என்னதான் முடிவு?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 5, 2022
பார்வையிட்டோர்: 3,350 
 

பரீட்சை முடிவு தெரியவில்லை. வினோத்துக்கு ஒரே டென்ஷானாக இருந்தது. பரீட்சை எழுதியபோதிருந்த நம்பிக்கை இப்போ கொஞ்சம் கொஞ்சமாகத் தளர ஆரம்பித்திருந்தது. ‘விடைத் தாளில் சுட்டெண்ணைச் சரியாக எழுதினோமா?’ என்று வேறு சந்தேகம் முளைத்து மனதை அரித்தது.

ஒரே தவிப்பு. எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை. ஆசிரியர்களின் பாழாய்ப்போன வேலை நிறுத்தத்தால் அன்று வெளிவர வேண்டிய பரீட்சை முடிவு தள்ளிப் போய்விட்டது. இனி ஒவ்வொரு நாளும் இதே நினைப்பால் தூக்கமும் கெடப் போகிறது.

நத்தையாக ஊரும் நேரத்தை எப்படிக் கொல்வது? அக்காவின் பழைய புத்தகப் பெட்டியைக் குடைந்தவன் விரல்களை வழுவழுப்பான அட்டை வருட, கையில் கத்தியுடன் முறுக்கு மீசை ஆசாமி ஒருவன் ஒரு புறமும் கழுத்தில் இருந்து இரத்தம் சொட்டச்சொட்ட கவர்ச்சிப் போஸில் கன்னி ஒருத்தி மறுபுறமுமாக ஒரு மர்ம நாவல் – ‘என்ன தான் முடிவு?’

முன்பெல்லாம் சுஜாதாவையும் ராஜேஸ்குமாரையும் ஸ்டெல்லா புரூஸையும் விழுந்து விழுந்து படித்தவன்தான் அவன். இப்போ படிப்பு படிப்பென்று அதற்கெல்லாம் நேரமே இல்லாமல் போய்விட்டது.

கதை ஆரம்பமே விறுவிறுப்பாக இருந்தது. உலகத்தையே மறந்து வினோத் அதில் மூழ்கிப் போனான். நாடக நடிகை கல்பனா, மேடையில் நாடகம் நடைபெறும் போது கொலை செய்யப்பட்டு விடுகிறாள். வில்லனாக நடித்த விக்ரமின் கையில் தான் துப்பாக்கி இருந்தது. விக்ரமோ நிஜ வாழ்வில் அவள் கணவன். தனது கையில் இருந்தது வெற்றுத் துப்பாக்கி. அதில் ரவைகள் ஏதும் இருக்கவில்லை என்று விக்ரம் விக்கி விக்கி அழுதபடி கூறுகிறான்.

கதாநாயகனாக நடித்த கார்த்திக்கிற்கும் கல்பனாவுக்குமிடையில் ‘கசமுசா’ ஏதோ இருந்ததாகவும் அதன் காரணமாக விக்ரம் கல்பனாவைக் கொன்று இருக்கலாம் என்றும் துப்பறிவாளர் துக்காராம் சந்தேகப்படுகிறார்.

அந்த நாடக குறூப்பில் புதிதாகச் சேர்ந்த புதுமுகம் புவனாவின் காதல் வலையில் விழுந்து விட்ட கார்த்திக் தான் கல்பனாவின் கொலைக்குக் காரணமானவன் என்பது நகைச்சுவை நடிகன் நடராஜின் ஊகம்.

ஆனால் நடராஜ் கல்பனாவுக்கு எழுதிய காதல் கடிதமொன்றும் துப்பறிவாளர் கையில் சிக்குகிறது. தான் விளையாட்டாக எழுதிய கடிதம் வினையாகி விட்டதாக நடராஜ் புலம்புகிறான்.

நாடக டைரக்டர் டாமோதிரனுக்கும் [எண் ஜோதிடப்படி மாற்றியமைக்கப்பட்ட பெயர்] கல்பனாவுக்குமிடையில் பணக் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக ஏதோ பிணக்கு இருந்து வந்ததாகவும் ஒரு ‘கிசு கிசு’ மெல்லக் கசிகிறது.

‘யார் கொலையாளி?’ வினோத்தால் ஊகிக்க முடியவில்லை. என்னதான் முடிவு என்பதை அறியப் பக்கங்களை அவசர அவசரமாக மேய்ந்து தள்ளினான். கடைசிப் பக்கத்தின் கடைசி வரியையும் வாசித்து முடித்து விட்டான், ஆனாலும் முடிவு தெரியவில்லை. ஓ, இன்னும் இரண்டு பக்கங்கள் பாக்கியிருக்க வேண்டும். ஆனால் அவற்றைக் காணவே காணோம்.

ஒரே எரிச்சலாக இருந்தது. கையில் இருந்த புத்தகத்தை மூலையில் விட்டெறிந்தான். முடிவு தெரியாத தவிப்பு இப்போ இருமடங்காகியிருந்தது.

[‘இருக்கிறம்’ – 20.03.2008 இல் பிரசுரமானது]

Print Friendly, PDF & Email

விடியல்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

சோதனை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 21, 2023

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)