கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: October 18, 2023
பார்வையிட்டோர்: 2,959 
 

மின்னஞ்சல் மூலமாகப் போட்டித்தேர்வு முடிவுகள் குறித்த அறிவிப்பைப் பார்த்த அறிவியலாசிரியர் சேதுராமன் பரபரப்புடன் அந்த வலைதளத்தைப் பார்வையிட்டார்.
‘அறிவியல் இயக்கம்’ என்ற அமைப்பு, இளம் அறிவியலாளர்களைக் கண்டறிவதற்காக மாநிலம் முழுதும் நடத்தியத் திறனறித் தேர்வுக்கான முடிவுதான் அது.

முதல் வகுப்பில் தேறியிருந்தான், அந்த அரசுயர்ப் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் மாரிமுத்து.

அவனுக்குப் பாராட்டுக்கள் குவிந்தவண்ணமிருந்தன.

பள்ளிக்கு வெளியே, மரத்தடியில், வயதான மூதாட்டி, விரித்திருக்கும் கடைக்குச் சென்றான் மாரிமுத்து.

பாட்டியின் சிறப்பான தயாரிப்பான “கமர்கட்’ மிட்டாய்கள் அனைத்தையும் வாங்கி வந்து, நண்பர்களுக்கெல்லாம் இனிப்பளித்து மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டான்.

‘கமர்கட்டு’ என்பது வெல்லத்தால் தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரியத் தென்னிந்தியவகை மிட்டாயாகும்.

வெல்லத்தைத் தண்ணீருடன் கலந்துத், தேன் போன்ற வண்ணத்தில், நிலைத்த கடினத் தன்மையை அடையும்வரை மிதவெப்பத்தில் காய்ச்சி, உருட்டித் தயாரிக்கப்படும் இனிப்புப் பண்டம் அது.

இந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், மனைவி மக்களோடு வரும்போது கூட, அந்தப் பாட்டியிடம் கமர்கட் வாங்கி அனைவரும் ஆசையோடு சுவைப்பார்கள்.

அதனால் ‘கமர்கட் பாட்டி’ என்ற காரணப் பெயரே நிலைத்துவிட்டது அவருக்கு.

ஆசிரியர் மாணவர்க்காற்றும் நன்றி அவையத்து

முந்தி இருப்பச் செயல்.

மாணவன் ஆசிரியர்க் காற்றும் உதவி இவனாசான்

என்னோற்றான்கொல் எனும் சொல்.

புதுப் புதுக் குறட்பாக்களியற்றி, ஆசிரியரையும் மாணவரையும் மனதாரப் பாராட்டினார் தமிழ்ப் பண்டிதரும், பள்ளியின் தலைமையாசிரியருமான புலவேந்திரனார்.

அறிவியலில் ஆர்வமிக்க மாரிமுத்துவின் உள்ளிருந்தத் திறமைகளை வெளிக்கொணர்ந்து, குன்றிலிட்டவிளக்காய்ப் பிரகாசிக்கச்செய்த வகுப்பாசிரியரும், அறிவியல் பட்டதாரி ஆசிரியருமான திரு சேதுராமனை, அனைத்து உயர் அதிகாரிகளும் புலன எண் மூலமாகவும், கைப்பேசி மூலமாகவும், நேரிலும் பாராட்டினார்கள்.

‘கண்டுபிடிப்பு வகைமாதிரி’யை ஒப்படைக்கத் தேவையான கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது இளம் அறிவியலாளர்களுக்கு.

‘முயற்சியுடையார், காரியத்தில் பதறார், வித்து முளைக்கும் தன்மைப்போல் மெல்லச்செய்துப் பயனடைவார்’ என்ற பாரதியின் வாக்கிற்கிணங்க,

அனுபவச் செரிவுமிக்க ஆசிரியரின் துணையோடு, வலைதளங்களிலும், நூலகங்களிலும், மாரிமுத்துவின் அறிவியல் கண்டுபிடிப்பிற்கான தேடல் கவனமாகத் தொடங்கித் தொடர்ந்தது.

பதறாத காரியம் சிதறாதல்லவா…!

பள்ளியில் ‘ஆண்டு விழா’, ‘பெற்றோர்-ஆசிரியர்க் கழக நிறைவு விழா’, ‘ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா’,

முப்பெரும் விழா இனிதே நிறைவேறியது.

விழாவின் சிறப்பு விருந்தினராகப், புகழ்பெற்ற இதயநோய் நிபுணர் அழைக்கப்பட்டிருந்தார்..

“இருதயம் சம்பந்தமான உங்கள் வினாக்களைப் பிரபல இருதய நோய் நிபுணரிடம் நேரடியாகக் வினவி, விடையறிந்துக்கொள்ள அரிய வாய்ப்பு;

மாதத்தில் பாதி நாட்கள் அயல்நாட்டில் உலாவருபவரும், ஆயிரக்கணக்கில் கட்டணம் கட்டி, சந்திப்புக்கு நேரம் பெற்று, பல நாட்கள் காத்திருந்துதான் சந்திக்கக் கூடியப் பிரபலமான இதய நோய் நிபுணர், நம் ஊர் பள்ளிக்கு வருகைத் தருகிறார்;

வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்…!”

இப்படியெல்லாம் தானி அறிவிப்பு உட்பட, பலப்பல உத்திகளில் விளம்பரப்படுத்தியதால், பெற்றோர்களும், ஊர் மக்களும் விழாவில் கணிசமாகக் கலந்து கொண்டனர்.

பள்ளி வரலாற்றிலேயே இதுவரையில்லாத அளவுக்குக் கூட்டம் கூடியிருந்தது.

அந்தப் பிரபல மருத்துவர் இளம் அறிவியலாளரான மாரிமுத்துவைப் பலத்தக் கைத்தட்டலுடன், விழா அரங்கத்தில் வைத்துப் பாராட்டிக், கைகுலுக்கிப் பரிசளித்தபோது நெகிழ்ந்துபோனான்.

‘இந்த மருத்துவரை விட மேலதிகமானச் சேவை செய்ய வேண்டும்…!’

தனக்குள் உறுதி மொழி எடுத்துக்கொண்டான் மாரிமுத்து .

இருதயத்தின் செயல்பாடுகள்பற்றியெல்லாம் நிபுணர் மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார்.

பாமரர்களுக்கும் புரியும் வண்ணம் உதாரணங்களோடு, எளிமையாகக் மருத்துவர் கூறிய விதம் அனைவரையும் ஈர்த்தது..

‘கூறியது கூறல் குற்றமல்ல, வேறொரு பொருளை விளக்குமாயின்!’ என்ற நன்னூல் சூத்திரத்தின்படி, இருதயநோய்களைப் பற்றித்தான் மீண்டும் மீண்டும் பேசினாலும், ஒவ்வொரு முறையும் வேறு ஒரு புதிய பொருள்படப்பேசிய மருத்துவரின் உரை அனைவரையும் கவர்ந்தது.

மகுடிக்குக் கட்டுப்பட்டப் பாம்புகளாய், தலையசைத்து இரசித்தார்கள் பார்வையாளர்கள்.

வருமுன் காக்கும் வழிமுறைகளைப் பட்டியலிட்டார் மருத்துவர்.

காலை, மாலை இருவேளையும் பல் துலக்கவேண்டியதன் காரணங்களை விளக்கினார்.

கைகளை நன்கு கழுவியபின்னரே எதுவும் எடுத்து உண்ண வேண்டும் என்றுரைத்தர்.

தூய்மைப் பற்றியும் உடல் நலம் பற்றியும் கூறி ‘வருமும் காக்கும்’ வழிகளைச் சொன்னார்.

இந்தியாவின் மிகப் பெரியக் கருவூலமான யோகக்கலைப்பற்றி பாங்காய் உரைத்தார்.

உண்ணும் முறைகள் பற்றிச் சொல்லும்போது, நெய்யில்லா உண்டி பாழ்’ என்ற ஔவையின் வாக்கைச் சொல்லி, கிராமத்து மக்களின் பலத்தக் கைத்தட்டலைப் பெற்றார்.

“தெருவில் வைத்து விற்கும் ஈ-மொய்த்தப் பண்டங்களை வாங்கிச் சாப்பிடக்கூடாது…!” என்பதை வலியுறுத்தினார்.

“தூய்மையற்றத் தின்பண்டங்களை உண்பதே, பல்வேறு நோய்களுக்கு மூலகாரணம்!” என்ற கருத்துடன் தன் உரையை நிறைவு செய்தார் மருத்துவர்…

பார்வையாளர்களின் பலத்தக் கைத்தட்டல் வானைப் பிளந்தது.

அடுத்து, ‘வினாவிடை-நேரம்’ ஒதுக்கப்பட்டது.

இருதய மருத்துவரிடம் எவர் வேண்டுமானாலும் வினவலாமென அறிவித்தார்கள்.

வினவ விழைபவரிடம், சாரணத் தொண்டர், விரைந்துச் சென்று ‘கை ஒலிப் பெருக்கியை’க் கொடுத்தார்..

பலர் ஆர்வமாய்க் கேட்ட வினோதமான கேள்விகளுக்கெல்லாம்கூடப் பொறுமையாகவும், வினவியோரை மகிழ்விக்கும் வகையிலும், உற்சாகமாகவும் விடையளித்தார் மருத்துவர்.

நிகழ்ச்சியின் இறுதியில், ‘பெற்றோர்-ஆசிரியர்’ சங்கத் தலைவர் நன்றி நவின்றார்.

இருதயநோய் மருத்துவரின் கருத்துக்கள் பலவற்றை மீளவுரைத்தார்;

“பள்ளி மாணவச்செல்வங்களுக்கு மட்டுமன்றி, எங்கள் வட்டாரமக்களுக்கே, நல்லதோர் விழிப்புணர்வை ஏற்படுத்திய இருதய நோய் நிபுணருக்கு நன்றி…!”;

என்று சிலாகித்துப்பேசிப் பேச்சாளரைச் சிறப்புச்செய்தார்.

மறுநாள், இறைவணக்கக்கூட்டத்தில், முப்பெரும் விழாச் சிறக்க ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றியறிதலைக் கூறினார் தலைமையாசிரியர்.

“ஈ மொய்த்தப் பண்டங்களை யாரும் வாங்கிச் சாப்பிடாதீர்கள்! நேற்று மருத்துவர் சொன்னாரல்லவா..?” என்று நினைவூட்டினார்.

இறைவணக்கக் கூட்டம் நிறைவு பெற்று, வழக்கம்போல் மாணவர்கள் வகுப்புக்குச் சென்றனர்.

வகுப்பாசிரியரும் அறிவியல் ஆசிரியருமான சேதுராமன், முதல் பிரிவேளை வகுப்புக்கு வந்தார்.

அவரும் மாணவர்களுக்கு முதல் நாள் மருத்துவர் சொன்னப் பலச் செய்திகளை மீள்பார்வைபோலச் சொன்னார்.

பள்ளியின் உள்ளேயும் வெளியேயும் இதய நோய் நிபுணரைப் பற்றியே பேச்சு உலவியது.

நண்பகல் உணவு இடைவேளையின்போது வழக்கம்போலப், பள்ளிக்கு வெளியே சென்றான் மாரிமுத்து.

தலையெல்லாம் பஞ்சாய் நரைத்து, மேனியெங்கும் முதுமையின் சுருக்கம் விழுந்த நிலையிலும், சுயமாகத் தன்காலில் நிற்கவேண்டும்மென்ற மன உறுதியுடன் ‘கமர்கட்’, ‘இலந்தவடை’, ‘கடலைமிட்டாய்’, “எள் உருண்டை’, ‘பொறி உருண்டை’, ‘அவித்தப் பனங்கிழங்கு’, எனக் கடைப் பரப்பி விற்கும் பாட்டியின் சரக்கு விற்பனையாகாமல் அப்படியேத் தேங்கியிருந்தது.

நேற்றையதினம் வரை, மதிய இடைவேளையின்போது, அந்தப் பாட்டியைச் சுற்றித்தான் கூட்டம் நின்றது. போட்டிப் போட்டுக்கொண்டுத் தின்பண்டங்களை வாங்கிச் சுவைத்தார்கள் மாணவ மாணவியர்.

உணவு இடைவேளை நிறைவடைந்து, மணியொலித்து, மாணவர்கள் பள்ளியினுள் செல்லும்போது, அந்தப் பாட்டியின் கடையும் காலியாகியிருக்கும்.

ஆனால் இன்று!

இருதய நோய் மருத்துவர் வந்து போனதன் தாக்கம்.

பாட்டியின் சரக்கு, அப்படியேத் தங்கிவிட்டது.

வியாபாரமேயாகாமலமர்ந்திருந்தப் கமர்கட் பாட்டியைப் பார்க்கப் பாவமாக இருந்தது மாரிமுத்துவுக்கு.

மனங்கலங்கினான்.

மாரிமுத்து, மாநில ஆளுநர் விருது பெற்ற சாரணத் தொண்டரும் கூட..

“பாவம்டா…! பாட்டி…!” நண்பர்களிடம் இரக்கப்பட்டான்…”

சாரணன் இரக்க குணமும், பிறருக்கு உதவும் குணமும் உள்ளவனல்லவா…?

அவனோடு சேர்ந்து வகுப்புத் தோழர்களும் வருத்தப்பட்டனர்.

“என் வீட்டுக்குப் அருகாமையில்தான் அந்தப் பாட்டியின் வீடு உள்ளது. குழந்தைகள் வாங்கிச் சுவைக்கும் பண்டங்களாதலால், மிகவும் துப்புறவான முறையில் எல்லாப் பண்டங்களும் தயார் செய்வார்களென்று அனைவருமே அந்தப் பாட்டியை உயர்வாகத்தான் மதிப்பார்கள்…!” என்றான் அஜீத்லால்.

“இருந்தாலும், பள்ளிக்கூடத்துக்கு வெளியில் மரத்தின் கீழ் வைத்து விற்கும்போது ஈ மொய்க்கிறதே..! ;

அதனால் நமக்குத்தானே நோய் வரும்…!” என்றான் சைமன்.

“சைமன் சொல்வதும் சரிதான்;

பாட்டி பாவமென்பதற்காக, ஈமொய்தப் பண்டங்களைத் வாங்கித் தின்று நோய் வரவழைத்துக் கொள்ள முடியாதே?”

ஒரு வழியாகச் சமாதானம் செய்து கொண்டான் மாரிமுத்து.

ஒன்பதாம் வகுப்புக்கான அறிவியில் ‘செய்முறைத் தேர்வு’க்கு பள்ளிக் கல்வித்துறைத் தேதி அறிவித்துவிட்டது.

ஆசிரியர் சேதுராமன் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுத் தேதியை அறிவித்தார்;

மேலும், (Project) என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் ‘அறிவியல் செயல்பாடுகள்’ பற்றி எடுத்துக் கூறினார்;

‘செயல்பாட்டுத் திட்ட வரைவையும், ‘திட்ட வகைமாதிரி’யையும் செய்முறைத் தேர்வுக்கு முதல் நாள் ஒப்படைக்க வேண்டும்.” என்றும் உத்தரவிட்டார்.

திட்ட வகைமாதிரியை ஒப்படைக்கும்பொழுது, செய்முறைத்தேர்வு நடத்துவதற்காக வெளிப் பள்ளியிலிருந்து வரும் ஆசிரியர்கள், செயல் திட்ட வரைவையொட்டி வாயால் கேட்கப்படும் கேள்விகளுக்கு உரியமுறையில் விடையளித்து, (viva voce) வாய்மொழித் தேர்விலும் வெற்றிபெறவேண்டுமென்றும் விளக்கமளித்தார்.

செய்முறைத் தேர்வில், செயல் திட்டத்துக்கும் வகைமாதிரிக்கும், எத்தனையெத்தனை மதிப்பெண்கள், எதனெதனடிப்படையில் அளிக்கப்படுமென்றும் தெளிவாக விளக்கினார் ஆசிரியர் சேதுராமன்.

நூலகம் சென்று, விஞ்ஞான நூல்களைப் புரட்டுவதும், பார்வையேடுகளைப் புரட்டிக் குறிப்பெடுப்பதுமாகப் திட்டச் செயல்பாடு குறித்தும், திட்ட வகைமாதிரியை நிர்மாணிக்கும் பரபரப்புடனும் காணப்பட்டார்கள் மாணவர்கள்.

நூலகத்துககுச் செல்லும் மனநிலையே இல்லை மாரிமுத்துவுக்கு.

அவன் மனது முழுதும் ‘கமர்கெட் பாட்டி’யையேச் சுற்றிச் சுற்றி வந்தது.

மனசு, வலித்தது, தவித்தது.

காரணம், மாரிமுத்துவின் தந்தையும் ஒரு இனிப்புக்கடை முதலாளிதான்.

பக்கத்து நகரத்தில் கடை வைத்திருக்கிறார்.

வியாபாரம் மந்தமான நாட்களில் தந்தையின் தவிப்பையும், கவலையையும் நேரில் பார்த்தவன், பார்த்துக்கொண்டிருப்பவன் மாரிமுத்து .

‘தன் தந்தையாவது பெருவணிகர்;

ஒரு நாள் விற்பனையாகவில்லையெனிலும் சமாளித்துக் கொள்வார்;

ஆனால் இந்தப் பாட்டி?;

அன்றாடங்காய்ச்சியல்லவா?;

இன்றைய வணிகத்தில் வரும் இலாபத்தைக் கொண்டல்லவா இன்றைய சாப்பாட்டுக்கு அரிசி வாங்க வேண்டும்;

அது மட்டுமா, மறுநாள் வியாபாரத்திற்குப் பண்டங்கள் செய்யக் கச்சாப்பொருட்கள் வேறு வாங்கவேண்டுமே? பாவம் பாட்டி என்னதான் செய்வாள்..?’

‘கமர்கெட் பாட்டி’ யின் ஏழ்மை நிலைப்பற்றி யோசித்தாலும், மருத்துவர் ஈ மொய்த்த பண்டங்களை வாங்கிப் புசிக்கக்கூடாதென்று சொன்னதிலிருந்த விழிப்புணர்வுக் கருத்தையும் அவன் மனம் சிந்தித்தது.

படிப்பதற்காகத் திண்ணையில் புத்தகங்களுடன் அமர்ந்திருந்த மாரிமுத்து படிக்கத் தோன்றாமல் கமெர்க்கட் பாட்டியின் சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தான்.

“தம்பீ…!”

குரல் கேட்டுச் சுயநினைவுக்கு வந்தான் மாரிமுத்து

ஆசாரி அறிவழகன் எதிரில் நின்றிருந்தார்.

“வாங்க ஆசாரி மாமா…!”

வழக்கம்போல அன்புடனும் இன்முகத்துடனும் அவரை வரவேற்றான்.

“என்னை வரச்சொன்னார் உன் தந்தை . அவரிடம் என் வருகையைத் தெரிவிப்பாயாத் தம்பி?”

“சரி அய்யா…!” என்று உள்ளே சென்றான் மாரிமுத்து.

ஆசாரி வேலைகள் முறையாய் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

தந்தை நடத்தும் இனிப்புக்கடைக்கான வேலை அது.

எதற்கப்பா இதெல்லாம்?

அப்பாவைக் கேட்டான் மாரிமுத்து.

அப்பா விவரமாகக் காரணங்களை விளக்கினார்.

நகராட்சி நிர்வாகிகள் கடையை ஆய்வு செய்த விவரங்களையெல்லாம் தெரிந்து கொண்ட மாரிமுத்துவுக்கு மனதில் ஒரு திட்டம் உருவானது.

“அப்பா பள்ளிக் கூடத்துல ப்ராஜக்ட், ‘செயல்திட்டம்’ கொடுத்திருக்காங்கப்பா…!”

“அப்படியா நன்று. நான் ஏதேனும் அதற்கு உதவ வேண்டுமா தம்பி…!”

“ஆமாம் அப்பா, நான் திட்டமிட்ட வகைமாதிரியைச் செய்ய, நம் வீட்டில் பணிபுரியும் தச்சரின் உதவி எனக்குத் தேவையப்பா…!”

“அப்படியா…!” அவரைத் தாராளமாகப் பயன்படுத்திக்கொள் …!” என்று அனுமதியளித்தார் அப்பா.

மாரிமுத்துச் சொன்ன திட்டத்தையும் யோசனைகளையும் மனதில் வாங்கிக்கொண்ட ஆசாரி, வீட்டில் இருந்த சவுக்கு உருட்டுக் கட்டைகள், மரச்சட்டங்கள், வலைகள், ஆணிகள், திருகுகள் போக ஒரு சில சில்லறைச் சாமான்களை மட்டும் கடையிலிருந்து வாங்கி வந்தார்.

மாரிமுத்து வெள்ளைத்தாள்களில் வடிவங்களை வரைந்தான்.

நீள அகல உயரங்களையெல்லாம் முறையாக வரைந்த மாரிமுத்துவின் பொறியியல் அறிவை வியந்து பாராட்டினார் ஆசாரி.

செயல்முறைத் தேர்வுக்கு முதல் நாள்.

மாணவர்கள் அவரவர் செய்த செயல்திட்ட வகைமாதிரியை அறிவியல் ஆய்வுக்கூட மேடையில் பார்வைக்கு வைத்தார்கள்.

அந்த வகைமாதிரியை விளக்கும் வரைபடத்தையும், சமூகப் பயன்பாட்டையும், தயாரிப்புச் செலவுகள் போன்ற விளக்கங்கள் கொண்ட குறிப்பேட்டையும் அனைவரும் சமர்ப்பித்திருந்தார்கள்.

“மாரிமுத்து, செயல்திட்ட வரைவு மட்டும் சமர்ப்பித்துள்ளாயே…? வகைமாதிரியை ஏன் காட்சிப்படுத்தவில்லை…?”

செய்முறைத்தேர்வு நடத்துவதற்காக, வெளிப்பள்ளியிலிருந்து நியமிக்கப்பட்ட ஆசிரியர் கேட்க, அமைதியாக நின்றான் மாரிமுத்து.

ஆசிரியர் சேதுராமன் அவர்கள் அந்த ஆசிரியரிடம் ஆங்கிலத்தில் அதற்கான விளக்கம் சொன்னார்.

அந்த விளக்கம் மாரிமுத்துவுக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது.

தேர்வு நடத்த வந்த ஆசிரியர் அனைத்துச் செயல்திட்ட மாதிரிகளையும் பார்வையிட்டார்.

மாணவர்களை வாய்மொழிக் கேள்விகள் கேட்டு மதிப்பெண் இட்டார்.

மாரிமுத்து அளித்த அந்தச் செயல்திட்டக் குறிப்பைக்கண்டு மிகவும் மகிழ்ந்தார்.

அந்தச் சமயத்தில், ஆசிரியர் சேதுராமன் அவரிடம் சில விளக்கங்களைச் சொன்னார்.

திட்ட மாதிரியைப் பற்றிப் பிறகு அவர் பேசவில்லை..

வாய்மொழி வினாவிற்கெல்லாம் திறமையாகவும், மிகச்சரியாகவும் விடையளித்த மாரிமுத்துவை மனதாரப் பாராட்டினார் தேர்வு நடத்தும் ஆசிரியர்.

செய்முறைத் தேர்விற்கான முடிவு மறுநாள் அறிவிக்கப்பட்டது

மாரிமுத்து நாற்பதுக்கு நாற்பது மதிப்பெண்கள் பெற்றிருந்தான்.

‘திட்ட வகைமாதிரியையே வைக்காத மாரிமுத்துவுக்கு, முழுமையான, முதல் மதிப்பெண்ணா?’

மாணவர்களிடையே கேள்வி எழுந்தது.

அன்று நடைபெற்றச் சிறப்பு இறைவணக்கக் கூட்டத்தின்போது, ஆசிரியர் சேதுராமன் மாரிமுத்துவை மேடைக்கு அழைத்தார்.

மொத்தப் பள்ளியுமே வியப்பாகப் பார்த்தது அவனை.

தன்னை அழைக்கும் காரணம் அறியாத, மாரிமுத்துவே வியப்போடுதான் மேடைக்குப் போனான்.

மாரிமுத்துவை மேடையில் நிற்கவைத்துவிட்டு ஆசிரியர் சேதுராமன் பேசினார்.

“அறிவியல் கண்டுபிடிப்பு என்பது இந்தச் சமூகத்துக்குப் பயனுள்ளதாக இருக்கவேண்டும் என்பதுதான் முதல் நோக்கம்;

அந்த அடிப்படையில், செயல் திட்டம் அறிவித்த மறுநாளே ‘திட்ட மாதிரியைத்’ தரமாகத் தயாரித்து, உரிய இடத்தில் சேர்த்துவிட்டான் இளம் அறிவியலாளரும் சாரண தொண்டனுமான மாரிமுத்து..!”

ஆசிரியர் என்ன சொல்கிறார் என்பது எவருக்கும் புரியாமல் குழம்பினர்.

அந்த நேரத்தில்தான் கமர்கெட் பாட்டியம்மா மேடைக்கு வந்தார்.

“இவங்களைத் தெரியுமா?” கேட்டார் தலைமை ஆசிரியர் புலவேந்திரன்.

“தெரியுமய்யா. கமர்கெட் பாட்டியம்மா?” என்றது மாணவர் கூட்டம்

“ஈ மொய்கற கமர்கெட் விற்கும் பாட்டிதானே இவங்க…!”

“இல்லையய்யா! நம் பள்ளி ஆண்டு விழாவிற்குப் பிறகு, “ஈ மொய்க்காத’ வகையிலே ஒரு கூண்டுக்குள் வைத்து விற்கிறார்களய்யா..!”

மாணவர்களின் ஒன்றிணைந்த குரல் வந்தது.

“மாணவர்களே! சுகாதாரத்தைக் காப்பதற்காக பாட்டி வைத்துள்ள அந்த எளியக் கூண்டுதான் மாரிமுத்து செய்தச் செயல்திட்ட வகைமாதிரி;

போகும் இடங்களுக்கெல்லாம் சுலபமாக எடுத்துச்செல்ல வசதியாகவும், ஒரு சில மணித்துளிகளில் அந்த அமைப்பை உறுதிச் சமநிலையில் வைத்து நிலைநிறுத்தவும் வசதியாகக் கட்டமைக்கப்பட்ட மாதிரி இது; 1

அந்த வகைமாதிரியை வீட்டிலிருக்கும் சவுக்கு உருட்டைக் கட்டை, சணல், கயிறுகள், சிறு ஆணிகள், வீட்டில் கிழிந்து போன கொசுவலைத் துணி இவற்றையெல்லாம் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தி, குறைந்த செலவில் தயாரித்திருக்கிறார் இளம் அறிவியலாளர் மாரிமுத்து;

இந்தப் பாட்டியைப் போல் வெட்ட வெளியில் கடை நடத்துவோர் அனைவருக்கும் இந்த அமைப்பு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்ட வகை மாதிரியாகும் இது;

இந்தப் பாட்டியின் வாழ்வாதாரமான கமர்கட் வணிகத்தைத், தொடர்ந்து வெற்றிகரமாக நடத்த உதவிய மாரிமுத்துவுக்கு நேரில் வந்து நன்றி சொல்லத்தான் பாட்டி வந்திருக்கிறார்.”

என்றார் சேதுராமன்.

அடுத்து தலைமை ஆசிரியர் பேசினார்;

“ஈ மொய்த்தப் பண்டங்களை வாங்காதீர்கள் என்று சொன்னார் மருத்துவர்;

ஈ மொய்க்காத வகையில் விற்பனை செய்து, நடைபாதை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுத்தான் நம் பள்ளி மாணவன் மாரிமுத்து;

ஆக்கபூர்வமாக யோசித்த மாதிமுத்துவை நான் மட்டுமில்லை, நாடே பாராட்டும் நிலை வெகு தூரத்தில் இல்லை…!” என்றார் பெருமிதத்துடன்.

மாணவர்கள் பலமாகக் கைத்தட்டி, மாரிமுத்துவை வெகுவாகப் பாராட்டினர்.

தவிர்க்க முடியாத காரணங்களால், அவசர அவசரமாக சில மணித்துளிகள் தாமதமாக இறைவணக்கக் கூட்டத்திற்கு வந்து கலந்து கொண்ட அறிவியல் இயக்கத்தின் செயலர் இப்போது பேசினார்.

மாரிமுத்துவின் இந்தச் செயல்திட்ட வகைமாதிரியை இளம் விஞ்ஞானிகள் போட்டிக்கு தங்கள் பள்ளியிலிருந்து எங்களுக்கு அனுப்பியிருந்தார்கள்.

அது மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு, இந்தச் செயல்திட்டம் தேசீய அளவுக்குத் போட்டிக்குப் பரிந்துரைத்தோம். தேசிய அளவிலும் இந்த வகைமாதிரிக்கு முதல் பரிசு கிடைத்துள்ளது. “வாழ்க இளம் அறிவியலாளர் மாரிமுத்து” என்று மனதார வாழ்த்தினார் அறிவியலியக்கச் செயலர்.

“கொழந்தே நீ நல்லா இருப்பே…!” என்று மாரிமுத்துவின் கன்னத்தைத் தடவி தன் குவிந்த விரல்களில் முத்தமிட்டுக்கொண்டாள் பாட்டி.

அடுத்து, “எல்லாரும் நல்லா இருக்கோணும்” என்று வயது முதிர்ந்த கமர்கட் பாட்டி அனைவரையும் வாழ்த்தினாள்;

“உங்களை மறக்கவே மாட்டோம். இது சத்தியம்…!” என்றாள் உணர்ச்சிவசப்பட்டு.

கிராமத்து மனிதர்களுக்கு முறைமைக்காகவெல்லாம் ‘நன்றி’ சொல்லத் தெரியாது. இந்த மனம் நிறைந்த வாழ்த்துதான் நன்றி அறிவிப்பு.

பாட்டி தனக்காக மட்டும் வெளிப்படுத்திய சுயநலமான நன்றியல்ல அது.

சாலையில் கடைப்பரத்தும் வணிகர்களின் பிரதிநிதியாய்ப் பிரதிபலித்த நன்றியது.

பள்ளி மேடையில், குன்றென நிமிர்ந்து நின்றான் மாரிமுத்து.

– நன்னன்குடி நடத்தும் மானமிகு இரா.செம்மல் நினைவுச் சிறுகதைப் போட்டி 2023

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *