மனித நேயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 15, 2023
பார்வையிட்டோர்: 1,642 
 

(2013ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“சரியா இருக்குதா பாத்துக்குங்கோ அம்மா. காலம் கெட்டுப் போச்சு . சரியா நிறுத்துப் பார்த்தே கொடுத்திருக்கேன்” என்றார் மங்கள் ஜ்வல்லர்ஸ் உரிமையாளர்.

“அதெல்லாம் உங்ககிட்ட சரியா இருக்கும். ஆனா, சேதாரம், செய்கூலின்னு போட்டுக் குறைப்பது போல் குறைத்ததை இரண்டு மடங்கா தூக்கி விட மாட்டீங்களா?” என்றாள் செல்வி. இரண்டு திருமாங்கல்யத்தை அழகான பெட்டிக்குள் மீண்டும் பளபளக்கும் பேப்பரில் சுத்தி வைத்துக் கொண்டாள்.

மகள் கல்யாணத்திற்குச் செலவிடக் குருவிபோல் சேர்த்த பணம் ஒவ்வொரு நாளும் பவுன் விலை ஏறி வந்து, இப்போது மலை உச்சியை அடைந்து விட்டது. கல்யாணம் நிச்சயம் செய்து விட்டாள். தேதி குறித்தாகி விட்டது. தாலியை மட்டும் செய்யப் பணம் ஏற்பாடாகி விட்டது. எப்படியோ பணத்தைப் பெண்களுக்கே உரித்தான திருமாங்கல்யம் வாங்க ஏற்பாடு செய்து விட்டாள்.

அவள் கணவன் முருகேசனால் இப்பொழுது எங்கும் ஓடியாடி எதுவும் செய்ய முடிவதில்லை. ஒரே குழந்தை போதும் என்பதில் இருவருமே கண்ணுங்கருத்துமாக இருந்தனர்.

மிகக் கவனமாக திருமாங்கல்யம் அடங்கிய பேழையைத் துணியில் சுற்றி, சாதாரண பை ஒன்றில் வைத்துக் கொண்டு பேருந்தில் ஏறினாள். தோல் பை, மற்றும் வேறுவிதமான பகட்டான பை என்றால் பிக்பாக்கெட்’ ஆசாமிகள் கவனத்தைக் கவரும் என்பதால் மிக சாதாரணமாக தோற்றமளிக்கும் துணிப்பையில் போட்டு அப்பாவிப் பெண் போல் பேருந்தில் ஏறினாள். வழக்கமான கூட்டம். ஆண் பெண் அங்கே சமம். நெரிசல், தள்ளு முள்ளுவில் இளம்பெண், வயோதியா என்று பார்ப்பதில்லை மனிதநேயமாவது மண்ணாங்கட்டியானது. இதய நோய் உள்ளவர் ஏறினால் மூச்சுத் திணறிச் சாய வேண்டியதுதான்.

சில நொடிக்கொரு தடவை பையைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாள். கல்யாண ஏற்பாட்டில் அவள் கவனம் சென்றது. பழுது பார்க்கும் சாலையில் குலுங்கி ஆடிச் சென்றது. பேருந்து, சமயங்களில் ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து ‘ஸாரி’ சொல்லிக் கொள்ளும் நிலை.

இரண்டு சவரன் மாங்கல்யத்தின் விலை கூலி தள்ளுபடி இவற்றை மனத்துக்குள்ளே கணக்கிட்டுக் கொண்டாள். திடீரென அதிர்ச்சியடைந்தாள்.

“அய்யோ, பையைக் கிழித்திருக்கிறார்களே! சற்று முன்பு கூட துணி மூட்டை இருந்ததே – கல்யாணத் திருமாங்கல்யத்தை பிளேட் போட்டு அறுத்து எடுத்து விட்டார்களே. பஸ்ஸை நிறுத்துங்கள், நிறுத்துங்கள்” என்று அலறினாள். அவளுக்கு மயக்கம் வராத நிலை.

ஏதோ தாங்கள் தான் குற்றவாளி என்ற குறுகுறுப்புடன் ஒவ்வொருவரும் பதறினர். பேருந்து நிறுத்தப்பட்டது. “இங்கே ஒருத்தன் நின்றிருந்தான். பின்புறமிருந்து மெல்ல மெல்லத் தள்ளிக் கொண்டே இந்த அம்மாள் அருகே வந்தான். அந்த ஆள் எங்கே எங்கே’ என்று தெரிந்தவர்கள் பரபரத்தார்கள்.

இப்போது தானே இரண்டு பேர் இறங்கினார்கள். டிரைவர் அருகே தொங்கிக் கொண்டு வந்த பயணியும் சேர்ந்து பதட்டப்பட்டார்.

செல்வி பஸ்ஸிலிருந்து குதிக்காத நிலை. யார் அந்த ஆள், யார் – யார் பிடியுங்களேன். முப்பதாயிரம் போச்சே . கல்யாணம் நின்று போய்விடும். செல்விக்கு வாய் பேசக்கூட முடியவில்லை.

“சரி பஸ்ஸை எடுங்கய்யா இந்த பஸ் தடத்தில் இது சகஜமாகி விட்டது’ என்று குறைகூறிச் சமாதானப்படுத்திக் கொண்டனர். பொது மக்களில் மிக அவசரமாகப் பயணம் செய்ய வேண்டியவர்கள்.

கையில் சிலம்புடன், விரிந்த கூந்தலுடன் கண்ணகி மதுரை வீதியில் ஓடியது போல், பிளேடால் கிழிக்கப்பட்ட பையைக் கையில் ஏந்திக் கொண்டு செல்வி பரபரப்பாக ஓடினாள்.

சோர்ந்த முகத்துடன் வீட்டில் போய்ச் சாய்ந்தாள் செல்வி. வீட்டில் யாரும் இல்லை. கல்யாணப் பெண், ஏற்றுமதி ஆடை தயாரிக்கும் தொழிலகத்திற்குக் காலையிலேயே போய்விட்டாள். முருகேசன் எங்கோ வெளியே சென்றவன் உள்ளே வந்தான். மனைவியின் நிலையைக் கண்டான். பசியும் பட்டினியும் கண்ணீரும் கம்பலையுமாக அவள் சரிந்து கிடப்பதைக் கண்ட அவன் பதைபதைத்தான்.

“போலீஸில் புகார் செய்தாயா?” என்று முருகேசன் கேட்டான்.

சூளைக்குப் போகச் சொன்னார்கள். அங்கிருந்து கண்ணீரைத் துடைத்துக் கொண்ட செல்வி, “அவர்கள் எல்லையில் குற்றம் நடக்க வில்லையாம். அண்ணா நகருக்குப் போகச் சொல்லிவிட்டார்கள்’ என்றாள் செல்வி துக்கத்துடன் ஆத்திரம் பொங்க.

கெட்ட வார்த்தைகளில் வசை மாரி பொழிந்த முருகேசன், செல்வியை அழைத்துக் கொண்டு அண்ணாநகர் காவல் நிலையம் சென்றான்.

காவல் நிலையத்தில் முருகேசனுக்கு அறிமுகமான கண்காணிப்பாளர் இருந்தார். அவர் முருகேசனை அடையாளங் கண்டு கொண்டார். கால் பந்து விளையாடுவதில் முருகேசன் திறமைசாலி. இடது காலில் ஏற்பட்ட ஒரு விபத்தால் அவனால். கால்பந்து ஆட்டக் குழுவில் கலந்து கொள்ள முடியவில்லை. கம்பீரமாக நடந்து வரும் முருகேசன், காலில் ஏற்பட்ட ஊனத்தால் சாய்ந்து சாய்ந்து நடக்கலானான்.

“முருகேசன், உன்னைப் பார்த்துப் பல வருடங்களாகி விட்டன. கால்பந்து ஆட்டத்தில் ஏற்பட்ட பொறாமையால் உன்னை விரோதிகள் சூழ்ந்து கொண்டு அடித்து விட்டனர். நல்ல திறமைசாலியை இழந்தோமே என்று வருந்தினோம். இப்போது அந்தக் காவல் நிலையக் கண்காணிப்பாளராக இருப்பவர் அப்போது தான் பணியில் சேர்ந்திருந்தார். கால்பந்து விளையாட்டு வீரர் முருகேசனை அடித்தவரைத் தேடிப் பிடிப்பதில் அவரும் முனைந்தார் முடியவில்லை.

“பழைய கதையெல்லாம் இருக்கட்டும் அய்யா, இப்போ முப்பதாயிரம் போச்சு அபசகுனம் போல மாங்கல்யம் போச்சு. என் மகளுக்கு மிகக் கஷ்டப்பட்டு மாப்பிள்ளை பார்த்தேன். கல்யாணம் நின்று போச்சு. இன்ஸ்பெக்டர் ஸார், சென்னையிலிருந்து பிக்பாக்கெட் கொள்ளையர்களைத் தடுக்க முடியாதா?” செல்வி கண்களிலிருந்து தாய்மையின் வேதனை கண்ணீராய் பெருக்கெடுத்தது.

பிக்பாக்கெட் ஜேப்படித் திருடர்கள் போட்டோக்கள் சிலவற்றைக் கண்காணிப்பாளர் எடுத்தார். “இவர்களில் யாரையாவது பஸ்ஸில் பார்த்த நினைவு வருகிறதா?” கேட்டார். செல்வி கூர்ந்து பார்த்தாள்.

ஒருவனைப் பார்த்ததாக நினைவுக்கு வந்தது. அவளுக்குக் கல்யாணத்திற்கு முன்பும், பிறகும் அவளைப் பின்தொடர்ந்து தொந்தரவுபடுத்திக் கொண்டிருந்தவன். அவன் பிக்பாக்கெட் ரவுடியாக எப்படி மாறினான். அவளுக்குப் புரியவில்லை.

“உம், நாங்கள் போய் வருகிறோம். திருடனைப் பிடித்து மாங்கல்யத்தை மீட்டால் நன்றியை மறக்க மாட்டோம். இனி ஆக வேண்டியதைப் பார்க்க வேண்டும்.’ செல்வியும் முருகேசனும் சோர்வுடன் புறப்பட்டனர்.

வீட்டிற்கு நடந்தே வந்தனர். வரும் போது இருவரும் ஒன்றும் பேசவில்லை. காலில் ஏற்பட்ட ஊனத்தால், முருகேசனால் வேகமாக நடக்க முடியவில்லை. செல்வியின் தோளைப் பிடித்துக் கொண்டு நடந்தான். ஏதோ நினைவுக்கு வந்தது போல் செல்வி பேசினாள். ”அந்த இன்ஸ்பெக்டர் காட்டிய போட்டோவில் உள்ளவனை எங்கோ பார்த்த நினைவு எனக்கு வருகிறது” என்று கூறியவள், சற்று நேர மௌனத்திற்குப் பிறகு பரபரப்பாய் பேசினாள் : “நினைவுக்கு வந்துவிட்டது. நானிருந்த தெருவின் கோடியில் அம்மாவும் பிள்ளையும் குடியிருந்தார்கள். அவனுக்குப் படிப்பு ஏறவில்லை.

எப்போதும் உடன் நான்கைந்து நண்டர்களுடன் சுற்றி வருவான். பாவம் அவன் தாய், தெருமுனையில் இட்லி சுட்டு வியாபாரம் நடத்தி வந்தாள். காலை ஆகாரத்தை முடித்துக் கொண்டால் இரவு எந்த நேரத்திற்கு அவன் வீடு திரும்புவான்னு எனக்கு தெரியாது. ஆனால் நான் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது தவறாமல், பள்ளிக்கூட வாசலில் ஆஜராகி விடுவான். தெருவில் குடியிருப்பவனாயிற்றே என்று மெல்லப் பேச்சுக் கொடுத்துப் பேசிக் கொண்டே சிறிது தூரம் நடந்து வருவேன். பிறகு ஒருநாள் என் தந்தை என்னை எச்சரித்தார். அவனுடன் முகம் கொடுத்துப் பேசாதே; அவன் சுத்த ரௌடியாக மாறி வருகிறான். வயதான தாயைக் காப்பாற்றாமல் ஊர் சுற்றி வம்பு தும்பென்று அலைகிறான். பெண்களைக் கேலி செய்வதாக, போலீஸ் ஸ்டேஷனில் சிலர் புகார் செய்ததால் அவனை அழைத்து காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.

அப்பாவின் அறிவுரைப்படி நடக்க ஆரம்பித்தேன். அவனுடன் முகம் கொடுத்துப் பேசுவதைத் தவிர்த்தேன். ஒருநாள், என் சிநேகிதிகளுடன் வந்து கொண்டிருக்கும்போது அவன் வழிமறித்தான். என்னிடம் தகாத வார்த்தைகளைப் பேசினான். என்னுடன் இருந்த தோழி துணிவு மிக்கவள். கால் மிதியடியை எடுத்து அவன் முகத்தில் பலமாக இரண்டடி கொடுத்தாள். அவன் எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்தான்.

கூட்டம் கூடிவிட்டது. அங்கிருந்து ஓடி விட்டான். அவன் பழிக்குப் பழி வாங்குவான் என்று பயந்து கொண்டிருந்தோம். அவனைக் காணவில்லை . எனக்குக் கல்யாணம் நிச்சயமாகியது. விபத்தில் ஒரு கால் ஊனமுற்றவராயிருந்தாலும், உங்களிடம் நான் கண்ட நல்ல குணநலன்கள் எனக்குப் பிடித்திருந்தால் நான் உங்களைத் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன் திடீரென்று அவன் என்னைச் சந்தித்தான். என் பெயர் சொல்லி அழைத்தான். நன்றாக வளர்ந்திருந்தான். முன்பு போல் பொல்லாத் தனங்களை விட்டிருப்பான் தெருக்காரனாயிற்றே என்று நலன் விசாரித்தேன். அண்ணே நன்றாயிருக்கீங்களா? பார்த்து ரொம்ப நாளாயிற்று அம்மா நலமா?” என்று கேட்டேன்.

அவன் என்னைப் பார்த்த பார்வை! “அண்ணா என்றா அழைக்கிறாய் ? உன் மீது எனக்கு எவ்வளவு ஆசை தெரியுமா ? எப்படியாவது பெண் கேட்டு வருவது என்று நினைத்திருந்தேன். பத்து நாள்களுக்கு முன்பு எனக்குப் பெருந்தொகை கிடைத்தது. உன்னைக் கட்டிக்க அந்தப் பணம் போதும். உன்னை நெருங்காமலேயே, உன்னைத் தொலைவிலிருந்தே விசாரித்து வந்தேன். எவ்வளவோ பெண்களுடன் பழகி விட்டேன். ஆனால் உன் முகத்தை என் மனத்திலிருந்து அழிக்க முடியவில்லை. உனக்குக் கல்யாணமாமே. அந்த நொண்டியையா கட்டிக்கப் போறே? விட்டு விடுவேனா? வீட்டிற்கு வருகிறேன். தயாராயிரு – ராவோடு ராவா ப்ளேன் ஏறிப் பம்பாய் போயிடுவோம் என்று கொச்சையாகப் பேசிக் கொண்டு என்னை நெருங்கினான்.

என் இதயமே நின்று விடும் போலாகிவிட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவன் பொல்லாதவன். நிச்சயம் சொன்னபடி வருவான். எங்கிருந்தோ, துணிவு வந்தது. “நாயே , அக்கா தங்கையுடன் பிறக்கவில்லையா? அண்ணன் என்று உன்னை அழைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அதற்கு ஏற்ற புண்ணியம் செய்யாமல் மேலும் மேலும் பாவம் செய்கிறாயே – ஓர் அடி எடுத்து வைத்தால் தெரியுமா?” எங்கிருந்தோ துணிவு பொங்கியது. கையிலிருப்பது பிளாஸ்டிக் துடைப்பம். அதை அரிவாளாக நினைத்து விட்டேன். பலம் வந்தது பயம் பறந்தது.

‘ஐயோ’ என்ற குரல். “ஏய், செல்வி’ உன்னை விடமாட்டேன். என்று அவன் ஓலமிட்டது கேட்டது. மறுகணம் கூட்டம் கூடியது.

நான் அங்கிருந்து மெல்ல நழுவினேன். அந்த அதிர்ச்சி அன்று எனக்குக் கடும் காய்ச்சல்.

முகூர்த்த வேளைக்குக் காய்ச்சல் குறைய ஒருவித பீதியுடன் மணமேடையில் அமர்ந்தேன்.

செல்வி, வீடு வரும் வரை மெல்லப் பேசினாள். “செல்வி, இதுவரை என்னிடம் இந்தச் சம்பவத்தைச் சொல்லவில்லையே” என்றான் முருகேசன். அவனுக்கு நன்றாக வியர்த்து விட்டது.

வீட்டு வாசலில், அவர்கள் மகள். உட்கார்ந்திருந்தாள். “என்ன இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டாயே?” என்று செல்வி கேட்டாள்.

“கல்யாணத்திற்காக ஒரு வாரம் லீவு போட்டு விட்டேன். அதனால் இன்று சீக்கிரமே வந்துவிட்டேன். கல்யாண அட்வான்ஸாக கம்பெனியில் அட்வான்ஸ் தொகை கொடுத்தார்கள்’ என்றாள் செல்வியின் மகள்.

காசோலையை நீட்டினாள். பத்தாயிரத்துக்குக் காசோலை! “உம், அரை சவரனுக்கு மாங்கல்யம் செய்யலாம். கல்யாணம் நிக்காது” என்று முணுமுணுத்தாள் செல்வி.

“இதோ ஒரு கவர். ஒருவர் வந்தார் இந்தக் கவரைக் கொடுத்துச் சென்றார்.”

“யார் என்று கேட்டாயா?”

“அவர் ஒரு நொடி கூட நிற்கவில்லை . போகும் போது என் கன்னத்தைத் தட்டி, நீதான் செல்வியின் மகளா கல்யாணப் பெண்ணா

அம்மா மாதிரி அழகாயிருக்கியே என்று கேட்டார்.”

“யாரடி உன் கன்னத்தைத் தட்டியது. பெயரைக் கேட்காமலேயே இந்தக் கவரை ஏன் வாங்கினாய்?” என்று செல்வி கோபமும் சோர்வும் ஒன்று சேரக் கேட்டாள் செல்வி.

கவரைப் பிரித்தாள். முப்பதாயிரம் நூறு ரூபாய் நோட்டுகள்! நகைக் கடையில் மாங்கல்யம் வாங்கியதற்கான கடை ரசீதும் இருந்தது.

முருகேசனிடம் கடிதத்தைக் கொடுத்தாள். கடிதம் அவன் பெயருக்குத் தான் எழுதப்பட்டிருந்தது.

“மரியாதைக்குரிய முருகேசனுக்கு, என்னை உனக்குத் தெரியும். உன் மனைவிக்கும் தெரியும். உன்னை ஊனமடையச் செய்தவன் நான். பள்ளியில் படிக்கும் போது கால் பந்து விளையாட்டில் ஏற்பட்ட பூசல் போது என் உதவியை நாடினார்கள் உன் எதிர்ப்பாளர்கள். மிக எளிதாக பந்தை உதைத்துச் செல்லும் உன்னை நொண்டியாக்க முடிவு செய்தேன். செய்து முடித்தேன். அதற்காக எனக்கு கிடைத்தக் கூலி ஆயிரம் ரூபாய் பிறகு என் போக்கே மாறியது. நீ மணக்க விரும்பிய செல்வி மீது ஒரு தலைக் காதல். கடைசியாக, அவள் திருமண நாளின் முன்னாள் அவளிடம் தவறாக நடக்க முயன்றேன். அந்தச் சமயத்தில் காவல் துறையிடம் சிக்கினேன். பிக்பாக்கெட்டில் பலே கில்லாடி நான். ஐந்து லட்ச ரூபாய் வரையில் சம்பாதித்திருக்கிறேன். என்னைத் தேடியது காவல்துறை. என்னைப் பிடிக்க முடியவில்லை. கடைசியாக உத்தமி செல்வியிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற போது அகப்பட்டுக் கொண்டேன். ஆனால் சாட்சி சரியாக இல்லை என்று எனக்குக் கடுமையான தண்டனை கிடைக்கவில்லை. வேறு ஒரு வழக்கில் அகப்பட்டதால் கடுந்தண்டனை கிடைத்தது. சிறையிலிருந்தேன். தண்டனைக் காலம் முடிவடைந்து விடுதலையாகி வெளியே வந்தேன். வெளி மாநிலம் போய்விட்டேன். அங்கே என் தொழில் கொடி கட்டிப் பறந்தது.

சென்னைக்கு வந்தேன். பிக்பாக்கெட்டில் நகைகளை மட்டும் அபகரிப்பதுலாபகரமாயிருந்தது. தங்கம் விலை ஏற ஏற என் தொழிலும் வலுவடைந்தது. நகைக் கடைகள் அருகே நிற்பேன். நோட்டம் விடுவேன். நகை வாங்கி வருபவரைப் பின் தொடர்வேன். சமயம் பார்த்து அவரை பிளேடு அங்கே ! செல்வியைப் பார்த்துவிட்டேன். எனக்கு இப்போது பெண்களை விடப் பொன் தான் குறி பேருந்தில் மிக எளிதாக செல்வியிடமிருந்து கைப்பையிலிருந்த துணிப் பொட்டலத்தை அபகரித்தேன்.

இரண்டு மாங்கல்யங்கள் ! நகைக்கடை ரசீது. எனக்கு நிரந்தர ஆதரவு தரும் அடகுக் கடைக்குச் சென்றேன்.

“ஏய், என்னா இது? இன்று தான் மாங்கல்யம் வாங்கி இருக்காங்கோ. அதைப் போய் அபேஸ் பண்ணியிருக்கியே. பாவத்திலும் பெரிய பாவம். ஏரேழு ஜென்மத்துக்கும் விடாது என்றார். தொழிலிலும் தர்மம் பேசும் அடகுக் கடைக்காரர். “என்னா பணம் வேணும்?” என்று கேட்டார். “அவசரமாக முப்பது கொடு ” என்றேன். “வித்துடு தருகிறேன். அடமானம் வைச்சா பத்து தான் கொடுப்பேன். நீ திரும்பவும் எந்தக் காலத்தில் மீட்கப் போகிறாய்” என்றார்.

முப்பது ரூபாயை வாங்கிக் கொண்டேன். “இந்தா இந்த ரசீது, கல்யாணக் கடிதாசு . எனக்கு வேணாம்” என்று வீசி எறிந்தார்.

ரூபாயை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டு மெல்ல கல்யாண நோட்டீசைப் பார்த்தேன். நகைக்கடன் ரசீதைப் பார்த்தேன். என் கண்களில் நீர் கசிந்தது. காவல் நிலையம் வாசலில். செல்வி கதறிக் கொண்டிருப்பதும், அருகே நீ அவள் தோளைப் பிடித்து நிற்பதையும் கண்டேன். என் மனம் இளகியது. அடகுக் கடைக்காரர் சொன்ன சொல் ஒலித்தது. பாவத்திலும் பெரிய பாவம் என்ற சொற்கள் எனக்கு புது அறிவைத் தந்தன. மனசு கேட்கவில்லை . மனித நேயம் என்னைச் சிந்திக்க வைத்தது. கல்யாணத்துக்கு மாங்கல்யம் இல்லாமல் என்ன பண்ணப் போகிறாய் என்று நினைக்கும் போது எனக்கு மெய்யாகவே அதுவரை இல்லாத கன் சொந்தது. செல்வியின் மகள் என் மகள் போன்றே நினைத்தேன். எனக்கு எழுத்து மறந்தே பல ஆண்டுகள் ஆகிவிட்டன. என் தோஸ்திடம் கொடுத்து எழுதச் சொன்னேன். உடனே உங்கள் வீடு தேடி வந்து இந்தக் கவரைக் கொடுத்து விட்டுச் சென்று விட்டேன். அந்த ரூபாயுடன் ஒரு பத்து ரூபாய் மொய்ப்பணம் வைக்க நினைத்தேன் முடியவில்லை. நான் ஊரைவிட்டே போகிறேன்.”

முருகேசன் கடிதத்தைப் படித்துக் கண் கலங்கினான். செல்வியிடம் கொடுத்தான்.

“கொடிய திருட்டுத் தொழில் நடத்துபவனுடைய மனித நேயத்தைப் பார்த்தாயா?” என்றான் முருகேசன்.

செல்வி படித்து விட்டு கண் கலங்கவில்லை. “மனிதநேயமா? அயோக்கியனுக்கு மனிதநேயமா ! இதுபோன்ற கொடியவர்களை நாட்டில் விட்டு வைத்திருப்பதே தவறு. கடிதத்தில், மறந்து போய் அவன் முகவரியைக் கொடுத்திருக்கிறான் – அயோக்கியன்” செல்வி கடுமையானாள்.

முருகேசன் திகைத்தான். “என்ன சொல்கிறாய் செல்வி. கள்ளன் திருந்தக்கூடாதா? என்ன செய்யப் போகிறாய், அவன் கொடுத்துள்ள முகவரிக்குச் சென்று ரூபாயைக் கொடுத்துவிடப் போகிறாயா!” என்று கேட்டான்.

“திருப்பிக் கொடுப்பதா? காவல் நிலையத்துக்குச் சென்று, அவர்கள் காட்டிய போட்டோவில் இருந்தவனின் அடையாளம் – தெரிந்து விட்டது. அவனுடைய முகவரி இதுதான்” என்று கொடுத்து விட்டு வரப் போகிறேன்.”

“என்ன சொல்கிறாய் செல்வி? பின்விளைவுகள் தெரியாமல் பேசுகிறாய்.”

“தெரியும். நாளைக்குக் கல்யாணத்துக்கு முதலில் மாங்கல்யத்தை வாங்கி வருவோம். கஷ்டப்பட்டு சேர்த்த பணம். ஆனால், மனித நேயம் என்று சொல்லி மறுபடியும் அவன் தொழிலை நடத்த விடக்கூடாது அதுதான் சமுதாய மனிதநேயம் ” என்றாள். கண்ணகியின் சீற்றம் தெரிந்தது.

பெண் உள்ளத்தில் கசியாத கருணையை எண்ணி முருகேசன் திகைத்தான். அவனுக்குப் புரியவில்லை.

– மாந்தோப்பு மரகதம், சிறுகதை தொகுதி -7, முதற் பாதிப்பு: 2013, யாழினி பதிப்பகம், சென்னை 600108.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *