தாளுண்ட நீர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 29, 2024
பார்வையிட்டோர்: 291 
 
 

(2016ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பசி, பட்டினி, நித்திரை, இவைகளைப் பற்றிச் சிந்திக்கவும் நேர மில்லாமல், ஓய்வுக்காகத் தூண்டும் மனத்தைக் கட்டிப் போட்டுவிட்டு, சுமார் ஒருமாத காலம் தேர்தல் காரியங்களில் ஈடுபட்டிருந்தோம்.

முன்பெல்லாம் தேர்தல் வருவதுண்டு. இரண்டு அல்லது மூன்று பேர்கள் போட்டியிடுவார்கள். எல்லோரும் அந்தப் பகுதியின் காணிச் சொந்தக்காரர்களாக இருப்பார்கள். ஒவ்வொருவரும் தன்தன் காணி களில் குடியிருப்பவர்களையே தங்கள் தங்கள் வாக்காளர்களாகக் கருதிக் கொண்டு, அந்த அடிப்படையிலேயே வேலை செய்து தேர்தலை நடத்தி முடித்துவிடுவார்கள். யார் யார் அதிகப்படியான பேர்களைத் தங்கள் காணிகளில் குடியிருத்தியும், தங்கள் நிலங்களில் வேலை வாங்கியும் வருகிறார்களோ அவர்களே வெல்வார்கள். இதுதான் நடைமுறையாகவும் இருந்து வந்தது.

அபேட்சகர்கள் ஜனங்கள் மத்தியில் வருவதில்லை. அவர்களுக்குப் பதிலாக, அவர்களின் சிஷ்யப்பிள்ளைகள் தாம் அந்தந்தப் பகுதிக்கு மக்களிடம் அனுப்பப்படுவார்கள். அவர்கள் அந்தந்தப் பகுதிகளுக்குப் போய் எல்லோரையும் ஓர் இடத்தில் அழைத்து, ‘எல்லோரும் ஒழுங்காக வோட் செய்யப் போய்விட வேண்டும்’ என்று அதட்டி முத்தாய்ப்பு வைத்து விட்டு, நான்கு கொடிகளை எடுத்து, கிராமத்தின் நான்கு எல்லையிலும் உயரக்கட்டி, ‘அத்தனை வாக்குகளும் தங்களுடையவை’ என்று ‘சீல்’ வைத்துவிட்டுப் போய்விடுவார்கள்.

நாற்புறமும் கொடியேற்றிவிட்டுப் போனதன் மேல், தேர்தலுக்கு முதல் நாள் இரவு, ஊருக்குள் வருவார்கள். சாக்குக் கணக்கில் சாராயப் போத்தல்கள் வந்து சேரும். தலைக்கு ஒரு போத்தல் வீதம் கொடுக்கப் படும். அன்றிரவெல்லாம் ஊரே ஏகக் களேபரமாக இருக்கும். காலை யானதும் சிலர் வாக்குச் சாவடிக்கு வருவார்கள்; பலர் தலைதூக்க முடியாமல் வீட்டோடு கிடந்து விடுவார்கள். அந்தக் கடைசி இரவின் பெருவிருந்து நல்லதையும் செய்யும்; கெட்டதையும் செய்யும்.

இந்த லட்சணத்தில்தான் அந்தப் பகுதி மக்களின் தேர்தல் நடந்து முடியும். இந்தத் தடவை இந்த நிலையில் பெருமளவு மாற்றம் வந்திருக்கிறது.

ஐந்தாண்டுகளாக அந்தப் பகுதியில் அமைந்திருந்த விவசாயச் சங்கத்தின் பிரதிநிதியாக ஓர் அபேட்சகரும் நிறுத்தப்பட்டிருந்தார்.

பெரும் பணக்காரர்களும், காணிச் சொந்தக்காரரும், ஓய்வு பெற்ற அரசாங்க உத்தியோகஸ்தர்களும் போட்டிகளில் நிற்கும் வழக்கம் மாறி ஒரு சாதாரண பேர்வழி போட்டிக்கு வரும் கொடுமையை அவர் களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. தங்கமணி என்ற அந்த அபேட்ச கதைத் தடுத்து நிறுத்திவிட அவர்கள் தலையால் நடந்து பார்த்தார்கள்.

அந்தத் தொகுதியில் நான்கு அபேட்சகர்கள் போட்டியிட்டார்கள். தங்கமணி வீழ்த்திவிடும் முயற்சியில் ஏனைய மூவரும் ஒன்றுபட்டு விட்டார்கள். பாராளுமன்றத்தை எட்டிப் பார்த்துவிட வேண்டும் என்ற அந்த மூவரின் ஆசையும் ஒரே ஆசையாகி, ‘எப்படியும் இந்த அற்பப் பயலைத் தடுத்து நிறுத்திவிட வேண்டும்’ என்ற அளவுக்குக் குறுகி விட்டது.

ஆரம்பத்தில் அந்தப் பகுதி விவசாயிகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மனம் நிறைந்த பீதியாகத்தான் இருந்தது.

‘வழக்கமில்லா வழக்கம்.’ ‘குடிமுழுகிப் போயிடும்.’ ‘கோழி கத்திக் குஞ்சைக் காட்டிக் குடுத்தமாதிரி.’ இப்படியெல்லாம் சொல்லி, பயப்பிராந்தியில் மூழ்கித் திணறினர். ஆனால் நாள் ஆக ஆக, இந்த நிலை சற்று மாறி வந்தது. தேசத்தின் பல இடங்களில் உலகத்தின் பல பகுதிகளில் விவசாயிகள், தொழிலாளர்கள் பெற்று வரும் வெற்றிகளைக் கேட்டுத் தெரியும் போது அவர்களுக்குத் தெம்பும் உறுதியும் தன்னாலேயே வந்துவிட்டன. இப்போதுதான் வாக்குச் சீட்டுகளின் பெருமதிப்பையும் அவர்களால் நன்கு கணிக்க முடிந்தது. ஒவ்வொருவரும் கச்சை கட்டிக்கொண்டு தாங்களாகவே நிதி திரட்டுவதிலும் இறங்கி விட்டார்கள்.

‘உடையார் தோட்டம்’ என்ற ஒரு பகுதிக்கு நான் பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டேன். அந்தக் குக்கிராமத்தில் சுமார் இருநூறு குடிகள் வசித்து வந்தார்கள். அத்தனை பேர்களும் விவசாயக் கூலிகள். பாதி இரவிலேயே எழுந்து தோட்டத்துக்குப் போவார்கள். தண்ணீர் பாய்ச்ச வரம்பு கட்ட, வாய்க்கால் அமைக்க, உரம் பாவ, களை பிடுங்க என்று இப்படி எத்தனையோ விதத்தில் அவர்கள் உழைத்தார்கள்.

காலமெல்லாம் நிலத்தோடு கிடந்து செத்து, நெல்லாக, கிழங்காக, காயாகக் கூலியைப் பெற்றுக்கொண்டு, குடிசைக்குத் திரும்பும் அவர்களுக்குச் சுகத்தைப் பற்றி, சுகாதாரத்தைப் பற்றி, ஓய்வைப் பற்றிச் சிந்திப்பதற்கு நேரமேது? சில வேளை, கூலி பெறும் அன்று இடும்பன்’ விருந்துதான்!

அவர்கள் குடியிருக்கும் ‘உடையார் வளவு’ என்ற பிரதேசம் அவர் களுக்குச் சொந்தமானதல்ல. அந்த ஊரின் நாட்டாண்மைக்காரர் – பழைய உடையாருடையது. சுமார் மூன்று ஏக்கர் விஸ்தீரணமிருக்கும். அந்த நிலத்தில்தான் அந்த இருநூறு குடும்பங்களும் குடில் கட்டி வாழ்ந்தார்கள்.

உடையாரின் பேரன் சோமசுந்தரம் தான் இப்போது தனித்து, தங்கமணியுடன் போட்டியில் நிற்கிறார். ஏனைய இருவரின் பலமும் இப்போது சோமசுந்தரத்துக்குச் சேர்ந்துவிட்டதனால் அவருக்கு அசுர பலம்! ஆகையினால்தான் விவசாயக் கூலிகளான அத்தனை பேர்களை யும் திரட்டவும், அப்போதைக்கப்போது வர்க்க போதம் கொடுக்கவும், நடப்பு நாட்டாண்மைகளுக்கு உடனுக்குடன் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும், ஒழுங்கு முறைப்படி வாக்காளர் ஜாபிதா தயாரித்து வாக்கு களைக் கொண்டுவரத் தொண்டர்கள் திரட்டவும், அவர்களுக்குப் பயிற்சி தரவும் வேண்டிய சகல பொறுப்புக்களும் என் மீது விடப் பட்டன. அப்போதைக்கப்போது பல இடங்களுக்குச் சென்று கூட்டங் களில் பேசினாலும், எனக்கென விடப்பட்ட பொறுப்பு உடையார் வளவுதான். எனது தகுதிக்கு மிஞ்சிய பொறுப்புதான். ஆனாலும் ஏற்றுக் கொண்டேன்.

ஊருக்குள் சென்று, நான் முதலாவது வேலையை ஆரம்பித்த போது, ஊரின் கோடியிலே இருக்கும் வயிரவர் கோவிலுக்குப் பக்கமான ஒரு குடிசையை ஒதுக்கிக் காரியாலயமாக்கித் தந்தார்கள். எனது வாழ்க்கையே அந்த ஒருமாத காலத்தில் காரியாலயத்தோடுதான் கழிந்தது. பத்து மைல்களுக்கப்பால் உள்ள எனது வீட்டை நினைத்துப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை.

காரியாலயத்திற்குச் சற்றுத் தெற்குப் புறமாக வயிரவர் கோவில் வெளியின் எல்லையோடு ஒரு குடிசை இருந்தது. அதைக் ‘குடிசை’ என்று சொல்ல முடியாது. அதேபோல எடுத்த எடுப்பிலே ‘வீடு’ என்றும் கூறிவிட முடியாது. வீட்டின் அந்தஸ்திற்கு வருமளவுக்குச் சற்று உயரமாக இருந்த அது, காரியாலயத்தின் முன் பக்கமாக இருந்தது. சற்றுக் கண்ணை அகல வீசினால் அந்த வீட்டில் இருப்பவர்களைப் பார்த்துவிடலாம். இரண்டிற்கும் இடையே உள்ளது ஒரு சிறு வெளிப் பிரதேசம் மட்டும்தான்.

அந்த வீட்டில் யாரும் அதிகமாக இருப்பதாக எனக்குத் தெரிய வில்லை. ஒரு பெண் அடிக்கடி முற்றத்துக்கு வந்து போவாள். அதனால் அவளை அடையாளம் காண முடியவில்லை. ஒரு தடவை அவள் முகத்தை நான் தெளிவாகப் பார்த்தேன். அவளை எங்கோ பார்த்தாக ஞாபகம். ஒரு தடவை மட்டுமல்ல, அடிக்கடி பார்த்த அந்த ஞாபகம் மனதோடு ஒட்டிக்கொண்டு உணர்வுக்குக் கட்டுப்படாமல் இருந்தது. மனதின் ஆழத்திலே காலப் புழுதியால் மூடுண்டு கிடந்த அந்த உருவ அமைப்பை நான் துருவித் துருவித் தேடினேன். காலப் புழுதிச் சற்று நெகிழ்ந்து கொடுக்கவே, அவளை இனங் கண்டு கொண்டேன்.

பட்டணத்தில் நான் இருந்த காலத்தில், பொன்னம்மாள் மில்லுக்கு முன்னால் அங்காடி வியாபாரம் செய்து கடைசியில் நடேசன் என்ற காவாலிப் பயல் ஒருவனுடன் சேர்ந்து ஓடிவிட்ட விதவை அவள்! பெயர் கூட நினைவில் நிற்கிறது; சின்னம்மா.

எனக்கு அவளை நன்றாகத் தெரியும். நான் கல்யாணம் செய்தபின் பொன்னம்மாள் மில்லில் வேலை செய்த காலத்தில், மில்லுக்கு முன்னால் இருந்து, அவள் அடித்த வாய் ஜாம்பமும் செய்த ஜாலமும் இன்னும் என்னால் மறக்க முடியாதவை!

வேலை முடிந்து தொழிலாளர்கள் வீடு திரும்பும் போது தன்னு டைய கொஞ்சு மொழியால் கெஞ்சி அழைத்து, ‘தொழிலாளர்களாகிய நீங்கள் என்னிடம் சாப்பாடு திங்காட்டா தொழிலாளியாகிய நான் எப்படி வாழுகிறது!’ என்று குறைப்பட்டு, அழுகிய அன்னாசிப் பழக்கீற்று களையும், பிசுபிசுத்த சுண்டல் கடலையையும், ஊசிப் போன மசால் வடையையும் எத்தனை விரைவில் விற்று விடுவாள்!

இந்தக் குஷியான வாழ்வு அவளுக்கு நிலைக்கவில்லை. இளவயதில் கணவனை இழந்துவிட்டதனால், கன்னி கெடாதவள் என்று கணிக்கும் அளவுக்கு அவள் அழகாக எடுப்பாக இருந்தாள். அவளை முற்றுகை யிட்டவர்கள் தோற்றுப் போனது எனக்குத் தெரியும். அப்படிப் பட்டவள் நடேசனுடன் சேர்ந்து கொண்டு ஓடிப்போய் விட்டது ஆச்சரியந்தான்! அதற்குப் பின் இப்போதுதான் அவளைப் பார்த்தேன்.

பட்டணத்திலே அநேக இன்பக் கேளிக்கைகளை விட்டுவிட்டுக் கிராமத்திலே அடைபட்டுக் கிடக்குமளவுக்குத் தன்னை ஒடுக்கிக் கொண்டு, ஒரு கொள்கைவாதியாகி விட்டாளோ என்று ஐயம் எனக்கு எழுந்தது.

ஊரெல்லாம் சுற்றிவிட்டு இரவு பன்னிரெண்டு மணிக்கு மேல் காரியாலயத்திற்கு வந்தேன். அதன் பின்னும் மூன்று மணிவரை விழித்திருந்து வாக்காளர் பட்டியல் தயாரித்துக் கொண்டிருந்தேன். அந்த மூன்று மணி வேளைக்கிடையில் இரண்டொரு கார்கள் அவள் வீட்டுக்கு முன்னால் வந்து போனதை நான் பார்த்தேன். இப்போது நான் அவளைப் பற்றி ஆழமாகச் சிந்தித்தேன். ‘நடேசனோடு ஓடி விட்டதிலிருந்து வாழ்க்கையை இப்படியே சறுக்கிச் சறுக்கி ஓட்டு கிறாள்’ என்று என் மனம் முடிவு செய்தது.

எத்தனை தலைக்கவில் என்று கணி சின்னம்மா கண்ணீர் வடித்தபடி என் முன்னே மௌனமாக நின்றாள். எனது கடுமையான வார்த்தைகளைத் தாக்குப் பிடிக்க முடியாமல் அவள் விம்மிப் பொருமிக் கொண்டிருந்தாள். வெறும் வயிற்றுப் பிழைப்புக்காக உடலை விற்று, மனதால் அவள் செத்துக் கொண்டி ருப்பதை என்னால் கணிக்க முடிந்தது. அந்தப் பகுதிக்கு நடேசனுடன் ஓடிவந்து, கடைசியில் அவனால் கைவிடப்பட்டு, நடேசனால் அறிமுகப்படுத்தப்பட்ட பணக்கார ‘மைனர்’களால் பராமரிக்கப்படும் வாழ்க்கையைத் தன் வாயாலேயே சொல்லிவிட்டாள். அதைச் சொல்லும் போது அவள் வெட்கப்படவில்லை.

இப்போது அவள் சற்று இளைத்துப் போய்விட்டாள். எட்டு வருடங்கள் இடையே ஓடிவிட்டபோது அந்த இளைப்பு இயற்கை யானதே! சிவப்பான அவள் உடலிலே தேஜஸ் இல்லை. முகம் சற்றுப் பொருமி, கண்கள் தாழ்ந்து, இமைகளுக்குக் கீழாக இருக்கும் புருவ வட்டம் கறுத்துச் சுருங்கிப் போய், உடல் சற்று வளைந்து, தலை முடிக்கு நடுநடுவே வெண்திரை ஓடி, முன்னைவிட மாறுபாடாகத் தான் இருந்தாள். ஆனாலும் தன்னை மோகினி ஆக்கிக்கொள்ள இந்த அந்தஸ்தே போதும். அவள் அப்படி எதுவுமே செய்ததாகத் தெரிய வில்லை .

“சின்னம்மா, என்னவோ நானும் சொல்லிவிட்டேன். நல்ல காரியத்திற்கு நீ வாழ்ந்தால் போதும்’ என்று மட்டுந்தான் என்னால் வாய்விட்டுச் சொல்ல முடிந்தது. அதற்குமேல அவள் வீட்டை விட்டு, காரியாலயத்தை நோக்கி வந்தேன்.

மனதைக் கேட்காமலே என் தலை அந்தப் பக்கமாக முறித்துத் திரும்பியது. துவண்டு போன கொடிபோல நின்றவண்ணம், அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பார்வை! ஆம், அது மோகினிப் பார்வை! நானும் பார்த்தேன்; என் பார்வையும் அவள் பார்வையும் முரண்பட்டு மோதின.

வெயில் நெருப்பாகக் கொட்டியது. வயிரவர் கோயிலைத் தாண்டிக் காரியலாயத்துக்குள் அடியெடுத்து வைத்தேன். செல்லப்பனும் சுப்பனும் எனக்காகக் காத்து நின்றார்கள். ‘எங்கே போயிருந்தீங்க?’ செல்லன் கேட்ட இந்தக் கேள்வியின் அர்த்தம்? எனது ஒழுக்கத் துக்குச் சவால் விடுகிறானா அவன்?

‘அவள் ஒரு அங்காடி வேசை! காசுக்காக அவள் எதையும் செய்வாள்? மனிதனைக் கொலை கூடச் செய்திடுவாள். நயினார்கள் வீட்டு நஞ்செல்லாம் அவளிட்ட உறைஞ்சுக் கிடக்கு!’

செல்லனின் கேள்விக்கு நான் பதில் கூறுவதற்கிடையில், சுப்பன் நல்ல மனதோடு என்னை எச்சரிக்கை செய்தான்.

‘சரி சரி, எல்லோரும் மனிசர் தான். அது கிடக்கட்டும். என்ன விசேஷம், வேலையள் எப்படி?’ என்று பேச்சை வேறு திசையில் திருப்பினேன்.

தேர்தலுக்கு முதல் நாள் இரவு. முந்திய வழமைப்படி சாராயப் போத்தல்கள் இறக்குமதியாக இருக்கிறதென்று தாங்கள் அறிந்ததை அவர்கள் கூறினார்கள்.

அந்தப் பணக்காரப் பிரகஸ்பதிகள் கடைசி வேளையில் இது செய்வார்கள் என்பது எனக்குத் தெரியும். எதற்கும் நாளை ஊழியர்கள் கூட்டத்தைக் கூட்டி, நடவடிக்கை எடுப்போமென்று அவர்களுக்குப் பதில் சொல்லி அனுப்பினேன்.

‘அந்த விஷப் பொம்பிளையைப் பற்றிக் கவனமாயிருங்க.’ விடைபெற்றுச் செல்லும் போது, செல்லன் கூறிய இந்த வார்த்தைகள் எனது பொறுப்புணர்ச்சிக்கு விடும் அடுத்த சவாலாகவும் அமைந் திருந்தது.

மறுநாள் தேர்தல்….

சரியாக எட்டடித்தது. வாக்கெடுப்பு ஆரம்பமாகிவிட்டது.

ஒவ்வொரு அபேட்சகருக்கும், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும், இருவர் பிரதிநிதிகளாக இருந்து கள்ளவோட்டுக்களையும், தேர்தல் முறைக்கு முரணான செயல்களையும் தடுக்கச் சட்டத்தின் கீழ் நானும், என்னுடன் சேர்ந்து ஒரு விவசாயியும் சாவடிக்குள் ஆஜரானோம். எதிர் தரப்பினர்களிலும் இருவர் ஆஜராகி இருந்தனர்.

சரியாக எட்டு மணி ஐந்து நிமிஷத்திற்கு முதலாவது வாக்குச் சீட்டு விநியோகிக்கப்பட்டது.

வாக்குச் சீட்டை விநியோகிக்கும் குமாஸ்தா வெளியிலிருந்து வந்த ஒரு வாக்காளரின் நம்பர்ச் சீட்டைப் பற்றிக் கொண்டு, ஜாபிதாவைப் பார்த்து, அந்த இலக்கத்துக்குச் சொந்தமான பெயருக்கு ‘வேலன் கைம்பெண் சின்னம்மா’ என்று குரல் வைத்தான்.

அப்போதுதான் நான் தலை நிமிர்ந்து பார்த்தேன்; ஆமாம்; அவளேதான்! முதலாவது வாக்குச் சீட்டை அவளேதான் பெற்றாள். ஆடம்பரமற்ற நிலையிலே குடும்பப் பெண் போல உடையணிந்து, வாக்குச் சீட்டைப் பெற்றுக் கொண்டு புள்ளடியிடும் கூண்டிற்குள் சென்று, அங்கே வைக்கப்பட்டிருந்த பென்சிலை எடுத்து வேண்டிய சின்னத்திற்குப் புள்ளடி இட்டு, சீட்டை மடித்துக்கொண்டே வெளியே வந்து, தேர்தல் அதிகாரிக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்குள் திணித்து விட்டு, அவள் நடந்து கொண்டிருந்தாள்.

அவளை நான் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். எதை நினைத்துக் கொண்டாளோ கழுத்தை முறித்து அவளும் பார்த்தாள். அந்தப் பார்வை; மோகினிப் பார்வை! நானும் பார்த்தேன். என் பார்வையும் அவள் பார்வையும் முரண்பட்டு மோதின.

மணி ஒன்பது அடித்தது. ‘தம்பி ஐயா மனைவி அழகம்மா!’ என்று குமாஸ்தா குரல் வைத்தான். அந்தப் பெண்ணைக் கவனித்தேன். முதுகோடு கருநாகம் ஒட்டிப் போய்க் கிடந்தது போன்று, இடைவரையில் மின்னித் தொங்கிய கூந்தல் பின்னல், நீலப் புடவை, வெள்ளை ‘ஜாக்கெட்’ அந்த இலட்சணத்தில் ஒரு பெண் நின்றாள். பக்கப் பார்வைக்கு அவள் சின்னம்மாவைப் போன்று இருந்தாள்.

வாக்களித்து விட்டு அவள் நடந்து கொண்டிருந்தாள். எந்தவித நோக்கமுமின்றி நான் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் திரும்பி என்னைப் பார்த்தாள். அதே கழுத்து முறிப்பு; அதே பார்வை; மோகினிப் பார்வை! ஆமாம்; அவள் சின்னம்மாதான்! நானும் பார்த்தேன். என் பார்வையும் அவள் பார்வையும் முரண்பட்டு மோதின.

மணி பத்தரை இருக்கும். ‘பொடிசிங்கி நோனா’ என்று குமாஸ்தா குரல் வைத்தான். வழக்கப்படி பார்த்தேன். கை நீளமான, கழுத்து இறக்கி வட்டமாக வெட்டப்பட்ட வெண்சட்டை, நீலக் கம்பாயம், தோளில் சிறு துவாய், இத்யாதி உடுப்பில் ஒரு சிங்களப் பெண் நின்றாள்.

குறிப்புகள் எழுதப்பட்ட எனது பட்டியலைப் பார்த்தேன். அந்தப் பேர்வழி வெளியூரில் இருப்பதாகக் குறிப்பெழுதப்பட்டிருந்தது. உள்ளூரில் முன்பே விசாரித்து நானே எழுதி வைத்திருந்தேன். இரண்டு பட்ட மனத்தோடு நான் தலை நிமிரும்போது, அந்தப் பெண் வாக்குச் சீட்டைப் பெற்றுக்கொண்டு கூண்டிற்குப் போய்விட்டாள். ‘ஒருவேளை வாக்களிக்க வந்திருக்கலாம்’ என்று மனதுக்குள் சொல்லித் திருப்திப் பட்டுக் கொண்டு, அவள் வாக்களித்துவிட்டுப் போவதைக் கவனித்தேன். வெளியே போய்க் கொண்டிருந்த அவள் திரும்பிப் பார்த்தாள். அதே கழுத்து முறிப்பு, அதே பார்வை; மோகினிப் பார்வை!

சின்னம்மா! நானும் பார்த்தேன். என் பார்வைளும் அவள் பார்வையும் முரண் பட்டு மோதின.

இடையிடையே எத்தனையோ பேர்வழிகள் வந்தார்கள், போனார்கள். முன்னூறு வாக்குகளுக்கு மேல் பதிவாகி விட்டன.

மணி பன்னிரண்டிற்குச் சிறிது வேளை இருந்தது. “இராச சேகரம் மகள் சாவித்திரி தேவி’ என்று குமாஸ்தா இரைந்தான்.

அந்தப் பெண்ணை இமை கொட்டாது நான் பார்த்தேன். அலங்கார தேவதையாக அவள் இருந்தாள்.

அதே கழுத்து முறிப்பு, அதே பார்வை; அதே மோகினிப் பார்வை! சின்னம்மாதான்!

இந்தத் தடவையும் நான் ஏமாந்துவிட்டேன். அப்போதுதான் எனக்கு முன்னேயிருந்த எமது போட்டிப் பிரதிநிதியைப் பார்த்தேன். வாயை அகலத் திறந்து, பற்களின் உள்பகுதிகளைக் காட்டி அங்கலாய்த்தது, அந்த மனிதன் சைகை செய்து அவளுக்கு விடை கொடுத்தான்.

எனக்கு நெஞ்சம் பகீரென்றது. ‘சின்னம்மா எதிரியின் கையாள்; விஷப்பூச்சி!’ என்று மனதுள் கறுவிக்கொண்டு மறுபடியும் அவளின் வரவிற்காகக் காத்திருந்தேன்.

நடுவேளைப் போஜனத்திற்காக சாவடி மூடப்பட்டது. அப்போது தான் சற்று மூச்சு விடுவதற்காக வெளியே வந்தேன். வெளியே என்னைக் கண்டதும் அந்த விவசாயக் கூட்டத்தினர் ஓடோடி வந்து என்மீது குறைப்பட்டுக் கொண்டனர்.

‘அந்த வேசி, எதிரிகளோடே சேர்ந்து கொண்டு நாலு முறை கள்ளத் துண்டு போட்டிட்டாளே, நீ என்ன தம்பி விட்டிட்டியே!’ என்று ஒரு வயோதிகர் அழாக்குறையாகப் பாய்ந்தார்.

செல்லன் மிகவும் ஆத்திரத்தோடு பேசினான். அன்று அவள் வீட்டி லிருந்து நான் வரும்போது பார்த்துவிட்டுக் கிண்டல் செய்தவனல்லவா அவன்!

அவன் பேசும்போது, எனக்கு என் மனத்தூய்மையிலேயே சந்தேகம் வந்துவிட்டது. நான் வேண்டுமென்று விட்டுவிடவில்லையே! ஆனாலும் நான் வெட்கப்பட்டேன். அந்த மனிதர்களுக்கு இருக்கும் வர்க்க உணர்விலும் எனது உணர்வு மாற்றுக்கெட்டுவிட்டதாக உள்ளுணர்வு கூறுவது போலிருந்தது.

சற்று வேளைக்குப் பின் மறுபடியும் சாவடிக்குள் புகுந்தேன். சிறிது வேளைக்குள் வாக்கெடுப்புத் தொடங்கிவிட்டது. முதலாவது ஆளாக ஒரு முஸ்லிம் பெண் முக்காட்டுடன் நின்றாள்.

‘ஆயிசா சகீது’ என்று குமாஸ்தா இரைந்தான். அவசர அவசரமாக எனது பட்டியலைப் பார்த்தேன். அதில் அந்தப் பேர்வழி ஊரில் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது.

குமாஸ்தாவின் கட்டிலிருந்து வாக்குச் சீட்டுக் கிழிக்கப்படுவதற்கு இடையே ‘இது கள்ளவோட்டு’ என்று கத்தினேன். எதிரே இருந்தவர் மிரளமிரள விழித்தார்.

தேர்தல் அதிகாரி வந்தார். “இது கள்ள வோட்டு சார், முஸ்லிம் பெண்ணின் வோட்டு! இது தமிழ்ப் பெண் சார்; சின்னம்மா!’ என்று மடமடவென்று பேசினேன். உள்ளே அறையில் இருந்த பெண் அதிகாரி வந்து அவளின் முக்காட்டை நீக்கினாள்.

அது சின்னம்மாவே தான்! அவள் என்னைப் பார்த்தாள்; ஒரே ஒரு தடவை மட்டும் பார்த்தாள். இப்போது அந்தப் பார்வையில்-?

எனக்கு மனது குடைந்து நடுங்குவது போலிருந்தது. ஆனாலும் ‘வர்க்கத் துரோகியைப் பிடித்துக் கொடுத்து விட்டோம்’ என்ற பெருமை, நடுக்கத்தையும் மிஞ்சிக்கொண்டு நின்றது.

சற்று வேளைக்குப் பின் பொலிஸ் ‘வான்’ அவளை ஏற்றிச் சென்றது. இப்போது அவள் என்னைத் தலை நிமிர்ந்து பார்க்கவேயில்லை; வெட்கப்பட்டாள்!

‘ஆள் மாறாட்டம் செய்ததற்காக, பாவம், ஆறு மாதச்சிறை கிடைக்குமே!’ என்று மனம் காரணம் தெரியாமல் ஏங்கியது.

மாலையில், வாக்குச்சாவடி மூடப்பட்டது. ‘நாளைக் காலையில் தேர்தல் முடிவு சொல்லப்படும்’ என்று அறிவிக்கப்பட்டதும், ஜனங்கள் கலைந்தார்கள்.

இரவு வந்தது. தங்கள் வெற்றிக்காக ஏங்கி காரியாலயத்தில் இருந்த அத்தனை பேர்களையும் அனுப்பிவிட்டுப் படுக்கைக்குப் போக, மணி பன்னிரண்டுக்கு மேல் ஆகிவிட்டது.

தூக்கம் பிடிக்கவில்லை. சின்னம்மாவின் வீட்டைப் பார்த்தேன். வீடு இருள் மண்டிக் கிடந்தது.

நன்றாக விடிந்துவிட்டது. பட்டணம் போவதற்குப் பஸ் ஏறுவதற் காக, அவசரமாக நடந்து கொண்டிருந்தேன். பட்டணம் போகும் பஸ், பொலீஸ் நிலையத்திற்கு அருகே தான் நிற்கும்

பொலீஸ் நிலையத்தைத் தாண்டும் போது சின்னம்மாவைப் பார்க்க மனசு தூண்டியது. உள்ளே சென்று அவளைப் பார்த்தேன்.

‘சின்னம்மா, நீ ஏழைச் சனங்களுக்குத் துரோகம் செய்திட்டுப் பணக்காரங்களோடு சேர்ந்து கொண்டியே, அந்த எஜமானர்கள் யாரும் உன்னைப் பார்க்க வரவில்லையா?’ என்று மெதுவாகக் கேட்டேன்.

*எனது எஜமானவர்களின் சார்பில் நீங்க வந்திருக்கிறீங்களே!’ என்று பட்டென்று அவள் பதில் கூறினாள்.

அவள் என்னைக் கிண்டல் செய்வதாக நான் எண்ணினேன். ‘அவங்க என்னைக் கள்ளத்துண்டு போடச்சொல்லி நிர்ப்பந்திச்சாங்க. ஐந்து துண்டுகள் போட்டேன் ஐம்பது ரூபாய்கள் சம்பாதித்தேன். ஐம்பது ரூபாயையும் வாங்கிக்கொண்டு, அவங்களுக்குத் துரோகம் செய்துவிட்டு, உங்களுக்கும் எனக்கும் சொந்தமான சின்னத்துக்கே நான் ஐந்து துண்டையும் போட்டேன். ஆனால், நீங்களே என்னைக் காட்டிக்குடுத்திட்டீங்க..’ என்று அவள் பேசிக்கொண்டிருக்கும் போதே நான் கல்லாகச் சமைந்துவிட்டேன். அவள் பேசி முடிந்ததும் தான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். தன் மார்புச் சட்டைக்குள் கையைச் செருகி, ஐந்து நோட்டுகளை அப்படியே இழுத்தெடுத்து இரும்புக் கம்பியின் ஊடே நீட்டினாள். ‘இந்தாங்க இதை எடுத்துச் செல்லுங்க. உங்க நீதிக்கு நான் முந்திக் காசு குடுக்கல்லை. ‘என் பங்காக ஏற்றுக் கொள்ளுங்க’ என்று மறுபடியும் பேசி முடித்தாள்.

என் உள்ளம் விம்மியது. மயிர்க்கால்கள் புல்லரித்து, குத்திட்டு நின்றன. ‘சின்னம்மா’ என்றுமட்டும் அழைத்தேன். முக்கி முனகிக் கொண்டே அந்த வார்த்தையைப் பிரசவித்தேன்.

எனக்குத் தரப்பட்ட நேரம் முடிந்துவிட்டது என்று பொலீஸ்காரன் ஞாபகப்படுத்தினான். நான் நகர்ந்தேன். சற்று நகர்ந்ததும், சின்னம்மாவைப் பார்த்தேன். இரும்புக் கிராதி யைப் பிடித்தபடி சின்னம்மா என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அந்தப் பார்வையில் மோகினித் தன்மை இருந்ததோ என்னவோ! இப்போது இரு பார்வைகளும் பேசிக் கொள்ளவில்லை; தோழமை உணர்வுடன் தழுவிக்கொண்டன.

– கே.டானியல் படைப்புகள் – சிறுகதைகளும் குறுநாவல்களும் (தொகுதி இரண்டு), முதற் பதிப்பு: 2016, அடையாளம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *