ஒரு ஜோடி செருப்பு தேடி…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 8,377 
 

காலில் முள் குத்தியிருக்கிறது, கல் குத்தியிருக்கிறது, துருப்பிடித்த ஆணி, குதிரை லாடம் எல்லாம் குத்தியிருக்கிறது. பிறந்ததில் இருந்து செருப்பே இல்லாமல் நடக்கிற பாட்டப் பனுக்கு, அவையெல்லாம் ஒருபொருட்டாகவே இருந்ததில்லை. ஆனால் இன்று, மனுஷனாகப் பிறந்து வெறும் காலில் நடப்பதைவிட ஒரு எருமையாகப் பிறந்திருந்தால், குறைந்தபட்சம் செருப்பு வாங்கும் தொந்தரவாவது இல்லாமல் இருந்திருக்குமே என்று நினைத்தான்.

பாட்டப்பன் ஒரு கல்யாணத்துக்காக அவசரமாகப் போய்க்கொண்டு இருந்தான். எந்தக் கல்யாண மண்டபம் என்று சரியாகத் தெரியவில்லை. ஊரில் இருப்பதே மூன்று மண்டபங்கள்தான். ஒவ்வொரு மண்டபமாகப் போய்ப் பார்த்துவிடுவது என்ற முடிவோடுதான் போனான். முதல் மண்டபத்தில் சாய்ரா பானுவுக்கும் சாகுல் ஹமீதுவுக்கும் நிக்காஹ். தனக்குச் சரிப் படாது. இன்னொரு மண்டபத்தில் இருந்த அத்தனை பேரும் சொல்லி வைத்தது போல செக்கச் சிவப்பு. அட்டைக் கறுப்பாக பாட்டப்பன் அங்கே போய் நின்றால், பரம்பரைக் குழப்பம் வந்து, கல்யாணமே நின்றுபோகிற அளவுக்குக் கலவரம் வந்தாலும் வரும். மூன்றாவது மண்டபத்தில் இருந்தவர்கள்தான், பாட்டப்பனின் சொந்தக்காரர்கள் போல இருந்தார் கள்.

மண்டபம் ஆரவாரமாக இருந்தது. தயங்கித் தயங்கி நுழைந்த பாட்டப்பன், ஏராளமான நகை, புடவைகளைப் பார்த்து அரண்டுபோனான். கடைசி இருக்கையில் மறைவாக உட்கார்ந்தான். எத்தனை பதுங்கி இருந்தாலும், ஆந்தைக் கண்களுக்குத் தவளை தப்புவதே இல்லை. ஓர் இளம் வயதுப் பெண் பாட்டப்பனையே உற்றுப் பார்க்க ஆரம்பித்தாள். பிறகு அருகில் வந்து, ‘‘நீங்க… நீங்க…” என்று இழுத்தாள். வெகு காலத்துக்கு முன்பு தொலைந்து போன யாரையோ திடீரென்று பார்த்தது போலப் பரவசமும் சந்தேக மும் அவள் முகத்தில் இருந்தது. சின்ன வயதில் புருஷன் காணாமல் போயிருப் பானோ? அதனால் சித்தப்பிரமை ஏற்பட்டு, பார்க்கிறவர்களை எல்லாம் புருஷன் என்று நினைத்துப் பைத்தியமடிக் கிறாளோ?

யோசித்துக்கொண்டே இருந்தபோது அங்கு வந்த கிழவி ஒருத்தி, “யேப்பா! நீ ராமசாமிதானே?” என்று மிரட்டுவதுபோல் கேட்டாள்.

‘‘இல்லை. நான் பாட்டப்பன்!” என்றான்.

இளம் பெண்ணைத் தரதரவென்று தள்ளிக்கொண்டு போன கிழவி, ‘‘நான்தான் அப்பவே சொன்னேனே, அது உங்க அப்பன் இல்லேன்னு. முப்பது வயசுல உங்க அப்பன் காணாமப் போனான். இப்ப அறுபது வயசிருக்கும். இவனுக்கு அம்பதுதான் இருக்கும். இவனைப் போயி அப்பன்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டியே!” என்றாள்.

ஆக, புருஷனைத் தொலைத்தவள் இந்தக் கிழவிதான். கிழவியின் புருஷன் ஓடிப்போனது சரிதான் என்று கடுப்புடன் நினைத்துக்கொண்டான் பாட்டப்பன். தாடி வைத்திருக்கிற ஒரே காரணத்துக்காக, இருபத்தேழு வயதான அவனை ஐம்பது வயதுக் கிழவன் என்றால், கோபம் வராதா? அவனுக்கு இன்னும் கல்யாணம்கூட ஆகவில்லை. இப்போதுதான் பன்னிரண்டு நாட்களாகக் கண்ணம்மா என்கிற ஒரு அடாவடிச் சிறுக்கியைக் காதலிக்கவே ஆரம்பித்திருக் கிறான்.

கிழவி அப்பால் போனதும், பூதக்கண்ணாடி அணிந்திருந்த கிழவன் ஒருவன் பொசுக்கென்று பாட்டப்பன் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, ‘‘நல்லா இருக்கீங்களா தம்பி? வீட்ல அப்பா, அம்மா எல்லாம் சௌக்கியமா?” என்று கேட்டான்.

நினைவு தெரிந்த நாளாக பாட்டப்பன் இப்படி ஒரு போங்குக் கண் கிழவனைப் பார்த்ததில்லை. ஆனாலும், இந்தக் கிழவனிடம் தெரிந்தவன் போலப் பேசிக்கொண்டு இருந்தால், மற்றவர்கள் சந்தேகப்பட மாட்டார்கள் என்று நினைத்து, ‘‘நல்லா இருக்கேன், தாத்தா. ஆனா, அப்பாவும் அம்மாவும் இருபத்து மூணு வருஷத்துக்கு முன்னாடி செத்துப்போயிட்டாங்க. தகவல் சொல்ல முடியல. மன்னிச்சிடுங்க!” என்றான்.

‘‘என்ன தம்பி நீ! போன வாரம்தானே உன் அப்பா- அம்மாவைக் கடைவீதியில பார்த்தேன். செத்துட்டாங்கன்றியே! ஆமா, நீ சிவராமன் மகன்தானே?” – கண் போனாலும் ஞாபகம் போகாத பொல்லாத கிழவன் தெளிவாகக் கேட்டான்.

‘‘நான் சிவராமன் மகன் இல்ல. நானே சிவராமன்தான்!” என்ற பாட்டப்பன், கிழவன் அறியாதபடி தன் இடத்தை மாற்றிக்கொண்டான். அங்கே வேறு ஒரு சாவுகிராக்கி வந்து, ‘‘நான் உங்களை எங்கேயுமே பார்த்ததில்லையே! ஆமா, நீங்க யாரு? யாரோட சொந்தம்?” என்று விபரீதமாக ஒரு கேள்வி கேட்டான். எங்கேயுமே பார்க்காத ஒருத்தனிடம் இவனுக்கு என்ன வெட்டிப் பேச்சு? வெறுத்துவிட்டான் பாட்டப்பன். சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவனாக எழுந்து, கூட்டத்தில் தன்னை யாரோ கூப்பிடும் பாவனையில் விறுவிறுவென்று நடந்து, சாப்பாட்டுப் பந்தி நோக்கிப் போனான்.

பூமியில் இருக்கிற சாப்பாடு மொத்தத்தையும் ஒரே நாளில் தின்று அழித்துவிடும் வெறியோடு ஒரு கூட்டம், அங்கே சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. மிச்சமிருந்த கடைசி இலையில் உட்கார்ந்தான் பாட்டப்பன். வைக்கப்பட்ட வகைதொகையான சாப்பாட்டைப் பார்த்து வியந்துபோனான். எச்சில் ஊற பெரிய லட்டு ஒன்றை எடுத்துக் கடித்தான். அவ்வளவுதான்… பக்கத்தில் இருந்த பெண் ஒருத்தி எழுந்து நின்று, ‘‘ஐயோ, ஐயோ!” என்று கத்த ஆரம்பித்தாள்.

கை தவறி அந்தப் பெண் இலையில் இருந்த லட்டை எடுத்துவிட்டோமோ என்று பதறிப்போனான் பாட்டப்பன். கும்பல் கூடிவிட்டது. தனது கழுத்தில் இருந்த ஒன்பது பவுன் சங்கிலியைக் காணவில்லை என்று அழுதபடி சொன்னாள் அந்தப் பெண். ‘அப்ப இது லட்டு பிரச்னை இல்லையா?’ என்று பாட்டப்பன் சந்தோஷமாகி, வாயில் இருந்த லட்டை உரிமையோடு தின்ன ஆரம்பித்தான்.

நகை திருடுபோனது தெரிந்ததும், ‘‘சாத்துடா கதவை” என்று ஒருத்தன் உத்தரவிட்டான். நகையை யார் எடுத்திருப்பார்கள்? ஒருவர் முகத்தை ஒருவர் சந்தேகமாகப் பார்த்துக்கொண்டார்கள். நல்லவன், கெட்டவன், யோக்கியன், திருடன் யாராக இருந்தாலும் சரி… திருடர்களாகத் தோற்றம் தருகிற தர்மசங்கடமான சூழ்நிலை இதுதான். அப்போதுதான் பாட்டப்பனுக்கு அந்த விபரீதம் உறைத்தது. இந்தக் கூட்டத்தில் சம்பந்தமில்லாமல் இருக்கிற ஒரே ஆள் அவன்தான்.

‘‘சார் யாரு? யார் வீட்டு உறவு?” – ஒருத்தன் எகத்தாளமாகக் கேட்டான்.

பாட்டப்பன் திண்டாடிப்போனான். பெண் வீட்டுக்காரனிடம் மாப்பிள்ளை வீட்டு ஆள் என்றும், மாப்பிள்ளை வீட்டுக்காரனிடம் பெண் வீட்டு ஆள் என்றும் சொல்லித் தப்பிக்கலாம் என்றால், இரண்டு தரப்புமே இங்கே சூழ்ந்து நிற்கிறார்கள். இவர்களிடம் என்ன சொல்லித் தப்பிப்பது என்று குழம்பினான். பின்பு மையமாக, ‘‘மாப்பிள்ளைக்கு வேண்டியவன்” என்றான்.

‘‘யாரோட மாப்பிள்ளைக்கு?” என அடுத்த கேள்வி பிறந்தது.

‘‘ஹிஹி… கல்யாண மாப்பிள்ளைக்கு தான்!”

‘‘யாருக்குக் கல்யாணம்?”

அவ்வளவுதான்… கடுப்பாகிவிட்டான் பாட்டப்பன். ‘‘என்னய்யா நீ லூசு மாதிரி கேக்கறே?”

‘‘மவனே, யாருடா லூசு? வளைகாப்பு நடக்கிற எடத்துக்கு வந்து கல்யாணத்துக்கு வந்ததா சொல்ற நீ லூசா, நான் லூசா?” – கேட்டபடியே கொத்தாகச் சட்டையைப் பிடித்தான் அவன்.

தர்ம அடி போடுவதென்றால் கூட்டத்துக்குதான் எத்தனை குஷி! வசமாக ஒருவன் சிக்கிவிடக்கூடாதே. சரமாரியாக அடி விழுந்தது. பாட்டப்பன்தான் நகைத் திருடன் என்று முடிவே கட்டி, முட்டி பெயர்த்தார்கள்.

நல்லவேளை, கை கால்களை அக்கக்காகப் பிய்த்துப் போடுவதற்குள், ‘‘நகை என்கிட்டதான் இருக்கு. அவனை விட்டுடுங்க” என்றபடி ஓடி வந்தான் ஒருவன். நகை பறிபோனவளின் புருஷனாம். அவள்தான் கழற்றிக் கொடுத்துவிட்டு, மறந்துவிட்டாளாம். ஆக, நகை திருடுபோகவில்லை.

இப்போதாவது பாட்டப்பனை விட்டுவிடலாம்தான். ஆனால், சந்தேகப் பிசாசு ஒருத்தன், ‘‘நீ நகை திருடலே. சரி… ஆனா, வளைகாப்புக்கு வந்துட்டு கல்யாணத்துக்கு வந்தேன்னு சொல்றியே? இனிமேதான் திருடப்போறியா?” என்று கேட்டான்.

பெரிய மனிதர் போல இருந்த ஒருத்தர் அவனை அடக்கினார். ‘‘ஏய், விடப்பா! உறவு இல்லாத ஒருத்தன், ஒண்ணு பொருள் எடுக்க வருவான். இல்ல, சாப்பிட வருவான். பசின்னு வந்தவனைப் பாதி பந்தியில எழுப்பறது பாவம். நீ சாப்பிடு தம்பி!” என்றவர் பாட்டப்பனை உட்காரவைத்துச் சோறு பறிமாறினார்.

ஆனால், பாட்டப்பனால் சாப்பிடவே முடியவில்லை. ஆயிரம் பேர் உற்றுப் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, சர்க்கஸில் இருக்கிற குரங்கு வேண்டுமானால் வாழைப்பழம் தின்னும். பாட்டப்பனால் அது முடியாது. எனவே, சாப்பிடா மலே எழுந்துகொண்டான். இது பெரிய அவமானம். எல்லாம் கண்ணம்மா என்கிற திமிர் பிடித்த சிறுக்கியைக் காதலித்ததால் வந்தது.

சுழற்றிவிட்ட பம்பரத்தின் சுறுசுறுப்பு உடம்பும் சண்டைக் குருவியின் படபடப்புப் பேச்சும்கொண்ட கண்ணம்மாவைக் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்பட்ட பாட்டப்பன், அவளிடம் சென்று, ‘‘என்னை நீ கட்டிப்பியா, கண்ணம்மா?” என்று வெளிப்படையாகக் கேட்கவும் செய்தான். அவள் சரி என்றோ, மாட்டேன் என்றோ சொல்லியிருந்தால், ஒரு துக்கமும் இல்லை. அவளோ குறும்பாகச் சிரித்தபடி, ‘‘என் அப்பன் கசாப்புக் கடை வெச்சிருக்கிறது உனக்கே தெரியுமில்லே. பின்னே, என்ன தைரியத்துல இப்படிக் கேட்டே? கல்யாணம் பண்ணிக்கிறியானு கேக்க ஒரு மொகறை வேணாம். சோம்பேறிப் பய புள்ள! கோயில் முன்னாடி துண்டு விரிச்சு, நாலு பேர்கிட்ட பிச்சை எடுத்து வயிறு வளக்குற உனக்குக் கல்யாணம் ஒரு கேடா?” என்றாள்.

‘‘ரொம்பப் பேசாத கண்ணம்மா! நீ மட்டும் என்ன, எம்.எல்.ஏ. மகளா? உங்கப்பன் ஆட்டுத் தோல் உரிக்கிறவன். நீ காயிதம் பொறுக்கிக் காசு சேர்க்குற சிறுக்கி…”

‘‘ஆமா, சிறுக்கிதான்! ஆனா, இந்தச் சிறுக்கி ஒரு செருப்புக்குக்கூட வக்கில்லாத பிச்சைக்காரனைக் கட்டிக்க மாட்டா!”

பாட்டப்பனால் ஒரு செருப்பு சம்பாதிக்க முடியாதா? ஆங்காரத்தோடு, சம்பாதித்த காசை எல்லாம் எடுத்துக்கொண்டு செருப்புக் கடைக்குப் போனான். சிங்கத்தின் தோலில் செருப்பு தைத்து விற்பவன் போல அந்தக் கடைக்காரன் முகரையை வைத்துக்கொண்டு, ‘‘நானூறு ரூபாய் ஆகும்’’ என்றான். தன்னிடமிருந்த இருபத்தேழு ரூபாய் எண்பது பைசாவை இன்னொரு முறை எண்ணிப் பார்த்த பாட்டப்பன், வேறு வழி இல்லாமல் இந்த மண்டபத்துக்கு வந்து சேர்ந்தான். கண்ணம்மா என்ற காதல் சிறுக்கிக்காக நல்லதாக ஒரு செருப்பைச் சுட்டுவிடுவது என்று முடி வெடுத்து வந்தவனை, பாழாய்ப்போன நாக்கு, பந்திக்கு இழுத்து சந்தி சிரிக்க வைத்துவிட்டது.

தலையைத் தொங்கப்போட்டுக்கொண்டு மெதுவாக அங்கிருந்து வெளியேறிய பாட்டப்பனைப் பார்த்து, விதி விக்கி விக்கிச் சிரித்தது. மண்டப வாசலில் இரைந்துகிடந்த செருப்புகளில் ஒன்றில், அது தன்னுடையதே போன்ற இயல்பான உரிமையோடு சுவாதீனமாகக் கால்களை நுழைத்துக்கொண்டு கிளம்பியவனை ஓடி வந்து வழிமறித்தான் ஒருவன்.

‘‘ஏன்டா நாயே, என் செருப்பை லவட்டிட்டுப் போகப் பார்க்கிறியா?” என்று கத்தி, சட்டையைப் பிடித்தான்.

புலியிடம் தப்பித் தண்ணீரில் குதித்து முதலையிடம் சிக்கிக்கொண்ட கதையாகிவிட்டதே என்று தலையைச் சொறிந்த பாட்டப்பன், “இது உங்களுதுங்களா..? என்னுதும் கிட்டத்தட்ட இதே மாதிரிதான்…” என்று இழுத்தபடி காலிலிருந்து செருப்பைக் கழற்ற, “அடேய்! இதன் விலை என்ன தெரியுமா? ஏன்டா, உன் மூஞ்சிக்கு இது உன் செருப்பு மாதிரி தெரியுதா?” என்று கையை ஓங்கினான் செருப்புக்குச் சொந்தக்காரன். அடிக்க ஓங்கின கையை ‘நிறுத்துங்க’ என்று ஒரு குரல் தடுத்தது. திரும்பினால்… கண்ணம்மா!

‘‘ஏய்யா! உனக்கு மட்டும்தான் செருப்பு போட பவுசு இருக்குதா? அங்க பாரு, ஒரே மாதிரி எத்தினி செருப்பு இருக்குதுன்னு. ஆவூன்னா கைய ஓங்கிருவியா? பெரிய செருப்பு. போய்யா எடுத்துட்டு!” என்று கண்ணம்மா சீறி வர, கசாப்புக் கடைக்காரர் பொண்ணு என்கிற அந்தஸ்தே போதுமானதாக இருந்தது, அவன் மறு பேச்சுப் பேசாமல் அங்கிருந்து கிளம்ப!

அடுத்து, பாட்டப்பன் பக்கம் திரும்பினாள் கண்ணம்மா. ‘‘ஏய்யா, பிச்சை எடுக்காதேன்னு சொன்னா, இப்படி செருப்புக் களவாணியா வந்து நிக்கிறியே, வெக்கமாயில்லே?”

‘‘நீதானே கண்ணம்மா செருப்புப் போட வக்கில்லாத பிச்சைக்காரனைக் கட்டிக்க மாட்டேன்னு சொன்னே!”

‘‘அதுக்காக? செருப்புப் போட்டவன் பின்னாடியே போக, பொண்ணு என்ன குதிரை லாடமா? நீ ஒழுக்கமா நாலு காசு சம்பாதிக்கணும்னுதான் நான் அப்படிச் சொன்னேன். அடி உதைக்குப் பயப்படாம திருடப்போன நீ, வேர்வை வெயிலுக்குப் பயப்படாம உழைக்க மாட்டியா? மனுஷனாப் பொறந்தவன்…” என நீட்டி முழக்கி, நீதி உபதேசம் செய்ய ஆரம்பித்தாள் கண்ணம்மா.

எட்டு வயதில் அநாதையாகி, பதினாறு வயது வரை சித்தப்பன் வீட்டில் தண்டச்சோறு தின்று, பதினேழு வயதில் அரைச் சாமியார் ஆகி, இன்று வரை பிச்சை எடுத்து, மானத்தோடு வாழ்ந்து வரும் பாட்டப்பனுக்கு யார் அறிவுரை சொன்னாலும் அறவே பிடிக்காது.

ஆனால், கண்ணம்மாவின் அறிவுரை இன்று அவனுக்குத் தித்திக்க ஆரம்பித்தது. முரட்டுச் செருப்பணிந்து காகிதம் பொறுக்கும் பாட்டப்பன் என்கிறவன், கண்ணம்மா என்பவளின் கைத்தலம் பற்றி, குழந்தை குட்டிகளோடு வெகு காலம் வாழ்கிறதான பிம்பம் ஒன்று, கண்ணம்மாளின் கண்ணில் மினுங்குவதைப் பாட்டப்பன் கண்டான். அதனால்தான், கறுத்துச் சிடுசிடுக்கும் கண்ணம்மாளின் முரட்டு உதடுகள் சொல்லும் அறிவுரையை இடைமறிக்காமல் கேட்டபடி, பரவசத்தோடு நின்றான்.

– 28th நவம்பர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *