ஆசிரியர் அண்ணாவி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 7, 2024
பார்வையிட்டோர்: 214 
 
 

(1980ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

பஞ்சாயத்து அலுவலகத்திற்கு எதிரே இருந்த சிமிண்ட் பெஞ்சில், மடித்துக் கட்டிய வேட்டியோடு, உட்கார்ந்து கொண்டு, ஒரு சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே பத்திரிகை படித்துக் கொண்டிருந்த ஊராட்சித் தலைவர் ராமசாமி, எதிரே வந்துகொண்டிருந்த மனிதரைப் பார்த்ததும், சிகரெட்டை அனைத்துவிட்டு, வேட்டியை இழுத்து பாதம்வரை பரப்பிவிட்டு, பெளயமாக எழுந்து நின்றார் லேசாகப் புகைந்து கொண்டிருந்த சிகரெட் துண்டை, அவர் காலால் நசுக்கிக் கொண்டும், மறைத்துக் கொண்டும் நின்றபோது, தலைவரின் வணக்கத்திற்குரிய அந்த மனிதர் நெருங்கிவிட்டார்.

சூரிய வெளிச்சத்துடன் போட்டி போடுவதுபோல் எட்டுமுழ வேட்டி வெண்மையில் மினுங்க, தோளில் கிடந்த மேரியல் இரு புஜங்களையும் மறைத்து, சட்டம் போட்ட ‘எக்ஸ்ரே’ படம்போலக் காட்ட, இன்னொரு கோணத்தில் ஒரு கவசம்போல் காட்சியளிக்க, நெற்றியில் அணிந்திருந்த விபூதி வேட்டியின் தொடர்ச்சி என்னும்படி ஒளிர, ஆமணக்குச் செடியைப்போன்ற மேனி, சிவப்பழமாகக் காட்சியளிக்க அந்த மனிதர் வந்தேவிட்டார்.

பஞ்சாயத்துத் தலைவர் ராமசாமி, தலையைச் சொறிந்து கொண்டே, “ஆயிரம் ரூவாய்க்குக் குதிரை வாங்கியாச்சி. , ஒரு அஞ்சு பைசாவுக்குக் கயிறுதான் வாங்கல வாங்குன குதிரை என்ன ஆவுமோ?” என்றார்.

அந்த மனிதர், ராமசாமியை எடை போடுவது போல் மேலும் கீழும் பார்த்தார் மைக்ராஸ்கோப் பில் வைத்த கண் மாதிரி, அவர் பார்வை, ராமசாமியின் முகபாவத்தை அளந்தது பிறகு, “என்னடா, புதிர் போடுறே ” என்று வாய் இரண்டு வார்த்தைகளைக் கொட்டியது.

“என்ன அண்ணாவி பின்னே? ஹைஸ்கூல் வாரதுக்கு எல்லா ஏற்பாடும் பண்ணினிங்க என்னை முன்னால நிறுத்தி கெளரவம் குடுத்திங்க இப்போ, வெண்ணெய் திரளும் போது, தாழியை உடைக்கப் பாக்குறாங்க நீங்களும் கண்டும் காணாதது மாதிரி இருக்கிங்க.”

அண்ணாவி சிறிது நேரம் பதில் சொல்லாமல் யோசித்தார். பிறகு, “அந்தப்பசங்க, நீ ஹைஸ்கூல் கட்டுறதுக்காக வசூல் பண்ணுன பணத்துல கையாடுனதா பேசிக்கிறதாத்தானே சொல்றே அவங்க கிடக்காங்க காய்ச்ச மரந்தானே கல்லடிபடும். இதுக்கா கலங்குறது? அந்தப் பசங்கள எப்படிச் சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்.”

ராமசாமிக்கு, அவர் கூறிய ஆறுதல், ஒரு தரமான திரைப்படத்தைப் பார்த்தது போன்ற திருப்தியைக் கொடுத்தது அதற்கு வெளிப்பாடாக லேசாய் சிரித்துக் கொண்டே, “அண்ணாவி, நீங்க செய்யுறதும் நல்லா இல்லே. உங்க முன்னேற்பாடால, நம்ம ஊருக்கு ஹைஸ்கூல் வேணுமின்னு, பஞ்சாயத்து யூனியன் தீர்மானம் போட்டுட்டு சீப் எஜூகேஷன் ஆபீஸ்ரும் சிபாரிசு பண்ணிட்டார் பேப்பர் கலெக்டர் ஆபீசுல இருக்கு” என்றார்.

“நீ போய் கலெக்டர பாக்க வேண்டியது தானே.”

“தலை இருக்கையிலே வாலு ஆடுமா?”

“ஏன்டா, நீ ஒரு தலைவரு. ஒரு மேஜர் பஞ்சாயத்துக்கு அதிபதி. நீயே போயி கலெக்டர பார்க்காம, இந்த வயசான கிழவன ஏண்டா கஷடப்படுத்துற?”

“நல்லா இருக்கே தலைவராம் தலைவரு ஊர்க்காரங்க கிட்ட நான்தான் தலைவராய் இருக்கணுமின்னிங்க அவங்களும் அண்ணாவி சொன்னா சரிதான்னு ஏகமனதா தேர்ந்தெடுத்தாங்க “

“டேய், மெள்ளப் பேசுடா ஒரு அன்னக்காவடி வாத்தியாரு ‘லோகல் பாலிடிக்ஸ்லே தலையிடுறதா, ஆபீஸருங்க என்மேல ஆக்ஷன் எடுக்கப் போறாங்க “

“எடுப்பாங்க. எடுப்பாங்க இந்த ஊருக்காரங்க வளையல போட்டுக்கிட்டா இருக்காங்க, உங்க மேல ஆக்ஷன் எடுக்கவுடுற துக்கு? அவங்க ஆபீஸையே பொசுக்கிப்பிட மாட்டோமா?”

அண்ணாவிக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை அன்பின் முதிர்ச்சி வார்த்தைகளாக வரும்போது, அவற்றிற்கு 6WRIT கட்டுவது இயலாததுதான் அவர் குழம்பிக் கொண்டிருக்கையில், ராமசாமி, “கலெக்டர எப்பப் பார்க்கலாம் அண்ணாவி?” என்றார்.

“நம்ம பேப்பர் கலெக்டர் ஆபீஸ்ல இருக்கறது எனக்குத் தெரியும். வறட்சி நிலவற இந்தச் சமயத்துல, ஒரு ஹைஸ்கூலுக்குப் பணம் செலவுடுறது தேவைபான்னு கலெக்டர் யோசிக்காராம் டில்லியில இருக்கற என் மவன், நம்ம கலெக்டரோட மொஸொரியில ஒண்ணா டிரெயினிங் எடுத்தவன் அவன விட்டு கலெக்டருக்கு ‘ஸ்ட்ராங்கா’ எழுதச் சொல்லியிருக்கேன் எழுதிட்டதா என் மவன் லட்டர் போட்டதும் போவோம். ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுடா “

“அப்புறம் அந்தத் தங்கையாட்டம் வகையறா, நான் வசூல்ல தில்லுமுல்லுப் பண்ணினதா பிரச்சாரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க நான் பொண்டாட்டி நகையை அடகு வச்சி வாங்குன மாட்ட ‘நன்கொடை மாடு ன்னு கிண்டல் பண்ணுறாங்களாம் நீங்க கொடுத்த பதவின்னு பாக்குறேன். இல்லன்னா என்னைக்கோ ராஜினாமா செய்திருப்பேன் “

“டேய் ராஜினாமா ராஜினாமான்னு அடிக்கடி மிரட்டாதேடா. இப்படித்தான் சர்ச்சிலோட அப்பா ராண்டோப் சர்ச்சில், தன்னோட மந்திரி பதவியை ராஜினாமாப் பண்ணப் போறதா பிரதம மந்திரிகிட்ட மிரட்டினாரு. கடைசில அந்தப் பிரதமரு பண்ணுடான்னுட்டான் மனுஷன் வேறு வழியில்லாமப் பண்ணிட்டு, அவஸ்தைப் பட்டான் இப்படி ஏடாகோடமாய் மிரட்டாதே.”

“நான் மிரட்டல அண்ணாவி நாம, ராவும் பகலுமா கருமிப் பயலுக வீட்டிலகூட பழியாக் காத்துக்கிடந்து, நன்கொடை பிடிச்சோம். ஒரு அஞ்சு பைசா கூட எடுத்தது கெடையாது ஆனால் அவங்க, என் மாட்டை ‘நன்கொடை மாடு’ன்னு கிண்டல் பன்றதைக் கேட்க வேதனையா இருக்கு “

அண்ணாவி, ராமசாமியைக் கனிவடன் பார்த்தார். பிறகு அவரின் பெருவிரலைப் பிடித்துக் கொண்டே, “நீ ஏன்டா கவலைப்படுற? பரம்பர பரம்பரையாய் பஞ்சாயத்துச் சொத்தை அனுபவிச்சவங்க அவங்க, நீயும் தேனை எடுத்த கையோட, புறங்கையை வாய்க்குக் கொண்டு போயிருப்பேன்னு நினைக்கிறாங்க போலிருக்கு எனக்குத் தெரியும் எந்தப் பயல எப்படிச் சமாளிக்கனுமுன்னு சரிடா, உன் வேலையைப் பாரு, எனக்கு வேலை இருக்கு நம்ம மாடசாமி பொண்ணுக்கும், பெருமாள் பேரனுக்கும் பொருத்தம் பார்க்கனுமுன்னு என்னைத் துளைச்சி எடுக்கிறாங்க நான் வர்ரேன்”

ராமசாமி அண்ணாவி போவதையே பார்த்துக் கொண்டிருந்தார் ஒரு பெரிய சுமை இறங்கியது போலிருந்தது. அதற்கு அடையாளமாக, அண்ணாவி தலை மறைந்ததும், ஒரு சிகரெட்டை எடுத்துப் பற்றவைத்தார்.

அண்ணாவி “நமசிவாய நமக” என்ற சிவமந்திரத்தை முணு முணுத்துக் கொண்டே, மேனி குலுங்க நடந்தார். அவருக்கு எதிரே சைக்கிளில் வந்து கொண்டிருந்த தங்கையா, கீழே இறங்கி, தோளில் கிடந்த துண்டை எடுத்து, முழங்கையில் போட்டுக் கொண்டார்.

“டேய் தங்கையா, ஒன் மவன் எனக்கு லெட்டர் போட்டிருக்காண்டா. பெங்களுர்ல போயி, அவன்கூட நான் ஒரு மாசம் தங்கனுமாம்.”

“போயிட்டு வாரதுதானே அண்ணாவி,”

“இப்போ அவன் பிளைட் ஆபீஸ்ரு என்கிட்ட படிச்ச நன்றியில் எழுதியிருக்கான் இந்தக் கிழவன் அங்க போயி எதுக்குடா சுமையா இருக்கணும்?”

“என்ன அண்ணாவி நீங்க இந்த ஊருக்கே நீங்கதான் குலதெய்வம். எங்க குடும்பத்துக்கு நீங்க கடவுளு நீங்க கண்டிப்பா போகணும். அப்பதான் அவனும் உருப்படுவான் “

சமீப காலமாக தன் மகன் பணம் அதிகமாக அனுப்பாமலும், ஏனோ தானோன்னு லெட்டர் போடுவதும், தங்கையாவைக் குடைந்து கொண்டிருக்கின்றன. அண்ணாவி போனால், மகன் திருந்துவான் என்ற நம்பிக்கையில், “நீங்க கண்டிப்பா போயிட்டு வரணும் அண்ணாவி நீங்க போனால் அவனுக்குத் தெம்பா இருக்கும்” எனறாா.

அண்ணாவி, தங்கையாவை ஒரக்கண்ணால் உற்று நோக்கிக் கொண்டே, “இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்க்கு மரியாதை கிடையாதுன்னு நாம சொல்லுறோம் ஆனால் ஒன் மவன் இந்தத் தலைமுறையைச் சேர்ந்தவனா இருந்தாலும் அவன் இந்த அன்னக்காவடி லாத்தியாருக்கு மரியாதை கொடுக்கிறான். ஆனால் அவன் அப்பன் முதுகில புளியம் விளாரால நான் கொடுத்த அடியோட தழும்பு இன்னும் கிடக்கு ஆனால் அவனுக்கு மரியாதை கொடுக்கத் தெரியலியே!”

தங்கையா, துடித்துப் போனார் ஒரு தடவை முதுகைத் தடவி விட்டுக் கொண்டு, “என்ன அண்ணாவி, பூடகமா பேசlங்க நான் பெத்த மவனே உங்ககிட்ட மரியாதைக் குறைவா பேசினா அவனைக் கண்டந் துண்டமா வெட்டிப்புடுவேன். அப்படிப்பட்ட நானா உங்களுக்கு மரியாதை கொடுக்காம இருப்பேன்?”

“பின்ன என்னடா! அவன் ராமசாமி, நாயா அலைஞ்சி நன்கொடை பிரிக்கிறான் சுய கெளரவத்த பெரிசா நினைக்கிறவன். அப்படிப்பட்டவனே அக்கம் பக்கத்துலே போயி பெரிய மனுஷங்க சின்ன மனுஷங்க அத்தனை பேரு கிட்டேயும் கால்ல விழாத குறையா கெஞ்சி பணம் பிரிக்கிறான் நீ அவன் வாங்குன மாட்டை, ‘நன்கொடை மாடுன்னு சொல்றியாம் நீ அவனை அப்படிச் சொல்றதும், என்னைச் சொல்றதும் ஒண்ணுதாண்டா.”

“அண்ணாவி, நான் நன்கொடை விஷயமா கணக்கு இருக்கணுமுன்னுதான் சொன்னேன். ராமசாமியோட நாணயத்த சந்தேகிக்கல.”

“எனக்கு எல்லாந் தெரியும்டா ஆனால் ஒண்னு மட்டும் நினைச்சிக்கடா உன் போஸ்ட் மாஸ்டர் மவன் பேச்சியம்மைக்கு வந்த பணத்தை ரேகை போட்டு எடுத்துக்கிட்டான் அது அந்தக் கிழவிக்குத் தெரிஞ்சதும், ரிப்போர்ட் பண்ணப் போனாள் உடனே நீ என்கிட்ட வந்து விழுந்தே. நானும் ராமசாமிகிட்ட ‘உன் சித்திக்கிட்ட சொல்லுடா’ன்னு சொன்னேன் அவனும், உன் கிட்ட இருந்த பழைய பகையை மறந்து சித்திக்காரியைச் சரிகட்டினான் இதெல்லாம் மறக்காதே. ராமசாமி மட்டும் இல்லன்னா, ஒன் மவன் இன்னும் கம்பி எண்ணிக்கிட்டிருப்பான் மனுஷனுக்கு நன்றி வேணுண்டா!”

“அண்ணாவி, எந்தச் சல்லிப்பய மவனோ என்னப் பத்தி உங்ககிட்ட கலகம் பண்ணியிருக்கான். சாமி சத்தியமா நான் இந்த வம்புக்கே போகமாட்டேன். வேணுமுன்னா பாருங்க, தலையிட மாட்டேன் “

“தலையிட மாட்டேன்னு சொல்லாதடா. அநியாயம் நடக்கும்போது தலையிடவேண்டியதுதான் ஆனால் நியாயத்த கேள்வி கேக்கக் கூடாது.டா! அவன் – ராமசாமி – நியாயஸ்தன் சரி, சரி ஹைஸ்கூலுக்கு உன் பணத்த எப்படா குடுக்கப்போற?” “இன்னும் நாலு நாளையில பருத்தி எடுக்கறேன். கொடுத்துடறேன் “

“உன் வீட்டுக்காரி வயித்து வலியில துள்ளுனாளே, நான் சொன்ன மருந்தைச் சாப்பிட்டாளா?”

“இன்னும் சாப்பிடலை.”

“காய்ச்சின இரும்புல தேனைவிட்டு, இஞ்சிச் சாறுல போட்டுக் குடிக்கச் சொல்லுடா. அதுக்கும் குணமாகலன்னா, ஆஸ்பத்திரியில போயி எக்ஸ்ரே எடு. நாளக்கழிச்சி உன் வீட்டுக்கு வருவேன். உன் வீட்டுக்காரிக்கு வயித்து வலி வந்துதோ படுவா உன்னை பிச்சுப்புடுவேன்.”

“இன்னைக்கே மருந்து கொடுக்கறேன், அண்ணாவி.”

அண்ணாவி இப்போது சற்று வேகமாக நடந்தார். தங்கையா முழங்கையில் கிடந்த துண்டை எடுத்து, தோளில் போட்டுக் கொண்டு, சைக்கிள் பிடலை அழுத்தினார்.

அண்ணாவியின் எதிரே, காலேஜ் படிக்கும் ராமனும், அவனோடு இணைந்தாற்போல், ஹெல்த் விஸிட்டராகப் பணி புரியும் நளினாவும் வந்து கொண்டிருந்தார்கள். ராமன், கால்கள் பின் வாங்கின. கண்டும் காணாதது மாதிரி நடந்த அண்ணாவி, அவனை ஏறிட்டுப் பார்க்காமலே,”டேய் ராமா, மத்தியானம் என்னை வீட்டுல வந்து பாரு” என்றார். “சரிங்க லார்” என்ற பதிலைக் காதில் வாங்கிக் கொண்டதாகக் காட்டிக் கொள்ளாமலே, அவர் நடந்தார் நடந்தவர், சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தார். ராமன் வளைய வந்து கொண்டிருந்தான்.

“டேய், உன்னை மத்தியானம் தானே வரச்சொன்னேன். இப்ப எங்க போகனுமோ அங்க போடா, மத்தியானம் வாடா.”

“பரவாயில்ல சார் காரணம் இல்லாமக் கூப்பிட மாட்டிங்களே. உங்களை விட எனக்கு யாரும் பெரிசில்ல.”

“யாரும்’ என்ற வார்த்தையில் நளினா பதுங்கியிருக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்ட அண்ணாவி, ராமனை நோட்டம் விட்டார். வயதானவர்களை மைக்ராஸ்கோப்பில் பார்ப்பது மாதிரி பார்ப்பவர், இப்போது அவனை டெலஸ்கோப்பில் பார்ப்பது போல் மேல்மட்டமாகப் பார்த்தார். ராமனின் கைகால்கள் ஆடின.

“டேய் ராமா, நீ புத்திசாலிப் பையன். இப்ப உனக்கு முக்கியம் படிப்பத்தான். நீ அந்தப் பொண்ண விரும்புறதும், அவள் உன்னை விரும்புறதும் எனக்குத் தெரியும். அவளை, உனக்கே முடிச்சி வைக்கிறதா முடிவு பண்ணிட்டேன். ஆனால் அதுவரைக்கும் நீ அவள் பின்னால் திரியக்கூடாது. இது சுத்தமான ஊருடா. பொண்ணு பின்னால பப்ளிக்கா பல்லைக் காட்டிக்கிட்டு நடக்கறது நாகரிகமாவாது. உன் அப்பாகிட்ட சொல்லி முடிச்சிடுறேன்: அதுவரைக்கும் உன்னை அந்தப் பொண்ணோட நான் பார்க்கக் கூடாது. நான் சொல்றது புரியதாடா?”

“புரியுது ஸார். அப்பா கிட்டே எப்போ?”

“எப்போன்னு எனக்குத் தெரியும்டா. இப்போ நீ திரும்பிப் பாராம ஒடுடா.”

‘அண்ணாவி’ என்று நடுத்தர வயதினராலும், ‘ஸார்’ என்று இளைஞர்களாலும் அழைக்கப்படும் பூதலிங்கம்பிள்ளை அந்த ஊருக்குக் குடிவந்து முப்பது ஆண்டுகள் ஆகின்றன. அந்தக் காலத்தில் ஐந்தாவது வரை படித்துவிட்டு, லோயர் கிரேட்’ வாத்தியாராக, திண்ணைப் பள்ளிக்கூடத்தைத் தொடக்கி வைத்தவர் அவர் தான். தங்கையா, ராமசாமி உட்பட அந்த ஊரில் ‘லிட்டரேட்டுகள்’ அத்தனை பேரும் அவரிடம் ஒண்ணாம் வகுப்பில் சேர்ந்தவர்கள். ஆற்று மணலை கோவிலுக்கு எதிரே இருந்த திட்டில் கொட்டி, அதில் உயிர், மெய் எழுத்துக்களை ஆக்கிக் கொடுத்தவர் அவர் அப்போது, அந்த ஊருக்குச் சிலேட்டோ, கரும்பலகையோ எட்டிப் பார்க்கவில்லை. மாணவர்களுக்கு எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்ததும், ஒலைச் சுவடிகளில், எழுத்தாணியால் 247 எழுத்துகளையும் எழுதிச் சொல்லிக் கொடுத்தார். “கடவுளை எந்நாளுமே கனவிலும் மறவாதே” என்ற பாடலை அவர் முன்னால் பாட, மாணவர்கள் அதை கோரலாகப் பின்னால் பாட, அந்த ஊரின் நம்பிக்கையே அந்தப் பாட்டில் உருவெடுக்கும். பள்ளிக்கூடத்தை ஒரு குருகுலமாக நினைத்து அவர் செயல்பட்டதால், ஊரே அவரை ஒரு குருவாக மதித்தது. அப்போது ‘ஸ்ாள்’ ‘அண்ணாவியாக இருந்த காலம். அண்ணாவியின் கையிலிருந்த வாதமடக்கிக் கம்புக்குப் பயந்து புளிய மரங்களில் ஏறிப் பதுங்கிக் கிடந்த பையன்களை,’விசுவாச. பையன்களின் உதவியோடு போய், மரத்தில் இருந்து இறக்கி, பள்ளிக்கூடத்துக்கு இழுத்துக் கொண்டு வந்து, ‘சுமத்து சுமத்துன்னு சுமத்தி’ய் படிக்க வைத்தார். சில புளியமர வாசிகள்’ அவரால், இன்று ஆபீஸர்களாய், பங்களாவாசிகளாய் இருக்கிறார்கள்.

இருபதாவது வயதில், வெளியூரில் இருந்து அங்கு வந்து ஊரோடு ஒன்றிவிட்ட அண்ணாவிக்கு, இரண்டு மூன்று ஆண்டுகளில் திருமணம் நடந்தது. அவர் மனைவியும், ஒரு லோயர் கிரேட் ஆசிரியை. ஊர்க்காரர்கள், அவருக்குப் பள்ளியருகே ஒரு வீடு கட்டித் தந்தார்கள். ஊரில் விளையும் வெள்ளாமையில் ஒரு பகுதி, தானாக வீடு தேடி வந்ததால், சம்பளப் பணத்தை என்ன செய்வதென்று பிரச்சினைகள் அண்ணாவிக்கு வந்ததுண்டு.

கிணறு வெட்டப் போய், கிணற்றுக்குள்ளேயே விழுந்தவர்கள், பனைமரத்தில் இருந்து விழுந்த மரமேறிகள், மருமக்களால் கைவிடப்பட்ட கிழங்கள், கிழங்களால் நிராகரிக்கப்பட்ட மருமக்கள் ஆகியோரின் பிரச்சினைகளுக்கு, அண்ணாவியின் பிரச்சினை ஒரு தீர்வாக இருந்தது.

பள்ளிக்கூடத்தில் ஐந்தாவது வகுப்பு வந்ததும், அண்ணாவி எஸ்.எஸ்.எல்.சி. எழுதி செகண்டரி கிரேடில் தேறி, அதே கிரேட் ஆசிரியரானார் அன்று முதல் இன்று வரை, பள்ளியை வளர்த்து, அந்த வளர்ச்சியில் தன் தகுதியையும் வளர்த்துக் கொண்டார். இந்தப் பரிணாம வளர்ச்சியில் ஊரார்க்கு அவர்மீது இருந்த பிடிப்பும் வளர்ந்தது. இன்று வரை அவர்தான் பள்ளியின் தலைமையாசிரியர். பெரும்பாலான ஆசிரிய ஆசிரியைகள், அவரது முன்னாள் மாணவ மாணவிகள்.

இந்த வளர்ச்சியின் மத்தியில், அண்ணாவிக்கு ஒரு கடுமையான தளர்ச்சியும் ஏற்பட்டது. அவர் தோளோடு தோளாகப் பணிபுரிந்த, அவர் மனைவி ஒரு பையனைப் பரிசாக அளித்து, அந்தப் பரிசை மூன்றாண்டு காலம் பராமரித்து விட்டு, காலமாகிவிட்டாள். வாழ்க்கையில் ஏற்பட்ட இந்த அதிர்ச்சியையும், ஆக்க வழிக்குத் திருப்பினார். கவலையை மறப்பதற்காகவோ என்னவோ ஆசிரியர் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். முதியோர் கல்வித் திட்டத்தை, அரசாங்கம் தொடங்குவதற்கு முன்னதாகவே, ‘ராப் பள்ளிக்கூடத்தை ஒரு ஹரிக்கேன் விளக்கின் முன்னணியில் நடத்தி ‘கைநாட்டுகளை “அன்னாவி, ஒங்க கையெழுத்து, நல்லா இல்லியே” என்று உரிமையோடு செல்லமாகச் சொல்கிற அளவுக்கு உழைத்தார். இளமையிலே மனைவியை இழந்தாலும், அந்த இழப்பை, உழைப்பில் ஈடுசெய்தார். “அண்ணாவின்னா அண்ணாவிதான்” என்று வயது வந்தோரும், “அந்த ஆளு ஆம்பிளைதானா” என்று சில இளம் பெண்களும் சொல்கிற அளவுக்குத் தலைநிமிராமல் அவர் நடந்ததால் தலைகுனிய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவருக்குச் சித்த வைத்தியமும், ஜோஸ்யமும் அத்துபடி. ஆகையால், அவர் வீடு, ஒரு மருத்துவ மனையாகச் செயல்பட்டது. அவர் தலையாட்டாமல் எந்தக் கல்யாணமும் நடக்காது.

திண்ணையில் தவழ்ந்து, குடிசையில் எழுந்து, இப்போது கல் கட்டடத்தில் நடக்கும் பள்ளிக்கூடத்தைப் பார்த்த அண்ணாவியின் இதயம் நிறையுறவில்லை. எப்படியாவது ஒரு உயர்நிலைப் பள்ளி, தன் கண்முன்னாலேயே தோன்றிவிட வேண்டும் என்பதில் கருத்தாய் இருந்தார். அதன் அவசியத்தை உணர்த்தி, பஞ்சாயத் திலும், யூனியனிலும் தீர்மானம் போடச் செய்தார். முப்பது ஆண்டுகால அனுபவத்தில் சந்தித்த கல்வி அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார் சென்னை வந்து பெரிய அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சந்தித்தார் அத்தனைபேரும், முறைப்படி விண்ணப்பிக்கும் மனு வந்தவுடனேயே, ‘சாங்ஷன்’ அளித்து விடுவதாக வாக்களித்தார்கள். எப்படியும் உயர்நிலைப் பள்ளி வந்து விடும் என்ற நம்பிக்கையில், இப்போது கட்டிடவேலைகள் நடைபெற்று வருகின்றன. மக்கள்தொகை, அண்மையில் எந்த உயர்நிலைப்பள்ளியும் இல்லாத நிலைமை, போதுமான கட்டடங்கள், ஆகியவை பள்ளி கட்டாயம் வந்துவிடும் என்ற நம்பிக்கையைக் கொடுத்தது.

பஞ்சாயத்துத் தலைவர் ராமசாமி, வழக்கம்போல் அண்ணாவியைப் பார்க்க வந்தார். கலெக்டரிடம் போய், ஹைஸ்கூல் பேப்பரை நகர்த்த வேண்டுமே!

“நாளைக்கே கலெக்டர்கிட்ட போவேண்டா. நம்ம பையன் கலெக்டருக்கு ‘ஸ்ட்ராங்கா’ எழுதியிருக்கானாம். திருமலாபுரத்துக் காரங்க வேற நம்ம ஊர்ல ஏற்கனவே லைப்ரரி இருக்கிறதனிலே, அவங்க ஊர்லதான் ஹைஸ்கூல் வேணுமுன்னு கலெக்டருக்கு மனுப் போட்டிருக்காங்களாம். அவன் மனுப்போட்டு என்ன செய்ய முடியும்? நம்ம ஊர்ல ஹைஸ்கூலப் பார்க்காம இந்தக் கட்டை வேகாது நாளைக்கே போயிட்டு வந்துடுவோம். என் மவன். உடனே கலெக்டர பாருங்கன்னு’, நேத்து லட்டர் போட்டிருக்கான்.”

பஞ்சாயத்துத் தலைவர் ராமசாமி, அண்ணாவியைப் பார்த்துக் கொண்டிருந்தார். இப்படியும் ஒரு மனிதரா அவருடைய மகன். டில்லியில் மத்திய தகவல் சர்வீஸில் கிரேட் ஒன் ஆபீஸராக இருக்கிறான். அவனுக்குக் கல்யாணமும் நடந்து, ஒரு குழந்தையும் பிறந்து விட்டது. அப்பாவைத் தன்னோடு வந்துவிடும்படி எத்தனையோ தடவை எழுதிவிட்டான். இருந்தும் ‘அண்ணாவி’ தட்டிக் கழித்து வருகிறார். கிராமத்தைவிட்டுப் போக அவருக்கு முடியவில்லை ராமசாமி அவரிடம் கேட்டே விட்டார். “அண்ணாவி! தம்பியைப் பார்க்க உங்களுக்குத் தோணலியா?”

அண்ணாவி இந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை என்றாலும், அவரிடமிருந்து பதில் உடனடியாகக் கிடைத்தது.

“ஏண்டா! நீங்களெல்லாம் என் பிள்ளைங்க தானடா. நான் பள்ளிக்கூடத்தில மட்டுமில்ல, வீட்டில கூட நீ, தங்கையா, மாடசாமி வேற, என் பையன் வேறன்னு பிரிச்சி நினைச்சதே கிடையாது. என் மகன்களில் ஒருவன் டில்லில இருக்கான், மத்தவங்க இங்கதானடா இருக்காங்க.”

அண்ணாவியின் குரல் தழுதழுத்தது. ராமசாமி அவரின் பாதத்தையே உற்றுப் பார்த்தார். பிறகு உணர்ச்சி வசப்பட்டவர்போல் தன் கையை எடுத்து, அவர் பாதத்தைத் தொட்டு, கண்ணில் ஒற்றிக் கொண்டார்.

“டேய் கால வாராதடா..” என்று சொல்லிக் கொண்டே, அண்ணாவி, அந்த உணர்ச்சிக் கட்டத்திற்கு மசகு’ போட்டார். ஒருவாறாக, உயர்நிலைப் பள்ளிக்கூடம் கிடைத்துவிட்டது முதல் கட்டமாக, ஒன்பதாம் வகுப்பு தொடங்கப்பட்டது ஊர்க்காரர்கள், உயர்நிலைப் பள்ளி கிடைத்த மகிழ்ச்சியை விழாவாக்கினார்கள். விழாவில் கலந்து கொண்ட கலெக்டர் முதலிய அதிகாரிகளும், இதர பிரமுகர்களும், மேடைப் பேச்சின் திறன் தெரிந்தவர்கள் அல்ல. என்றாலும் அவர்களின் பேச்சுக்களுக்குக் கூட்டத்தினர் அடிக்கடி கைத்தட்டக் காரணம், பேசிய அத்தனைபேரும், அண்ணாவி கல்விக்காகவும், அந்த ஊருக்காகவும் ஆற்றிய சேவையைப் புகழ்ந்துதான். பஞ்சாயத்து யூனியன் தலைவர், அந்தப் பள்ளியைப் ‘பூதலிங்கம் உயர்நிலைப் பள்ளி’ என்று பெயரிட வேண்டும் என்று கூறினார். மேடையில் இருந்த அண்ணாவி வெட்கப்பட்டுத் தலையைத் தாழ்த்திக் கொண்டார். ஆனால், தலைநிமிர வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ‘இன்னார் சார்பில் மாலை’ என்று மாலைகள் மலையாவதுபோல், அவரிடம் படித்த ஒவ்வொரு மாணவரும், தங்கள் அண்ணாவிக்கு மாலை அணிவித்தார்கள்.

அந்தப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாகி விட்டதால், பி.ஏ., பி.டி படித்த ஒருவரைத் தலைமை ஆசிரியராகப் போட்டார்கள். இந்தப் பள்ளியில், வேலை செய்து கொண்டே பி.ஏ.பி டி. படித்து ‘புரமோஷன் வாங்கி, அவர் தலைமையாசிரியராக, முதல் தடவையாகப் பொறுப்பேற்றார். தன்னை ஆட்டிவைத்த தலைமையாசிரியர் போல் தானும் ஆட்டிவைக்க வேண்டும் என்ற மனோபாவம் உள்ளவர் அவர் அண்ணாவிக்கு ஊரில் இருக்கும் செல்வாக்கும், மாணவர்கள் மட்டுமல்ல, இதர ஆசிரிய, ஆசிரியைகளும் அவரிடம் அதிக ஒட்டுதலாக இருப்பதும், தலைமையின் தலையைக் குடைந்து, நெஞ்சுக்குள் புழுக்கத்தை ஏற்படுத்தியது.

அண்ணாவி, தலைமை ஆசிரிய ஸ்தானத்திற்கு உரிய மரியாதையை அளிக்கத் தவறவில்லை அதே நேரத்தில், காலையில் பள்ளிக்கு வந்ததும், தான் “நமஸ்காரம் எச்செம் லார்” என்று சொல்லும் போதெல்லாம், அவர் அலட்சியமாகத் தலையை லேசாக ஆட்டுவதையும் கவனிக்கத் தவறவில்லை.

முன்னால் வந்து நின்ற அண்ணாவியைப் பார்த்துவிட்டு “எஸ் ” என்று கேள்வி கேட்கும் பாவனையில் இருந்தார் தலைமை ஆசிரியர்.

“ஸார், நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க நம்ம லோகநாதனை சயன்ஸுக்கும், அருமைநாயகத்தைக் கணக்குக்கும். ரொட்டேஷன் பீரியடில போட்டிருக்கிங்களாம். லோகன் கணக்குல எக்ஸ்பர்ட்: நாயகம் சயன்ஸுல கெட்டி. அதனால. ” தலைமையா சிரியர் முகத்தைச் சுளித்தார் பிறகு, “மிஸ்டர் பூதலிங்கம், இதுல நீங்க தலையிடாமல் இருக்கிறது பெட்டர்” என்றார் அலட்சியமாக அண்ணாவி, கூனிக் குறுகிக் கொண்டே வெளியே வந்தார்.

இன்னொரு நாள், அட்டெண்டென்ஸ் ரிஜிஸ்டரில் கையெழுத்துப் போடுவதற்காக, அண்ணாவி தலைமையாசிரியரின் அறைக்குள் போனார் சுவரில், முருகனின் படமும், சரஸ்வதி தேவியின் படமும் காட்சியளித்தன இந்தத் தெய்வப் படங்களுக்கு, அண்ணாவி தினமும் ஊதுவத்தி கொளுத்திவைப்பார் வத்தியில் இருந்து எழும்புகை, இரு தெய்வப் படங்களையும் சூழ்ந்து வியாபித்து, பிரபஞ்சத் தோற்றத்தைக் காட்டும் இப்போதும் அந்தப் படங்களில் புகை வியாபித்திருந்தது – தலைமை ஆசிரியரின் சிகரெட் புகை, அலை அலையாகச் சூழ்ந்தது.

அண்ணாவி துடித்துப் போனார் கேட்கலாமா, வேண்டாமா என்று யோசிப்பவர் போல் சிறிது நேரம் தனக்குத்தானே அவகாசத்தைக் கொடுத்துவிட்டு, பின்னர், “தம்பி, நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதிங்க. ஒரு பள்ளிக்கூடம், பழனியைவிட, சிதம்பரத்தைவிட புனிதமானது அதில் மாட்டப்பட்டிருக்கும் தெய்வப் படங்கள், அதைவிடப் புனிதமானது இங்கே சிகரெட் பிடிக்கிறது நல்லதில்லை” என்றார்.

தலைமையாசிரியர் அண்ணாவிக்குப் பதிலளிப்பதுபோல், இப்போது சுருள் சுருளாகப் புகைவிட்டு, சிகரெட் சர்க்கஸ்’ நடத்தினார். “நீயும் ஒரு வாத்தியாராடா” என்று வாய் வரைக்கும் வந்த வார்த்தைகளை, அண்ணாவி அடக்கிக் கொண்டார்.

அண்ணாவியின் மெளனம், தலைமை ஆசிரியர்க்கு ஊக்கம் கொடுத்திருக்க வேண்டும் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டே, “பூதலிங்கம், உங்க வயசுக்காக நான் பொறுமையாய் இருக்கேன் அவன அந்தப் பாடத்துல போடு இவன இந்தப் பாடத்துல போடுன்னு அதிகப் பிரசங்கித்தனமா பேசினதைக் கூடப் பொறுத்துக் கிட்டேன் அப்படிப் பொறுத்ததினாலே இன்னைக்கு என் பெர்ஸனல் மேட்டர்ல தலையிடுறீங்க நான் தலைமையாசிரியர் பி. ஏ , பி டி படிச்ச டபுள் கிராஜுவேட் லோயர் கிரேட்ல இருந்து வரல நிர்வாகத்தை எப்படி நடத்தனும், எப்படி எப்படி என் அறைக்குள்ளே நடந்துக்கணுமின்னு எல்லாம் எனக்குத் தெரியும். யூ கேன் கோ நவ் ” அண்ணாவி, தள்ளாடிக் கொண்டே வெளியே வந்தார் கம்பீரமாக நின்று பழக்கப்பட்ட அவர், மேனி குலைந்து போனார் மனதுக்குள் புனிதமாக இருந்த சேவையின் நினைவுகள் அவரைச் சுட்டன “எனக்குத் தெரியும்” என்று தலைமையாசிரியர் எவ்வளவு அலட்சியமாகக் கூறிவிட்டார் அண்ணாவி கூடத்தான் கலெக்டரைப் பார்ப்பது சம்பந்தமாகவும், ராமனின் காதல் விவகாரத்திலும்”எனக்குத் தெரியும்” என்று சொல்லியிருக்கிறார். ஒரே வார்த்தையில் இரண்டு அர்த்தங்களா? இருவர் பயன்படுத்திய ஒரே வார்த்தையில் எவ்வளவு எதிரும் புதிருமான நோக்கங்கள்! அந்த மனிதர்களால் ஒரே வார்த்தை கூட இரட்டை வேடம் போட்டுவிட்டதே!

அன்று இரவு, வெகுநேரம் வரை அண்ணாவி தூங்கவில்லை எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும், ஏ, மனமே அஞ்சாதே! எல்லாம் ஆண்டவனின் சித்தம்’ என்று ஒரு நிமிடம் சொல்லுவார். தூக்கம் தானாய் வந்துவிடும் மனைவி இறந்தபோதிலும் சரி, இந்தச் சாதாரனச் சொற்கள் மந்திரம் போல் பலிக்கும் ஆனால், இன்றோ இந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற புலனுணர்வே அவருக்குப் புலனாகவில்லை “உங்க மேல ஆக்ஷன் எடுத்தா ஆபீலையே பொசுக்கிப் பிடுவோம்” என்று சொன்ன ராமசாமியின் வார்த்தையும், “நான் பெத்த மவனே, உங்ககிட்ட மரியாதை இல்லாம நடந்தால், அவ்னைக் கண்டதுண்டமாய் வெட்டிப் புடுவேன்” என்று கூறிய தங்கையாவின் பேச்சும், அவருக்கு எங்கோ ஒலிப்பது போல் கேட்டது.

அவருக்கு ஏற்பட்ட அவமானம் வெளியே தெரிந்தால் தலைமையாசிரியர் ஒரு நாள் கூட இருக்க முடியாது அவர் நினைத்தால், அந்தத் தலைமையை இருபத்துநாலு மணி நேரத்தில், அங்கிருந்து துக்க முடியும் கடைசியில் என்ன நிற்கும்? அவர் கண்ணிலும் மேலாய் வளர்த்த அந்தப் பள்ளிக்கூடத்தை, ‘பிராப்ளம் ஸ்கூல்’ என்று அதிகாரிகளும், தகராறு பிடிச்ச பள்ளிக்கூடம்’ என்று வெளியூர்க்காரர்களும் எள்ளி நகையாடுவார்கள் அந்தக் கெட்ட பெயருக்கு அவர் ஒரு தரப்பாக இருக்க விரும்பவில்லை எந்தத் தனிமனிதனையும் விட, ஒரு ஸ்தாபனம் பெரிது மனிதனுக்காகத்தான் ஸ்தாபனம் என்றாலும், அந்த ஸ்தாபனத்தை மானுடமாகக் கருதும்போது, தனிமனிதன் முக்கியத்துவமற்றவன் ஆகிறான் எண்ணற்ற துளிகள் சேர்ந்த கடலில், முதல் துளி என்பதற்காக, அதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாகாது சுயநல மனிதன் ஒரு ஸ்தாபனத்தையே ஆட்டிப் படைக்கலாம் ஆனால் அந்த மனிதன் போகக் கூடியவன் ஸ்தாபனம் போகாதது – போகக் கூடாதது அண்ணாவி நீண்டநேரம் சிந்தித்து, காலை மூன்று மணிக்கு ஒரு முடிவுக்கு வந்தார் அதன்பிறகு நன்றாகத் துங்கினார்.

மறுநாள், தான் ஓய்வு பெறப்போவதாக அரசுக்கு எழுதிய ஒரு கடிதத்தையும், அதற்கு முன்னேற்பாடாக நான்கு மாத விடுமுறை விண்ணப்பத்தையும் அண்ணாவி தலைமை ஆசிரியரிடம் கொடுத்தார் “உடனே, ஆக்ஷன் எடுக்கிறேன்” என்று தலைமை தலையாட்டியது அந்தத் தலையில் ஆணவம் நிறைந்திருப்பது, அண்ணாவிக்குத் தெளிவாகத் தெரிந்தது.

சொல்லாமல் கொள்ளாமல், திடீரென்று ஊரைவிட்டுக் கிளம்பும் அண்ணாவியின் போக்கு, ஊரார்க்குப் புரியவில்லை தலைமை ஆசிரியருக்கும், அவருக்கும் ஒத்துவரவில்லை என்று காற்று வாக்கில் செய்தி அடிபட்டாலும், ‘நம்ம அண்ணாவியிடம் மோதுறதுக்கு அவருக்கென்ன பைத்தியமா’ என்று ஒவ்வொரு வரும், தங்களைத் தாங்களே கேட்டுக் கொண்டார்கள் அண்ணாவியும், “மகனைப் பார்க்க ஆசை வந்திடுச்சி” என்று தட்டிக் கழித்தார்.

ரயில் நிலையத்தில் ஒரே கூட்டம் சக ஆசிரிய ஆசிரியைகள், ராமசாமி, தங்கையா உட்பட, பெருந்திரளான மக்கள் அவரைச் சூழ்ந்து நின்றனர் அண்ணாவி’ லீவில் போவதாகத்தான் அத்தனைபேரும் நினைத்துக் கொண்டார்கள். தலைமை ஆசிரியரின் போக்கைத் தன்னையும் மீறி சொல்லிவிடக் கூடாதே என்பதற்காக அண்ணாவி பேச்சைக் குறைத்துக் கொண்டார் தங்கள் அண்ணாவி, நான்கு மாத விடுமுறையில் போவதை, தங்கையாவாலும், ராமசாமியாலும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

“அண்ணாவி, எங்கள உங்க பிள்ளைங்கன்னு சொன்னிங்க இப்போ இந்த மகன்கள விட்டுட்டுப் போவ எப்படி மனம் வந்தது?” என்று ராமசாமி அழாக் குறையாகக் கேட்டார்.

அண்ணாலி முதல் முறையாகக் கண்ணிர் விட்டார் பின்பு மனதை அடக்குவது போல் மூச்சைப் பிடித்துக் கொண்டார் பிறகு, “டேய் சுப்பு, ராமன் விஷயம் ஞாபகம் அந்தப் பொண்ணு நளினா ரொம்ப நல்லவள் ” என்று சுப்புவின் காதோடு பேசினார்.

ரயில் வண்டியில், ‘கார்ட் கொடியை எடுத்தார்.

அண்ணாலி பொதுப்படையாக,”ஏண்டா கலங்குறிங்க நான் தான் இன்னும் நாலு மாசத்திலே வந் துடுவேனே. அப்புறம், நம்ம ஹெட்மாஸ்டர் கிட்டேயோ வேறு எந்த ஆசிரியர்கிட்டேயோ ஏடா கோடமாய் நடந்திங்கன்னா பிச்சுப்புடுவேன் பிச்சு” என்றார்.

ரயில் வண்டியை விசில் உஷார் படுத்தியது பச்சைக் கொடி ஆடியது.

அண்ணாலி சுற்றும் முற்றும் பார்த்தார். பிறகு, “அப்புறம் ஒரு சமாச்சாரம் நான் தங்கியிருந்த வீட்டில ஹெட்மாஸ்டர இருக்கச் சொல்லுங்க. அவர் சம்மதிக்கலன்னா நளினா சொன்னது மாதிரி, ஹெல்த் விலிட்டர்களுக்கும், கிராம சேவகர்களுக்கும் அதை ஒய்வு அறையாய்க் கொடுத்திடுங்க” என்று ஓய்வு பெற்றவர் சொன்னார்.

“நாலு மாதத்தில வந்திடுறதா சொன்னிங்க, இப்போ நீங்க சொல்றதப் பார்த்தா வரமாட்டிங்க போலிருக்கே நிஜத்தைச் சொல்லுங்க அண்ணாவி நீங்க வரமாட்டியளா?” என்று ராமசாமி கத்திய வார்த்தைகள் அண்ணாவியின் காதில் விழாதபடி ரயில், பகைவிட்டுக் கொண்டே புறப்பட்டு விட்டது (தலைமை ஆசிரியர் தன் அறையில் புகை விட்டுக் கொண்டிருந்தார்).

உண்மையைப் புரிந்து கொண்டதற்கு அடையாளம் போல் அழுத ராமசாமியின் கண்களை, தங்கையா அழுது கொண்டே துண்டை வைத்துத் துடைத்தார் “கடவுளை எந்நாளுமே கனவிலும் மறவாதே” என்ற பாடலை அவர்கள் முணுமுணுத்துக் கொண்டே, அண்ணாவியைக் கடவுளாகப் பார்த்தார்கள்

அந்த ஊரின் ஆன்மா, அன்புக்குரிய அண்ணாவி வடிவில், ரயிலில் பறந்து கொண்டிருந்தது.

– குற்றம் பார்க்கில் (சிறுகதைத் தொகுதி), முதல் பதிப்பு: நவம்பர் 1980, மணிவாசகர் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *