தர்மம் ஜெயிக்கும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 5, 2023
பார்வையிட்டோர்: 1,446 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘நீங்கெல்லாம் இப்படி அசடுகளாய் இருக்கிறதினால் தான். அந்த மானேஜர் நினைச்சபடி நடக்கிறான். கேட்க ஆளு இல்லன்னு காட்டு தர்பார் நடத்துறான்.”

“ஏண்டா சேகர் இப்படிக் குதிக்கிற… விஷயத்தை நீயும் சொல்ல மாட்டே… நளினியையும் சொல்ல விடமாட்டே… நாங்களா ஞானக் கண்ணால புரிஞ்சிச்கணும். புரிய முடியாட்டா அசடுங்க. உன் அகராதியே தனிதாண்டா…’

“சொல்றத கேளுங்கப்பா. நளினிக்கு, ஹெட்குவார்ட்டர்ஸில் இருந்து 300 ரூபாய் அரியர்ஸ், ஜூன் மாதமே வந்திருக்கு. அவன் இன்னைக்குத்தான் இவளுக்குக் கொடுத்திருக்கிறான்.”

“இன்னைக்காவது கொடுத்தானே… எனக்கு ஒரு வருவடிம் இரண்டு மாதம் மூணு நாள் கழித்துக் கொடுத்தான்.”

“விட் அடிக்கிறதுக்கு இது நேரமில்ல. நளினியை ஜூன் மாதம் மூனாம் தேதி பணம் பெற்றதா கையெழுத்து போட ச் சொல்லியிருக்கான்… இந்த அசடும் ஆன்டி – டேட் போட்டு கொடுத்திருக்கு.”

“ரிக்கார்ட்ல அவள் கையெழுத்துப் போட்ட பிறகு நாம என்னடா செய்ய முடியும்?”

“அவள் இன்னைய தேதியை போட்டிருந்தாலும், அதுக்கும் ஏதாவது ஒரு சாக்கு சொல்லியிருப்பீங்க…”

நளினி கண்ணிர் விட்டாள். “உங்களுக்கு நல்லா தெரியும்… என் அம்மா போன மாதம் ஆஸ்பத்திரியில் எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு. அப்போ நான் பணத்துக்கு நாயா அலைஞ்சேன். இந்தப் பாவி… என் பன்னத்தை ஐந்து மாசமா வச்சிருந்தும் மூச்சு விடாம இருந்திட்டான்… கடைசியில… என் அம்மா மூச்சு தான் பிரிஞ்சுது.

சேகர் ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்ததுபோல், மோவாயைத் தடவி விட்டுக்கொண்டான்.

“நாம எல்லோருமா சேர்ந்து, மானேஜர் பண்ணுற அயோக்கியத்தனத்தை எம். டி. க்குத் தெரியப்படுத்துவோம். ஊழியருக்கு வந்த பணத்தை ஆறுமாதம் கையில வச்சிருந்துட்டு, அப்புறமா கொடுக்கிறான். இது முதலாவது கம்ப்ளெயிண்ட்.”

“இரண்டாவது ஒரு nரியஸ் கம்ப்ளெயிண்ட்.. ஊழியர்கள் ஆபீஸ் விஷயமா வெளில போகும்போது. டாக்ஸியில் போகலாம்னு ரூல்ஸ் இருக்கு. இவன் என்னடான்னா. போகாத ஊழியர்கள் போனதா சொல்லி. டாக்ஸிக்கு பில் போடச் சொல்றான். பணத்தை மட்டும் அவன் எடுத்துக்கிறான்… மூனாவது, ஆபீஸ் காரில், அவன் மாமியார்ல இருந்து மச்சினன் வரைக்கும் போறாங்க… நாலாவது, குறிப்பிட்ட ஒரு ஏஜெண்டுக்கு சலுகை பண்ணனுங்கறதுக்காக அவனே ஒரு நோட்டை டிக்டேட் செய்து, சம்பந்தப்பட்ட கிளார்க்கிடம் கையெழுத்துப் போடச் சொல்றான். இதெல்லாம் வச்சு… ஒரு ஜாயிண்ட் ரெப்ரசேன்டேஷன் கொடுக்கணும்.”

“எதற்கு சேகர் வம்பு… பேசாம மொட்டை மனு போடுவோம்.” என்றார் சின்னையன்.

“மொட்டைப் பெட்டிஷன் போடுறதைவிட வேற ஒரு பேடித்தனம் இருக்க முடியாது.”

சேகர், நீ விவரம் அறியாத பையன்… என்னோட இருபது வருட சர்வீஸ்ல மொட்டைப் பெட்டிஷனைப் பற்றி எதுக்குச் சொல்றேன்னா…”

சேகர் அவரை மேற்கொண்டு பேசவிடவில்லை. “ஆல் ரைட். நானே… என் சொந்தக் கையெழுத்தை முழுசா போட்டு. எம். டி. க்கு அனுப்பி வைக்கிறேன். ஆனால் ஒண்ணு. என்குயரி வரும்போது. நீங்கெல்லாம் நடந்ததைச் சொல்லணும். மானேஜர் இதுவரைக்கும் எனக்கு எந்தவிதக் கெடுதலும் செய்யவில்லை. தனிப்பட்ட மனிதர் எவனும் அக்கிரமம் செய்யக் கூடாதுங்றதுக்காகத் தான் எழுதறேன். அவருடைய முறைகேடான செய்கையால… நளினி மாதிரி நீங்கள் எல்லாம் பாதிக்கப்படுறிங்கன்னு நினைச்சுதான் எழுதப்போறேன்.” – தலைமைக் குமாஸ்தா, கும்பலின் பிரதிநிதிபோல் பேசினார். “சேகர், வேறு எந்த விஷயத்தில் எங்களை நம்பாவிட்டாலும் இந்த விஷயத்தில் சத்தியமாய் நம்பலாம்… என்குயரி வரட்டும்… புட்டுப்புட்டு வச்சிடுறேன்.”

இரண்டு வாரங்கள் ஓடின. சேகர், சகாக்கள் பேசிக் கொண்டிருந்த இடத்திற்குப் போனான். தலைமைக் குமாஸ்தா அவனைக் கட்டித் தழுவினார்.

‘சபாஷ் சேகர். உன் பெட்டிஷனுக்கு எபக்ட் இருக்கு ஒரு வாரமா மானேஜர் முகம் பேயறைஞ்சது மாதிரி இருக்கு. யார் போனாலும் உட்காருங்கன்னு மரியாதைக்குக் கூட சொல்லாத மனுஷன், இப்போ போனவுடனே, எழுந்து உட்காரச் சொல்றான். ஏதோ நடக்குது.’

“அப்புறம் இன்னொரு விஷயம். நல்லவேளை அந்த ஜால்ரா ராமனாதன் பயல் இல்லை. சொல்கிறேன்…” என்ற பீடிகையை, சிதம்பரம் போட்டுக் கொண்டே, மானேஜர் எம். டி. டெலிபோனில் பேசியதைக் கேட்டேன். நோ… நான் ஒன்னும் ஊழியருங்க பணத்தை வச்சிக்கல. நான் ஒன்றும் ஆபீஸ் காரை மிஸ்யூஸ் பண்ணல… நீங்க இங்க வரும்போது… உங்க பேத்தியை மகாபலிபுரத்துக்கு கூட்டிக்கிட்டு போனத. அபிவியல் கான்டாக்டா எழுதினேன். அவ்வளவுதான். மற்றப்படி இல்ல. எல்லாம். சேகர் பயலோட ஏற்பாடு என்று சொல்லிக்கிட்டு இருந்தான்… சம்திங் நடக்குது. சேகர், நீ மட்டும் இல்லன்னா இந்தக் கொம்பனை மடக்கியிருக்க முடியாது. உன்னால எங்களுக்கெல்லாம் மரியாதை.” என்றான்.

முத்துசாமி ஒரு பிரச்சினை எழுப்பினார்.

“சேகர் ரகசியமாய் அனுப்பின புகாரை, எம். டி. பரிசீலனை செய்து, ஆபீஸிற்கு சர்பிரை லா வந்து என்குயரி நடத்தியிருக்கணும். அதை விட்டுட்டு டெலிபோனிலேயே புகார் விவரங்களைப் பத்தி, மானேஜர்கிட்ட சொல்றார்னா ஏதோ சதி நடக்குதுன்னு அர்த்தம்.”

ஒரு மாதம் ஆகிவிட்டது. மானேஜர் தைரியமாகக் காட்சியளித்தார். சேகரிடம்கூட, தன்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்கிற மாதிரி சாடை மாடையாகப் பேசினார். முத்துசாமி தவிர, இதர சகாக்கள், அவனை விட்டு ஒதுங்குவதுபோல் தெரிந்தது.

தலைக்கு மேல் வெள்ளம்போன துணிச்சலில், சேகர் தனது பழைய புகாரையும், நியாயத்தைக் காணவேண்டிய மானேஜிங் டைரெக்டர் மானேஜருடன் சேர்ந்து கொண்ட அநியாயத்தை விவரிக்கும் புதிய புகாரையும் சேர்த்து, கம்பெனியின் ஒவ்வொரு டைரெக்டருக்கும் அனுப்பினான். இதை அவன் அனுப்புவதற்கு முன்னதாகவே தெரிந்து கொண்ட மானேஜர், அவனைப் பழிவாங்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவன் எழுதும் குறிப்புக்கள் ஏனோதானோ என்று இருப்பதாக மெமோ கொடுத்தார். அப்பாவுக்கு உடல்நலமில்லாததற்கு அவன் போட்ட லீவை சாங்ஷன் செய்யாமல் அவன் ஒரு நாள் சம்பளத்தைப் பிடித்தார். அவனுக்குச் சம்பந்தமில்லாத அனுபவமில்லாத வேலைகளை அட்மினிஸ்ரேட்டிவ் ரீஸன்ஸ் என்ற சாக்கில் கொடுத்து, அவன் தன் திறமையைப் பெருக்கிக் கொள்ளவேண்டும் என்று இரண்டாவது மெமோவைக் கொடுத்தார். அதே சமயம் தலைமைக் குமாஸ்தா தங்கவேலுக்கு, ஒரு டெம்பரரி பிரமோஷன் கிடைத்தது. தலைமைக் குமாஸ்தா பதவிக்குப் போனார். கேஷியர் வேலைக்கு, நளினி வந்தாள். அவர்கள் எந்த நேரத்திலும் வரலாம், போகலாம். மானேஜர், சொன்னபடி உட்காருபவர்கள், இப்போது சொல்வதற்கு முன்னதாகவே உட்கார்ந்தார்கள்.

சேகர் பொறிகலங்கிப் போனான். முதியவர் முத்துசாமி ஆறுதல் கூறினார்.

“கவலைப்படாதே கண்ணா… கடைசிப் படிக்கட்டு தான் கஷ்டமான படிக்கட்டு. தர்மம் ஒழிஞ்சு போனது மாதிரி தோணும்… கடைசியில் அதுதான் ஜெயிக்கும்.”

சேகர், தன் புகார்களைப்பற்றி மீண்டும் டைரெக்டர்களுக்கு நினைவுபடுத்தினான். விசாரணை இல்லையென்றால், அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்தான்.

ஒரு மாதம் ஆகியிருக்கும். விசாரணைக் குழு வந்தது. அந்தச் சமயத்தில் முத்துசாமி ஒய்வை முன்னிட்ட விடுமுறையில் போய்விட்டார். விசாரணைக்குழு முன்னால் தான் டாக்ஸியில் போனதாகவும், மானேஜருக்கு சம்பந்தம் இல்லையென்றும் அலிஸ்டெண்ட் மானேஜர் தங்கவேல் சத்தியம் செய்தார். ஜூன் மாதத்திலேயே பணம் வாங்கிவிட்டதாக நளினி உறுதி கொடுத்தாள். ஒவ்வொருவரும் போட்டி போட்டுக் கொண்டு, தங்கள் விசுவாசத்தைக் காட்டினார்கள்.

விசாரணை முடிந்த மாலையில், சேகர் தன் சகாக்கள் இருந்த இடத்திற்கு விரைந்தான்.

“பொட்டைப் பயல்கள்!” என்று தன்னையுமறியாமலே சாடினான்.

“ஆமாம். உன் வீரத்தைக் காட்டுறதுக்காக… நீ எதையாவது எழுதுவே. நாங்க எங்க பொண்டாட்டி பிள்ளைங்க வாயில… மண்ண போட்டுட்டு. உன்கூட சேரணும். நீ பெரிய வீரனாகணும். அப்படித்தானே,” என்றான் குமாஸ்தா துரை.

சேகர் இரண்டு நாட்களில் டிஸ்மிஸ் செய்யப்பட்டான். அந்த நிறுவனம், ஒரு பப்ளிக் லிமிடெட் கம்பெனி. அதன் பங்குதாரர்கள் அனைவருக்கும் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிபற்றி விரிவாகக் கடிதங்கள் எழுதினான். முத்துசாமி வழக்கப்படி “தர்மம் ஜெயிக்கும்.” என்று ஆறுதல் கூறினார்.

ஒரு மாதம் ஒடியிருக்கும். ரிட்டயரான முத்துசாமி அவனைத் தேடிவந்தார். சேகர், உனக்கு விஷயம் தெரியுமா? நீ எழுதின லெட்டர்களை வச்சே ஜெனரல் – பாடியைக் கூட்டியிருக்காங்க… இனிமேல் தில்லுமுல்லுகள் நடக்காமல் இருக்கிறதுக்கு பல சட்டதிட்டங்களை வகுத்திருக்காங்க… மானேஜரையும், மானேஜிங் டைரக்டரையும் துக்கிட்டாங்க.”

சேகர் துள்ளினான். “எனக்குப் பழையபடி வேலை கிடைக்குமுன்னு சொல்லுங்க.” “அது வந்து. உன்னை வேலையில் வைக்கனுமுன்னு. சிலர் சொல்லியிருக்காங்க. அப்படி உன்னை வச்சா… எல்லாரும் பெட்டிஷன் எழுத ஆரம்பிச்சு டுவாங்கன் னு மெ ஜாரிட்டி சொல்லிட்டதாம். அதாவது… நீ எழுப்பின பிரச்சினைகளை தீர்த்திருக்காங்க. ஆனால் உன் பிரச்சினையைத் தீர்க்கலை.”

தொண்டைக்குள் ஏதோ ஒன்று அடைப்பதையும் பொருட்படுத்தாமல், “அது போகட்டும், நம்ம ஆபீஸ் இப்போ எப்படி இருக்கு? என்று சொல்லிப் பேச்சை மாற்றினான் சேகர்.

“இப்போ வந்திருக்கிற புதிய மானேஜர் நேர்மையானவராம். பழைய தில்லுமுல்லு எதுவும் கிடையாதாம். ஆபீஸ் நியாயஸ்தலமாக நடக்குதாம். கடைசியில நான் சொன்னது மாதிரி தர்மம்…”

“ஜெயிச்சிட்டுது” என்று சொல்லப்போன வார்த்தையை வாய்க்குள்ளேயே ஜீரணித்து, அதன் அஜீரணத்தினால் திக்கித் திணறினார் முத்துசாமி.

“சும்மா சொல்லுங்க சார். கடைசியில் தர்மம் ஜெயிச்சிட்டுது… ஆனால் தர்மவான்தான் தோற்றுட்டான். சரிதானே?”

முத்துசாமி கண்களைத் துடைத்துக் கொண்டார்.

– ஒரு சத்தியத்தின் அழுகை – முதல் பதிப்பு : 1981, மணிவாசகர்பதிப்பகம், சென்னை-600108

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *