வண்டரித்த குருத்து

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 24, 2013
பார்வையிட்டோர்: 9,766 
 

வட பகுதியின் ஒரு துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கப்பல் அலை கடலில் ஆடி அசைந்து ,திருகோணமலையை நோக்கிப் போய்க் கொண்டிருந்த்து. அதில் பயணம் செய்து கொண்டிருந்த ,அகிலாவின் மனமும் அமைதியின்றி ,அலைந்து கொண்டிருந்தது.

பக்கத்தில் அவளது கணவர் சபேசன். இன்னும் சபேசனைப் போல், சிகிச்சைக்காகக் கொழும்புக்குச் செல்லும் நோயாளிகள். அவர்களுக்குத் துணையாகப் போகிறவர்கள் மற்றும் அலுவலக விஜயமாகக் கொழும்புக்குப் போகும் ,அரசாங்க உத்தியோகத்தர்களும், அக்கப்பலில் இருந்தார்கள்/ ஆயினும் அகிலாவுக்கு நடுக் கடலில் தனியாக விடப்பட்டது போல்,ஒரு பிரமை. சபேசன் நோய்வாய்பட்டதிலிருந்து ,அவளிடம் இப்படியொரு தவிப்பு. இருபத்தைந்து வருட இல்வாழ்க்கையில் ,அவள்தான் ஆசுபத்திரிக்குப் போய்ச் சிகிச்சை ,பெற்றிருக்கிறாள்.

சபேசனோ தன் சிகிச்சைக்காக ,இது வரை போனதில்லை. சிறிய சுகவீனம் வந்தாலும் வீட்டு வைத்தியத்தோடு குணப்படுத்தி விடுவார் ..புகைத்தல் குடித்தல் என்ற தீய பழக்கங்கள் எதுவும் இல்லாமல் ,ஒரு கட்டுப்பாட்டோடு வாழ்வதால் ,நோய் நொடிகள் தன்னை அணுகவில்லை என்று பெருமைப்பட்டுக் கொள்வார்.

கடந்த ஒரு வருடமாய் வேளாவேளைக்குச் சாப்பிடவும் நேரமில்லாமல் ,ஓய்வில்லாமல் உழைக்க வேண்டிய கட்டாயம், சபேசனுக்கு ஏற்பட்டது. கையிலிருந்த சேமிப்போடு கடனும் வாங்கி ,மகன் கல்யாணத்தை முடித்தார். அத்தோடு கொழும்பில் படித்துக் கொண்டிருக்கும் ,மகனுக்கும் ,பணத்தை வாரி ,இறைக்க வேண்டி இருந்தது.

வளவுக்குள் ஏதாவது ,மரத்தில் பணம் காய்த்தால்தான் ,இந்தச் செலவுகளைச் சமாளிக்கலாம் என்று திகைத்தவர்.பின் சாப்பாட்டையும் ,கவனியாமல்,ஓடியோடி உழைத்தார்.வயதும் ஐம்பதைத் தாண்டி விட்டது. உடம்பு கொஞ்சம் ஓய்வெடுக்க விரும்பும் நேரத்தில் ஓயாமல் ,வேலை செய்தார் ஏதோ நோய் பிடித்துக் கொண்டது. கொஞ்ச நாட்களுக்கு முன்,வயிற்றில் எரிவும் புகைச்சலும் ,ஆரம்பமாகி உக்கிரம் கொண்டது. சாப்பிட முடியாமல் வாந்தி வந்தது. தனக்குத் தெரிந்த சிகிச்சையெல்லாம் செய்து பார்த்து ,முடியாமல்தான் ஆசுபத்திரிக்குப் போனார். வயிற்றில் சத்திர சிகிச்சை செய்தால்தான் நோய் குணமாகும் என்றார்கள் .தான் இந்த நோயிலிருந்து மீள்வதில் ,அவருக்கு நம்பிக்கையில்லாமல் போய் விட்டது.

தன்னைப்பற்றி அவர் கவலைப்படவில்லை .அகிலாவைப்பற்றித்தான் மிகவும் யோசித்தார். .தனக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் ,தான் இல்லாத காலத்திலும் அகிலா கஷ்டமின்றி வாழ வேண்டும். மகளுக்கும் அவளுக்கும் ஒத்துப் போவதில்லை .அளவுக்கு மீறிய செல்லம் கொடுத்து வளர்த்ததின் பயனாய் மகள் தாயை மதிப்பதுமில்லை.அகிலாவை அவளுடன் விடக்கூடாது .கொழும்பில் படித்துக் கொண்டிருக்கும் மகனிடம் ,அகிலாவைப் பொறுப்பித்து விட்டால் தனக்குப் பெரும் நிம்மதி கிடைக்கும் போல்,சபேசனுக்குத் தோன்றியது. அவருடைய எண்ணத்திற்கு ஒரு வழியும் தெரிந்தது.

நோயாளிகள் வடக்கிலிருந்து சிகிச்சை பெறக் கொழும்புக்குப் போவதென்றால் கப்பலில் போவதற்குச் சலுகை உண்டு. அந்தச்லுகையில் கிடைத்ததுதான் அந்தக் கப்பல் பயணம். யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரை கப்பலில் போய் அங்கிருந்து தரை மார்க்கமாக நோயாளிகளுக்கென்று பிரத்தியேக வாகனம் ,மூலம் கொழும்புக்குப் போவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும். இரண்டு நாட்களுக்குப் போதுமான உணவு கொண்டு வரும்படி கப்பல் பிரயாணிகளுக்கு ,அறிவித்திருந்தார்கள் அகிலாவும் இரண்டு நாட்களுக்குத் தேவையான் உணவு கொண்டு வந்திருந்தாள். சபேசனுக்கு இந்த நோய் வந்ததிலிருந்து சாப்பிடவும் முடியாமலிருந்தது.அவர் சாப்பிடவில்லை. அதனால் அகிலாவும் சாப்பிடாமல் இருந்தாள். சாப்பாட்டுப் பார்சல் பிரிக்கப்படாமலே இருந்தது.

கணவனுடன் சந்தோஷமாகக் கொழும்புக்குப் போன அந்தப்பழைய நாட்கள். பொழுது
சாய்கிற நேரத்தில் தங்கள் ஊரிலிருந்த ஸ்ரேசனில், ,மெயில் றெயினில் ஏறிக் கோணர் சீற் பிடித்து றெயின் நகரத் தொடங்கி ,வேகம் ,எடுத்ததும் பின்னோக்கி ஓடுவது போல் தெரியும் காட்சிகளை ,மங்கிய வெளிச்சத்தில் ரசித்துக் கொண்டு சாவகச்சேரி ஸ்ரேசன் கடந்ததும் ,சாப்பாட்டுப் பார்சலைப் பிரித்து இருவரும் ஒன்றாய் சாப்பிட்டு விட்டுக் கடகடவென்று றெயின் ஓடும் சத்தம் தாலாட்டாய் பின்னணி இசைக்க சீற்றில் சாய்ந்து தூங்கி அடுத்தடுத்த ஸ்ரேசன்களில் ரீ கோப்பி சோடா என்ற குரல்களில் உறக்கம் கலைந்து ,ஏதாவது வாங்கிக் குடித்து ,விட்டு மீண்டும் தூங்கி வழிந்து அதிகாலை இருள் பிரிவதற்கு முன் ,கொழும்புக்கு வந்து சேர்கிற அந்தப் பயணங்களை இப்போது ,அவளுக்கு ஏக்கம்தான் மிஞ்சி நிற்கிறது.

இந்தக் கப்பற் பயணத்தில் கொண்டு வந்த சாப்பாட்டுப் பார்சல் ,பிரிக்கப்படாமலே அப்படியே இருக்கிறது .அகிலா சோர்வோடு சாய்ந்திருக்கும்,கணவனின் முகத்தை வேதனையோடு பார்த்துக் கொண்டிருந்தாள் “அகிலா”கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போல் ,சபேசனின் குரல்.

அகிலா குனிந்து அவர் சொல்வதைக் கவனித்தாள்,

“நீ சாப்பிடு அகிலா” அவள் வேண்டாமென்று ,தலையாட்டினாள்.

“அகிலா நீ கலங்காதே .அப்படி எனக்கொண்டு நேர்ந்திட்டாலும் கல்லுப் போலை மகன் நிஷாந்த் ,இருக்கிறான் .உன்னை அவன் நல்லாய் கவனிப்பான் .பிழைச்சுக் கொள்ளுவன் என்ற நம்பிக்கை ,எனக்கில்லை வயதும் ஐம்பத்தைஞ்சு ஆகுது.

ஆபரேஷன் செய்யப் போய் என்ன ஆகுதோ? .இப்ப நான் கொழும்புக்குப் போறது என்ரை சிகிச்சைக்காக ,மட்டுமில்லை. உன்னை நிஷாந்திட்டைச் சேர்க்கிறதுதான் ,முக்கியமான நோக்கம்.பலவீனமாக அவர் குரல் ,ஒலிக்கிறது.

அகிலாவின் உள்ளம் பதைத்து நெகிழ்ந்து உருகுகிறது.

இந்த வேதனையிலும் மகனைப் பார்க்கப் போகிறேனென்ற நினைவு ,சிறிய ஆறுதலைக் கொடுத்தது. அவள் நிஷாந்தைப் பார்த்து ஐந்து வாருடங்களாகின்றன நிஷாந்த் நல்லாய் படிக்கக்கூடிய ,பிள்ளை..கொழும்புக்குக் கூட்டிக் கொண்டு போய் அவனைப் படிக்க வைக்கிறனென்று சபேசனின் தம்பி தன்னுடன் அழைத்துச் சென்றார். அடுத்த வருடமே அவருக்கு வெளிநாட்டுப் பயணம் கைகூட நிஷாந்தை ஒரு நண்பனுடன் சேர்த்து ரூமில் தங்க வைத்து விட்டுப் போய் விட்டார்.சபேசன் ஒவ்வொரு மாதமும் அவனுக்குப் பணம் ,அனுப்பி,க் கவனமாய் படிக்குப்படி எழுதிக் கொண்டிருந்தார்.

நிஷாந்தின் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ,சபேசனும் அகிலாவும் எதிர்பார்த்தது போல் அமையவில்லை. .ஆயினும் அவர்கள் குறைப்பட்டுக் கொள்ளவில்லை. இனி வேறு ஏதாவது படி என்று மகனுக்கு ,எழுதினார்கள். அவன் கம்பியூட்டர் படிக்கப் போகிறேன் என்று எழுதினான் மாதம் தவறாமல் நிஷாந்திற்கும் தந்தையிடமிருந்து ,பணம் வாந்து கொண்டிருந்தது..

அவனது படிப்பு முடிந்து ,தம் சொந்த மருமகள் நிமாவைக் கொழும்புக்குக் கூட்டிக் கொண்டு போய் நிஷாந்திற்குக் கல்யாணம் செய்து வைக்க ,நினைத்திருந்தார்கள் ஆனால் அதற்குள் நோயாளியாகக் கப்பலில் போகவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

கப்பல் திருகோணமலையை ,அடைந்ததும் ,பிரத்தியேக வாகனத்தில் கொழும்புக்கு வந்தார்கள் .ஆசுபத்திரிக்குப் போகுமுன் நிஷாந்தைச் சந்திக்கச் சபேசன் விரும்பினார்,. ஆனால் நேரே ஆசுபத்திரிக்குக் கொண்டு வந்து சேர்த்து விட்டார்கள்.

உடனேயே அவரை டாக்டர் சோதித்து அடுத்த நாள் சத்திர சிகிச்சைக்குத் தயாராகும்படி சொல்லி விட்டார். .சிகிச்சைக்காகச் சபேசன் வந்திருக்கிற விடயம் நிஷாந்திற்குத் தெரிவிக்கவுமில்லை. உடனடியாக மகனைச் சந்தித்து அகிலாவை அவனிடம் ஒப்படைத்துவிட அவர் மனம் துடித்தது .அவரும் போகக்கூடிய நிலையில்லை. நல்ல வேளையாக ,அங்கிருந்து ,ஒரு டாக்டர் ,சபேசனுக்குத் தெரிந்தவராய் இருந்தார் ,அவரிடம் விடயத்தைச் சொல்ல ,அவர் நிஷாந்திற்குத் தகவல் சொல்லி ,அழைத்து வர ஒருவரை அனுப்பினார் .சபேசன் கொடுத்த விலாசத்தில்,நிஷாந்தைக் காணவில்லையாம் .பக்கங்களில் வசிப்பவர்களுக்கும் அவன் எங்கே போனான் ,என்பது ,தெரியவில்லை .கடைசியில் நிஷாந்தோடு சேர்ந்திருந்த நண்பனைத் தேடிப் பிடித்து விசாரித்த போதுதான்,விடயம் தெரிந்தது.

ஒரு வாரத்திற்கு முன் நிஷாந்தை ,ஆசுபத்திரியில் சேர்த்து விட்டானாம். பிறகுஅவன் போய்ப் பர்க்கவில்லையாம். .நிஷாந்திற்கு என்ன நேர்ந்தது ஆசுபத்திரியில் சேர்த்துவிடுகிற அளவுக்கு என்ன சுகவீனம் என்ற எந்த விபரமும் சொல்ல அவன் ,மறுத்து விட்டான். தந்தை சிகிச்சை பெறவந்திருக்கும் அதே ஆசுபத்திரியில் தான் ,மகனும் இருந்தான். இருதலைக் கொள்ளி எறும்பாய்த் தவித்து மகனிடம் ஓடி வந்தாள் அகிலா.இவன்தான் நிஷாந் என்று அடையாளம் காண முடியாமல் உருக்குலைந்து ஆசுபத்திரிக் கட்டிலில் அவன் படுத்திருந்தான். .அழுகையை அடக்கிக் கொண்டு ,அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்தாள் அகிலா.. தம்பி நிஷாந்த் ,என்று குரல் தழுதழுக்கக் கூப்பிட்டாள். அவன் மயக்கத்தில் ,கிடப்பவன் போல் அசையாமல், படுத்திருந்தான்..

உம்முடைய அம்மா வந்திருக்கிறா பக்கத்தில் நின்ற தாதியும் ,சொல்லிப் பார்த்தாள் .அவன் அசையவில்லை . பக்கத்தில் நிற்பது தாய்தான் ,என்பது அவனுக்குப் புரியாமலில்லை.புரிந்து கொண்டாலும் ,தாயை நிமிர்ந்து ,பார்க்கச் சக்தியற்றவனாய், சங்கடப்பட்டுக் ,கண்களை ,,மூடிக் கொண்டு ,பேசாமல் படுத்திருந்தான். பாவம் உறங்குகிறானாக்கும் ,குழப்ப வேண்டாம் என்றெண்னி ,அகிலா எழுந்து வந்தாள்

அவர்களுக்குப் பழக்கமான ,அந்த டாக்டர்தான் ,நிஷாந்திற்குச் சிகிச்சையளிக்கும் டாக்டரைச் சந்தித்து ,அவனை பற்றிய ,முழு விபரமும் ,அறிந்து வந்து ,அகிலாவிடம் சொன்னார். “நிஷாந்தைச் இந்தச் சின்ன ,வயதில் ஒரு பாதுகாவலன் ,இல்லாமல் இங்கு தனியாக விட்டிருக்கக் கூடாது ,நீங்கள் அவனைப் படிக்கிறதுக்காக ,இங்கு விட்டிருக்கிறியள் , ஆனால் இங்கு வந்த பிறகு ,அவனுக்குப் படிப்பிலை ஆர்வமில்லாமல் போயிட்டுது அவன் உற்சாகமில்லாமல் ,இருந்திருக்கிறான்.

அவனோடு கூட இருந்த நண்பன் ,உற்சாகமேற்பட வழி காட்டுகிறேனென்று தன் இலாபத்திற்காக ,அவனைப் போதைப் பொருள் ,பாவிக்கப் பழக்கி விட்டிருக்கிறான் பிறகு நீங்கள் அனுப்பிய பணம் முழுவதும் போதைப்பொருள் வாங்குவதில் போயிருக்குது அது மட்டுமா அவன் நாலைந்து பேரிடம் கடனும் வாங்கியிருக்கிறான்.தன் விரலில் போட்டிருந்த மோதிரத்தையும் விற்றிருக்கிறான். எல்லாம் போதை மருந்து வாங்கத்தான்.

இன்றைக்கு இதனுடைய றிசல்ட் என்ன? நிஷாந்தின் படிப்பு பாழாகிவிட்டது. அவயங்கள் எல்லாம் சோர்வடைந்து விட்டன.தானாய் எழுந்து நடக்க முடியாமல் இருக்கிறது.அவனுடைய குடல் எல்லாம் புண்ணாயிருக்கிறது.வயிற்றுப் புண்ணுக்குத்தான் இங்கு வைத்தியம் செய்கிறார்கள்”.வேதனையோடு சொல்லி முடித்தார் டாக்டர்.அகிலா நம்ப முடியாமல் திகைத்து அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றாள் சிறிது நேரம்.

பிறகு அவள் மகனிடம் போகவில்லை.குழந்தையைப் போல் அழுது கொண்டு கணவரிடம் போனாள்.சபேசன் பதறினார் நிஷாந்திற்கு என்னவென்று பதைபதைத்தார். அவள் தன் வேதனையை மறத்துக்கொண்டாள்.இந்த அதிர்ச்சியை சபேசனுடைய உடம்பு தாங்கிக்கொளாது என்ற பயத்தில் உண்மையைச் சொல்லவில்லை.நிஷாந்திற்கு வெறும் காச்சல்தான் என்று சொல்லி சமாளித்தாள்.

“காச்சலுக்கு ஏன் இப்பிடிக் கலங்குகுறாய்?”

சபேசன் மனைவிக்கு ஆறுதல் சொன்ன போதும் அவரது மனம் சஞ்சலப்பட்டது. இந்த நேரம் ஒடி ஒடி எங்களைக் கவனிக்க வேண்டிய பிள்ளை காய்ச்சல் வந்து படுத்திட்டுதே என்று கலவரப்பட்டார்.

அகிலாவோ உண்மையைச் சொல்ல ,முடியாமல் ,மனதிற்குள் வைத்துக் கலங்கிக் கொண்டிருந்தாள். மறு நாள் விடிந்தது .சபேசன் சத்திர சிகிச்சை ,செய்யும் ,இடத்திற்குப் போக ,ஆயத்தமாக ,ஸ்ரெச்சரில் படுத்திருந்தார் .பல நாட்களாய் சாப்பிடாததால் உடல் மிகத் தளர்ச்சியாக இருந்தது .நானினிப் பிழைக்க மாட்டன் ,என்ற நினைவு மனதில் ,எழுந்தது. .பக்கத்தில் அகிலாவைப் ,பரிதாபமாய்ப் பார்த்தார் .அந்த பார்வை அவள் அடக்கி வைத்திருந்த வேதனையைக் கிளறுவதாக இருந்தது .’ஐயோ ஆண்டவனே எனக்கினி ,ஒரு கதியுமில்லையே ‘என்று சொல்லிப் பெருங் குரல் எடுத்து அழுதாள்

‘நிஷாந் உன்னைக் கவனிப்பான். தானே .நான்தான் காவோலையாய் போயிட்டன் .இந்த நோயோடைவிழுந்தாலும் விழுவன் .அவன் இளங்குருத்து.அசைக்க முடியாது,

காய்ச்சல்தானே என்ன செய்யும்?’ மிகவும் கஷ்டப்பட்டுப் பேசினார் சபேசன் .அகிலா பதில் சொல்லாமல் ,கீழ் உதட்டைப் பற்களால் ,கடித்தபடி ,நின்றாள். .தாதி வந்து ஸ்ரெச்சரைத் தள்ளிக் கொண்டு போனாள். அகிலாவுக்கு உடலும் மனமும் ,ஓய்ந்து விட்டது ,போல் இருந்தது .என்ன செய்வதென்று அவளுக்குத் தெரியவில்லை சுவர்க் கரையிலிருந்த வாங்கில் ,அமர்ந்து விட்டாள். நீண்ட நேரமாய் ,உட்கார்ந்து ,கால்கள் விறைத்து போய் விட்டன .பசியோ ,தாகமோ வரவில்லை. .

நீண்ட நேரத்திற்குப் பிறகு ,இவர்களுக்குப் பழக்கமான அந்த டாக்டர் ,வந்து,உள்ளே போய் சபேசனின் ,நிலையை ,அறிந்து கொண்டு, ,அகிலாவிடம் வந்து ,கூப்பிட்ட போதுதான் பரபரப்போடு ,எழுந்து ,நின்றாள். .சபேசனுக்கு நல்லபடியாய் ,ஆபரேஷன் முடிந்து. இப்ப அவருக்கு ,மயக்கமும் ,தெளிந்திட்டுது .இனி ஒரு பயமும் இல்லை கொஞ்ச நேரத்திலை அவரை ,வார்டுக்குக் கொண்டு வருவினம்.

டாக்டர் சொன்னதைக் கேட்டதும் ,அகிலாவுக்கு ஒரு தெம்பு ,வந்து விட்டது ‘அவர் தன்னைக் காவோலை என்றார்.அந்தக் காவோலைக்கே இனி ஒரு பயமுமில்லையாம்.

காவோலையே தப்பி விட்ட பிறகு .என்ரை இளங்குருத்துக்கு என்ன பயம் .நாளைக்கே அவனும் எழும்பி விடுவான் .இந்த நினைவு மனதில் உற்சாகத்தை ஏற்படுத்தியது .

நிஷாந்தைப் போய் பார்த்திட்டு வருவம் ,என்று ,அவள் இரண்டு அடி ,எடுத்து வைக்கும் போது,சபேசனை ஸ்ரெச்சரில் கொண்டு வரூவது தெரிந்தது.. அவள் திரும்பிக் கணவனிடம் சென்றாள் அவர் கண்விழித்து ,ஒரு செக்கன் நேரம் ,அகிலாவைப் பார்த்து விட்டு, மீண்டும் கண் மூடினார் சத்திரசிகிச்சை செய்ததினால் களைப்பும் ஆயாசமும் இருந்ததே தவிர ,முந்திய உபாதைகள்.அகன்று விட்டன .குழப்பமில்லாத உறக்கம் ,வந்தது.

வேறு வார்டில் கடமை புரிந்த போதும் சபேசனுக்குப் ப்ழக்கமான ,அந்த டாக்டர் அடிக்கடி சபேசனையும் பார்க்க வருவார்.

‘இப்ப எப்பிடி இருக்கு?’’கேட்டுக் கொண்டே வந்தார் அந்த டாக்டர்

“நான் பிழைச்சிருவன் .என்ரை உடம்பு சுகமாகிக் கொண்டு வருகுது ஆனால் நிஷாந்தைப் பார்க்கிற டாக்டர் ,,திறமையில்லாதவரோ? அவனுக்கு இன்னும் , சுககமாகேலையாமே?”

அந்த டாக்டர் மிகத் திறமையானவர்.உங்களைப் போலை நிஷாந்திற்கும் வயிற்றில் ஆபரேஷன் செய்யவேண்டி இருக்குது.ஆனால் அந்த ஆபரேஷனை அவனுடைய உடம்பு தாங்குமோ என்றுதான் அவர் பயப்படுகிறார்’ அந்த டாக்டர் ,சொன்னதைக் கேட்டு ,சபேசனுக்குக் கோபம் வந்து விட்டது.

‘நான் காவோலை .என்ரை உடம்பே இந்த ஆபரேஷனைத் தாங்கிக் குணமடைந்து வருகுது .நிஷாந் ,இளந்தாரிப் பிள்ளை .அவன்ரை உடம்பு ,ஏன் தாங்காது?”

டாக்டர் பொறுமையாகப் பதில் சொன்னார் ‘ஊரிலை உங்கள் வளவுக்குள் ,இருக்கிற பனைமரம் தென்னை மரங்களைக் கவனித்திருப்பீர்கள்தானே. சிலவேளை நல்லாய் முற்றிப் பழுத்த ஓலைகள் எந்தக் காற்றுக்கும் விழாமலிருக்க ,குருத்துக்கள் சரிந்து போயிருக்கும். உள்ளே வண்டு போய் ,அந்தக் குருத்தின் அடியை அரிப்பதுதான் காரணம் இப்ப எங்கள் மனித இனத்திலும் அப்படித்தான் .முற்றிப்பழுத்த கிழங்கள் உறுதியாய் ,இருக்க இளம் பிள்ளைகள் பலர் வண்டரித்த குருத்துக்களாய் சரிகின்றனர். .உங்களைப் பற்றி எனக்கு நல்லாய்த் தெரியும் .உடம்பைக் கெடுக்கிற எந்தக் கெட்ட பழக்கமும் உங்களிடம் ,இல்லை. சிகரெட்டோ சுருட்டோ ,நீங்கள் புகைக்கிறதில்லை .கள்ளு சாராயம் குடிக்கிறதில்லை .வெற்றிலை பாக்குச் சுண்ணாம்போ நீங்கள் போடுறதில்லை .உங்கடை உடம்பிலை சுத்தமான நல்ல இரத்தம் ஓடுது/ எந்த ஆபரேஷனையும் உங்கள் உடம்பு தாங்கும்ஆனால் நிஷாந்,,,,,,,,,,,?கொஞ்சக் காலமாய் அவன் ,போதை வஸ்து உபயோகிக்கும் பழக்கத்திற்கு ,அடிமையாகி விட்டான்.அவன்ரை உடம்பிலை நச்சு ,இரத்தம்தான் ஓடுது. அவன் மிகப் பலவீனமாயிருக்கிறான் இருக்கிறான். வண்டரித்த குருத்து அவன். “காவோலை விழக் குருத்தோலை சிரிக்கும் என்றுதான்,அந்தக் காலம் பழமொழி ,ஆக்கினார்கள்.

இன்று நிஷாந்தைப்போன்றவர்கள்,”காவோலை இருக்க குருத்தோலை சரிகிறது” என்று புது மொழியை ஆக்குகிறார்கள்.

சபேசனுக்கு எல்லாம் புரிந்து ,விட்டது. .

பெரிய அதிர்ச்சிதான், அவருக்கு .ஆனால் அவருடைய ஒழுக்கமான உடம்பை ,இந்த அதிர்ச்சி ஒன்றும் செய்து விடாது.

– வீரகேசரி 1994

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *