தர்மத்தின் தற்காப்பு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 5, 2023
பார்வையிட்டோர்: 1,547 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மிங்கம்மா, தலைவிரிகோலமாக, ஒட்டமும் நடையுமாய்ப் போவதை, ஊர்க்காரர்கள் கவனிக்கவில்லை. தலையில் இருந்த புல்லுக்கட்டே அதற்குக் காரணம். என்றாலும், இடுப்பில் குடத்தை வைத்துக் கொண்டு போகிற பெண்களைப் பார்த்து, “என்ன தண்ணிக்கா போறிய” என்றும், மண்ணெண்ணெய் வாங்க லாந்தர் விளக்கைத் தூக்கிக்கொண்டு போகிறவர்களைப் பார்த்து, “என்ன… மண்ணெண்ண வாங்கவா என்றும் குனிந்த தலையைச் சற்று நிமிர்த்தி, குறுநகையை இயல்பாகப் படர விட்டு, தலையில் இருக்கும் புல்லுக்கட்டு, அவள் தலைமுடியின் தொடர்ச்சிபோல் தோன்றும்படி அனாவசியமாய், அதே சமயம் அலட்சியம் இல்லாமலும், ஆளுக்குத் தக்கபடி கேள்வியையும், கேள்விக்குத் தக்கபடி பதிலையும் பேசிக்கொண்டு செல்லும் மங்கம்மா, அன்று, சேர்த்த உதடுகளைப் பிரிக்காமல், நடை போட்ட காலைத் தளர்த்தாமல் போவதைப் பார்த்து, ஒரு சிலர் கொஞ்சம் திகைப்படைந்தார்கள். இதில், அதிகமாய் திகைப்படையாத ஒருத்தி, “என்ன… மங்கம்மா, என்ன வந்துட்டுது இன்னைக்கி?” என்று மோவாய்ப் பக்கம் கையைக் கொண் டு போன போது, இன்னொருத்தி, ‘ஒனக்கு ஒவ்வொன்னையும் படிச்சிப் படிச்சிச் சொன்னாக்கூட தெரியாது. அவ புருஷன் திருநெல்வேலிக்கு வண்டி பாரத்தை ஏத்திக்கிட்டுப் போனவரு, நாலு நாளு கழிச்சி இன்னிக்குத்தான் வந்திருக்காரு. கருவாட்டுக் குழம்பை வச்சிக் கொடுக்காண்டாமா? அவரு கன்னத்தைப் பிடிச்சி திருவாண்டாமா?” என்று சுருதி போட்டாள்.

மங்கம்மா சிறிது நின்றாள். அந்த இரு பெண்களையும், அவர்கள் பேச்சையும் ரசித்துக் கொண்டிருந்தாலும், மேலுக்கு ‘பயனாளியளுக்கு… பேச்சைப் பாத்தியளா’ என்று சொல்லிக்கொண்டு, தளர்ந்த வேட்டியைக் கட்டிக் கொண்டும், உறிஞ்சு பொடியை மூக்கால் சுவைத்துக் கொண்டும் நின்ற சில கிழவர்களையும், மெளனமாகப் பார்த்தாள். அவளுக்கு அங்கேயே கதற வேண்டும் போலிருந்தது. அவர்கள் கைகளைப் பிடித்துக்கொண்டு, அவற்றில் தலை சாய்த்துக் கண்ணிரைக் கொட்டவேண்டும் போலிருந்தது. “இந்த நொறுங்குவான் மாசானம் இருக்காமுல்லா. அவன்… என்னை என்ன பண்ணினான் தெரியுமா…” என்று சொல்லி, ஊரைக் கூட்டி ஒப்பாரி வைக்க வேண்டும் போலிருந்தது.

மங்கம்மா பேசாமல் பிரிந்த உதடுகளை, கட்டாயமாகச் சேர்த்துக் கொண்டாள். கொட்டப் போன கண்ணிரைப் புல் கத்தைகளை வைத்து, லாவகமாகத் தேய்த்து விட்டுக் கொண்டாள். எதுவும் பேசாமல் மடமடவென்று நடந்தாள்.

போலீஸ் அவுட் டோஸ்டு மாதிரி, எந்தவித பந்தாவும் இல்லாமல் அனாதை மாதிரி இருந்த தன் ஒலை வீட்டின் முற்றத்தில், புல்லுக்கட்டை, புருஷன் இறக்கி விடுவது வரைக்கும், சுமந்து கொண்டு நிற்பவள், அன்று அதைப் பொத்தென்று தரையில் போட்டாள். திருநெல்வேலிக்கு விறகு வண்டியுடன் போய், வெறும் வண்டியுடன் திரும்பியிருந்த நடராஜன், நாலுநாட்கள் தூக்கக் கலக்கத்தை ஒரு மணி நேரத்தில் தீர்த்துக் கட்டி விடுவதுபோல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தவன், சத்தம் கேட்டு, கெட்ட கனவு கண்டவன்போல் திடுக்கிட்டு எழுந்தான். கண்களை, உள்ளங் கைகளால் தேய்த்து விட்டுக் கொண்டே, “நான்தான் வாரது தெரியுமே இன்னைக்கு. ஏம் புள்ள புல்லு வெட்டப் போனே’ என்று சொல்லிக்கொண்டே கைகளை மேலே துக்கி, ஒடித்து விட்டு, அவளை ஆசையோடு பார்த்தான். மாட்டுக்கொம்பில் போட்ட மணி மாதிரி ஒலிக்கும் அந்தக் குரல், “இந்த் நாலு நாளுல ஒரு நாளாவது என்னை நினைச்சாரா? கையில் அடிச்சிச் சொல்லும். அப்பதான் எல்லாம்” என்று வழக்கமாகச் சொல்லாமல் போனதில் சற்று ஏமாற்றமடைந்தாலும், அந்த ஏமாற்றம், அவன், அவளின் கவர்ச்சி முகத்தையும், சீனியரைக்காய் நிறத்தையும், உருளை மாதிரி உருண்டு திரண்டிருந்த அவயவங்களையும் ரசிப்பதைத் தடுக்கவில்லை.

மங்கம்மா, புருஷனையே சிறிதுநேரம் கண்கொட்டாமல் பார்த்தாள். கண்கொட்டவில்லையானால், நீர் கொட்டியது. உதட்டில் படிந்த உப்புநீரைத் துடைப்பதற்காக, கையைத் துக்கியவளால் தாள முடியவில்லை. கணவன் சாப்பிட்ட பிறகு, ஆற அமர நிதானமாகச் சொல்லவேண்டும் என்று நினைத்தவளால், தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. நார் கட்டிலில் இருந்து எழுந்திருக்கப்போனவனின் கால்களைப் பிடித்துக்கொண்டு, விம்மினாள். நடராஜன் பதறிப்போனான். அவள் முகத்தை நிமிர்த்தி, “என்ன பிள்ள என்ன நடந்தது. சொல்லு, சொல்லு” என்று சொல்லிவிட்டு, பிறகு அவள் எதுவும் சொல்லாமல் இருந்ததைப் பார்த்து, “சொல்லுமா என்று கொஞ்சம் அதட்டினான். மங்கம்மா, பேசப் போனாள். மீண்டும் அழுதாள்.

அவன், இப்போது அவளைச் சொல்லும் படி வாயால் கேட்கவில்லையென்றாலும், அவளைத் தன்னோடு இலேசாக அனைத்துக்கொண்டே, அவள் தலைமுடியைக் கோதிவிட்ட பாவம், மங்காவைப் பேசவைத்தது.

“நீரு வாரதுனாலே இன்னிக்கு போவாண்டாமுன்னு தான் நினைச்சேன். ஆனால், கீழத்தெரு மாமா மாட்டுக்கு அவசரமாகப் புல்லு வேணும், புண்ணாக்கு தீர்ந்து போச்சின்னார். அதனாலே மனமில்லாமதான் போனேன். புல்லு வெட்டிக் கட்டிவச்சிட்டு அந்த நொறுங்குவான் மாசானத்த கட்ட தூக்கிவிடச் சொன்னேன். அவன் ஒரு பக்கமும் நான் ஒரு பக்கமும் துக்கும்போது அவன் கையி என் விரல கிள்ளறது மாதிரி இருந்தது. நான் அத தற்செயலா நினைச்சேன். நாசமாப் போற பய என் தலையில புல்லுக்கட்ட வச்சிட்டு என் தோளுல அவன் கைய வச்சித் தட்டிட்டு என்னை எப்ப பிள்ள கவனிக்கப் போறேன்’னு கேக்குறான். நான் காறித்துப்பப் போனபோது என்ன… என்ன…”

அவள், மீண்டும் விம்மினாள். நடராஜன் மெளனமாக இருந்தான்.

“என் தோளுல கையைப் போட்டுக்கிட்டு உதட்டப் பிடிக்க வந்தான். நான் யாரு செய்த புண்ணியத்தாலோ தப்பிப் பிடிச்சி ஒடியாறேன்.”

கணவனிடம் சுமையைக் கொடுத்துவிட்ட ஆறுதலில், மங்கம்மா அவனைச் சோகமாகப் பார்த்தாள். நடராஜன் எதுவும் பேசவில்லை. சிறிதுநேரம் அசைவற்று உட்கார்ந்திருந்தான். நெற்றிப் பொட்டைத் தேய்த்து விட்டுக் கொண்டான். … மவனுக்குக் கெட்ட காலம்!” என்று சொல்லிக்கொண்டே முற்றத்தில் கிடந்த அரிவாளை எடுத்து, அதைக் கையில் தேய்த்துக் கூர் பார்த்துக் கொண்டே, இன்னும் வயக்காட்ல இருந்து வந்திருக்க மாட்டாமுல்லா!” என்றான்.

மங்கம்மாவுக்கு, அந்த வார்த்தையின் விபரீதம் புரிந்து விட்டது. ஒடிப்போய் அவன் கால்களைப் பிடித்துக்கொண்டாள். அவள் “விடுபிள்ள” என்று சொல்லு முன்பே, “அந்த நொறுங்குவான் சாவறதுல எனக்கு வருத்தங் கிடையாது, மச்சான்! ஆனால் அதனால நீரு ஜெயிலுக்குப் போறத என்னால உயிரோட இருந்து பார்க்க முடியாது” என்று சொல்லிவிட்டு, அவன் கால் பாதங்களில் தலையை இடித்து மோதி அழுதாள். நடராஜன், அவளைப் பலவந்தமாக விலக்கிக்கொண்டு வெளியேறிப் போனான். மங்கம்மா மன்றாடினாள்.

“அய்யோ, காளியம்மா! நானே ஒம்ம ஜெயிலுக்கு அனுப்பற பாவியாயிடுவேன் போலிருக்கே. நான் சொல்லுறதக் கேளும்.”

“விடுழா!… மவனைப் பணம் பழத்த சீவுறது மாதிரி சிவாட்டா நான் வேட்டி கட்டுறதுல அர்த்தமில்ல. விடுழா!”

“சொல்றதக் கேளும்.” ‘’நீ ஒண்ணும் சொல்லாண்டாம். நான் விறகு வெட்டிப் பிழைக்கறவன்தான். அதுக்காக மானத்த வெட்டிட்டுப் பிழைக்கப் போறதா இல்ல செறுக்கி மவன்!”

“நீரு நான் சொல்றத மீறி அவனைக் கொலை பண்ணுவீர்னா நான் நீரு வரதுக்குள்ள இந்த மம்மட்டியாலே என்ன நானே கொலை பண்ணிக்குவேன். போலீஸ்கார் ஒம்ம கையில விலங்கு போட்டுக்கிட்டுப் போறத என்னால பார்க்க முடியாது.”

அவள் சொல்வதை ஆலோசிப்பதுபோல், அவள் கைகளில் இருந்து விடுபட முண்டியடித்த கால்களை, அவன் சிறிது நிதானப்படுத்திய போது, மங்கம்மா சுதாரித்துக் கொண்டாள். எழுந்து, அவன் தோள்மேல், தன் இருகைகளையும் போட்டுக்கொண்டே, ஒரே சமயத்தில் குழந்தை மாதிரியும் பாட்டி மாதிரியும் பேசினாள்.

“நானும் கவுரிமான் வம்சத்திலே பிறந்தவதான் மச்சான். நான் சொல்றதக் கேட்டுட்டு அப்புறம் எப்படி வேணுமுன்னாலும் பண்ணும். ஊருல ஆளு இல்லாமலா போயிட்டு? பெரிய மனுஷனுங்க செத்தா போயிட்டாவ? நாலு மனுஷங்ககிட்டே சொல்லும். கேட்கத் தாங்கன்னு, கேளும். ஊர் விவாகரத்த வச்சி அந்த நாய்க்கிப் பிறந்த நாய் தலையில கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அடிக்கச் சொல்லுவோம். நமக்கு ஆளு பலம் கிடையாதுன்னாலும் நாம் அதர்மத்தைத் தட்டிக் கேட்கச் சொல்லுவோம். அதுக்கு ஆள் பலம் தேவையில்லை. இந்த அநியாயத்தைக் கேட்டுட்டு ஊர்க்காரனுங்க சும்மாவ இருப்பாவ? அந்த நாய நடு ரோட்ல வச்சி செருப்புக் கழற்றி அடிக்கப் போறாவ. இப்பவ டோயி சொல்லும். நடராஜன் புறப்பட்டான். ம.கம்மாவுக்கு மனசு கேட்கவில்லை.

“காப்பி சாப்பிட்டுப் புட்டுப் போம். எப்ப சாப்பிட்டிரோ?” ‘உனக்கு அறிவிருக்கா? இந்தச் சமயத்துல என் தொண்டைக்குள்ள… காப்பி இறங்குமா?”

நடராஜன் வேகமாக நடந்தான். மங்கம்மா காளியம்மா கோவில் திக்கைக் கையெடுத்தாள்.

‘காளியம்மா அந்த நொறுங்குவான் மாசானம் இப்ப இவர் எதிரில்… வந்துடப்படாது, தாயே!”

நடராஜன், வேர்க்க விறுவிறுக்க, கீழத்தெரு மாமா, என்று பலரால் அழைக்கப்படும் இசக்கிமுத்து வீட்டுக்கு வந்தான். ஊர் அண்ணாவிகளில் முதல் அண்ணாவி அவர். கோபக்காரர். குணக்காரர். எவர் வீட்டுக்கும் காரணமில்லாமல் போகாத நடராஜனின் வருகையின் காரண காரியத்தை அறியத் துடித்தார்.

“என்னடா? ஏன் இப்படித் தலைதெறிக்க வந்த உட்காரு!” – “ஒமக்கு, புல்லு வெட்டப்போன மங்கம்மாவ அவன், மாசானம் என்ன பண்ணியிருக்கான் தெரியுமா?”

“குடிகாரப் பய ஒன் பொண்டாட்டிக்கிட்டேயும் வாலாட்டுறானா?” “அவ தோளத் தட்டுனானாம். மவன்.” “ஏய், என் முன்னாலேயே திட்டாதடா, என்ன இருந்தாலும் அந்தப் பலவட்டறப் பய என்னோட சித்தி மவனாப் பொறந்து தொலைச்சிட்டேன்!”

“அவன் செஞ்ச காரியத்தைப் பாத்துட்டு நீரு இப்படிப் பேசினா எப்டி?”

“அதுக்காவ ஊர் நியாயத்தை விட்டுக் கொடுப்பனா என்ன? நாளைக்கே ஊர கூட்டுவோம். அவன ரெண்டுல ஒன்னு பார்த்துடவேண்டியதுதான். இல்லேன்னா ஊரு குட்டிச் சுவராயிடும். எதுக்கும் விஷயத்த கமுக்கமா வையி, பொம்புள விவகாரம்.”

“மாமா நாளைக்கி ஒமக்கு வெளியூர்ல வேல இல்லியா?” “இதைவிட அப்படி என்னடா பெரிய வேலை?” நடராஜன், அங்கிருந்து நகர்ந்தான். ஆசாமிக்குச் சித்தி மகன் மீதுள்ள ரத்த பாசத்தில், ஏற்பட்டிருக்கும் ரசாபாசத்தைக் குறைவாக மதிக்கலாம் என்று நினைத்தவனாய், இன்னொரு பிரமுகர் ஏகாம்பரத்திடம் போனான். ஏகாம்பரம் உள்ளூர் பிரமுகர் மட்டுமல்ல. ஒரு தடவை, சட்டசபைத் தேர்தலுக்கு நின்று, டிபாசிட் போகுமளவிற்கு வெளியூர்களுக்கும் தெரிந்த பிரமுகர். அவனுக்குத் தூரத்து உறவுகூட. சாப்பிட்டுக் கொண்டிருந்த ஏகாம்பரம் நடராஜன் சொன்ன சேதியைக் கேட்டு, சாப்பாட்டை வைத்துவிட்டு, பாதியிலேயே எழுந்துவிட்டார். கைகளைக் கழுவ வேண்டும் என்கிற எண்ணங்கூடஇல்லாமல், படபடத்தார். “மாசானத்த செருப்பைக் கழத்தி அடிக்கேன்பார். என்ன நெனைச்சிக்கிட்டான். நாளைக்கே பார் வேடிக்கையை” என்று சொல்லிவிட்டு, கை கழுவினார்.

இசக்கிமுத்து வீட்டிலிருந்து உற்சாகக் குறைவாக வந்த நடராஜன், இப்போது படு உற்சாகமாக மணியக்காரர் வீட்டுக்குப் போனான். விஷயத்தைக் கேள்விப்பட்ட அவர் என்ன நெனச்சிக்கிட்டான் படுவாப் பய. இந்த ஊர்ல மணியக்காரர் இருக்கார்னு நெனச்சிருந்தா இப்படிப் பண்ணுவானா? அவனை ஊர்விட்டே தள்ளி வைக்கேன் பார்” என்று சவாலிட்டார். அந்தச் சவாலில் மகிழ்ந்த நடராஜன் இன்னும் பல பெரிய இடத்துப் பேர்வழிகளைப் பார்த்துச் சொன்னான். அத்தனை பேரின் ரத்தமும் சொல்லி வைத்ததுபோல் கொதித்தது. பெரிய மனுஷனுங்க. மாசானத்தை விடமாட்டாங்க. நாம ஒண்னு கிடக்க ஒண்ணா கண்டபடி திட்டப்படாது என்று நினைத்துக்கொண்டே வீட்டுக்குத் திரும்பினான்.

மறுநாள் விவகாரத்தை நினைத்துக் கொண்டே தூங்காமல் படுத்தவன், காலையிலேயே இசக்கிமுத்துவின் வீட்டுக்கு, ஊர் கூட்டத்தை நினைவு படுத்துவதற்காகப் போனான். ஆனால், இசக்கிமுத்து, செங்கோட்டை போய்விட்டார். எப்போ வருவார் என்றால், குறைந்தது நாலு நாளாகும் என்று அவர் மகன் பதில் சொன்னான். நடராஜன் கூனிக்குறுகிக் கொண்டே, மணியக்காரர் வீட்டுக்குச் சென்றான்.

“இசக்கிமுத்து இல்லாட்டா ஊர் கூட்டம் நடக்காதா என்ன? அவரு இல்லாதது ஒருவகைக்கு நல்லதுதான். ஏடா கோடமானவன். இப்பவே தலையாரிகிட்ட சொல்லித் தண் டோரா போடச் சொல்லுதேன். பய மவன நீ விடுன்னாலும் நான் விடப்போறதுல்ல. அப்புறம் ஒரு விஷயம். நம்ம வெட்டியான் காணல. இந்த அரை மூட்ட நெல்லயும் பாஆர்ல ரைஸ் மில்லுல கொஞ்சம் குத்திட்டு வந்துடுறியா? காசு வேணுமின்னா தாரேன். நீயா காசு வாங்குறவன்? போயிட்டுச் சீக்கிரமா வா. நான் அதுக்குள்ள நாலு பேரைக் கலக்குறேன்…”

நடராஜன் அங்கிருந்தபடியே, மனைவியிடம்கூட சொல்லாமல், அரை மூட்டை ‘அவித்த நெல்லைத் தலையில் துக்கி வைத்துக்கொண்டு ரைஸ் மில்லுக்குப் போனான். அன்னா அன்னாவென்று அவன் வருவதற்குள் மாலை வந்துவிட்டது. மணியக்காரரிடம், ஊர்க் கூட்டத்தைப் பற்றிக்கேட்டால், தலையாரி, கொழுந்தியாள் சமைஞ்சதுக்குப் போய்விட்டதாகவும், அதனால் தண்டோரா போட முடியவில்லை என்றும், தண்டோரா போடாமல் கூட்டம் கூட்டினால், மாசானத்தின் ஆதரவாளர்கள் ஒத்தி வைப்புப் பிரேரணையைக் கொண்டு வருவார்கள் என்றும், தண்டோரா போடாத கூட்டம், ஊர்க் கூட்ட சாசனத்திற்கு விரோதமானதென்றும் கூறினார். அதே சமயம், அவன், குத்திவிட்டு வந்த அரிசியில், தவிடு அதிகமாக இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

நாலைந்து நாட்கள் ஓடின. ஊர்க்காரர்கள் டிக் கடைகளிலும், கோவில்களிலும், சாவடியிலும், கூடிக் கூடிப் பேசினார்களேயன்றி ஊர்க்கூட்டம் நடைபெறவில்லை. இவ்வளவுக்கும் அன்றாடக் கூலியில் காய்ச்சும் நடராஜன், நான்கு நாட்களாக வேலைக்குப் போகாமல், கண்டவர்களின் கால்களைப் பிடித்துக் கொண்டிருந்தான். அவன் மனைவியின் சுயமரியாதைக்காக, தனது சுய கெளரவத்துக்காக, பிரமுகர்கள் இட்ட பணிகளையெல்லாம் கெளரவத்தைப் பாராமல் செய்துமுடித்தான். அப்படியும் பிரமுகர்கள் அசையவில்லை.

இசக்கிமுத்துவைப் போய் மீண்டும் பார்த்தான். அவர், ‘ஏய் நடராஜா நான் மாசானம் பயல நாய பேசினது மாதிரி பேசினேண்டா, அவன் சத்தியமா நான் அவள தொடலங்கறாண்டா’ என்று சர்வசாதாரணமாகக் கூறிவிட்டார்.

நடராஜன் அசரவில்லை. டிபாசிட் இழப்பு ஏகாம்பரத்தைப் பார்த்தான். அவர், வீட்டுக்குள் இருந்து கொண்டே, தாம் இல்லையென்று சொல்லச் சொன்னார். அவர், பிணம் மாதிரி படுத்துக் கிடப்பதைப் பார்த்த அவன் கண்கள் அனல் கக்கின. அந்த வேகத்துடன் ம்ணியக்காரரிடம் போனான். அவர், அப்போது ரெவின்யூ இன்ஸ்பெக்டரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

“முன்சீப் அய்யா, என்னோட புகார எப்ப விசாரிக்கப் போறிய?” என்று கேட்ட நடராஜனைப் பார்த்து, எரிந்து விழுந்து ஏண்டா ஒனக்கு கொஞ்சமாவது மூள இருக்கா? இடம் பொருள் ஏவல் தெரியாண்டாம்? அரசாங்க விஷயத்த பேசிக்கிட்டிருக்கோம். ஒன் விஷயந்தான் உசத்தியோ!’ என்றார்.

மன்னியக்காரர், சில மணி நேரங்களுக்குப் பிறகு ரெவின்யூ இன்ஸ்பெக்டரைக் கோழியில் அடித்த பிறகு, ரெவின்யூ இன்ஸ்பெக்டருடனேயே வில் வண்டியில் ஏறிப் போய்விட்டார்.

நடராஜன் கிராமத்திலிருந்த எல்லாப் பிரமுகர்களையும் பார்த்தான். அவனிடம், அவர்கள் அனுதாபத்தோடு பதில் சொன்னார்கள். அந்த பதில்களில் சாக்குப் போக்குகள் இருந்தனவே தவிர, சாரம் இல்லை. சிலர், அவன் பின்னால் சிரிப்பது போலவும் தெரிந்தது.

“ஊர் பயலுவள நம்பிப் பிரயோசனம் இல்ல. இந்தப் பயலுவ பெண்டாட்டியள இப்ப எவனும் இழுத்திருந்தா இப்டி இருப்பாங்களா? ஒருவேள அதே மாசானம் டய அவளையும் இழுத்து இவனுங்க வெளியில சொன்னா வெக்கமுன்னு இருந்திருப்பாங்களோ? இருந்தாலும் இருக்கும். ஆனால் நான் இருக்கப்போறதில்ல. அவன் பெண்டாட்டிய வீட்ல பட்டப்பகல்ல புகுந்து கையைப் பிடிச்சி இழுக்கப் போறேன். அப்பதான் இவனுகளுக்கு உறைக்கும்.’

நடராஜன், மங்கம்மாவிடம் தன் திட்டத்தைச் சொன்னான். அவன், அதைச் சொல்லி முடிக்கு முன்னாலேயே அவன் வாயைப் பொத்திட்டு, அவள் தன் வாயைத் திறந்தாள்.

“ஒமக்குக் கொஞ்சமாவது மூள இருக்கா? இத ஒம்ம பெண்டாட்டிக்கு வந்த அவமானமா நினையாம ஒரு பெண்ணுக்கு வந்த அவமானமா நெனயும். அப்படி நெனச்சா அந்த அக்காகிட்ட அப்டி நடக்கணுங்கிற எண்ணமே வராது. என்ன வார்த்தை பேசிப்பிட்டிரு. வாய சீவக்கா போட்டுக் கழுவும்.”

நடராஜனுக்கு மனைவியின் நியாயம் புரிந்தது. அண்ணாச்சி’ என்று வாய் நிறையக் கூப்பிடும் மாசானத்தின் மனைவியை, மானபங்கப் படுத்த நினைத்ததற்கு வெட்கப்பட்டவன்போல், அவன் தலையைக் குனிந்துகொண்டான். ஆனால், மாசானத்தால் ஏற்பட்ட தலைகுனிவை எப்படிப் போக்குவது?

உள்ளூர் சகுனி ஒருவர், அவனை வெளியூரில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போகும்படி சொன்னார். போனான். அங்கே பணக்கார மாசானத்தைத் தெரிந்து வைத்திருந்த பாராக்காரர்கள் “வே அவனுக்கும் ஒம்ம பொண்டாட்டிக்கும் கள்ளத் தொடர்பு இல்லன்னு நல்லாத் தெரியுமா? இவள் ஒழுங்கா இருநதா அவன் எதுக்குவே தோளத் தொடறான்? கையைத் தொடும்போது சும்மா இருந்தாத்தான் தோளத் தொடச் சொல்லும். இல்லைன்னா சும்மா தொடுவானா? பிச்சிப்பிட மாட்டோம்” என்றார்கள்.

கூனிக்குறுகி ஊருக்கு வந்த நடராஜன், மனைவியிடம் விஷயத்தைச் சொல்லவில்லை. விவகாரம் முடிந்தாலொழிய இருவருக்கும் நிம்மதியில்லை என்பதைப் புரிந்து கொண்ட மங்கம்மா, புருஷனோடு சென்று இசக்கிமுத்துவைப் பார்த்தாள். அவரோ “எத்தன தடவ சொல்றது. சின்னப்பய மவன்தான், சின்னத்தனமா நடக்கலேங்கறான். அவன வெட்டச் சொல்றியளா?” என்றார். மணியக்காரர் – மாசானத்திடம் மணி வாங்கியதாக வதந்திக்கு உள்ளாகியிருக்கும் அந்த முன்சீப் – “குப்பயக் கிளறினா குப்பதான் வரும். நீயும் கண்டவங்கிட்டெல்லாம் – சூதுவாது இல்லாம சிரிச்சு பேசறத நிறுத்தணும்” என்றார். டிபாசிட் திலகம் ஏகாம்பரம் “இந்த விஷயம் சிக்கலானது. வேற விஷயத்துல அவன மடக்கிப்புடலாம். பொறு. நான் இந்தத் தடவயும் எலெக்ஷன்ல நிக்கப்போறேன். நீ என்ன சொல்ற?” என்றார். பஞ்சாயத்துத் தலைவர் “பார்க்கலாம்” என்றார். கணவனும் மண்ைவியும் காலே இல்லாததுபோன்ற உணர்வுடன் வீட்டுக்குத் திரும்பினார்கள்.

சப்த நாளங்களும் தெறிக்க, கோபம் தலைக்கேறி மூக்கு நுனியைச் செந்நிறமாக்க, கண்கள் எரிய, பற்கள் ஒன்றையொன்று கடிக்க, கை முஷ்டிகள் ஒன்றையொன்று குத்த கால்கள் தரையைத் தாக்க, கால்போன போக்கில் நடந்த நடராஜன், பழைய காலத்துக், கள்ளுக் கடைக்கருகே இசக்கி முத்துவும், மாசானமும் சிரித்துச் சிரித்துப் பேசுவதைப் பார்த்து, பைத்தியம்போல் சிரித்தான். வீட்டுக்கு வந்தவரிடம் ‘மணியக்காரரை நம்பாதீங்க, அவரு மாசானம் தங்கச்சிய காலேஜ்ல சேக்கரதுக்காக எம். எல். ஏ. கிட்ட கூட்டிக்கிட்டுப் போறாராம்” என்று மங்கம்மா சொன்னாள்.

இதற்கிடையே, “எந்தப் புத்துக்குள்ள எந்தப் பாம்பிருக்கோவே நெருப்பில்லாம புகை வருமா? இவள் சம்மதம் இல்லாம அவன் தொடுவானோ? தொட்டுட்டு ஊர்ல அவன் இருக்க முடியுமோ? நாமதான் சும்மா இருப்பமா? இந்த நடராஜன் பய ஒரு மக்குப் பிளாஸ்திரி. ரெண்டு பேரும் ஜாலியா இருந்தத எவனாவது பார்த்திருப்பான். 6 ہوتےa6 لir சொல்லுமு ன்னால நாம முந்திக்கிடுவோமுன்னு மங்கம்மா புருஷங்கிட்ட பாதிய மறச்சி சொல்லிட்டா. விஷயம் இதுதான். இதப் போயி நீங்க…” என்று ஊர்க்காரர்கள் முதலில் இலை மறைவு காய் மறைவாகவும், பிறகு, இலை காய்களைப் பறித்து விட்டும் பேசத் தொடங்கினார்கள் மங்கம்மாவின் காதுக்கு எட்டும்படியாகப் பேசத் தொடங்கினார்கள். அவமானம் தாங்கமுடியாமல், மங்கம்மா, தூக்குப் போடக் கயிற்றை எடுத்துவிட்டாள். அந்தச் சமயத்தில் வீட்டுக்கு வந்த நடராஜன் அவளைத் தடுத்ததுடன் மாமனார் வீட்டில் பாதுகாப்புக்காக அவளைக் கொண்டு விட்டான்.

“மச்சான்! நீரு என் மேல சந்தேகப்படுறிரா? நான் பத்தினி மச்சான். ஊர்க்காரங்க கேட்காட்டாலும் காளியம்மா அவனக் கேளாம போகமாட்டா என்று கதறிய மனைவியைக் கன்னத்தில் முத்தமிட்டு, தலையை ஆதரவாகக் கோதிவிட்டு, கையைத் தடவிவிட்டு, மடியில் கிடத்தி, குழந்தையைத் தாலாட்டுவது போல் ஆட்டிவிட்டு, ஆவேசம் வந்தவன் போல் நடராஜன் ஊருக்குத் திரும்பினான்.

அவனால் நம்பவே முடியவில்லை. நியாயம், நியாயம் என்கிறார்களே அது என்னது? இல்லாதவன் பெண்டாட்டி இப்ப மாசானத்துக்கு மட்டும் மயினி இல்ல, ஊர்க்காரங்க எல்லாருக்குமே மயினிதானா? இசக்கிமுத்து பெண்டாட்டிய எவனாவது இப்படிப் பண்ணியிருந்தா ஊர்க்காரன்கள் சும்மா இருப்பானா? இல்லாதவன் பக்கம் நியாயம் இருந்தாலும் அதுவும் அநியாயமா மாறிவிடுமா? எதையாவது பண்ணாட்டா நாம இந்த ஊர்ல மானத்தோட இருக்கமுடியாது. ஊர்க்காரன் இளக்காரமால்லா என்னை பார்க்கான். எதையாவது பண்ணனும். ஆள் பலமோ, பண பலமோ இல்லாத நான், அது எல்லாம் இருக்கிற மாசானத்த என்ன பண்ணமுடியும்? எதையாவது பண்ணனும். என்ன பண்ணலாம்? இல்லன்னா, இந்த ஊர்ல குடியிருக்க முடியாது. இத இப்படியே விட்டால் இனிமே வீட்டுக் கதவக் கூடத் தட்டுவாங்க!

நடராஜன் எளியவனாக இருந்தாலும், அந்த எளிமையையே பெருமையாகக் கருதும் முரடன் என்பதைத் தெரிந்து, அவன் கண்களில் படாமல் திரிந்த மாசானம், இப்போது காளியம்மன் கோவில் முன்னால் அட்டகாசமாக உட்கார்ந்திருந்தான். ஆறுன சோறு, பழய சோறு என்பது அவன் நெனப்பு. கோவிலுக்குப் பின் பக்கம் உள்ள ரோட்டில் நடந்து கொண்டிருந்த நடராஜனுக்கு “மாசானம்! நீ பெரிய ஆளுடா மங்கம்மாவ எப்டிடா பிடிச்ச? மயக்கிப் பிடிச்சியா, இல்லை, பிடிச்சி மயக்கினியா” என்று ஒருவன் கேட்பதும், அதற்கு, ரெண்டுந்தான்’ என்று மாசானம் சிரித்துக் கொண்டே பதில் சொல்வதும் நன்றாகக் கேட்டது.

அவ்வளவுதான் நடராஜனுக்குத் தெரியும். வெறி பிடித்தவன் போல் மாசானத்தில் முடியைப் பிடித்து மல்லாக்கக் கிடத்தினான். அவன் இடுப்பில் இருந்த கத்தி, மாசானத்தின் மார்பில் பாய்ந்து, கம்பர் சொன்னது போல், அவன் ‘மங்கம்மா ஆசையை அறவே அறுத்துவிட்ட திருப்தியில், அசையாமல் இருந்தது.

“கையைத் தொடும்போது சும்மா இருந்தாத்தான் தோள தொடச் சொல்லும்” என்று முன்பு இடக்காகப் பேசிய அதே போலீஸ் பாராக்காரர்கள், நடராஜன் கைகளில் பயபக்தியுடன் விலங்கிட்டு, அவனை இழுத்துக் கொண்டு போனார்கள்.

‘தர்மம் தன்னைக் காக்க, அதர்ம வேடம் போட்டிருப்பது போல், நடராஜன், அவர்களுக்கு மத்தியில் கம்பீரமாக நடந்தான்.

ஒரு கொலை விழுவதற்குக் காரணமான இசக்கிமுத்து, மணியக்கார வகையறாக்கள், “இந்த ஊரு சுத்தமா இருந்தது. இந்தப் பய கொலைய செய்து ஊருக்கே கெட்ட பேரை உண்டாக்கிட்டானே” என்று கெட்டவார்த்தைகளால் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஊர்க்காரர்கள் அதற்கு சிங்கி அடிக்கிறார்கள். செய்ய வேண்டியதைச் செய்யாமல் கெடுத்த அவர்களைப் பார்த்துக் காளி சிலை சிரிப்பது போலவும் சினப்பது போலவும் தெரிகிறது.

எப்படியோ, நடராஜன் மட்டும் ஜெயிலில் இருக்கிறான்.

– ஒரு சத்தியத்தின் அழுகை – முதல் பதிப்பு : 1981, மணிவாசகர்பதிப்பகம், சென்னை-600108

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *