கம்ப்யூட்டரும் டைப்ரைட்டரும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 30, 2023
பார்வையிட்டோர்: 2,740 
 
 

ஒரு எழுத்தாளன், டைப்ரைட்டர் முன் உட்கார்ந்தான்.

“எழுத்தாளரே..என்ன சேதி…?”

கேட்டது கம்ப்யூட்டர்.

“நல்ல சேதிதான்.” என்று தொடங்கி உரையாடல் தொடர்ந்தது.

“அதிசயமா என் பக்கத்துல வந்து ஒக்காந்துக்கறீங்களே…! காரணம் இல்லாம வரமாட்டீங்களே நீங்க’னு கேட்டேன்…!”

வெளிப்படையாய்க் கேட்டது.

“உன் கூடப் பேசத்தான் வந்தேன்.”

“என்னை ஓரங்கட்டி ரொம்பநாள் ஆனாலும், ஞாபகம் வெச்சிக்கிட்டு, என்கிட்டே பேசணும்னு வந்தீங்களே…! ரொம்ப சந்தோஷம்…!”

“…”

“பேச வந்துட்டு சும்மா ஒக்காந்திருந்தா எப்படி? என்ன பேசணுமோப் பேசுங்க…!”

காதைத் தீட்டிக் காத்திருந்தது டைப்ரைட்டர்.

“உன்னண்ட வர எனக்கு நேரமே இல்லை டைப்ரைட்டரே…”

“அதான் தெரியுமே… சுத்தி வளைச்சிப் பேசாம. படார்னு வந்த விஷயத்தைச் சொல்லுங்க ரைட்டரே…!”

குரலில் எள்ளல் தெரித்தது.


“டைப்ரைட்டரே…!”

“ம்…!”

“கம்யூட்டர்னு ஒண்ணு பிரபலமாயிருச்சு இப்போ…”

“அடடே…! என்ன ஆச்சரியம்….!”

“உன்னை எப்படியெல்லாம் தொட்டுத் தொட்டு இயக்குவேனோ அதேப் போலக் கம்ப்யூட்டரிலும் செய்யமுடியும்.”

“ஓ…! அப்படியா…?”

“ஆமாம்…! உன்னை மாதிரி சிம்பிள் இல்லை அது. அதுக்கு உசுரு கொடுக்க மின்சாரம் வேணும்.”

“ஓ…!”

“அதுல ஒரு வசதி என்னன்னா, உன்மேல பேப்பரை வெச்சித் திருகறமாதிரி திருகவேண்டியதில்ல.”

“ஓஹோ…!”

“ஷீட்’னு போட்டு ‘நியூ’னு பதிவு பண்ணினா ஆயிரக்கணக்கான பக்கங்கள் வந்துகிட்டே இருக்கும்.”

“ரொம்ப ஆச்சரியமா இருக்கே…?”

வியந்தது டைப்ரைட்டர்.

“அது மட்டுமில்லை. ஒரு எழுத்துத் தப்பா அடிச்சிட்டா அதுக்கு மேலே ஒயிட்னர் வெச்சி மெழுக வேண்டிய அவசியமில்லை”.

“…”

“ஒரு வரியே தப்பா அடிச்சாலும் அதை நீங்கிடலாம். வேற டைப் செய்யலாம். மீண்டும் மீண்டும் மாத்தலாம்”.

“…”

ஆச்சரியத்தில் உறைந்தது டைப்ரைட்டர்.

“இன்னும் சொல்றேன் கேளு.”

மேலும் சொன்னான்.

“கார்பன் காப்பி வெச்சி அதிக பட்சம் இரண்டு காப்பி எடுக்கும் அளவுக்குத்தான் நீ தாங்குவே. அதோட கார்பன் அதிகமா வைக்க வைக்க இம்ப்ரஷன் மங்கும்தானே.”

“ஆமாம்…!”

“கம்யூட்டர் அப்படி இல்லை. ஒரு முறை டைப் பண்ணிட்டா எத்தினி ஆயிரம் காபி வேணாலும் எடுத்துக்கலாம். எல்லாக் காப்பியும் ஒண்ணு போலவே இருக்கும்.”

“….”

“நீ ஒரே மாதிரி அச்சுதானே வெச்சிருக்கே…?”

“ஆமாம்…”

“கம்ப்யூட்டர்ல வெவ்வேற வகையான எழுத்துக்கள் வரும். நாம விரும்பினதை எடுத்துக்கலாம். அது மட்டுமில்லே, நமக்குத் தேவையான அளவுக்கு பெரிசாவோ, பொடி எழுத்தாவோ இஷ்டத்துக்கு மாத்திக்கலாம்.”

“…”

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போனான் எழுத்தாளன்.

எல்லாவற்றையும் பொறுமையாகக், கேட்டுக்கொண்டது டைப்ரைட்டர்.

‘இவன் எழுத்தாளனல்லவா. அதான், ரொம்பக் கற்பனை கலந்து, எதையும் மிகைப்படுத்திப் பேசுகிறான்…!’என்று நினைத்துக் கொண்டது டைப்ரைட்டர்.


இப்போது அந்த எழுத்தாளன் கம்யூட்டர் முன் சென்று உட்கார்ந்தான்.

சுவிட்ச் போட்டான்.

யு பி எஸ் ஆன் செய்தான்.

சிஸ்டம் ஆன் செய்தான்.

“ஏன் லேட்…?”

கேட்டது கம்ப்யூட்டர்.

“வர்ற வழீல பழைய எந்திரத்தைப் பார்க்கவேண்டியதாயிடுச்சு. அதான் கொஞ்சம் லேட்டாயிருச்சு.”

“பழைய எந்திரமா…!”

“ம்…! டைப்ரைட்டர்னு பேரு அதுக்கு..!”

“ஓ…! அப்படியா?”

வியந்தது கம்ப்யூட்டர்.

“அது கண்டுபிடிக்கறதுக்கு முன்னால, பேப்பர்ல, பேனா வைத்து எழுதுவோம்;

டைப்ரைட்டர் வந்ததும், அதுல பேப்பரைத் திருகிக் திருகி, டைப் செய்வோம்;

நகல் தேவைன்னா, கார்பன் பேப்பரை இணைச்சி வெச்சி வலுவா டைப்செய்வோம்.”

“இப்போதும் அதில் டைப் செய்யத்தான் போனீங்களா?”

இயல்பாகக் கேட்டது கம்ப்யூட்டர்.

“ஏகப்பட்ட வசதிகளோட கம்ப்யூட்டரான நீ வந்தப்பறம் அதுல போயி யாரு டைப் செய்வாங்க.?”

அலட்சியமாகச் சிரித்தான் எழுத்தாளன்.

“….”

அமைதி காத்தது கம்ப்யூட்டர்.

“வாசல் திண்ணைல காயலான்கடைக்குப் போட டைப்ரைட்டரை என் மனைவி வெச்சிருந்தாளா. அதோட கடைசீயா கொஞ்சநேரம் பேசிட்டு வந்தேன் அவ்ளோதான்…!” என்றான் எழுத்தாளன்.

“ம்ஹ்ம்…!”

பெரு மூச்சு விட்டுவிட்டு அமைதியாகிவிட்டது கம்ப்யூட்டர்.

‘ஒரு காலத்தில் அந்த டைப்ரைட்டரே கதி எனக் கிடந்தவன், இப்போது என்னைக் கண்டதும் அதை குறைத்துப் பேசுகிறானே…! என்னை விடச் சிறந்த கருவி வந்தால் நம் கதியும் இதுதானோ…!’

நினைத்து நினைத்து வருந்தியது கம்ப்யூட்டர்.

– 30-10-2022, ஆனந்த விகடன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *