வௌவால் வீடு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 6, 2024
பார்வையிட்டோர்: 169 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பாஸ்கர் அன்று வீடு திரும்ப மிகவும் நேரமாகிவிட்டது. சனசந்தடி மிகுந்த தியாகராயநகர் பிரதான சாலையில் உள்ள வங்கியில், அவன் காசாளன். உஸ்மான் சாலை, சனங்களின் நெரிசலில் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் பண்டிகைக் காலம் அது. சேலைகள் சுடிதார்களோடும், மிடிகள் டாப்ஸோடும் ஊர்ந்து கொண்டிருக்கும் பகுதியில், ஒரு நகைக்கடை முதல் தளத்தில் அமைந்திருந்தது அந்த வங்கிக் கிளை. நகைக்கடைக்கு அதில்தான் கணக்கு. லட்சக் கணக்கில் கொண்டு வந்து கொட்டுவார்கள். எண்ணி முடிப்பதற்குள் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி விடும். ஆலையிலிட்ட கரும்பு கதைதான்.

அவன் அந்தக் கிளைக்கு மாற்றல் கேட்ட போது, பலரும் அவனை எச்சரித்தார்கள். அங்கு வேலை பார்த்த சுந்தரம் சொன்னான்:

“வாஷிங்மிஷின் பாத்திருக்கியா? துணியெல்லாம் துவைத்து, அலசி, ஒட்டப் பிழிந்து, வெளியே தள்ளுமே! அந்தக் கதைதான். அம்பது வயசுக்கு இது உனக்குத் தேவையா?

கடை நிலை ஊழியன் கணேசன் அருகில் வந்து தோளைத் தட்டிக் கொடுத்தான். தலைவா! உன்ன மாதிரி ஆள்தான் தேவை. ரொம்ப ஜெருப்பு காட்டறானுங்கோ. மேனேஜர் மிரட்றாராம். ஆபிசருங்க அடிமை மாதிரி நடத்துறாங்களாம். நீ போய்தான் ஒரு வழி பண்ணனும். கொம்பு சீவி விடவும், பின் வாங்க வைக்கவும் எதிரெதிர் தாக்குதல்கள். பாஸ்கர் கொஞ்சம் குழம்பிப் போனான்.

சங்க பொதுச் செயலாளர் பேசினார்.

“ஒங்க இஷ்டம். வேணான்னா வேற கிளைக்கு மாத்திடறேன். ஆனா ராகவன் சமாளிச்சிருக்கான். ஒங்களால முடியாதா?”

சண்டைக்கோழிக்கு, காலில் கத்தி கட்டி விட்டு, ‘ரத்தம் வரும், பரவாயில்லையா?’ என்பது மாதிரியான ஜீவகாருண்ய பேச்சு அது.

அவன் போவதா? வேண்டாமா? என்று ஆங்காங்கே பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருந்தார்கள் பல கிளைத் தோழர்கள். விருப்ப ஓய்வு திட்டம் வந்தால், கூடுதலாக கொஞ்சம் பணம் கிடைக்கும். மாதா மாதம் கொஞ்சம் ஊதியம் உயரும். அதுவரை, அலவன்ஸ், அவுட் ஆஃப் பாக்கெட் என்று சில்லறை வருமானம் சில நூறு தேறும். விடுப்புக் கணக்கில் வரவு அதிகம். தேவைப்பட்டால் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். தப்பிக்க உபாயமா இல்லை!கொஞ்சம் தைரியம் பிறந்தது.

கிளையில் மொத்தம் இருபத்தி ஐந்து ஊழியர்கள். அனைவரும் ஓடி வந்து கை கொடுத்தார்கள். வரவேற்பு வார்த்தைகள் சொன்னார்கள். ஏறக்குறைய நேர்ந்த ஆடு நிலை போல உணர்ந்தான் பாஸ்கர். ஒன்பது மணியிலிருந்து நாலு மணி வரை கிளை. ஆனாலும் ஐந்து மணியாகிவிடும் என்றார்கள். முதல் நாள் நாலு மணிக்கே வேலையை முடித்து, பையை எடுத்துக் கொண்டு கிளம்பிய போது, ஆச்சர்யமாகப் பார்த்தார்கள். அடுத்த நாள் வேலை முடிந்தும், அரை மணி நேரம் கூடுதலாக இருந்து விட்டு கிளம்பினான்.

மூன்று மாதங்களில், கை கொடுத்தவர்களில் பலர், தனக்கு எதிராக, மறைமுகமாக வேலை செய்வதை உணர்ந்து கொண்டான். அவன் வருவதற்கு முன்பே, அவனைப் பற்றிய தகவல் அறிக்கை, மேலாளரிடம் வாசிக்கப்பட்டதை, ஒருவன் போட்டுக் கொடுத்தான். வேலை சுமையை மெதுவாக ஏற்றும் தந்திரம் கையாளப்பட்டது. ஆனாலும் பாஸ்கர், நான்கு மணிக்கே வேலையை முடிக்கும் கலையைத் தெரிந்தவன் என்பது அவர்களுக்கு எரிச்சலாக இருந்தது.

வங்கியின் வாடிக்கையாளர்கள் இவனை அணுகும் முறை கூட, வித்தியாசமாக இருந்தது. இவனுடைய வேகம் அவர்களுக்கு புரியாதவாறும், பிடித்தமாயும் இருந்தன என்பது, அவர்கள் பேசும் வார்த்தைகளில் வெளிப்பட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து மேலாளர் வரையில் போயிற்று.

மேலாளர் ஒரு நாள் அவனை தன் அறைக்கு கூப்பிட்டனுப்பினார்.

“ஒங்களப் பத்தி நான் கேள்விப்பட்டது வேற. பாக்கறது வேற. நீங்கள், நான் எதிர்பார்த்ததை விடவும், நன்றாக உங்கள் பணியைச் செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்”.

ஆனாலும், அதிக வேலைப் பளு காரணமாக அவனால் முன்பு போல் புத்தகம் படிக்க முடிவதில்லை. குடும்பத்தாருடன் வெளியே செல்ல முடிவதில்லை. பேச்சு கூட குறைந்து விட்டது. ‘என்னாச்சு ஒம்புருஷனுக்கு ஒடம்பு சரியில்லையா. டாக்டர்கிட்ட காட்டலாமில்ல’ என்ற விசாரிப்புகள் இந்திராவை துளைத்தெடுத்தன. இந்திரா அவன் மனைவி. அதுவும் சராசரி இந்திய மனைவி. அவளால், அவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

ஒரு நாள் வீடு அல்லோலகல்லோலப்பட்டது. சன்னலெல்லாம் சாத்தி கொக்கி போடப்பட்டிருந்தது. எல்லா அறை விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன.

அலுவலகத்திலிருந்து பேருந்து பிடித்து வீடு வந்து சேருவதற்குள் இருட்டிவிடும். தூரத்திலிருந்தே, தன் வீட்டில் அனைத்து விளக்குகளும் எரிவதைக் கண்டு, சஞ்சலம் அவன் மனதை ஆட்டியது. ‘என்ன ஆகியிருக்கும். இந்துக்கு? உடம்பு சரியில்லையா? அல்லது வெளியே போயிருக்கிறாளா? புறநகர் பகுதி என்பதால் வீட்டில் ஆள் இருப்பது போல், விளக்குகள் போட்டு விட்டு போவது வழக்கம் தான். ஆனாலும் பகலிலேயே எல்லா வேலைக்களையும் முடித்து விட்டு, அவனுக்காக காத்திருப்பவளாயிற்றே அவள். இன்று என்ன ஆயிற்று ?’ ஆயிரம் கேள்விகள்.

வீட்டு அழைப்பு மணியை அழுத்தியவுடன், சிறிதாக சன்னல் கதவு திறந்து, இந்திராவின் முகம் எட்டிப் பார்த்தது. சட்டென்று கதவு சாத்தப்பட்டது. வாயிற்கதவு படாரென்று திறக்கப் பட்டு, அவன் உள்ளிழுக்கப் பட்டான். கதவு சட்டென்று சாற்றப்பட்டது. கதவின் மேல் சாய்ந்து கொண்டு இந்திரா மூச்சு வாங்கிக் கொண்டிருந்தாள். பக்கத்திலேயே பக்கத்து வீட்டு பாட்டி.

“சௌக்கியமா பாட்டி” என்ற ஒற்றை விசாரிப்புடன் அவன் உள்புகுந்தான். கைலிக்கு மாறிக்கொண்டு, அவன் வெளியே வந்த போது, அவர்கள் அதே இடத்தில் நின்றிருந்தார்கள்.

சன்னல் கதவை அவன் திறக்க முற்பட்டபோது இந்திரா கத்தினாள்”

தொறக்காதீங்க“

அவன் ஆச்சர்யமாக அவளைப் பார்த்தான். கடுங்குளிர்காலங்களில் கூட வெளிக்காற்று வேண்டும் அவளுக்கு. அவளா இப்படி..?

முகமே கேள்விக்குறியாக, அவன் அவர்களைப் பார்த்தபோது, பாட்டிதான் சொன்னாள்:

‘வீட்டுக்குள்ள வௌவால் வந்திருச்சுங்க. அதான் இந்து பயப்புடுது.’

‘வௌவாலா? அதுங்க கோயில்ல தான இருக்கும். இங்க எப்படி?’

இந்திரா சொன்னாள்:

“மூணு மாசமா ஒரு பேச்சு இல்ல. சிரிப்பு இல்ல. சத்தம் இல்ல. அதான் இதுவும் கோயில் போலிருக்குன்னு வௌவால் வந்திருச்சி போலிருக்கு பாட்டி”

மூன்று மாதத்திற்கு பிறகு, சத்தம் போட்டு சிரித்தான் பாஸ்கர்.

– ஏப்ரல் 2015

– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *