இவர்களை திருத்தலாம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 23, 2024
பார்வையிட்டோர்: 822 
 
 

இளங்கோவன் மீண்டும் ஒருமுறை அந்த ஃபைலைப் படிக்க, நிறைய சந்தேகங்கள் தோன்றின.திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தார் ‘ என்னவாக இருக்கும் அங்கே நடக்கும் செயல்கள்’ என்ற கேள்விக்கு விடை தேடி. ” ச்சே, இந்த பிக்பாக்கெட்காரன் நம்மை இப்படிக் குழப்பிட்டானே!” என்றெண்ணிவிட்டு, ‘வெளியில் போய் ஒரு டீயைக் குடித்து வருவோம் ‘ என்று மனதில் சொல்லியபடியே பைக்கை நகரவைத்தார்.

இளங்கோவன், மங்களபுரம் நகரத்தில் முக்கியமான சில காவல் நிலையங்களின் ஒரு காவல் நிலையத்தில் ஆய்வாளராக உள்ளார்.நேரம் தவறாமை, நேர்மை, கடமையில் கண்ணும் கருத்தாக உள்ளவர், அநாவசிய அதிகார தோரணை இல்லாதவர் இதுபோன்ற நற்பெயர்களுக்கு சொந்தமானவர்.மக்களிடம், மேலதிகாரிகள் சிலரிடமும் பாராட்டு பெற்றவர்.

இரண்டரை மாதங்களுக்கு முன்பு, அவர் பணிபுரியும் நிலையத்திற்கு அருகில் உள்ள பேரூந்து நிறுத்தங்கள், பெரிய கடைகள் இருக்குமிடங்கள் இங்கெல்லாம் அடிக்கடி ‘ பிக் பாக்கெட் ‘ நடக்கின்றன. காவல்துறை அலுவலகத்தில் புகார் பதிந்தும் ஒன்றும் நடக்கவில்லை என்று தொடர்ந்து வந்த மக்களின் குறையை தீர்க்க முடிவு செய்தார் இளங்கோவன்.

காவல்துறை உதவியாளர்களை சேர்க்காமல், இவரின் நண்பர்களுடன் இணைந்து இளங்கோவனும் சாதாரண உடைகளில் உலவி வந்து, போட்ட திட்டங்களின் பலனாக, வீராச்சாமி என்பவனை பிடித்தார். முதலில் வாக்குவாதங்கள் செய்த வீராச்சாமி பின்னர் குற்றங்களை ஒப்புக்கொண்டான்.

வீராச்சாமி பிழைப்புக்காக நகரத்திற்கு வந்தவன் பலவிதமான பணிகளில் தினக்கூலியாக சேர்ந்து சம்பாதித்து நாட்களை தள்ளினான்.மாதத்தில் பத்து நாட்கள் பட்டினியுடன்தான் கழித்தான்.சரியானபடி வேலைகள் கிடைக்காததால், வீராச்சாமி அவனுக்கு தெரிந்த காகிதப் பூக்கள்,குருத்தோலை அலங்காரங்கள் செய்வது, காகிதப் பைகள் செய்வது, பழைய இரும்பு, பிளாஸ்டிக், பேப்பர் இவைகளை வாங்கி, பெரிய வியாபாரிகளிடம் விற்பது இவைகளை செய்ய ஆரம்பித்தான். ஆனால் மீண்டும், மீண்டும் தேவையான அடிப்படை பொருள்கள் வாங்குவதற்காக பணப்பற்றாக்குறை தினமும் இருந்தது.ஒருபடி மேலே சென்றால் இரண்டு படி கீழ் இறங்கும் நிலையிலேயே இருக்கையில், தொழில் ரீதியாக அறிமுகமான கலியன் என்பவன் இவனுக்கு தவறான அறிவுரைகள் கூறி, அவசரப்பணத்தேவைகளுக்கு ‘ இதுதான் சிறந்த வழி என ‘பிக் பாக்கெட்டில்’ ஈடுபடுத்தி பிழைக்கச் சொன்னான்.

வீராச்சாமிக்கு இது பிடிக்காமல், முதலீடுக்காக பணம் திரட்ட தன் ஊரில் உள்ள யார் யாரிடமோ கெஞ்சி, காலில் விழுந்து ஒன்றும் நடக்காமல், பின்னர் நெருக்கமான உறவினர்களிடமும் கேட்டு அவர்களும் கையை விரிக்க, கலியன் வழியில் இறங்கிவிட்டான். பத்தில் மூன்று அல்லது நான்கு பர்ஸ்கள்தான் பணத்துடன் இருக்கும் மற்றவை வெறும் கார்டுகளுடன்தான் இருக்கும் என்றும் அந்த பர்ஸ்கள் எல்லாம் அவனிடம் தான் உள்ளன என்றும் வீராச்சாமி கூறினான்.

இவைகளை எல்லாம் கேட்டுவிட்டு ” உனக்கு முதலீடுக்கு பணம் இருந்தால், இதெல்லாம் செய்யாம இருப்பியாடா?சும்மா ஏதாவது சென்டிமென்ட் கதையச்சொல்லிட்டு அதுக்கு நான் இரக்கப்படணும்னு நினைக்கிறியாடா? இதெல்லாம் என்கிட்ட நடக்காது. உனக்கெல்லாம் இரக்கமே படக்கூடாதுடா.” என்று அவனை அறைந்து விட்டு இளங்கோவன் மேலும் சொன்னார்” ஆறுமாதம் ஜெயிலுக்கு போய் திருந்தி வர்றியான்னு நான் பாக்கறேன்.திருந்திட்டீன்னா உதவி செய்றேன் ” என்றார். அவன் வாக்குமூலத்தையும், அவன் நடந்து கொண்ட விதத்தையும் பார்த்து, வீராச்சாமிக்கு நீதிபதி மூன்று மாதங்கள் சிறைத்தண்டனையும் இரண்டாயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். அதைக்கட்டுவதற்கு பற்றாக்குறையாக இருந்த ஐநூறு ரூபாயை இளங்கோவன்தான் கொடுத்தார். ‘தன்னை அடித்து துவைத்து சிறையில் தள்ளிவிட்டவரே தனக்காக அபராதமும் கட்டுகிறாரே’ என்று வீராச்சாமி இளங்கோவனை வியந்து பார்த்தான்.

அப்போதுதான் வீராச்சாமி “சார், நீங்க ரொம்பவும் நல்லவர் சார்; நானெல்லாம் ஒழுங்கான வழியில்தான் வாழணும்னு நெனைக்கிறோம் சார்.ஆனா எங்க கஷ்டமான சூழ்நிலைல உதவிக்கு ஒருத்தரும் இல்லாதப்ப தப்பா போயிடற நிலை வந்துடுது சார்.ஆனா, என்னைப் போல சாதா பசங்களை திட்டம் போட்டு பிடிச்சுடறீங்களே, உங்க ஏரியாவிலேயே உங்க எல்லார் கண்ணுக்கும் முன்னாடியே ஊர் உலகத்தை ஏமாத்தி, மக்களோட உடல்நலத்திலயும் விளையாடிட்டு இருக்காங்க சார்!அதைப்பிடிச்சு சாதனை செய்யுங்களேன் சார்!” என்று சிரித்தபடியே கூறினான்.

” யாருடா அவன்?என்னடா சொல்ற, யாரப்பத்தி சொல்றடா, ஒழுங்கா சொல்லிடு இல்லே பின்னிடுவேன் ” என்ற இளங்கோவனிடம்” உங்க ஸ்டேஷன்லேர்ந்து ரெண்டு ஸ்டாப் தள்ளி ஒரு லாரி டிரான்ஸ்போர்ட் ஆபீஸ், அதை ஒட்டின கோடவுன் அங்கே போய் பாத்தா புரியும். அவ்வளவுதான் சொல்லமுடியும் சார்! மீதியை நீங்களே கண்டுபிடிச்சுக்கங்க சார்.என்னை விடுங்க.” என்றான் வீராச்சாமி.” சரி, சரி அதெல்லாம் நான் பாத்துக்கிறேன், நீ உள்ளே போடா, இப்போ!” என்று கூறி வீராச்சாமியை சிறையில் அடைத்து விட்டு வந்த இளங்கோவன் யோசிக்க ஆரம்பித்தார்.

அதன் பின்னர் இளங்கோவன், வீராச்சாமி சொன்ன அந்த இடத்தை அதிக நோட்டம் விட ஆரம்பித்தார். தனியாக மட்டுமல்லாது தன் உதவியாளர்களையும் ஈடுபடுத்தி அங்குள்ள நடவடிக்கைகள் பற்றி தகவல்கள் சேகரிக்க செய்தார். அந்த லாரி போக்குவரத்து நுழைவாயில் வழியே உள்ளே சென்று பின்னர் இடது பக்கம் திரும்பி அதற்கு பின்னால் உள்ள ஒரு பெரிய கிடங்கின் உள்ளே சில பெரிய லாரிகள், சிறிய வகை சரக்கு வண்டிகள் போய் வருகின்றன என்று கண்டு பிடித்தார் இளங்கோவன். பின்னர் உள்ளே வாகனங்கள் வரும் நேரங்கள், எத்தனை மணிநேரம் கழித்து திரும்ப போகின்றன என்ற தகவல்களையும் திரட்டி கோப்பு உருவாக்கினார்கள்.

இதற்கிடையே இளங்கோவன் தனக்கு மிகவும் நம்பகமான உதவியாளர் ராஜனை அந்த இடத்திற்கு சாதாரண உடையில் லாரி புக்கிங் தொடர்பாக விசாரிப்பது போல் சென்று அதன் பின்னால் உள்ள கிடங்கையும் வேவு பார்க்கும்படி சொல்லி அவன் மூலம் சில தகவல்களை சேகரித்தார். அந்த லாரி போக்குவரத்து கம்பெனிக்கு சொந்தமான இடத்தின் ஒரு பகுதியில் இருந்த கிடங்கை ‘ஜேயென்’ கம்பெனிக்கு வாடகைக்கு விடப்படிருப்பதாகவும் அறிந்து கொண்டார். நாள்தோறும், ஏதோ பொருட்கள் உற்பத்தி செய்வதற்கு மூலப்பொருள் ஏற்றி வருவதற்கும், உற்பத்தி செய்தவைகளை வெளியே எடுத்துச்செல்வதற்கும் லாரிகளும்,டெம்போக்களும் வந்து போகின்றன என்று புரிந்து கொண்டார். ஆனால் வீராச்சாமி சொன்னபடி ‘அப்படி என்ன சட்டத்திற்கு புறம்பாக நடக்கிறது ‘ என்பதை எண்ணி குழம்பிய நிலையில் இன்று இருந்தார்.

டீயைக் குடித்து விட்டு, தன் வண்டியை நேரே அந்த கிடங்கு இருக்குமிடம் செலுத்த நினைத்தவர், வெளியே நிறுத்தி விட்டு, லாரி அலுவலகத்திற்குள் நுழைந்தார். திடீரென ஒரு இன்ஸ்பெக்டர் வந்திருக்கிறாரே என ஆச்சரியமாக பார்த்தனர் அங்கிருந்த பணியாளர்கள். ” மேனேஜரை பார்க்கணும்” என்றார் இளங்கோவன் அங்கே முன் சீட்டில் நடுத்தர வயதில் அமர்ந்திருந்தவரிடம். ” வாங்க சார், நானே அழைச்சிட்டு போறேன்” எனக்கூறி இளங்கோவனை உட்புறம் வலது புறமாக உள்ள அறைக்குள் சென்று ” சார், இன்ஸ்பெக்டர் உங்களைப் பார்க்கணும்னு வந்திருக்கார்.” என்றார். உள்ளேயிருந்து வந்தவன் சுமாராக நாற்பதிற்குள் இருப்பான்.”சார், உள்ளே வாங்க, உட்கார்ந்து பேசலாம், என் பெயர் சந்தானம்” எனச்சொல்லிவிட்டு, “நன்றி கண்ணையா அண்ணே, நீங்க போய்க்கோங்க” என்று அழைத்து வந்தவரிடம் சொன்னான்.

“மிஸ்டர் சந்தானம், நான் இளங்கோவன், இங்கே எம் த்ரீ ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டர். பின்னால் உள்ள அந்த சின்ன ஃபேக்டரி மாதிரி இருக்கே, அவங்க என்ன தயாரிக்கறாங்கன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா? அந்த இடம் உங்களுக்கு சொந்தம்னு நினைக்கிறேன் ” என்று இளங்கோவன் உடனடியாக விஷயத்திற்கு வந்தார் இளங்கோவன்.

“ஆமாம் சார், அந்த இடமும், கடைசி காம்பவுண்ட் சுவர் வரை எங்கள் இடம்தான் சார்.லாரியில் ஏற்றி வரும் வாடிக்கையாளர்களின் பொருள்களை பிரித்து அடுக்கி வைக்க மூன்று கிடங்குகள் கட்டினோம்.நான்கு வருடங்களுக்கு முன்பிருந்தே வியாபாரம் டல்லடிக்க ஆரம்பித்தாலும், பெரும்பாலும் அந்த கிடங்கை பயன்படுத்தாமல் இருந்ததாலும் அதை வாடகைக்கு விட்டோம்.அவர்கள் இங்கே இரண்டு வருடங்களுக்கு மேலாக இருக்கிறார்கள்.கிரைண்டர் ஸ்டோன் தயாரிக்கிறார்கள்.மேலும் அவைகளுக்கு வேண்டிய சில ப்ளாஸ்டிக் ஹேண்டில் இது போல் சில உதிரி பாகங்கள் தயாரிக்கிறார்கள் என்று கூறுவார்கள்.ஏன் சார், ஏதாவது பிரச்னையா?” என்றான் சந்தானம்.

உடனே இளங்கோவன் ” சில செய்திகள் காற்று வாக்கில் வந்தன.நீங்கள் உள்ளே போய் இருக்கிறீர்களா? எவ்வளவு பேர் வேலை செய்கின்றனர் என்று தெரியுமா? அதன் ஓனரை பார்த்திருக்கிறீர்களா? எங்கே அவர்களின் ஆஃபீஸ் உள்ளது? எனக்கு உங்கள் உதவி இந்த விஷயத்தில் தேவைப்படுகிறது. வேணும்னா உங்க ஓனர் கிட்டேயும் பேசறேன். செய்ய முடியுமா?”

“நிச்சயமாக சார்! நான் ஓரிரு முறை அங்கே போயிருக்கேன். ஆனால் ரொம்ப உள்ளே எல்லாம் போகவில்லை.ஓனர்கள் இரண்டு பேர். ஜகதீஷ் அண்ட் நெவில்.ஒரு முறை பார்த்திருக்கிறேன்.உங்களுக்கு என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள் சார்! நான் என்னால் முடிஞ்சத செய்யறேன் “என் சித்தப்பாதான் இதன் ஓனர் சார்.நான் சொல்லிக்கிறேன்.” என்றான் சந்தானம்.

“ஓ.கே.மிஸ்டர் சந்தானம்.எப்படியாவது யாரையாவது அங்கே அனுப்பியோ அல்லது ஏதாவது ஒரு வகையில் அங்கு என்ன செய்கிறார்கள் என்பதை ரகசியமாக அறிந்து வர வேண்டும்.அவைகளை எங்கே டெலிவரி செய்கிறார்கள் என்பதையும் தெரிந்து வந்தால் மிகவும் ஹெல்ப்பாக இருக்கும் “என்று இளங்கோவன் கூறினார்.

“சரி சார்.ஏதும் சந்தேகம் அல்லது தகவல்கள் இல்லாமல் நீங்கள் நிச்சயமாக இப்படி கேட்க மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். நான் ஏதாவது ஒரு வழியில் இதை கண்டுபிடிக்க ஆவன செய்கிறேன்.” என்று சந்தானம் உறுதியளித்தான்.ஒரு விதமான மனநிறைவுடன் அவனிடமிருந்து விடைபெற்று வெளியே வந்தார் இளங்கோவன். அப்போது அவரைத்தாண்டி ஜேயென் கம்பெனியில் இருந்து சரக்கு மூட்டைகளை ஏற்றிய சிறிய வாகனம் கடந்து சென்றது. அதன் நம்பரை இளங்கோவன் குறித்துக் கொண்டு, ராஜனை கூப்பிட்டு விவரங்கள் சொல்லி அந்த வாகனம் யாருடையது, அந்த பொருள்களை எங்கே டெலிவரி கொடுத்தார்கள் எனும் தகவல்களை திரட்ட சொன்னார்.

அதற்குப்பின் ஒரு வாரத்தில் அவருக்கு கிடைத்த தகவல்கள் அனைத்தும் அதிர்ச்சி தரும் வகையில் இருந்தன. ஜேயென் ஃபேக்டரி கிரைண்டர் கல், மற்ற உபகரணங்கள் தயாரிப்பு தொழிலில் இருந்தாலும், அது வெளிப்பார்வைக்கு மட்டுமே என்றும், வேறு வகை பொருட்கள் தயாரிக்கிறார்கள் என்றும் சந்தானம் மூலம் தெரிய வந்தது. சந்தானம் தனக்கு மிகவும் நம்பகமான வேணுவை அவர்களிடம் இருந்த வண்டிக்கு இரவு நேர ஓட்டுநராக சேர்த்து விட்டு அவன் மூலமாக பல உண்மைகளை அறிந்தான். அவர்கள் தயாரிக்கும் வேறு சில பொருட்களை அவர்கள் அறியாமல் சிறிய காகிதத்தில் பொட்டலம் கட்டி எடுத்து வந்தான் வேணு.அவைகள் மிகச்சிறிய வெள்ளை, பழுப்பு நிறத்தில் உள்ள கற்தூள்கள், ப்ளாஸ்டிக் தூள்கள். அவைகள் அரிசி, பருப்பு, ஜவ்வரிசி மற்றும் மிளகு போன்ற தோற்றங்களில் இருந்தன.

இளங்கோவன் உடனே புரிந்து கொண்டார். அங்கே உணவுப் பொருட்களுடன் கலப்படம் செய்வதற்கான போலி அரிசி மற்ற தானிய வகைகள் கற்களாலும், ப்ளாஸ்டிக்காலும் தயாரித்து விநியோகம் செய்கிறார்கள். இவர்களையும், இங்கிருந்து வாங்குபவர்களின் கூட்டத்தையும் பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்தார் இளங்கோவன்.

இதற்கிடையே ராஜன் கொண்டு வந்த தகவலின் படி அந்த கலப்படப்பொருள்களை ஏற்றிய வாகனங்கள் எங்கெல்லாம் விநியோகம் செய்யப்பட்டது என்று அறிந்து வந்தான். அவைகள் அனைத்தும் உணவுப்பொருள்களின் மொத்த விநியோகம் செய்பவர்கள் என்பதை கண்டு பிடித்தனர்.

இளங்கோவன் தனக்கு உதவிய சந்தானம், வேணு போன்றவர்களுக்கு நன்றி கூறிவிட்டு அவர்களை தொடர்ந்து அதை கொஞ்ச நாட்கள் யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் தொடரும்படி அறிவுறுத்தினார். பின்னர் மொத்த விற்பனையாளர்கள் பற்றிய விவரங்களை திரட்டினார்.

இவை அத்தனையும் ஒரு கோப்பில் இட்டு மறுநாள் காலை தன் உயரதிகாரிகள் துணை கண்காணிப்பாளர் கேசவனிடமும்,அவர் மூலம் கண்காணிப்பாளர் தணிகாசலம் அவர்களிடமும் எல்லா விவரங்களையும் கூறி கோப்பினைக்காட்டி விஷயங்களை விளக்கினார்.

“வெல் டன், இளங்கோவன். இந்தியாவில் என்ன பிரச்னைன்னா கலப்படம் செய்யற குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை என்று ஏதுமே இல்லை. பல்வேறு வளர்ந்த நாடுகளில் இந்த மாதிரி குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கிறார்கள். இங்கே மிக அதிக பட்சமாக இரண்டு லட்சம் முதல் பத்து லட்சம் வரை அபராதம், ஆறுமாதம் முதல் இரண்டு வருடங்கள் வரை சிறை தண்டனை இப்படித்தான் உள்ளது.இவனுக யாராவது ஒருத்தனை சிறைக்கு அனுப்பிட்டு, வேற பெயரில் வேற இடத்துக்கு போய், இதையே செய்றானுக.எனி வே இதை சீரியஸா டீல் பண்ணி தண்டனை வாங்கி கொடுக்க பாப்போம். கேசவன் நீங்க இதை ஃபர்தரா பாத்துக்கங்க.ரெய்டுக்கு அப்ரூவல் வாங்கி அதையும் செய்யலாம்.நாளைலேர்ந்து மூணு நாள் ஹாலிடேஸ் இருக்கறதால, நெக்ஸ்ட் வீக் புதன் கிழமை பாத்துடலாம்.” என்றார் கண்காணிப்பாளர் தணிகாசலம்.

“யூ ஆர் ரைட் சார்.இவங்களை விடக்கூடாது இம்மாதிரி ” என்று அவர் கூறியதை ஆமோதித்து கேசவன் அந்த கோப்பினை கையில் எடுத்து இருவரும் அங்கிருந்து கிளம்பிய போது, தணிகாசலம் “இளங்கோவன், த்ரீ மன்த் முன்பு, உங்க தலைமையில் ஐந்து பேர் கொண்ட டீம் அந்த வில்வனூர் கொள்ளை விவகாரத்தை ஸால்வ் பண்ணி, அந்த கேங்கை உள்ளே தள்ளினீங்களே, அதுல ஒரு பெரிய பணக்கார வீட்டுக்காரர் உங்களுக்கு பத்தாயிரம் ரூபாய், இருபதாயிரம் உங்க டீமுக்காகவும், காவல்துறை நிதிக்கு இருபதாயிரமும் கொடுத்திருக்கார். இன்னிக்கு ஈவ்னிங் வந்து வாங்கிக்கோங்க ஐ.ஜி பாராட்டு கடிதத்துடன். மெனி கங்ராஜுலேஷன்ஸ்!”என்று பெருமையுடன் சொல்லி கைகொடுத்தார்.கேசவனும் இளங்கோவன் தோளில் தட்டிப் பாராட்டினார்.

அடுத்த வாரம் அந்த புதன் கிழமை வந்தது. இளங்கோவன், தணிகாசலம் நேரே அவர் அறைக்கு வரும்படி போனில் அழைத்து சொல்லியிருந்தால் அவர் அறைக்குள் நுழைந்தார். கேசவனும் அங்கிருந்தார். “உட்காருங்க இளங்கோவன், நானும், கேசவனும் உங்கள் ப்ரமோஷனுக்கு போன மாதம் சிபாரிசு செய்திருந்தோம். அதுக்கு அப்ரூவ் செஞ்சு ஆர்டர் வந்திருக்கு.” சந்தோஷத்துடன் கூறினார் தணிகாசலம்.”ரொம்ப நன்றி சார்” என்று இளங்கோவன் பதிலளிக்க, “ஆனால் ஒரு சின்ன வருத்தம்,உங்களை ப்ரமோஷன் கொடுத்து கரும்பாவூர் சிட்டிக்கு மாற்றி இருக்காங்க. ஒரு வாரம் ரிலீவிங் டைம்” என்று கேசவன் வருத்தமான தொனியில் சொன்னார்.

இளங்கோவன் அதிர்ச்சியில் சிறிது நேரம் பேசாமல் இருந்தார்.பிறகு மெலிதான ஆனால் உறுதியான குரலில் அவர்கள் இருவரையும் பார்த்து கேட்டார்.” ஏன் சார்? நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க. அந்த கேஸ்ல யாரோ பெரிய பின்புலம், பக்கபலம் இருக்கா, சார்? அதனால்தான் இந்த திடீர் முடிவா?” என்று கேட்டார்.

“நாங்க ரெண்டு பேரும் இப்போ ஏதும் சொல்ற நிலைமைல இல்லை.ஆனால் அந்த காரணமும் உண்டுன்னு தான் நினைக்கிறோம்.மூணு நாள் முன்னாடி நானும் கேசவனும் மேலிடங்களில் இதப்பத்தி டிஸ்கஸ் பண்ணும்போது, அவ்வளவா இதுல அக்கறை காட்டின மாதிரி தெரியலே.எப்படியோ நீங்க ஒரு ஒண்ணு அல்லது ஒண்ணரை வருஷம் அங்கே இருந்துட்டு, இங்கேயே ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வர மாதிரி ஏதாவது வழி செஞ்சுடறேன் நான்.” என்று பரிவுடன் தணிகாசலம் சொன்னார்.

“நடக்கிற படி நடக்கட்டும் சார்!குற்றங்கள் பெருகறதுக்கு காரணம் சட்டங்கள் மட்டுமே காரணம் இல்லை சார்.இதைப்போல டிபார்ட்மெண்ட் விஷயங்களில் ஊடுருவி இருக்கும் மற்ற தேவையில்லாத சக்திகளும் காரணம் சார்! ” என்ற இளங்கோவன் கேசவனைப்பார்த்து ” சார், அந்த பரிசுப்பணத்தில என் பங்கு பத்தாயிரம் ரூபாயை இன்னும் ரெண்டு நாளில் ரிலீஸ் ஆகும் அந்த பிக்பாக்கெட்காரன் வீராச்சாமி கிட்டே கொடுத்திடுங்க. அந்த பணத்தை வச்சு அவனை நான் திருத்திடுவேன்.இவங்க எல்லாம் சூழ்நிலையால இந்த மாதிரி நிலமைக்கு ஆளாயிடறாங்க.அவனுகளை சிறையில் தள்ளிடறோம் சுலபமா.ஆனால் மக்களோட உயிரோடு விளையாடறவங்களை அதுவும் வெளியில் நல்லவங்க போல வேஷம் போடறவனுக பெரிய பக்கபலத்தோட இருந்து தப்பிக்கறானுக.ரொம்ப வெக்கமா இருக்கு சார் சில சமயங்களில் நம்ப வேலைய நினைச்சு “. மனப்பொருமலுடன் இளங்கோவன் கூறினார்.

அந்த அதிகாரிகள் இருவரும் இளங்கோவன் மேல் மிகவும் அன்பும், நட்பும் கொண்டவர்கள். இளங்கோவனை தோளில் தட்டிக்கொடுத்து ஆறுதல் கூறி, அவர்கள் உலகத்தில் ‘ கம்பி மேல் நடப்பது போன்ற வித்தைகள் ‘ என்றுமே இருக்கும் எனக்கூறி அவனிடம் ஆர்டரை கொடுத்தார்கள்.

அடுத்த வாரத்தில் புதிய அலுவலகத்தில் துணை கண்காணிப்பாளர் பதவியில் சேர்ந்த இளங்கோவன் எப்போதும் போல் நேர்மையாக தன் பணியைத் தொடர்ந்தார்.

இதனிடையே ஒரு வருட காலத்தில் கேசவனும் தணிகாசலமும் தொடர்ந்து இளங்கோவன் விட்ட இடத்தில் ஆரம்பித்து, அதிக அளவில் மேலிடங்களுக்கு வெவ்வேறு வகையில் அழுத்தம் கொடுத்து வந்தார்கள்.சில நல்ல மாற்றங்கள் ஏற்பட, ‘ மீண்டும் இளங்கோவனை இங்கே மாற்றி அவர் மூலமாக இந்த கேஸ் முடிவுற வேண்டும் ‘ என்று வேண்டினர்.அது நன்மையில் முடிந்தது.

திரும்பவும் மங்களபுரம் வந்த இளங்கோவன் வரும் வழியில் இருந்த ‘இளங்கோ ஸ்டோர்ஸ்’ என்ற கடையை கண்டார்.அதனை கடப்பதற்குள் ” சார், எப்படி இருக்கீங்க? நீங்க மாத்தல் ஆகிப்போய்ட்டீங்கன்னு சொல்லி வரும்போது பத்தாயிரம் பணமும் கொடுத்தாங்க, நீங்க கொடுக்க சொன்னதா”! வீராச்சாமி கண்களில் நீருடன் சொல்லிக்கொண்டிருந்தான். மேலும் ” அதுல ஆரம்பிச்ச கடை சார் இது.உங்க பேரத்தான் வச்சிருக்கேன். நான் மட்டும் இல்லை சார், கலியனையும் திருத்திட்டேன்.எனக்கு உதவியா இங்கேதான் இருக்கான்.வியாபாரமும் பரவாயில்லை சார்! எனக்கு நல்ல வாழ்வு கொடுத்த கடவுள் சார் நீங்க” என்று நெகிழ்ச்சியுடன் பேசினான் வீராச்சாமி.

இளங்கோவன் மிகவும் சந்தோஷத்துடன் அவனை கட்டிப் பிடித்து சமாதானம் செய்து “ச்சே, அதெல்லாம் இல்லை நீ நல்லா இருப்பா. நான் இனிமே இந்த ஊர்லதான் இருக்கப் போறேன். போன வருஷம் சொன்னியே, ஒரு பெரிய சதி நடக்குதுன்னு, அந்த கேஸுக்குதான் வந்திருக்கேன். நீ எப்படி கண்டு பிடிச்சடா?” என்று கேட்டார். “தினக்கூலியாக சில நாள் போனப்ப பாத்தேன் சார்” என்றான் அவன்.

தன்னுடைய காவல்துறை வாழ்வில் ஒரு மிக உயர்ந்த சாதனை இதுவே என்று எண்ணி ‘இனி இது போன்றவர்களின் வாழ்க்கையை நேர்வழிப்படுத்துவோம். அது எளிதாக உள்ளது. படித்தவனையும் பணம் படைத்தவனையும் திருத்துவது கடினம்தான்’ என்று தனக்குள் பேசியவாறு, மனநிறைவுடன் காவல் நிலையத்தை நோக்கி போனார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *