போந்தாக்கோழி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: October 16, 2023
பார்வையிட்டோர்: 2,132 
 
 

பக்கத்து டேபிளில் இருந்த சுமதி,

“இந்த போந்தாக்கோழி பண்ற டார்ச்சர் தாங்கமுடியலைடி”

என்றாள். “என்னாச்சு” என்ற சுதாவிற்கு வயது முப்பது இருக்கும். சுருட்டை முடியுடன் சிவப்பாக இருந்தாள்.

“சென்னையில் நடக்கின்ற மீட்டிங்கிற்கு என்னைப் போகச் சொல்றாங்க. நாம எதுக்குப் போகனும்? நாம டெம்ப்ரவரி ஸ்டாப்தானே. இதைத்தானே அந்தப் போந்தாக்கோழி எப்பப் பார்த்தாலும் சொல்லி நம்மை மட்டம் தட்டும். இதுக்கு மட்டும் அந்தப் போந்தாக் கோழிக்கு டெம்ப்ரவரி ஸ்டாப்புன்னு தெரியலையாமா”

“சரி விடு. போக முடியலைனா சூப்ரெண்ட் கிட்ட சொல்லி வேற யாரையாவது அனுப்பச் சொல்லுவோம்.” என்றாள் சுதா.

“அடிப் போடி இவளே. நீ சொன்னவுடன் அந்தக் கொக்கு நோக்காடு வந்த கோழி உடனே அது போகப்போகுது. இல்ல வேற யாராயாச்சும் அனுப்பிட்டுத்தான் மறுவேலை பார்க்கும் பாரு” என்று முகத்தைச் சுளித்தாள் சுமதி.

“நீ சொல்வதும் சரிதான். இங்க வேலை பார்க்க மட்டும்தான் நாம வேணும். அதிகாரம் பூரா அவங்க கையில. இந்த வேலை பார்க்கிறதுக்கு நான் காலேஜ்லயே இருந்திருக்கலாம்” என்றாள்.

”இதைத் தானே நான் முன்னாடியே சொன்னேன்” என்றாள் சுமதி. சுதா கல்லூரியில் தட்டச்சராகப் பணியாற்றியவள். அரசு வேலை என்றவுடன் வீட்டில் சொன்னார்கள் என இந்த டெம்ப்ரவரி வேலையில் வந்து சேர்ந்தாள். வேலையை நிரந்தரம் செய்வார்கள் என எதிர்பார்த்தாள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. நாட்கள் போனதுதான் மிச்சம். இருந்த வேலையையும் விட்டாயிற்று. வேறு வழியில்லாமல் வேலைக்கு வந்து கொண்டிருந்தாள்.

போந்தாக்கோழி என்று எங்களால் திருநாமம் சூட்டப்பட்ட சசிகலா அக்காவிற்கு வயது ஐம்பது இருக்கும். இளம்வயதிலேயே விதவை ஆனவர். அவரது நிலைகருதியே அவரின் மேல் எனக்குப் பரிதாபமும் அன்பும் ஏற்பட்டது. ஆனால் சசி அக்காவிற்கு யாராவது ஆபிசில் நல்ல சேலை கட்டினாலோ, நகை புதிதாகப் போட்டிருந்தாலோ பொறுக்கமுடியாது அவர்களுக்குக் கெடுதல் செய்யும் குணம் இருந்தது. தன்னைத் தவிர யாராவது சம்பள உயர்வு பெற்றார்கள் என்றால் தாங்கமுடியாது. தனக்குக் கீழ் வேலைபார்க்கும் டெம்ப்ரவரி ஆட்களுக்கு எதுவும் கிடைத்துவிட்டால் தன்னை மதிக்கமாட்டார்கள் என்ற எண்ணமிருந்தது. இதனால்தான் சுமதிக்கும் எனக்கும் சசி அக்காவைப் பார்த்தால் பிடிப்பதில்லை. ஆபிசில் வேலையே பார்க்காமல் ஊதிப் போயிருக்கும் அவளது உடம்பினைப் பார்த்து சுமதி போந்தாக்கோழி எனப் பெயர் வைத்தாள். அது அவரது செயலுக்குப் பொருத்தமாகவும் இருந்தது.

இருபத்தெட்டு வயதிலேயே விதவையான சசி அக்காவிற்கு தன்னைப் போல மற்றவர்கள் துன்பப்படக்கூடாது என்ற எண்ணம்தானே வரவேண்டும். ஆனால் இவர் மட்டும் எப்படி மற்றவர்கள் துன்பப்படுவதைப் பார்த்து ரசிக்கிறார் என்று நான் யோசிப்பதும் உண்டு. அதற்கான காரணத்தை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆபிசில் இருக்கும் சூப்ரெண்டு அதற்கு மேல். ஒரு விசயத்தைச் சொல்ல வந்தால் அனாவில் தொடங்கி அஃகனாவரை இழுத்து வளவளவென்று பேசுகிற ரகம். ஏதாவது கேட்கப் போனால் எனக்கும் சுமதிக்கும் போதும் போதும் என்றாகிவிடும்.

“இந்தக் காரியத்தை இவர்களிடம் கேட்பதற்கு நாமே செய்திருக்கலாம்” என்பாள் சுமதி.

அன்றொரு நாள் ஆபிசில் இருந்த பைல் ஒன்று தொலைந்து போனது. சூப்ரெண்டு சொன்னார்கள் என்பதற்காக நானும் சுமதியும் போய்த் தேடுகிறோம். காலையில் தேட ஆரம்பித்து மதியம் தொடங்கிவிட்டது. நாங்கள் அலுத்துப் போய் சாப்பிட இரண்டு மணிக்கு லன்ச் டேபிளில் அமர்ந்துவிட்டோம். அங்கு வந்த ஜீனியர் அஸிஸ்டெண்ட் தமிழரசன் என்னை வம்பிழுத்தார்.

“என்ன பைல் கிடைத்ததா?” என்றார்.

“இல்லண்ணே. நாங்களும் காலையிலிருந்து தேடுறோம். பைல் எங்க போச்சுன்னே தெரியல” என்றேன் நான்.

“பைல் ரெக்ககட்டிப் பறந்து போயிருக்கும் பாரு. நீங்க ஒழுங்காத் தேடியிருக்க மாட்டிங்க” என்றார். உடனே சுமதி,

“ஒரு பைல ஒழுங்கா வச்சுக்க முடியல. இதுல பேச்சு வேறயா” என்றாள் கிண்டலாக.

“பைல பெருச்சாளி தூக்கிட்டுப் போயிருச்சோ என்னவோ” என்றார் மெதுவாக.

“ஏது உங்க அறையில உள்ள குண்டுப்பெருச்சாளியா” என்றாள் சுமதி. உடனே கொல்லென்று எல்லோர் முகத்திலும் சிரிப்பலை அரும்பியது. சிரித்து முடித்தவுடன்,

“இருக்கலாம்” என்றார் தமிழரசன். அப்போதே எனக்கும் சுமதிக்கும் யார் செய்த வேலையென்பது புரிந்தது.

“என்ன உள்குத்தா” என்றேன் நான்.

“ஆமா” என்றார் தமிழரசன்.

அவரவர் இடத்துக்குச் சென்றவுடன் சுமதி என் காதில் வந்து “இந்த போந்தாக்கோழி ஏன் இந்த வேலையெல்லாம் செய்யுது. அதுக்கு வேற வேலையில்லையா” என்றாள்.

“பிடிக்கலைனா அப்புறம் எப்படிப் பழிவாங்குறது” என்றேன் நான்.

“டிடி வந்தா சூப்ரெண்டல்ல வைவாரு. பாவம்பா சூப்ரெண்டு” என்றாள் சுமதி.

“ஆமாம் நாம என்ன செய்யுறது. சசி அக்கா இருக்கும்போது அது பீரோல்ல தேடவும் முடியாது. அதுவா பைல எடுத்துக்குடுத்தாத்தான் உண்டு. இல்ல அது இல்லாதப்ப சூப்ரெண்டு சுதாரிச்சு எடுக்கனும்” என்றேன் நான்.

எங்களது வேலையை முடித்துக் கொண்டு நானும் சுமதியும் வீட்டிற்குக் கிளம்பினோம். மறுநாள் காலையில் சுமதி அவசரமாக வந்து காதைக்கடித்தாள்.

“விசயம் கேள்விப்பட்டியா. பைலத் தொலைச்சிட்டாங்கன்னு சூப்ரெண்டுக்கு டிடி மெமோ கொடுத்துட்டாராம். பாவம். எல்லாம் இந்தப் போந்தாக்கோழி செய்த வேலை. அத ஒரு நாளைக்கு வச்சுக்கிறேன்” என்று பல்லைக் கடித்தாள் சுமதி.

“விடு அத திருத்தமுடியாது. அது செய்ற தவறுக்குத்தான் இப்படிக் கடவுள் தண்டிச்சிருக்காரு. நாம எதுவும் சொல்லவேண்டாம். அதுவா ஒரு நாளைக்குத் திருந்தும்” என்றேன் நான்.

– காற்றுவெளி (இலண்டன்) , முத்தமிழ்நேசன்(அமெரிக்கா)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *