முள்ளை முள்ளால் எடு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 9, 2024
பார்வையிட்டோர்: 2,596 
 

மனதுக்கு பிடித்துப்போனதாலும், வரதட்சணை பற்றி பேசாததாலும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தாள் மகி. தன் முதல் பேச்சிலேயே அவளை பேச்சிழக்கச் செய்திருந்தான் மாப்பிள்ளை சிகி.

“பொண்ணு ரொம்பப்பேசுவா. அதப்பொறுத்துக்கிறதுன்னா பொண்ணுப்பார்க்க வாங்க. இல்லேன்னா வேண்டாம்” என பெண்ணின் தந்தையே உறுதியாகக்கூறியிருந்ததை ஏற்று, ஊரிலுள்ள ஒரு கோவிலில் பெண் பார்க்கும் படலம் நடந்தது.

“உனக்கு என்னப்பிடிச்சிருக்கா?” தனியாக பேச பெற்றோர் சொன்னதால் பேச முற்பட்டு முந்திக்கொண்டு சிகி கேட்டான்.

“ம்” 

“நிறையா பேசுவீங்கன்னு உங்க அப்பா சொன்னாரு. இப்ப என்னடான்னா ம்.‌‌.. ம்… னு ரொம்பவுமே சிக்கனமா பேசறீங்க. ஆனா பார்க்கிறதுக்கு சிக்குனு இருக்கீங்க” என்றவுடன் ஓர் ஆணிடம் வாழ்வில் முதலாக வெட்கப்பட்டதில் மகியின் கன்னம் சிவந்து போயிருந்தது.

‘ரெண்டு பேருக்கும் வசியப்பொருத்தம் நல்லா இருக்குன்னு சோதிடர் சொன்னதாக அப்பா சொன்னது இது தானோ….?’ என நினைத்துக்கொண்டாள்.

“இத பாருங்க உங்க பொண்ணுக்கு ரெண்டாமிடமான வாக்கு ஸ்தானத்துல செவ்வாய் இருக்கறதுனால குடும்பத்துல புருசனோட சண்டை போட்டிட்டே இருப்பா. வசதியான மாப்பிள்ளை பார்க்கிறத விட வசியமான மாப்பிள்ளை பார்க்கிறது தான் நல்லது. வசதிக்கு அடங்காத உங்க பொண்ணு வசியத்துக்கு அடங்கிப்போவா. கிரகக்கோளாரால பிரச்சினை வந்தாலும் கணவனைப்பிரியாம புத்திசாலித்தனமா சரி பண்ணி வாழ்ந்து போடுவா” என சோதிடர் சொன்னது சரி தான் என மகியின் தந்தையும் தன் பெண் தலை குனிந்து மாப்பிள்ளை முன் எதுவும் பேசாமல் நிற்பதைப்பார்த்து உறுதி செய்து கொண்டார்.

இதுவரை யாரிடமும் இப்படி சரணாகதியானதில்லை. படையப்பா நீலாம்பரி எனும் பட்டப்பெயரைக்கூட கல்லூரியில் தோழிகள் வைத்திருந்தனர். ‘பாயும் புலி பசுமாடு ஆனதெப்படி…?’என உறவுகளும் ஆச்சர்யப்பட்டனர்.

திருமணம் முடிந்து அனைத்தும் நல்லபடியாகவே நடந்தது. பெண் குழந்தைக்குத் தாயான பின் கணவன் சிகியின் சுய ரூபம் வெளிப்பட்டது. ‘என்னதான் வசியப்பொருத்தம் இருந்து திருமணம் செய்தாலும் பேராசை ஒருவர் மனதுக்குள் புகுந்து கொண்டால் பொருத்தப்பலனை மண்ணில் புதைந்து போகச்செய்து இணையை கண்ணில் கண்ணீர் சிந்தும் நிலைக்குத்தள்ளி விடுகின்றனர். பெண் பார்க்கும் போது திருமணத்துக்கு சம்மதிக்க வேண்டும் என்பதால் நீயே சொத்து, எனக்கெதுக்கு உங்கப்பன் சொத்து? என நடித்துப்பேசுகின்றனர். ஒரு குழந்தைக்குப்பின் அடித்தும் பேசுகின்றனர்’ என கவலை கொண்டாள்.

 ‘சிக்குனு இருக்கீங்க’ எனப்பேசிய அதே வாயிலிருந்து ‘சில்லறரையா இருக்கறயே…?’ என கணவனிடமிருந்து வெளிப்பட்ட மட்டமான வார்த்தை அவளை நிலை குலையச்செய்து அவனிடமிருந்து எட்டப்போய் நிற்க வைத்தது. மரியாதை கிடைக்காத இடத்தில் ஜடமாக இருப்பதை விட பிறந்த வீட்டிற்கே நிரந்தரமாகப்போய் விடலாமென நினைத்தாள். 

‘உங்கொப்பன் ரெண்டு கோடிக்கு சொத்து வெச்சிருக்காப்ல. அதுல பாதிய வித்துக்கொடுத்தா தேஞ்சா போயிருவாப்ல? அத வெச்சு சொந்த தொழில் தொடங்கி சம்பாதிச்சு சிறப்பா வாழ்ந்திருவோம்ல’ என வேலைக்கும் போகாமல் வீட்டிலேயே இருந்து கொண்டு கணவன் பேசியது வருத்தமும், வேதனையுமாக இருந்தது.

“பகல்ல பாதகமாப்பேசி மனசக்கெடுத்திட்டு ராத்திரில சாதகமாகப்பேசுனா மட்டும் எணங்கிப்போறதுக்கு பொம்பள என்ன மெசினா? மனசு செரியில்லாத பொண்ணு மரக்கட்டைக்கு சமம்னு தெரியாமையா நம்ம பெரியவங்க சொன்னாங்க? உன்ற பண வெறிய தூக்கி குப்பைல போட்டுட்டு குணமா நாலு வார்த்த பேசுனா எல்லாஞ்செரியாப்போகும்” பக்கத்து வீட்டுப்பரிமளா மகிக்கு ஆதரவாகப்பேசியது சற்று ஆறுதலாக இருந்தது.

‘நாம் கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டிற்குப்போனால் தங்கைக்கு அப்பாவால் திருமணம் செய்து வைக்க முடியாது. அக்காவே வாழா வெட்டியா இருக்கறான்னு மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மொத்தக்குடும்பத்தையும் மோசமா நெனைப்பாங்க’ முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என சிந்தித்தவள், பிரிவு எனும் வார்த்தையை மனதிலும் நினைப்பதைத்தவிர்த்து பிரியாமல் கணவனை சரி செய்யும் வழியைப்பற்றி யோசித்தாள்.

அடுத்த நாள் காலை வீட்டு வாசலில் ஸ்கூட்டி வந்து நின்றது. சிகியின் தங்கை ரம்யா மட்டும் தலை விரி கோலமாக வந்தது மொத்தக்குடும்பத்துக்கே அதிர்ச்சியாக இருந்தது.

“என்னாச்சு? உன் புருசன் கூட வரலையா? கல்யாணமாயி நாலு வருசத்துல ஒரு நாள் கூட தனியா வராதவ இப்ப காரங்காத்தால தலைய விரிச்சுப்போட்டுட்டு வந்து நிக்கறியே….?” என ரம்யாவின் தாய் விசாலி கண்ணீர் மல்கக்கேட்டாள்.

யாரிடமும் பேசாமல் படுக்கையறைக்குச்சென்று படுத்துக்கொண்ட ரம்யாவிற்கு மகி காபி போட்டுக்கொடுத்தாள். வாங்கிக்குடித்தவள் “அண்ணி நீங்க தான் என்னைக்காப்பாத்தோணும்” எனக்கூறி காலில் விழுந்தவளைக்கைகளில் பிடித்து ஒரு தாயைப்போலத்தாங்கித்தூக்கி ஆதரவாக அணைத்துக்கொண்டாள். 

“என்ன சொல்லனமோ சொல்லு. என்னால முடிஞ்சதப்பண்ணறேன்” என கூறியபடி பெட்டில் அமர்ந்தாள்.

“ஒரு மாசமா அவரு வேலைக்கு போக மாட்டேன்னு சொல்லறாரு. சொந்தத்தொழில் செய்ய பணம் ஒரு கோடி வரதட்சணையா கேட்கறாரு” சொன்னவள் கண்ணீர் சிந்தினாள்.

அங்கே நின்றிருந்த கணவனை ஏறெடுத்துப்பார்த்த மகி ” ஏங்க உங்க தங்கச்சி சொல்லறது காதுல விழுந்துச்சா? அவ சந்தோசமில்லாம இருக்கற போது நாம மட்டும் சந்தோசமா இருந்தா நல்லாவா இருக்கும்? இந்த வீட்டை வித்து கொடுத்திடலாங்க” என மனைவி கூறியதைக்கேட்ட சிகி, “வாயை மூடு. இருக்கறது ஒரு வீடு. அதையும் வித்துட்டு வீதில போய் படுத்துக்கலாங்கிறியா? சொந்தத்தொழில் செய்யனம்னு ஆசை இருந்தா அவரோட சொந்த வீட்ட வித்து செய்யட்டும். அடுத்தவங்க வீட்டை வித்து தொழில் செய்யறதுக்கு , விற்கச்சொல்லறதுக்கு அவருக்கு உரிமை கிடையாது” எனக்கூறிய போது ரம்யாவின் கணவன் ரவி கைதட்டிய படி வீட்டிற்குள் நுழைந்த போது இரண்டாவது முறையாக அதிர்ச்சியடைந்தான் சிகி.

“சூப்பர் மச்சான்…. உங்களோட மாமனார் வீட்டை வித்து தொழில் பண்ணற உரிமை உங்களுக்கு இருக்கிறப்ப, என்னோட மாமனார் வீட்டை வித்து தொழில் பண்ணற உரிமை எனக்கு இருக்காதா? உங்களுக்கொரு நியாயம், எனக்கொரு நியாயமா? எங்கே உங்க மனைவியோட முகத்த நேருக்கு நேரா பார்த்துச்சொல்லுங்க. நீங்க வரதட்சணை கேட்காத உத்தமர்னு ” என தங்கையின் கணவர் ரவி தன்னைப்பார்த்துக்கேட்ட அடுத்த நொடி மனைவி மகியை நேராகப்பார்க்க முடியாமல் தலை குனிந்தான் சிகி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *