கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 17, 2024
பார்வையிட்டோர்: 1,117 
 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

1-5 | 6-10

1

குளிர்காலத்தில், புனித நிக்கலஸ் திருநாளுக்கு மறுதினம், அது நிகழ்ந்தது. அந்த வட்டாரம் பூராவும் அன்று ஒரே கொண்டாட்டம்தான்.

விடுதித் தலைவன் வாஸிலி ஆன்ட்ரீவிச் பிரகுனோவ் பிரபலமான வியாபாரி. அவன் மாதா கோயிலின் பிரதானியாக இருந்ததனால் அன்று கோயிலுக்குப் போகவேண்டியது அவசியமாயிற்று. அதேபோல, உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் தனது வீட்டில் உபசரித்து அனுப்ப வேண்டிய அவசியமும் அவனுக்கு ஏற்பட்டிருந்தது.

ஆனாலும், வந்திருந்தவர்கள் அனைவரும் விடை பெற்றுச் சென்ற உடனேயே அவன் பிரயாணம் போவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினான். பக்கத்து ஊரில் உள்ள நிலச் சொந்தக்காரன் ஒருவனை, ஒரு தோப்பு விஷயமாகக் கண்டு பேசக் கிளம்பினான் அவன். நீண்ட நாட்களாக அவன் பேரம் பேசி வந்த விவகாரம் அது. தனக்கு லாபகர மான முறையில் அந்த பேரம் முடியாதபடி, நகரத்தி லுள்ள வியாபாரிகள் முந்திக்கொண்டு காரியத்தைக் கெடுத்து விடக்கூடாதே என்ற அவசரம் அவனுக்கு.

இளைஞனான நிலச் சொந்தக்காரன் அந்தத் தோப்புக்கு பத்தாயிரம் ரூபிள்கள் கேட்டான். வாஸிலி ஆன்ட்ரீவிச் ஏழாயிரம் தருவதாகச் சொன்ன காரணத்தினாலேயே அவன் அவ்வளவு கேட்டுக் கொண்டிருந்தான். பார்க்கப்போனால், ஏழாயிரம் என்பது தோப்பின் உண்மையான மதிப்பில் மூன்றில் ஒரு பங்குதான் ஆகும். வாஸிலி ஆன்ட்ரீ விச் கணக்குப் பண்ணிய கிரயத்திற்கே அந்தத் தோப்பு முடிந்துவிடும் என்ற நிலைமை இருந்தது. ஏனெனில், மரங்கள் எல்லாம் அவனுடைய வட்டாரத்திலேயே நின்றன. ஒருவனது – வட்டாரத்தில் நிலவும் விலை மதிப்பை இதர பகுதியில் உள்ளவர்கள் தலையிட்டு உயர்த்தி விடக்கூடாது என்று அவன் பக்கத்து ஊர்களில் வசிக்கும் வியாபாரிகளோடு நீண்டகால ஒப்பந்தம் செய்து வைத்திருந்தான். ஆனால், இப்போது நகரத்தில் உள்ள மர வியாபாரிகள் சிலர் அந்தத் தோப்பை விலை பேசி முடித்துவிட முன் வந்திருப்பதாக அவனுக்குச் செய்தி எட்டியது. அதனால், உடனடியாகச் சென்று அந்த விஷயத்தை முடித்துவிட அவன் தீர்மானித்தான்.

ஆகவே, விருந்து முடிந்ததும் அவன் தனது பணப் பெட்டியிலிருந்து எழுநூறு ரூபிள்களை எடுத் தான். அதை மூவாயிரம் ஆக்குவதற்காக, தனது பாதுகாப்பிலிருந்த மாதாகோயில் பணம் இரண்டா யிரத்து முந்நூறு ரூபிள்களையும் சேர்த்தான். நோட்டுகளை அதிகச் சிரத்தையோடு எண்ணிப் பார்த்து, சட்டைப்பைக்குள் பத்திரமாக வைத்துக் கொண்டு, புறப்படுவதற்கு அவசரப்பட்டான் அவன்.

வாஸிலி ஆன்ட்ரீவிச்சின் வேலைக்காரர்களில் நிகிட்டா என்பவன் மட்டுமே அன்று ‘ குடிவெறி இல்லாமல் இருந்தான். அவன் தான் வண்டியில் குதிரையைப் பூட்டுவதற்காக ஓடினான். நிகிட்டாகூட வழக்கமாகக் குடிக்கும் குணம் உடையவன் தான். எனினும் அன்று அவன் குடிக்காமல் இருந்ததற்கு ஒரு காரணம் உண்டு. கடைசி முறையாகக் குடித்த போது அவன் தனது மேல் சட்டையையும் தோல் பூட்ஸையும் ‘தலை முழுக’ நேரிட்டது. அதனால் இனி மேல் குடிப்பதில்லை என்று அவன் சபதம் செய்து கொண்டான். அன்று முதல் இரண்டு மாதகாலம் அவன் தனது வைராக்கியத்தைக் காப்பாற்றி விட்டான். இப்பொழுதும் காத்து வந்தான். பண்டிகை யின் முதல் இரண்டு தினங்களிலும் எங்கு பார்த் தாலும் குடிமயம்; ஆயினும் மது ஆசையை எதிர்த்துச் சமாளித்து விட்டான் அவன்.

நிகிட்டா பக்கத்து கிராமம் ஒன்றைச் சேர்ந்த ஒரு விவசாயி. ஏறத்தாழ ஐம்பது வயதிருக்கும் அவனுக்கு. ‘சரியான நிர்வாகி அல்ல’ என்று இதர விவசாயிகள் அவனைப்பற்றிக் குறிப்பிடுவது உண்டு. அதாவது, அவன் வீட்டோடு இருந்து சிக்கனமாக வாழ்க்கை நடத்தும் குடும்பத் தலைவன் அல்ல; வீட்டைவிட்டு வெளியேறி கூலியாளாகவே பெரும் பங்கு காலத்தை ஓட்டுகிறவன். சுறுசுறுப்பு, சாமர்த் தியம், வேலையில் உறுதி, இவற்றிக்கெல்லாம் மேலாக இரக்கமும் இனிமையும் நிறைந்த அவனது சுபாவம் ஆகியவற்றினால் அவனுக்கு எங்குமே தனி மதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் அவன் எந்த இடத்திலும் நெடுங்காலம் நிலைத்திருக்கவில்லை. ஏனென்றால், வருஷத்திற்கு இரண்டு தடவைகள் – அல்லது அதைவிட அதிகமாகவே – குடிவெறி அவனைப்பற்றிக் கொள்ளும். அப்பொழுதெல்லாம் அவன் தனது உடுப்புகள் அனைத்தையும் குடியிலே தொலைத்து விடுவான். அத்துடன், அமைதியற்றவனாகவும் சண்டைக்காரனாகவும் மாறிவிடுவான்,

வாஸிலி ஆன்ட்ரீவிச் கூட அவனை அநேக தடவைகள் வேலையை விட்டுத் துரத்திவிட்டது உண்டு. ஆனாலும் அவனே மீண்டும் நிகிட்டாவை வேலைக்கு எடுத்துக் கொள்ளத் தயங்கியதுமில்லை. அவனுடைய நியாயமான போக்கு, பிராணிகளிடம் அவன் காட்டும் அன்பு, முக்கியமாக குறைந்த கூலி ஆகிய காரணங்களுக்காக வாஸிலி மதிப்பு அளித்தான். அவனைப் போன்ற ஆளுக்கு நியாயமாகக் கொடுக்க வேண்டிய ‘வருஷத்துக்கு எண்பது ரூபிள்கள் என்கிற கணக்கின்படி வாஸிலி நிகிட்டாவுக்குப் பணம் தருவதில்லை. ஏறக்குறைய நாற்பது ரூபிள்கள் – சில்லறை சில்லறையாகவும் பல தவணைகளிலும் கொடுத்தான். அதைக்கூட அநேகமாக அவன் ரொக்கமாய் கொடுப்பதில்லை. தனது கடையிலிருந்து சாமான்களாகக் கொடுத்தான். சாமான்களின் விலையை அவன் அதிகப்படுத்தி விடுவதும் வழக்கம்.

நிகிட்டாவின் மனைவி மார்த்தா ஒரு காலத்தில் வலிவும் வனப்பும் பொருந்திய மங்கையாக இருந்தவள், தனது ஒரு மகனையும் இரண்டு பெண்களையும் வைத்துக் கொண்டு குடும்பத்தை நிர்வகித்து வந்தாள். நிகிட்டா வீட்டிலேயே தங்க வேண்டும் என்று அவள் வற்புறுத்துவதில்லை. அதற்கு முதலா வது காரணம், தட்டுமுட்டுச் சாமான்களைப் பழுது பார்த்து வந்த ஒருவனோடு அவள் கடந்த இருபது வருஷ காலமாக தொடர்பு வைத்திருந்தாள். வேறொரு ஊரிலிருந்து வந்த குடியானவனான அந்த நபர் அவர்கள் வீட்டிலேயே தங்கியிருந்தான். இரண்டாவதாக, அவளுடைய கணவன் நல்ல நிலைமையில் இருக்கும்பொழுது அவள் அவனைத் தனது இஷ்டத்துக்கு ஆட்டி வைத்த போதிலும், அவளுக்கு அவனிடம் பயமிருந்தது. அவன் குடித்துவிட்டால், தீயைக் கண்டு அஞ்சுவதுபோல அவனைக்கண்டு நடுங்குவாள் அவள். ஒருதடவை நிகிட்டா குடித்துவிட்டு வீட்டிலிருந்த போது, இதர சமயங்களில் அடங்கி ஒடுங்கிப் போகிற பழக்கத்துக்கு ஈடுகட்டத்தானோ என்னவோ, அவளு டைய பெட்டியை உடைத்து அவளது மிகச் சிறந்த ஆடைகளை எல்லாம் வெளியே எடுத்துப் போட்டான்; ஒரு கோடரியை எடுத்து அவளுடைய உள் அங்கி களையும் நல்ல உடுப்புகளையும் தும்பு தும்பாகக் கொத்திக் குதறி நாசப்படுத்தி விட்டான்.

நிகிட்டா சம்பாதித்த கூலி பூராவும் அவனுடைய மனைவியிடமே போய்விடும். அதுபற்றி அவன் எவ்வித ஆட்சேபமும் கிளப்பியதில்லை. அதனால், பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக, மார்த்தா இரண்டு தடவைகள் வாஸிலி ஆன்ட்ரீவிச்சை பார்க்கப் போனாள். அவனிடமிருந்து கோதுமை மாவு, தேயிலை, சர்க்கரை, கொஞ்சம் வோட்கா (மது) ஆகியவை பெற்றுக்கொண்டாள். அவ்வளவுக்கும் மூன்று ரூபிள் கள் ஆயின. மேற்கொண்டு ரொக்கமாக ஐந்து ரூபிள் கள் வாங்கினாள். அதற்காக அவள் அவனுக்கு மிகுந்த நன்றி தெரிவித்தாள். அவன் குறைந்த பட்சம் இருபது ரூபிள்கள் நிகிட்டாவுக்குக் கொடுக்க வேண்டியிருந்தது. என்றாலும் அவன் அவளுக்கு சலுகையோடு விசேஷமான ஆதரவு காட்டிவிட்டது போல் தான் அவள் வந்தனம் அறிவித்தாள்.

‘நாம் உன்னோடு எப்பொழுதாவது ஒப்பந்தம் எழுதிக் கொண்டோமா என்ன? உனக்கு ஏதாவது தேவைப்பட்டால், தாராளமாக எடுத்துக்கொள், அதனாலென்ன? பிறகு வேலை செய்து கழித்துவிடப் போகிறாய். நான் மற்றவர்களைப்போல் இல்லை. உன்னை காக்கப் போடுவது, கணக்கைத் திருத்துவது, அபராதம் என்று பிடிப்பது இவை எல்லாம். நம்ம கிட்டேக் கிடையாது. நேர்மையாகத்தான் நாம் நடந்து கொள் வோம். நீ எனக்காக உழைக்கிறாய். நான் உன்னை புறக்கணித்து விடமாட்டேன்’ என்று வாஸிலி நிகிட்டாவிடம் சொன்னான்.

இதைச் சொல்லும் போது, தான் நிகிட்டாவின் ஆதரவாளன் என்று உண்மையாகவே நம்பிவிட்டான் வாஸிலி ஆன்ட்ரீவிச். நிகிட்டாவும், பணத்துக்காக அவனை நம்பி இருக்கின்ற மற்ற எல்லோரும், அவனே தங்களைப் பாதுகாக்கிறான், அவன் யாரையும் வஞ்சிக்க வில்லை என்று நினைத்து அவனது எண்ணத்தை உறுதிப்படுத்தும் வகையில் நடந்து கொள்ளும்படி பேச்சை உபயோகிக்கும் சாதுரியம் அவனுக்குத் தெரியும்.

‘ஆமாம், எனக்குத் தெரிகிறது வாஸிலி ஆன்ட்ரீவிச். நான் உமக்காக உழைக்கிறேன். எனது சொந்தத் தகப்பனுக்குப் பாடு படுவதுபோல நான் சிரமம் எடுத்துக் கொள்கிறேன். இது உமக்கே தெரியும். எனக்கு எல்லாம் புரிகிறது!’ இப்படி நிகிட்டா பதில் சொல்வான்.

வாஸிலி தன்னை ஏமாற்றுகிறான் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அதே சமயத்தில், அவனிடம் சொல்லி கணக்கைச் சரிப்படுத்திக் கொள்ள முயற்சிப்பதோ. தன்னுடைய கட்சியை எடுத்துப் பேசுவதோ எவ்விதமான பயனும் தராது; தனக்கு வேறு போக்கிடம் இல்லை என்கிற நிலைமை நீடிக்கிற வரையில், தான் பெற முடிந்ததைப் பொறுமையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான் என்பதையும் அவன் உணர்ந்திருந்தான்.

இப்பொழுது, வண்டியைப் பூட்டும்படி எஜமான் உத்திரவிட்டதும் அவன் வழக்கம்போல் உற்சாகத் தோடும் மன நிறைவோடும், உள்வளைந்த தனது பாதங்களை வீசிவீசிச் சுறுசுறுப்பாக நடந்து, தொழு வத்தை அடைந்தான். குஞ்சம் கட்டிய கனமான கடிவாளத்தை ஆணி ஒன்றிலிருந்து எடுத்து, கடி இரும்பின் வளையங்களைக் குலுக்கி ஒலி எழுப்பிக் கொண்டே, மூடிக்கிடந்த கொட்டிலை நோக்கிச் சென்றான். வண்டியில் பூட்டப்பட வேண்டிய குதிரை அங்கே தான் தனியாக நின்றது.

அவனைக் கண்டதும், லாயத்தில் தனியாக நின்ற குதிரை சிறு கனைப்பு கனைத்தது. அதனால் அவன் ‘என்ன, தனியாக நிற்பது உனக்குக் கஷ்டமாக இருக்கிறதா? அசட்டுக் கழுதை!’ என்று பேசினான்.

நல்ல சுபாவம் உள்ள குதிரை அது. நடுத்தர வளர்த்தி பெற்ற, கருஞ்சிவப்பு நிற , ஆண் குதிரை. அதன் பின்பக்கம் சற்று அதிகமாகச் சரிந்து காணப்பட்டது. தான் சொல்வதைக் கேட்டுப் புரிந்து கொள்ளக்கூடிய சக்தி பெற்ற ஆளிடம் பேசுவது போலவே நிகிட்டா அந்தக் குதிரையிடமும் வார்த்தை யாடினான்.

கொஞ்சம் பொறு. கொஞ்சம் பொறு. இன்னும் நேரம் கிடக்கிறதே. முதலில் நான் உனக்கு தண்ணீர் காட்டுகிறேன்’ என்று அவன் சொன்னான். தனது மேல் சட்டையின் விளிம்பை எடுத்து, நல்ல போஷணை யினால் மினு மினுத்து நின்ற குதிரையின் முதுகிலே படிந்திருந்த தூசியைத் தட்டித் துடைத்தான். அதன் அழகான தலையில் கடிவாளத்தை மாட்டி, காதுகளையும் நெற்றி மயிரையும் நேர்படுத்தி விட்டான். பிறகு, கட்டைத் தறித்து குதிரையை தண்ணீர் காட்டுவதற் காக வெளியே இட்டுச் சென்றான்.

சாணம் சிதறிக் கிடந்த லாயத்திலிருந்து வழி யைக் கண்டுபிடித்து வெளியே வந்த குதிரை, முக்கார்ட்டி, துள்ளிக் குதித்தது. தனது பின் காலை உதைத்து விளையாடியது. குழாயை நாடி, தன்னோடு கூடவே ஓடிவந்து கொண்டிருந்த நிகிட்டாவை ஓங்கி உதைப்பதுபோல் பாசாங்கு செய்தது அது.

‘இந்தா பாரு, இந்தா பாரு, அயோக்கியக் கழுதை!’ என்று நிகிட்டா கடிந்து கொண்டான். உதை அவன் உடம்பில் படாமல், அழுக்குப் படிந்த ஆட்டுத்தோல் மேல் அங்கியை மாத்திரம் உரசும் படியாக, எவ்வளவு ஜாக்கிரதையோடு அந்தக் குதிரை தனது காலை வீசியது என்பதை அவன் அறிவான். முக்கார்ட்டியின் இந்தத் தந்திரத்தை நிகிட்டா வெகுவாகப் பாராட்டுவது வழக்கம்.

குளிர்ந்த நீரைக் குடித்ததும் குதிரை பெருமூச் செறிந்தது. வலுவான அதன் உதடுகள் ஈரம் படிந்து துடித்தன. அவற்றின் ரோமங்களில் தங்கி நின்ற கண்ணாடி போன்ற நீர்த்துளிகள் தொட்டியினுள் விழுந்தன. குதிரை கொஞ்ச நேரம் யோசனையில் ஆழ்ந்து விட்டதுபோல் நின்றது. பிறகு நாசியினால் பெருஞ்சீற்ற ஒலி ஒன்றை எழுப்பியது.

‘உனக்கு இஷ்டம் இல்லையானால் நீ மேலும் குடிக்க வேண்டியதில்லை. ஆனால் அப்புறம் தண்ணீர் வேணும் என்று கேட்கப்படாது’ என்று கண்டிப்பாகச் சொன்னான் நிகிட்டா . இவ்விதம் தனது பண்பை முக்கார்ட்டிக்கு விளக்கிக் காட்டிய பிறகு அவன் லாயத்துக்குத் திரும்பினான். முற்றத்தில் நெடுகிலும் துள்ளி விளையாடத் துடித்த இளம் குதிரையை கடிவாள வாரினால் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தான் அவன்.

முற்றத்தில் அந்நியன் ஒருவன் தவிர வேறு யாரும் காணப்படவில்லை. சமையல் காரியின் கணவன் அவன். பண்டிகைக்காக அங்கு வந்திருந்தான்.

‘போய், எந்தச் சறுக்கு வண்டியில் குதிரையை பூட்ட வேண்டும் என்று கேளு. அகலமான வண்டியிலா , சின்ன வண்டியிலா என்று தெரிந்து வா. போ ஐயா, நீ ரொம்ப நல்லவனாச்சுதே!’ என்றான் நிகிட்டா .

சமையல்காரியின் கணவன் வீட்டுக்குள்ளே போனான். இரும்பினால் அஸ்திவாரம் இடப்பெற்று, தகரக்கூரை அமைக்கப்பட்டு உறுதியாக விளங்கியது அந்த வீடு. அவன் சீக்கிரமே திரும்பி வந்து, சின்ன வண்டி தான் தயாராக வேண்டும் என்று அறிவித்தான்.

அதற்குள், நிகிட்டா கழுத்துப் பட்டையையும் பித்தளை பொதிந்த வயிற்றுப் பட்டையையும் குதிரைக்கு அணிவித்து விட்டான். வர்ணம் பூசப் பெற்றிருந்த, லேசான ஏர்க்கால் சட்டம் ஒன்றை ஒரு கையில் தூக்கிக்கொண்டு , மறுகையால் குதிரையைப் பற்றி வண்டிகள் நின்ற இடத்துக்கு நடத்திச் சென்றான்.

‘சரி சரி, சின்ன வண்டியே போகட்டும்’ என்று சொல்லிக் கொண்டே அவன் குதிரையை இழுத்து சட்டத்திற்குள் ஓட்டினான். அறிவுள்ள அந்தக் குதிரை இத்தனை நேரமும் அவனைக் கடிப்பதுபோல் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தது.

சமையல்காரியின் கணவன் துணைபுரிய நிகிட்டா வண்டியில் குதிரையைப் பூட்டினான். எல்லாம் ஒரு மாதிரியாக நிறைவேறியதும் அவன் அந்த ஆளை, வைக்கோல் எடுத்து வருவதற்காகத் தொழுவுக்கும், முரட்டுக் கம்பளித்துணி ஒன்றைக் கொண்டு வருவதற்காகக் களஞ்சியத்திற்கும் அனுப்பி வைத்தான்.

‘உம், இப்ப சரியாப் போச்சு. அடே அடே ! இது மாதிரி சிலிர்ப்பு காட்டாதே’ என்று கூறிக்கொண்டே, மற்றவன் எடுத்து வந்த புத்தம் புதிய வைக்கோலை வண்டிக்குள் திணித்து அமுக்கினான். ‘இப்போது சாக்கை இதன் மேலே பரப்புவோம். அதற்கு மேலே கம்பளியை விரிப்போம்’ என்று சொல்லிக்கொண்டு, சொல்லுக்குத் தகுந்தாற்போல் செயல் புரிந்தான் கம்பளியை இழுத்து, வைக்கோல் வெளியே தெரி யாதபடி மூடித் திணித்து, உட்காருவதற்கு வசதியாக இடம் அமைத்தான் அவன்.

‘அன்பரே, உமக்கு வந்தனம். எப்பவுமே ஒருவனுக்கு இரண்டு பேராக வேலை செய்தால் எல்லாம் வெகு சீக்கிரத்தில் முடிந்துவிடும்’ என்று நிகிட்டா சொன்னான். பித்தளை வளையத்தினால் இணைக்கப்பட்டிருந்த தோல்வார்களைப் பிடித்தவாறே அவன் வண்டிக்காரன் இருப்பிடத்தில் அமர்ந்து கொண்டான்.

முற்றத்தில் பனிமூடி உறைந்து கிடந்த உரக் கிடங்கின் மேலாகவே வண்டியைச் செலுத்தினான். அமைதியின்றித் துடித்து நின்ற குதிரையை வாசலை நோக்கி ஓட்டினான்.

‘நிகிட்டா மாமா!… மாமா, மாமா!’ என்று ஒரு குரல் ஓங்கி எழுந்தது. ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் வீட்டினுள்ளிருந்து முற்றத்துக்கு ஓடிவந்தான். கறுப்பு நிற ஆட்டுத்தோலால் ஆன கோட்டும் வெள்ளை நிறத் தோல் பூட்சும், கதகதப்பான குல்லாயும் அணிந்திருந்தான் அவன். அவசரம் அவசரமாக ஓடிவந்த அச்சிறுவன் ‘என்னையும் உன் கூட அழைத்து போ’ என்று சொல்லிக் கொண்டே, மேல் சட்டையின் பொத்தான்களை மாட்டி நின்றான்.

‘அதுக்கென்ன, ஓடிவா கண்ணே!’ என்று கூறி, நிகிட்டா வண்டியை நிறுத்தி அவனை எடுத்துத் தன்னுடன் அமர்த்திக் கொண்டான். மெலிந்து, உடல் வெளுத்துக் காணப்பட்ட சின்னப் பையன் முதலாளியின் மகன் ஆவன். வண்டியில் ஏறியதும் அவனுக்கு ஆனந்தம் பொங்கியது. வண்டி ரஸ்தாவை நோக்கி விரைந்தது.

அப்பொழுது இரண்டு மணிக்கு மேலாகிவிட்டது. காற்றும் குளிரும் கலந்து நிலவிய உற்சாகமற்ற நாள் அது. உறைபனி நிலைமை கடுமையாக இருந் தது. கவிந்து வந்த கார்மேகம் வானத்தில் அரை வாசியை மூடி மறைத்து விட்டது. முற்றத்தில் அமைதி தான் நீடித்தது. ஆனால் வீதியிலே காற்றின் தாக்குதல் வலிமை பெற்றிருந்தது. அருகிலிருந்த கூரை ஒன்றிலிருந்து கீழே சரிந்து விழுந்த உறைபனி, காற்றில் அடிபட்டுச் சுழன்று, குளிக்கும் அறையை ஒட்டிய திருப்பத்தில் சுற்றி மிதந்து கொண்டிருந்தது.

நிகிட்டா வண்டியை முற்றத்திலிருந்து வெளியே கொண்டு வந்து குதிரையை வீட்டின் பக்கமாக திருப்புவதற்கு முன்னதாகவே வாஸிலி ஆன்ட்ரீவிச் பாய்ந்து வந்தான். வீட்டின் முன்பக்கத்தில் உள்ள நடை வாசலில், சிகரெட் பிடித்தபடி நின்று கொண்டிருந் தான் அவன். துணி மூடிய ஆட்டுத்தோல் கோட்டு அவன் தேகத்தில் இறுகப் படிந்திருக்கும்படி இடுப்பருகே கச்சையிடப் பட்டிருந்தது. அவன் அடி எடுத்து வைத்ததும், பலர் காலில் மிதிபட்டு இறுகியிருந்த பனி கூட அவனது கால்களில் கிடந்த தோல் பூட்ஸின் கீழ் கீச்சிட்டு நெகிழ்ந்து கொடுத்தது.

வாஸிலி முன்னால் வந்து நின்று, சிகரெட்டைக் கடைசி முறையாக ஒரு தம்’ இழுத்துவிட்டு, கட்டையைக் கீழே போட்டுக் காலால் நசுக்கினான். மீசையினூடாகப் புகை நெளியும்படி மூச்சு விட்டான். முன்னேறி வந்து கொண்டிருந்த குதிரையை ஓரக் கண்ணால் கவனித்தவாறே, தோலினாலான கழுத்துப் பட்டையை அவன் சரிப்படுத்திக் கொண்டான். சிவந்து ஆரோக்கியமாகக் காணப்பட்ட அம்முகம் க்ஷவரம் செய்யப்பட்டு ‘மழ மழ’ வென்றிருந்தது. அதனால் மீசை மட்டும் எடுப்பாக விளங்கியது. அவனது சுவாசத்தினால் கழுத்துப் பட்டையில் ஈரம் கசிந்து விடக்கூடாதே என்கிற எச்சரிக்கையோடு, முகத்தை ஒட்டிய இருபுறங்களிலும் அவன் அதைச் சொருகி உள்ளே அடக்கமாக இருக்கும்படி செய்தான்.

சறுக்கு வண்டியில் தனது சிறிய மகன் இருப்பதைக் கவனித்ததும், ‘இங்கே பாரேன், அதுக்குள்ளே இந்தப் போக்கிரிப் பயல் வண்டியில் இடம் பிடித்து விட்டானே!’ என்று வியப்புடன் முனங்கினான் அவன்.

வாஸிலி ஆன்ட்ரீவிச் அன்று விருந்தாளிகளுடன் சேர்ந்து பருகிய மதுவின் காரணமாக ‘உளம் கிளர்ந்த’ நிலையிலிருந்தான். ஆகவே, தன்னுடையது என்று சொந்தம் பாராட்டிக் கொள்ளக்கூடிய எல்லா விஷ யங்கள் பேரிலும் அவனுக்கு ஏகப்பட்ட பெருமை ஏற்பட்டிருந்தது. தான் செய்கிற ஒவ்வொரு காரியத் திலும் அளவிலாத் திருப்தியே கண்டான் அவன். தன்னுடைய இளவரசு என்று அவன் மதித்து வந்த புத்திர பாக்கியத்தின் தோற்றமே அவனுக்குப் பேருவகை கொடுத்தது. அவன் தனது கண்களைக் குறுக்கிக் கொண்டு, பெரிய பற்களைக் காட்டியவாறே, மகனைக் கவனித்தான்.

அவனை வழி அனுப்புவதற்காகக் காத்திருந்த அவன் மனைவி தலைவாசலில் அவனுக்குப் பின் பக்கத்தில் நின்றாள். கருவுற்றிருந்த அவள் மெலிந்து உடல் வெளுத்துக் காணப்பட்டாள். அவள் தனது தலையையும் தோள்களையும் ஒரு போர்வையினால் மூடி மறைத்திருந்ததால், அவளது முகத்தில் கண்கள் மட்டுமே வெளியே தெரிந்தன. அவள் வாசல் படியிலிருந்து முன்னால் வந்து, பயந்த குரலில் சொன்னாள், ‘இப்போது நீங்கள் நிகிட்டாவையும் உங்களோடு கூட்டிக் கொண்டு போவது நல்லது’ என்று.

வாஸிலி ஆன்ட்ரீவிச் பதில் எதுவும் சொல்ல வில்லை. அவளுடைய வார்த்தைகள் அவனுக்கு உறுத்தல் ஏற்படுத்தின என்பது நன்றாகப் புரிந்தது. அவன் கடுமையாக முகத்தைச் சுளித்துவிட்டுக் காரித் துப்பினான்.

‘நீங்கள் பணம் கொண்டு போகிறீர்கள். காற்று நிலைமை இன்னும் மோசமாகப் போனால் என்ன செய்வீர்கள்? நல்லதுக்குத்தான் சொல்கிறேன். அவனையும் கூட்டிக்கொண்டு போங்கள்’ என்று அவள் அதே சோகக் குரலில் தொடர்ந்து பேசினாள்.

‘ஏன்? அந்த வழி எனக்குத் தெரியாதா? என் கூடத் துணைக்கு ஒரு ஆள் வேண்டுமா என்ன?’ என்றான் வாஸிலி. அவன் ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக உச்சரித்தான். சாமான் வாங்க வந்தவர்களிடமும் விற்கிறவர்களிடமும் பேசுகிற தோரணையோடு, தனது உதடுகளை இயல்புக்கு மாறான முறையில் அழுத்திக் கடித்துக்கொண்டே பேசினான் அவன்.

போர்வையை இழுத்து மேலும் நன்றாக மூடி முக்காடிட்டுக் கொண்டே அவள் சொன்னாள்: ‘நீங்கள் அவனையும் அழைத்துச் செல்வதுதான் நியாயமாகும். ஆண்டவன் பெயரால் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.’

‘பாரேன். அட்டை மாதிரி அதிலேயே ஒட்டிக் கொண்டு விடமாட்டேன் என்கிறாளே…அவனை நான் எங்கே கூட்டிப் போவது?’ என்று அவன் முணமுணத்தான்.

‘வாஸிலி ஆன்ட்ரீவிச், நான் உங்கள் கூட வரத் தயார்’ என்று குதூகலத்தோடு சொன்னான் நிகிட்டா. பிறகு எஜமான் மனைவியின் பக்கம் திரும்பி, ‘ஆனால் நான் இல்லாதபோது யாராவது குதிரைகளுக்குத் தீனி வைக்க வேண்டுமே’ என்று சொன்னான்.

‘அதை நான் கவனித்துக் கொள்கிறேன், நிகிட்டா. நான் சைமனிடம் சொல்லி வைக்கிறேன்’ என்றாள் அவள்.

ஆகவே, தீர்மானமான ஒரு முடிவை எதிர் பார்த்தபடி ‘என்ன வாஸிலி ஆன்ட்ரீவிச், நானும் உங்கள் கூட வரவா?’ என்று நிகிட்டா கேட்டான்.

‘என் வீட்டுக்காரியை நான் திருப்திப்படுத்த வேணும் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் நீ வருவதென்றால், இதைவிடக் கதகதப்பான உடுப்பு ஏதாவது அணிந்து கொள்வது நல்லது’ என்று சொல்லி, வாஸிலி நிகிட்டாவின் மேல் அங்கியைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே புன்முறுவல் பூத்தான்.

நிகிட்டா அணிந்திருந்த ஆட்டுத்தோல் சட்டை கட்டையாக இருந்தது. கைகளின் கீழும் முதுகுப் புறத்திலும் கிழிந்து காணப்பட்டது. அழுக்குப்படிந்து, ஓரம் பூராவும் சிலும்பல் சிலும்பலாகி =, உருக்குலைந்து போய்விட்டது அது. அதனுடைய ஆயுட்காலத்தில் அது எவ்வளவோ அடிபாடுகளைத் தாங்கிச் சகித்து வந்திருந்தது.

‘ஏய், ஐயா, இப்படி வந்து இந்தக் குதிரையைக் கொஞ்சம் பிடித்துக்கொள்’ என்று நிகிட்டா சமையல் காரியின் கணவனைப் பார்த்துக் கூவினான். அந்த ஆள் இன்னும் முற்றத்திலேயே தான் நின்றான்.

‘வேண்டாம். நானே பிடிப்பேன். நான் தான் பிடிப்பேன்’ என்று கத்திக்கொண்டு சின்னப்பையன் சட்டைப் பைகளுக்குள்ளே இருந்த கைகளை வெளியே இழுத்தான். குளிரினால் சிவப்பேறிவிட்ட கரங்களினால் அவன் குதிரை லகானை பற்றிக்கொண்டான். அந்தத் தோல் வாரும் குளிர்ந்துதான் இருந்தது.

நிகிட்டாவை நோக்கிச் சிரித்துக்கொண்டே வாஸிலி ஆன்ட்ரீவிச் சொன்னான், ‘உன்னை அலங்காரம் பண்ணிக் கொள்வதிலேயே அநாவசியமாகக் காலம் போக்கிவிடாதே. சுறுசுறுப்பாக வந்து சேரு!’ என்று.

‘ஒரு நொடியிலே வந்து விடுகிறேன் ஐயா’ என்று சொன்ன நிகிட்டா, தோலினால் ஒட்டுப் போடப் பெற்று கனமாகியிருந்த பூட்ஸை இழுத்துக்கொண்டு வேகமாக ஓடினான். முற்றத்தின் குறுக்காக ஓடி, தொழிலாளர்கள் தங்கும் குடிலுக்குள் புகுந்தான்.

‘அரினுஷ்கா! அடுப்புப் பரணுக்கு மேலே இருக்கிற என் கோட்டை எடுத்துக் கீழே போடு. நான் எஜமானோடு பிரயாணம் போகிறேன்’ என்று அவன் சொன்னான். அங்கே ஆணியில் தொங்கிய இடுப்புப் பட்டையை வேகமாக எடுத்துக் கொண்டான்.

தொழிலாளிகளுக்கு உணவு ஆக்கிப் போடுகிற சமையல்காரி, உண்ட களைப்பினால் நன்றாக உறங்கிய பிறகு விழித்து எழுந்து, தனது கணவனுக்கு வெந்நீர் தயாரிப்பதற்காக ‘ஸமோவா’ரைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தாள். உள்ளே புகுந்த நிகிட்டாவை உற்சாகத்தோடு கவனித்தாள் அவள். அவனது பரபரப்பு அவளிடமும் தொத்திக் கொண்டது. அதனால் அவள் வேகமாக வேலை செய்தாள். அடுப்புப் பரண்மீது காய்ந்து கொண்டிருந்த நைந்து போன துணி அங்கியை எடுத்து, அரக்கப் பறக்க உதறி, மாற்றி, கையினால் தேய்த்துப் பதப்படுத்தினாள்.

‘இனி உனக்கு நல்ல வாய்ப்புதான். உன் புருஷனோடு நீ சந்தோஷமாகப் பொழுது போக்கலாம்’ என்று நிகிட்டா சொன்னான். அவன் யாருடன் தனித்து நிற்க நேரிட்டாலும் சரிதான்; அன்பு கனிந்த உள்ளத்தோடு ஏதாவது இனிய வார்த்தை சொல்வது அவனுடைய வழக்கம்.

தேய்ந்து குறுகிய இடுப்புப் பட்டையைச் சுற்றி இழுத்து, சுருங்கிய வயிறு மேலும் ஒட்டிப் போகும்படி மூச்சை உள்வாங்கி, தோல் சட்டை உடம்போடு இறுகிப்படியும் வண்ணம் அழுத்திக் கட்டிக் கொண் டான் அவன். இப்ப சரியாகி விட்டது’ என்றான்.

இப்படி அவன் சமையல்காரியிடம் பேசவில்லை. நுனிகளை இழுத்துச் சேர்த்து இடுப்பில் சொருகிக் கொண்டே அவன் அந்தப் பட்டையைப் பார்த்துத் தான் சொன்னான். ‘இனிமேல் நீ அவிழ்ந்து விழமாட்டாய்’ என்றும் சொன்னான்.

அப்புறம், கைகள் தாராளமாக இயங்குவதற்கு வசதியாக அவன் தோள்களை மேலும் கீழுமாக உயர்த்தியும் இறக்கியும், முதுகை வளைத்து நெளித்தும் மேல் சட்டையை மாட்டிக் கொண்டான். புஜங்களில் உறுத்தாதபடி கவனித்து, கைகளின் கீழ்ப்பகுதியில் குத்திக் குத்திச் சரிப்படுத்தினான். தோலினால் மூடிப் பொதிந்த கையுறைகளை எடுத்துக் கொண்டதும் அவன் ‘எல்லாம் திருப்தியாக முடிந்தது’ என்று சொன்னான்.

‘உன் கால்களுக்குப் பாதுகாப்பாக ஏதாவது சுற்றிக்கொள்ள வேண்டும், நிகிட்டா. உன் பூட்ஸ் மகா மோசமாக இருக்கிறதே’ என்றாள் அவள்.

திடீரென்று அவ் உண்மையை உணர்ந்தவன் போல அவன் நின்றான். ‘ஆமாம் அப்படிச் செய்ய வேண்டியதுதான்…ஆனால் இந்தத் தடவை இவையே போதும். இப்ப ரொம்ப தூரம் போகவில்லையே!’ என்று கூறிவிட்டு, அவன் முற்றத்திற்கு ஓடினான்.

அவன் சறுக்கு வண்டியை அணுகியதும், ‘உனக்குக் குளிரவில்லையா நிகிட்டா?’ என்று எஜமானின் மனைவி கேட்டாள்.

‘குளிரா? அதொன்றும் இல்லையே. கதகத வென்றுதான் இருக்கிறேன்’ என்று அவன் சொல்லி விட்டான். தனது பாதங்களை மூடி மறைப்பதற்குத் தகுந்தபடி, கொஞ்சம் வைக்கோலை வண்டியின் முன் பக்கத்திற்குத் தள்ளிக் கொண்டான். அந்த நல்ல குதிரைக்குத் தேவைப்படாது என்கிற காரணத்தினால் அவன் சவுக்கை எடுத்து அடியில் போட்டு வைத்தான்.

மென்ரோமம் அடர்ந்த மேல் சட்டைகள் இரண்டை ஒன்றுக்குமேல் ஒன்றாக அணிந்திருந்த வாஸிலி ஆன்ட்ரீவிச் இதற்குள்ளாக வண்டியில் ஏறி உட்கார்ந்து விட்டான். அவனது அகன்ற முதுகு வண்டி பூராவையும் அடைத்துக் கொள்வது போல் விரிந்து பரவியிருந்தது. அவன் வார்களைக் கைப் பற்றிக் கொண்டதுமே குதிரையைத் தட்டினான். வண்டி நகரத் தொடங்கியபோதுதான் நிகிட்டா தாவி ஏற முடிந்தது. வண்டியின் முன்புறத்தில் இடது பக்கமாக உட்கார்ந்து கொண்டான் அவன். அவனது கால்களில் ஒன்று வண்டிக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தது.

2

வண்டியை இழுத்துக் கொண்டு சுறுசுறுப்பாக நடந்தது அந்த நல்ல குதிரை. பனி உறைந்து மென்மையாக விளங்கிய பாதை வழியாக ஊரைக் கடந்து சென்றது. வண்டியின் பின்பக்கத்துச் சறுக்கிகள் வேகம் காரணமாகக் கிரீச்சிட்டுக் கொண்டிருந்தன.

‘அவன் அங்கே தொங்குவதைப் பாரேன். சவுக்கை என்னிடம் கொடு, நிகிட்டா’ என்று கத்தினான் வாஸிலி ஆன்ட்ரீவிச்.

அவனுடைய ‘வாரிசு’ சறுக்கிகளின் மேல் நின்று வண்டியின் பின்புறத்தில் தொங்கிக் கொண்டிருந்தான். அந்தக் காட்சி அப்பனுக்குப் பெரு மகிழ்ச்சியே தந்தது. என்றாலும், ‘உனக்கு உதை கொடுப்பேன். அம்மாவிடம் ஓடிப்போ, நாயே!’ என்று அதட்டினான் வாஸிலி.

பையன் கீழே குதித்து விட்டான். குதிரையும் தனது மந்தகதியைத் துரிதப்படுத்தியது. சட்டென்று அடிமாற்றி, வேக ஓட்டத்தில் முனைந்தது.

வாஸிலி ஆன்ட்ரீவிச் வசித்த கிராமத்தில் ஆறு வீடுகள் தான் இருந்தன. ‘தி கிராஸஸ்’ என்பது அதன் பெயர். அவ்வூரின் கடைசி வீடான கருமான் குடிசையைத் தாண்டியதுமே, தாங்கள் கருதியதைவிட மிகவும் கடுமையாக இருந்தது காற்று என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். ரஸ்தாவைக் கண்டு பிடிப்பதே சிரமமாகத் தோன்றியது. வண்டிச் சறுக் கிகள் விடுத்துச் சென்ற தடங்கள் உடனடியாகவே பனியினால் மூடப்பட்டன. தரையின் இதர பகுதிகளை விடக் கொஞ்சம் உயரமாக இருந்தது என்பதைக் கொண்டுதான் ரஸ்தாவை நிர்ணயிக்க முடிந்தது. வயல்களின் மீது பனிச் சூறை சுழன்றடித்தது. விண்ணும் மண்ணும் ஒன்று கூடுகிற இடம் கண் களுக்குப் புலனாகவே இல்லை. சாதாரணமாய் பளிச் சென்று தெரியக்கூடிய டெல்யாட்டின் காடு இப்பொழுது சமயா சமயங்களில் தெளிவற்றுத் தோன்றியது. ஓடிவரும் பனிப் புழுதியினூடு மங்கலாகத் தென்பட்டது அது.

காற்று இடது பக்கத்திலிருந்து அடித்தது. குதிரையின் மழமழப்பான கழுத்தின் மீதுள்ள பிடரி மயிரை ஒரே பக்கத்தில் ஓயாது தள்ளிக் கொண்டிருந்தது. அதன் மயிரடர்ந்த வால் வெறும் முடிச்சுப் போட்டுக் கட்டிவிடப் பெற்றிருந்தது. அதைக்கூட காற்று ஒரு புறமாகவே ஒதுக்கி விளையாடியது. காற்றோட்டத்தில் உட்கார்ந்திருந்த நிகிட்டாவின் மேலங்கியின் கழுத்துப்பட்டை அவனது கன்னத்தோடும் மூக்கோடும் சேர்ந்து ஒட்டிக் கொண்டது.

‘இந்த ரோடு குதிரைக்கு வசதிப்படவில்லை. ஒரே பனி மயமாக இருக்கிறது. முந்தி ஒருதடவை நான் இதே குதிரையை வைத்துக் கொண்டு பாஷுடினோ வுக்கு அரைமணி நேரத்தில் போயிருக்கிறேன்’ என்று சொன்னான் வாஸிலி. தனது அருமையான குதிரையைப்பற்றி அவன் எப்பொழுதுமே பெருமைப் பட்டுக் கொள்வது உண்டு.

கழுத்துக் காலர் மூடி மறைத்து விட்டபடியால் அவன் பேச்சு நிகிட்டாவின் காதுகளில் ஏறவே இல்லை. அதனால் ‘என்ன?’ என்று கேட்டான் அவன்.

‘ஒரு சமயம் அரைமணி நேரத்தில் நான் பாஷடினோ போய்ச் சேர்ந்தேன் என்றேன்’ என்று ஓங்கிக்கத்தினான் வாஸிலி.

‘இது அருமையான குதிரை என்பது சொல்லியா தெரிய வேண்டும்!’ என்றான் நிகிட்டா.

பிறகு கொஞ்ச நேரம் அவர்கள் மௌனமாக இருந்தனர். ஆனால் வாஸிலிக்கு பேசவேண்டும் என்ற துடிப்பு இருந்தது. ஆகவே அவன் அதே பெருங் குரலில் பேசத் தொடங்கினான்.

‘சில்லறை வேலை செய்து பிழைக்கும் அந்த ஆளுக்கு இனி வோட்கா மது கொடுக்கக்கூடாது என்று நீ உன் மனைவியிடம் சொன்னாயா?’ என விசாரித்தான் அவன். அறிவும் அந்தஸ்தும் பெற்ற தன்னைப் போன்ற பெரிய மனிதனோடு பேசுவதனால் நிகிட்டாவுக்குப் பெருமையே உண்டாகும் என்ற நம்பிக்கையோடு அவன் உரத்த குரலில் பேச்சுக் கொடுத்தான். தனது தமாஷில் தானே மகிழ்ந்து போனதால், அந்தப் பேச்சு நிகிட்டாவுக்கு திருப்தி அளிக்காது எனும் உண்மை அவன் மூளையில் புகவே இல்லை.

முதலாளியின் வார்த்தைகளை நிகிட்டா கேட்காதபடி காற்று தடுத்து விட்டது.

வாஸிலி ஆன்ட்ரீவிச் அதே கிண்டலை மீண்டும் பலத்த தொனியில் தெளிவான குரலில் சொன்னான்.

‘அது அவர்களுடைய விவகாரம், வாஸிலி ஆன்ட்ரீ விச், அவர்கள் காரியங்களில் நான் தலையிடுவதில்லை. எங்கள் பையனை அவள் கொடுமைப்படுத்தாமல் இருக்கிற வரையில் – ஆண்டவன் அவர்களுக்கு அருள் புரியட்டும்’ என்றான் நிகிட்டா.

‘அது சரிதான்’ என்று சொன்ன வாஸிலி பேச்சை மாற்றினான். ‘கோடைகாலச் சந்தையில் நீ குதிரை வாங்கப் போகிறாயா?’ என்று கேட்டான்.

‘ஆமாம். நான் வாங்கித்தானே ஆகவேண்டும்’ என்று நிகிட்டா பதிலளித்தான். அவன் தனது கழுத்துக் காலரைத் தணித்து மடக்கி விட்டான். பின்னால் எஜமான் பக்கமாகச் சாய்ந்து உட்கார்ந்தான். வரவர பேச்சு அவனுக்கும் சுவாரஸ்யமானதாகி விட்டது. அதனால் ஒரு வார்த்தையைக்கூட நழுவவிட விரும்பவில்லை அவன்.

‘பையன் பெரியவனாக வளர்ந்து வருகிறான். அவனே உழுது பழக வேண்டியதுதான். இதுவரை நாங்கள் வேறொரு ஆளைக் கூலிக்கு அமர்த்தவேண்டிய அவசியம் இருந்தது’ என்றான் அவன்.

‘அப்படியானால், என்னிடம் மெலிந்து ஒடுங்கிப் போன குதிரை ஒன்று இருக்கிறதே, அதை நீ ஏன் வாங்கிக் கொள்ளக்கூடாது? அதற்காக நான் உன்னிடம் அதிகமான விலை எதுவும் கேட்கப் போவதில்லை’ என்று வாஸிலி பலத்த குரலில் அறிவித்தான். அவனுக்கு உற்சாகம் ஏற்பட்டிருந்தது. குதிரை வியாபாரம் தான் அவனுக்குப் பிடித்தமான தொழில். அவனது மனோபலம் பூராவும் சதா இந்த விஷயத்திலேயே செலவாகி வந்தது.

வாஸிலி தன்னிடம் தள்ளிவிட விரும்பிய குதிரை எப்படிப்பட்டது என்பது நிகிட்டாவுக்குத் தெரியும். அதற்காக ஏழு ரூபிள்கள் கொடுத்தாலே அதிகம் என்றுதான் தோன்றும். ஆனால் தான் அதை முதலாளியிடமிருந்து பெறுவதானால் தனது பேரில் இருபத்தைந்து ரூபிள்கள் பற்று எழுதப்படும். அப்புறம் அரை வருஷத்துக்கு அவன் பணம் எதுவுமே பெற முடியாமல் போய்விடும். ஆகையினால் நிகிட்டா சொன்னான்: ‘இல்லை. நீங்கள் எனக்குப் பதினைந்து ரூபிள்கள் கொடுத்தால் நல்லது. நான் குதிரைச் சந்தையிலேயே ஒன்றைப் பிடித்துக் கொள்வேன்.’

‘அது நல்ல குதிரை. உன்னுடைய நன்மையையும் என்னுடைய நலத்தையும் உத்தேசித்துத்தான் நான் சொல்கிறேன். மனச்சாட்சிக்குச் சரியானதையே நான் செய்வேன். யாருக்கும் தீமை புரிகிற மனிதன் அல்ல நான். நஷ்டம் என்னுடையதாகவே இருக்கட்டும். நான் மற்றவர்களைப்போல் இல்லை. இது உண்மை. நிஜமாகவே அது நல்ல குதிரைதான்’ என்று அவன் கத்தினான். வாடிக்கைக்காரர்களையும் வியாபாரிகளையும் வசப்படுத்த உபயோகிக்கும் குரலில்தான் இப்பொழுதும் பேசினான் அவன்.

‘ஆமாம். அது அப்படித்தான்!’ என்று பெரு மூச்சு உயிர்த்தபடியே சொன்னான் நிகிட்டா. இனிமேல் கேட்டு ரசிப்பதற்கு எதுவுமில்லை என்ற உறுதி ஏற்படவும் அவன் மறுபடியும் காலரைத் தூக்கி விட்டான். உடனடியாகவே அது அவனுடைய காதுகளையும் முகத்தையும் மூடிக்கொண்டது.

சுமார் அரைமணி நேரம் அவர்கள் எதுவும் பேசாமலே முன் சென்றார்கள். காற்று பலமாக வீசியது.

நிகிட்டாவின் விலாப்புறத்திலும் கை அருகிலும், தோல்சட்டை கிழிந்து போயிருந்த இடங்களில் அது தாக்கியது.

‘நீ என்ன நினைக்கிறாய் – நாம் காரமிஷெவோ வழியாகப் போவோமா? அல்லது நேர் பாதையாகவே போகலாமா?’ என்று வாஸிலி கேட்டான்.

காரமிஷெவோ வழியாகச் செல்லும் பாதை அடிக்கடி போக்குவரத்து உள்ளது. அடையாளமாக இருபுறங்களிலும் உயரமான முளைகள் பாதிக்கப் பட்டிருந்தன. நேர் பாதையில் தூரம் குறைவு. ஆனால் அது அதிக உபயோகத்தில் இல்லை. ரோட்டின் ஓரங்களில் அடையாள முளைகள் கிடையாது. அப்படியே இருந்தாலும் கூட அவை பனியினால் மூடுண்டு, கண்ணுக்குப் புலனாகாதபடி மோசமான நிலையிலேயே இருக்கும்.

ஆகவே, நிகிட்டா சற்று நேரம் யோசனை செய்தான். முடிவில் ‘காரமிஷெவோ வழி தூரமானதுதான், என்றாலும் அப்படிப் போவதுதான் நல்லது’ என்றான்.

ஆனால், சுருக்குப்பாதை வழியே போக விரும்பிய வாஸிலி சொன்னான்: ‘ஆனால் நேர் ரோடு வழியே போகும்போது, அந்தக் காட்டை அடுத்த பள்ளத்தைத் தாண்டிவிட்டால் சுலபமாகப் போக முடியுமே. பனிக்கு அடக்கமாகவும் இருக்கும்.’

‘உங்கள் இஷ்டம்’ என்று சொல்லிவிட்டான் நிகிட்டா .

வாஸிலி ஆன்ட்ரீவிச், தான் சொல்லிய விதமே செயல் புரிந்தான். கொஞ்ச தூரம் கடந்ததும், பாதை ஓரத்தில் அடையாளத்துக்கு நிறுத்தப்பட்டிருந்த ‘ஓக்’ மரக்கட்டை ஒன்று தென்பட்டது. அதில் காய்ந்த இலைகள் இன்னும் ஒட்டிக்கொண்டு காற்றில் ஆடின. அந்த இடத்தை அடைந்ததும் வண்டியை இடது பக்கம் திருப்பினான் அவன்.

அப்படித் திரும்பியதும், அவர்கள் காற்றை எதிர்த்துச் செல்ல வேண்டியதாயிற்று. பனியும் நன்றாக விழத் தொடங்கி விட்டது. வண்டி ஓட்டிக் கொண்டிருந்த வாஸிலி, கன்னங்களை உப்பலாக்கி, மீசை வழியாக மூச்சை வெளியே விட்டான். நிகிட்டா கண்ணயர்ந்து இருந்தான்.

சுமார் பத்து நிமிஷ நேரம் அவர்கள் பேசாமல் முன்னேறினர். திடீரென்று வாஸிலி ஏதோ சொல்லத் தொடங்கினான்.

கண்களைத் திறந்து பார்த்த நிகிட்டா ‘ஆங், என்னது?’ என்று கேட்டான்.

வாஸிலி பதில் சொல்லவில்லை. ஆனால் கீழே குனிந்து பின்பக்கம் கவனித்தான். பிறகு முன்னே குதிரைக்கும் அப்பால் நோக்கினான். குதிரையின் கழுத்திலும் கால்களுக்கு நடுவிலும் வேர்வை கசிந்து மயிரை உடலோடு சடைசடையாகச் சுருள வைத்திருந்தது. குதிரை மெது நடையாக அடி பெயர்த்துச் சென்றது.

‘என்ன விஷயம்?’ என்று மீண்டும் விசாரித்தான் நிகிட்டா .

அவன் பேச்சைப் பழிக்கும் தொனியில் ‘என்ன விஷயம்? என்ன விஷயம்?’ என்று வாஸிலி கோபமாகக் கத்தினான். ‘முளைகளைக் காணவே இல்லை. நாம் ரோட்டை விட்டு விலகிவிட்டோம் என்று தெரி கிறது’ என்றான்.

‘அப்படியானால் வண்டியை நிறுத்துங்கள். நான் தேடிப் பார்க்கிறேன்’ என்று சொல்லி நிகிட்டா வண்டியிலிருந்து மெதுவாகக் கீழே குதித்தான். வைக்கோலுக்குக் கீழே இருந்த சாட்டையை எடுத்துக் கொண்டு அவன் வண்டியில் தானிருந்த பக்கத்துக்கு இடது புறமாக விலகி நடந்தான்.

அந்த வருஷம் பனி ஆழ்ந்து படிந்து விடவில்லை. ஆகவே எங்கு வேண்டுமானாலும் நடந்து செல்வது சாத்தியமாக இருந்தது. என்றாலும் சில இடங்களில் முழங்கால் அளவுக்குப் பனி விழுந்து கிடந்தது. அதனால் பனி அவனது பூட்ஸினுள் புகுந்தது. அவன் காலாலும் சாட்டையினாலும் தட்டித் தடவி தரையை உணர்ந்து அங்குமிங்கும் திரிந்து பார்த்தான். பாதை தென்படவே இல்லை.

அவன் வண்டி அருகே திரும்பி வந்ததும், ‘என்ன எப்படி ஆச்சு?’ என்று வாஸிலி கேட்டான்.

‘இந்தப் பக்கத்திலே ரோடு இல்லை. அந்தப் பக்கமாகப் போய் பார்க்க வேண்டும். இதோ நான் போகிறேன்’ என்றான் நிகிட்டா.

‘அதோ அங்கே முன்னால் ஏதோ தெரிகிறதே! அங்கே போய் அது என்னவென்று பார்’.

அங்கே கறுப்பாகத் தோன்றியது என்ன என்று பார்க்க நிகிட்டா போனான். மாரிக் கால ஓட் தானியம் பயிர் செய்யப்பட்டு அறுவடையாகிக் காய்ந்து கிடந்த வயல்களிலிருந்து காற்று அள்ளி வந்து பனியின் மீது சிதறி விட்டிருந்த மண்தான் அப்படித் தெரிந்தது.

அதை அறிந்த பிறகு அவன் வலது பக்கம் சென்று தேடிப் பார்த்தான். பிறகு வண்டிக்குத் திரும்பி வந்தான். கோட்டுமீது படிந்திருந்த பனியைத் தட்டி உதறினான். பூட்ஸினுள் புகுந்துவிட்ட பனியை வெளியே உலுக்கினான். மறுபடியும் வண்டியில் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

‘நாம் வலது புறம் தான் போகவேண்டும்’ என்று அவன் தீர்மானமாகத் தெரிவித்தான். ‘முன்பு காற்று நமக்கு இடது பக்கத்தில் அடித்துக் கொண்டிருந்தது. இப்போது என் முகத்துக்கு நேரே வீசுகிறது. அதனாலே வண்டியை வலது பக்கமாகவே விடுங்கள்’ என்று மீண்டும் திடமாக அறிவித்தான்.

அவனுடைய ஆலோசனையை ஏற்று, வாஸிலி வண்டியை வலது பக்கமாகச் செலுத்தினான். எனினும் ரோடு வரவே இல்லை. கொஞ்ச நேரம் அவர்கள் அதே திக்கில் சென்றார்கள். காற்று எப்பொழுதும் போல் கடுமையாகத்தான் வீசியது. பனி லேசாக விழுந்து கொண்டிருந்தது.

‘வாஸிலி ஆன்ட்ரீ விச், நாம் ரொம்பவும் தடம் புரண்டு தட்டுக்கெட்டுப் போனோம் என்று தெரிகிறது’ என நிகிட்டா திடீரென்று குறிப்பிட்டான், ஏதோ சந்தோஷ சமாச்சாரம் சொல்வதுபோல, ஒரு இடத்தில் பனிக்கும் மேலே தலை நீட்டிக் கொண்டிருந்த உருளைக் கிழங்குக் கொடிகளைச் சுட்டிக் காட்டியவாறே அவன் ‘அது என்ன?’ என்று கேட்டான்.

வேர்த்துக் கொட்டிய குதிரையை நிறுத்தினான் வாஸிலி. மூச்சு வாங்கியதனால் அதன் விலாப்புறங்கள் விம்மித் தணிந்து கொண்டிருந்தன.

‘அது என்ன ?’

‘அட, நாம் ஸக்கரோவ் நிலத்தின் மேல் நிற்கிறோம். நாம் எங்கே வந்து விட்டோம் பாருங்கள்!’ என்றான் நிகிட்டா.

‘பிதற்றல்!’ என்று எரிந்து விழுந்தான் வாஸிலி.

‘பிதற்றல் இல்லை, வாஸிலி ஆன்ட்ரீவிச். இது தான் உண்மை. வண்டி உருளைக்கிழங்கு வயல் மீது சறுக்கிச் செல்வதை நீங்கள் உணரலாம். இங்கே கொண்டுவந்து போடப்பட்ட உருளைக் கிழங்குக் கொடிகள் தான் அதோ குவியல் குவியலாகக் கிடக்கின்றன. ஸக்கரோவ் தொழிற்சாலை நிலம்தான் இது’ என்று நிகிட்டா விளக்கினான்.

‘அட பாவமே, நாம் எவ்வளவு வழி விலகி வந்து விட்டோம்! இனி நாம் என்ன செய்வது?’ என்றான் வாஸிலி .

‘நாம் நேரே போக வேண்டியது. அவ்வளவுதான். எங்காவது ஒரு இடத்தில் – ஸக்கரோவாவில் இல்லாவிட்டால் நிலச் சொந்தக்காரர் பண்ணை அருகில் வெளியேறி விடலாம்.’

நிகிட்டா கூறியதை ஏற்றுக்கொண்டு வாஸிலி அவ்விதமே வண்டியை ஓட்டினான். இப்படி வெகு நேரம் பிரயாணம் செய்தார்கள் அவர்கள். சில சமயம் அவர்கள் வெறும் வயல்கள் மீது செல்ல நேர்ந்தது. அப்போதெல்லாம் நெடுகிலும் பனி மூடிக் கிடந்த மண் கட்டிகள் மேலாக வண்டியின் சறுக்கிகள் இழுபட்டு, கடகட ஓசை எழுப்பிச் சென்றன. சில வேளைகளில் மாரிக்காலத்துப் பயிர் வயல் எதன் வழியாகவேனும், அல்லது தரிசு வயல் மேலாகவாவது போக நேரிட்டது.

அங்கெல்லாம் மரக்கட்டைகள் அல்லது பயிர்த்தாள்கள் பனியைக் கிழித்துக்கொண்டு எட்டிப் பார்ப்பதையும், அடிக்கடி அவை காற்றில் அசைந்தாடுவதையும் அவர்கள் காண முடிந்தது. சில சமயங்களில், ஆழமாகத் தேங்கி, பரவலாக விரிந்து கிடந்த பனிமீது சென்றார்கள். அந்த இடங்களில் எதுவுமே பார்வையில் பிடிபடவில்லை.

மேலே இருந்து பனி பெய்து கொண்டிருந்தது. வேளா வேளைகளில், கீழே இருந்து கிளம்பி எழுந்தது. குதிரை களைப்பால் ஓய்ந்து போனது நன்கு புலனாயிற்று. அதன் ரோமம் பூராவும் வேர்வையால் சுருண்டு, முரட்டுப் பனியினால் மூடப்பட்டிருந்தது. அது மெது நடையிலேயே சென்றது. திடீரென அதற்குக் கால் இடறியது. வாறுகாலிலோ அல்லது ஏதோ நீரோடும் காலிலோ அது உட்கார்ந்து விட்டது.

வாஸிலி ஆன்ட்ரீவிச் குதிரையை நிறுத்த விரும்பினான். ஆனால் நிகிட்டா கூச்சலிட்டான்.

‘நிறுத்துவானேன்? நாம் எதனுள்ளோ அகப்பட்டுக் கொண்டோம். வெளியே போயாக வேண்டும். ஹேய், அன்பே! ஏ அரசே! மேலே போ அப்பா, கண்மணியே!’ என்று உற்சாகமான குரலில் குதிரைக்கு உபதேசித்தான் அவன். வண்டியிலிருந்து வேகமாகக் குதித்து அவனும் சாக்கடையில் அகப்பட்டுக் கொண்டான்.

குதிரை முண்டி முயன்றது; முன்னேறியது. உறைந்து போய்க் கிடந்த கரைமீது ஏறிவிட்டது. அந்த இடத்தில் வெட்டி விடப்பட்டிருந்த கழிவு நீரோடைதான் அது என்பது தெளிவாகப் புரிந்தது.

‘இப்ப நாம் எங்கே இருக்கிறோம்?’ என்று வாஸிலி கேட்டான்.

‘சீக்கிரமே கண்டுபிடித்து விடலாம். வண்டியை விடுங்கள். எங்கேயாவது போய்ச் சேருவோம்’ என்று பதிலளித்தான் நிகிட்டா.

‘ஏன்! இதுதான் கோர்யாச்கின் காடு’ என்று வாஸிலி கூவினான். அவர்களுக்கு முன்னால் பனிக்கு மத்தியில் கறுப்பாகத் தெரிந்த எதையோ சுட்டிக் காட்டினான் அவன்.

‘அது எந்தக் காடு என்பது நாம் அங்கே போய்ச் சேர்ந்ததும் தெரிந்துவிட்டுப் போகிறது’ என்றான் நிகிட்டா.

அவர்கள் கண்ட கறுப்பு வஸ்துவின் பக்கத்தில், வில்லோ மரத்தின் நீண்ட இலைகள் காய்ந்து காற்றில் அடிபட்டுத் தொங்கிக் கொண்டிருப்பதையும் அவன் பார்த்தான். ஆகவே அது ஒரு குடியிருப்பு தானே தவிரக் காடு அல்ல என்பதை அவன் அறிந்து கொண் டான். ஆயினும் அதை வெளியிட அவன் விரும்ப வில்லை .

அந்தக் கழிவு நீர் ஓடையைத் தாண்டி இருபத் தைந்து கஜங்கள் கூடப் போயிருக்க மாட்டார்கள். அதற்குள்ளாகவே அவர்களுக்கு முன்னே சில உருவங்கள் – மரங்கள் என்று தோன்றியது – கறுப்பாக நின்றன. புதுரகமான சோகமய ஒலி ஒன்றும் அவர்கள் காதுகளில் விழுந்தது. நிகிட்டா நினைத்தது சரிதான்.

அது காடு அல்ல. நெடிய வில்லோ மரங்களின் வரிசை தான். இன்னும் உதிராமல் ஒட்டிக் கொண்டிருந்த கொஞ்சம் இலைகள் தான் – காற்றிலே சரசரத்து ஆடின. அறுப்புக்களம் ஒன்றைச் சுற்றிலும் உள்ள வாறுகால் ஓரமாக அம்மரங்கள் நடப்பட்டிருந்தன என்று தெரிந்தது.

காற்றிலே துயர ஒலி முனங்கி நின்ற வில்லோ மரங்களுக்கு அருகாமையில் வந்த உடனே குதிரை, சறுக்கு வண்டியை விட உயர்ந்த மேட்டில் தனது முன் கால்களை அழுத்தமாக ஊன்றிக் கொண்டு பின்கால்களை உயர்த்தி இழுத்தது. அதன் மூலம் வண்டி உயரமான பரப்பைச் சேர்ந்தது. பிறகு குதிரை இடப்புறம் திரும்பி நடந்தது. அப்புறம் அதன் கால்கள் முழங்கால் அளவு பனியில் இறங்கி விடவில்லை.

அவர்கள் திரும்பவும் ஒரு ரஸ்தாவுக்கு வந்து விட்டார்கள்.

‘ஆகா. இதோ நாம் வந்து விட்டோம். ஆனால் எங்கே இருக்கிறோம் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்!’ என்றான் நிகிட்டா.

ஓடும் பனியினூடே, ரோடு வழியாகவே, குதிரை முன்னேறிச் சென்றது. அவர்கள் மேலும் நூறுகஜ தூரம் போவதற்குள்ளாகவே களஞ்சியம் ஒன்றின் சுவர் – மரக்கிளைகள், குச்சிகளால் ஆனது – கறுப்பாக எழுந்து நின்றது கண்முன்னாலே. அதன் கூரை முழுவதும் பனியினால் கனமாக மூடப்பட்டிருந்தது. அதிலிருந்து பனி வழுகிக் கீழே விழுந்து கொண்டேயிருந்தது. அந்தக் களஞ்சியத்தைக் கடந்ததும் ரோடு காற்று வீசிய திசை நோக்கித் திரும்பியது. ஆகவே அவர்கள் பனி ஓட்டம் ஒன்றினுள் புகுந்து செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

அவர்களுக்கு முன்னே இருபுறமும் வீடுகள் கொண்ட சிறிய தெரு ஒன்று காணப்பட்டது. இதிலிருந்து, பனி ரஸ்தாவின் குறுக்கே அடித்து வரப்பட்டது என்றும், அதனாலேயே அவர்கள் பனி ஓட்டத்தில் புகுந்து புறப்பட வேண்டியதாயிற்று என்றும் தோன்றியது. உண்மையும் அதுதான்.

பனியில் புகுந்து கடந்த பிறகு அவர்கள் ஒரு தெருவை அடைந்தார்கள். ஊரின் கடைசியிலிருந்த ஒரு வீட்டில், கொடி ஒன்றில் தொங்கிய துணிகள் சில – சிவப்புச் சட்டை ஒன்று, வெள்ளைச் சட்டை ஒன்று, கால் சட்டைகள், கால்பட்டைகள், ஒரு பாவாடை ஆகியவை – பனியில் உறைந்து காற்றில் வெறி ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தன. முக்கியமாக அந்த வெள்ளைச் சட்டை தனது கைகளை வீசி வீசி மூர்க்கமாகப் போராடிக் கொண்டிருந்தது.

‘இங்கே பாரேன். எவளோ ஒரு சோம்பேறி அம்மாள் அல்லது செத்துத் தொலைந்தவள் பண்டி கைக்கு முன்னாடியே தனது உடுப்புகளை எடுத்து வைக்காமல் இருந்துவிட்டாளே’ என்று நிகிட்டா, காற்றில் அலைப்படும் சட்டைகளைப் பார்த்துக்கொண்டே பேசினான்.

3

தெரு முனையில் இன்னும் காற்று வெகுண்டு வீசிக் கொண்டு தானிருந்தது. ரோடு கனத்த பனிப் போர்வை அணிந்து கிடந்தது. ஆனால் ஊருக்குள்ளே அமைதியும் ஆனந்தமும் கதகதப்பும் நிலவின. ஒரு வீட்டில் நாய் ஒன்று குறைத்துக் கொண்டிருந்தது. வேறொரு வீட்டருகே, தனதுமேல் சட்டையை இழுத்து தலையை மூடிக்கொண்டு எங்கிருந்தோ ஓடி வந்து மாது ஒருத்தி ஒரு குடிசையின் வாசலினுள் நுழைந்தாள். உள்ளே செல்வதற்கு முன்னதாக அவள் வாசல்படியில் நின்று, தெருவில் செல்லும் வண்டியைக் கவனித்தாள். ஊருக்கு மத்தியில் பெண்கள் பாடுகிற குரல் காற்றில் மிதந்து வந்தது.

இந்த ஊரில் காற்றும் பனியும் குறைவு என்றே தோன்றியது. உறைபனியும் கடுமையாக இல்லை.

‘அட, இது கிரிஷ்கினோ அல்லவா!’ என்றான் வாஸிலி .

‘அதே தான்’ என்று நிகிட்டா ஆமோதித்தான்.

அந்த ஊர் கிரிஷ்கினோதான். அப்படியானால், அவர்கள் இடது பக்கத்தில் வெகுவாக விலகிப்போய் ஆறுமைல் தூரம் பிரயாணம் செய்திருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். அவர்கள் போகவேண்டிய திசையிலே பிரயாணம் செய்யவில்லை தான். ஆனாலும் முடிவாக அடையவேண்டிய இடத்தை நோக்கியே சென்றார்கள் என்பதும் விளங்கியது. கிரிஷ்கினோவிலிருந்து கோர்யாச்கினுக்கு இன்னும் நான்கு மைல் தூரம் இருந்தது.

ஊர் நடுவே அவர்கள் நெட்டையான மனிதன் ஒருவன் மேல் மோதத் தெரிந்தார்கள். அவன் பாதை யின் மத்தியில் நடந்து வந்தான். குதிரையை நிறுத்தியபடி ‘ நீங்கள் யார்?’ என்று கூப்பாடு போட்டான் அவன். வாஸிலி ஆன்ட்ரீவிச்சை இனம் கண்டு கொண்டதும் அவன் குதிரையின் பக்கமாகவே நடந்து. வண்டியை அணுகி, வண்டி ஓட்டி உட்காருகிற பீடத்தின் மீது ஏறி அமர்ந்து விட்டான்.

அவன் தான் ஐஸே. வாஸிலிக்குப் பழக்கமான ஒரு விவசாயி. அந்த வட்டாரத்தில் முக்கியமான குதிரை திருடி என்ற கீர்த்தியும் பெற்றிருந்தான் அவன்.

‘ஆ, வாஸிலி ஆன்ட்ரீவிச்! எங்கே ஐயா கிளம்பி விட்டீர்?’ என்று விசாரித்தான் ஐஸே. அவன் குடித்திருந்த வோட்கா மதுவின் நாற்றம் நிகிட்டாபேரில் கவியும்படி பேசினான் அவன்.

‘நாங்கள் கோர்யாச்கினுக்குப் போகலாமென்று கிளம்பினோம்.’

‘எங்கே வந்து சேர்ந்திருக்கிறீர்கள் என்பது தெரிந்ததா? நீங்கள் மோல்ஷனோவ்கா வழியாகப் போயிருக்க வேண்டும்.’

‘போயிருக்க வேண்டியதுதான். ஆனால் தவறி விட்டோம்’ என்று சொல்லி வாஸிலி குதிரையை இழுத்துப் பிடித்தான்.

‘இது அருமையான குதிரை’ என்றான் ஐஸே, கள்ளப் பார்வையால் குதிரையைக் கவனித்தபடியே அதன் மயிரடர்ந்த வாலில் அவிழ்ந்து தளர்ந்திருந்த முடிச்சைத் தூக்கி இறுக்கினான். அச்செயலில் பழக்கத்தினால் தேர்ந்த லாகவம் வெளிப்பட்டது.

‘இராத்திரி இங்கேயே தங்கப் போகிறீர்களா?’ என்று அவன் கேட்டான்.

‘இல்லை, நண்பரே. நான் போயாக வேண்டும்’ என வாஸிலி அறிவித்தான்.

‘அப்போ ரொம்பவும் அவசரமான வேலையாகத் தான் இருக்கும். இது யார்? ஆ, நிகிட்டா ஸ்டீபனிச் தானா!’

‘வேறே யாரு?’ என்றான் நிகிட்டா. ‘அது சரி. மறுபடியும் நாங்கள் வழிமாறிப் போகாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம்?’ என்று கேட்டான்.

‘இங்கே எங்கே வழி தப்பிப் போய்விட முடியும்? இப்படியே திரும்பி இந்தத் தெருவோடு நேரே போங்கள். ஊருக்கு வெளியே போனதும் நேராகப் போய்க் கொண்டே இருக்கவேண்டியதுதான். இடது பக்கம் திரும்பக் கூடாது. அப்படிப்போனால் பெரிய ரஸ்தா வந்து சேரும். அங்கே போனதும் வலது புறமாகத் திரும்பிவிட வேண்டியதுதானே!’

பெரிய ரஸ்தாவில் எந்த வழியில் திரும்ப வேணும்? கோடைகாலத் தடத்திலா? இல்லை, குளிர் காலத்து வழியிலா?’ என்று நிகிட்டா விசாரித்தான்.

‘குளிர்காலத்து வழியில் தான். அங்கே திருப்பிய உடனேயே சில புதர்கள் உங்கள் பார்வையில் படும். அவற்றுக்கு எதிரே ஒரு வழிகாட்டி உண்டு. பெரிய ஓக் மரத்தினால் ஆனது. அதில் பல கிளைகள் இருக்கும். அங்கே வழியைக் கண்டுகொள்ளலாம்.’

வாஸிலி குதிரையைத் திருப்பி வண்டியை ஊரின் எல்லைப்புறமாக ஓட்டினான்.

பின் தங்கி விட்ட ஐஸே கத்தினான் ‘ராத்திரிப் பொழுதை நீங்கள் ஏன் இங்கேயே கழிக்கக்கூடாது?’ என்று.

ஆனால் வாஸிலி பதில் பேசாமலே குதிரையை முடுக்கினான். நல்ல ரஸ்தாவில் நான்கு மைல் தூரம். அதிலும் இரண்டு மைல் காட்டுக்கு நடுவிலே போகிறது. ஆகவே சுலபமாகச் சமாளித்து விடலாம். மேலும், காற்று அடங்கிப்போனதுபோல் தோன்றியது. பனியும் நின்று விட்டது. இவ்விதம் அவன் நினைத்தான்.

இங்கும் அங்குமாக விழுந்து கிடந்த புதிய கழிவு களினால் கறுப்பாகத் தோன்றிய தெரு வழியாக, தடம் பட்ட பாதையோடு, வண்டி சென்றது. கொடியில் தொங்கி ஆடிய உடைகள் காணப்பட்ட முற்றத்தைத் தாண்டியது அது. அவ்வுடுப்புகளில் வெள்ளைச் சட்டை கட்டு அவிழ்த்துக் கொண்டு ஒற்றைக் கையி னால் தொங்கிக் கிடந்தது. வில்லோமரங்கள் சோக கீதம் இசைத்து நின்ற இடத்துக்கு மறுபடியும் அவர்கள் வந்து சேர்ந்தார்கள். மீண்டும் வயல்கள் மீது போனார்கள். புயல், நின்றுவிடுவதற்கு மாறாக, அதிக வலுப் பெற்று வீசியதாகத்தான் தோன்றியது. ஓடும் பனியினால் ரோடு முற்றிலும் மூடி மறைக்கப் பட்டுவிட்டது. அங்கங்கே காணப்பட்ட முளைக்குச்சி கள் தான் அவர்கள் வழிதவறிச் செல்லவில்லை என் பதைக் காட்டி நின்றன. ஆனால் போகப்போக முளைகளைக் கண்டுபிடிப்பது கூட லேசான வேலையாகத் தென்படவில்லை. காரணம், அவர்கள் முகத்திலே காற்று தாக்கியது தான்.

வாஸிலி ஆன்ட்ரீவிச் கண்களைக் குறுக்கிக் கொண்டு, தலையைக் கீழே சாய்த்து, வழி ஓரத்து அடையாளங்களைத் தேடிக்கொண்டிருந்தான். ஆயினும் அவன் முக்கியமாக அந்தக் குதிரையின் மதிநுட்பத்தையே நம்பியிருந்தான். அதனால் அது போகிற போக்கிலேயே போகட்டும் என்று விட்டுவிட்டான்.

உண்மையில் குதிரை வழிதவறி விடாமலே நடந்தது. ரஸ்தாவின் வளைவு நெளிவுகளை உணர்ந்து வலது புறம் திரும்பியும், அடுத்து இடதுபக்கம் திரும்பியும், கால்களால் தடவிப் பாதையை அறிந்தும் நடந்தது அது. ஆகையினால், பனி கனமாகப் பெய்து காற்று வலுவாக அடித்த போதிலும், அவர்கள் அடையாள முளைக்கம்புகளை ஒரு தடவை தங்களுக்கு இடது பக்கத்திலும், அடுத்தாற்போல் வலது புறத்திலும் மாறி மாறித் தொடர்ச்சியாகக் காணமுடிந்தது.

இப்படி அவர்கள் பத்து நிமிஷ நேரம் பிரயாணம் செய்திருப்பார்கள். சாய்வான திரைபோல் மறைத்துக் கிடந்த பனிப் படலத்தின் ஊடாகத் திடீரென்று கறுப்பாக ஏதோ புலப்பட்டது. அது குதிரைக்கு முன்னால் ஊர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிந்தது.

அவர்களைப் போன்ற பிரயாணிகள் இருந்த மற்று மொரு சறுக்கு வண்டிதான் அதுவும் என்பது தெளிவாயிற்று. குதிரை அவர்களைக் கடந்து போக முயன்றது. முன்னாலிருந்த வண்டியின் பின்பக்கத்தில் தனது குளம்புகளால் அறைந்தது அது.

‘போங்க போங்க!…யார் அங்கே?… முன்னால் போங்க!’ – அவ்வண்டியிலிருந்து குரல்கள் கூவின.

அந்த வண்டியைக் கடந்து செல்வதற்காக வாஸிலி குதிரையை விலக்கி ஓட்டினான். அதில் மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் இருந்தார்கள். எங்கோ விருந்துக்குப் போய் விட்டு வீடு திரும்புகிறவர்கள் என்பது நன்றாகப் புரிந்தது. அவர்களில் ஒரு குடியானவன், சின்னக் குதிரையின் பனி மூடிய பின் பக்கத்தை நீண்ட சவுக்கினால் அடித்து ஓசை எழுப்பிக் கொண்டே இருந்தான். வண்டியின் முன்னாலிருந்த மற்ற இரண்டு பேரும் தங்கள் கைகளை ஆட்டி ஆட்டி ஏதோ கூச்சலிட்டார்கள். நன்றாகப் போர்த்து மூடப்பட்டிருந்த ஸ்திரீயின் மேல் பூராவும் பனி படிந்து விட்டது. அவள் தூக்கக் கிரக்கத்தினால் ஆடி அடிபட்ட வண்ணமிருந்தாள்.

‘நீங்கள் யார்?’ என்று கத்தினான் வாஸிலி.

‘ஆ-ஆ…’ என்ற ஒலி மட்டும் தான் காதில் விழுந்தது.

‘நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டேன்.’

‘ஆ-ஆ-ஆ’ என்று தன் பலம் கொண்ட மட்டும் ஓங்கிக் கூவினான் ஒருவன். ஆனாலும் அவர்கள் யார் என்பதைக் கேட்டுப் புரிந்துகொள்ள இயலவில்லை.

‘முன்னே போ! தொடர்ந்து போ!’ என்று கூச்சலிட்டபடியே வேறொருவன் சவுக்கினால் ஓயாமல் குதிரையை அடித்துக்கொண்டேயிருந்தான்.

‘விருந்து முடிந்து திரும்பி வருகிறீர்கள், இல்லையா?’

‘போ, போ! வேகமாக விடு, சைமன்! முன்னாலே ஓட்டு! இன்னும் வேகமாக!’

இரண்டு வண்டிகளின் ஓரப் பகுதிகளும் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டன. மோதிப் பிணைந்து விடுவன போல் தோன்றின. ஆயினும், பிரிந்து விலகி விட்டன. குடியானவர்களின் வண்டி பின் தங்கலாயிற்று.

ரோமம் பற்றி வயிறு தள்ளிப் போயிருந்த குதிரையின் மேனி முழுவதும் பனி விழுந்து கிடந்தது. தணிவான சட்டங்களிடையே பூட்டப்பட்டிருந்த அந்தக் குதிரைக்கு மூச்சுத் திணறியது. அது தனது இறுதி வலு முழுவதையும் பிரயோகித்து அவ் வண்டியை இழுப்பதாகத் தோன்றியது. சவுக்கிலிருந்து தப்புவதற்கு வீணாகப் பாடுபட்ட அக்குதிரை தனது குட்டைக் கால்களினால் இழுத்து இழுத்து நடந்தது. அதன் மூலம், ஆழ்ந்து படிந்து கிடந்த பனியைத் தனக்கு அடியிலேயே தள்ளிக் கொண்டு அவதியுற்றது அது. அதன் நீண்ட மூஞ்சி இளமையாகக் காணப்பட்டது. அதன் கீழ் உதடு மீனுக்கு உள்ளது போல் மேல் நோக்கிப் படிந்திருந்தது. நாசிகள் விலகி விலகி இருந்தன. அதன் காதுகள் பயத்தினால் ஒடுங்கிக் கிடந்தன. அந்த முகம் கொஞ்ச நேரம் நிகிட்டாவின் தோளருகே வந்தது; பிறகு பின்னுக்குப் போய்விட்டது.

‘மது என்ன வேலை பண்ணுகிறது பாரேன்! அவர்கள் அந்தச் சின்னக் குதிரையைச் சாகடித்து விட்டார்களே. வெறியர்கள்!’ என்று நிகிட்டா சொன்னான்.

அந்தச் சிறிய குதிரையின் பெருமூச்சும், குடியான வர்களின் குடிவெறிக் கூச்சலும் சில நிமிஷ நேரம் அவர்கள் காதுகளில் விழுந்தன. பிறகு நெடு மூச்சும் கூச்சலும் தூரத்திலே கரைந்து போயின. அப்புறம் அங்கே சுற்றிலும் வேறு எதையும் அவர்கள் கேட்க முடியவில்லை காற்றின் வீச்சொலிதான் அவர்கள் காதுகளைத் தாக்கியது. காற்றில் அடிபட்டு உறைபனி நீங்கிக் கிடந்த ரோட்டுப் பகுதி எதிலாவது வண்டியின் சறுக்கிகள் உராய்ந்து எழுப்பிய ஓசையும் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தது.

இந்தச் சந்திப்பு வாஸிலிக்கு உற்சாகமும் உத்வேகமும் அளித்து விட்டது. ஆகவே அவன் அடையாள முளைகளைப் பற்றி அக்கறை கொள்ளாமல், முன்னிலும் துணிகரமாக வண்டியை ஓட்டினான். குதிரையின் திறமையில் நம்பிக்கை வைத்து அதை விரட்டினான்.

நிகிட்டா செய்தாக வேண்டியது எதுவுமில்லை. அதனால் அவன் தூங்கலானான். பொதுவாக இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களில் இப்படிச் செய்வதுதான் அவனது வழக்கம். போதுமானபடி தூங்குவதற்குக் கிடைக்காத காலத்தை அவன் இவ்விதம் சரிக்கட்டி விடுவான்.

சடக்கென்று குதிரை நின்றுவிட்டது. அதனால் நிகிட்டா மூக்கில் அடிபடும்படி முன்நோக்கி விழுந்தான்.

‘விஷயம் தெரியுமா, நாம் மறுபடியும் வழியை விட்டு விலகிவிட்டோம்’ என்று வாஸிலி அறிவித்தான்.

‘அது எப்படித் தெரிந்தது?’

‘ஏன், முளைக்கம்புகளைக் காணவே காணோமே! நாம் திரும்பவும் ரஸ்தாவை விட்டு விலகி வந்திருக்கத் தான் வேண்டும்.’

‘அப்ப சரி. நாம் ரோட்டை தவறவிட்டு விட்டோ மென்றால், கட்டாயம் தேடி ஆக வேண்டியது தான்’ என்று வெடுக்கெனச் சொல்லிவிட்டு நிகிட்டா வண்டியிலிருந்து வெளியே இறங்கினான். புறாக்கால் மாதிரி விரல்கள் அமைந்திருந்த கால்களை மெதுவாக ஊன்றி அவன் மீண்டும் பனிப்பரப்பு மீது அங்குமிங்குமாக அலையத் தொடங்கினான். கொஞ்ச நேரம் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தும், பிறகு பார்வையில் பட்டும் அவன் நெடுநேரம் தேடித் திரிந்தான். கடைசியாக அவன் திரும்பி வந்தான்.

‘இங்கே ரஸ்தா எதுவும் இல்லை. ரொம்ப தூரத்துக்கு அப்பால் இருந்தாலும் இருக்கலாம்’ என்று சொல்லி, அவன் வண்டியில் ஏறிக்கொண்டான்.

இந்த நிலையில், இருள் வேறு பரவிக்கொண்டிருந்தது. பனிப்புயல் அதிகரிக்கவில்லை. ஆனால் அடங்கி விடவுமில்லை.

‘அந்தக் குடியானவர்களின் குரலை மட்டும் கேட்க முடியுமானால்…’ என்றான் வாஸிலி.

‘அவர்கள் நம்மை எட்டிப் பிடிக்கவில்லை. நாம் ரொம்ப தூரம் விலகி வந்திருக்க வேண்டும். அல்லது, ஒருவேளை அவர்களும் வழிதவறிப் போயிருக்கலாம்’ என்று நிகிட்டா சொன்னான்.

‘அப்படியானால் நாம் எங்கே போவது?’

‘ஏன், குதிரையை அதன் போக்கிலேயே போக விட வேண்டியது தான். அது நம்மை சரியான வழியில் கொண்டு சேர்க்கும். வார்களை என்னிடம் கொடுங்கள்’ என்றான் நிகிட்டா.

வாஸிலி ஆன்ட்ரீவிச் கடிவாள வார்களை நிகிட்டாவிடம் கொடுத்துவிட்டான் மிகுந்த மனோதிருப்தியுடன் தான். ஏனென்றால் அவனது கைகள் தடித்த உறைகளுக்குள் இறுகிப்போவது போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டிருந்தது.

நிகிட்டா வார்களைக் கைப்பற்றினான். ஆனால் சும்மா பிடித்தபடி வைத்திருந்தான். அவற்றை அசைக்காமலிருக்கவே அவன் முயற்சித்தான். தனது அபிமானக் குதிரையின் அறிவாற்றல் மீது அவனுக்குப் பெரும் மகிழ்வு உண்டாயிற்று. உண்மையில் அந்தக் குதிரை நுண்ணறிவு உடையதுதான். அது முதலில் ஒரு காதைத் திருப்பியது. பிறகு மறுகாதைத் திருப்பியது. முதலில் ஒரு திக்கிலும், பிறகு வேறொரு பக்கமும் திருப்பியது. உடனே வளையமிட்டுத் திரும்பத் தொடங்கியது அது.

‘இதனால் செய்ய முடியாத ஒரே காரியம், பேசுவது தான். அது என்ன செய்கிறது என்று பாரேன். போ, போ. உனக்குத்தான் நன்றாகத் தெரியும். அப்படித்தான், அப்படித்தான்!’ என்று அவன் சொல்லிக் கொண்டேயிருந்தான்.

இப்போது காற்று பின்னாலிருந்து அடித்தது. கொஞ்சம் வெதுவெதுப்பாகவும் இருந்தது.

‘ஆமாம். இது புத்திசாலி தான்’ என்று நிகிட்டா குதிரையை வியந்து பேசுவதைத் தொடர்ந்தான்: ‘கிர்கிஷ் குதிரை வலிமை அதிகம் உள்ளது. ஆனால் முட்டாள் தனமானது. ஆனால் இந்தக் குதிரை – அது காதுகளினாலே என்ன வேலை பண்ணுகிறது பாருங்களேன்! அதுக்கு தந்தி எதுவுமே தேவை யில்லை. ஒரு மைலுக்கு அப்பால் உள்ளதையும் உணர்ந்து விடும்.’

மேலும் அரைமணி நேரம் கழிவதற்குள்ளாகவே அவர்கள் தங்களுக்கு எதிரே ஏதோ – காடோ, கிராமமோ – கறுப்பாகத் தென்படுவதைக் காண முடிந்தது. முளைகள் மறுபடியும் வலது பக்கத்தில் தலை காட்டின. ஆகவே, அவர்கள் ரஸ்தா மீது வந்து சேர்ந்துவிட்டார்கள் என்பது நிச்சயமாயிற்று.

‘என்ன இது, மறுபடியும் கிரிஷ்கினோ தானா!’ என்று நிகிட்டா ஆச்சர்யத்தோடு கூவினான்.

ஆமாம். அதோ அங்கே அவர்களுக்கு இடது புறத்தில் அதே களஞ்சியம். அதன் கூரையிலிருந்து பனி பறந்துகொண்டிருந்தது. அதே சார்பில் இன்னும் கொஞ்சம் தள்ளி, பனியில் உறைந்து தொங்கிய சலவைத் துணிகள் – சட்டைகளும், கால்சட்டைகளும் – காற்றோடு மூர்க்கமாகப் போராடிப் படபடத்துக் கொண்டிருந்தன.

மறுபடியும் அவர்கள் தெருவினுள் பிரவேசித்தார்கள். மீண்டும் அமைதியும் வெம்மையும் உற்சாக மும் ஏற்பட்டன. கழிவுப் பொருள்களால் கறைபட்டுக் கிடந்த வீதியைத் திரும்பவும் பார்த்தார்கள். பேச்சுக் குரல்களையும், பாட்டுக்களையும், ஒற்றை நாயின் குரைப்பையும் மீண்டும் கேட்டார்கள். இதற்குள் இருட்டு அதிகமாகியிருந்ததால், சில ஜன்னல்களில் விளக்கொளி தெரிந்தது.

ஊரில் பாதி தூரம் போனதும், அங்கே விசாலமான முகப்புடன் நின்ற செங்கல் கட்டிட வீடு ஒன்றை நோக்கிக் குதிரையைத் திருப்பினான் வாஸிலி ஆன்ட் ரீவிச். முன் வாசலை அணுகியதும் வண்டியை நிறுத்தினான்.

விளக்கொளி திகழ்ந்த, பனி படர்ந்த, ஜன்னலருகே போனான் நிகிட்டா. பறக்கும் பனிக்கீற்றுகள் விளக்கொளியின் கதிர்கள் பட்டு மினுமினுத்தன.

அவன் ஜன்னல் மீது சாட்டையால் தட்டினான்.

தட்டுதலுக்கு எதிர்க் குரலாக ‘யார் அங்கே?’ என்ற கேள்வி புறப்பட்டது.

‘கிரெஸ்டியிலிருந்து வருகிறோம்…வாஸிலி…கொஞ்சம் வெளியே வந்து பாருங்களேன்’ என்று நிகிட்டா பேசினான்.

ஜன்னலுக்குப் பின்னாலிருந்து யாரோ நகர்ந்தார்கள். இரண்டொரு நிமிஷம் கழிந்ததும், நடைபாதையின் வாசற் கதவு திறக்கப்படும் ஓசை வந்தது. பிறகு வெளிக்கதவின் தாழ்ப்பாள் திறந்த சத்தம் கேட்டது. வெள்ளைத் தாடி உடைய நெட்டைக் குடியானவன். ஒருவன் வெளியே எட்டிப்பார்த்தான். கதவு காற்றுக்கு எதிராகத் திறந்து நிற்கும்படி அழுத்திப் பிடித்துக்கொண்டு வெளியில் வந்தான் அவன். பண்டிகைக்காக அணிந்திருந்த வெள்ளைச் சட்டையின் மீது ஆட்டுத்தோல் மேல் சட்டை ஒன்றை அவன் போட்டிருந்தான், அவனுக்குப் பின்னால் சிவப்புச் சட்டையும் பெரிய தோல் பூட்ஸும் தரித்திருந்த சிறுவன் ஒருவன் வந்தான்.

‘ஆன்ட்ரீவிச், நீ தானா அது?’ என்று அந்த வயோதிகன் கேட்டான்.

‘ஆமாம், நண்பரே. நாங்கள் வழியைத் தவற விட்டுவிட்டோம். கோர்யாச்கின் போய்ச் சேருவதற்காகப் புறப்பட்டோம். ஆனால் இங்கே வந்து சேர்ந்தோம். இரண்டாவது முறையாகப் புறப்பட்டுப் போனோம். திரும்பவும் வழிதவறி விட்டோம்’ என்று வாஸிலி சொன்னான்.

‘வழியை விட்டுவிட்டு எப்படியெல்லாம் திரிந்திருக்கிறீர்கள் பார்த்தீர்களா!’ என்றான் கிழவன். சிவப்புச் சட்டை அணிந்திருந்த சிறுவனிடம் அவன் சொன்னான், ‘பெட்ரூஷ்கா! போய் வாசலை விரியத்திற’ என்று.

‘சரி’ என்று சிறுவன் உற்சாகமாகக் கத்திவிட்டு நடை பாதையை நோக்கி ஓடினான்.

‘ஆனால் நாங்கள் ராத்திரி இங்கே தங்கப் போவதில்லை’ என்று வாஸிலி தெரிவித்தான்.

‘பின்னே இருட்டில் எங்கே போவீர்கள்? இங்கேயே தங்கிவிடுவது தான் நல்லது.’

‘தங்குவதற்கு எனக்கும் ஆசை தான், ஆனால் நான் போயாக வேண்டுமே. அவசரமான தொழில் விஷயம். அதைத் தவிர்ப்பதற்கில்லை.’

‘அப்ப சரி சூடாக ஏதேனும் சாப்பிட்டு விட்டாவது போங்கள். ஸமோவார் இப்பதான் தயாராயிற்று.’

‘சூடாகச் சாப்பிடுவதா? உம். அதைச் செய்யலாம் தான்’ என்று வாஸிலி கூறினான். இருட்டு ஒன்றும் அதிகமாகிவிடாது. நிலா வந்துவிடும். அப்புறம் வெளிச்சம் தானே இருக்கும். அதனாலே நாம் உள்ளே போய் உடம்பை உஷ்ணப்படுத்திக் கொண்டு வரலாம். என்ன நிகிட்டா?’ என்றான்.

‘சரிதான். ஏன் செய்யக்கூடாது? நம்மை உஷ்ணப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்’ என்று நிகிட்டா அங்கீகரித்தான். அவன் குளிரினால் விறைத்துப் போயிருந்தான். அதனால் தனது கைகால்களை எல்லாம் சூடாக்கிக் கொள்ளத் தவித்தான் அவன்.

வாஸிலி ஆன்ட்ரீவிச் வயோதிகனோடு வீட்டுக்குள்ளே போனான். பெட்ரூஷ்கா திறந்து வைத்திருந்த வாசல் வழியாக நிகிட்டா வண்டியை ஓட்டினான்.

சிறுவனின் ஆலோசனையின் பேரில் அவன் தொழுவத்தை நோக்கி குதிரையைப் பின்னுக்கடித்தான்.

தரையில் கழிவு பொருள்கள் பரவிக் கிடந்தன. குதிரையின் தலைக்கு மேலாக நீட்டிக்கொண்டிருந்த சட்டம் தொழுவத்தின் கூரைக் கம்பில் மாட்டிக் கொண்டது. பெட்டைக் கோழிகளும் ஒற்றைச் சேவ லும் இதற்கு முன்னாடியே அங்கு தூங்குவதற்காக ஒண்டியிருந்தன. இப்போது அவை தங்கள் கால் விரல்களினால் அந்தக் கட்டையை அழுத்தமாகப் பற்றிக்கொண்டு எரிச்சலோடு குரல் எழுப்பின. கலைக் கப்பட்ட ஆடுகள் ஓடி ஒதுங்கி, தரையில் உறைந்து கிடந்த கழிவுகளைத் தங்கள் குளம்புகளினால் மிதித்துச் சமட்டிக் கொண்டு விலகிப் பாய்ந்தன. நாய் பயத்தினாலும் கோபத்தாலும் மூர்க்கமாகக் கத்தியது. பிறகு அந்நியனை நோக்கி சின்னக் குட்டி போல் விட்டு விட்டுக் குரைத்தது.

அவை எல்லாவற்றோடும் நிகிட்டா பேசினான். கோழிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டான். இனி மறுபடியும் அவற்றிற்குத் தொந்தரவு கொடுக்கப் போவ தில்லை என்று அவன் உறுதி கூறினான். காரணமில்லா மலே பயந்து ஓடியதற்காக ஆடுகளைக் கடிந்தான். குதிரையைக் கட்டிப்போட்ட வாறே, நாயை சாந்தப் படுத்தினான்.

‘இனி எல்லாம் சரியாகிவிடும்’ என்று சொல்லி, அவன் தன் ஆடைகளிலிருந்த பனியைத் தட்டிக் கீழே தள்ளினான். ‘அது எப்படிக் குரைக்கிறது பாரேன்!’ என்றான். பிறகு நாயின் பக்கம் திரும்பி ‘சும்மா இரு, முட்டாளே. சும்மா கிட. ஒன்றும் இல்லாததற்கெல்லாம் உன்னையே நீ அலட்டிக் கொள்கிறாய். நாங்கள் திருடர்கள் இல்லையே. நண்பர்கள் தான்…’

‘வீட்டிலிருக்கும் மூன்று ஆலோசகர்கள் என்று இவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்’ என்று சிறுவன் சொன்னான். வெளிப்புறத்திலேயே தங்கிவிட்ட வண்டியை அவன் தனது வலிய கரங்களினால் கூரைக்கு அடியில் தள்ளினான்.

‘ஆலோசகர்கள் என்பது ஏனோ?’ என்று நிகிட்டா கேட்டான்.

‘பால்ஸன் புத்தகத்தில் அப்படித் தான் அச்சடிக்கப்பட்டுள்ளது. கள்ளன் ஒருவன் வீட்டினுள் நுழைகிறான். நாய் குரைக்கிறது. அப்படியென்றால், ‘விழிப்புடன் இருங்கள்’ என்று அர்த்தம். கோழி கூவுகிறது. அதாவது ‘எழுந்திருங்கள்!’ என்று பொருள். பூனை தன்னையே நக்கிக் கொள்கிறது. அதற்கு என்ன அர்த்தம்? ‘வரவேற்புக்குரிய விருந்தாளி வந்திருக்கிறான். அவனை எதிர்கொண்டு அழைக்கத் தயாரா குங்கள்!’ என்று தான்.’ இவ்விதம் விளக்கினான் சிறுவன், சிரித்தபடியே.

பெட்ரூஷ்காவுக்கு எழுதப் படிக்கத் தெரியும். ‘பால்ஸன் ஆரம்பவாசகம்’ தான் அவன் கற்ற ஒரே புத்தகம். புத்தகத்தின் விஷயம் பூராவும் அவனுக்கு மனப்பாடம் ஆகியிருந்தது. ஆகவே, சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமானது என்று அவன் கருதிய வாசகங்களை அவ்வப்போது ஒலிபரப்புவதில் அவனுக்கு ஆசை அதிகம். அதிலும் ஏதாவது குடிவகை உள்ளே போய்விட்டால் அவனுக்கு ஏக உற்சாகம் தான். இன்றைக்கு அதே நிலைமை தான்.

‘ஆமாம். அப்படித்தான்’ என்றான் நிகிட்டா.

பெட்ரூஷ்கா சொன்னான் ‘நீ ஒரே அடியாகக் குளிர்ந்து போயிருக்க வேண்டுமே’ என்று.

‘ஆமாம்’ என்றான் நிகிட்டா.

அவர்கள் முற்றத்தைக் கடந்து, நடைபாதை வழியாக, வீட்டினுள் சென்றார்கள்.

4

வாஸிலி ஆன்ட்ரீவிச் வந்து சேர்ந்திருந்த குடும்பம் அந்த ஊரில் மிகுந்த செல்வம் படைத்திருந்த குடும்பங்களில் ஒன்றாகும். அக்குடும்பத்திற்கு ஐந்து பாகம் சொத்து இருந்தது. அது தவிர அதிகப்படியான நிலம் குத்தகை மூலம் சேர்ந்திருந்தது. அவர்களிடம் ஆறு குதிரைகள், மூன்று பசுமாடுகள், இரண்டு கன்றுக்குட்டிகள், இருபது ஆடுகள் இருந்தன.

அக் குடும்பத்தில் இருபத்து இரண்டு பேர் இருந்தார்கள். கல்யாணமான புத்திரர்கள் நான்கு பேர். ஆறு பேரன்மார்கள். (அவர்களில் ஒருவன் தான் பெட்ரூஷ்கா. அவனுக்கு மணமாகி விட்டது.) இரண்டு கொள்ளுப் பேரர்கள்’. மூன்று அநாதைப் பிள்ளைகள் நான்கு மருமகள்மார், அவர்களுக்குக் கைக்குழந்தைகள் உண்டு. பாகம் பிரிக்கப்படாமல் ஒரே குடும்பமாக விளங்கும் ஒரு சில குடித்தனங்களில் அதுவும் ஒன்று. ஆனால், முடிவில் பாகப்பிரிவினைக்கு வழிவைக்கும் விசனகரமான அந்தரங்கப் பிளவு வேலை அந்த வீட்டிலும் ஆரம்பமாகி யிருந்தது. புத்திரர்களில் இருவர் மாஸ்கோவில் தண்ணீர் சுமப்பவர்களாக உழைத்து வந்தனர். ஒருவன் ராணுவத்தில் சேர்ந்திருந்தான்.

இப்போது அந்த வீட்டில் கிழவன், அவன் மனைவி, வீட்டு நிர்வாகத்தைக் கவனித்து வந்த இரண்டாவது மகன், பண்டிகைக்காக மாஸ்கோவிலிருந்து வந்திருந்த மூத்தவன் ஆகியவர்களோடு எல்லாப் பெண்களும் குழந்தைகளும் இருந்தார்கள். குடும்பத்தைச் சேர்ந்த இவர்களைத் தவிர, வேறொரு அதிதியும் அங்கு காணப்பட்டான். அடுத்த வீட்டுக்காரன் தான் அவன். அங்கிருந்த ஒரு குழந்தைக்கு ‘ஞான ஸ்நான’த் தந்தை அவன்.

அந்த அறையிலிருந்த மேஜைக்கு உயரே ஒரு விளக்கு தொங்கியது. அதற்கு மேலாக மூடியிட்டு மறைத்திருந்ததனால் ஒளிவீச்சு கீழே உள்ள தேநீர்ப் பாத்திரங்களையும் மதுப்புட்டியையும் இதர தின்பண் டங்களையும் பிரகாசப்படுத்தியது. அத்துடன், செங்கல் சுவர்களையும், அவற்றின் தூரத்து மூலையில் தொங்கிய விக்கிரகங்களையும், அவற்றிற்கு இரண்டு புறங்களிலும் கிடந்த படங்களையும் வெளிச்சமாக்கியது. மேஜையின் முன்பு முதலில் வாஸிலி ஆன்ட்ரீவிச் பனியால் உறைந்திருந்த தன் மீசையைச் சுவைத்தபடி உட் கார்ந்திருந்தான். எடுப்பான கழுகுக் கண்களினால் அவன் அந்த அறையையும், தன்னைச் சுற்றிலுமிருந்த ஆட்களையும் ஆராய்ந்து கொண்டிருந்தான். அவன் கூட, வெண்தாடி உடைய வழுக்கைத் தலைக் கிழவன் இருந்தான். குடும்பத் தலைவனான அவன் வீட்டிலே நெய்யப் பெற்ற வெள்ளைத் துணிச் சட்டையுடன் காட்சி அளித்தான். மாஸ்கோவிலிருந்து பண்டி கைக்காக வந்திருந்த மகன் அவனுக்கு அடுத்தாற் போல இருந்தான். உரம் பொருந்திய முதுகும், வலிமை நிறைந்த தோள்களும் பெற்றவன் அவன். அவன் வர்ணம் அச்சிட்ட மென் துணிச் சட்டை அணிந் திருந்தான். அவனுக்கு அருகே இரண்டாவது மகன் காணப்பட்டான். அவனும் அகன்ற தோள்களை உடையவன் தான். குடும்ப நிர்வாகத்தை ஏற்று நடத்தியவன் அவனே. அவனுக்குப் பக்கத்தில், மெலிந்த செந்தலைக் குடியானவன்-அடுத்த வீட்டுக் காரன்- இருந்தான்.

வோட்கா குடித்து எது எதையோ தின்று தீர்த்த பிறகு, தேநீர் குடிக்க வேண்டிய கட்டத்தில் இருந்தார்கள் அவர்கள். தரைமீது செங்கல் அடுப்புக்குப் பக்கத்தில் நின்ற ஸமோவார் இதற்குள் சூடு பெற்று இரைச்சலிட்டுக் கொண்டிருந்தது. உயர்ந்த தளவரிசை மீதும், கணப்பு அடுப்பின் மேல் பகுதியிலும் குழந்தைகள் காணப்பட்டனர். தணிவான கட்டுமானம் ஒன்றில், தனக்கு அருகில் ஒரு தொட்டிலோடு, ஒரு மங்கை இருந்தாள். வயதான குடும்பத் தலைவி வாஸிலிக்கு உபசாரம் செய்து நின்றாள். அவள் முகம் பூராவும் சுருக்கங்கள் பரவிக் கிடந்தன. அவள் உதடுகளில் கூட சுருக்கம் விழுந்திருந்தது.

நிகிட்டா உள்ளே பிரவேசித்த சமயத்தில், அவள் கனமான கண்ணாடித் தம்ளர் ஒன்றை வோட்காவினால் நிரப்பி, அதை விருந்தாளி பக்கம் நீட்டி உபசரித்துக் கொண்டிருந்தாள்.

‘வேண்டாம் என்று சொல்லாதே, வாஸிலி ஆன்ட்ரீவிச். நீ அப்படிச் சொல்லக்கூடாது. எங்களோடு கூடினால் குதூகலமான விருந்துதான். இதைக் குடித்துவிடு, அன்பே!’ என்றாள் அவள்.

வோட்காவின் தரிசனமும், அதன் மணமும் நிகிட்டாவின் உள்ளத்தில் – அதிலும் இந்தச் சந்தர்ப்பத்தில், உள்ளும் புறமும் குளிரிட்டுப் போய் களைப்பினால் சோர்ந்திருந்தபோது – அதிகமான குழப்பத்தை உண்டாக்கி விட்டன. அவன் முகத்தைச் சுழித்தான். தனது குல்லாயிலும் கோட்டு மேலும் ஒட்டிக் கொண்டிருந்த பனியைத் தட்டி உதறிய பிறகு அவன், வேறு யாரையும் பார்க்காதவன் போல, விக்கிரகங்களின் முன்னால் நின்று மூன்று தடவைகள் தனக்குத்தானே சிலுவை அடையாளம் செய்து கொண்டான். தலை தாழ்த்தி விக்கிரங்களை வணங்கி விட்டுத் திரும்பினான். முதலில் குடும்பத் தலைவனுக்கும், பின்னர் மேஜை முன்னிருந்த எல்லோருக்கும், அதற்குப் பிறகு அடுப்பருகே நின்ற பெண்களுக்கும் வணக்கம் தெரிவித்தான் அவன். ‘குதூகலமான பண்டிகை ஆகட்டும்!’ என்று முனங்கியவாறே, அவன் தனது மேல் ஆடைகளை அகற்ற ஆரம்பித்தான். அவன் பார்வை மேஜையின் பக்கம் செல்லவே இல்லை.

மூத்த மகன் நிகிட்டாவின் பனி படிந்த முகத்தையும் கண்களையும் தாடியையும் கவனித்தபடியே சொன்னான், ‘அடடா! உமது உடம்பு பூராவும் பனி மூடிவிட்டதே, பெரியவரே’ என்று.

நிகிட்டா தனது கோட்டைக் கழற்றினான். அதை மறுபடியும் உதறி, அடுப்புக்குப் பக்கத்திலே தொங்கப் போட்டு விட்டு, மேஜையை அடைந்தான். அவனுக்கும் வோட்கா கொடுக்கப்பட்டது. அவனுக்கு வேதனை மிகுந்த தயக்கம் ஏற்பட்டது. அநேகமாக அவன் அந்த மதுக் கோப்பையை வாங்கி, மணம் நிறைந்த தெளிவான பானத்தை உள்ளே ஊற்றியிருப்பான், ஆனால் அவன் பார்வை வாஸிலி ஆன்ட்ரீவிச் மீது படிந்தது. தான் செய்து கொண்ட சபதத்தின் ஞாபகம் வந்தது அவனுக்கு. சில்லறை வேலை செய்கிறவன் நினைப்பும் எழுந்தது. தன்னுடைய சின்ன மகனையும், வசந்த காலத்திற்குள் அவனுக்காகத் தான் ஒரு குதிரை வாங்கிவிடத் தீர்மானித்ததையும் அவன் எண்ணினான். ஆகவே, அவன் மறுதளித்தான்.

‘நான் குடிப்பதில்லை. அன்பு நிறைந்த வந்தனம்’ என்று சொல்லி, முகத்தைச் சுழித்துவிட்டு, இரண்டாவது ஜன்னலுக்கு அருகே கிடந்த பெஞ்சு மேல் உட்கார்ந்தான் அவன்.

‘அது ஏன்?’ என்று கேட்டான் மூத்தவன்.

‘நான் குடிப்பதில்லை. அவ்வளவுதான்’ என்று நிகிட்டா, கண்களை உயர்த்திப் பார்க்காமலே பேசினான். ஆனால் அவன் ஓரக்கண்ணினால் தனது குறைச்சலான தாடியையும் மீசையையும் பார்த்துக்கொண்டே அவற்றிலிருந்த பனித்துகள்களை அப்புறப்படுத்துவதில் முனைந்து விட்டான்.

‘அவனுக்கு அது நல்லதல்ல’ என்றான் வாஸிலி. ஒரு கிளாஸ் மதுவைக் காலி செய்த பிறகு, கடினமான பிஸ்கட் ஒன்றை வாயில் போட்டுக் கடித்துக் கொண்டிருந்தான் அவன்.

‘அப்படியானால் சரிதான். கொஞ்சம் டீ சாப்பிடேன். குளிரினால் நீ முழுக்க முழுக்க விறைத்திருப்பாயே’ என்று அன்பார்ந்த வீட்டுத் தலைவி சொன்னாள். ‘பெண்களாகிய நீங்கள் அந்த ஸமோவாரை வைத்துக் கொண்டு ஏன் வீண்பொழுது போக்குகிறீர்கள்?’ என்றும் சொன்னாள்.

அங்கிருந்த இளம் பெண்களில் ஒருத்தி ‘இதோ தயாராகி விட்டது’ என்றாள். அவள் தனது முன்றானையால் ஸமோவாரின் மூடியை வேகமாகத் தள்ளி விட்டாள். அது இப்பொழுது மிக அதிகமாகக் கொதித்துக் கொண்டிருந்தது. அவள் பிரயாசையோடு அதை மேஜையின் பக்கம் எடுத்துச் சென்றான். உயரத் தூக்கி ‘தட்’ என்று ஓசை எழும்படி அதை மேஜைமேல் வைத்தாள்.

இந்த நேரத்தில், வாஸிலி ஆன்ட்ரீவிச் தான் பாதையை எப்படித் தவற விட்டு விட்டான் என்பது பற்றி விவரித்துக் கொண்டிருந்தான். இதே கிராமத்துக்கு அவர்கள் இரண்டு தடவைகள் வர நேர்ந்ததையும் வழி விலகித் திரிந்ததையும், குடிகாரக் குடியானவர்கள் சிலரைச் சந்தித்ததையும் சொன்னான். அங்கே இருந்தவர்கள் அதிசயித்தார்கள்; அவர்கள் பாதையை விட்டு எங்கே எப்படி விலகியிருக்க வேண்டும் என்று விளக்கினார்கள்; வழியில் சந்தித்த குடிகாரர்கள் யார் என்று சொன்னார்கள்; பிறகு எப்படிப் போக வேண்டும் என்றும் தெரிவித்தார்கள்.

‘இங்கிருந்து மோல்ஷனோவ்கா போகிற வழியை ஒரு சின்னக் குழந்தை கூடக் கண்டுபிடித்துவிடும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் பெரிய ரஸ்தாவிலிருந்து வலது பக்கம் திரும்புகிற வழியோடு செல்வது தான். அந்த இடத்தில் ஒரு புதர்கூட உண்டு. ஆனால் நீங்கள் அவ்வளவு தூரம் போகவே இல்லையே!’ என்று அண்டை வீட்டு ஆசாமி சொன்னான்.

‘இரவு பூராவும் இங்கேயே தங்கி விடுவதுதான் நல்லது. பெண்கள் உங்களுக்காக படுக்கை தயாரிப்பார்கள்’ என்று கிழவி வற்புறுத்தினாள்.

தனது மனைவியின் பேச்சை உறுதிப்படுத்தி அந்த வயோதிகனும் பேசினான். ‘நீங்கள் விடியற் காலையில் போகலாம். அவ்வேளையில் மனோகரமாகவும் இருக்கும்’ என்றான்.

‘என்னால் முடியாது, நண்பரே. இது வியாபார விஷயம். ஒரு மணி நேரத்தை நஷ்டப்படுத்தி விட்டால், அப்புறம் ஒரு வருஷத்திலே கூட, ஈடுசெய்ய முடியாது’ என்று சொன்னான் வாஸிலி. அந்தத் தோப்பு விவகாரமும், நகர வியாபாரிகள் தன்னிடமிருந்து அதை அபகரித்து விடுவார்களே என்ற நினைப்பும் தான் அவனுக்கு. ஆகவே அவன் நிகிட்டா பக்கம் திரும்பி ‘நாம் அங்கே போய்ச் சேர்ந்து விடுவோம். போக முடியாதா என்ன?’ என்று கேட்டான்.

கொஞ்ச நேரம் வரை நிகிட்டா பதில் எதுவும் பேசவில்லை. அவன் தனது தாடியையும் மீசையையும் சரிப்படுத்துகிற கருமத்திலேயே கண்ணாகி விட்டது போல் தோன்றியது. பிறகு, சோகம் கப்பிய குரலில் அவன் அறிவித்தான், ‘மறுபடியும் நாம் வழிதவறிச் செல்லாமலிருந்தால்’ என்று.

அவன் சோகம் அடைந்து விட்டதன் காரணம், வோட்கா மீது அவனுக்கு அடக்க முடியாத தாகம் ஏற்பட்டிருந்ததுதான். அந்தத் தவிப்பை ஆற்றக் கூடிய ஒரு பொருள் தேநீர்தான். அது அவனுக்கு இன்னும் அளிக்கப்படவில்லை.

‘நாம் அந்தத் திருப்பத்தை அடைய வேண்டியது. அவ்வளவு தானே! அதன் பிறகு நாம் தவறி விட மாட்டோம். அப்புறம் பூரா வழியும் காட்டினூடே செல்கிற ரஸ்தா தானே’ என்று வாஸிலி சொன்னான்.

தனக்கு அளிக்கப்பட்ட தேநீர் கிளாஸை ஏற்றுக் கொண்டவாறே நிகிட்டா சொன்னான்: ‘நீங்கள் விரும்புகிறபடியே செய்யலாம். நாம் போகத்தான் வேணும் என்றால், போவோம்.’

‘நாம் டீயைக் குடித்து விட்டு உடனே கிளம்புவோம்.’

நிகிட்டா ஒன்றும் சொல்லவில்லை. தலையை மட் டும் அசைத்தான். ‘ஸாசரில்’ கொஞ்சம் தேநீரை ஜாக்கிரதையோடு ஊற்றிக்கொண்டு அதன் ஆவியி னால் தனது கைகளைச் சூடுபடுத்தத் தொடங்கினான். அவன். அவனது கைவிரல்கள் கடுமையான உழைப்யின் காரணமாக எப்பொழுதும் வீங்கியே காணப்பட்டன.

அப்புறம், சர்க்கரையில் மிகவும் கொஞ்சமாகக் கடித்துக்கொண்டான். தனக்கு விருந்து அளிப்பவர்களுக்குத் தலைவணங்கி, ‘உங்கள் உடல் நலம் வளர!’ என்று வாழ்த்திவிட்டு, கொதிக்கும் பானத்தை உறிஞ்சிக் குடித்தான்.

‘அந்தத் திருப்பம் வரை யாராவது எங்கள் கூட வந்தால் நல்லது’ என்று வாஸிலி சொன்னான்.

‘ஓ’ நாங்கள் அதைச் செய்யமுடியும். பெட்ரூஷ்கா வண்டியில் குதிரையைப் பூட்டிக்கொண்டு உங்கள் கூட அந்த இடம் வரை வருவான்’ என்று

மூத்த மகன் கூறினான்.

‘நல்லது. அப்படியானால் குதிரையைப் பூட்டு, தம்பி. இதற்காக நான் உனக்கு ரொம்பவும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.’

‘அட, இது எதற்காக? அன்பரே! உங்களுக்காக இதைச் செய்வதில் எங்களுக்கு எவ்வளவோ திருப்தி’ என்று கிழவி சொன்னாள்.

‘பெட்ரூஷ்கா’ போ, போய் குதிரையைப் பூட்டு, என்று மூத்தவன் சொன்னான்.

‘ரொம்ப நல்லது’ என்று புன்னகையுடன் தெரிவித்தான் பெட்ரூஷ்கா. உடனடியாக, ஆணியில் கிடந்த தொப்பியை எடுத்துக்கொண்டு, அவன் வண்டியைப் பூட்ட ஓடினான்.

வண்டியில் குதிரை பூட்டப்படுகிற வேளையில், உள்ளே பேச்சு, வாஸிலி ஆன்ட்ரீவிச் ஜன்னல் ஓரத்துக்கு வந்து சேர்ந்த போது விடுபட்டுப்போன கட்டத்திற்கு மீண்டும் திரும்பியது. அண்டைவீட்டில் இருந்தவன் தான் ஊரின் பெரியதனக்காரன். அவனிடம் குடும்பத் தலைவன் தனது மூன்றாவது மகனைப் பற்றிக் குறை கூறிக்கொண்டிருந்தான். அவன் பண்டிகைக்காக வீட்டுக்கு எதுவும் அனுப்பிவைக்கவில்லை; ஆனால் தனது மனைவிக்கு பிரஞ்சுதேசத்துச் சால்வை ஒன்று அனுப்பியிருக்கிறான் என்று முறையிட்டான்.

‘வாலிபப் பையன்கள் நம்மை மிஞ்சி வளர்ந்து விட்டார்கள்’ என்று கிழவன் சொன்னான்.

‘ஆமாம். எப்படி ஆகிவிட்டார்கள்! அவர்களைக் கட்டுப்படுத்துவது சாத்தியமில்லை. அவர்கள் ரொம்ப ரொம்பக் கற்று விட்டார்கள் டிமோச்கின் இருக்கிறானே, அவன் தனது அப்பாவின் கையையே ஒடித்து விட்டான். இதெல்லாம் எதனால் வருகிறது? ரொம்ப ரொம்பப் புத்திசாலி ஆகிவிடுவதனால் தான்’ என்று அடுத்த வீட்டுக்காரன் பேசினான்.

நிகிட்டாவும் இந்தப் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தான். பேசியவர்கள் முகங்களை உற்றுக் கவனித்தபடி இருந்த அவனுக்கும் பேச்சிலே பங்கு கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருக்கும் என்றே தோன்றியது. ஆனாலும் அவன் தேநீர் குடிப்பதிலே மும்முரமாக ஈடுபட்டிருந்ததால், அவ்வப்போது வெறுமனே தலையை ஆட்டி ஆமோதித்துக் கொண்டிருந்தான். ஒன்றின் பின் ஒன்றாக அனேக தம்ளர் டீயைக் குடித துத் தீர்த்தான் அவன். அதனால் கொஞ்சம் கொஞ்ச மாகக் கதகதப்பு அதிகரிக்கப் பெற்று, முன்னைப் பார்க்கிலும் அதிகம் அதிகமாக சுக உணர்வை அவன் அனுபவிக்க முடிந்தது.

பேச்சு அந்த விஷயத்தைப் பற்றியே வெகுநேரம் வளர்ந்தது. பாகம் பிரிந்து போகிற குடும்பத்தில் ஏற்படும் அபாயங்களைப் பற்றித்தான். அது பொதுப் படையான சர்ச்சை அல்ல என்பது நன்கு தெளிவாயிற்று. அந்த வீட்டிலே முளைத்திருந்த பாகப்பிரிவினைப் பிரச்னை பற்றிய விவாதம்தான் நடந்து கொண்டிருந்தது. அங்கே கடுகடுப்பாக முகத்தை வைத்தபடி மௌனமாக உட்கார்ந்திருந்த இரண்டாவது மகன் தான் பாகப்பிரிவினை கோரியவன்.

உண்மையிலேயே துயரம் தரக்கூடிய விவகாரம் தான் அது. அந்தப் பிரச்னை அங்கிருந்த அனைவரது சிரத்தையையும் ஈர்த்திருந்தது. எனினும் அந்நியர் முன்னிலையில் தங்கள் சொந்த விவகாரங்களை விவாதிப்பது அழகல்ல என்று பொறுத்திருந்தார்கள். ஆனால் கடைசி நேரத்தில் குடும்பத் தலைவன் தன்னைத் தானே கட்டுப்படுத்தி வைக்க முடியாதவனாகி விட்டான். தான் உயிரோடு இருக்கிற மட்டும் அந்தக் குடும்பத்தில் பிளவு உண்டாக்க இசையப் போவதில்லை என்று அவன், கண்களில் நீர் மல்க, உணர்ச்சியோடு அறிவித்தான். ஆண்டவன் அரு ளால் இந்தக் குடும்பம் நல்ல நிலைமையில் உள்ளது ; ஆனால் அவர்கள் தனித்தனியாகப் பிரிந்துவிட்டால் அப்புறம் எல்லோருமே பிச்சை எடுத்துத் திரிய வேண்டியதுதான் என்று சொன்னான் அவன்.

‘மாட்வீவ் குடும்பத்தாரைப் போல் தான் – வீடும் வாசலுமாக அவர்கள் சுகமாக வசித்து வந்தார்கள். ஆனால் பிரிவினை நடந்த பிறகு அவர்களில் யாரிடமும் எதுவுமில்லை’ என்று பக்கத்து வீட்டுப் பெரியவன் தெரிவித்தான்.

‘அந்த நிலைமைதான் நமக்கும் வரவேண்டும் என்று நீ ஆசைப் படுகிறாய்’ என்று கிழவன் தன் மகனைப் பார்த்துச் சொன்னான்.

மகன் பதில் பேசவில்லை. இசைகேடான அமைதி நிலவியது அங்கே. அந்த மௌனத்தைக் கலைக்க பெட்ரூஷ்கா முன்வந்தான். வண்டியில் குதி ரையை மாட்டிவிட்டு சில நிமிஷங்களுக்கு முன்பே அங்கு வந்து சேர்ந்த அவன் அவர்களுடைய பேச்சை புன்னகையுடன் கேட்டு நின்றான்.

‘இந்த விஷயத்தைப் பற்றி பால்ஸன் வாசகத் தில் ஒரு கதை இருக்கிறது. ஒரு தந்தை தனது புதல்வரிடம் துடைப்பம் ஒன்றைக் கொடுத்து அதைத் துண்டு துண்டாக ஒடித்துவிடும்படி சொன்னான். முத லில் அவர்களால் அப்படிச் செய்யமுடியவில்லை. ஆனால் தனித்தனிக் குச்சியாகப் பிரித்த பிறகு அவர்கள் அதை எளிதில் ஒடித்துவிட்டார்கள். இங்கும் அதே நிலைமை தான்’ என்று சொல்லிவிட்டு அவன் முகத்தில் முழு நகை காட்டினான். ‘ நான் தயார்’ என்றும் அறிவித்தான்.

‘நீ தயார் என்றால், நாங்கள் கிளம்ப வேண்டியது தான்’ என்று வாஸிலி சொன்னான். பாகப் பிரிவினை விஷயத்தில் நீங்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது தாத்தா. எல்லாவற்றையும் நீங்கள் தானே சேர்த்து வைத்திருக்கிறீர்கள். ஆகவே நீங்கள் தான் எஜமான். அவசியமானால், சமாதான நீதிபதியிடம் போங்கள். இந்த விவகாரங்கள் எப்படித் தீர்க்கப்பட வேண்டும் என்பது பற்றி அவர் அறிவிப்பார்’ என்றான்.

‘இவன் ஒரே சாதனையாக இருக்கிறான். பிடிவாதமாக இருக்கிறானே. இவனிடம் எதுவும் எடுபடாது. சைத்தான் தான் இவனைப் பிடித்துக்கொண்டு ஆட்டி வைக்கிறான்’ என்று கிழவன் ஒப்பாரிக் குரலில் ஓல மிட்டான்.

இதற்குள் நிகிட்டா ஐந்தாவது தம்ளர் தேநீரைப் பருகிவிட்டு, கிளாசைத் தலைகீழாகக் கவிழ்த்து வைக் காமல் நேராகவே வைத்தான். ஆறாவது தம்ளர் தேநீர் தனக்குக் கிடைக்கும் என்று அவன் நம்பினான். ஆனால் ஸமோவாரில் மேற்கொண்டு தண்ணீர் இல்லை. அதனால் குடும்பத் தலைவி அவனுக்காக மீண்டும் தேநீர் நிரப்பவில்லை. மேலும், வாஸிலி ஆன்ட்ரீவிச் தனது உடுப்புகளை அணிந்து கொண்டிருந்தான். உடனே கிளம்புவதைத் தவிர நிகிட்டாவுக்கு வேறு வழியில்லை. சுற்றிலும் சிறுகச் சிறுகக் கடித்திருந்த சர்க்கரைக் கட்டியை மறுபடியும் கிண்ணத்தில் போட்டான் அவன். வேர்வை வழியும் முகத்தை ஆட்டுத் தோல் கோட்டின் விளிம்பினால் துடைத்துவிட்டு அவன் தனது மேல் அங்கியை அணிந்து கொள்ளச் சென்றான்.

அதைத் தரித்துக் கொண்டதும் அவன் ஆழ்ந்த நெடுமூச்செறிந்தான். தன்னை உபசரித்தவர்களுக்கு நன்றி அறிவித்து விடைபெற்றுக் கொண்டு, கதகதப்பும் வெளிச்சமும் நிறைந்த அறையிலிருந்து நடந்து, குளிரும் இருட்டும் மண்டிய நடைபாதையை அடைந்தான் நிகிட்டா. அங்கே கூடக் காற்று ஊளையிட்டு ஊர்ந்தது. ஆடி அசைந்து கொண்டிருந்த கதவின் கீறல் வழியாகப் பனி வந்து தாக்கியது.

அங்கிருந்து முற்றம் போய்ச் சேர்ந்தான் அவன். முற்றத்தின் நடுவிலே குதிரைக்கு அருகில் பெட்ரூஷ்கா ஆட்டுத்தோல் அங்கி அணிந்து நின்றான். பால்ஸன் வாசகத்தில் உள்ள சில வரிகளை உச்சரித்துக் கொண்டிருந்தான் அவன். இளநகை பூத்தவாறே அவன் சொன்னான்:

பனியொடு புயலைப் பதுக்கிடும் வானம்;
பனிச்சுழல் பலப்பல சூறையாய் சாடும்,
வெறிநாய் போல அலறிடும் காற்றே
மறுகணம் பிள்ளைக் குரலால் அழுவது கேளீர்!

குதிரையின் கடிவாளத்தைச் சரிசெய்து நின்ற நிகிட்டா அதை ஆமோதித்துத் தலையசைத்தான்.

வாஸிலி ஆன்ட்ரீவிச்சை வழி அனுப்ப வந்த கிழவன் வெளிச்சத்திற்காக ஒரு விளக்கை எடுத்து வந்தான். நடை பாதையில் அடி எடுத்து வைத்ததுமே அது அணைந்து போய்விட்டது. பனிப்புயல் முன்னை விட மும்முரமாகி விட்டது என்பது முற்றத்திலேயே நன்கு தெளிவாயிற்று.

‘ஆ, சரியான பனிக்காலம் தான்! எவ்வளவு முயன்றாலும் நாம் அங்கே போய்ச்சேர முடியாமல் ஆகிவிடுமோ என்னவோ. இருந்தாலும் வேறுவிதமாக நடப்பதற்கில்லை. தொழில் விவகாரம்! மேலும், நாம் புறப்பட்டாயிற்று. வீட்டாரின் குதிரையும் தயாராகிவிட்டது. கடவுள் கிருபை இருந்தால் நாம் அங்கே போய்ச் சேர்ந்து விடலாம்’ என்று வாஸிலி நினைத்தான்.

அவர்கள் அந்நேரத்தில் புறப்படக் கூடாது என்றுதான் வயோதிக வீட்டுக்காரனும் எண்ணினான். ஆனால் அவர்களை அங்கே தங்கும்படி முன்பே அவன் வற்புறுத்திப் பார்த்துவிட்டான். அவன் பேச்சு எடுபடவில்லை.

‘இவர்களிடம் திரும்பவும் சொல்வதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. ஒரு வேளை எனது வயது தான் என்னை கோழையாக மாற்றுகிறதோ என்னவோ. அவர்கள் அந்த இடத்துக்குப் போய்விடுவார்கள். எது எப்படியானால் என்ன! வீண் பரபரப்பு எதுவும் இல்லாமல் நாம் காலாகாலத்தில் படுத்துத் தூங்க முடியுமே’ என்று அவன் எண்ணினான்.

பெட்ரூஷ்கா ஆபத்து பற்றி யோசிக்கவே இல்லை. ரஸ்தாவையும், அந்த வட்டாரம் பூராவையும் அவன் நன்றாக அறிந்து வைத்திருந்தான். மேலும், ‘பனிச் சுழல் சூறையாய் சாடும்’ என்று வர்ணித்த வரிகள் வெளியுலக நிகழ்ச்சிக்கு மிகவும் பொருத்தமாக அமைந்திருந்தன. அதனால் அவனுக்கு ஏகப்பட்ட உற்சாகம் தான்.

போகவேண்டும் என்று நிகிட்டா கொஞ்சம் கூட ஆசைப்பட வில்லை. ஆனாலும் தனது போக்கின் படி செயல் புரிய இயலாது, பிறர் இஷ்டத்துக்குப் பணிந்து போகும் தன்மையில் அவன் வெகுகாலமாகப் பழக்கப்பட்டு விட்டான்.

ஆகவே, விடை பெற்றுச் செல்லத் துணிந்த பிரயாணிகளைத் தடுத்து நிறுத்துவார் அங்கே எவருமில்லை.

5

வாஸிலி ஆன்ட்ரீவிச் தனது வண்டி அருகே போனான். இருட்டில் சிரமத்தோடு அதைக் கண்டு பிடித்து உள்ளே ஏறிக்கொண்டான். கடிவாள வார்களைக் கையில் பற்றியதும், ‘நீ முன்னாலே போ!’ என்று கத்தினான்.

பெட்ரூஷ்கா தனது தணிவான வண்டியில் மண்டி யிட்டு அமர்ந்தவாறே குதிரையைத் தட்டிவிட்டான். சற்று நேரத்துக்கு முன்பிருந்தே கனைத்துக் கொண்டு நின்ற முக்கார்ட்டி தனக்கு முன்னால் ஒரு குதிரை செல்வதை உணர்ந்து அதைத் தொடர்ந்து ஓடியது.

அவர்கள் வீதியை அடைந்தார்கள். மறுபடியும் ஊரின் எல்லைப்புறமாகப் போனார்கள். திரும்பவும் அதே ரோடு வழியாகவும், உறைந்து போன, துணிகள் ஊசலாடிக் கிடந்த முற்றத்தின் வழியாகவும் சென்றார்கள். (இந்தத் தடவை துணிகள் அங்கே காணப் படவில்லை.) பழைய களஞ்சியத்தைக் கடந்தார்கள். இப்போது அதன் கூரை முழுவதும் பனியினால் மூடப் பட்டு விட்டது போல் தோன்றியது. அங்கிருந்து பனி இன்னும் முடிவே இல்லாமல் கீழே கொட்டிக் கொண்டு தானிருந்தது. சோக ஒலி எழுப்பி, கீச்சிட்டு, ஆடி அசைந்து நின்ற வில்லோ மரங்களையும் கடந்து போனார்கள் அவர்கள். மேலிருந்து இறங்கியும் கீழிருந்து எழுந்தும் சாடிச் சுழன்று இரைச்சலிட்டுக் கொண்டிருந்த பனிக்கடலினுள் மீண்டும் புகுந்தார்கள். காற்று மிகவும் பலம் பெற்று வீசியது. அது ஒரு பக்கத்திலிருந்து வீசுகிறபோது, பிரயாணிகள் அதை எதிர்த்து முன்னேறுகையில், வண்டிகளை ஓர் புறமாய் சாய்த்து, குதிரைகளை ஒரு பக்கமாகத் திருப்பியது அதன் வேகம்.

தனது அருமையான குதிரையை வேக நடையில் முன்னால் போகும்படி ஓட்டினான் பெட்ரூஷ்கா. அவன் உணர்ச்சிகரமாகக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தான். முக்கார்ட்டி வேகமாகத் தொடர்ந்தது.

இப்படிப் பத்து நிமிஷ நேரம் பிரயாணம் செய்த பிறகு, பெட்ரூஷ்கா வட்டமிட்டுத் திரும்பி, உரத்த குரலில் ஏதோ சொன்னான். வாஸிலியோ நிகிட்டாவோ, காற்றின் காரணமாக, எதையும் கேட்க முடியவில்லை. என்றாலும், திருப்பத்துக்கு வந்து சேர்ந்து விட்டதாக அவர்கள் ஊகித்தார்கள். ஆமாம். பெட்ரூஷ்கா வலது பக்கம் திரும்பிவிட்டான். முன்பு பக்கவாட்டில் அடித்துக்கொண்டிருந்த காற்று இப்போது அவர்கள் முகங்களின் மீது நேராக வீசியது. தங்களுக்கு வலது பக்கத்தில் எதுவோ கறுப்பாகத் தெரிவதையும் பனியினூடாக அவர்கள் காணமுடிந்தது. திருப்பத்தில் உள்ள புதர்தான் அது.

‘நல்லது. நீங்கள் வேகமாக முன்னேற ஆண்டவன் அருள் புரியட்டும்!’ என்றான் சிறுவன்.

‘உனக்கு நன்றி, பெட்ரூஷ்கா!’

‘பனியொடு புயலைப் பதுக்கிடும் வானம்!’ என்று கூவியவாறே மறைந்து போனான் பெட்ரூஷ்கா.

‘அதோ ஒரு கவிஞர் போகிறார்!’ என்று முனங்கிய வாஸிலி, லகானை இழுத்தான்.

‘ஆமாம். அருமையான பையன். உண்மையான குடியானவன்’ என்று நிகிட்டா சொன்னான்.

அவர்கள் முன்னேறிச் சென்றார்கள்.

நிகிட்டா, மேல் சட்டையை இழுத்து உடம்பைச் சுற்றிலும் இறுக்கிப் பிடித்து, தலையை தோள்களுக் குள்ளே குறுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அவனது குறுகியதாடி கொண்டையை மூடி மறைத் தது. அவன் மௌனமாக இருந்தான். வீட்டில் தேநீர் பருகியதன் மூலம் பெற்ற உஷ்ணத்தை இழந்து விடாமலிருக்க முயன்றான் அவன். வண்டி யின் நேரான சட்டங்கள் அவன் பார்வையில் பட்டுக் கொண்டிருந்தன. அதனால், நன்கு பண்பட்ட நேர் பாதையில் போய்க்கொண்டிருப்பதாக ஒரு பிரமை அவனுக்கு அடிக்கடி தோன்றியது. குதிரையின் ஆடி அசையும் பின்பகுதியும், ஓர்புறமாக ஒதுங்கித் தொங் கும் முடி போடப்பட்ட வாலும் அவன் கவனத்தில் உறுத்திக்கொண்டிருந்தன. முன்னால் கொஞ்சம் தள்ளி வண்டிச் சட்டம் உயர்ந்திருந்ததும், அதனூடே ஆடும் குதிரைத் தலையும், கழுத்தும், நெளியும் பிடரி மயிரும் பார்வையிலிருந்து மறையாது தோன்றின. பாதை ஓரத்து அடையாள முளை அவ்வப்போது அவன் பார்வையைக் கவர்ந்தது. ஆகவே ரஸ்தாமீது தான் செல்கிறோம் ; கவலைப் படுவதற்கு எதுவுமில்லை என்றே கருதியிருந்தான் அவன்.

ரஸ்தாவைத் தவற விடாமல் போகும் பொறுப்பைக் குதிரையிடம் விட்டுவிட்டு , வாஸிலி வண்டி ஓட்டினான். ஆனால், முக்கார்ட்டி, கிராமத்தில் கொஞ்ச நேரம் ஓய்வு பெற்றிருந்தபோதிலும், மனம் இல்லாமல் தான் ஓடியது. ஆகையினால் அடிக்கடி அது பாதையை விட்டு விலகிச் செல்வது போல் தோன்றியது. அதனால் வாஸிலி திரும்பத் திரும்ப அதைக் கண்டித்துத் திருத்தவேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதோ வலது பக்கத்திலே ஒரு முளை இருக்கிறது…இதோ மற்றொன்று … இன்னுமொன்று’ என்று வாஸிலி கணக்கிட்டான். எதிரே கறுப்பாகத் தெரிந்த எதையோ பார்த்து இங்கே முன்னால் காடு இருக்கி றது’ என்று நினைத்தான். ஆனால் அவனுக்குக் காடு மாதிரித் தோற்றமளித்தது வெறும் புதர்தான். அந்தப் புதரைத் தாண்டி அவர்கள் மேலும் சுமார் நூறுகஜ தூரம் சென்றார்கள். எனினும், நான்காவது முளையும் தென்படவில்லை; அங்கே காடும் இல்லை.

‘நாம் சீக்கிரம் காட்டை அடைந்தாக வேண்டும்’ என்று வாஸிலி நினைத்தான். வோட்காவினாலும் டீயினாலும் கிளர்ச்சியுற்றிருந்த அவன் வண்டியை நிறுத்தவேயில்லை. லகானை அசைத்து அவசரப்படுத்தினான். கீழ்ப்படியும் குணமுள்ள அந்த நல்ல குதிரை அவன் குறிப்பை ஏற்று நடந்தது. கொஞ்சம் வேகமாக நடந்தும், சற்றே குதித்து ஓடியும், தான் செலுத்தப்படுகிற திக்கு நோக்கியே அது சென்றது. என்றாலும், தான் சரியான பாதையில் போகவில்லை என்பதை அது உணர்ந்து தானிருந்தது. பத்து நிமிஷங்கள் ஓடின. இன்னும் காடு வரவேயில்லை.

‘சரிதான். நாம் மறுபடியும் வழிதவறிவிட்டோம்’ என்று சொல்லி வாஸிலி வண்டியை நிறுத்தினான்.

நிகிட்டா பேசாமல் வண்டியை விட்டு இறங்கினான். காற்று ஒரு கணம் அவன் கோட்டை உடலோடு உடலாக ஒட்டிச் சேர்த்தும், மறுகணம் பிய்த்து இழுத்தும் விளையாடியது. அவன் அதை இறுகப் பற்றியபடியே, பனி நடுவே பாதையைத் தேடி, முத லில் ஒரு பக்கத்திலும் பிறகு அடுத்த பக்கத்திலுமாக அலைந்தான். மூன்று அல்லது நான்கு தடவைகள் அவன் அடியோடு மறைந்தே போனான். கடைசியாகத் திரும்பி வந்ததும் அவன் லகானை வாஸிலி கையிலிருந்து வாங்கிக்கொண்டான்.

‘நாம் வலதுபக்கம் போகவேண்டும்’ என்று அவன் கண்டிப்பாகவும் உறுதியோடும் சொல்லி, குதிரையைத் திருப்பினான்.

‘சரிதான். வலது பக்கம் தான் பாதை இருக்கிற தென்றால், வலது பக்கமே போ’ என்று வாஸிலி சொன்னான் நிகிட்டாவிடம். வார்களைக் கொடுத்து விட்டு அவன் விறைத்துப் போன தனது கைகளைச் சட்டைக்குள் திணித்துக்கொண்டான்.

நிகிட்டா பதில் சொல்லவில்லை.

‘இப்போ, நண்பரே, சுறுசுறுப்பு பெற்றுக்கொள்ளும்!’ என்று அவன் குதிரையிடம் கத்தினான். அவன் லகானை பலமாக அசைத்து ஆட்டிய போதிலும் குதிரை மெதுவான நடையிலே தான் முன் சென்றது.

சில இடங்களில் பனி முழங்கால் அளவுக்கு நிறைந்து கிடந்தது. குதிரையின் ஒவ்வொரு அசை வுக்கும் தகுந்தபடி வண்டி குலுங்கிக் குலுங்கி நகர்ந்து சென்றது.

வண்டியின் முன்புறத்தில் தொங்கிய சாட்டையை எடுத்து நிகிட்டா ஒருமுறை குதிரையை அடித்தான். அதுவரை சாட்டை அடி பெற்றிராத நல்ல குதிரை முன்னால் பாய்ந்து, கொஞ்சம் குதித்து ஓடியது. ஆனால் உடனடியாக வேகத்தைக் குறைத்தும், பிறகு மிக மெதுவாகவும் நடக்கத் தொடங்கியது. இவ்விதம் ஐந்து நிமிஷ நேரம் அவர்கள் போனார்கள்.

இருட்டு சூழ்ந்துவிட்டது. பனி மேலேயிருந்து சுழன்று இறங்கியது. கீழேயிருந்து பொங்கி எழுந் தது. அதனால் சில சமயங்களில் வண்டியின் சட்டங் கள் கூடக் கண்ணுக்குத் தெரியாமல் போய்விடும். சில சமயம் வண்டி அசையாமல் நிற்பது போலவும், வயல் பின் நோக்கி ஓடுகிற மாதிரியும் தோன்றியது. ஒரு இடத்தில் குதிரை சடக்கென்று நின்றுவிட்டது. தனக்கு முன்னால் மிக அருகாமையில் ஏதோ இருப்பதை அது உணர்ந்திருக்க வேண்டும்.

நிகிட்டா மறுபடியும் வெளியே குதித்தான். வார்களை வண்டியில் போட்டுவிட்டு, குதிரை ஏன் அவ்வாறு நின்றுவிட்டது என்று கவனிப்பதற்காக அவன் முன் பக்கம் போனான், குதிரைக்கு முன்னால் அவன் ஒரு எட்டு கூட எடுத்துவைத்திருக்கமாட்டான். அதற்குள் கால்கள் வழுக்கிவிட்டன. அவன் ஒரு சரிவிலே உருண்டு உருண்டு கீழ் நோக்கிச் சென்றான்.

அப்படி விழுகிற பொழுதே ‘ஹோ, ஹோ, ஹோ!’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான் அவன். விழுவதைத் தடுத்து எழுந்து நிற்க வேண்டும் என அவன் முயன்றும் முடியாது போயிற்று. இழுபட்டு வந்து பள்ளத்தின் அடியிலே சேர்ந்து கிடந்த கனமான பனிப்பரப்பிற்குள் கால்கள் புகுந்துவிட்ட பிறகுதான் அவன் உருளுவதை நிறுத்த முடிந்தது.

பள்ளத்தின் மேல் விளிம்பில் தொங்கிய பனிப் பாளத்தின் ஓரம் நிகிட்டாவின் வீழ்ச்சியினால் பாதிக்கப் பட்டிருந்தது. அதிலிருந்து சிலும்பல்கள் அவன்மேல் உதிர்ந்தன; கழுத்துக் காலரினுள்ளே புகுந்தன.

‘சே, என்ன வேலை இது!’ என்றான் நிகிட்டா. பனி ஓட்டத்தையும் பள்ளத்தையும் பார்த்துக் குறை கூறும் தோரணையில் பேசினான் அவன். பிறகு காலருக்குள்ளே போய்விட்ட பனியை வெளியே உதறுவதில் முனைந்தான்.

‘நிகிட்டா! ஏய் நிகிட்டா!’ என்று வாஸிலி ஆன்ட்ரீவிச் மேலேயிருந்து கத்தினான்.

ஆனால் நிகிட்டா பதில் குரல் கொடுக்க வில்லை. பனியைத் தட்டி உதறுவதிலும், சரிவில் உருண்டு விழுந்த போது தவற விட்டு விட்ட சவுக்கைத் தேடுவதிலும் அவன் தீவிரமாக ஈடுபட்டிருந்தான். சவுக்கைக் கண்டுபிடித்ததும் அவன் உருண்டு விழுந்த இடத் துக்கு நேராகவே ஏறிக் கரை சேர முயன்றான். ஆனால் அப்படிச் செய்வது சாத்தியமில்லாமல் போய்விட்டது. திரும்பத்திரும்ப உருண்டு விழுந்து கொண்டே யிருந் தான் அவன். ஆகவே பள்ளத்தின் அடியிலேயே நடந்து, மேலே ஏறிச் செல்வதற்கு வசதியான வழியைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. சுமார் ஏழு கஜ தூரம் தள்ளிச் சென்றதும், கால்களையும் கைகளை யும் ஊன்றிக்கொண்டு சிரமப்பட்டு சரிவின் மீது ஊர்ந்து ஊர்ந்து மேலே ஏற முடிந்தது அவனால். உயரே வந்ததும் அவன் பள்ளத்து விளிம்பின் ஓரமாகவே நடந்து, குதிரை நின்றிருக்க வேண்டிய இடம் தேடிச் சேர்ந்தான். அங்கே குதிரையையோ வண்டியையோ காணமுடியவில்லை. எனினும், காற்றை எதிர்த்து அவன் நடக்கத் தொடங்கியதும் வாஸிலி ஆன்ட்ரீ விச்சின் கூப்பாடுகளையும், முக்கார்ட்டியின் கனைப்பையும் அவனால் கேட்க முடிந்தது.

‘நான் இதோ வருகிறேன். வந்து கொண்டிருக்கிறேன். எதற்காக இப்படிக் கூச்சல் போடுகிறீர்கள்?’ என்று முனங்கினான் அவன்.

வண்டிக்குப் பக்கத்தில் வந்த பின்னரே, குதிரையையும் அதன் அருகே பூதாகாரமாகத் தோன்றும்படி நின்ற வாஸிலியையும் அவன் கண்டுகொள்ள முடிந்தது.

‘நாசமாய்ப் போன நீ எங்கே தொலைந்து போனாய்? நாம் திரும்பிவிட வேண்டியது தான். கிரிஷ் கினோவுக்கே போனாலும் சரி’ என்று வாஸிலி நிகிட்டாவைக் கடிந்து கொண்டான்.

‘திரும்பிப் போக எனக்கும் சந்தோஷமாகத் தானிருக்கும், வாஸிலி ஆன்ட்ரீவிச். ஆனால் நாம் எந்த வழியாகப் போவது? இங்கே பெரிய கணவாய் ஒன்று இருக்கிறது. அதற்குள்ளே ஒரு தடவை விழுந்து விட்டால், அப்புறம் வெளியேறுவது என்பது சாத்தியமில்லை. அங்கே அகப்பட்டுக்கொண்டு திணறிய நான் வெளியேறி வந்தது பெரும்பாடுதான்’ என்றான் நிகிட்டா.

‘பின்னே நாம் என்ன செய்வது? இங்கேயே தங்கியிருக்க முடியாது. நாம் எங்காவது போய்த்தான் ஆக வேண்டும்’ என்று வாஸிலி சொன்னான்.

நிகிட்டா ஒன்றும் பேசவில்லை. அவன் காற்றுக்கு நேராக முதுகைத் திருப்பிக்கொண்டு வண்டியில் உட்கார்ந்தான்.. தனது பூட்ஸைக் கழட்டி, அவற்றினுள் புகுந்து கிடந்த பனித்தூள்களை வெளியே கொட்டினான். பிறகு வண்டியின் அடியிலிருந்து கொஞ்சம் வைக்கோலை உருவி, இடது கால் பூட்ஸில் ஏற்பட்டிருந்த ஓட்டையில் கவனமாகச் சொருகி அடைத்தான் அவன்.

வாஸிலி ஆன்ட்ரீவிச் மௌனமாகி விட்டான், இப்பொழுது அனைத்தையும் நிகிட்டாவின் பொறுப்பில் விட்டு விட்டவன் போல. நிகிட்டா மறுபடியும் பூட்ஸை அணிந்து, தனது கால்களை வண்டியினுள் இழுத்துக் கொண்டான். பிறகு, கை உறைகளை மாட்டிக்கொண்டு குதிரை வார்களைப் பற்றினான். கணவாயின் ஓரமாகவே குதிரையை நடத்திச் சென்றான் அவன். ஆயினும் அவர்கள் நூறு கஜ தூரம்கூட முன்னேறவில்லை. அதற்குள் குதிரை மறுபடியும் நின்றுவிட்டது. மீண்டும் அதற்கு முன்னால் கணவாய் வந்துவிட்டது.

ஆகவே நிகிட்டா திரும்பவும் கீழே இறங்கினான். மீண்டும் பனியில் கால்களை இழுத்து இழுத்து நடக்க லானான். வெகு நேரம் அவன் இப்படிச் செய்தான். கடைசியில், புறப்பட்டுச் சென்ற இடத்திற்கு எதிர் திசையிலிருந்து வந்து சேர்ந்தான் அவன். ‘வாஸிலி ஆன்ட்ரீவிச், உயிரோடு இருக்கிறீர்களா?’ என்று கூவினான்.

‘இதோ இருக்கிறேன். என்ன ஆயிற்று?’ என்று பதிலளித்தான் வாஸிலி.

‘என்னால் ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரே இருட்டாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் கணவாய்களே தென்படுகின்றன. நாம் மறுபடியும் காற்றை எதிர்த்துப் போகவேண்டியது தான்.’

எனவே அவர்கள் மீண்டும் கிளம்பினார்கள். மீண்டும் நிகிட்டா பனியினூடே தட்டுத்தடுமாறி நடந் தான், மறுபடியும் உள்ளே விழுந்தான்; திரும்பவும் ஏறி வந்தான்; மறுபடி அங்குமிங்குமாக அலைந்தான். கடைசியில், ஓய்ந்து போய் திரும்பி வந்து வண்டியின் அருகே உட்கார்ந்து விட்டான்.

‘சரி, இனிமேலே?’ என்று கேட்டான் வாஸிலி.

‘நான் மிகவும் ஓய்ந்து போனேன். குதிரையும் இனி நடக்காது.’

‘அப்படியானால் என்ன செய்வது?’

‘கொஞ்ச நேரம் பொறுத்திருங்கள்.’

நிகிட்டா மறுபடியும் எழுந்து சென்றான். ஆனால் சீக்கிரமே திரும்பி வந்தான்.

‘என் பின்னாலேயே வாருங்கள்!’ என்று சொல்லி, அவன் குதிரைக்கு முன்னால் சென்றான்.

வாஸிலி ஆன்ட்ரீவிச் இப்பொழுதெல்லாம் உத்திரவுகள் இட விரும்பவில்லை. அதற்கு மாறாக நிகிட்டா சொல்லியவாறே செயல் புரிந்தான்.

‘இங்கே, இப்படி வாருங்கள்’ என்று நிகிட்டா சத்தம் போட்டான். வேகமாக வலது பக்கம் அடி எடுத்து வைத்து அவன் கடிவாளத்தைப் பற்றிக் கொண்டு முக்கார்ட்டியை பனி ஓட்டம் ஒன்றை நோக்கி இழுத்துச் சென்றான்.

முதலில் குதிரை பின்வாங்கியது. அப்புறம், பனி ஓடையைத் தாண்டி விடலாம் என்ற நம்பிக்கையோடு முன்னால் குதித்தது. ஆனால் அவ்வளவு பலம் அதற்கு இல்லை. அதனால் அது தோள்பட்டை வரை பனியில் ஆழ்ந்து விட்டது.

‘வெளியே வாருங்கள்!’ என்று. வண்டிக்குள்ளேயே உட்கார்ந்திருந்த வாஸிலியை நோக்கி, நிகிட்டா சொன்னான். ஒரு பக்கத்துச் சட்டத்தைத் தூக்கிப்பற்றி வண்டியை குதிரையோடு சேர்த்துப் பிடித்தான்.

‘சிரமம்தான் தம்பி. ஆனால் தவிர்ப்பதற்கு இல்லையே. முயற்சி பண்ணிப் பாரு!’ என்று முக்கார்ட்டிக்கு உபதேசித்தான் அவன். ‘ஊம். ஊம். ஒரு சிறு முயற்சி!’ என்று கத்தினான்.

குதிரை ஒரு முறை பலமாக இழுத்தது. மறுபடி யும் இழுத்தது. ஆனால் அது தன்னை வெளியே இழுத்துக்கொள்ள இயலவில்லை. ஆகவே, எதைப் பற்றியோ ஆலோசிப்பது போல அது அசையாமல் நின்றுவிட்டது.

‘இப்ப இது சரிப்படாது தம்பி! திரும்பவும் முயற்சி பண்ணு!’ என்று உபதேசித்தான் நிகிட்டா. தனது பக்கத்தில் உள்ள சட்டத்தைப் பற்றி வலிந்து இழுத்தான் அவன்.

அதே விதமாக வாஸிலி தனது பக்கத்தில் செயல் புரிந்தான். முக்கார்ட்டி தன் தலையை உயர்த்திக் கொண்டு சடாரென்று ஒரு இழுப்பு இழுத்தது.

‘அப்படித்தான்! அப்படித்தான்! பயப்படாதே. நீ மூழ்கிவிட மாட்டாய்’ என்று நிகிட்டா உற்சாகப் படுத்தினான்.

ஒரு பாய்ச்சல். அப்புறம் ஒன்று. மூன்றாவதாக ஒன்று. கடைசியில் முக்கார்ட்டி பனி ஓட்டத்தை விட்டு வெளியேறிவிட்டது. அது அசையாது நின்று பெருமூச்சு உயிர்த்தது. பிறகு தன் தேகத்தைச் சிலிர்த்து பனியை உதறிக்கொண்டது. அதை மேலும் நடத்திச் செல்ல விரும்பினான் நிகிட்டா.

ஆனால், ரோமம் நிறைந்த இரண்டு கோட்டுகள் அணிந்திருந்த வாஸிலி ஆன்ட்ரீவிச்சுக்கு நெடுமூச்சு வாங்கியது. மேற்கொண்டு அடி எடுத்து வைக்க முடியவில்லை அவனால். அதனால் அவன் வண்டியி னுள்ளே சாய்ந்துவிட்டான். நான் சரியாக மூச்சு விடட்டும்!’ என்று சொன்னான். அவன் கிராமத்தி லிருந்து புறப்படும் போதே ரோம அங்கியின் காலரை இறுக்கிக் கட்டி வைத்திருந்த கைக்குட்டையை இப் பொழுது அவிழ்த்துவிட்டான்.

இங்கே நன்றாகத்தான் இருக்கிறது. நீங்கள் அங்கேயே படுத்திருக்கலாம். நான் இதை வழி நடத் திச் செல்கிறேன் என்று நிகிட்டா தெரிவித்தான். வாஸிலியை வண்டியில் வைத்து அவன் குதிரையின் லகானைப் பற்றி முன்னால் இட்டுச் சென்றான். சுமார் பத்து அடி தூரம் கீழ் நோக்கிச் சென்றான். பிறகு சிறிய ஏற்றம் ஒன்றின் மீது நடத்திச் சென்றான்.

அப்புறம் நின்று விட்டான்.

நிகிட்டா நின்ற இடம் முற்றிலும் பள்ளமான பகுதியில் இல்லை. அப்படி இருந்தால், குன்றுகளி லிருந்து அடித்து வரப்பெற்ற பனி அவர்களை ஒரே அடியாக மூடிப் புதைத்திருக்கும். இந்த இடம் கணவாயின் ஒரு புறமாக, காற்றுக்கு ஓரளவு அடக்கமாக, அமைந்திருந்தது, காற்று ஓர் சிறிது ஒடுங்கி விட்டதாக எண்ண வைத்த சந்தர்ப்பங்கள் அநேகம் ஏற்பட்டன. ஆனால் அவை நீடித்திருக்கவில்லை. கொஞ்சம் வேகம் குறைந்ததற்கு ஈடு செய்வது போல புயல் பத்து மடங்கு பலத்துடன் கீழ்நோக்கிப் பாய்ந்தது; கடுமையாகப் பிய்த்து அடித்துச் சுழன்றது.

வாஸிலி ஆன்ட்ரீவிச் சுவாசம் சரியாகப் பெற்ற தும் வண்டியிலிருந்து இறங்கி, இனிமேல் தாங்கள் என்ன செய்யவேண்டும் என்று ஆலோசிப்பதற்காக நிகிட்டாவிடம் சென்ற தருணத்தில் இத்தகைய காற்று வீச்சுதான் அவர்கள் மேல் சாடியது. அவ் விருவரும் தாமாகவே பணிந்து தாழ்ந்து, காற்றின் வேகம் தணியட்டும் என்று காத்திருந்தனர். முக்கார்ட்டி கூடத் தனது காதுகளைப் பின்பக்கமாகச் சாய்த்து ஒடுக்கி, அதிருப்தியோடு தலையை அசைத்துக் கொண்டது.

காற்றின் கடுந்தாக்குதல் குறைந்த உடனேயே நிகிட்டா கையுறைகளைக் கழற்றி, அவற்றை இடுப்புக் கச்சையில் சொருகிவைத்தான். தனது கைகள் மீது வாயினால் ஊதிக்கொண்ட பிறகு, அவன் வண்டிச் சட்டத்தின் இணைப்புகளை அவிழ்க்கத் தொடங்கினான்.

‘அங்கே என்ன செய்கிறாய்?’ என்று வாஸிலி கேட்டான்.

‘வண்டியிலிருந்து குதிரையை அவிழ்த்து விடுகிறேன். செய்வதற்கு வேறு என்ன இருக்கிறது? என்னிடம் இனி பலமே இல்லை’ என்று நிகிட்டா தனது செயலுக்கு சமாதானம் கூறுவதுபோல் பேசினான்.

‘வண்டியை நாம் வேறு எங்காவது ஓட்ட முடியாதா?’

‘ஊகுங். முடியாது. நாம் குதிரையைச் சாகடித்து விடுவோம். ஏன், அந்த அப்பாவிப் பிராணி இப்ப கூட பழைய நிலைமையில் இல்லையே’ என்று நிகிட்டா குதிரையைச் சுட்டிக்காட்டினான். என்ன நேரிடுமோ என்று எதிர்பார்த்து அடக்க ஒடுக்கமாக நின்றது அது. நனைந்து போயிருந்த அதன் விலாப்புறங்கள் பெருமூச்சினால் விம்மித் தணிந்து கொண்டிருந்தன.

‘ராத்திரிப் பொழுதை இந்த இடத்திலேயே தங்கிக் கழிக்க வேண்டியதுதான்’ என்று அவன் சொன்னான், வசதியான ஏதோ ஒரு விடுதியில் தங்கி விட ஆயத்தம் செய்து கொண்டிருப்பது போல. பிறகு அவன் குதிரையின் கழுத்துப் பட்டைகளை அவிழ்ப்பதில் முனைந்தான். வார்ப் பூட்டுகள் விடுபட்டன.

‘ஆனால் நாம் உறைந்து போக மாட்டோமா?’ என்று வாஸிலி கேட்டான்.

‘உம். அப்படி நேருமானால் அதை நாம் தடுத்து விட முடியாது’ என்று தெரிவித்தான் நிகிட்டா.

– தொடரும்…

– டால்ஸ்டாய் கதைகள், முதற் பதிப்பு: 1956, ஆசிரியர்: லியோ டால்ஸ்டாய், தமிழாக்கம்: வல்லிக்கண்ணன், அலைய்டு பப்ளிஷிங் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *