மயில் பொம்மை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 3,982 
 

நடையை எட்டிப் போட்டாள் தேவகி. இன்னும் ஐந்து நிமிடத்தில் போய்விடலாம். சூப்பர்வைசர் ஆறுமுகம் கண்ணில் படாமல் கம்பெனிக்குள் நுழைந்து விட்டால் போதும். ஏற்கனவே மூன்று நாட்கள் லேட். அதற்கு மேல் லேட் ஆனால் சம்பளத்தில் கை வைத்து விடுவார்கள். ‘போன மாசம் அப்படிதான் அஞ்சலையக்கா சம்பளத்த புடிச்சிட்டாங்க. எல்லாம் இந்த ஆறுமுகத்தால. போட்டுக் குடுத்துட்டான்’ என்று நினைத்தவாறு வேகமாக நடந்தாள் .

நேற்று இரவு அவள் கணவன் குடித்து விட்டு வந்து ஒரே தகராறு. தூங்குவதற்கு வெகு நேரமாகி விட்டது. காலையில் எழுந்ததில் இருந்து சின்னவன் ஒரே அடம். மயில் பொம்மை வேண்டுமாம். நாலைந்து நாட்களாகவே கேட்டுக்கொண்டு இருக்கிறான். ‘இன்னைக்கு கண்டிப்பா வாங்கியாரேன்’ என்று சத்தியம் செய்யவும்தான் விட்டான். அவனை சமாதானப்படுத்திவிட்டு

வருவதற்குள் வழக்கமாக வரும் பஸ் போய்விட்டது. அடுத்த பஸ் பிடித்து வருவதற்குள் நேரமாகிவிட்டது.

விருத்தாசலத்தில் இருக்கும் செராமிக் ஃபாக்டரியில்தான் தேவகி வேலை செய்கிறாள். அருகில் இருக்கும் வயலூரில் வீடு. அங்கிருந்து டவுன் பஸ் பிடித்து ஜங்ஷனில் இறங்கி நடந்து வரவேண்டும். எதிரில் இருக்கும் எல்ஐசி ஆஃபீஸ் பார்க்கும் போதெல்லாம் இதில் இரண்டு பிள்ளைகள் பேரிலும் ஏதாவது பாலிசி போடவேண்டும் என நினைப்பாள். இதுவரை முடியவில்லை.

கம்பெனியை அடைந்து, கேட் ஓரம் நின்று எட்டிப் பார்த்தாள். ஆறுமுகம் வாயில் பீடியை வைத்தபடி எங்கோ போவது தெரிந்தது. சட்டென்று உள்ளே நுழைந்து விட்டாள்.

அஞ்சலையக்கா, “வாடி, இப்பதா ஒனக்கு விடிஞ்சிதா?”

“இல்லக்கா, ரா முச்சூடும் ஒரே சண்ட”

சொல்லும்போதே கண்களில் நீர் கோர்த்தது.

“என்னாதான்டீ வேணுமாம் ஒம் புருசனுக்கு?”

“வேற என்னக்கா, எல்லாம் பணம்தான்.. அப்பன் ஊட்ல போயி வாங்கியாடின்னு தெனம் குடிச்சிட்டு வந்து ரகள பண்றான்.. புள்ளைங்களுக்காக பாக்குறேன்”

“பெசாம தூங்கும்போது தலைல கல்ல தூக்கி போட்ரு” என்றாள் கூட்டணியில் இளையவளான சாந்தி.

“ஆமாண்டி, ரெண்டு புள்ளய வச்சிக்கிட்டு அவ தெருவுல நிப்பா. வர்ரவன் போறவன்லாம் கைய புடிச்சி இழுப்பான். நீயா பாப்ப?ரோசன சொல்ல வந்துட்ட” என்றார் மூத்தவரான சாவித்திரி.

தூரத்தில் ஆறுமுகம் வருவது தெரிந்தது. ஊர்ல எவஎவனோ சாவுறான். இவுனுக்கு ஒரு சாவு வர மாட்டுதே.

“யேய் அவனுக்கு பாம்பு காதுடி. கேட்ற போவுது.”

“கேட்டா கேக்கட்டும். எனக்கென்ன பயமா?”

“அப்புறம் நேத்து அவன் திட்டும்போது ஏன் அழுதுகிட்டு நின்னியாம்?”

கொல்லென்று சிரிப்பொலி எழுந்தது.

“யேய் சும்மா இருங்கடி அவன் கொள்ளிக் கண்ணுல பட்டா அப்பறம் சும்மா உடமாட்டான்..”

கலைந்து அவரவர் வேலைகளை பார்க்க போனார்கள். பீங்கான் கோப்பைகள், பொம்மைகள், அழகுப் பொருட்கள் செய்வதுதான் அவர்கள் வேலை.

மாலை நெருங்க நெருங்க தேவகிக்கு இருப்பு கொள்ளவில்லை. பொம்மை வாங்கி வருவதாக மகனிடம் வாக்களித்திருக்கிறாள். ஆனால் வாங்குவதற்கு பணமுமில்லை மனமுமில்லை.. ‘நாம்தானே செய்கிறோம்,

அதில் ஒன்றை எடுத்துக் கொண்டால் என்ன தவறு’ என்றுதான் தோன்றியது. சாவித்திரியக்காவிடம் கேட்கவும் செய்தாள்.

“அய்ய.. நம்ப என்ன விக்கிறதுக்கா எடுத்துகினு போறம். எதோ அறியாபுள்ள ஆசபட்டு கேக்குது. இவுனுவள என்னா கேக்கறது? நீ எடுத்துனு போடீ..”

மனதில் தைரியம் பொங்கியது.. ஒரே ஒரு மயில் பொம்மை மட்டும் எடுத்து மடியில் வைத்து கட்டிக் கொண்டாள்.. வயிறு லேசாக பெரிதாக தெரிவது போல் இருக்கவே மூச்சை இழுத்துப் பிடித்தாள். இப்போது சரியாக இருந்தது.

வேலை முடிந்து கூட்டத்தோடு கலந்து கிளம்பினாள். வெளியே கால் வைக்கும் நேரம் ஆறுமுகத்தின் குரல் குறுக்கிட்டது.

“தேவகி, இங்க வா”

அவ்வளவுதான்.. அதிர்ந்து போனாள்.. மொத்த தைரியமும் எங்கோ போய்

ஒளிந்து கொண்டது. மூச்சை இழுத்துப் பிடித்துகொண்டு கையை வயிற்றுக்கு முன்பாக வைத்துக் கொண்டு வந்து நின்றாள். வாய் உலர்ந்து போனது. வியர்வை வழிய ஆரம்பித்தது..

“இல்லண்ணே… அது வந்து… இன்னிக்குதான்.. சின்னவனுக்கு..”

நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது.. வார்த்தைகள் வரவில்லை.. கண்களில் நீர் திரண்டது..

முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ஆறுமுகம், ஒரு விநாடி யோசித்தவர்,

“நாளைக்கும் லேட்டா வந்து எட்டிப் பாத்துகிட்டு நிக்காத.. சீக்கிரம் வந்துரு.. இப்ப கிளம்பு” என்றார்.

– ஏப்ரல் 2020 கணையாழி மாத இதழில் வெளியாகியுள்ளது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *