கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 6, 2024
பார்வையிட்டோர்: 2,890 
 

(2002ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-13

அத்தியாயம்-11

கோபி இடிந்துபோய்விட்டான். 

அமுதா, அஸ்வினிக்கு ஆறுதல் சொன்னாள். 

தயாளனின் மரணம் காரணமாக அஸ்வினி மருத்துவப் பரிசோதனைக்குப் போகாமல் இருந்தாள். 

இருவரும் கொஞ்சம் கொஞ்சமாக தேறிவர ஒரு மாதமாயிற்று. 

கோபிதான் நினைவுபடுத்தினான். “இன்னைக்கு டாக்டரிடம் போய் வரலாம் அஸ்வினி!” 

“மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருக்குங்க. நம்ம குடும்ப வாரிசைப் பார்க்காமலேயே மாமா போயிட்டாரே…”

பெருமூச்சுவிட்டான், கோபி. 

“விதி கொடியது. வேறென்ன சொல்ல? அதைப்பற்றிப் பேசி இனி என்ன ஆகப்போகிறது? சாயங்காலம் தயாரா இரு- நான் வந்திடுறேன்!” 

“ஒரு மாசமா ஆபீஸ் பக்கமே போகலை. ஏகப்பட்ட வேலை இருக்கும். நீங்க அதைக் கவனியுங்க. கிளினிக் இதோ பக்கத்திலேதானே? நானே போயிட்டு வந்திடுறேன்”

“இல்லை… நான் என்ன சொல்றேன்னா…” 

“விடுங்க… உடம்பைப் போட்டு அலட்டிக்காதீங்க. வீட்டுல கார் இருக்கு. டிரைவர் இருக்கார். அப்புறமென்ன?”

சற்றே யோசித்த கோபி, பிறகு “சரி” என்றான். 

மாலையில் அஸ்வினி, மருத்துவர் பங்கஜத்தைச் சென்று பார்த்தாள். 

தயாளனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்த பங்கஜம், பரிசோதனைக்கு இரத்தம் முதலானவற்றை எடுத்துக்கொண்டு மறுநாள் வரச்சொல்லி அஸ்வினியை அனுப்பி வைத்தார்.

வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது தோழிக்காக இனிப்புடன் காத்திருந்தாள், அமுதா. 

“எடுத்துக்க அஸ்வினி!”

“எதுக்கு இனிப்பு?” 

“முதல்ல சாப்பிடு. சொல்றேன்!” 

எடுத்து சாப்பிட்டாள். 

“இப்ப சொல்லு… என்ன விசயம்?” 

“இந்த விசயத்திலும் நமக்குள்ளே எவ்வளவு ஒற்றுமை?”

“எந்த விசயத்தில்?” 

“நானும் அம்மாவாகி இருக்கிறேன் அஸ்வினி!” முகம் பளபளக்க, நாணம் தந்த செம்மை கன்னக்கதுப்பில் கோலம் போட… அமுதா சொன்னாள், 

பூரித்துப்போனாள், அஸ்வினி, 

மாமனாரின் மறைவால் நிலைபெற்றிருந்த வேதனை முழுக்க அகன்றது போலிருக்க, தோழியை இறுக அணைத்தாள்… 

“எத்தனை மகிழ்ச்சியான செய்தி? உங்க அம்மா, அப்பாவுக்கு சொல்லிட்டியா?” 

“இல்லை. இன்னும் பரத்துக்கே தெரியாது. உனக்குத்தான் முதல்ல சொல்லணும்னு தோணுச்சு.” 

“அ…மு…தா…” நெகிழ்ச்சியில் கண்ணீர் துளிர்க்க, முன்னிலும் இறுக்கமாய் அவளை அணைத்துக்கொண்டாள்.


‘உஷ்…’ என்று உதட்டில் விரல் வைத்தபடி சுவற்றில் அமர்ந்திருந்த ‘கொழு கொழு’ குழந்தை படத்தை ஆசையுடன் பார்த்தாள், அஸ்வினி. 

அவளுடைய பரிசோதனை முடிவுகளை எடுத்து வந்த பங்கஜம் புன்சிரிப்புடன் அவள் எதிரில் அமர்ந்தாள். “கர்ப்பம் உறுதியாயிடுச்சு, அஸ்வினி. வாழ்த்துகள்”.

“நன்றி டாக்டர்.” 

“ஆனா, உன் உடம்புதான் கொஞ்சம் பலவீனமா இருக்கு. கருப்பையும் அப்படிதான் இருக்கு. நான் எழுதித் தர்ற மருந்தையெல்லாம் வேளை தவறாம சாப்பிடு.” 

“என்ன சொல்றீங்க டாக்டர்? குழந்தைக்கு…?” 

“குழந்தைக்கு எந்தப் பிரச்சினையும் வராது. ஆனா, இதே நிலை நீடிச்சா… ஒரு குழந்தைக்கு மேல் உன்னால் பெத்துக்க முடியாது. பயப்படாதே… நான் தர்ற மருந்தைச் சாப்பிடு… போதும்! ஆமா… உனக்குக் கல்யாணமாகி எத்தனை மாசமாகுது?” 

“ரெண்டு மாசம் டாக்டர்!” 

“ரெண்டு மாசமா?” நெற்றியில் கோடுகள் விழ அவளைப் பார்த்தாள், பங்கஜம். 

“காதல் கல்யாணமா?” 

“இல்லை… வீட்டுல பார்த்து முடிவு செய்ததுதான். ஏன் கேக்கிறீங்க டாக்டர்?” 

“அப்ப… கல்யாணத்துக்கு முன்னாடியே உன் கணவரோடு வெளியே போயிருக்கே! என் கணிப்பு சரியா?” 

“ஆமா டாக்டர்!” 

“அப்ப நான் நினைச்சது சரிதான்”. 

“என்னாச்சு டாக்டர்?” புரியாமல் விழித்தாள். 

“கல்யாணத்துக்கு முன்னாடியே அவசரப்பட்டுட்டீங்க” என்றாள், குறும்புடன். 

“…”

“நீ இப்ப மூணு மாசம் கர்ப்பமா இருக்கே.” 

“டா…டா….க்..ட..ர்…” அஸ்வினி அதை எதிர் பார்க்கவில்லை. 

பெரிதும் அதிர்ந்தாள். தலைவலி மண்டையைப் பிளந்தது. 

தன் மீது தனக்கே வெறுப்பாய் இருந்தது. 

‘எல்லாவற்றையும் மறந்து கோபியுடன் நிம்மதியாய் வாழ்ந்துகொண்டிருக்கும்’ இப்படியொரு வெடிகுண்டு என் வாழ்க்கையில் வந்து விழணுமா? 

‘பரத்தின் குழந்தை என் வயிற்றில்! சே… எனக்கு ஏனிந்த தண்டனை?’

‘கோபிக்குத் தெரிந்தால் என்னாகும்? இல்ல…. தெரியக்கூடாது. என் அன்பான கணவர் எனக்கு வேண்டும். அவருடன் நூறு வயசுவரை நான் வாழ்ந்தாக வேண்டும். நான் சுமந்துகொண்டிருப்பது களங்கம். இது எனக்கு வேண்டாம்.’

அஸ்வினி அவ்வளவு மன உளைச்சலிலும் புத்திசாலித்தனமாக ஒரு காரியத்தைச் செய்துவிட்டே வந்தாள். 

“டாக்டர்… நானும் என் கணவரும் திருமணத்திற்கு முன்பே அவசரப்பட்டுட்டோம். இது யாருக்கும் தெரியாது. ஆனால், அது இப்படி ஆகும்னு நான் நினைக்கலை. அவர்கிட்டே இதைப்பற்றிக் கேட்காதீங்க, சங்கடப்படுவார். தவிர, யார் கேட்டாலும் இப்ப நான் ரெண்டு மாச கர்ப்பம்னு சொல்லுங்க டாக்டர்!” 

“இதிலே சங்கடப்பட என்ன இருக்கு?”

“பிளீஸ் டாக்டர்… அவர், தன்னைப் பற்றி யாரும் குறைச்சு மதிப்பிடக்கூடாதுங்கறதுல கவனமா இருக்கிறவர். அதான்… கேட்டுடாதீங்க” என்றாள். தயவாய். 

“சரி.. அதுக்கேன் பதற்றப்படுறே?” என்று சமாதானமாய் அனுப்பி வைத்தான், பங்கஜம். 

“என்ன அஸ்வினி? டாக்டர் என்ன சொன்னார்?” வரும்போதே கேட்டுக்கொண்டே வந்தான், கோபி. 

“…”

“அஸ்வினி…. உன்னைத்தான்!” சுவரையே வெறித்துக் கொண்டிருந்தவளைத் தொட்டு அசைத்தான். 

“அ… எப்ப வந்தீங்க?” 

“போச்சுடா! உனக்கு என்னாச்சு? பிறக்கப்போகிற குழந்தையைப் பற்றி கனவு காணத் தொடங்கிட்டியா! எனக்கும் குழந்தையை எப்படா பார்ப்போம்னு இருக்கு. டாக்டர் என்ன சொன்னாங்க?” 

“எல்லாமே நல்லா இருக்குன்னு சொல்லிட்டார்!” 

“நல்லது. இனி, நீ மாடிப்படியிலிருந்து வேகமா இறங்கி ஓடிவரக்கூடாது. நல்லா ஓய்வு எடுக்கணும்… சரியா?”

“ச… சரிங்க!” எச்சிலை விழுங்கினாள், அஸ்வினி.


சுப்ரியா மருத்துவமனை. 

ஆட்டோவிலிருந்து அஸ்வினி இறங்கினாள், பொங்கிய வியர்வையைக்கைக்குட்டையால் துடைத்தான். அக்கம்பக்கம் பார்த்தபடி விரைந்து நடந்தாள். 

முன்னரே அனுமதி வாங்கியிருந்ததால், மருத்துவர் சுப்ரியாவை உடனே சந்திக்க முடிந்தது. சுப்ரியா, முப்பதைத் தாண்டாதவர், அஸ்வினியை ஆராய்ந்தார். 

“பொதுவா இந்த மாதிரி விசயங்களுக்காக, கல்லூரியில் படிக்கிற பெண்களும், நடிகைகளும்தான் வருவாங்க. உங்களைப் பார்த்தா நல்ல குடும்பத்துப் பொண்ணா தெரியுது. கல்யாணமானவங்களா இருக்கிங்க. ஏன் கருக்கலைப்பு பண்ணணும்னு முடிவெடுத்தீங்க?” 

“அது… வந்து.. எங்களுக்கு கல்யாணமாகி முணு மாசம் தான் ஆகுது. நாங்க தேனிலவுக்கு போகலாம்னு இருக்கோம். ரெண்டு ஆண்டுக்கு குழந்தை வேணாம்னு நினைச்சிருந்தோம். பாதுகாப்பாதாள் இருந்தோம். அப்படியும் மீறி…” 

“சரி… அதுக்காக, கடவுள் கொடுத்ததை ஏன் அழிக்கப் பார்க்கிறீங்க? இப்படியொரு பாக்கியம் கிடைக்காம எத்தனை பெண்கள் வாழாவெட்டியா பிறந்த வீட்டுக்கே அனுப்பப் படுறாங்க தெரியுமா?”

“டாக்டர் பிளீஸ்” மறுபடியும் கெஞ்சினாள். 

சுப்ரியா அவளைப் பார்த்து உதட்டைப் பிதுக்கினார். “இல்ல… குழந்தை நல்லா இருக்கு,. கலைக்க முடியாது. மீறி பண்ணினா உங்க உயிருக்குக்கூட ஆபத்தா முடியும்!”

“அப்ப… அப்ப…” 

“வேற வழியே இல்லே!”

சற்று நேரம் கழித்து… கண்களைத் துடைத்தபடி தலை கவிழ்ந்து வேகமாய் வெளியேறியவளை, வரவேற்பில் நின்றிருந்த பரத் பார்த்துவிட்டான். 


பரத்திற்கு உறக்கம் வரவில்லை. 

சுப்ரியா, அவனுடைய கல்லூரித் தோழி. அவ்வப்போது சந்தித்துக்கொள்வதுண்டு. இன்றும் அவளைப் பார்க்கப் போன இடத்தில் எதேச்சையாக அஸ்வினியைப் பார்த்து விட்டான். 

சுப்ரியாவிடம் அவள் தனக்குத் தெரிந்த பெண் என்று கூறினான். அவளைப் பற்றிய தகவலைப் பெற பெரிய சிரமம் ஏற்படவில்லை. 

‘மூன்று மாத கரு என்றால்? அந்தக் குழந்தை… என் குழந்தையா? கடவுளே! அதனால்தான் அதைக் கலைக்க வந்திருக்கிறாள். பாவம், அஸ்வினி! என்னால், என் அவசரத்தால் அவள் எவ்வளவு சங்கடங்களை அனுபவிக்கிறாள்?’ 

‘கடவுளே… அவளுக்கு வாழ்க்கையில் நிம்மதியைக் கொடு! கோபியுடன் அவள் என்றென்றும் மனநிறைவாக வாழ வேண்டும். அதற்கு பிராயச்சித்தமாக என் உயிரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்’ – மனப்பூர்வமாய் இறைஞ்சினான். 

அத்தியாயம்-12

அஸ்வினிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

கோபி மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துபோனான்.

பெயர் சூட்டும் விழாவிற்கு ஊரைக் கூட்டி விருந்து வைத்தான். 

குழந்தையைப் பரத் பாசத்துடன் தூக்கி அரவணைத்துக் கொண்டான். கழுத்தில் தங்கச் சங்கிலி போட்டான். 

குழந்தைக்கு ‘வத்சன்’ என்று பெயரிட்டனர். 

“ஒன்பது மாசத்திலேயே பிறந்தாலும் என் பையனைப் – பாரு… சும்மா கொழுக்… மொழுக்குன்னு இல்லே?” என்று கொஞ்சுவான், கோபி. 

அமைதியாகப் புன்னகைத்த அஸ்வினியை ஆச்சரியமாகப் பார்த்தான். 

“என்ன அப்படிப் பார்க்கிறீங்க?” 

“உன்கிட்டேருந்து நான் எதிர்பார்த்த பதில் வரலே!”

“என்ன பதில்?” 

“பொதுவா நான் பேசினதுக்கு… ‘ஏன் குழந்தை மேலே கண்ணு வைக்கிறீங்கன்னு’ யாராயிருந்தாலும் சொல்லி இருப்பாங்க”. 

“இல்ல… நான் கவனிக்கலே!” 

“எங்கப்பா இறந்ததிலேருந்து உன் முகத்துல சிரிப்பு இல்லை. கவலைப்படாதே அஸ்வினி. இதோ எங்கப்பாவே வந்து பிறந்திட்டார். நான் அப்படித்தான் நினைக்கிறேன். குழந்தையைப் பத்திரமா கவனிச்சுக்கணும்” என்று புறப்பட்டான். 

இந்தக் குழந்தையை கர்ப்பத்தில் வேண்டாவெறுப்பாய் சுமந்ததென்னவோ உண்மை. பிறந்தபின்பும், இது பரத்தோட குழந்தை என்கிற எண்ணமே ரம்பமாய் அறுத்தது. 

ஆனால் நாளாக, ஆக, அக்குழந்தை அவள் முகம் பார்த்து சிரிக்கும் சிரிப்பில் மனசு இளகத் தொடங்கி இருந்தாள். 

ஆனால், பரத் அடிக்கடி அவள் வீட்டிற்கு வந்து குழந்தையை கொஞ்சிவிட்டு செல்வதுதான் உறுத்தியது. 

‘ஒருவேளை அவனுக்குத் தெரிந்திருக்குமோ?’ 

‘இல்லை… அதுக்கு வாய்ப்பே இல்லை’ – தன்னைத் தானே சமாதானப்படுத்திக்கொண்டாள். 

சரியாய் ஒரு மாதம் கழித்து அமுதாவிற்கு பெண் குழந்தை பிறந்தது 

என்றபோதிலும் பரத், வத்சனைக் கொஞ்சிவிட்டுச் செல்வதை வழக்கப்படுத்தினான். இதனால் கோபிக்கு அவன் மீது இன்னும் பிடிப்பு அதிகமாகி நட்பு இறுகியது. 

அஸ்வினிதான் தத்தளித்தாள். 


காலங்கள் உருண்டோடின.

குழந்தைக்கு நான்கு வயது. 

பரத்தும், அமுதாவும் குழந்தை பிரியாவுடன் கோபியின் வீட்டிற்கு வந்திருந்தனர். 

குழந்தைகள் இருவரும் விளையாடிக்கொண்டிருந்தனர். வத்சன், சோபாவிலிருந்து பிரியாவைத் தள்ளிவிட, கீழே விழுந்த பிரியா குரலெடுத்து அழுதாள். 

கோபிக்கு கோபம் வந்துவிட்டது. 

வத்சனை இழுத்து வைத்து நாலு அடி வைக்க… அவன் வீரிட்டு அழத் தொடங்கினான். 

“உங்கம்மா உனக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்தது வச்சிருக்கா. கை நீளமாயிடுச்சு” என்று மறுபடி அடிக்க முற்பட, ஆவேசத்துடன் வத்சனைத் தன்னருகே இழுத்துக் கொண்டு கோபியை முறைத்தான், பரத். 

“என்ன பண்ணுறீங்கன்னு தெரிஞ்சுதான் பண்ணுறீங்களா? பச்சைக் குழந்தையைப் போட்டு இப்படி அடிக்கிறீங்க?” 

அவன் முகத்தில் தெரிந்த கோபம், ஆவேசம், பரிதவிப்பு எல்லாம் கோபியை ஆச்சரியப்படுத்தின. 

“பரத்!” என்றான், வியப்பாய். 

சூழ்நிலையை உணர்ந்த பரத், சங்கடத்துடன் அவன் கையைத் தட்டிக் கொடுத்தான். 

“இல்ல கோபி… எனக்குக் குழந்தைகள்னா உயிர். அடிச்சா பொறுத்துக்கமாட்டேன், அதான்…”. 

“நான் அப்படி அடிச்சது தப்புதான்”. 

அஸ்வினிக்கும் அவன் செய்கை, குழப்பத்தை விலைவித்தது. 

அமுதா சிரித்தாள். 

“பரத்துக்கு பிரியாமேல் இருக்கிற பாசத்தை விட வத்சன் மேலதான் பாசம் அதிகம். என்னா, வருங்கால மருமகன் இல்லையா?” 

அஸ்வினியும், பரத்தும் ஒருசேர அதிர்ந்தார்கள்.

“என்ன உளறுறே?” என்றாள். அஸ்வினி. 

“ஏன் அஸ்வினி? அப்படிப் பேசினது தப்பா?” 

“தப்புதான்! நீயும் நானும் நட்பா, ஒரு தாய் வயிற்றில் பிறந்த குழந்தைங்க மாதிரியில்லே பழகினோம்? அப்படின்னா என் குழந்தையும், உன் குழந்தையும் அண்ணன்- தங்கை இல்லையா? எ.. என்ன நான் சொல்றது?” 

“ஓ. நீ அப்படி வாறியா? ஆமா… நான்தான் தப்பாப் பேசிட்டேன்” என்றாள், அமுதா.

அஸ்வினிக்கும், பரத்திற்கும் ஒரு பெரிய பிரச்சினை தீர்ந்த நிம்மதி. 


கோபியின் செல்போன் சிணுங்கியது. 

“அலோ…” 

“அலோ… நான் வெங்கட். எப்படியிருக்கே கோபி?”

“டாக்டர் வெங்கட்டா?” 

“ஆமா.” 

“எப்படா வந்தே கலிபோர்னியாவிலேருந்து?”

“போன வாரம்.”

“ஒண்ணுகூட விட்டுவைக்காம எல்லாத்தையும் படிச்சு கரைச்சு குடிச்சிடணும்னு முடிவு பண்ணிட்டியா?” 

“ஆமா… ஏழைகளுக்கும் உதவுற மாதிரி மிகக் குறைந்த செலவில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யறதுக்கும் படிச்சு முடிச்சிட்டேன்”. 

“கலிபோர்னியாவுக்குப் போய் நாலு ஆண்டு இருக்குமா?”

“மேலேயே இருக்கும்!” 

“வரும்போது உங்கப்பா அம்மாவுக்காக மேல்நாட்டு மருமகள் யாரையாவது அழைச்சிட்டு வந்தியா?” 

*உதைப்படுவே! கோபி, நம்மூர் பொண்ணுங்க ஒரு தெய்வீக அழகு. என்னதான் சொல்லு… கண்ணை உறுத்துற பளிச் நிறம், சீக்கிரமே அலுத்துப்போயிடும். இப்ப எனக்கு இங்கே பொண்ணு தேடிக்கிட்டிருக்காங்க.” 

“உன் மனசுப்படி நல்ல மனைவி அமையட்டும்”. 

“உனக்கு கல்யாணமாயிடுச்சில்லே? என்னாலதான் கலந்துக்க முடியாமப் போயிடுச்சு. எப்படி.. உன் வாழ்க்கை, பிரச்சினையில்லாமல் போகுதா?” 

“எல்லாத்தையும் போன்லேயே சொல்லிடனுமா? நேரில் பேசிக்கலாம். வீட்டுக்கு வாயேன்”.

“வீட்டுக்கு இன்னொரு நாளைக்கு வாறேன். நாம வெளியே சந்திப்போம்! நிறைய பேசணும்!” 

“எப்ப சந்திக்கலாம்?” 

“இப்பவே… இன்னைக்கே” என்றவன், ஓட்டல் பெயரைச் சொன்னான். 

“சரி! வந்திடுறேன்.” 


வெங்கட்டும், கோபியும், மதுவை மெல்ல உறிஞ்சியபடி பேசிக்கொண்டிருந்தனர். 

“உங்கப்பா இறந்துபோன விசயம் இப்ப… நீ சொல்லிதான் தெரியும். உன்மேல உயிரையே வச்சிட்டிருந்தார். உனக்கு விபத்து ஏற்பட்டப்ப எப்படி துடிச்சிப்போயிட்டார் தெரியுமா?” 

வெங்கட், அப்பாவைப் பற்றி பேசவும், கோபிக்கு பழைய நினைவுகளில் இமைகள் ஈரமாயின. 

“கடைசியில் என் குழந்தையோட முகத்தைக்கூட பார்க்காமப் போயிட்டார்!” 

“குழந்தையா? தத்து எடுத்துக்கிட்டியா என்ன? பரவாயில்லையே… நல்ல காரியமெல்லாம் பண்ணி இருக்கியே…” 

“தத்தா? நான் ஏன் தத்தெடுக்கணும்?” 

“பின்னே… உன் குழந்தையா?” 

“என்னடா பைத்தியக்காரன் மாதிரி பேசுறே? என் குழந்தைதான்!” 

“அதெப்படி? வாய்ப்பே இல்லையே!” தயாளனுக்கு பண்ணிக் கொடுத்த சத்தியத்தைப் போதையில் பறக்க விட்டான். 

“ஏய்… குடிச்சிட்டு உளறுறியா?” கோபிக்கு கோபம் வெளிப்புட்டது. 

“டேய்… இதைவிட சூப்பர் சரக்கெல்லாம் சாப்பிட்டவன். நான் ஏன் உளறணும்?”

“அப்ப… நீ பேசுறதுக்கு என்ன அர்த்தம்?”

“உன்னால் இந்தப் பிறவியில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக முடியாதுங்கிற அர்த்தம்!” 

“ராஸ்கல்…” பீரிட்டு வந்த கோபத்தில் பளாரென அறைந்தான். 

வெங்கட்டுக்கு ஏறியிருந்த போதையெல்லாம் இறங்கியது.

சூழ்நிலை புரிந்தது. 

அவசரப்பட்டு உண்மையை உளறிவிட்ட தன்னை நொந்துகொண்டான். 

“மன்னிச்சிடு கோபி… வா… வீட்டுக்குப் போகலாம்!”

“இல்லை… நீ எதையோ மறைக்கிறே… ஏன் அப்படிப் பேசினே? சொல்லு!” 

வெங்கட் சற்று நேரம் அவனையே பார்த்தான். 

‘இனி மறைத்துப் பயனில்லை. மருத்துவரிடம் போய் சோதித்துக்கொண்டால் உண்மை தெரிந்துவிடும். அதைவிட நாமே இதமாய் எடுத்துச் சொல்வது நல்லது!’ பெருமூச்சுடன் உண்மையைச் சொல்லத் தொடங்கினான். 

“மனசை திடப்படுத்திக்க கோபி! விபத்தில் சிக்கிய நீ, அப்பா ஆகிற ஆற்றலை இழந்திட்டே… உன்னால ஒரு பெண்ணுக்கு சுகத்தைத் தரமுடியுமே தவிர, குழந்தையைத் தரமுடியாது..” என்று சொன்னதோடு, தயாளனிடம்
இதுபற்றி சத்தியம் செய்தது வரை எல்லாவற்றையும் கூறினான்.

கோபி வெலவெலத்துப் போனான். 

“கல்யாணமாகி குழந்தை பிறக்காது. அதனால நீ எப்படியும மருத்துவ பரிசோதனையில் உண்மையைத் தெரிஞ்சிக்குவேன்னு நினைச்சேன். இப்ப உண்மையைப் போட்டு உடைச்சிட்டேன்…”

“…” 

“ஆனா, இப்பவும் சொல்றேன். எந்த மருத்துவத்தாலும் உன் குறையை நிவர்த்தி பண்ண முடியாது. ஆனா, குழந்தை பிறந்தது எப்படி? அதுதான் எனக்குப் புரியலை…. ஒரு விசயத்திலே மட்டும் நம்பிக்கை வை! நடக்கிறதெல்லாம் நன்மைக்கே… அவசரப்பட்டு முடிவெடுத்து யாரையும் தண்டிச்சிடாதே! நான் என்ன சொல்ல வர்றேங்கிறது உனக்குப் புரியும்னு நினைக்கிறேன்”. 

கோபி… உள்ளுக்குள் வெடித்துச் சிதறிக்கொண்டிருந்தான்.


பெங்களூரிலுள்ள ஓட்டல். 

விட்டத்தையே வெறித்துப் பார்த்தபடி படுத்திருந்தான், கோபி. 

தொழில் விசயமாக ஐதராபாத் போகிறேன் என்று பொய் சொல்லிவிட்டு பெங்களூர் வந்து மூன்று நாளாகி விட்டது. 

மனசு வலிக்க… வலிக்க… அதைக் கட்டுப்படுத்த நிறைய குடித்தான். 

யோசித்துப் பார்த்ததில்… ஒவ்வொன்றாய்ப் புரியத் தொடங்கியது. 

நான்கைந்து முறை… நள்ளிரவில் அஸ்வினி கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தது… கேட்டதற்கு மாமாவை நினைத்து அழுகிறேன் என்றது, தொடக்கத்தில் தன்னுடன் ஒட்டாமல் வாழ்ந்தது நினைவிற்கு வர, மருத்துவர் பங்கஜத்திற்கு போன் பண்ணி பேச்சுக் கொடுத்தான். 

குழந்தை பத்து மாதத்தில் பிறந்ததை அறிந்துகொண்டான். 

ஆக அவள் யாரையோ காதலித்து அவனிடம் தன்னை இழந்திருக்கிறாள். 

‘அஸ்வினி… நீயா இப்படி? என்னை ஏமாற்ற எப்படி மனசு வந்தது. உனக்கு? எனக்கு இப்படியொரு குறை இருப்பது தெரிந்திருந்தால்… உன் அயோக்கியத்தனம் வெளியில் தெரிந்திருக்கும். அதனால்தான் குழந்தையைச் சுமந்திருந்த பத்து மாதமும் எதையோ இழந்தது போல் இருந்தாயா? சே… என் வாழ்க்கையைப் பாழாக்கிவிட்டாயே! உன்மேல் எவ்வளவு அன்பு வைத்திருந்தேன். ஏமாற்றி விட்டாயே! அதனால்தான் நீ கர்ப்பமாய் இருக்கிறாய் என்று தெரிந்ததும் அப்பா அதிர்ச்சியில் உயிரை விட்டாரா?’ வாய்விட்டு அழுதான். 

“கோபி… ஆத்திரப்படாதே! நிதானமாய் யோசித்துப் பார்! அவள் ஏமாற்றி இருந்தால், குற்ற உணர்வுடன் விலகிப் போயிருக்கமாட்டாள். காதலிப்பது தவறில்லை. ஆனால், அவள் நல்ல பெண். ஏதோ இக்கட்டான சூழ்நிலையில் தன்னை இழந்திருக்கிறாள். ஏற்பாடான கல்யாணத்தை நிறுத்த முடியாத சூழ்நிலையில் இருந்திருப்பாள். உன் அன்பு அவளை உன் வசப்படுத்தி இருக்கும். திருமணத்திற்கு பிறகு அவள் உன்மேல் காட்டும் அன்பில் என்ன குறை கண்டாய்?’

‘உண்மையைச் சொல்லப்போனால், ஏமாற்றியது அவளல்ல. உன் அப்பாதான்! உனக்கு இப்படியொரு குறை இருப்பது தெரிந்தும்… ஒரு பெண்ணைக் கடைசிவரை மலடியாக்க… மனசாட்சியின்றி அவர் எடுத்த முடிவு தவறல்லவா? ஏழைப் பெண் என்றால் எதுவும் கேட்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் அல்லவா, அஸ்வினியை மருமகளாக்கிக்கொள்ள முன்வந்தார்? இது எப்பேர்ப்பட்ட துரோகம்? ஒரு பெண் முழுமை பெறுவது அவள் தாயாகும் போதுதானே? தாயாகும் தகுதி உள்ளவளை உன் மகனின் மகிழ்ச்சிக்காக, மலடியாக்க நினைத்தது குற்றமில்லையா?’

‘சில உண்மைகள் கடைசிவரை மறைக்கப்படுவதுதான் நல்லது என்பதால் அஸ்வினி மறைத்திருக்கலாம்.’

‘அது தவறல்லவே!” 

‘பார்க்கப்போனால், அவள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த குற்றம் உன் மானத்தைதான் காப்பாற்றி இருக்கிறது’. 

‘நீ இப்படியொரு குறையுடையவன் என்று தெரிந்தால்… உன்னை மதிப்பார்களா? ஏளனமான பார்வைகளும், பரிதாபமான கேள்விகளும் உன்னைக் குத்திக் கிழித்து விடாதா?’ 

‘சில பொய்கள், நல்லதுக்காக உண்மையைப் போல் வலம் வருவதில் தவறில்லை, கோபி!’

‘அப்படியானால் நான் என்னதான் செய்யட்டும்?’ தன்னைத்தானே கேட்டுக்கொண்டான். 

‘எதையும் செய்யாதே! மறந்துவிடு. மன்னித்துவிடு. அப்பா செய்த தவறைவிட உன் அஸ்வினி செய்த தவறு பெரிதல்ல என்பதை மனதில் அழுத்தமாய் பதித்துக்கொள். 

வத்சனின் அப்பா யாரென்ற கேள்வியே உனக்கு எழக் கூடாது. நீதான் அவனுக்கு அப்பா. உனக்கு இந்த உண்மை தெரியும் என்பதைச் சாகும்வரை அஸ்வினிக்குத் தெரியப் படுத்திவிடாதே! 

உன் குடும்பம் என்கிற அழகிய தேன்கூடு சிதைந்து போய்விடும். உன் அப்பா செய்த தவறுக்கு பிராயச்சித்தம் தேடவேண்டு மென்றால், உண்மைகளை விழுங்கிவிடு!

வெகுநேர குழப்பத்திற்குப் பிறகு… தெளிந்தான் கோபி! 

அத்தியாயம்-13

தன்னைக் கட்டிப்பிடித்து, கன்னத்தை முத்தத்தால் ஈரப்படுத்திக்கொண்டிருந்த அமுதாவை வியப்பாய்ப் பார்த்தாள், அஸ்வினி, 

“என்ன அமுதா, ரொம்ப பூரிப்பா இருக்கே? உன் கணவருக்கு வெளிநாட்டுவ இருந்து பெரிய அளவில் வருமானம் கிடைச்சிருக்கா என்ன?” 

“சேச்சே. அதெல்லாம் பெரிய விசயமா என்ன? சொல்லப் போனா, ஏற்கனவே பலமுறை அந்த வாய்ப்பு வந்தும் பரத் எனக்காக வேண்டாம்னு விட்டுட்டார்!” 

“உனக்காகவா… ஏன்?”

“வெளிநாட்டு வருமானத்துக்கு ஆசைப்பட்டா… அவரோட தொழிலைப் பொறுத்தவரைக்கும் அங்கேயே அஞ்சு ஆண்டாவது இருந்து கவனிச்சுக்கணும். என்னைப் பிரிஞ்சு அவரால இருக்க முடியாது. என்னை மட்டுமல்ல… முக்கியமா, குழந்தையைப் பிரிஞ்சு இருக்க முடியாது. கோடி கோடியா லாபம் கொட்டினாலும் உன்னைப் பிரிஞ்சாதான் கிடைக்கும்னா… அப்படிப்பட்ட பணமே எனக்கு வேண்டாம்னுட்டார்…” 

தோழியின் கூற்றில் வெளிப்பட்ட பாசமும் நேசமும் அஸ்வினியை நெக்குருகச் செய்தன. 

இந்த அன்பிற்காகத்தானே அஸ்வினி எத்தனையோ சங்கடங்களைப் பொறுத்துக்கொள்கிறாள் ? பரத், வத்சனைப் பார்க்க வரும்போதெல்லாம் நெஞ்சில் கடப்பாரைக்கொண்டு இடிப்பது போலல்லவா அஸ்வினி துடித்துப் போகிறாள்? அவளுக்கே தெரியாமல் நிகழ்ந்த தவறென்றாலும், அவனைப் பார்க்கும் போதெல்லாம் தன் பாசமிகு கணவனுக்கு துரோகம் செய்துவிட்டோமே என்று குமுறிப் போகிறாளே! இதுவே பெரிய தண்டனை அல்லவா ? ‘இங்கே வராதீர்கள்’ என்று பரத்தைத் தடுக்காமல் இருப்பதுகூட அமுதாவுக்காகத்தானே?

‘அஸ்வினியின் நெஞ்சில், கணவரைத் தவிர வேறு யாருமே இல்லை என்பது கடவுளுக்குத்தானே தெரியும்?’ 

“என்னடி… திடீர்னு எங்கேயோ பறந்திட்டே?” அவள் முகத்திற்கு நேரே சொடக்குப் போட்டு கவனத்தை ஈர்த்தாள், அமுதா. 

தன்னிலை மீண்டாள் அஸ்வினி. 

“வே…வேறொண்ணுமில்லை… எதுக்காக எனக்கு இப்படி முத்தமழைப் பொழிஞ்சேன்னு யோசிச்சிட்டிருந்தேன்.”

“கண்டுபிடிக்க முடியலையா?” 

“ஊகூம்…” உதட்டைப் பிதுக்கினாள். 

“நான்…” 

“என்ன..” 

“நான்… நான்…” வெட்கத்தோடு தலை கவிழ்ந்தாள்.

“சொல்லுடி… என் தலையே வெடிச்சிடும் போலிருக்கு…”

“மறுபடியும்… நான்!” வயிற்றில் கை வைத்து தோழியின் தோளில் நாணத்துடன் முகம் புதைத்துக்கொண்டாள். 

“ஏய்… உண்மையாவா சொல்றே? எவ்வளவு பெரிய மகிழ்ச்சியான செய்தியைச் சொல்றே… இனிப்பு தராமல் சொல்லலாமா? நீ தரலேன்னா என்ன… நான் தர்றேன்…” தாங்கமாட்டாத ஆனந்தத்துடன் அவள் கையைப் பற்றிச் சமையலறைக்கு இழுத்துச் சென்றாள். 

டப்பாவைத் திறந்து கைநிறைய சர்க்கரையை அள்ளி அமுதாவின் வாயில் போட்டாள். 

“அஸ்வினி…” 

“உம்”

“நாம ரெண்டு பேரும் சின்ன வயசிலிருந்தே ஒண்ணா படிச்சோம். திருமண வாழ்க்கையும் நாம நினைச்சபடி அமைஞ்சது. ஒரே நேரத்திலே குழந்தை பெத்துக்கிட்டோம். இதோ… இப்ப நான் மறுபடியும் உண்டாகி இருக்கேன். இதே மாதிரி நல்ல செய்தியை நீ எப்ப சொல்லப்போகிறே?” 

“என்ன அவசரம் அமுதா? இது நடக்கும்போது நடக்கட்டும்”. 

“இப்ப குழந்தை வேணாம்னு மாத்திரை ஏதாவது பயன்படுத்துறியா என்ன?” 

“சேச்சே. அப்படியெல்லாம் இல்லை.” 

“பின்னே? நான் நாலு ஆண்டு போகட்டும்னுதான் இடைவெளிவிட்டு இப்ப உண்டாயிருக்கேன். வத்சனுக்கும் நாலு வயது முடிஞ்ச்டுச்சே! எதுக்கும் டாக்டரைப் போய்ப் யார் அஸ்வினி!” என்றாள் கவலையுடன் அமுதா. 

அஸ்வினியும் போசனையுடன் தலையாட்டினான்.


கோபியைப் பார்த்ததும் ஓடிவந்து கட்டிக்கொண்டான் வத்சன். 

“அப்பா… எங்கே போயிட்டீங்க…” 

பதில் கூறாமல் அவனைப் புதிதாய் யார்ப்பது போல் பார்த்தான். சட்டென இழுத்து முகமெங்கும் முத்தமிட்டான்.

“இந்தா… உனக்காக வாங்கிட்டு வந்தேன்!?” என்று நான்கைந்து பொம்மைகளை நீட்டினான். 

“ஹைய்யா…” என்று குதித்த பொடியன், கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்துவிட்டு ஓடினான்.

சிலிர்த்துப்போனான், கோபி. 

இவன் குரல் கேட்டு போட்டது போட்டபடி உள்ளறையிலிருந்து ஓடிவந்தாள் அஸ்வினி. நான்கு நாளாய் பார்க்காத ஏக்கம் அவள் கண்களில் படர்ந்திருந்ததைக் கவனிக்கத் தவறவில்லை கோபி. 

“நாலு நாளா உங்ககிட்டேருந்து போன் வரலே… ரொம்ப பயந்துட்டேன். ஏன்ங்க அப்படி?” 

“வேலைதான், அஸ்வினி!” 

“எல்லாம் சரியாயிடுச்சா?” 

“இனி பிரச்சினையே வராத அளவுக்கு எல்லாம் நல்லபடி ஆயிடுச்சு. பசிக்குது. உன் கையால சாப்பிட்டு நாலு ஆண்டு ஆன மாதிரி இருக்கு. முதல்ல சாப்பாடு எடுத்துவை. அஸ்வினி!” 

“இதோ!” துள்ளலுடன் ஓடியவளைப் பார்த்துக் கொண்டிருந்த கோபிக்கு மனசு இப்போது தெளிந்த வானம் போல் இருந்தது. 


இரவு! 

அவன் தலையில் விரல்களை விட்டு கேசத்தைக் கலைந்தவள்… அவன் மார்பில் தலை சாய்த்துக்கொண்டாள். களங்கமில்லா நிலவைப் போல் ஒளிவீசிய அவள் முகத்தைப் பார்த்தபோது… அதில் எந்த கல்மிஷமும் இல்லை. 

‘இவள் என்னவள்… எனக்கு மட்டுமே சொந்தமானவள்… இவள் மனம் நோகும்படி எதுவும் நடந்துவிடாமல் கவனமாய் இருப்பேன்’. 

“என்னங்க?* 

“என்னடா?” 

“நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்கமாட்டீங்களா!”

“மாட்டேன்… என்ன சொல்லு!” மென்மையான கன்னத்தை வருடியபடி கேட்டான். 

“அமுதா, மீண்டும் உண்டாகியிருக்கான்னு சொன்னேன்… இல்லையா?” 

“ஆமா!” 

“வத்சனுக்கும் நாலு வயசாயிடுச்சு…” 

அவள் என்ன பேசப்போகிறாள் என்று புரியவும் ஒருகணம் நிலைதடுமாறினான்; 

“நாம இன்னொரு… “

“அஸ்வினி…” என்று குறுக்கிட்டான். 

“என்னங்க?” 

“ஒவ்வொரு பெண்ணுக்கும் பிரசவம் மறுபிறவி மாதிரின்னு சொல்லுவாங்க… இல்லையா?”

“ஆமா!” 

“நீ குட்டியைச் சுமந்திட்டு இருந்தப்ப உன் உடம்பு ரொம்ப பலகீனமா இருந்தது. பிரசவத்தின்போது நீ அலறிய அலறல் எனக்கு இந்தப் பிறவிக்கு மறக்காது. இப்ப நினைச்சாலும் நடுங்குது. எனக்கும் குழந்தைன்னா உயிர். நிறைய குழந்தைகளைப் பெத்துக்கணுன்னு ஆசைப்பட்டேன். ஆனா, நீ பட்ட வலியைப் பார்த்த பிறகு அந்த ஆசையே போயிடுச்சு.” 

“அதெல்லாம் அந்த நேரத்துவரைக்கும்தாங்க. அனுபவித்த வலியெல்லாம் குழந்தையைக் கையில் வாங்கியதும் பஞ்சாய்ப் பறந்திடும்ங்க… இதுக்குப் போய்…”

“இல்லே… அஸ்வினி… நான் முடிவு பண்ணியாச்சு. நமக்கு வத்சன் மட்டும்தான் வாரிசு. உன்னை என் உள்ளங்கையிலே பூப்போல வச்சு தாங்கணும்னு ஆசைப்படுறேன். என் பேச்சை கேட்பே இல்லையா? நமக்கு ஒரு குழந்தையே போதும்!” கோபியின் மார்பு நனைந்தது- 

திடுக்கிட்டான். 

“அஸ்வினி… அழுறியா என்ன?”

“இது அழுகை இல்லேங்க… ஆனந்தம்… இப்படியொரு நல்ல கணவன் கிடைக்க எத்தனை பொண்ணுங்க கோவிலையும் அரச மரத்தையும் சுத்துறாங்க. ஆனா, நீங்க எனக்கு கிடைச்சது பெரிய புண்ணியந்தாங்க…பிரசவ வலியை மனைவி மீண்டும் அனுபலிக்கக் கூடாதுன்னு எத்தனை கணவன்மார்கள் உங்களை மாதிரி முடிவெடுப்பாங்க ? எனக்கும் குழந்தைன்னா உயிர்தான்!”

“…”

“இப்ப அந்த ஆசையை நான் எனக்குள்ளேயே புதைச்சிட்டேன்.” உணர்ச்சிவசப்பட்டு அவன் கழுத்தில் அழுத்தமாய் முகம் புதைத்தாள், அஸ்வினி. 

அவளை இறுக அணைத்துக்கொண்டவனின் மனசு வலித்தது. 

‘மன்னிச்சிடு என் கண்ணே! இதில் என் சுயநலமும் கலந்திருக்கு, என்னை நான் வெளிப்படுத்திக்கொள்ளத் தயக்கமாக இருக்கிறது. ஆனால், உண்மை வெளிப்பட்டு விட்டால், திருமணத்திற்கு முந்தைய உன்னுடைய தவறும் வெளிப்பட்டுவிடும், குற்ற உணர்ச்சி உன்னை ஒரேயடியாகப் பறித்துக்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. எனக்கு நீ வேண்டும் அஸ்வினி, என் வாழ்க்கையின் கடைசிப்படி வரை உன் கைப்பற்றிச் செல்லவே ஆசைப்படுகிறேன். ஆபத்தை விளைவிக்கும் அந்த உண்மையைக் கொன்று புதைப்பதில் தப்பே இல்லை!’

அவள் உச்சந்தலையில் காதலுடன், நேசத்துடன் முத்தமிட்டான், கோபி. 

அஸ்வினி, சிறுகுழந்தையைப் போல் அவன் மார்பில் புதைந்து கிடந்தாள்.

இப்போது அவள் கண்களில் நீர் மறைந்தது. அழுந்திய பாரம் பனிக்கட்டியாய்க் கரைந்தது. 

(முடிந்தது)

– மாலை மயக்கம் (நாவல்), முதற் பதிப்பு: நவம்பர் 2002, ராணி முத்து, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *