போலீஸ் பொன்னப்பன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 7, 2024
பார்வையிட்டோர்: 192 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஒரே கூட்டம். போலீஸ்காரர் பொன்னப்பன் பிளாட்பாரத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்குப் பீடுநடை போட்டார். ஜி.டி. எக்ஸ்பிரஸ் தயாராக இருந்தது.

பொன்னப்பனின் இடது கை லாட்டியைப் பிடிக்க, வலது கை மீசையைப் பிடிக்க, அங்குமிங்கும் பார்த்துக் கொண்டே வந்தார். சே ஒரு கேலம் அகப்படவில்லையே அவர் போட்ட சபதத்தை எப்படி நிறைவேற்றுவது? போலீஸ்காரர். அன்று காலையில் அந்த மிலிடேரி ஒட்டலில் தான் போட்டிருந்த வீர சபதத்தை நினைத்துக் கொண்டார். அவருக்கு வயிறு எரிந்தது.

அந்த ஹோட்டலில்தான், அவர் வழக்கமாக வறுத்த கறி பரோட்டா சாப்பிடுவது வழக்கம். அங்கே சாப்பிடுவதை எப்படி வழக்கமாக வைத்திருந்தாரோ, அதேபோல், தின்பதுக்குக் காசு கொடுப்பதில்லை என்பதையும் பழக்கமாக வைத்திருந்தார். அன் றைக்குப் பார்த்துக் கேட்கக்கூடாத கேள்வியை அந்த ஹோட்டல் முதலாளி கேட்டுவிட்டார். ஒரு சானிட்டரி இன்ஸ்பெக்டர் வந்து விட்டு அப்போதுதான் போயிருந்தார். அந்தச் சமயத்தில் போலீஸ்காரர் வாயைக் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டே வந்தார்.

கல்லாவில் இருந்த முதலாளிக்கு வயிறு எரிந்தது. கேட்கக் கூடாத அந்தக் கேள்வியைக் கேட்டு விட்டார்.

“ஸார், சாப்பிட்டதுக்குக் காசு கொடுங்க.”

வேறு யாரையோ சொல்வதாக நினைத்த பொன்னப்பன் வாசலைத் தாண்டுகையில் சர்வர் வந்து, அவர் தொப்பியை லேசாகத் தட்டி, “முதலாளி கூப்பிடறாங்க” என்றான். பின்னோக்கி வந்த போலீஸ்காரரிடம் முதலாளி, “ஸார், சாப்பிட்டீங்களே, காக கொடுக்க வேண்டாமா? மறந்து விட்டீங்களா?” என்றார்.

பொன்னப்பனின் மீசை துடித்தது. பரோட்டா சாப்பிட்டதற்குப் பணமா? சமாளித்துக் கொண்டே “காசு கொண்டு வரலிங்க” என்றார்.

“என்னைக்குக் கொண்டு வந்தீங்க? சொல்லுங்க பார்ப்போம்..ம் நானும்தான் இந்த ஹோட்டலை எடுத்துப் பதினைந்து வருஷமாச்சு: ஒருநாள் கூட பிரேக்’ இல்லாம சாப்பிடுறீங்க, ஒரு நாளாவது காசு கொடுத்திருக்கிங்களா?”

அப்போது பார்த்து, ஒரு மணி நேரம் வரை ஹோட்டலில் இருந்து ஒரு சிங்கிள் டி சாப்பிட்ட் ஆசாமி ஒருவர், பதினைஞ்சு பைசா பில்லை நீட்டினார். முதலாளிக்கு மீண்டும் கோபம் வந்தது.

“சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. நான் எத்தனை பேருக்குத்தான் தண்டத் தீனி போட முடியும்?”

பொன்னப்பனின் மீசை துடித்தது. இவன் முதலாளி மாதிரியா பேசுறான்; சப்-இன்ஸ்பெக்டர் கூட இப்படிக் கேட்க மாட்டார்.

“சூடா வேனும் சூடா வேணுமுன்னு கேட்கிறீங்களே. அதே மாதிரி காசையும் தர வேண்டாமா?”என்றார் முதலாளி, மீண்டும்.

அவருக்குச் சூடாகப் பதில் சொல்ல வந்த போலீஸ்காரர் பொங்கி வந்த சினத்தை அடக்கிக் கொண்டார்.

அவமானமாகப் பேசிய முதலாளியைக் கெஞ்சலாகப் பார்த்துக் கொண்டு, மனத்தில் வீரசபதம் ஒன்றைப் போட்டுக் கொண்டு நிமிர்ந்த நன்னடையோடு, பொன்னப்பன் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தார். எப்படியாவது, ஒரு கேஸைப் பிடித்து அந்த முதலாளியின் திமிரை அடக்க வேண்டும்.

அங்கே என்ன? அந்த மைனர், அந்தப் பொண்ணை ‘பாலோ பண்றானா? பண்ணட்டும். அவகிட்ட போய் ஏதாவது பேசப் போறான். அவள் அவனைத் திட்டப் போறாள். கேஸ் கிடைச் சிட்டுது…

பொண்ணை பாலோ பண்ணின மைனரை அவர் ’பாலோ’பண்ணினார். அவள், அவனைக் கவளிச்சதாகவோ, ‘கேர்’ பண்றதாகவோ தெரியலை. குடும்பப் பெண் அவள் பய எக்கச் சக்கமா பேசிட்டு, எக்கச்சக்கமாக மாட்டிக்கப் போறான். கேஸ் கிடைச்சுட்டுது…

அதோ, அந்தப் பயல் அவள் கிட்ட நெருங்கி, அவள் கூடவே நடக்கிறான். அவள் ஒரு முறைப்பு முறைக்கிறாள். இடது கோடியில் வந்தவள் வலது கோடிக்கு ‘லைனை மாற்றிக் கொள்கிறாள். அந்தப் பயல், வெட்கம் மானம் இல்லாமல் இன்னும் போறான். போறது மட்டுமா? இடது கோடியில் இருந்து வலது கோடிக்கு சைட்’ வாங்கறான்! அவள் கையில் உரசுறது மாதிரி நடக்கிறான். அவள் முறைக்கிறாள்.பயல் நடக்கிறான்.

பொன்னப்பன் தன் கண்களைக் கூர்மையாக்கிக் கொண்டார். அதோ, அந்தப் பயலும், அவளுக்காகக் காத்து நிற்கிறான். மீண்டும் அவள் கையில் உரசுற மாதிரி அவள் கூடச் சேர்ந்து நடக்கிறான். அவள் முறைக்கிறாள் – உதவிக்கு ஆள் கிடைக்குமா என்று சுற்றுமுற்றும் பார்க்கிறாள். மாட்டிக்கிட்டான், பயல் மாட்டிக் கிட்டான்.

மைனரை மடக்குவதற்காக வேகமாக பாலோ பண்ணினார். என்ன அக்கிரமம் அவன் ஏதோ கேட்கிறான். அவள் தயங்குகிறாள். அப்புறம் கையோடு கைசேர்த்துக் கொண்டு திரும்பி நடந்து வர்றாங்க…சே இவ்வளவு சீக்கிரத்தில் அவள் சம்மதிச் சிட்டாளே…

தன்னைக் கடந்து போன அந்த ஜோடியை முறைத்துக் கொண்டே அவர் நடந்தார். டு டயர்’ பக்கம் வந்தார்.

ஓர் ஆசாமி, முதுகைக் காட்டிக்கிட்டு நிற்கிறான், அவனைப் பிடிக்கலாம். அவர், அவனுக்கு நாலடி தள்ளி நின்றார். திடீரென்று அந்த இடத்தையும் காலி செய்தார். அவன் திரும்பும்போது, அவன் முகத்தில் இருந்த வெட்டுக் காயத்தின் பெரிய தழும்பைப் பார்த்துவிட்டார். அவர் அனுபவப்பட்டவர். வெட்டுத் தழும்பு உள்ளவன்கிட்ட மோதவே கூடாது.

‘த்ரி டயர் பக்கம் நடந்தார் சே ஒரு பயலும் சிக்கவில்லையே. சபதத்தை எப்படி நிறைவேற்றுவது? ஒரு பன்னாடைப் பயல் கூடக் கிடைக்கலே…சே.

அவரது அலைமோதிய கண்கள், ஒர் ஆசாமி மீது நிலைத்தன. பொருத்தமான கேஸ் பிடிச்சிடலாம். அந்த ஆசாமி ஓர் உளுத்துப் போன டிரங்க்’ பெட்டியைக் கையில் வைத்துக் கொண்டு நிற்க, அவன் மனைவி, ஓர் அலுத்துப் போன குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு நின்றாள். சரியான கேஸ். பிடிச்சிடலாம்.

அவர், அவர்களுக்குப் பத்தடி தள்ளி நின்று கொண்டார். அவர்களைப் பாராதது போல் பார்த்துக் கொண்டிருந்தார்.

அந்த ஆசாமி ஒரு கிழிந்த சட்டையைப் போட்டுக் கொண்டு. நாலு முழ வேட்டியை இரண்டு முழமாகச் சுருக்கிக் கட்டிக் கொண்டு, நின்றான் அவளும் ஒரு பழைய சேலையைக் கட்டிக் கொண்டு தோள் பக்கம் கிழிந்திருந்த ஜாக்கெட்டைக் கிழிந்திருந்த முந்தானி முனைப்பால் மூடிக் கொண்டிருந்தாள்.

ரயிலுக்குப் பச்சை விளக்குக் காட்டப்பட்டது. விசில் சத்தம் கேட்டது.

பொன்னப்பன் பாய்ந்தார். “யோவ்! பெட்டில என்னப்பா வச்சிருக்க? பெட்டியைத் திறந்து காட்டு.”

“வண்டி நகரப் போவுது இப்போ வந்து கேக்கறிங்களே, நாயமா?”

“டேய், பெட்டியைத் திறந்து உள்ள என்ன இருக்குன்னு காட்றியா? இல்ல, உள்ள தள்ளணுமா?” வண்டி நகரத் தொடங்கியது.

அந்த ஆள் சத்தம் போட்டான்.

“அநியாயம் பண்ணாதீங்க லார். இதுவரைக்கும் பேசாம நின்னுட்டு – இப்போப் பேசினா எப்படி? நாயமா?”

“அந்தக் கதை வானாம். உன் மேல் சந்தேகமா இருக்கு, பெட்டியைத் திறந்து காட்டு. உம் காட்டு.”

அந்த ஆசாமி மருண்டான். வண்டி வேகமாகப் போகத் தொடங்கியது. பைக்குள் இருந்து ஓர் இரண்டு ரூபாயை நீட்டினான். பொன்னப்பனின் ரத்தம் கொதித்தது.

“யோவ், என்னை லஞ்சம் வாங்கறவன்னு நினைச்சியா? பெட்டியைத் திற….ம்…திற. உன்னெ என்ன செய்யறேன் பாரு! நட போலீஸ் ஸ்டேஷனுக்கு.” அவர் நறநற என்று பல்லைக் கடித்தார்.

அந்த ஆசாமி ஐயா லஞ்சம் வாங்காதவர்னு எனக்குத் தெரியாது” என்று சொல்லி, இரண்டு ரூபாயைப் பைக்குள் வைக்கப் போனான்.

“யோவ், என்னை என்ன ரெண்டு ரூபாய் லஞ்சம் வாங்கறவன்னு நினைச்சியா?”

“என் கிட்ட இதுக்கு மேல இல்லை ஸ்ார்.”

“இதுக்கு மேல பேசாத கீழே இறங்கு. இல்லன்னா பத்து ரூபாயை இறக்கு,” என்று போய்க் கொண்டிருந்த வண்டி பின்னால் ஓடினார்.

அந்த ஆசாமிக்கு யோசிக்க நேரமில்லை. பைக்குள் இருந்த ஒரு நோட்டை அவர் கைக்குள் திணித்தான். திணித்துவிட்டு, பிறகு கத்தினான்.

“யோவ் பத்து ருபான்னு நினைச்சு, நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்திட்டேன். நூறைக் கொடு, பத்து தர்றேன். நூறைத் தா. பத்து தர்றேன். யோவ். யோவ். நாயமா?”

பொன்னப்பன், அவனைக் கண்டு கொள்ளவில்லை. கேஸைப் பிடித்த திருப்தியோடு நடைபோட்டார். அந்த ஆசாமி திட்டிய திட்டுக்கள் இஞ்சின் சத்தத்தில் கேட்கவில்லை.

அவர் நேராக, அந்தப் பழைய ஹோட்டலுக்கு வந்தார்.

முதலாளிக்கு உதைப்பு, பழையபடி தின்னுட்டு கலாட்டா பண்ண வந்திருக்கானா? எதிலேயும் மாட்ட வச்சிடுவானோ?

பொன்னப்பன், மிடுக்காக உட்கார்ந்து ஆர்டர் கொடுத்தார். சர்வர் ஒசி கிராக்கியாக நினைத்து, சாவகாசமாய் வந்தான். போலீஸ்காரருக்கு ஆத்திரம் பொங்கியது. வார்த்தைகளில் சூடேறியது.

“ஏண்டா, என்னை என்ன போக்கத்தவன்னு நினைச்சியா? சீக்கிரம் கொண்டா, ஒரு பிளேட் பிரியாணி, கோழி குருமா…ம் சீக்கிரம். வறுத்த கறி.ஈரல், மூளை கொண்டு வர இவ்வளவு நேரமா? மூளை இருக்கா உனக்கு?”

கல்லாவில் இருந்த முதலாளிக்கு இருப்புக் கொள்ளவில்லை. ஒரு நாள் ஏதோ ஆத்திரத்தில் சொன்னதுக்காக, இந்த போலீஸ்காரன் வந்து மிரட்டப் பார்க்கிறானே?

தட்டுக்கள் தவிர மற்றவற்றைத் தின்று முடித்த பொன்னப்பன், ‘பில்’ கொடுக்காமல் போன சர்வரைப் பார்த்து, “என்னை என்ன பிச்சைக்காரன்னு நினைச்சியா? பில் கொடுடா” என்று அதட்டினார்.

பிறகு அலட்சியமாக, பில்லை மேலேயும், புத்தம் புது நூறு ரூபாய் நோட்டைக் கீழேயும் வைத்து, முதலாளியிடம் நீட்டினார். முதலாளிக்கு ஒரே ஆச்சரியம்.

“சீக்கிரம் சேஞ்ச் கொடுங்க.” போலீஸ்காரர் அதட்டினார்.

“ஐயா தப்பா நினைக்கக் கூடாது. உங்ககிட்ட காலையில மரியாதைக் குறைவா நடந்துக்கிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க. இந்தாங்க உங்க நூறு ரூபா “

அலட்சியமாக, அந்த ரூபாயை வாங்கிக் கொண்டு நடக்கப் போன அவரை, முதலாளி எழுந்து வந்து குறுக்காக நின்று கும்பிட்டுக் கொண்டே, “ஐயாவைக் காலையில் பேசினதிலிருந்து என் மனசு கேட்கலை, நீங்க என்னை மன்னிச்சதுக்கு அடையாளமா, கூலா ஒரு டிரிங் குடிச்சிட்டுப் போகணும்,” என்றார்.

பொன்னப்பனின் மனகம் கேட்கவில்லை வாயும் கேட்கவில்லை. விறைப்பாக நடந்து, ஹோட்டலில் ஒரு மூலையில் இருந்த ‘பேமிலி’ ரூமுக்குள் உட்கார்ந்தார். கோக்கோ கோலாவை உறிஞ்சிக் கொண்டிருந்த போலீஸ்காரர், தன்னைச் சுற்றிப் பத்துப் பதினைந்து போலீஸ்காரர்களும், ஒரு மப்டி ஆசாமியும் நின்று கொண்டிருப்பதைப் பார்த்துத் திகைத்தார். அவர் பையன் ஐ.பி.எஸ். எழுதியிருந்தான். பாஸாகி இருப்பானோ? மாட்டானே! ஒரு வேளை அவன் பாலாகி, தன்னைப் பாராட்ட வந்திருக்காங்களோ? உம்.

இதற்குள் ஒரு போலீஸ்காரர். “உன் பைக்குள் இருக்கிற நூறு ரூபாய் நோட்டை எடு”, என்றார்.

பசங்க பங்கு கேட்க வந்திருக்காங்களோ? பொன்னப்பன் தயங்கினார். இதைப் புரிந்துகொண்ட ஸிபிஐ (மத்திய புலன் விசாரணை) ஆசாமியான ‘மப்டி’, “அந்த நூறு ரூபாயை எடுய்யா”, என்றார் அதட்டலாக.

பிறகு பொன்னப்பன் தந்த நூறு ரூபாயை உற்றுப் பார்த்தார். “இந்த ரூபாய் உனக்கு எப்படிக் கிடைத்தது?”.

பொன்னப்பன் சமாளித்துக் கொண்டே, “என்ன ஸார் கிருமினலை விசாரிக்கிறது மாதிரி விசாரிக்கிறீங்க. ஆபீஸ்ல கொடுத்த சம்பளப் பணத்தில் மிஞ்சியிருந்த நோட்டு இது” என்றான்.

போலீஸ்காரர்கள், பொன்னப்பனைப் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள கேஷியரிடம் அழைத்துக் கொண்டு போனார்கள். கேஷியர் ரிக்கார்டைக் காட்டினார். “அவ்வளவும் பத்து ரூபாய் நோட்டா வேணுமுன்னு கேட்டு வாங்கினார். என்கிட்ட நூறு ரூபாய் நோட்டே கிடையாது.”

ஒரு போலீஸ் அதிகாரியைப் பார்த்து, மப்டி கண்ணடித்தார். பொன்னப்பனின் கைகளில் விலங்கு மாட்டப்பட்டது. தங்கள் வர்க்கத்தில், ‘இப்படி ஒரு காளான் முளைத்து விட்டதே’ என்று ஒரு போலீஸ்காரர்கூட பாக்கியில்லாமல், அத்தனை பேரும், பொன்னப்பனைத் தலா இரண்டு கைகளாலும், இரண்டு கால்களாலும் உதைத்தார்கள்.

போலீஸ்காரர் பொன்னப்பன், மன்னிக்கனும், இனிமேல் அப்படி அழைப்பது சட்டப்படி குற்றம் பொன்னப்பன் இப்போது ‘லாக்கப்பில் இருக்கிறான். லாக்கப்பில் இருக்கும் கிரிமினல் குற்றவாளிக்கு ‘ர்’ என்ன வேண்டிக் கிடக்கு? கள்ள நோட்டு அடித்த குற்றத்தின்பேரில் பொன்னப்பனை ‘சஸ்பெண்ட்’ செய்து போலீஸ் கஸ்டடியில் வைத்திருக்கிறார்கள். தீவிர புலன் விசாரணை நடந்து வருகிறது.

– குற்றம் பார்க்கில் (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: நவம்பர் 1980, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *