கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 2,870 
 

அம்பிகாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது. நினைக்க நினைக்க ஆத்திரம் வந்தது.

‘ அம்மா…..ஆ…! ‘ வார்த்தையை வெளியில் விடாமல் பல்கலைக் கடித்துக் கொண்டு சுவரை வெறித்தாள்.

அம்மா இருந்தவரைக்கும் இவளுக்கு அல்லலில்லை, அக்குதொக்குகளில்லை. அவள் இறந்து எடுத்த பிறகுதான் பிரச்சனை படலம் ஆரம்பமாயிற்று. பதினாறு படத்திறப்பு முடிந்து பதினேழாம் நாளிலிருந்தே படையெடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

ஏழெட்டுப் பேர்கள். ஒவ்வொருவர் கையிலும் ஒரு புரோ நோட்டு – கடன் பாத்திரம். ஐந்தாயிரம், பத்தாயிரம் என்று வாங்கி அம்மா கைப்பட எழுதி கொடுத்த கடன் சீட்டு.!

அம்மா ஏன் இவ்வளவு கடன் வாங்கினாள். எதற்காக அவள் இப்படி வாங்கினாள்…?

அப்பா நாற்பது வயதில் இறந்த பிறகு அவர் அரசாங்க வேலை இவளுக்கு வந்து… கை நிறைய சம்பளம். அவர் இருந்தவரையில் வாங்கி வைத்துவிட்டுச் சென்ற வீடு, நிலபுலன்கள் , அலட்டிக்கொள்ளாமல் ஒரே பெண். கடன்வாங்கத் தேவை இல்லை. இருந்தும் வாங்கி இருக்கிறாள். ஏன்…????…

அப்பா ஐந்து வயதில் தன்னை விட்டுச் சென்றார். இப்போது பதினெட்டு. இந்த இடைப்பட்ட பதிமூன்று வருடங்களில்…. அம்மா, இவள் , பாட்டி என்று குடும்பத்தில் மூன்றே பேர்கள்.

இந்த மூன்று பேர்களுக்கும் இத்தனை செலவா…? தன் படிப்பு , வளர்ப்பு , வாழ்க்கைக்குஇவ்வளவு கடன்களா..? ! – அம்பிகாவிற்கு மலைப்பாக இருந்தது.

“அம்மாவிற்குப் பிறகு வாரிசு நீங்கதான். சீக்கிரம் கொடுத்திடுகம்மா..”கடன் சீட்டு வைத்திருப்பவர்களின் மூத்த, இளையவர்களின் கெஞ்சல், பார்வை அம்பிகாவை இம்சித்தது.

அம்மா பட்ட கடன் பெண் கொடுக்க வேண்டியதுதான். அதற்காக விசாரிக்காமல் கொடுப்பதென்பது கண்ணைக் கட்டிக்கொண்டு காட்டில் செல்வது போன்றது.

ஆற்றில் போட்டாலும் அளந்து , ஆராய்ந்து போடு என்று முன்னோர்கள் சொன்னது முற்றிலும் சரி..!

அம்மா ஏன் வாங்கினாள் என்று யாரைக் கேட்டால் தெரியும்…? – யோசித்தாள்.

ஆனால்…. இவள் எதிர்பாராமலேயே அது ஒவ்வொன்றாக வெளிவர அதிர்ச்சியாக இருந்தது இவளுக்கு.

இரண்டு ,மூன்று நாட்கள் செய்த யோசனையில் ஆத்திரம் அடங்கி பாட்டியை அணுகினாள்.

“பாட்டி ! அம்மா கடன் வாங்கினது உங்களுக்குத் தெரியுமா..?”- மெல்ல கேட்டாள்.

“தெரியும்..”

“ஏன்..? ”

”தெரியாது ! ”

“பொய் சொல்றீங்க பாட்டி. அம்மா இன்னொருத்தர் குடும்பத்தைத் தாங்கினதாய் எனக்குத் தகவல் வந்திருக்கு. ! ”

அவள் முகம் வெளிறியது.

“யார்… யார் சொன்னா…?”குரலும் பதறியது.

“அது உங்களுக்குத் தேவை இல்லாத விசயம். என் காதுக்கு வந்த சேதி உண்மையா, பொய்யா…?”கறாராக கேட்டாள்.

பாட்டி பதில் சொல்லவில்லை.

“அங்கே அஞ்சு குழந்தைகள். பெரிய குடும்பமாம்..! ”

“ஆ…ஆமாம் ! ”

“பேர். ஜெகதாம்பாள் ! ”

“ம்ம்….”

“அம்மா தோழியாமே…! ? ”

“ஆமாம். உன் அம்மாவும், அவளும் ஒண்ணா படிச்சவங்க..”

”ஏன் பாட்டி அந்த குடும்பத்தை அம்மா தாங்கனும்..? ”

“ஏழை..! ”

“அவுங்களுக்குத்தான் கணவர் இருக்காராமே..! ‘;’

“இருக்கார். ! ”

“அவர் சம்பாதிக்கலையா..? ”

“சம்பாதிக்கிறார். பெரிய குடும்பத்தைத் தாங்குற அளவுக்கு சம்பாத்தியமில்லே. வருமானம் கம்மி. ”

“அதுக்காக அவர் குடும்பத்தைத் தாங்கும் அளவுக்கு அவர் என்ன அம்மாவுக்கு அண்ணனா , தம்பியா..? ”

“யாருமில்லே. தன் உயிர்த் தோழி கஷ்டம் இவளுக்குத் தாங்கலை..! ”

“அதுக்கு எந்தவித மறைமுகமுமில்லாம நேரடியாய் செலவு செய்திருக்கலாமே. எனக்குத் தெரியாம இப்படி கடன் வாங்கி தாங்கி இருக்க வேண்டிய அவசியமில்லையே..?! ”

“நீ விபரம் தெரியாத சின்னப் பெண் ! ”

“அஞ்சு வயசுல விபரம் தெரியாதவளாய் இருக்கலாம். அதுக்கப்புறம் என்னிடம் மறைக்க வேண்டிய அவசியமில்லையே..! ”

பாட்டி அன்னபூரணிக்கு அதற்கு மேல் பொறுமை இல்லை.

“வாங்கினதைத் திருப்பாம. இதென்ன தொணதொணப்பு..?”கடுகடுத்தாள்.

“கோபப்படாதீங்க பாட்டி. கொடுக்கத்தான் போறேன். கொடுத்துத்தானாகனும். ! அதுக்காக விபரம் தெரிஞ்ச பொண்ணு விபரம் தெரியாமல் குருட்டுத் தனமாய் கொடுக்கக் கூடாதில்லே ! அதான் உன்னிடம் கேள்வி..! ”

“சரி. திருப்பிடு ! ”

“எப்படித் திருப்ப..? ”

“இருக்கிறதைக் கொடுக்க வேணாம். அவளுக்கு அலுவலகத்திலிருந்து காப்பு நிதி, வைப்பு நிதின்னு மொத்தமா கொஞ்சம் பணம் வரும். அதில திருப்பிடு. ”

“இது யார் யோசனை..? ”

“உன் அம்மா யோசனைதான். ! ”

“அதாவது நீங்க… தாயும் மகளும் கலந்து பேசி இருக்கீங்க. அதனால் அம்மா வாங்கினதுக்கு உங்களுக்குச் சரியானக் காரணம் தெரியும். ! ”

”………………………”

“சொல்லுங்க பாட்டி ! ”

“அவள் ஏழை. உதவுவதாய் சொன்னாள் உன் அம்மா. அப்புறம்… அதிகம் கடன் வாங்குறேன். இப்படி திருப்பலாம்ன்னும் சொன்னாள். அதுக்கு மேல் எனக்கு ஒன்னும் தெரியாது ! ”

இதற்கு மேல் இவளிடம் பெயராது! – என்பது என்று அம்பிகாவிற்குத் தெளிவாகத் தெரிந்தது.

“பாட்டி ! அந்த வீட்டு விலாசம் தெரியுமா..?”கேட்டாள்.

“தெரியும் ! பக்கத்து ஊர் ! ”

இந்த அளவிற்கு உதவி செய்யும் அவள் என்ன அவ்வளவு உயிர் தோழி, அவ்வளவு ஏழை..? இல்லை வேறு எவளோவா ..? அம்பிகா மனதில் ஓட…

மறுநாள் கிளம்பினாள்.

அருக்காணி கிராமம் பேருந்து ஏறி செல்லும் இடமல்ல. பக்கத்து கிராமம். மூன்று கிலோ மீட்டர் தொலைவு.

தனது இரு சக்கர வாகனத்தில் சென்றாள். கிராம ஆரம்பத்திலேயே தண்ணீர் குடம் சுமந்து வந்த ஒருத்தியிடம்…

“ஜெகதாம்பாள் வீடு எது ?”கேட்டாள்.

“அதோ அந்த கூரை வீட்டம்மா !”கை நீட்டி காட்டியவள்….

“நீ அலமேலு மகளா..?”கேட்டாள்.

“அ…ஆமாம் ! ”

“உன் அம்மா முகச் சாடை அப்படியே இருக்கு. ஜெகதா வீட்டிலேதான் இருக்கு. போய் பாரு”சொல்லிச் சென்றாள்.

தன்னைத் தெரிகிறது, தன் அம்மாவைத் தெரிகிறது. தனக்கு மட்டும் யாரையும் தெரியவில்லை. அம்மா இங்கு அடிக்கடி வந்து சென்றிருக்கிறாள். புரிய….அம்பிகா குழப்பத்துடன் சென்று அந்த வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தி இறங்கினாள்.

வாசல் கதவைத் தட்ட…

திறந்த ஜெகதாம்பாள்….

“வா அம்பிகா..!”- மலர்ந்த முகத்துடன் வரவேற்றாள்.

உள்ளே சென்றாள்.

“உட்காரு !”தரையில் பாயை விரித்துப் போட்டாள்.

எதுவும் பேசாமல் அமர்ந்தாள்.

“நீங்க ஜெக….”

“அவளேதான் ! இரு வர்றேன்.”உள்ளே அடுப்படி மறைப்பிற்குச் சென்றாள்.

அம்மா வயதில் அவள் அம்மாவை விட அழகாக இருந்தாள்.

“வெயில்ல வந்திருக்கே . இந்தா மோர் !”குவளையை நீட்டினாள்.

வாங்கி குடித்து முடித்ததும்….

பரணிலிருந்து ஒரு சின்ன துணிப்பையை எடுத்து…

“என் புருசன் சம்பாதிக்கிறதே எனக்குப் போதும். இருந்தாலும்…. உன் அம்மாவுக்காக அவரை விட்டுக் கொடுத்த நான்… அவள் அளவுக்கு வரனும்ன்னு ஆசை. அதனால் கடனை உடனை வாங்கி வந்து என் கஷ்டங்களை நீக்கினாள். ஆனாலும் நான் உன் அம்மா கடனைத் தீர்க்கனும்ன்னு வீட்டு வருமானத்துல கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வைச்சிருக்கேன். காலம் நேரம் வரும்போது திருப்பலாம்ன்னு இருந்தேன். இதுல இருப்பதாயிரத்து சொச்சம் இருக்கு. இதை வச்சு கடனைத் திருப்பு. மீதி வேணும்ன்னா அப்புறம் தர்றேன்.”சொல்லி நீட்டினாள்.

‘ இது என்ன பாசம், நேசம் ! ‘ அம்பிகாவிற்குக் குப்பென்று இதயம் கனத்து காதை அடைத்தது.

“அம்மா… !”என்று அவளையும் அறியாமல் தழுதழுத்து எழுந்தாள்.

“உனக்கு அம்மா, அப்பா, அண்ணன், தம்பி இல்லேன்னு கவலைப் படாதே. எல்லாமாய் இந்த குடும்பம் இருக்கு.”சொல்லி அவளை வாஞ்சையாய் அணைத்தாள் ஜெகதாம்பாள்.!!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *