக்கு நான் இதைவிடப் பெரிய விசிலாகத் தருவன்…”

சம்பனின் முகம் சந்தோஷத்தால் பூரித்தது.

“சரி ஐயா …”

உள்ளேயிருந்து பெரிய பார்சலொன்றைக் கொண்டு வந்தான் குணசிங்கா.

சம்பா உனக்கு வேறை என்ன வேணும்?” தலையைச் சொறிந்து கொண்டான் சம்பன். “எனக்குத் தெரியாது…. நீங்க வாங்கி வாருங்கய்யா”

பார்சலை சம்பனிடம் மிகக் கவனமாகக் கொடுத்தான் குணசிங்கா.

“ஆருக்கும் தெரியக் கூடாது. எனக்கு திரும்பி வந்து சொல்ல வேணும்…”

“சரி ஐயா… நான் அவுக்கெண வந்திடுவன்.”

காட்டுப் பன்றி போல போய்க் கொண்டிருக்கிற சம்பனைப் பார்த்துச் சிரித்தான் குணசிங்கா. அவனது மனம் இப்போது கனத்துப் போய் பரபரப்புற்றிருந்தது.

கொஞ்ச நேரம்தான் ஆகியிருக்கும். சரசரப்புக் கேட்டது. குணசிங்கா வெளியே வந்தான், சம்பன் கொடுத்து விட்ட பார்ஸலோடு நின்றிருந்தான். மனம் பகீரென, வார்த்தைகள் குளறின குணசிங்காவுக்கு.

“என்ன சம்பா?”

பார்சலை நிலத்திலே வைத்தான் சம்பன், விழியில் வெறுப்போடு.

“இதெல்லாம் வேணாமாம்…”

வியர்வையைத் துடைத்துக் கொண்டான் குணசிங்கா .

“யார் சொன்னது?”

“அக்காள்…”

திடுக்கிட்டு விட்டான் குணசிங்கா. சிறிது நேர மௌனத்தின் பின் அவனைப் பரிதாபமாகப் பார்த் தான். சம்பனின் முகம் பயந்து அதைத்து கண்ணீரால் நனைந்திருந்தது. பயந்த முகத்திலே எரிச்சலும்.

“ஆருங் காணவில்லையோ?”

“கண்டது…”

“ஆர்?”

“எல்லாரும்….”

சம்பனை ஓங்கி அறைய வேண்டும் போலிருந்தது குணசிங்காவுக்கு. எரிச்சலும் ஆத்திரமும் ஏறிட அவனைப் பார்த்தான்.

“ஆராவது என்னைத் திட்டினாங்களா?”

“திட்டினாங்கள்…”

“ஆர்?”

“எல்லாரும்….”

“எப்பிடி?…”

சம்பன் அவனை நிமிர்ந்து பார்த்தான். வெறுப்பும் கவலையும் தொனித் தன கண்களில். தன்னுள் எதையோ நினைத்துக் கொண்டு திடுமென்று சொன்னான் அவன்.

“இனி நான் உன்னட்டை ஒரு நாளும் வரமாட்டன். நீ கெட்ட ஆள்…”

கைக்குள் பொத்திவைத்திருந்த விசிலை அவன் காலடியிலே வீசி எறிந்தான் சம்பன்.

“உன்னை ஆடு அடிச்சுக் கொல்லுகிறது மாதிரிக் கொல்ல வேணுமடா”

சம்பன் சொல்லி முடித்ததும் குழிமுயலாய் அங்கி ருந்து பறந்து போய் விட்டான்.

ஸ்தம்பித்துப் போய் நின்றான் குணசிங்கா.

16

காயான் மரத்தினைத் தாண்டிப் போய்க் கொண்டிருக்கை யிலே ஐயனுக்கு திடீரென்று வித்தியாசமான மோப்பம் மணத்தது. நின்றான். அப்படியே பதுங்கிப் போய் வைரித்த தேக்கமரத்திற்கருகேயுள்ள அடர்ந்த கும் முனைச் செடிப் பற்றைக்குப் பின்னாலே பதுங்கிக் கொண்டான்.

அவனுக்கு நேரெதிரே ஆளளவு உயரத்திலே புடைத்து நின்ற கறையான் புற்று. அதனருகே நன்றாகப் பருத்த கரடியொன்று. தூரத்திலுள்ள மலைக் குகை யிலிருந்து தான் அது வந்திருக்க வேண்டும். அந்த மலை யருகிலேதான் சிவபெருமானும், பார்வதி தேவியும் கொஞ்சக் காலமிருந்ததாக பட்டங்கட்டி சொல்லியிருந் தார். அந்த மலைக் குகைக்குப் பக்கத்திலுள்ள நீர்ச் சுனையை பார்வதிதேவி நீராடுவதற்காக சிவபெருமானே உண்டாக்கிக் கொடுத்தாராம். நீர்ச்சுனைக்குப் பக்கத் திலே பெரிதாக வளர்ந்த எந்நேரமும் பூச்சொரிந்து கொண்டிருக்கிற நாகலிங்க மரம். அதற்குக் கீழேதான் சிவபெருமானும், பார்வதி தேவியும் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருப்பார்களாம். அந்த இடத்திலே இதனால் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் குருவிக்கல்லு மக்கள் சடங்கு வைப்பதுண்டு.

நாகலிங்கசாமியை இப்போது ஐயன் மனத்தினிலே நினைத்துக் கொண்டு எச்சிலைப் பெருவிரலால் தொட்டு நெற்றியிலே வைத்தான்.

கரடி மிக அபாயகரமான பிராணி. மனித மணத்தை – நுட்பமாக உணர்ந்து கொண்டுவிடும். மனிதனைக் கண்டால் அவனைத் தள்ளி வீழ்த்திக் கட்டிப் பிடித்துக் கொண்டு கடித்துவிடும். நகங்களால் பிறாண்டிக் கிழிக்கும். உர் உர்ரென்று உறுமியவாறு கால்களால் அறைந்தே கொன்றுவிடும். மலையனை அப்படித்தான் தொட்டாற் சிணுங்கிப் பற்றையடியினால் ஒரு நாள் கரடி யொன்று அடித்துக் கொன்று விட்டது.

கரடி இப்போது கறையான் புற்றிலேயே கவனமாயி ருந்தது. கால்களால் கறையான் புற்றினைத் தட்டிப் பார்த்தது. பின்னர் தனது பலங்கொண்ட மட்டும் காலால் அறைந்து புற்றினைத் தகர்த்தது. அதன் வாய்ப் புறம் நல்ல வெள்ளையாய்த் தெரிந்தது. கறையான் புற்றின் மேற்புறமாய் தனது அகன்று பருத்த உதடுகளைக் கோணிப் பிதுக்கியவாறு வைத்து கரடி உறிஞ்சத் தொடங் கியது. கறகறவென்ற சத்தம் மட்டும் இப்போது கேட்டுக் கொண்டிருந்தது.

மனதுள் சிரிப்பு பொங்கியது ஐயனுக்கு. தேங்காய் அளவிலான எறும்புகளும், கறையான்களும் வயிற்றி னுள்ளே போய் கரடிக்கு அவதி கொடுக்காதா என நினைத்தான். மீண்டும் சிரிப்புச் சுழித்தது. வாயைப் பொத்திக் கொண்டே குனிந்தான்.

கையளவு தூரத்திலே ஓணான் ஒன்று அவனைப் பார்த்தபடியிருந்தது. ஏனோ தெரியாது. இவனுக்கு ஓணானைக் கண்டால் பிடிக்காது. கல்லால் குத்தி தலையைச் சப்பளித்து விடுவான். இப்போது எதுவுமே செய்ய முடியாது. அவன் மீண்டும் நிமிர்ந்தான்.

புற்றிலிருந்த வாயை எடுத்துக் கொண்டு கரடி இப் போது நிமிர்ந்தது. அதன் வாய்ப் புறமும், நெஞ்சுப் பகுதி யும் வெள்ளையாயிருந்தன. வாயிலே காலை வைத்து, வாயில் படிந்திருந்த புற்றுமண்ணைத் தட்டி விட்டு ஆயா சமுற்றாற் போல உட்கார்ந்து ஒருக்களித்து மரத்தோடு சாய்ந்து கொண்டது.

தான் நல்லாக மாட்டிக் கொண்டதை உணர்ந்து கொண்டே தலையில் கையை வைத்தான் ஐயன்.

கரடி பயங்கரமான பிராணி மட்டுமல்ல. வேடிக் கையான பிராணியும். புத்திசாலியான ஜீவனும். மிருகங் களிலேயே பார்த்தாலே சிரிப்பு வருவது கரடியைத்தான். அது சாதாரண வேளையிலேயே போதை மயக்கமுற்ற வனைப் போலவே துவண்டு ஆடி ஆடி அங்குமிங்குமாய் அசைந்து நடந்து போகும். நல்ல கள்ளு வெறியேறினால் ஐயனும் ஒரு கொழுத்த கரடி போல என்றுதான் கிட்டி சொல்லுவாள். ஐயன் மோகவெறியோடு அவளை இறுக்கிக் கட்டிக்கொண்டு அணைகையில் வெறியேறிய குரலிலே, “நீ சரியான ஒரு கரடி… அப்பப்பா …”என்று கிசு கிசுப்பாள் கிட்டி. அப்போது அவனுக்கு மேலும் ஆவேசம் வந்து விடும். அவளோ அதற்கே எதிர்பார்த்திருப்பவள் போல, அவனுள்ளே ஐக்கியமாகிக் கரைந்து போய்விடு வாள், முனுகல ஒலிகளோடு.

ஐயன் ஓணானைப் பார்த்தான். அதைக் காண வில்லை. ஆனால் கும்முனை இலையொன்றில் அடர்ந்த மயிருள்ள கொழுத்த சிலந்தி கால்களைப் பரப்பிக் கொண்டிருந்தது. என்ன கஷ்டம் வந்தாலும் சிலந்தியை யும், பசுவையும் கொல்லவோ கஷ்டப்படுத்தவோ கூடாது. சிலந்தி தன் பாட்டிலேயே போய் விடக் கூடிய அற்பப் பிராணி. அதைக் கண்டால் நன்மையே வரும்.

நிமிர்ந்தான்.

கரடி இப்போது கறையான் புற்றினை மீண்டும் உறிஞ்சத் தொடங்கியிருந்தது. ஐயனுக்கு அலுப்பாய் வந்தது. சின்னக் கரடியாய் இருந்தால் ஏதாவது செய்து கலைத்துவிடலாம். இதுவோ மூன்று மனிதனுக்கு சமமான கரடி.

கரடிக்கும் தனக்கும் ஒரு போதும் சண்டை எதுவும் ஏற்படாமல் போனதற்கு கரடியைப் பற்றி தான் நன்றாக அறிந்திருந்ததே காரணம் என்பதையிட்டு தனிப் பெரு மையிருந்தது ஐயனுக்கு. ஐயனுக்கு கரடியைப் பற்றி சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுத்தவன் அக்கலி.

– அக்கலிக்கு சதாநேரமும் கரடிகளைப் பற்றித்தான் பேச்சு. அதனாலே அவனுக்கு கரடியன் என்ற பெயருமுண்டு.

அக்கலியன் நன்றாகப் பழங்கள் சாப்பிடுவான். அதற்கும் கரடிகள் தான் அவனுக்கு உதவி, காட்டில் எங்கே பழம் பழுத்திருந்தாலும் கரடிக்கு அது தெரியும்.

முகர்ந்து முகர்ந்து அந்த இடத்திற்குப் போய் விடும். அடர்காட்டுக்குள்ளே போனால் அக்கலிக்கு கரடிகளின் அடிச்சுவடு தேடி அலைவதுதான் வேலை. கரடியை மணந்தே பிடித்து விடுவான் அவன்.

இரண்டு நாளாய் இரவு பகலாய் நடந்து காடு மாறிய கரடியைப் பின் தொடர்ந்திருக்கின்றான் அக்கலி. அப் போதோன் கரடியைப் பற்றி தான் மேலும் பல புதிய விஷயங்களைத் தெரிந்து கொண்டதாக ஐயனிடம் சொல்லியிருக்கின்றான்,

கரடிக்கு மரத்தில் ஏறத் தெரியும். இறங்கத் தெரியா தாம். தொப்பென்றுதான் கீழே குதிக்குமாம்.

‘உனக்குத் தெரியுமாடா, குருவியன் காட்டுக் குள்ளாலை உடும்பு தேடி வாறபோது, மரத்திலை இருந்த கரடி திடுமென அவனுக்கு மேலை பாய்ஞ்சு ஆளையே முடிச்சுப் போட்டுது…”

“பாவம்…. “கரடியைக் கிட்டக் கண்டு விட்டால் என்ன செய்ய வேணும் உனக்குத் தெரியுமோ?”

“தெரியாதண்ணே ….”

அக்கலி சிரித்தான். “பேசாமல் குப்புற அப்படியே கிடந்திட வேணும். அது உன்னை மணந்து பாத்திட்டு நீ செத்துப் போய் விட்டாய் என்று நினைத்து விட்டு உன்னை சாக்காட்டா மல் விட்டிட்டுப் போயிடும்…”

சிறிது நேரம் யோசித்து விட்டு தொடர்ந்து கூறினான் அக்கலி:

“ஆனால் எப்படியிருந்தாலும் கரடி தன்னை ஏமாத் திறதெண்டு நினைச்சால் பிறகு ஆரையும் விட்டு விடாது. சரியான வெறிபிடிச்ச மிருகம்…”

“அடேயப்பா …”

“தேனெடுக்கிறது எப்படி என்றதை நாங்க கரடி யிட்டையிருந்து தான் தெரிஞ்சு கொள்ள வேணும்…. எந்தத் தேன் கூட்டையும் கரடி முரட்டுத்தனமாக அடித்துப் பிடுங்கிக் குடித்து விடும். கொட்டிட வருகிற தேனீக்கள், கரடியின் ரோமத்துள்ளை எதுவும் போய் என்னவும் செய்ய முடியாது. தேனீக்கள் எவ்வளவு கொட்டினாலும் உசுப்பிவிட்டு தேனடை களை உறிஞ்சிக் குடித்து விடும் கரடி. அதற்கு எதிலுமே திகட்டுமள விற்குத்தான் குடிக்க வேண்டும். பல வேளை களிலும் அதற்குப் போதை தலைக்கேறிவிட மரக் கொம்பரிலிருந்து தலை கீழாக குப்புறவாக விழுந்து அப்படியே கொஞ்ச நேரத்திற்குக் கிடக்குமாம் கரடி, அப்படிக் கிடந்த கரடி யொன்றின் கடவாய்ப் பல் ஒன்றினை தான் பிடுங்கி வந்ததாக ஒரு பல்லினை நெடு நாட்களாக காட்டி வந்திருக்கிறான் அக்கலை. பின்னர் அதை தனது மனைவியின் கழுத்திலே நாரில் கட்டி அணி வித்து விட்டான். அதிலே அவளுக்கு தனிப்பெருமை.

காடி இப்போதுமெல்ல உறுமிக்கொண்டே காலால் கறையான் புற்றின் அடிப்புறத்தைத் தட்டுவதைக் கண் டான் ஐயன். இனி எல்லாம் முடிந்து விட்டது என்பது அந்த அடியின் அர்த்தம். அந்த அடிச்சத்தம் ஓய குழி முயல் ஒன்று கும்முனைச் செடியைத் தாண்டிக் கொண்டு பாய்ந்து சென்றது.

கரடி அங்குமிங்கும் கால்களை ஊன்றிக் கொண்டே குர்குர்ரென்று சத்தத்துடன் அங்கிருந்து போகத் தொடங் கிற்று .

ஐயன் கும்முனைச் செடிப் பற்றைக்குள்ளிருந்து ஒற்றையடிப் பாதையோரமாக நடக்க ஆரம்பித்தான்.

கிளாக் கொடியிலே மெதுவாக வயிற்றில் கவ்விய குட்டியோடு தாவிப் போய்க் கொண்டிருந்தது. கருங் குரங்கு. அந்த அதிர்விலே கானாக் கோழிகள் வீரிட்டுக் கொண்டு சிதறிப் பறந்தன.

காட்டுப் பூக்கள் தேக்க மரத்தோடு சொரிந்து கிடந் தன. அந்த மணத்தின் கமகமப்பிலே சிறிது நேரம் லயித்துப் போய் நின்றான் ஐயன். திடீரென எட்டி எட்டிப் பார்ப்பது போல மஞ்சள் வண்ணத்திலே செழுமையாக தலையாட்டிக் கொண்டிருக்கின்ற காட்டுச் செவ்வந்திப் பூக்கள்-ஐயனின் மனதினிலே நினை வொன்றைப் பளிச்சிட்டன.

சோளன் மணிகளையும், தேனையும் மட்டுமல்ல குருவிக்கல்லுக்கு வந்திருந்தோர் விரும்பிக் கேட்டது. சூரிய காந்திப் பூ விதைகளையும் தேவையென்று கேட்டி ருந்தனர்.

ஐயன் விறுவிறுவென்று அந்தப் பூக்களின் பக்க மாகச் சென்றான். அவனுக்கே அதிசயம் தாளமுடிய வில்லை .

எத்தனை சூரிய காந்திப் பூக்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு குழந்தையின் தலையளவு பரிமாணத்தில், மஞ்சள் வண்ணம் கண்ணைப் பறித்தது. அவற்றின் நடுவே விழுந்து உருண்டு புரள வேண்டும் போல ஐயனின் மனதினுள்ளே சந்தோஷம் ஊறிப் பெருகிற்று. ஒரு பெரிய பூவைப் பறித்து அதை கையினால் சுழற்றிக் கொண்டே உரத்த குரலிலே பாடத் தொடங்கினான். தலையும் பாட்டுக்கேற்ப ஆடிற்று.

அக்கலையோ அக்கலையோ பூவு பாரு பூவு பார் அடுத்த மரப் பக்கமாடு பூவு பாரு பூ பார் இக்கலையோ இக்கலையோ இந்தப் பூவு பார் இசும்பி மாரு போலப் போல இந்தப் பூவு பார் இசும்பி மாரு போலவல்லா இந்தப் பூவு பார் இசும்பி அடி இந்தப் பூவை மாரில் போடு வா இசும்பி அடீ இந்தப் பூவை மாரில் போட வா

இசும்பி உனக்கு நாகலிங்கப் பூவுதரலாம் இசும்பி மாரில் நாகலிங்கம் பூவு தரவா இசும்பி வாடி இசும்பிவாடி இந்தப் பூவு பார்

இசும்பி வந்தா இந்தப் பூவு… இந்தப் பூவு தா… சூரிய காந்திப் பூவின் இதழ்கள் அவன் பூவைச் சுழற்றிய வேகத்திலே தனித்தனியாய் கழன்று இப்போது காம்பு மட்டுமே எஞ்சியிருந்தது. சுழற்றுவதை நிறுத்தி விட்டு, ஐயன் அந்த இடத்திலிருந்த இரு குறிஞ்சா மரங்களினை தொடுத்து கிளாக்கொடியை நீளவாக்கில் மூன்று பட்டாக அடையாளம் கட்டி விட்டு அங்கிருந்து குருவிக்கல்லுப் பக்கமாக நடக்க ஆரம்பித்தான்.

கிட்டி கவலையோடு உட்கார்ந்திருந்தாள். குணசிங்கா சிலவேளைகளில் தங்களிடமிருந்து சோளன் வாங்குவதை நிறுத்திக் கொண்டு விடுவானோ என்ற அச்சமும் மன தினுள் கனத்துக் கொண்டிருந்தது. கண்ணாத்தைக்கு சீக்கிரமே சோறு கொடுத்திட வேண்டுமென்றுதான் சதா அவள் சிந்தனை. அவளுக்காகப் பார்த்து ஒதுக்கிய காணி நிலமும், இன்னும் கன்னியாகவே இருக்கின்றது. சோளன் விதையை ஊன்று முன் கண்ணாத்தைக்கு சோறு கொடுத்து சடங்கை முடித்து விட வேண்டும்.

சுரைக் குடுவைகளின் திடுமுடென்ற உரசல் சத்தம் கேட்டதும் பாலைக்குற்றியிலிருந்து கிட்டி எழுந்தாள்.

எதிரே கண்ணாத்தை சுரைக்குடுவைகளுடன் வந்து கொண்டிருந்தாள். அவளின் பின்னாலே தலையில் பெரிய பூசணிக்காயோடு சம்பன். அவனுக்கு இரண்டு புறங்களிலும் வாலைக்குலைத்துக் கொண்டே முண்டனும், சுணங்கனும்.

கண்ணாத்தை அடர்ந்து கருத்த புருவப் பக்கத்துக்கு மேலாக கையை உயர்த்தி பெருவிரலால் வியர்வையைச் சுண்டியெறிந்தாள். முகத்திலே கவலை மிதந்திருந்தது. சுரைக் குடுவைகளை பாலைக் குற்றி ஓரமாக ஒதுக்கமாக வைத்து விட்டு கிட்டிக்கு அருகாக வந்தாள்.

“…புளியடிப் பக்கமா அனித்தையும், கசுவம் அக்கா வும் ஓடுறாங்க… பொன்னாளக்கா சாகக் கிடக்கிறாளாம். புளியடிமுனி பிடிச்சு அவளை உலுப்பிக் கொண்டிருக்கு தாம்….”

“என்ன?” அதிர்ந்து போய்க் கேட்டாள் கிட்டி. “பாவம், தாயில்லாதவள். – நானொருக்கால் பார்த்துக் கொண்டு வாறன்…சடங்கு வைச்சால் பேயெல்லாம் ஓடிப் போயிடும். கண்ணாத்தா… நீ பிள்ளையைப் பார்த்துக் கொள்…”

பதிலுக்கு நில்லாமல் விறுவிறுவென்று அங்கிருந்து விரைந்து போனாள் கிட்டி,

ஐயனும் இன்னும் ஐந்து பேரும் காட்டினுள்ளே பதுங்கிப் பதுங்கி அலைந்து திரிந்தனர். அவர்களின் பின்னே மோப்பம் பிடித்தவாறே சென்று கொண்டி

ருக்கிற எட்டு வேட்டை நாய்கள்.

“ஐயா… நல்ல பதமான காட்டுப் பன்றி வேணு மெண்டு ஏஜண்டுத் துரை ஆளனுப்பியிருக்கிறாரடா… இந்த முறை அவர் கட்டாயமாக உனக்குத் துவக்குத் தந்திடுவார்… நல்ல பன்றியாய் விடியற்காலமை கொண்டு வந்திட்டா…

பட்டங்கட்டி சின்னையரின் கட்டளையை அப்படியே ஏற்றுத் தலையசைத்தான் ஐயன், பட்டங் கட்டியர் நீலனைப் பார்த்து அதட்டுகிறாற் போல, “எடே நீலா, ஐயனுக்கு ரெண்டு சாராயப் போத்தல்கள் கொண்டுவந்து கொடடா” என்று சொல்லி விட்டு, சாராயத்தைக்குடிச்சுவிட்டு வீட்டிலையே படுத்திருக்கிற தில்லை. காட்டிலைதான் குடிக்க வேணும்… அதுவும் கொஞ்சங் கொஞ்சமாய்… பிறகு காட்டிலை வெறி போட் டிட்டுப் படுத்தால் அலியன் யானைகளோ, கரடியோ மிதிச்சுக் கொன்று போடும்…” எனச் சொல்லி முடித்தார்.

ஐயனுக்கு குபுக்கென்று சிரிப்பு வந்தது. சிரிப்பை அமுக்கிக் கொண்டே ,”சரி ஐயா” என்றான்.

பிறகு தன்னுள் தானே நினைத்துக் கொண்டே கூறினான்.

“ஐயா… பன்றி வேட்டை என்றால் கொஞ்சம் லாம் பெண்ணையும், சீலைத் துணிகளும் கொண்டு போறது நல்லது…”

“என்ன வேணுமோ அதெல்லாம் தந்திடுவன்… நீ காலமை பன்றியைக் கொண்டு வந்தால் சரி. அல்லாமல் இந்தப் பக்கம் நீ வரக் கூடாது…”

“சரி ஐயா….”

ஐயன் கிட்டியிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான், புறப்படுகையில் குழிமுயலின் காலடையாளங்கள் குளக் கரைச் சேற்றடிப் பக்கமாகச் சிதறியிருந்தன. குழி

முயலின் காலடையாளங்கள் கண்டு போனால் போகிற காரியம் அனேகமாக நிறைவேறிவிடுமென்பது குருவிக் கல்லின் மரபானதால் ஐயனுக்கு அளவற்ற சந்தோஷம் உண்டாயிற்று.

“நாகசாமியே… எனக்கு பன்றி கிட்ட வேணும்….. அப்பத்தான் எனக்கு துவக்கு வரும் சாமி. துவக்கு வந்தால் கட்டாயமாக சாமிக்கு நான் சடங்கு வைச்சுத் தருவன். இரங்கு சாமி…”

ஆகாயத்தைப் பார்த்துக் கை கூப்பினான் ஐயன். …வனத்தான் ஐயனை மெதுவாகச் சுரண்டினான். கிழக்குப் பக்கமாகத் தெரிகின்ற அரிகண்ட மரத்தின ருகில் உள்ள குளத்திலே ஏழெட்டு பன்றிகள் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தன. கொழுத்த, ஒன்றுக் கொன்று இளமையான காட்டுப் பன்றிகள்.

ஐயன், அவை நிற்கின்ற இடத்தின் பின்னணியினை நோட்டம் விட்டான். கிழக்குப் பக்கம் குளம். தெற்குப் பக்கம் பரவியிருக்கின்ற புல்வெளி. மேற்குப் புறம் நாக தாளிச் செடிகளும், வீழ்ந்து கிடக்கின்ற பாலை மரங்களும். தெற்குப் புறம் மெதுவாக உயர்ந்து இரண்டொரு பாறை கள் குகை வடிவமிட்டிருந்தன. அவற்றை மூடி பன்னா மரங்களும், கிளாக் கொடிகளும் பிணைந்தபடியே. காட்டுச் சூரியகாந்திப் பூக்கள் பாறை வாயிலில் பற்றை யாய் பூத்திருந்தன.

காட்டுப் பன்றிகளை நேருக்கு நேராக மோதிக் கொல்ல முடியாது. மூர்க்கமான மிருகம், வேட்டையாடு பவர்களைக கண்டால் பயங்கரமாக உறுமியபடி கலைக்கத் தொடங்கிவிடும். திடீரென பின்னாலிருந்து கலைத்தால்தான், அவை கதிகலங்கிப் போய் பயந்து ஓடத் தொடங்கும்.

அணியனின் காதுக்குள் ஐயன் கிசுகிசுத்தான். “தண்ணியிருக்கிற பக்கமும், மேய்ச்சல் தரையாலும் பன்றிகள் ஒரு நாளும் ஓடமாட்டுது… பாலை மரப் பக்கத்தாலை அடைப்பு வைச்சது போலையிருக்குது. அதுவும் தடையாயிருக்கும். கல்லுக் குகைப் பக்கமாகத்தான் கலைக்க வேணும்… குகைக்குள்ளை நுழைஞ்சிட்டால் பிறகு பன்றி பிடிக்கிறது லேசானதடா… நீயும் குமுக் கனும் ஒருபக்கமும், வனத்தானும் சின்னவனும் குளப் பக்கமுமாய் போய் சத்தம் போடுங்க…. அரவஞ் சத்த மில்லாமல் போகவேணும்… நானும் பாலயனும் பின்னாலை போய் குகைப் பக்கமாய் கலைக்கிறம்…”

மெதுவாக அவர்கள் பதுங்கிப்போய் இடம் பெயர்ந்து சென்றதும், ஐயன் உரத்த குரலில் சத்த மிட்டுக் குளப்பக்கமாச ஓடத் தொடங்கினான்.

“டே முண்டா எட்டிப் பிடியடா…” தன்னைப் பின் தொடர்கிற வேட்டை நாய்களோடு அதேவேகத்திலே ஓடிக் கொண்டு பன்றிகளை மேல் குகைப் பக்கமாக விரட்டினான் ஐயன்.

பன்றிகள் கதி கெட்டு ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டே உறுமலோடு ஓடிப்போய் பாறைக் குகை யினுள் புகுந்து கொண்டன. அவை நுழைந்த வேகத்தில் காட்டுச் செவ்வந்தி பூக்கள் இழுவுண்டு நசிந்து சின்னா பின்னமாயின.

ஐயனின் முகத்திலே பெருமிதம் மலர்ந்தது. “நினைச்சபடியே நடந்திட்டுதடா….. கற்பாரைச் சுற்றிய நாயளை விடடா. பன்றிக் குட்டியை விட்டிட்டு கொழுத்ததாக இரண்டை மட்டும் பிடிச்சிடுவம்….”

நாய்கள் கற்பாறையினை வளைந்து வளைந்து ஊளையிட்டபடி மோப்பம் பிடித்தன. அணியனும், குமுக் கனும் பாறைகளைச் சுற்றிப் பார்க்கப் போயினர். இந்தக் கற்பாற்குகைக்கு வேறு வாசலிருந்தால் அதை மூடிவிடவேண்டும். அல்லது விழிப்பாக காவல் நிற்க வேண்டும்.

பாறையின் இருபுறங்களிலேயும் வழிகளிருந்தன. ஒன்று சிறியது. மற்றது சூரியகாந்திப் பூப் பற்றைகள் செறிந்த வழி. எப்போதும் அடைத்து மூடிவிட்டு, பெரிய வழியை முக்கால் வாசிக்கு தீயைக் கொளுத்தி உட்பக்க மாகப் போட்டு விட வேண்டும். இடைவிடாமல் அதனை எரித்துக் கொண்டேயிருந்தால் புகை, கற்குகைக்குள் மண்டிப் போய், மெலிதான கற்குகை நீக்கல்களால் வெளியேறிக் கொண்டிருக்கும். அந்த இடங்களைக் கண்டுபிடித்து அவற்றுக்குள்ளும் நெருப்பைக் கொளுத்தி விடவேண்டும். புகையின் நமைச்சல் பொறுக்க முடியாமல், பன்றிகள் வெளியே வருவதற்கு முயற்சி செய்து வழிதேடித் தெரியும். அந்தவழி, சின்ன வாசலாக இருக்கும். சின்ன வாசலிலே வேட்டை நாய்களோடு, ஐயன் ஆறுபேரோடு கொஞ்சம் கல்லின் துருத்தலான மேற்புறத்தில் உட்கார்ந்திருந்தான்.

பெரிய வாசல் பக்கமாக இன்னும் கொஞ்சம் லாம்பெண்ணையை ஊத்தின சீலையையும், தேக்கஞ் சுள்ளிகளையும் அள்ளிப் போட்டு நெருப்பைக் கொளுத்திப் போடு… குப்பை கஞ்சல்களையும் வாரி அதுக்கு மேலை அள்ளிப் போடு, குமுக்கா, முதலிலே குட்டிப் பன்றிகள் தான் வரும். அதையெல்லாம் காட்டுக் கத்தியாலை வெட்டிப் போடாதை. நல்ல கொழுத்ததாய், சினைப் படாததாய் பார்த்து இரண்டுக்கு விலாவிலை குத்து. அல்லது கழுத்துப்புறமாக காயம் உண்டாக்கு……”

நாய்கள் திடீரென்று குரைத்தன. நீண்ட கிளாத் தடியிலே கூரான இரு கத்திகள் உறுதி யோடு பிணைத்துக் கட்டப்பட்டிருந்தன. கற்பாரின் ஓரப்பக்கமாயிருந்த பாறையில் உட்கார்ந்திருந்த வனத்தான் அந்தக் கத்தி பொருத்திய கம்பினைச் சரியாக பாறை வாயிலுக்கு நேராக வைத்திருந்தான். சரியான பன்றி, வாசலுக்கு வந்தால் அந்தக் கத்திகள் கணக்காக பன்றியின் மேற் கழுத்தில் அப்படியே ஏறி கீழ் கழுத்து வழியாக நிலத்திலே இறங்கி ஊன்றிக் கொண்டுவிடும். அது நடைபெறுகின்ற, அதே நேரத்தில் இருமருங்கிலும் நிற்கிறவர்கள் கழுத்துப் பக்கத்திலும், கால்களிலும் வளைகத்திகளால் ஓங்கி வெட்டிவிட வேண்டும். கண் விழித்து மூடிட மூன் நடைபெற வேண்டிய துரித அதிர் தாக்குதல் இது உள்ளே நிறைந்த புகை மண்டலம், சிறிய வாசல் வழியாக இப்போது வெளியேவழியத் தொடங்கலாயிற்று.

ஐயன் உரத்துக் குரலிட்டான். “பன்றி வருகுதடா…” ‘சர்சர்’ ரென்ற ஓசை திடீரென வாசலில், ‘உர்உர்’ ரென்ற உறுமல் வாசலை அதிர்த்திற்று. “பன்றி வந்திட்டுதடா…” நாய்கள் உஷாராயின. “வனத்தான் கத்தியை இறக்கடா…”

“சரி… காலை வெட்டு… கழித்திலை அப்படியே நீளப்பாடாக இறுக்கி குத்தி இழு… ஆ… கவனம். சரியான கொழுத்த பன்றி மூஞ்சையாலை இடிக்கப் பார்க்குது. பயப்படாமல் மூஞ்சையையும் வெட்டடா…”

கொழுத்த பன்றி சினத்தோடு எகிறி உருண்டது. குள்ளக் கால்களை அறைகிறாற் போல எற்றியது. உடலைச் சிதறி மூர்க்கத்தோடு சீறிற்று. ஐயன் கணக்காக அதன் கழுத்துப் புறத்திலே காட்டுக் கத்தியினை வீச்சாக குத்தி இறுக்கி அமுக்கிப் பிடித்துக் கொண்டான். பிடி தவறினால் நிச்சயமாக கூரான மூஞ்சையால் குத்தி ஐயனின் நெஞ்சைக் கிழித்து விட்டுத் தான் அடுத்த வேலை பார்க்கும். உண்மையில் இது இரண்டு உயிர் களுக்கான ஜீவ மரணப் போராட்டந்தான்.

கத்திப் பிடியை விடாமல், பன்றியின் எகிறலைக் கட்டுக்குள் கொண்டு வர முயன்று கொண்டிருந்த ஐய னுக்கு மூச்சிரைத்தது. பன்றியை அணைந்து தள்ளி விடுவது மிகவும் இலேசாயிருக்கும். ஆனால் இந்தப் பன்றியோ முட்களைச் சிதறி, முதுகை எவ்வி எவ்வி உயர்த்தி பின்னங் கால்களால் தாக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஆக்ரோஷமாக உறுமியவாறே அவனை நோக்கி முகத்தைத் திருப்ப முயற்சித்துக் கொண்டிருந்தது அந்தக் காட்டுப் பன்றி இப்போது.

“டே…ஆராவது கத்தியைக் கொண்டு வாருங்கடா…”

சொல்லி முடிக்க முன் பன்றி எவ்வி உதறியது. கத்தியின் கைப்பிடியில் இறுகியிருந்த ஐயனின்கை , பிடி மானத்தை இழந்து போக அவன் கற்பார் ஓரமாக முதுகு அடியுண வீழ்ந்தான். வீழ்ந்தவனால் உடனே எழுந் திருக்க முடியவில்லை. நாரியைக் கைகளால் பிடித்துக் கொண்டே கெட்ட வார்த்தையால் வைது மற்றவர்களை அவசரமாகக் கூப்பிட்டான்.

கழுத்திலே காட்டுக் கத்தி இறுக்கி ஆழப் பதிந்து போனதால் துன்பமும் ஆத்திரமும் கொண்ட பன்றி பலத்த உறுமலுடன் தலையை சரித்துக் கொண்டே விழுந்து கிடந்த ஐயனை நோக்கி வேகமாகப் போயிற்று. கொஞ்சந் தூரந்தான் இடைவெளி. ஐயன் “நாகசாமீ’ என்று காடே அதிரும்படி உரத்து தீனமான குரலிலே கத்தினான்.

வேகத்தோடு போன பன்றி திடீரென்ற மரணாவஸ் தையோடு கத்தியவாறே பின்னங் கால்களிரண்டும் இரத்தம் சீறி நிலத்திலே தனித்தனியே விழ, புரண்டு உடலைத் துடித்தவாறு முன்னங் கால்களை மட்டும் பிறாண்டுகிறாற் போல ஆட்டிக் கொண்டிருந்தது. வனத் தானின் காட்டுக் கத்திதான் அப்படி வீச்சோடு வெட்டியது.

“வனத்தான் நல்ல வேலை செய்தாயாடா… பொல் லாத மிறுகமடா… என்ரை கையாலை தான் இது சாக வேணுமடா…”

பன்றி இரத்தச் சேற்றினுள் உலுப்பிக் கொண்டே கடைசிப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்தது. அதனால் எதையுமே நகர்த்திட முடியவில்லை. உர்உர்ரென்ற படியே உருண்டுருண்டு திமிறிற்று.

ஐயன் அதன் அருகே சென்றான். பன்றி முன்னங் காலினை உலுப்பிக் கொண்டே உறுமிற்று. ஐயன் குபுக் கென்று பாய்ந்து அவனது கழுத்திலே பதித்திருந்த கத்திப் பிடியைப் பிடித்து பலங்கொண்ட மட்டும் இழுத்தான். இரத்தம் சுர்ரென்று சீறியடித்தது. பன்றி விலுக் விலுக் கென்று உடம்பை உலுப்பிக் கொண்டே அதிர்ந்து உறு மிற்று. கடைசித் தடவையாய் ஐயன் பிடியை அசைத்து விட்டு ஒரே இழுவையாக இழுத்தான். கத்தி வெளியே வந்து விட்டது.

பன்றி ஊர்ர்ர்’ என்றவாறே மூச்சிழந்து போயிற்று.

எல்லாமாக மூன்று பன்றிகளை அவர்கள் வேட்டை யாடி விட்டனர். இருவருக்கு உடலெல்லாம் நல்ல சிராய்ப்பு. முண்டனுக்கு இடது கண்ணில் பன்றி முள்ளு ஏறி, அது அனுங்கிக் கொண்டிருந்தது. ஐயனுக்கு முது கெங்கும் இலேசான சிராய்ப்பு. நாரியும் விண்விண் ணென வலித்துக் கொண்டிருந்தது வௌவால் கந்தனின் மகள் பொன்னாள் மூச்சிரைத்துக் கொண்டிருந்தாள். நேற்றிலிருந்து இரத்த வாந்தியெடுக்கிறாள். முனிச்சேட்டையாயிருக்கலாம் என்பதே எல்லோரது அபிப்பிராயமும்.

கிட்டி அவளைக் கட்டிக் கொண்டு அழுதாள். எவ்வளவு இருந்தாலும் அவள் தாயில்லாத பெண். பொன்னாள் மீதிருந்த வெறுப்பெல்லாம் இப்போது கிட்டி யின் மனதிலிருந்து கரைந்து போயிருந்தது. “நாகசாமி நாகசாமி” என்று புலம்பிக் கொண்டிருந்தவள் திடீரென்று எழுந்து வெளியே ஓடினாள்.

சிறிது நேரத்தின் பிறகு கையிலே கொஞ்சம் அலரிப் பூக்களோடு அங்கே களைக்கக் களைக்க விரைந்து வந்தாள் கிட்டி.

மயிலக்காள் கொஞ்சம் பச்சைத் தண்ணி எடுத்துக் கொண்டு வா. நல்ல ஏனமாயிருக்க வேணும்.”

பூக்களை பொன்னாளின் நெற்றியிலே வைத்து, “நாகசாமி நாகசாமி…” என்று கொஞ்ச நேரம் கண்களை மூடிக் கொண்டு முணுமுணுத்தாள் கிட்டி.

மயிலக்காள் புதிய சிரட்டை ஒன்றினைக் கொண்டு வந்து கிட்டிக்கு அருகே பயபக்தியோடு வைத்தாள்.

கிட்டி கைக்குள்ளே இதுவரை பொத்தி வைத்திருந்த மண்ணை அப்படியே அந்தச் சிரட்டை நீரினுள் கொட்டினாள். பின்னர் இரண்டு பூவிதழ்களையும் அதனுள் போட்டு ”நாகசாமி நாகசாமி… வாருமையா…” என்று பயபக்தியோடு கூறினாள். பின்னர் அந்தத் தண்ணீரை பொன்னாளின் வாய்க்குள் ஊற்ற முயன்றாள்.

பொன்னாள் மூச்சுவிடவே கஷ்டப்பட்டுக் கொண் டிருந்தாள். நெஞ்சு ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. வாயை மெதுவாக திறக்க வைத்து, சிரட்டை நீரை ஊற்றி னாள் கிட்டி. பாதி நீர் வெளியே வழிந்து ஓடிற்று.

பின்னர் சில கணங்கள் கால்களை விலுக் விலுக் கென்று உதைத்துக் கொண்டாள் அவள். மெல்ல அவளின் மூச்சு அடங்கி உறுப்புகள் செயலிழந்து போக, கிட்டி, “நாகசாமீ…” என்று பரிதாபகரமாகக் கூவி அழுதாள்.

இனியென்ன. காட்டுக்குப் போன ஆண்களெல் லாம் திரும்பி வந்ததும்; பொன்னாளைக் குளிப்பாட்டி பாயிலே வளர்த்தி அந்தக் குடிசைக்கு தீயை வைத்து விட வேண்டும். பின்னர் சின்னதாக ஒரு சடங்கு. அல்லா விட்டால் சூரிப்பேயும், கொத்திப் பேயும் பொன்னாளை யும் கூட்டிக் கொண்டு குருவிக் கல்லுப் பக்கம் இரவிர வாகச் சிரித்துக் கொண்டு திரிவார்கள். பிறகு குமரான பெண்களெல்லாம் அந்தப் பக்கத்திலே திடீர் திடீரென்று செத்துப் போகத் தொடங்கி விடுவார்கள்.

பொன்னாளிடம் கொஞ்சச் சோளந் தானியம் மட்டுமே சேமிப்பாயிருந்தது, அதை வைத்து மட்டும் சடங்கு செய்து விட முடியுமா? குறைந்தது இரண்டு கோழிச் சேவலாவது வேண்டும். பிறகு வாழைப் பழம். ஒரு கலயம் கள்ளு. சாமிப் பிட்டு.

மயிலக்காள் கவலையோடு இதைப் பற்றி கிட்டி யிடம் கேட்ட போது கிட்டி அமைதியாகவே கூறினாள் :

“அதெல்லாம் கஷ்டமில்லை. நானே எல்லாம் தருவன். எனக்கு அவளை ஒரு மோளா நினைச்சுக் கொள்ளுறன்…குற்றங் குறையெதுவுமில்லாமல் பொன்னாளின்ரை சடங்கு செய்ய வேணுமக்காள்…”

17

இம்முறை குணசிங்கா லொறியிலே குருவிக் கல்லுப் பக்கத்துக்கு வராதது பட்டங்கட்டி சின்னையாவுக்கு மிகுந்த கவலையைக் கொடுத்தது. நல்ல சுறுசுறுப்பான அவன், என்ன விஷயம் சொன்னாலும் அதனை உடனேயே புரிந்து கொள்ளக் கூடியவனென்பதால் அவன் மீது இன்னும் பிரியமிருந்தது பட்டங்கட்டி சின்னையாவுக்கு.

கிட்டி இதனை ஐயன் சொல்லக் கேட்டதும் உடனே முகம் மாறிப்போனாள். மனதினுள்ளே கவலை தத்தளிக்க மௌனமானாள். அன்றைக்கு நடந்த சம்பவத்தை ஐயனுக்கு அவள் சொல்லவில்லை. ஆனால் ஐயனுக்கும் தெரியுமென்று குணசிங்காவிற்குச் சொல்லும்படி அவள் சம்பனிடம் கூறிவிட்டிருந்தாள்.

ஐயனுக்கு அது தெரிந்திருந்தால்? கிட்டிக்கு மனம் பதைபதைத்தது. உடனேயே ஐயன் காட்டுக் கத்தியைத் தூக்கிக் கொண்டு போய் ஆடுவெட்டுகிறாற்போல குணசிங்கா வின் கழுத்தினைச் சீவிக் கொண்டு, தனியாக அவனின் தலையைக் கையிலே உருவி வந்திருப்பான். அந்தக் காட்சியை நினைத்ததும் கண்ணை மூடிக் கொண்டாள் கிட்டி. உடம்பின் ரோமங்களெல்லாம் சிலிர்த்தன.

குணசிங்கா வராமற்போனதும் நன்மைக்குத்தான். அவன் வந்தால் இந்தச் சம்பவமும் நினைவிலே தோன்றி மனதை ஓயாமல் கஷ்டப்படுத்திக் கொண்டிருக்கும். எப்படியும் சோளன் விதை எறிய முதலே கண்ணாத்தைக்கு ‘சோறு கொடுத்து’ முடித்து விட வேண்டும். இது தவறிப் போனால் சோளன் அடித்த பிறகு தான் ‘சோறு கொடுப்பதைப் பற்றி பேச முடியும்.

கிட்டி, தேக்கங்குற்றியில் உட்கார்ந்து யோசனையில் ஆழ்ந்திருந்த போது, திடீரென்று தன்னை இரண்டு கைகள் பின்னாலிருந்து சுற்றிவளைத்ததும் திடுக்கிட்டுப் போனாள். பின்னர் அந்தப் பழக்கப்பட்ட ஸ்பரிசத்தை உணர்ந்தவாறே, ஐயனின் கைகளை தன்னிலிருந்து பிரித்துக் கொண்டே, கோபிக்கிற பாவனைக் குரலிலே, “என்ன இது, தேன் குடிச்ச கரடியாட்டம் சந்தோஷமாய் வந்திருக்கிறாய், காரியத்தைச் சொல்லு” என்றாள்.

ஐயன் கைகளை அவளிடமிருந்து எடுக்காமல் அவள் கழுத்தினுள்ளே தன் முகத்தை அழுத்திக் கொண்டான்.

“என்னென்று சொல்லு?”

“எனக்கு நாளைக்குத் துவக்கு வருமென்று பட்டங் கட்டியர் சொல்லியிருக்கிறார்.”

அப்படியா?” மிகுந்த பெருமையோடு கிட்டி வியந்தாள். அவன் அவளிலிருந்து விலகிப் பக்கத்திலே வந்து உட்கார்ந்து கொண்டான் இப்போது.

“என்னட சோளன் காசிலை இருந்துதான் – இதை வாங்கியிருக்காம். துவக்குக் கிடைச்சால் எவ்வளவு நல்லது. சேனை காக்கலாம். மிருகஞ் சுடலாம்…”

“இந்தத் துவக்காலை பயமில்லையோ?”

ஐயன் சிரித்தான். “எதுக்கடி பயம்? இனி இந்த இடத்திலை என்னை ஆரும் அசைக்க முடியாது… கொத்தி, முனிப்பேய் எல்லாத்தையும் இந்தத் துவக்காலை ஓடஓடக் கலைக்கப் போகிறன் பார்…”

கிட்டியின் முகத்திலே மிக வியப்பு. எல்லையில்லாத சந்தோஷமும் மனதினுள்ளே பரவிற்று, தனது கணவனின் பிரமிக்கத்தக்க புதிய வலிமையினை எண்ணி அளவே யில்லாத பெருமையடைந்தவளாய் உணர்ச்சி வயப்பட்டு அவனது பரந்த தோளிலே சாய்ந்து கொண்டாள். கொஞ்ச நேரம் மௌனமாயிருந்துவிட்டு கிட்டி சொன்னாள்; குரலிலே கழிவிருக்கமாய்.

“உனக்கு முதலிலை துவக்கு வந்திருந்தால் பொன்னாள் அநியாயமாகச் செத்திருக்க மாட்டாள் தானே …”

“என்னத்துக்காக அப்பிடிக் கேட்கிறாய்….?” “இல்லை…. நீ தானே சொன்னாய், துவக்கு கையிலை இருந்தால் எந்தப் பேயையும் கலைச்சுவிடலாமெண்டு. அது தான் சொன்னானான். நீ துவக்கு, கையிலை கிடைச்சதும் இந்தப் பக்கத்திலையுள்ள பேய்களை யெல்லாம் ஓடப் பண்ணிவிடு….”

ஐயன் பெருமையோடு மனைவியைப் பார்த்தான். துப்பாக்கி ஒன்றைப் பிடித்திருப்பது போல பாவனை செய்து விட்டுச் சிரித்தான்.

“ஏஜண்டுத்துரை ஒவ்வொரு முறையும் இந்தப் பக்கம் துவக்கோடை வாறபோது அதைப் பார்த்துப் பார்த்து நான் ஏங்காத ஏக்கமில்லை. பட்டங்கட்டிய ருடையதோ பழைய துவக்கு. ஆனால் அவர் அதைத் தொட்டுப் பார்க்கக் கூட விட மாட்டார்… நாகசாமி உதவியாலை இப்ப துவக்குக் கிடைக்கப்போகுது…. இதாலை என்ன சுட்டாலும், அதை முதலிலை நீதானடி சாப்பிட வேண்டும்…”

ஐயன் கிட்டியின் தோள்களில் மீண்டும் கை போட்டான்.

அவன் தன்னைப் பார்க்கின்ற பார்வையின் அர்த்தத்தை உணர்ந்து கொண்டு சுற்றுமுற்றும் நோக்கினாள் கிட்டி.

கானாங் குருவியொன்று புன்னை மரத்தின் கீழே அங்குமிங்குமாய்ப் பரவிப் பறந்து இரை தேடிக் கொண்டிருந்தது. அண்டங்காகம் சோம்பலோடு கழுத்தைச் சரித்து கானாங் குருவியையே பார்த்தவாறி ருந்தது. வெகு தொலைவிலிருந்து கன்றைத் தேடுகின்ற தாய்ப் பசுவின் உருக்கமான அழைப்பாக “ம்ம்ம்ப்பா …’

அவன் கைகளின் சேஷ்டை எதில் போய் முடியு மென்பதனை கிட்டி அறிவாள். உடலில் வருடிய அவனது கைகளை மெதுவாக எடுத்தாள். மார்புச் சேலையைச் சரியாகக் கட்டிக் கொண்டே அவனை குளிர்மையாகப் பார்த்தாள். அவனோடு முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் மிக மூர்க்கமான கரடியாகி விடு வானென்பதை நன்றாக அறிவாள் அவள்.

“அதெல்லாம் பிறகு….. இப்ப வேணாம்…… கண்ணாத்தைக்கு சோறு குடுக்கிறதை எப்ப வைக்கிறது? போயொருக்கால் நாலைஞ்சு பேரோடை பெரியானைக் கேட்டுக் கொண்டு வந்திடு… அப்பதான் கண்ணாத்தா வினட சேனையையும் பார்க்கலாம். எங்க சேனையையும் பார்க்கலாம்…”

கிட்டி சொன்ன வார்த்தைகளை அவதானமாகக் கேட்டுக் கொண்டிருந்த ஐயன், “இப்போ வளர் பிறையோ?” என்றான்.

கிட்டி சொன்னாள், சந்தோஷம் பொங்குகிற குரலில்.

“ஆ… இன்றைக்கு ஏழாம் பிறையாயிருக்க வேணும். கன்னட்டி சொன்னவன். பட்டங்கட்டியர் அவனுக்கு சொன்னவராம்..”

“ஆ… அப்ப நாளைக்கே நான் பெரியானைக் கேட்டிடுவன். அவன் நான் கேட்டா தட்டிச் சொல்ல மாட்டான். கண்ணாத்தையினட கலியாணத்துக்கு நல்ல சடங்கு வைக்க வேணும்… காடெல்லாம் துளாவி அவளுக்கு நான் பழம், தேன், இறைச்சி எல்லாங் கொண்டு வருவன்… பார்”

அவனது சந்தோஷம் கிட்டியை மிகவும் பரவசப் படுத்திற்று. இவ்வளவு காலமாக அவள் கேட்ட எதையுமே ஐயன் நிறைவேற்றி வைக்கத் தவறியதில்லை. சந்தோஷமாக அவன் ஒப்புக் கொண்டு விடுவான். சில வேளைகளில் குடித்தானென்றால்தான் முரடாகி விடுவான். அதுவும் அவளது மோகாவேச அணைப்பினில் தணிந்து போய் விடும். அவளது மனதினிள்ளே சிரிப்புச் சுழித்தது இப்போ .

“என்னடி அப்பிடி ஒரு மாதிரிப் பார்க்கிறாய்?’

ஐயனின் குரல் தளத்தளத்தது. அவளது தோளிலே கையைப்படர விட்டான்.

“என்னடி, என்னென்று சொல்லு…”

“ஒன்றுமில்லை…”

“சொல்லு?”

“நீயொரு நல்ல மனிஷன் என்று நினைச்சன்…”

“ஓ… அது மட்டுமாடி…வேறை ஏதும் இல்லையாடீ”

“… நீ நல்ல கரடியும்…”

சொல்லிவிட்டு அவள் வெட்கப்பட்டுச் சிரிக்க, அவன் மூர்க்கம் வாய்ந்த கரடியாக மாறிப் போனான் அவ்விடத்திலேயே.

18

கிட்டிக்கு ஐயன் சொன்னதைக் கேட்டதும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. கையிலிருந்த குழந்தையை இனம் புரியாத சந்தோஷத்தோடு கட்டிக் கொண்டு கொஞ்சி னாள், “கண்ணாள்” என்று சத்தம் போட்டுக் கூப் பிட்டாள்.

கண்ணாத்தை மான் குட்டி போல உள்ளேயிருந்து துள்ளிக் கொண்டு வந்தாள். அவளைப் பார்க்க கிட்டிக்கு பெருமிதமாயிருந்தது. ‘கரப்புக்குள் நிற்கின்ற கன்னிக் கோழியைப் போல என்ன செழிப்பாயிருக்கிறாள் இவள். கருகருத்து அடர்ந்த இவளுக்குள்ள புருவங்கள் மாதிரி குருவிக் கல்லிலே வேறு யாருக்கு இருக்கிறது?… இவள் பெரியானுக்கேற்ற நல்ல பொம்பிளை. அவனும் ஒரு பொலிகாளை மாதிரி. நல்ல உழைப்பாளி. இரண்டு பேரும் சேர்ந்தால், எங்களைப் போல நல்லாயுமிருக் கலாம். பத்துப் பன்னிரெண்டு பிள்ளைகளும் பெற்று சந்தோஷமாயுமிருக்கலாம்.’

“என்னம்மா ?”

“இந்தா பிள்ளையைப் பிடி. நித்திரையாக்கி வளர்த்து “

கண்ணாத்தை குழந்தையை வாங்கிக் கொண்டு உள்ளே போக, எதையோ நினைத்துக் கொண்டு மீண்டும் அவளைக் கூப்பிட்டாள் கிட்டி.

“என்ன ம்மா …”

“கண்ணாள்….. உனக்குச் சோறு குடுக்கப் போறம்…”

கிட்டி மகளைப் பார்த்தாள்.

லேசான வெட்கம் முகத்தில் படர, அவள் மௌன மாய் நின்றாள்.

“என்ன பேசாமல் நிற்கிறாய்?”

“சரியம்மா …”

“பெரியான் தான் உனக்குப் புருஷன்…”

“சரியம்மா “

“சரி. நீ போய் குழந்தையை நித்திரையாக்கி வளர்த்து …”

கண்ணாத்தை குழந்தையோடு உள்ளே போனாள்.

கிட்டி, பாலைக் குற்றியில் உட்கார்ந்து யோசனை யிலே ஆழ்ந்து போனாள். சோறு கொடுத்து – சடங்கு வைப்பதென்பது சாதாரணமான விஷயமல்ல. இறைச்சி, தானியங்கள், பழவகை, கள்ளு… அதுவும் தனது மகளின் சடங்கை இரண்டு நாட்களுக்காவது கொண்டாட வேண்டுமென்று ஐயனின் மனதிலே கனத்த ஆசையிருந்தது. இனிமேல் அவன் குழி முயலாகி விடுவான். ஆளை ஓரிடத்தில் பிடிக்கவே முடியாமற் போய் விடும்.

19

குழந்தையோடிருந்த கண்ணாத்தை தனது மூத்த தங்கச் சியான உம்மிணியைப் புதிதாகவே பார்ப்பவள் போல நோக்கினாள். உம்மிணிதான் எவ்வளவு வளர்ந்து விட்டாள், நன்றாக முற்றிக் கொழுத்த சோளன் பொத்தி போல.

சுருட்டைத் தலைமயிரை வாரி இழுத்தள்ளி, உச்சிக் கொண்டையாகக் கட்டியிருந்தாள் உம்மிணி. நெடுங் கழுத்துக்கு அது அழகாயிருந்தது. அவளுக்கும் சிறிது பிளந்த செவ்வுதடுகள். சிரிக்கையில் பளீச்சென்று தெரிகிற பற்கள், சிறு கடுகுப் பூக்கள் போல பளபளப் பதனை கண்ணாத்தை பெருமையோடு பார்த்தாள்.

“என்ன அக்காள் வெளிப்பனாப் பார்க்கிறாய்?” ”இல்லையடி… நீ பார்த்திருக்கவே பூசணிப் பழம் போலை வளர்ந்திட்டாய் … பெண் வளர்த்தி என்றால் பேய் வளர்த்தி என்று சேனாதி சொல்லுறது எவ்வளவு உண்மை பார்…”

கண்ணாத்தை வியப்போடு கூறியவாறு, தனது தம்பி யின் தலையை வருடி விட்டாள். குழந்தை சுகமாகத் தூங்கிக் கொண்டிருந்தது.

இனி நான் செய்த வேலையெல்லாம் நீதான் செய்ய வேணும். தான் உனக்கு வேலைகள் சொல்லித் தந்தது மாதிரி, நீ இளையவளுக்கு எல்லாம் சொல்லிக் கொடுக்க வேணும்…”

“சரி அக்காள்…”

“நான் உனக்கு புதிசாய் ஒரு சுரைக் குடுவை செய்து தருவன். இதுக்காக பெரிய சுரைக் காயொன்றை சேனை யிலை விட்டு வைச்சிருக்கிறன். எவ்வளவு தேனும்

அந்தக் குடுவைக்குள்ளை எடுக்கும்…”

சரி அக்காள்…”

“சம்பன் இப்பவெல்லாம் நல்லா வேட்டையாடு கிறான். உதுரனும், விண்ண னும் நல்லாகத் தேனெடுப் பாங்கள். எந்தக் காட்டுக்குள்ளை போனாலும் நீ இவங்க ளோடைதான் போ. கறுவலும் முண்டனும் காடெல்லாம் தெரிஞ்ச நாய்கள். ஆனால் இரண்டுக்கும் வயதாகிப் போச்சு. வல்லியரிட்டை இரண்டு நாய்க் குட்டி வாங்க வேணும். வல்லியருக்கு குழிமுயல் பிடிச்சுக் குடுத்தா நாய்க் குட்டியள் தந்திடுவார்….”

“நான் நாளைக்கே குழி முயல் பிடிச்சிடுவன் அக்காள்…”

கண்ணாத்தை அலட்சியமாகச் சிரித்தாள்.

“என்ன அக்காள்…ஏன் சிரிக்கிறாய்?

“யோசிக்காமல் பேசாதையடி. காட்டுப் பூனை மாதிரி வளர்ந்தாலும் எலிக்குஞ்சு மாதிரிப் பேசுகிறாய்…”

“ஏன் அக்காள்?”

“நிலவு காலத்திலை குழிமுயல் பிடிக்கலாமாடி?”

உம்மிணி நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

“சரிதான் அக்காள்….”

“குழிமுயலைப் பிடிக்கிறது இடக்கலானதடி. அதுக்கு காது சரியான கூர்மை. சருகு விழுகிறது கூட அதுக்குத் தெரியும். பற்றைப் பக்கமாய் அதை ஒரு நாளுங் கலைச்சுப் பிடிக்கேலாது… அதை மேட்டிலையிருந்து பள்ளத்துக்கு நாயை விட்டுக் கலைக்க வேணும்… வேக மான மிருகம்….”

கண்ணாத்தையின் கண்களிலே, இப்போது அவளை யறியாத பரவசம். வேட்டையைப் பற்றி நினைக்கின்ற போது மிதமிஞ்சிய சந்தோஷம், அவளினுள்ளே பொங்கிப் பிரவகிக்கும்.

ஆனால் எந்தப் பொழுதாயினும் சினைப்பட்ட மிருகத்தைக் கொன்றிடாதை. பிறகு உனக்கு பிள்ளை பிறக்காது. வயிறழிஞ்சு போவாய்…”

“ஒரு நாளும் நான் அப்பிடிச் செய்ய மாட்டன் அக்காள்… பிறகு நாகசாமியே கோபங்கொண்டிடுவார்….”

“அது சரிதானடி…. நாங்க அம்மாவைப் போலை நிறையப் பிள்ளை பெத்தால் தான் நல்லது…சேனைக்கும், வேட்டைக்கும் உதவி….”

பிச்சன் குளத்துள் மூழ்கித துழாவி நீந்திக் கொண்டி ருந்த உதுரனும், விண்ணனும் கரையில் நின்ற பட்டிமாடுகளை இடையிேைடய பார்த்துக் கொண்டிருந்தார்கள். இரண்டு பசுக்கள் அந்த மாடுகளிடையே சினைப்பட்டி ருந்தன. அவை இந்த நிலவுகாலத்துள் எப்போதாவது ஒரு நாள் கன்று ஈன்றுவிடும். கன்று ஈனுகிறபோது எப்போதும் பசுவுக்குப் பக்கத்திலே ஒரு ஆள் நின்று அதன் இளங்கொடியை வெட்டி எடுக்க வேண்டும். அல்லாவிடில் பிரசவ எரிச்சலில் பசு அதைத் தானே தின்று விடும். அப்படித் தின்றதென்றால் உச்சிச் சூரியன் படுகிற நேரத்திலே பசுவும் செத்துப் போய்விடும். பட்டி யொன்றிலே நிறைகன்றுத் தாய்ச்சி செத்துப் போவ தென்றால் எவ்வளவு பெரிய இழப்பாகி விடும்……

“டே அண்ணன் … நேற்று விண்ணாக்கன் வாய்க்கால் பக்கம் போய்க் கொண்டிருந்தன்…பரவைக் கடல் பக்க மாக ஒற்றை வௌவால் பறந்து போச்சுது…எங்கையோ நல்லா பழம் பழுத்திருக்க வேணும்… அந்தப் பக்கம் நல்ல மாமரங்களிருக்கு …… அந்திக்கு அந்தப் பக்கத்திலை போய்ப் பார்ப்பமா?”

குமுக்கென்று தண்ணிரினுள் அமுங்கி எழுந்து, வாய்க் குள்ளிருந்த நீரைச் சீறி உமிழ்ந்து விட்டுப் பதில் சொன்னான் உதுரன்.

“போய்ப் பார்ப்பமடா…… ஆனா நீ கண்டபடி விண்ணாக்கன் வாய்க்கால் பக்கம் போகாதை. சரியான தாட்டான் முதலையொன்று அங்கை அடிக்கடி தட்டுப் படுகுதாம். உன்னைப் பிறகு இழுத்துக் கொண்டு போய் தாழிக்குள்ளை வைச்சு கொஞ்சங் கொஞ்சமா சப்பித் தின்டிரும்…”

“நான் ஒரு நாளும் அங்கை போகமாட்டனடா”

மீண்டும் குமுக்கென்று தண்ணீரினுள் அமுங்கி எழுந்த உதுரன் கரையோரப் பக்கமாகப் பார்த்தான். பட்டி மாடுகள் எவ்வித சலனமுமின்றி அசை போட்டவாறு கிடந்தன. பொட்டல் மரங்களெல்லாம் சோம்ப லோடு கிடந்தன அமுங்கிய கிளைகளோடு.

சரி இனிப் போதும், போவம் வா…” கோவணத்தைக் கழற்றிப் பிழிந்து உதறியவாறே புன்னைமரத்தின் பின்னே பற்றையாய்க் கிடந்த நாயுருவிச் செடிகளிலிருந்து பச்சைக் காய்களையும், சிவப்புப் பழங்களையும் ஒன்றாய்ப் பிடுங்கி வாய்க்குள்ளே போட்டுக் கொண்டான் உதுரன்.

அப்போதுதான் தற்செயலாக அந்தக் காலடிச்சுவடு களைக் கண்ணுற்றான் உதுரன்.

மெதுவாக அழுந்தியும், இன்னுஞ் சில வெகு அழுத்த மாயும் பதிந்துள்ள மரைகளின் கால் அடையாளங்கள்.

“மரைகள் இந்தப் பக்கம் வரத் தொடங்கியிருக்குது. தாயும், குட்டிகளும் மேய்ச்சலுக்கு வருகுதுகள் போலை. காலடையாளம் அப்படித்தான் சொல்லுது…”

முணுமுணுத்துக் கூறிய உதுரன் பின்னர் உரத்துச் சத்தமிட்டு விண்ணனை அழைத்தான்.

கோவணத்தை இறுக்கிக் கட்டியவாறே அவன் நின்ற பக்கமாக வந்த விண்ணன், உதுரனை கேள்வியான முகத்தோடு ஏறிட்டான்.

“விண்ணா , இந்தப் பக்கம் நல்லாக மரைமேயுதடா …’

விண்ணனின் முகத்தில் சந்தோஷம் பூத்தது.

“அண்ணா டே….அக்காளுக்கு மரைவத்தல் என்றால் நல்ல விருப்பமடா….. ஒரு மரைப் பிள்ளையரைப் பிடிப்பமா?…”

உதுரன் தலையைச் சொறிந்தவாறு யோசித்தான்.

“நீ சொல்லுறது சரிதான். ஆனால் நானும் நீயும் சம்பன் அண்ணனும் சேர்ந்து மரை வேட்டையாடுவமடா. மரைவேட்டைக்கு நல்ல பலப்பான கயிறும் காட்டுக் கத்தியும் அல்லவோ தேவைப்படும்….அதை உடனை தேட வேணுமடா….”

20

பட்டங்கட்டியர் கொடுத்த துப்பாக்கியைக் கையில் வாங்கிய ஐயனின் கண்கள் கலங்கின. துப்பாக்கியைக் கண்களிலே ஒற்றிக் கொண்டான். பின்னர் தனக்குப் பக்கக்தில் நின்ற கிட்டியிடம் துப்பாக்கியைக் கொடுக்க, அவள் மிகவும் பயபக்தியோடு அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டாள். ஐயன் திடுமென பட்டங் கட்டி சின்னையாவின் கால்களிலே நெடுஞ்சாண் கிடையாக விழுந்தான்.

பட்டங்கட்டி சின்னையா கண்கள் மின்னிடப் புன்னகை செய்தார். பிறகு ஆதரவான குரலிலே கூறினார்.

“ஐயா எழுந்திரடா. இதெல்லாம் என்னடா… என்னடா இது?”

ஐயன் முழங்கையிலும், நெஞ்சிலும் ஒட்டியிருந்த மண் துகள்களைத் தட்டிவிட்டான்.

ஐயாவாலைதானே எனக்கு இந்தத் துவக்குக் கிடைச்சிருக்குது…என்ரை பிள்ளை குட்டி, பேரப்பிள்ளை களெல்லாம், ஐயா செய்த உதவியை மறவாமல் கொண்டாடுவார்கள் ஐயா…”

சும்மா அடைக்கோழி கறகறக்கிற மாதிரி, என்னென்னவெல்லாமடா நீ சொல்லுகிறாய்?” என்று பூரிப்போடு கூறினார் பட்டங்கட்டி: “ஆனால் எட ஐயன்… ஒவ்வொரு நாளும் அந்திநேரமா நீ என்னட்டை வந்திடு. நான் உனக்கு துவக்குச் சுடுகிறதை சரியாகச் சொல்லித் தாறன்…என்னடா?”

“சரி ஐயா…”

ஐயன் சொல்லி முடிய கிட்டி முன்னே வந்தாள் பட்டங்கட்டி சின்னையாவைப் பார்த்துக் கும்பிட்டாள்:

“என்னடி தளப்பமா வந்திருக்கிறாய்… என்ன வியளம்? கன்னியாய் இருக்கேக்குள்ளை கண்ட மாதிரித் தான் இப்பவும் குலுங்கிக் கொண்டிருக்கிறாய், இந்த வருஷம் புள்ளையொன்றும் இல்லையோடி….?”

கிட்டி வெட்கப்பட்டாள்.

”ஐயாவுக்கு என்னைக் கண்டால் எப்பவும் அந்நாளிலையிருந்தே இதுதான் கதை…”

” இல்லையடி கிட்டி… உன்னைக் காணுகிற போது எனக்கு அப்பிடி ஒரு கதைகதைக்கச் சொல்லுது… என்னடா ஐயா, நான் சொல்லுறது சரிதானேயடா…”

ஐயன் புன்னகை செய்தான். “ஐயா சொன்னால் அது சரிதான்… பிறகு மறுப் பில்லை …’

பட்டங்கட்டி சின்னையா அட்டகாசமாகச் சிரித்தார். “சரியடி, மாம்பழக்காறி. என்னடி கேட்க வந்தனி….’. கிட்டி கைகளைக் கட்டிக் கொண்டாள்.

“ஐயா நாளக்கு நாகசாமிக் கல்லிலை இந்தத் துவக்கை வெச்சு இத்தினி சடங்கொன்று செய்யப் போறம். நீங்களும் வரவேணும்…”

“சரியடி… நீ கேட்கிற போது மறுப்பனோடி.. ஆனா நான் கேட்கிறது தருவியோடி…?”

“சொல்லுங்க ஐயா…” என்று ஆர்வத்தோடு உடனேயே கேட்டாள் கிட்டி. “என்ன வேணுமென்றாலும் சொல்லுங்க ஐயா…”

பட்டங்கட்டி சின்னையா, அவளை ஆராய்வது போல ஊடுருவினார். நான் உன்னட்டை என்னடி கேட்கிறது.

ஒரு சாராயப் போத்திலும், பன்றிக் கருக்கலும் எனக்குத் தரவேண்டும். தருவியாடி பெட்டை …

ஆறுதலாகச் சிரித்தாள் கிட்டி. “இவ்வளவுதானே ஐயா…கட்டாயம் தந்திடுவம்…”

“சரி பார்த்திடுறன். அல்லாட்டில் உன்னை இங்கை வேலை செய்யிறதுக்கு இழுத்துக் கொண்டு வந்திடுவனடி.

ஐயன் உனக்கு அது சம்மதமோடா?”

ஐயன் பணிவோடு அவரைப் பார்த்தான். “நாங்கள் ஐயாவுக்கு எந்தக் காலத்திலும் அப்படிச் செய்யவே மாட்டம். சொல்லுமாறி அப்படிச் செய்தா நாகசாமியே எங்களுக்கு கஷ்டம் தருவார்…”

பட்டங்கட்டி சின்னையா நரைரோமம் அடர்ந்த நெஞ்சினைத் தடவியவாறே இடிச்சிரிப்புச் சிரித்தார்,

“அதெல்லாம் ஒரு கதைக்கடா, சொன்னனான்… கிடாய் மாடா”

கிட்டி பிறகும் “ஐயா” என்றாள்.

சொல்லடி …” “இன்னொரு விஷயம் சொல்ல ஐயாவுக்கு காணிக்கை கொண் ெவந்திருக்கிறம்…”

வியப்போடு கிட்டியைப் பார்த்தார் பட்டங்கட்டி சின்னையா.

“என்னடி அது சந்தோஷ காரியம்?”

ஐயன் அவசர அவசரமாக-பன் புல்லில் இழைத்த சிறு பெட்டியொன்றை எடுத்து வந்து அதைக் கிட்டியிடம் கொடுத்தான். கிட்டி அந்தப் பெட்டியை மிகுந்த மரியாதையோடு பட்டங்கட்டி சின்னையாவின் கையிலே கொடுத்தாள்.

பெட்டியினுள்; வெற்றிலை, தானியங்கள், சில பூக்கள்.

“ஆருக்கு உன்னட மோளுக்கோடி சோறு கொடுக் கிறாய்…”

“சரி ஐயா….

“உன்னைப் பார்த்தாலே கன்னியாய் இருக்கிறாயடி. உனக்கும் மோளாக ஒரு கன்னியோ? சந்தோஷம்தான்….

ஆர் ஆம்பளை? எப்ப சோறு குடுக்கிறது?”

“அவன் பெரியான் தானய்யா… பவுர்ணமியிலன்றுதான் சோறு குடுக்கிறம் ஐயாவும் வரவேணும்…”

மீண்டும் சிரித்தார் பட்டங்கட்டி சின்னையா.

“நான் இல்லாமல் உன்னட இடத்திலை நீ ஏதாவது செய்து போடுவியோடி கொழுத்த பெட்டச்சி…”- பிறகு கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு சத்தம் போட்டார்

அவர்: “டே நீலா…”

நீலன் ஓடி வந்து கைகளைக் கட்டிக் கொண்டு நின்றான்.

“டே… பெட்டகத்தை திறந்து என்னர வல்லபத்தை எடுத்துக் கொண்டு வாடா…. இந்தாடா திறப்பு… இடறிக் கொண்டு நில்லாமல் ஓடிவாடா… கிட்டி நல்லாளைத் தானடி மோளுக்கு எடுத்திருக்கிறாய்…”

ஐயன் கிட்டியை பெருமையோடு பார்க்க, கிட்டி அர்த்த புஷ்டியோடு சிரித்தாள்.

சேலையில் தைக்கப்பட்ட சிறிய பையினுள் கையை விட்டு பட்டங்கட்டி சின்னையா பத்துப் பத்து ரூபாவாக ஐந்து நோட்டுகளை எடுத்தார்…. வெற்றிலைக் கொடியி லிருந்து ஐந்து வெற்றிலை பிடுங்கிக் கொண்டு வரும்படி நீலனுக்குச் சொன்னார். நீலன் பத்துப் பதினைந்து வெற்றிலைகளைப் பிடுங்கிக் கொண்டு வந்தான்.

“டே கொன்னை வாயா ஏனடா இவளவு…?” நீலன் தலையைச் சொறிந்தான். “அதுதானடா உனக்கு பொம்பிளையே இல்லாம லிருக்கிறாய்… சுக்காவடி மனிஷா…”

கிட்டிக்கு சிரிப்பு பொங்கியது. அந்த வார்த்தைகளின் அர்த்தம் மிகமோசமானது. பொங்கிய சிரிப்பை அடக்கிக் கொண்டாள்.

ஐந்து வெற்றிலையுள்ளும் பணத்தை வைத்து மடித்து, “இந்தாடி நாகசாமியைக் கும்பிட்டுக் கொண்டு இதை வாங்கிக் கொள்… சோறு குடுக்குறதை நல்லாகச் செய்து முடி… நல்ல காரியம். அது நல்லாவே நடக்கும்”

கிட்டி வெற்றிலை மடிப்புகளை வாங்கி ஐயனிடம் கொடுத்தாள். ஐயன் துப்பாக்கியை இடது கைக்குள் பிடித்து, வலது கையினால் வெற்றிலை மடிப்புகளை வாங்கிக் கொண்டான். பிறகு இருவருமாய் பட்டங்கட்டி சின்னையாவைக் கும்பிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

மரத்தின் மேலிருந்து, உதுரன் கையிலிருந்த சுருக்குக் கயிறிற்னை அரவமின்றி கீழே தண்ணீர் குடித்துக் கொண்டு நின்ற மரையின் கழுத்தினை நோக்கி வீசினான். சொல்லி வைத்தாற்போல அந்தச் சுருக்கு மரையின் நெடுங்கழுத்தில் விழுந்தது. உடனேயே திடுக்கிட்டு கழுத்தை ஆட்டிக் கொண்டு அங்கிருந்து விரண்டது மரை. அது கயிற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக கொம்பினால் பக்கத்திலே நின்ற புன்னை மரங்களை மோதிக் குத்தியது. ‘ம்ம்ப்பா ‘ என்ற பின்னங் கால்களை உதறிக் கொண்டு அந்தக் குளப் பகுதியே அதிரும்படி சத்தமிட்டது……

“கழுத்திலை சுருக்கு நல்லாக இறுகி விட்டுதடா…”

சம்பன் புதர் மறைவிலேயிருந்து கத்திக் கொண்டே காட்டுக் கத்தியுடன் வெளியே வந்தான். அவனுக்குப் பக்கத்திலே. இன்னொரு புறத்திலிருந்த வந்த விண்ணன் சம்பனைக் கட்டிக்கொண்டு, தவித்துக் கொண்டு இழு படுகின்ற மரையைப் பார்த்து “ஹோ ஹோ” வென்று சத்தம் போட்டான்.

மரை பின்னங் கால்களினை எற்றியவாறு அவர் களை முட்ட முயன்றது. இவர்கள் அதற்குப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தனர். அதே வேளையில் உதுரன் சின்னச் சலசலப்புக் கூட இல்லாமல் புன்னை மரத்திலி ருந்து கீழே இறங்கி, இவர்கள் நின்ற பக்கமாகப் பார்த்துக் கொண்டு பெருமிதத்தோடு வந்தான்.

“வாடா அண்ணா , எல்லாரையும் கூட்டிக் கொணந் திடலாம். அக்காளுக்கு நாகசாமி நல்லாக இறைச்சி தந்திருக்கிறார்…”

உதுரனைக் கையமர்த்தினான் சம்பன்.

“அப்பிடியில்லையடா அண்ணன்… இது சம்பறகுச்சி மிருகம். அவுட்டுக் கொண்டு பாஞ்சிடும். என்ன மிருகத்தைப் பிடிச்சாலும் அது பாஞ்சிடாமல் பண்ண பின் காலை வெட்ட வேணும்…”

உதுரன் தலையசைத்தான்.

“அந்த மாதிரித்தான் செய்திடு… போய் வெட்டடா… சரியா கெண்டையிலை அழுத்தி ஒரேயடியிலை வெட்டிப் போடு… தவறிப் போனியானா மூஞ்சையை மிறுகம் உடைச்சு விட்டிடும்…”

பெரியானுக்கும், கண்ணாத்தைக்கும் என்று ஒதுக்கிவிட்ட கன்னி நிலத்தில் சின்னக்குடிசை போட்டுக் கொண்டு நின்றான் ஐயன். கிட்டியும் உதுரனும் சம்பனும் பற்றை யாய் நின்ற நாயுருவிச் செடிகளையும், இக்கிரிகளையும் பிடுங்கிக் கொண்டிருந்தனர்.

கிட்டி, காட்டுச் செடியொன்றினை உருவி எறிந்த வாறே சொன்னாள்: ‘இந்தச் சடங்காலை மூன்று நாளாக கொஞ்சமும் படுக்கேல்ல, கை காலெல்லாம் பிச்சுப் பிச்சு நோகுது”

உதுரன் தாயை அன்போடு பார்த்தான். “நீ அதிலை போயிரு… நாங்க புடுங்குறம்…” கிட்டியினுள்ளே சந்தோஷம் நெகிழ்ந்தது. “போடா பூசணிக்காய்க்கந்தா, விடிஞ்சால் அக்காள் இந்த இடத்துக்கு வர வேணுமடா… இன்னுங் கொஞ்சத் திலை எல்லாம் முடிஞ்சிடும்….பேந்தென்ன?”

சம்பன் புன்னகை செய்தவாறு கிளாத் தடிகளைக் கொண்டு போய் குடிசைக்குப் பக்கத்தில் போட்டான். கிட்டி, கிளா நார்களை அள்ளிக் கொண்டே குடிசைக்குள்ளே போனாள்.

கானாக் கோழி போல அவளைப் பின் தொடர்ந்து சென்றான் ஐயன். பின்னாலிருந்து அவளை இறுகக் கட்டிக் கொண்டான். அவள் அதை எதிர் பார்த்திருந் தவள் போலகொஞ்சநேரம் பேசாமல் நின்றாள், பிறகு அவனது கையை மெதுவாக தன்னிலிருந்து விடுவித்துக் கொண்டு அன்போடு அவனைக் கட்டிக் கொண்டாள். அவனை நிமிர்ந்து பார்க்காமலே, அவனது தோளைச் சுரண்டியபடியே, “கரடி…. இம்முறை நாகசாமியாலை கண்ணாத்தை யோடை எனக்கும் புள்ளை கிடைக்கும்” என்று கிசுகிசுத்தாள். மறுகணமே ஐயனுக்கு சந்தோஷம் தாள முடியவில்லை. உரத்துச் சிரித்தேன்.

(முற்றும்)

– 1979

– அந்திப் பொழுதும் ஐந்தாறு கதைகளும், முதற் பதிப்பு: டிசம்பர் 1985, தமிழோசைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *