நினைவின் நீரோடை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 30, 2016
பார்வையிட்டோர்: 10,352 
 

வீட்டிற்கு வெளியே வந்து வானத்தை அண்ணாந்து நோக்கினேன். அங்கே இறைந்து கிடக்கும் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்போல் தோன்றியது. மௌனத்தைப் பூசி மெழுகிப் பரந்து விரிந்த வானத்தில் நட்சத்திரங்கள் கண்களைச் சிமிட்டியவாறு என்னிடம் ஏதேதோ பேசின. இயற்கையை நெருங்கும் போதெல்லாம் இனம்புரியாத அமைதியும் ஆனந்தமும் மனத்தில் பிரவகிப்பதை உணரமுடிகிறது.

வீட்டில் தீபாவளிப் பரபரப்பு உச்சத்தில் இருந்தது. பலகாரம், புத்தாடைகள், வீட்டு அலங்காரம் என ஏற்பாடுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் அம்மாவுக்கும் மனைவிக்கும் இன்னும் வேலை முடியவில்லை. விடிந்தால் தீபாவளி ஆதலால் கடைசிநேர வேலைகளில் மூழ்கிவிட்டார்கள். என்னை வேறு, அரிசி மாவு வாங்கி வா, அரை மூடித் தேங்காய் வாங்கி வா என அடிக்கடி கடைக்கு அனுப்பிக்கொண்டிருந்தார்கள்.

பிள்ளைகளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பள்ளித்தேர்வுக்குப் புத்தகமும் கையுமாக இருந்தவர்கள் இப்பொழுது மத்தாப்பும் கையுமாக மாறிவிட்டார்கள். இருள் அப்பிய வெளியில் மத்தாப்பைக் கொளுத்தி ஒளிச்சித்திரங்களை வரைந்து ரசித்தார்கள்.

அவர்களைப் பார்க்கையில் தோட்டத்து லயங்களில் நான் என் வயது ஒத்த தோழர்களோடு பட்டாசும் மத்தாப்பும் கொளுத்தி மகிழ்ச்சியில் கழிந்த நாட்கள் என்னுள் நிழலாடத் தொடங்கின. எங்கே இருக்கிறார்களோ அந்தச் செல்லையாவும் மனோகரனும் மோகனும் சேகரும். அவர்களோடு மீண்டும் மத்தாப்புக் கச்சேரி நடத்த மனம் ஆசைப்பட்டது. கற்பனையில் எல்லாம் சாத்தியம்தான். கொஞ்சநேரம் கண்களை மூடி அவர்களை மனத்தில் படம் பிடித்தேன்.

“அப்பா, நீங்களும் வாங்க. எங்களோடு விளையாடுங்க. இந்தாங்க மத்தாப்பு” மகள் என்னையும் அழைத்தாள். கொஞ்சநேரம் அவர்களோடு வயதைத் தொலைத்து மத்தாப்பின் ஒளிச் சிதறல்களில் ஒன்றினேன். பக்கத்து வீடுகளில் உள்ள மலாய், சீனப் பிள்ளைகளும் ஆர்வத்தோடு நெருங்கி வந்து மத்தாப்பு கொளுத்தத் தொடங்கினார்கள்.

கொஞ்ச நேரத்தில் ஏதோ நினைவு வந்தவனாக வீட்டின் மாடிக்கு வந்தேன். வழக்கம்போல் இந்த ஆண்டு தீபாவளிக்கும் அப்பாவும் அண்ணனும் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவர்கள் வருகிறார்களோ இல்லையோ, அவர்களை எப்படியாவது வரவழைத்து விடுவேன். அவர்களோடு பேசிக்கொண்டிருப்பதே எனக்கு அலாதியான இன்பம்.

அப்பாவும் அண்ணனும் இன்னும் மாறவில்லை. அப்படியே இருந்தார்கள். அண்ணன் என் மேசையில் அடுக்கப்பட்டிருந்த கவிதை நூல்களில் ஒன்றைப் படித்து அதில் மூழ்கிப் போயிருந்தார். அப்பா அரைக்கால் சிலுவார், வெள்ளைப் பனியன் அணிந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்தவாறு சுருட்டு பிடித்துக்கொண்டிருந்தார். இறுக்கமான முகம். ஏதோ சிந்தனையின் வசமாகி மோட்டு வளையில் பார்வையைப் பதித்திருந்தார்.

அப்பா எப்போதுமே எனக்குப் புதிர்தான். அவருக்கும் எனக்கும் நிகழும் உரையாடல்கள் வழக்கமாக ஒரு சில சொற்களில் முடிந்துவிடும். சொற்களின் நீட்சிக்காக மனம் பல நாட்கள் ஏங்கித் தவித்திருக்கிறது. மனத்துக்குள்ளேயே பேசிக்கொள்வாரோ? மனிதர்களோடு பேசுவதற்கு விருப்பம் இல்லாமல் மனத்தில் விரக்தி படர்ந்திருக்குமோ? உள்ளே அன்பிருந்தும் அதை வெளியே காட்ட முடியாத மனிதரா? இருபத்தேழு ண்டுகால கேள்வி இது. இனியும் விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லை.

“பொஞ்சாதி புள்ளைக்கு துணிமணி வாங்கிட்டியா?” சுருட்டை விரல்களுக்கு இடம் மாற்றிப் புகையை ஊதியவாறு என்னைப் பார்த்தார்.

“வாங்கிட்டேன்பா. உங்களுக்கும் அண்ணனுக்கும் கூட சட்டை வாங்கியிருக்கேன்.”

“எங்களுக்கு எதுக்குடா? நீ நல்லா இருக்கிற. அந்த சந்தோசம் போதும்டா எங்களுக்கு. உனக்கு ஞாபகம் இருக்கா? எஸ்டேட்டுல நீ சின்னப் பயலா இருந்தபோ ஒவ்வொரு தீபாவளிக்கும் புதுச்சட்ட இல்ல, புது சிலுவாரு இல்லன்னு அடம்புடிச்சிகிட்டு காலையில எந்திருக்க மாட்டே. ரொம்ப கஸ்டப்படுத்துவடா எங்கள..” அதிசயமாக அப்பாவின் வாயிலிருந்து சொற்கள் அருவியாகப் புறப்பட்டன.

“ஆமாம்பா. உங்க நிலம அப்ப எனக்கு புரியல. சின்ன வயசு. சம்பளம் போதாம நீங்க பட்டபாடு உங்களுக்குத்தானே தெரியும்..” கித்தா மரங்களைச் சீவி அப்பாவும் அம்மாவும் நடத்திய வாழ்க்கைப் போராட்டம் இப்பொழுது எனக்குப் புரிகிறது.

“ஒருமுற செனயா இருந்த செவல ஆட்ட மேச்சலுக்கு ஓட்டிகிட்டு போயி தொலச்சிட்டு வந்திட்ட. இந்த கையால ஒன்ன அன்னைக்கி அறஞ்சிருக்கேன். ஒங்க அம்மாகூட ஏங்கூட சண்டைக்கு வந்திட்டா.” என்றோ நடந்துபோன நிகழ்வை அப்பா ஞாபகப்படுத்துகிறார். என்னால் எளிதில் மறக்கக்கூடிய நிகழ்வா அது? சில நிகழ்வுகள் எத்தனை ஆண்டுகள் கடந்துபோனாலும் உள்மனத்தில் உயிர்ப்போடு உலவிக்கொண்டே இருக்கும். எந்தக் கறையானும் அவற்றை அரித்துவிட முடியாது. அவை ஏற்படுத்திய ரணங்கள் என்றும் ஆறுவதில்லை.

“அத எப்படிப்பா அவனால மறக்கமுடியும்? நீங்க அறஞ்ச பிறகு அன்னைக்கி முழுதும் றாம் நம்பரு நெரையில அழுதுகிட்டு ஒக்கார்ந்திருந்தானே? நான்தான அவன போயி கூட்டியாந்தேன். அந்த சென ஆட்ட தேடி கித்தா காடு முழுக்க ஒரு வாரமுல்ல அலஞ்சிருக்கோம். இவனும் சாப்பிடாம கொள்ளாம கொஞ்ச நாளா ஒரு மாதிரியா இல்ல கிடந்தான்” அண்ணனின் நினைவுகளிலும் அந்த ஆட்டுச் சம்பவம் அப்படியே பதிவாகியிருந்தது.

அப்போது, மகள் அறைக்கதவைத் திறந்துகொண்டு “அப்பா, அண்ணன பாருங்க. அடிக்க வரான்” என அறைக்குள் ஓடிவந்து என் நாற்காலி பின்னால் பதுங்கினாள். கண்களில் நீர்த்திவலை. கையில் தீபாவளி முறுக்கு.

“அப்பா, இத அடிக்காம என்னா செய்யிறது. பாட்டி செஞ்சி வச்ச முறுக்க எடுத்து இப்பவே சாப்பிடுது. இன்னும் சாமிகூட கும்பிடுல” மகன் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தான்.

“சாப்பிட்டா என்னப்பா. சொல்லுங்க இவங்கிட்ட” மகள் என்னிடம் மேல்முறையீடு செய்தாள். கொஞ்சம் ஏமாந்தால் முறுக்குச் சண்டை இரத்தக்களறியில் முடிந்துவிடும். இருவரையும் ஒருவழியாக சமாதானப் படுத்தி அனுப்பிவைத்தேன்.

அப்பா மீண்டும் சுருட்டின் சுகலயத்தில் ஆழ்ந்து கண்களை மூடி அதன் வசமாகியிருந்தார். அண்ணன் கைகளில் இப்பொழுது என் கவிதைக் கோப்பு. ஒவ்வொரு கவிதையையும் ஆழ்ந்து வாசித்து அவற்றுள் ஒன்றிப் போயிருப்பதை என்னால் உணரமுடிந்தது. நான் ஒரு படைப்பாளியாக உருவாகக் காரணமே அவர்தானே? அவரின் சிறுகதைகளைப் படித்துத்தானே நான் எழுதத் தொடங்கினேன். என் கவிதைகளில் அவர் தன்னைத்தானே தரிசிக்கிறாரா?

“எனக்குப் பெருமையா இருக்குடா. நான் எவ்வளவோ எழுதுணும்னு ஆசைப்பட்டேன். உனக்கும் தெரியும். அதெல்லாம் முடியாம போயிருச்சு. எனக்கு அப்பவே தெரியும். நீயும் ஒரு படைப்பாளியா உருவாக முடியும்னு. ஆனாலும் உன் எழுத்துத் தீவிரம் போதாதுன்னு எனக்குத் தோணுது. நிறைய படி. வித்தியாசமா எழுது. செக்குமாடு மாதிரி எதுக்கு எழுதியதையே மீண்டும் எழுதிக்கிட்டு?” படைப்பு குறித்த ழ்ந்த ஈடுபாடு அவருக்கு இன்னும் குறையவில்லை.

“சொன்னதையே மீண்டும் சொல்லவேண்டிய சூழல் இங்கே இருக்குதே. ஆனாலும் நீங்க சொன்னீங்களே வித்தியாசமா எழுதணும்னு. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் படைப்பு முயற்சியில ஈடுபடும்போது அந்த எண்ணம்தான் முன்னே நிற்கிது. ஆனா, சில வேளைகளில்தான் அது சாத்தியமா இருக்கு.” என் நிலையை அண்ணனிடம் விளக்கினேன்.

“நீ சொல்றதும் உண்மைதான். ஆனா புதிய முயற்சில ஈடுபடுறத விட்டுறாத. உன் கவிதையெல்லாம் புரட்டிப் பார்த்தேன். முன்பு தோட்டப்புறத்தப் பத்தி எழுதுவே. இப்ப நவீன வாழ்க்கையின் நலிவு பத்தி எழுத முயற்சி பண்றே. இன்னும் இந்த வாழ்க்கையின் உள்ளே ஆழ்ந்துபோ. அப்பதான் உன் பதிவு உயிர்ப்பா இருக்கும்.” இலக்கியம் குறித்து என்னோடு விரிவாகப் பேச அண்ணனை விட்டால் எனக்கு யார் இருக்கிறார்கள்? ஒத்த உணர்வு உள்ளவர்கள் நம் பக்கத்திலே எப்போதும் இருப்பது சாத்தியமில்லையே.

தமிழின் ருசியை எனக்குக் காட்டியவர் அண்ணன்தான். தோட்டத்து வீட்டில் வசித்தபொழுது அவர் வாங்கி அலமாரியில் அடுக்கி வைத்திருந்த நூல்கள்தான் என் புலன்களின் பசியைத் தூண்டிவிட்டன. அது மட்டுமா? நண்பர்களோடு தோட்டத்தில் அவர் அமைத்த கலைமகள் நூலகத்தையும் மறக்கமுடியுமா?

அப்பா இன்னமும் சுருட்டின் புகையோடு ஐக்கியமாகி தவத்தின் பிடியில் சிக்குண்ட மௌனத்துறவியாக அமர்ந்திருந்தார். அப்பொழுது அறைக்கதவைத் திறந்து அம்மா உள்ளே எட்டிப் பார்த்தார். மூத்துத் தளர்ந்த உடல். மொத்தமாய் நரைத்துப் போன தலை. வெற்றிலைக் காவியேறிய பற்கள். பல ஆண்டுகளாக வலப்பக்கக் காலின் வலியால் நடக்கும்பொழுது கொஞ்சம் இழுத்து இழுத்து நடக்கும் நிலை அம்மாவுக்கு.

“என்னம்மா, எல்லா பலகாரமும் ரெடிதானே? வேலை எல்லாம் முடிஞ்சதா?”

“ஏண்டா, நல்ல நாளும் பெருநாளுமா சட்டுபுட்டுன்னு குளிச்சோம்மா, வீட்ட அழகுபடுத்துவோம்மான்ணு இல்லாமா ஏன் இப்படி உட்கார்ந்திருக்கிற.. சீக்கிரம் கடைக்குப் போய் பூஜை எண்ணெய் வாங்கிட்டு வா.”

அம்மா ஒன்றைச் சொன்னால் அப்பொழுதே செய்து முடித்துவிட வேண்டும். இல்லாவிட்டால் இடைவிடாது முனகிக்கொண்டே சொற்களால் தாளித்துவிடுவார். உடனே குளித்தேன். கடைக்குப்போய் பூஜை எண்ணெய்யோடு வந்தேன்.

மீண்டும் அறைக்குள் நுழைந்தேன். அப்பா மௌனம் கனத்துத் தேங்கிய முகத்தோடு சன்னல் கண்ணாடி முன் நின்று வெளிப்பார்வையாக இருந்தார். ஓர் ஆண்டு இடைவெளியில் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் அண்ணனுக்கு என் அறையில் நிறையவே இருந்தன. கவிதைகளை ஒன்று விடாமல் அலசினார். விட்ட இடத்திலிருந்து என்னுடன் பேசத்தொடங்கினார். வீட்டுக்கு வெளியே எங்கோ பட்டாசு வெடிச்சத்தம் தொடர்ந்து கேட்டது. பட்டாசு வெடிக்கக்கூடாது என்ற அரசின் தடையைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லையே! தடைகளை மீறுவதே ஒரு தனிச் சுகமோ?

“இவ்வளவு காலம் எழுதுறியே, உனக்கான ஒரு கவிதை மொழி இருக்கா? இதப்பத்தி யோசிச்சிருக்கியா? மரபோ புதிதோ எதை வேண்டுமானாலும் எழுது. ஆனா உன் ஆளுமையைக் காட்டும்படியான கவிதை மொழி உனக்குத் தனியாக அமையவேண்டும். மற்ற படைப்பாளிகளிடமிருந்து உன்னை வேறுபடுத்திக்காட்டும் கவிதைமொழி.”

“எனக்கான கவிதை மொழியைக் கண்டடையும் முயற்சியில் இன்னும் இருக்கிறேன். இது நாளைகூட சாத்தியமாகலாம்.”

அண்ணன் இதழ்களில் அரும்பும் புன்னகையோடு என்னை நோக்கினார். “அப்படியா, சரி அதை விடு. டாக்டர் மு.வ. ஒரு நல்ல ஆசிரியர். ஆனா, அவர் ஒரு படைப்பாளி அல்லன்னு ஒரு கருத்து இங்கே சொல்லப்பட்டுச்சே. அத பத்தி உன் எண்ணம் என்ன? எதிர்வினையாற்றல் என்பது முக்கியம் இல்லையா?”

நா.பார்த்தசாரதி, மு.வ., அகிலன், ஜெயகாந்தன் போன்றோரின் நூல்களைப் படித்துதான் அண்ணன் எழுதத் தொடங்கினார். அவர் மனத்தின் மதிப்பீடுகளில் அவர்கள் எவ்வளவு உயர்ந்து நிற்பார்கள் என்பதை நான் நன்கறிவேன்.

“அவர்கள் நம் இலக்கிய முன்னோடிகள். நம் இலக்கியப் பரப்பில் சலனத்தை ஏற்படுத்தியவர்கள். தரமான வாசகக் கூட்டத்தைக் கொண்டிருந்தவர்கள். இப்பொழுது உள்ள நவீன இலக்கியக் கொள்கை என்ற கண்ணாடியை மாட்டிக்கொண்டு அவர்களின் படைப்புகளின் மீது திறனாய்வு விளக்கை அடித்துப் பார்ப்பது பிழை. என் எதிர்வினையாற்றல் இப்படித்தான் இருந்திருக்கும்ணா”

“இன்னொன்றையும் நீ கவனிக்கணும். இன்னும் இருபது வருசம் கழித்து வரப்போற அதிநவீன படைப்பாளிகள் இப்போது உள்ள நவீன படைப்பாளிகளை மறுதலிக்கும் நிலை வருமே. யோசித்துப் பார்த்தியா?” நானும் அதை யோசித்துப் பார்த்திருக்கிறேன்.

அப்பொழுது என் மூத்த மகள் அறைக்குள் வந்தாள். “அப்பா, உங்களுக்கு வந்த தீவாளி வாழ்த்துக் கார்டுகள கொடுங்க. கீழே சுவருல அழகா ஒட்டலாம்.” அங்கங்கே கிடந்த கார்டுகளைத் தேடி எடுத்துத் தந்தேன். “அப்பா, உங்களுக்கு கேல் பிரன்ஸ¤ம் அனுப்பி இருக்காங்கபோல.. இருங்க அம்மாகிட்ட சொல்றேன்..” மகள் கிண்டலடித்துக்கொண்டு போனாள்.

அப்பா எதையோ சொல்ல வந்து தயங்கினார். “என்னப்பா, சொல்லுங்க’ என்றேன். “நாம எஸ்டேட்டுல இருந்தப்போ நம்ம குடும்பத்துல மனம்விட்டு கலந்துபேசறது ரொம்ப கொறவுடா.. மனசுல அன்பு இருக்கும். ஆனா வெளிய காட்டிக்க மாட்டோம். அது ஒரு காலம். ஆனா நீ என்ன மாதிரி இல்லாம பிள்ளைங்ககிட்ட நல்லா கலகலப்பா பேசறடா.. என் தவறு இப்ப எனக்குப் புரியுது..” காலங்கடந்து அப்பா வருந்துகிறார். அவருக்கு என்ன சொல்லித் தேற்றுவது? எனக்குத் தெரியவில்லை.

அண்ணன் என் படிக்கும் மேசையை நோட்டமிட்டார். “உன் மேசையைப் பார்த்தா வார மாத இதழா நெறைய கிடக்குதே. இத படிக்கவே உனக்கு நேரம் சரியா இருக்குமே. அப்புறம் எங்கே தீவிர இலக்கியப் பக்கம் நீ போறது?” அண்ணனின் கேள்வி நியாயமானதுதான்.

“எல்லாம் உங்களால வந்த பழக்கம். இப்ப போதைப்பழக்கம் மாதிரி ஆயிடுச்சு. சாயங்காலமானா தேத்தண்ணி என்கிற தேவபானத்துக்கு நாக்கு அலையுது. அதுமாதிரிதான் இதுவும். கொஞ்சம் கொஞ்சமாத்தான் இந்த போதை வஸ்துகிட்ட இருந்து என்னைக் காப்பாத்திக்கணும்.”

“நொறுக்குத் தீனி சுவையா சுகமாகத்தான் இருக்கும். ஆனா உடலுக்கு பயன் இல்லையே. இலக்கியத்திலும் நொறுக்குத்தீனிய ஒரு அளவா வச்சுகிட்டு சத்துள்ள சாப்பாடா தேடிச் சாப்பிடு. அப்பதான் இலக்கியத்தில நீ ஏதாவது இலக்க அடைய முடியும்.”

“மேலே என்னா செய்றீங்க? நேரமாச்சு. சீக்கிரம் வாங்க. கதை கவிதைன்னு உட்கார்ந்திராதீங்க” கீழிருந்து மனைவியின் குரல் உரக்கக் கேட்டது. என் போக்கில் என்னை விட்டுவிட்டு குடும்பச் சுமையின் பெரும் பகுதியைத் தானே சுமப்பவள் அவள். “அப்பா, படையல் போட நேரமாச்சு. அம்மா கூப்பிடுறாங்க. கீழே வாங்க” இப்பொழுது மகனின் குரல் கேட்டது. “மருமக கூப்பிடுது. போய் படையல போடு” அப்பா அவசரப்படுத்தினார்.

“அப்பா, அண்ணா நீங்களும் வாங்க.” இருவரையும் அழைத்தேன்.

“நாங்க இல்லாமலா, நீ முதல்ல போ. நாங்களும் வரோம்.” அண்ணன் கூறினார்.

மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தேன். வரவேற்பறையின் ஓரத்தில் படையலுக்குத் தேவையான பலகாரங்கள், பழங்கள், புத்தாடைகள், சூடம், சாம்பிராணி கிய அனைத்தும் தயாராக இருந்தன. ஊதுபத்தியின் நறுமணம் என் நாசியை நனைத்தது. விளக்கேற்றி தீபத்தை மும்முறை காட்டினேன். படையலில் நடுநாயகமாக இருந்த படங்களிலிருந்து அப்பாவும் அண்ணனும் என்னைப் புன்னகையுடன் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *