‘சின்ன’ மாமா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 27, 2023
பார்வையிட்டோர்: 1,748 
 
 

பிரதான மண்டபத்தின் பெரும்பாலான பிளாஸ்ரிக் கதிரைகள் நிரம்பியிருந்தன. மண்டபத்தின் கதவோரமாயிருந்த கதிரையொன்றில் இரு ‘ஹெல்மெற்’றுக்களையும் வைத்துவிட்டு அடுத்த கதிரையில் அமர்ந்தான். மேடையை நிமிர்ந்து பார்த்த அவனால் கண்களை நம்ப முடியவில்லை. மாலை அணிவிக்கப்பட்டு அவனது சின்ன மாமாவின் உருவப்படம் வைக்கப்பட்டிருந்தது. பிரபல எழுத்தாளர் ‘கடல் கொண்டான்’ உரையாற்றிக் கொண்டிருந்தார். நான்கைந்து பிரபல இலக்கியவாதிகள் மேடையில் அமர்ந்திருந்தனர். விசயம் புரியாமல் மண்டபத்துக்குள் வந்து அமர்ந்துவிட்டதை உணர்ந்தான். வாசலில் வைக்கப்பட்டிருந்த கரும்பலகையில் எழுதியிருந்த அறிவித்தலை வாசிக்காமல் வந்து விட்டதை எண்ணிக் கவலைப் பட்டான். எழுந்து வெளியே போகலாமா எனவும் யோசித்தான்.

மயூரியின் ரியூசன் புதனும் வெள்ளியும்; நாலரையிலிருந்து ஐந்தரை வரையும்இ ஞாயிறுகளில் ஐந்தரையிலிருந்து ஆறரை வரையும் நடைபெறும். புதனும் வெள்ளியும் பிரச்சினை இல்லைஇ மயூரி வகுப்பு முடிந்து வரும் வரை மேலே நூலகத்தில் சென்று ஏதாவது சஞ்சிகைகளை வாசிக்கலாம். ஞாயிறுகளில் வகுப்பு நடைபெறும் நேரத்தில் நூலகம் பூட்டப்பட்டிருக்கும். கால் உளைய வாசலில் நிற்கலாந்தான். ஆனால் சில வேளைகளில் வாசலில் நிற்கும் இளைஞர்கள், வீதியால் போய் வரும் பெண் பிள்ளைகளுக்கு ஏதாவது பகிடிகள் விட்டு விட்டு பின்னாலுள்ள ‘கொமினிக்கேசனு’க்குள் ஓடி மறைந்து விடுவார்கள். பெண்பிள்ளைகள் திரும்பிப் பார்த்து முறைக்கும் போது இவன் தனித்து நின்று ‘முழுச’ வேண்டியிருக்கும். அருகிலுள்ள தொடர்மாடியில் வசிக்கும் நண்பனின் வீட்டுக்குப் போயிருந்து கதைக்கலாம். ஆனால் நண்பன்; ஞாயிறு மாலைகளில் திருப்பலி காண தேவாலயத்திற்குப் போயிருப்பான். அதனாற்தான் இப்படி வந்து மண்டபத்தில் அமர வேண்டியிருக்கிறது. அநேகமான ஞாயிறு மாலைகளில் இந்த மண்டபத்தில் புத்தக வெளியீடுகள்இ பாராட்டுக் கூட்டங்கள்இ விமர்சனக் கூட்டங்கள்இநூல் அறிமுக விழாக்கள்இ மணி விழாக்கள்இ பவள விழாக்கள் என்று ஏதாவது நடக்கும். ஏன்இ தற்போது எழுத்தாளர்களின் பிறந்த தினக்கொண்டாட்டங்களைக் கூட இந்த மண்டபத்தில் நடாத்தத் தொடங்கி விட்டார்களே! தேநீர்இ வடைஇ வாழைப்பழம் கூடக் கொடுப்பார்கள். வசதி கூடிய எழுத்தாளர்களின் விழாக்களில் பூந்தி லட்டுஇ மைலோ என்றும் கொடுக்கிறார்கள.

மாமாவின் உருவப்படத்தை உற்றுப் பார்த்தான். அம்மப்பாவின் முகச்சாயல் அச்சொட்டாய்த் தெரிந்தது. ஏன் பெரிய மாமாஇ அம்மா முகங்களிலுள்ள சில அம்சங்களும் சின்ன மாமாவின் முகத்தில் இருப்பது போலிருந்தது. அம்மா உயிருடன் இருந்திருந்தால் சில வேளை இந்தக் கூட்டத்திற்கு வந்திருப்பாவோ? கண்ணீர் மல்க மண்டபத்தில் உற்கார்ந்திருக்கலாம். சின்ன மாமாவை இருபது வருடங்களுக்கு மேலாகக் காணாமலே அம்மா செத்துப் போனாவே? பெரிய மாமாகூட சின்ன மாமாவைக் கனகாலமாய் காணாமலே இறந்தாரே சின்ன மாமாவுக்கு கல் மனமா?

கடல் கொண்டான உரத்த குரலில் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகிறார்.

‘எழுத்தளனை மதிக்காத சமுதாயம் இன்று நாட்டில் வாழ்கின்றது. உன்னத எழுத்தாளன் திருநாவுக்கரசின் இறுதி ஊர்வலத்தில் நான்கு எழுத்தாளர்கள் மட்டுந்தான் பங்கு கொண்டார்கள். சீ! வெட்கம.;’

இவனுக்கு சிரிப்பு வந்தது. அம்மப்பா இறந்தபோது இவனுக்கு பதினைந்து வயது. அக்காலத்தில் சின்ன மாமா கிளிநொச்சியில் நிர்வாக அதிகாரியாக இருந்தார். தொலைபேசி வசதியில்லாத காலமது. மரணச் செய்தியை சின்ன மாமாவுக்குச் சொல்ல இவனும் பக்கத்து வீட்டு கதிரேசு மாமாவும் ஊரிலிருந்து நடந்து அரியாலைக்குப் போய் நெடுங்குளம் சந்தியில் பஸ் பிடித்து கிளிநொச்சிக்குப் போனார்கள். அது ஒரு விடுமுறை நாள். மாமா ‘குவாட்டஸி’ல் இருந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். வாசலில் இவர்களைக் கண்டதும் எழுந்து வெளியே வந்தார். வீட்டுக்குள் கூப்பிடவில்லை. மாமா அத்தைக்குப் பயப்படுபவர். விடயத்தைச் சொன்னதும் வீட்டுக்குள் போனவர் வெளியே வர நேரமெடுத்தது. வீட்டுக்குள் வாக்குவாதப்படும் சத்தம் கேட்டது. கால் மணிநேரத்தில் வெளியே வந்தவர்,

‘நீங்க போங்க! நான் வாறன்’ என்றபடி கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போனார்.

அத்தையையும் பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு அலுவலக ஜீப்பில் வரப் போகின்றார் போல.

ஐந்தரை மணியாகியும் சின்ன மாமா வரவில்லை. செத்த வீட்டுக்கு வந்த ஆட்கள் ஒவ்வொருவராய் வீடுகளுக்குப் போயினர். சவக்கிரிகைகள் முடிந்து ஐயரும் போய் விட்டார். பறை மேளம் அடிப்பவரகள்; கூட களைத்துப் போய் இருந்தாரகள்;

‘நாங்கள் பிரேதத்தை எடுப்பம்இ தம்பி இனி வரமாட்டான்’ பெரிய மாமாவின் குரலில் கோபத்தை மீறிய துக்கம் தெரிந்தது.

‘வேண்டாம்! ஆறு மணி வரை பாப்பம்ஞ்ஞ் அவன் எப்படியும் வருவான்’ அழுதபடி அம்மா சொன்னா.

ஆறரை மணியாகியும் சின்ன மாமா வரவில்லை. கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு மரணச் சடங்கிற்கு வந்து போகும் நேரத்தில் சில சிறுகதைகள் எழுதலாம் என்று நினைத்தாரோ! வீட்டில் எஞ்சி நின்ற பத்துப் பதினைந்து ஆண்களுடன்இ இருட்டியபின் அம்மப்பாவின் பாடை துண்டி மயானத்திற்குக் கிளம்பிற்று.

‘திருநாவுக்கரசு மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்து தன் திறமையால் சமுதாயத்தில் உயர்ந்த மனிதர்’ கடல் கொண்டான் தொடர்கிறார்.

தன் தம்பி திருநாவுக்கரசு போலப் படித்தவர் ஊரிலில்லை என்று சொல்லிக் கொள்வதில் அம்மாவுக்கு அளவிட முடியாத சந்தோசம் இருந்தது. ஊரிலிருந்து முதன் முதல் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானவர் தனது தம்பி என்று சொல்வதில் அவவுக்;கு பெருமை. எவ்வளவுதான் கோபமிருந்தாலும் பெரிய மாமாவுக்கும் தனது தம்பியைப் பற்றிப் பெருமை தான்.

சின்ன மாமாவுக்கு பத்து வயதாக இருக்கும்போது அம்மம்மா இறந்து விட்டாவாம். அந்த நேரத்தில் அம்மா திருமணம் முடித்திருந்தார். சின்ன மாமா அம்மாவின் மூத்த பிள்ளை போலத்தான் வளர்ந்தாராம். மகா வித்தியாலயத்தில் படித்து முதற்தரம் ‘அட்வான்ஸ் லெவல்’ பரீட்சை எடுத்தபோது சின்ன மாமாவுக்கு பல்கலைக்கழக அனுமதி கிடைக்கவில்லை. கணபதியரின் வள்ளத்தில் இரு வாரமாய் தொழிலுக்குப் போனவரை மறித்துஇ தனது சோடிக் காப்புகளை அடகு வைத்துஇ நமசிவாய வாத்தியாரைப் பிடித்துஇ சின்ன மாமாவை சென். ஜோன்ஸில் சேர்த்துவிட்டா. சென். ஜோன்ஸில் படித்து இரண்டாந் தரம் ‘அட்வான்ஸ் லெவல்’ பரீட்சை எழுதித்தான் சின்ன மாமா பல்கலைக் கழகத்திற்குத் தெரிவானார்.

அந்தச் சோடிக் காப்புக்கள் அம்மா கிடுகு பின்னியும் தேங்காய் மட்டைகளை கடலில் ஊற வைத்துஇ பின்னர் அதை எடுத்து தும்பாக அடித்து, கயிறாகத் திரித்து விற்ற பணத்தில் மீட்கப்பட்டதாக இவன் அறிந்திருந்தான். மாமாவின் பல்கலைக் கழகச் செலவுகளுக்காக அச் சோடிக்காப்புகள் அடிக்கடி காசிப்பிள்ளையரின் வீட்டில் அடகுக் போய் பின்பு மீட்கப்பட்டு வரத் தொடங்கின.

‘பல்கலைக் கழகத்திற்கு பிரவேசிக்கும் முன்னரே திருநாவுக்கரசு எழுதத் தொடங்கி விட்டார். பல்கலைக் கழக தமிழ்ச் சங்கம் நடாத்திய சிறுகதைப் போட்டியில் திருநாவுக்கரசின் ‘கொண்டல்;’ தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. அப் போட்டியில் எனது ‘இலுப்பை மரம்’ இரண்டாம் பரிசு பெற்றது. பல்கலைக் கழகத்தில் திருநாவுக்கரசு கற்றுக் கொண்டிருந்த வேளையிலேயே அவரின் ‘சிறுதும்பும் கயிறாகும்’ என்ற சிறுகதைத் தொகுதி வெளியாயிற்றுஞ்.’ சின்ன மாமா தங்கப் பதக்கம் பெற்றதைச் சொல்லி தான் வெள்ளிப் பதக்கம் பெற்ற விசயத்தையும் சபையில் கடல் கொண்டான் சொல்கிறாரே!

‘சிறுதும்பும் கயிறாகும்’ வெளியாவதற்காக அம்மாவின் அச் சோடிக் காப்புகள் காசிப்பிள்ளையரிடம் அடகு வைக்கப்படவில்லை, குமாரசாமியரிடம் விற்கப்பட்டன.

வெளியீட்டுச் செலவுகளுக்காக பெரிய மாமா கூட சிலாபத்திலிருந்து பணம் அனுப்பினாராமே.

சின்ன மாமா பல்கலைக்கழகத்தில் இருந்த காலத்தில் வீட்டு முற்றத்தில் காய்த்த மாம்பழங்களை, கார்ட் போர்ட் பெட்டிகளில் துவாரமிட்டு வைக்கோலை உள்ளே பரப்பி அதற்குள் பக்குவமாக வைத்துக் கட்டி, அம்மப்பா தபாலில் பேராதனைக்கு அனுப்புகிறவராம். முகவரியை ஆங்கிலத்தில் எழுதுவிக்க கச்சேரிக் கிளாகரின் வீட்டுக்குப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு போவாராம்.

‘திருநாவுக்கரசு தான் காதலித்த பெண்ணையே கரம் பற்றினார். இவருக்கு இரு பிள்ளைகள் அவர்கள் சமூகத்தில் உயர்ந்த பதவிகளில் உள்ளனர்.’

பட்டதாரியாகி ஊருக்கு வந்த சின்ன மாமா கோவிலுக்குப் போவதைக் கைவிட்டார். தாடி வளர்த்து சமதர்மம் பேசினார். கட்சி அலுவலாய் காலையில் வீட்டை விட்டு வெளிக்கிட்டு மாலையில் திரும்பத் தொடங்கினார். அம்மப்பாவின் முணுமுணுப்பைச் சகிக்காமல் அம்மா கச்சேரிக் கிளார்க்கரைக் கொண்டு ஆசிரியர் சேவை விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து சின்ன மாமாவிடம் ஒப்பம் பெற்று அனுப்பிவைத்தார்.

சின்ன மாமா ஆரம்பத்தில் கற்ற பாடசாலையிலேயே ஆசிரியரானார். அப்பாடசாலைக்கு அருகில் வசித்த பெண்ணொன்றை அவர் காதலிப்பதாகக் கேள்விப்பட்ட அம்மப்பா வீட்டில் நெருப்பெடுத்தார். தன் மகன் வேறு சாதிக்குள் திருமணம் புரிவதை அவர் வெறுத்தார். நாலைந்து வேளை சாப்பிடால் இருந்த அவரை அம்மா, அப்பா, பெரிய மாமா, மாமி ஆட்கள் சரிப்பிடிக்கப் பெரும்பாடாயிற்று.

திருமணத்தின் நாலாஞ் சடங்கின் பி;ன்பு தகப்பன் வீட்டுக்குப் போன அத்தை கணவனின் ஊர்ப்பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்கவில்லை. சின்ன மாமாதான் இடைக்கிடை ஊர்ப் பக்கம் வந்து போய்க் கொண்டிருந்தார்.

அவர் இலங்கை நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்த செய்தியறிந்த அம்மப்பா பூரித்துப் போனார். துறைமுகத்தடி, கோவிலடி. எங்கும் சொல்லித் திரிந்தார். அதன் பின் சின்ன மாமா ஊர்ப் பக்கம் வருவதில்லை. குடும்பத்திற்கும் அவருக்குமிடையிலான தொடர்பு அறுந்து போயிற்று. அத்தைக்கு தாங்கள் உயர்ந்த சாதியென்ற நினைப்பிருப்பதாகவும் அவர்தான் சின்ன மாமாவை ஊர்ப் பக்கம் விடுவதில்லை எனவும் ஒருநாள் அம்மா பெரிய மாமாவுடன் கதைத்துக்கொண்டிருந்ததை இவன் கேட்க நேர்ந்தது. அதனாற் தான் சின்ன மாமா அக் காலங்களில், சாதி ஒழிப்புச் சம்பந்தமாக நிறையச் சிறுகதைகளையும் குறுநாவல்களையும் பத்திரிகைகளில் எழுதிக் குவித்தார் போலும்!

நிர்வாக சேவைபதவிகள் பெற்று சின்ன மாமா முல்லைத்தீவு, மன்னார், ஊர்காவற்றுறை, கிளிநொச்சி என்று வேலை செய்வதாக பலர் பேசிக் கொண்டதைக் கேட்டிருக்கிறான். அக் காலத்தில் அம்மப்பா யோசித்துக்கொண்டு திரிந்தார். சின்ன மாமாவின் திருமணத்திற்குத் தன்னைச் சம்மதிக்க வைத்தமைக்காக அம்மாவையும் பெரிய மாமாவையும் ஏசித்திரிந்தார். அதனால் தான் தன் செல்ல மகன் தன்னை விட்டுப் பிரிந்ததாகக் கவலைகொண்டார். அக்கவலை அவரை படுக்கையில் தள்ளிற்று. பெரியாஸ்பத்திரியில் அவரிருந்த போது சின்ன மாமாவைப் பார்க்க ஆசைப் பட்டார். கிளிநொச்சிக்கு தந்திகள் பறந்தன. இவர்கள் ஏன் தந்தி அடித்து அவரின் பணிகளைக் குழப்ப முயற்சித்தார்கள? சின்ன மாமா அம்மப்பாவை உயிருடன் இல்லையென்றாலும் சடலமாகவும் கூடப் பார்க்கவில்லை.

கள்ள மரம் கடத்தி வேலையால் அவர் நிறுத்தப்பட்டுள்ளதாக சங்கக் கடையில் ஆட்கள் கதைத்ததாக, பெரிய மாமா ஒருநாள் அம்மாவுக்குச் சொன்னார். அம்மப்பாவுக்குச் செய்த கொடுமை சின்ன மாமாவைத் தாக்குவதாக ஊரில் பலர் பேசிக்கொண்டனர்.

‘தமிழ்நாட்டவர்களால் அங்கீகரிக்கப்பட்ட ஈழத்து எழுத்து வேந்தன் திருநாவுக்கரசு!’ கடல் கொண்டான் தொடர்கிறார்.

வேலையால் இடைநிறுத்தப்பட்டதன் பின்பு சின்ன மாமா இந்தியா சென்றுவிட்டதாக ஊரில் சிலர் இவன் காதுபடப் பேசித் திரிந்தனர். சின்ன மாமாவுக்கு எத்தனை பிள்ளைகள் என்றுகூட இவனுக்குத் தெரியாது. பின்பு சின்ன மாமாவைப் பற்றிய தகவல்கள் பல ஆண்டுகளாக இவர்களுக்குத் தெரியவில்லை. அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லை என்பதுகூடத் தெரியாமல் பல ஆண்டுகள் கழிந்தன. திடீரென்று அவரெழுதிய சிறுவர் நாவலொன்றை நூலகத்தில் பார்க்க நேர்ந்தது. அதன் பின்பு அவரின் பல நாவல்களையும் சிறுகதைத் தொகுப்புக்களையும் பொது நூலகத்தில் காணக் கூடியதாகவிருந்தது. தமிழ்நாட்டில் அடிக்கடி விருதுகள் பெற்று அவர் கௌரவிக்கப்பட்டுக்கொண்டிருந்தார். இவனின் திருமண அழைப்பிதழைக்கூட அம்மாவின் விருப்பத்திற்காக சின்ன மாமா அடிக்கடி எழுதும் தமிழ்நாட்டிலுள்ள பிரபல இலக்கிய இதழின் முகவரிக்கு மேற் பார்த்து அனுப்பிவைத்தான். அவ் அழைப்பிதழ் அவர் கரம் சேர்ந்ததோ தெரியாது. ஊரிலிருந்த சின்ன மாமாவின் குடும்பம் கொழும்பில் குடியேறி விட்டதாக பின்பு அறிந்திருந்தான்.

‘சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட போது பூமிப் பந்தெங்கும் பரந்திருந்த திருநாவுக்கரசின் வாசகர்கள் தாமாகவே முன் வந்து பொருளுதவி செய்தனர். தமிழ் நாட்டு வாசகர்கள் செய்த இரத்த தானம் திருநாவுக்கரசை எமனின் பிடியிலிருந்து மீட்டு வந்தது.’

சின்ன மாமா சிறுநீரக நோயாற் பாதிக்கப்பட்டு தமிழ் நாட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி கேள்விப்பட்ட அம்மா, சாப்பிடாமல் உபவாசமிருந்தா. கோவிலிற்குப் போய் நேர்த்திகள் வைத்தா. பெரிய மாமா சைவ உணவு உட்கொண்டு அம்மன்இ ஐயனரர், பிள்ளையார், வைரவர் கோவில்களுக்குப் போய் வந்தார். உடன் பிறப்புக்கள் அல்லவா? சின்ன மாமாவின் வாசகர்களின் பிரார்த்தனையோ, உடன் பிறப்புக்களின் பிரார்தனையோ அல்லது இரண்டும் சேர்ந்தோ அவர் உயிர் மீட்கப்பட்டுவிட்டது!

‘நோயிலிருந்து மீண்டு இலங்கை வந்த திருநாவுக்கரசு ஈழத்துப் படைப்பாளிகளின் நூல்களை வெளியிட்டார்.’

சின்ன மாமா கொழும்பு வந்த செய்தி அறிந்த அம்மா அவரைச் சந்திக்கத் துடியாய்த் துடித்தார். கொழும்பிலிருந்து வெளியாகும் இலக்கியச் சஞ்சிகையொன்றுடன் தொடர்பு கொண்டு சின்ன மாமாவின் வீட்டுத் தொலைபேசி எண்களை இவன் பெற்றுக் கொண்டான். அம்மாவை சைக்கிளில் ஏற்றிக்கொண்டு போய் சுண்டுக்குளியிலிருந்த ‘கொமினிக்கேச’னில் அந்த எண்களுக்கு அழைப்பெடுத்தான். பெண் குரலொன்று பேசிற்று. அத்தையாக இருக்க வேண்டும்.

‘நீங்கள் யார?;’

இவன் தான் யாரென்பதைச் சொன்னான். ரிசீவர் படாரென்று வைக்கப்படும் ஒலி தெளிவாகக் கேட்டது. தொடர்ந்து அந்த எண்களுக்கு முயற்சி செய்தான். ரிசீவர் தூக்கப்படவில்லை. எழுத்துலக ஜாம்பவானின் பணியைக் குழப்பக் கூடாது என அத்தை நினைத்தாரோ? வீட்டில் அம்மாவின் ஆக்கினை தாங்க முடியாமல்இ இரு வாரங்கழித்து அம்மாவுடன் வந்து மீண்டும் அதே ‘கொமினிக்கேச’னில் இருந்து சின்ன மாமாவுக்கு ரெலிபோன் எடுத்தான். இந்த முறை சின்ன மாமா ரிசீவரைத் தூக்கினார். இவனுக்குச் சந்தோசமாயிருந்தது.

‘மாமா அம்மா கதைக்கப் போறாவாம்!.’

‘எனக்கு இப்ப நேரமில்லை பிறகு எடுக்கச் சொல்லு’ பின்னால் அத்தை ஏதோ ஏசுவது கேட்டது.

கடல் கொண்டான் பேசி முடித்து இருக்கையில் அமர எழுத்தாளரும் சஞ்சிகை ஆசிரியருமான பத்மநாதன் பேசத் தொடங்கினார். இவன் சபையைப் பார்த்தான். இந்த மண்டபத்தில் நடைபெறும் கூட்டங்களுக்கு வழக்கமாக வரும் வயோதிபர்கள்இ புதிதாய் எழுதத் தொடங்கியிருக்கும் சில இளம் எழுத்தாளர்கள்இ வேறு சில புது முகங்கள் இருந்தன.

‘திருநாவுக்கரசு மக்களை நேசித்த அதிமானுடன்..’ பத்மநாதன் உரையாற்றினார்.

சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டு ஏ9 வீதி திறக்கப்பட்ட காலத்தில்; அம்மா மகரமக புற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தா. அம்மா சின்ன மாமாவைப் பார்க்க பெரிதும் விரும்பினா. அப்போது அவர் கொள்ளுப்பிட்டியில் பதிப்பகமொன்றில் அதிகாரியாவிருந்தார். இவனுக்கு அவரைச் சந்திக்கவிருப்பமிருக்கவில்லை. அம்மாவுக்காக மகரமகவிலிருந்து 112 இல் ஏறி மாமாவின் அலுவலகத்திற்குப் போனான்.

வௌளைச் ‘சேர்ட்’ அணிந்து ‘ரை’ கட்டிஇ கண்ணாடியால் அடைக்கப்பட்ட அவரது அலுவலகத்தில் மாமா அட்டகாசமாக இருந்தார்! இவன் போய் விசயத்தைச் சொன்னான்.

‘எனக்கு இப்ப ‘மீற்றிங்’ ஒன்றிருக்குஞ் நீர் போம் அக்காவைப் பாக்க நான் பின்;னேரம் வாறன்’ என்று சொல்லிஇ ‘வார்ட்’ இலக்கத்தை தனது ‘மனேஜ்மென்ற் டயறி’யில் எழுதினார். டயறியைத் தொலைத்து விட்டாரோ என்னவோ அன்று பின்னேரம் மட்டுமல்ல அம்மா சடலமாய் துண்டியில் எரியும் வரையும் அவர் வந்து பார்க்கவில்லை.

அம்மப்பாவினதும் அம்மாவினதும் மரணச் சடங்குகளில் சின்ன மாமா கலந்து கொள்ளவில்லை. பெரிய மாமா இறந்த போது சின்ன மாமா ஏன் வரவில்லை. ஏ9 வீதி மீண்டும் மூடப்பட்ட சிறிது நாட்களில் பெரிய மாமா இறந்து போனார். அப்போது சின்ன மாமா கொழும்பிலிருந்து ஊர் போய் அத்தையின் வீட்டிலிருந்தார். இவன் அக்காலத்தில் வேலை மாற்றம் கிடைத்து கொழும்பில் வேலை செய்யத் தொடங்கியிருந்தான். குடும்பத்தைக் கூட்டிக் கொண்டு ‘எக்ஸ்போ’வில் மரணச் சடங்கிற்குச் சென்றிருந்தான். ‘உதயன்’ பத்திரிகையில் பெரிய மாமாவின் மரண அறிவித்தல் வெளியானபோது முன்னாள் இலங்கை நிர்வாக சேவை உத்தியோகத்தரும் பிரபல எழுத்தாளருமான க. திருநாவுக்கரசின் சகோதரனுமாவார்ஞ்என்றுதானே வந்திற்று. ஆனால் அயலூரிலிருந்த சின்ன மாமா வரவில்லை.

‘திருநாவுக்கரசு சிறு வயதில் தந்தையை இழந்து தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்தார். இவரில் ‘பக்கத்து நாடு’ என்ற குறுநாவல், தமிழ் நாட்டு குறுநாவற் போட்டியில் முதற் பரிசைப் பெற்றது. ‘பக்கத்து நாடடி’ற்கு ஆறுதற் பரிசு தான் கிடைத்தது.

அவரைத் தொடர்ந்து ஈழத்தின் மூத்த எழுத்தாளர் டேவிட் சின்னையா உணர்ச்சி வசப்பட்டு உரையாற்றுகிறார்.

‘எழுத்தாளனின் மரணச் சடங்கில் கலந்து கொள்ளாத சமுதாயம் உருப்படாது. எழுத்தாளனின் தனிப்பட்ட வாழ்வை விமர்சிக்கக் கூடாது. நாங்கள் சாப்பாட்டைப் பார்க்க வேண்டுமே தவிர சமைத்தவரைப் பார்க்கக் கூடாது!’

இவனது கைத்தொலைபேசி பலமாக ஒலித்து ஓய்கிறது. அது சபையினரின் கவனத்தை சிதைக்கஇ எல்லோரும் இவனைப் பார்க்கின்றனர். பேச்சாளர்கூட சபையை முறைத்துப் பார்த்து விட்டு மீண்டும் தொடர்கிறார்.

இவனுக்குத் தெரியும் அந்த ‘மிஸ்கோல’ மயூரியிடமிருந்து வந்ததென்று.

‘ரியுயூசன் முடிந்து விட்டது. அப்பா வெளியே வாங்கோ’ என்பதைத்தான் அது சொல்லும் ‘ஹெல்மெற்’றுக்களைத் தூக்கிக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினான்.

‘என்ன அப்பா முகம் ஒரு மாதிரியாய் இருக்கு’ மயூரி கேட்டாள்.

‘ஒன்றுமில்லை’ என்றவன் கதையை மாற்றுவதற்காய்

‘இண்டைக்கு வகுப்பில என்ன படித்தனீங்கள்’ என்றான்.

‘உணவுப் பழக்க வழக்கங்கள்இ சுத்தமான உணவை உண்ண வேண்டும். உணவைச் சமைப்பவருக்கு தொற்று நோய்கள் இருந்தால் அல்லது அவர் ஒரு நோய்க் காவியாய் இருந்தால் உணவை உண்பவருக்கு நோய் தொற்றக் கூடிய சாத்தியம் அதிகம்!’ மயூரி தான் வகுப்பில் கற்றதை மூச்சு விடாமல் ஒப்புவிக்கிறாள்.

அவளுக்குக் கற்பித்த ஆசிரியர் தலையாட்டி விட்டு வாசலைக் கடந்து போனார். அவரைக் கூப்பிட்டு மண்டபத்தில் இரண்டு நிமிடங்கள்; உணவுப் பழக்க வழக்கங்களைப் பற்றி உரையாற்ற வைத்தால் நல்லது போற் தோன்றிற்று!

– நவம்பர் 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *