ஆடை அலங்காரம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 29, 2023
பார்வையிட்டோர்: 3,251 
 

(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்புமிக்க சுஜாதா,

உன் கடிதத்தில், துணிகள் வாங்குவதைப் பற்றி எழுதிக் கேட்டிருக்கிறாய், ஆடைகள் தேசத்துக்குத் தகுந்தபடி மாறுபடுகின்றன. அடுத்தபடி அவரவர்கள் நிலைக்குத் தகுந்தபடி ஆடைகள் வாங்குவது என்று ஏற்படுகிறது. மூன்றாவதாக வயதுக்கு ஏற்ற துணிகள். நிறம் என்று ஓரளவு பார்க்கத்தான் வேண்டி வருகிறது. கடைசியாகப் ‘போலி’ கௌரவத்துக்காகவும் வாங்குகிறேம். உணவு எப்படி இன்றியமையாததோ, அப்படியேதான் ஆடைகள். எனவே அந்த விஷயத்திலும் விசேஷ கவனம் செலுத்த வேண்டியதுதான்,

மேல் நாட்டில் உடைகளுக்கு அதிக கௌரவம் கொடுக்கிறர்கள். அவர்கள் கல்யாணப் பெண்ணுக்குத் தைக்கும் ‘கௌன்’ பிரமாதமாக இருக்கும். அதற்காகப் பிரசித்தி பெற்ற தையல்காரர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.

நாம் விலை அதிகம் கொடுத்துத்தான் வாங்குகிறோம். அதைச் சரியானபடி உபயோகிக்கும் முறை போதாது. விலை மதிப்புள்ள உடைகள் விசேஷ தினங்களுக்கு இயன்ற அளவு வாங்கிக் கொள்ளலாம், கல்யாணம், பண்டிகை போன்ற வைபவங்களில் தம்முடைய சந்தோஷத்தைக் காட்ட விருந்து சாப்பிடுகிறோம். அப்படியே நல்ல ஆடைகளை உடுத்துவதும் நம் மகிழ்ச்சியை அறிவிக்கும் நோக்கம்தான். விலை மதிப்புள்ள துணிகளை வாங்கி அவற்றை நன்றாகத் தைக்காமல், அதற்குரிய மரியாதை கொடுக்காமல் சுருட்டிப் போடுவது வருந்தத்தக்கது. சிலருக்கு எதிலுமே வாங்கும் வரையில் ஆசை இருக்கும். பிறகு அதில் அக்கறை குறைந்து விடுகிறது. ‘தேவையான துணிகள் போதுமா? அபரிமிதமாக (வசதி இருந்தாலும்) வாங்கிக் கொள்வதா?’ என்பது தற்காலப் பெண்களின் பிரச்னையாக இருக்கிறது.

ஒரு இளம் பெண் பீரோ நிறையப் புடவைகள் இருப்பதால் எதைக் கட்டிக் கொள்வதென்று தெரியாமல் வருந்துவதாக அந்தப் பெண்ணின் அன்னை சொன்னாள். ‘இதில் அவளுக்கு ஏன் இத்தகைய வருத்தம் ஏற்பட வேண்டும்?” என்பது வியப்பாயிருக்கிறது. ஆடைகள் மிதமாக இருந்தால் போதுமானது.

தினசரி உபயோகிக்கும் உடைகள் எளியனவாகவும், சுத்தமாகவும் இருக்க வேண்டும். எனக்குத் தெரிந்த மிகவும் கண்ணியம் வாய்ந்த ஒரு குடும்பத்தினரை விடுமுறை நாட்களில் பார்த்திருக்கிறேன். குடும்பத் தலைவர் அந்த வாரத்துக்குத் தேவையான துணிகளைச் சோப்பு போட்டுத் துவைப்பார். அந்த அம்மாள் உலர்த்துவார். உத்தியோகம் பார்க்கும் பெண் ‘இஸ்திரி’ போடுவாள். சின்னப் பிள்ளைகள் மடித்து எடுத்து அடுக்கி விடுவார்கள். அவர்கள் எப்பொழுதும், சுத்தமாகவும் நன்றாகவும் உடுத்தியிருப்பதைக் கண்டு நான் ஆச்சரியப்படுவேன். சுத்தம் முக்கியம். ‘கந்தையானாலும் கசக்கிக் கட்டு’ என்பது முதுமொழியல்லவா? நம் ஆடைகளை நாமே தோய்த்துக் கட்ட வேண்டும். அதில் தனி ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது. அதோடு, நம் வேலையை நாம் செய்து கொள்ளும் போது பெருமிதம் உண்டாகிறது.

வடநாட்டுச் சகோதரிகள் எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும் பத்து ரூபாய் மதிப்புள்ள புடவைகளைத் தான் தினசரி உடுத்துகிறார்கள். அவர்கள் ஆடைகளுக்காகச் செலவழிப்பது மிகக் குறைவு. தினசரி துணிகளையும் நாம் நன்றாக உபயோகிக்கப் பழக்கிக் கொள்ள வேண்டிய அவசியமல்லவா?

ஒருவரை முதன் முதலாகப் பார்க்கும்போது அவர்களுடைய உடைகளிலிருந்து அவர்கள் கண்ணியத்தை நிர்ணயிக்கிறோம். கதர் உடைகளைப் போட்டுக் கொண்டு உலகத்தின் எந்தப் பாகத்துக்குப் போனாலும், ‘காந்தி ஊரிலிருந்து வந்தவர்களா? இந்தியாவிலிருந்து வருபவர்களா?’ என்று கௌரவமாக விசாரிக்கிறார்கள். ‘ஆள் பாதி ஆடை பாதி’ என்று பழமொழி ஒன்று வழங்கி வருவதை நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும். சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி உடை அணிவதும் ஒரு கலை.

நாம் அணியும் முறை பிறர் நம்மைக் கண்டு மரியாதை செய்யும் வகையில் அமைய வேண்டும். பிறர் நம் ஆடைகளை விசேஷமாக நோக்கும்படி கவர்ச்சிகரமான வகையில் அணிய வேண்டாம் என்பது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.

இப்படிக்கு,
பூமாதேவி

– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *