குடும்ப கௌரவம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2014
பார்வையிட்டோர்: 15,080 
 

“ முரளி!….உங்கிட்டே ஒரு விஷயம் சொல்லணும்…..உன் ‘வொய்ப்’ அகல்யா சிநேகிதமெல்லாம் அவ்வளவு சரியில்லே!….”

“ என்ன அண்ணா சொல்லறீங்க?…”

“ நேற்று. … புருஷனைப் பற்றி கண்டபடி பத்திரிகையில் பேட்டி கொடுத்து டைவர்ஸ் வாங்கிய அந்த சித்ராவோடு இவ ‘ஷாப்பிங்மாலில்’ பேசி சிரிச்சிட்டிருந்தா!…அந்த மாதிரி சிநேகிதமெல்லாம் வச்சிட்டா நம்ப குடும்ப கௌரவம் பாதிக்கும்!.”

“ சரியண்ணா!….நான் விசாரிக்கிறேன்!..”

முரளியும், அவங்க அண்ணாவும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டே அங்கு வந்தாள் அகல்யா.அதை முரளியும் கவனித்தான்.

மறுநாள்.

“ அண்ணா!…உங்கிட்டே ஒண்ணு சொன்னா நீ தப்பா நினைக்க கூடாது!…”

“ சும்மா…சொல்லு…என்ன சமாச்சாரம்?….”

“ அண்ணியோட தம்பி..அடிக்கடி அண்ணியை வந்து பார்த்திட்டுப் போறான்…அண்ணி உனக்குத் தெரியாமே ஏதாவது பண உதவி செய்வாங்கனு நினைக்கிறேன்!…”

அதற்குள் அங்கு அகல்யா வர, தங்கை சித்ரா பேச்சை நிறுத்திக் கொண்டாள்.

அகல்யா ஒரு சாதாரண பள்ளி ஆசிரியர் மகள். முரளி ஒரு கோடீஸ்வர தொழிலதிபரின் மகன். அகல்யாவை கல்யாணம் செய்தால் அவர்கள் குடும்ப கௌரவம் பாதிக்கும் என்று எல்லோரும் தடுத்தார்கள். முரளியின் பிடிவாதத்தால் தான் அவர்கள் திருமணமே சமீபத்தில் நடந்தது.

கடந்த பத்து நாளாக தனிமையில் அகல்யா அண்ணனும், தங்கையும் சொன்ன புகார்களைப் பற்றி கேட்பாள் என்று எதிர் பார்த்தான் முரளி.

அகல்யா அதைக் கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை! பொறுக்க முடியாமல் முரளியே கேட்டு விட்டான்.

அகல்யா சிரித்துக் கொண்டே சொன்னாள் .“என் கல்லூரித் தோழி சித்ராவுக்கு வாய்த்த ஒரு கணவன் காசுக்காக பெண்டாட்டியையே விற்கத் துணிந்த கயவன்…அந்த அயோக்கியனின் முகமூடியைப் போராடி கிழித்து ‘டைவர்ஸ்’ வாங்கிய பாரதி கண்ட புதுமைப் பெண் அவள்…ஒழுக்கமான அந்த உத்தமியோடு பழகுவதில் எந்த தப்பும் இல்லை என்று எனக்குத் தெரியும்!

என் ஒரே தம்பி அக்கா மேல் உயிரையே வைத்திருக்கான்….ஒழுக்கமான குடும்ப சூழ்நிலையில் வளரும் அவன் மானம் மரியாதைக்கு முன்பு பணம் காசை துச்சமாக மதிப்பவன் அவனிடம் போய்…பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவர்களுடைய மனசு எப்படியெல்லாம் கேவலமாக சிந்திக்கிறது என்று விளக்கிச் சொன்னால், நம் குடும்ப கௌரவம் பாதித்து விடும் என்று தான் .பாசத்தாடு என்னை பார்க்க வருபவனிடம் இதை எல்லாம் நான் சொல்வதில்லை!”

முரளி இப்பொழுது எது குடும்ப கௌரவம் என்று புரியாமல் தலையில் கை வைத்துக் கொண்டான்!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *