பூமியை நனைத்த ஒரு மழைத்துளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 9, 2023
பார்வையிட்டோர்: 2,822 
 

அடுக்கு மாடிக் குடியிருப்பின் நான்காவது தளத்தில் பனி பூத்திருந்த கண்ணாடி யன்னலை மெதுவாக திறந்து கொண்டு வெளியே எட்டிப் பார்க்கிறேன். கடுங்குளிர் முகத்தில் அறைகிறது. வெளியே ‘சினோ ‘கொட்டிக் கொண்டிருக்கிறது. எங்களுடைய வீடு அமைந்திருக்கிற இந்த மலையை வெள்ளை கம்பளியால் போர்த்தது போல பனி மூடியிருக்கிறது. எனக்கு பொதுவாக இந்த ‘கிளைமெட்’ நன்றாகப் பிடிக்கும். ஆனால் இப்போது ஏனோ அதை அனுபவிக்க தோன்றவில்லை.

இந்த நோர்வே நாட்டில் மார்கழி மாதம் பிறந்தாலே கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கி விடும். வீதிகள், தேவாலயங்கள், நட்சத்திர உணவு விடுதிகள், சொப்பிங் மால்கள் என்று எங்கு சென்றாலும் விதவிதமாக வர்ண மின்விளக்குகளால் அலங்கரித்து வைத்திருப்பார்கள். அதற்கென அமைக்கப்பட்ட மேடைகளில் இசை நிகழ்ச்சிகளும், பிரபல நடனக் கலைஞர்களின் நடனங்களும் என கேளிக்கைக்கு குறைவேயிருக்காது. அழகாக நடனமாடிக் கொண்டே ‘சாண்டா கிளாஸ்’ அதுதான் கிறிஸ்மஸ் தாத்தாக்கள் குழந்தைகளுக்கு சாக்லேட்டுகளையும் பரிசுப் பொதிகளையும் கொடுத்து மகிழ்விப்பார்கள்.

இன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை என்னை சொப்பிங் கூட்டிக் கொண்டு போக சொன்னேன். பேக்கரியில் ‘காஃப் டே’ போட்டுவிட்டு நேரத்தோடு வீட்டுக்கு வந்து, காரிலேற்றுக் கொண்டு போவதாக சொல்லிச் சென்றவரை மணி நான்காகியும் காணவில்லை. இனியனும் நித்திலாவும் இன்னும் அப்பா வரவில்லை என்று எனக்கு குடைச்சல் தரத் தொடங்கி விட்டார்கள்.

கிறிஸ்மஸ் சீசன் வேறு. பேக்கரியில் வேலை அதிகமாக இருக்கலாம். அந்த வெள்ளைக்கார முதலாளி இவரை நம்பித்தான் பேக்கரியை விட்டுவிட்டு குடும்பத்தோடு லண்டனுக்கு சுற்றுலா சென்றிருக்கிறார். வருவதற்கு இரண்டு வாரம் கூட ஆகலாம். முதலாளி இடத்தில் இருந்து கணக்கு வளக்குகளையெல்லாம் கவனித்துக் கொண்டு, ஜம்பதுக்கும் அதிகமான வேலையாட்களையும் மேற்பார்வை செய்வதென்றால் சும்மா காரியமா என்ன?

கல்யாணமாகிய இந்தப் பத்து வருடங்களில் ஒரு நாளாவது அவர் என்னுடைய பழைய கதைகளைச் சொல்லிக் குத்திக் காட்டியதோ, எனக்கு கைநீட்டி அடித்ததோ கிடையாது. என்னையும் பிள்ளைகளையும் அக்கறையாக பார்த்துக்கொள்கிறார். நல்ல வசதியான வீடு. நகை நட்டுகள், உடுபுடவைகள், நேரத்துக்கு நேரம் விரும்பிய சாப்பாடு. எனக்கு இங்கே என்ன குறை?

வசதி வாய்ப்பிருந்தால் மட்டும் போதுமா? மனதில் நிம்மதி இல்லையே? எப்போது பார்த்தாலும் என் மூத்த ‘ஆண்குஞ்சின்’ நினைவுகள் என்னை அலைக்களிக்கிறதே! என் பிள்ளை இப்போது எப்பிடியிருப்பானோ? எங்கேயிருந்து கஸ்டப் படுகிறானோ? என்று நினைத்தால் பெற்ற வயிறு நோகுது.

அந்த பழைய கதைகளையெல்லாம் மறக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன். ஆனால் எப்படி மறப்பது? அன்றைக்கு என்னால் என் குடும்பம் பட்ட அவமானம் கொஞ்ச நஞ்சமா? என் அம்மா அழுது வடித்த கண்ணீருக்கு அளவிருக்கிறதா? நான் என் தலையில் மட்டுமா மண்ணை வாரிப் போட்டேன்? என் இரண்டு தங்கச்சிமார் வாழ்கையிலேயும் சேர்த்தெல்லோ மண்ணை வாரிப் போட்டேன்.

அதற்கெல்லாம் பரிகாரம் செய்வதுபோல இவரை கல்யாணம் கட்டி நோர்வேக்கு வந்த பிறகு என்னுடைய குடும்பத்தை ஊரில் யாருமே நினைக்காத அளவிற்கு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டேன். அம்மாக்கு ஊரிலேயே ஒரு காணி வாங்கி பெரிய கல்வீடு கட்டிக் கொடுத்தேன். மூத்த தங்கச்சி சங்கீதாவுக்கு நகை நட்டு போட்டு அரசாங்க உத்தியோகம் பார்க்கிற நல்ல மாப்பிளையை கல்யாணம் செய்து வைத்துவிட்டேன்.அவளுக்கு இப்போது இரண்டு பெண் பிள்ளைகள். இரண்டாவது தங்கச்சி இந்துவையும் நன்றாக படிக்க வைத்து, அவளுக்கும் காலாகாலத்துக்கு ஒரு கல்யாணம் செய்து வைத்தால் என் மனதிற்கு நிம்மதி. அதற்கெல்லாம் இவர் என்ன தடை போட்டிருக்குறார்? இவரை போல பொஞ்சாதி குடும்பத்தை தன் குடும்பம் போல பார்க்கும் மனசு எந்த ஆம்பிளைக்குத் தான் வரும்?

என் வாழ்கையே ஒரு சீட்டாட்டம் போல ஏதேதோவெல்லாம் நடந்து போச்சு. பதினொரு வருடங்களுக்கு முதல் அந்த சுமன் மட்டும் என் வாழ்க்கையில் வந்திருக்காவிட்டால்… அவனை நான் காதலித்திருக்காவிட்டால்… அசடு மாதிரி அவன் கூப்பிடுகிற இடங்களுக்கெல்லாம் போய் அவன் ஆசைக்கு இணங்கியிருக்காவிட்டால் நான் இப்பிடியெல்லாம் துன்பப் பட்டிருப்பேனா?

இனிக்கப் பேசும் நாவும் இரக்கமற்ற இதயமும் கொண்ட அவன் என்னை நன்றாக அனுபவித்து விட்டு, எனக்கு வயிற்றிலே உண்டாகிய பிறகு, தனக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லையென்று சொல்லிவிட்டு போனானே… அது ஊரெல்லாம் பரவி என் குடும்ப மானமே கப்பலேறி…. சீ சனியன் போல இப்போது ஏன் அதையே நினைத்துக் கொண்டிருக்கிறேனோ?

அவன் மீதே முழுப் பழியையும் சுமத்துகிறேனே… ஒரு குமர் பிள்ளை ஆண்களிடம் எட்டமாக இருக்கவேண்டும் என்கிற அறிவு எனக்கு இருந்திருக்க வேண்டாமா?

மடந்தைப் பருவத்தில் ஒரு தடவை எல்லை மீறினால் அவ்வளவு தான். தேகத்திற்கு பசியெடுப்பது போல தாகம் தகிப்பது போல ஆண் சுகம் கேட்கும். பிறகு அதுவே பழகிப் போய் விடும். தவறு ஒன்றை திரும்பத் திரும்பச் செய்யும் போது அதன் அடர்த்தியும் அதனால் ஏற்படும் விளைவுகளும் நமக்கு புலப்படுவதில்லை. புலன்களுக்கு கிடைக்கும் இன்பம் கண்களை மறைத்து விடுகிறது. அது தான் எங்கேயோ படித்திருக்கிறேனே? ‘தவறுகள் செய்வதெல்லாம் நொடிகளில் தான். தண்டனைகள் தான் யுகங்களுக்கு’ இது எனக்கு நன்றாகவே பொருந்தும்.

அன்றைக்கு மண்ணெண்ணெய் விலை குறைந்ததை விடவும் நான் கெட்டுப் போய் ‘வயித்தில புள்ளை வாங்கினது’ தான் அயலட்டத்துக்கு புளுகு! குழாயடிக்கு தண்ணீர் பிடிக்க வந்து எங்களுடைய வீட்டைப் பார்த்து காறித் துப்புகிறவர்களையும் சீறி எறிகிறவர்களையும் எத்தனையோ தடவைகள் கண்டிருப்பேன்! அம்மா பாவம் என்னைப் பெற்ற குற்றத்துக்கு அது பட்ட பாடு… முன்பின் வீட்டுப் படலையடி தெரியாதவர்களெல்லாம் சொந்தம் என்று சொல்லி மூஞ்சியை தொங்கப் போட்டுக் கொண்டு துக்கம் விசாரிக்க வந்தார்கள்.

“அவன் ஆரு பொடியன்? என்ன சாதியாக்கள்?”

“அந்த……. எப்பபாரு வெத்தில வாயோடு… றோட்டுறோட்டா துப்பிக் கொண்டு திரியுற பொடியனோ?”

“இல்லையெண்டால் இந்தப் பக்கத்து பனைகளில கள்ளு இறக்க வாற‌ ஒரு கறுவல் பொடியாக்கும்.” நான் வாயே திறக்காமல் விசரி போல மூலைக்குள் முடங்கி அழுது கொண்டேயிருப்பேன்.

“உன்ர வடிவுக்கும் குணத்துக்கும் நீ எங்கயோ இருக்க வேண்டியனி! வெளிநாட்டு மாப்பிள்ளைய கட்டிக் கொண்டு ராசாத்தி மாதிரி வாழ வேண்டியனி…” இப்படி சொன்ன அத்தைக்கு ஊரில் நாலு ஆம்பிளைப் பொடியள். ஒருத்தனயாவது எங்களில் ஒருத்திக்கு கல்யாணம் கட்டித்தரச் சொல்லி கேட்டு அம்மாவுக்கு ஆயுலில் அரைவாசி போச்சு.

“புள்ள நீ வாயத் திறந்து உள்ளதச் சொன்னா தான் நாங்களும் ஏதும் செய்யலாம். வயித்த பாத்து வைத்தியம் பார்க்க ஏலாது. நீயும் அவனும் நிறையத்தரம் ஒண்டாயிருந்தனிங்களா? உனக்கு வயித்தில வந்து எத்தனை மாதமிருக்கும்? கடைசியா எப்பயம்மா ஏலாமல் வந்தது?” ஏதோ நர்ஸ்சுக்கு படிச்சவ போல எத்தனை கேள்விகள். எல்லாம் என்மேலுள்ள அக்கறையாம்.

சிலபேர் “அடி விசரி தப்புத் தான் பண்ணிப் போட்டாய். வயித்தில புளுப்பூச்சி தான் வந்திட்டு. ஒரு ‘பப்பா’ பிஞ்சோட சோலிய முடிச்சிருக்க வேண்டியது தானேடி மடச்சி? ” உரிமையோடு திட்டுறினமாம்!

“அது சரி நீ ஒரு வெள்ளந்தி. இப்பத்த பெண்டுகள் ஏதேதோவெல்லாம் செய்யுறாளவ. அதெல்லாம் ஊருக்கு தெரியுதா? புள்ளையப் பெத்து நடு வீட்டுக்குள்ளேயே வெட்டித் தாட்டதுகளும் ஊருக்குள்ள இருக்குதுகள். நீ பாரு அசட்டுத் தனமாக இருந்திட்டு இப்ப குடும்பத்தையே சந்தி சிரிக்க வச்சிட்டாயே ” எண்டு சொல்லி நீலிக் கண்ணீர் வடித்தனர் சிலர்

“மூணு மாசம் கழிஞ்சா என்ன? கொழும்புக்கு போனல் இப்பையும் இத கலைக்கலாமாமே! கூட்டிக் கொண்டு போங்க மச்சி…சித்தி….சின்னம்மா…குஞ்சியம்மா…” இல்லாத முறையெல்லாம் சொல்லி கொண்டு பல பேர் அம்மாக்கு அட்வைஸ்.

“ராசாத்தி அக்கா, செல்லம் கொஞ்சிக் கொஞ்சி நீ குடுத்த இடம் தான் மூத்தவள் சீரழிஞ்சு போய் நிக்கிறாள். மற்ற இரண்டு பெண்டுகளையாவது அடக்கத்தில வச்சிரு”

“அடுத்தவள் சங்கீதாவும் ஆரோடையோ ‘மோட்டச் சக்கில்’ல ஏறிக் கொண்டு திரியுறாளாம் எண்டு ஊராக்கள் கதைக்குறினம்” இப்பிடி இல்லாத பொல்லாததெல்லாம் சொல்லி எரியுற நெருப்பில் எண்ணைவார்த்த சொந்தக்காரர் தான் அதிகம். அப்பா ஊருக்குள் மரியாதையோடு இருந்த மனுசன். மேசன் வேலைக்கு போய் உடம்பை வருத்தி உழைத்து எங்களையெல்லாம் ஒரு குறையில்லாமல் வளர்த்தவர். இந்த அவமானம் தாங்காமல் குடிச்சுக் குடிச்சே ஓடாக தேய்ந்து போனேர். “எல்லாரும் படிச்சுக் கிழிச்சது கானும்” என்று தங்கச்சிகளை பள்ளிக்கூடப் பக்கம் போகாமல் செய்துவிட்டார்.

இழவு வீடு போல எல்லோர் முகங்களிலும் சோகம் அப்பிக் கிடந்தது. மாதக் கணக்காக வீட்டில் அடுப்பே மூட்டவில்லை. திரு இருதய ஆண்டவர் படத்துக்கு திரி விளக்கு ஏற்றுறதும் இல்லை. அம்மா நெற்றியில் பொட்டும் கூட வைப்பதில்லை .

“நடந்தது நடந்து போச்சு அதுக்காக ஏன் நீ விதவை போல பொட்டில்லாமல் நாலு சுவருக்குள்ளேயே முடங்கி கிடக்கிறாய்?..” என்று சில வாய்கள் கேட்கும். அம்மா பொட்டு வைத்துக் கொண்டு பக்கத்து கடைத் தெருவுக்கு போனால் “மகளின்ர கதை சந்தி சிரிக்குதாம், ஆத்தை இங்க பெரிய பொட்டும் வச்சுக் கொண்டு பூசி மினிக்கிக் கொண்டு திரியுறாவாம் ” என்று காதடிபடவே சில வாய்கள் பேசும்.

நான் வயித்தில பிள்ளையோடு பட்டினியாக கிடந்தது போல எந்தப் பொம்பிளைக்கும் வரக்கூடாது ஏதோ அந்த நேரம் பார்த்து என்னை காப்பாற்றவென்று வேளாங்கண்ணி மாதாவே அனுப்பிய மனுசன் தான் அந்தோனி ஐயா.

அவர் பக்கத்து ஊர் அப்பாவுக்கு நீண்ட காலத்து பழக்கம். இப்பிடி கேள்விப்பட்டு வீட்டிற்கு வந்து ஆறுதல் சொல்லி, ஏதோ அப்பாவோடு பேசிச் சம்மதம் வாங்கிக் கொண்டு புறப்பட்டவர், அடுத்த நாளே காலையில் வந்து என்னை கூட்டிக் கொண்டு, தேவையான உடுபுடவைகளையும் அம்மாவிடம் கேட்டு வாங்கி ‘சந்திரிக்கா வாக் ‘(Bag) ஒன்றில் வைத்து தானே சுமந்துகொண்டு என்னோடு நடக்கத் தொடங்கினார். நான் தெருவால் புள்ளியாகி மறையும் வரைக்கும் அம்மா படலையருகில் அழுது கொண்டே நின்றாள். இப்போது அதை நினைக்கும் போதெல்லாம் கண்கள் பனிக்கும்.

அந்தோனி ஐயா என்னை பஸ்சில் ஏற்றிக் கொண்டு காப்பகம் ஒன்றிற்கு கூட்டிச் சென்றார். அங்கே தான் மேரி என்று ஒரு அருட்சகோதரியை நான் சந்திக்க நேர்ந்தது. நாற்பது வயதிருக்கும். சாந்தமும் கனிவும் கொண்ட தோற்றம். அவள் முதலில் எங்களை அன்போடு வரவேற்று குடிப்பதற்கு நெல்லி ரசம் தந்து உபசரித்தாள். “மனிதர்கள் எல்லாருமே தவறு செய்பவர்கள் தான். நம் தவறுகளை உணர்ந்து திருத்திக் கொண்டு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். உன் கவலையை இறைவன் வெகு விரைவில் மகிழ்ச்சியாக மாற்றுவார். உன் கண்ணீரை துடைப்பார். என்று கூறி என்னை உள்ளே அழைத்துக் கொண்டு போனாள்.

அங்கே என்னைப் போலவே பிரச்சனையுடைய பலர் இருந்தார்கள். என்னை விடவும் வயது குறைந்த பெண்களும் இருந்தார்கள். சொந்த அண்ணால் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கற்பமாக்கப்பட்ட பதினாறு வயது நிர்மலாவை பார்க்க எனக்கே பரிதாபமாக இருந்தது. அப்போது எனக்கு பத்தொன்பது. என்னை விடவும் வயதில் மூத்த பெண்களும் இருந்தார்கள். கற்பமாகிய பின் கணவனால் கைவிடப்பட்டவர்கள், கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளானவர்கள் என பல விதமான பிரச்சனைகளில் பலர்… ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கண்ணீர் கதை.

ஆரம்பத்தில் அங்கே இருப்பதென்பது கடினமாக தான் இருந்தது. போகப் போக அருட்சகோதரி மேரி எனக்கு இன்னொரு தாயாகினாள். அங்கே இருந்த ஏனைய வயது குறைந்த அருட்சகோதரிகளும் அன்பாக பழகுவார்கள். மனதிற்கு ஆறுதலாக கதைப்பார்கள். வேளாவேளைக்கு உணவு கிடைத்தது. தினமும் அருட் தந்தை ஒருவர் வந்து வழிபாடுகளும் திருப்பலியும் நிகழ்த்துவார்.நானும் அவற்றில் கலந்து கொள்வேன். வாராவாரம் வைத்தியரும் தாதியர்களும் வந்து எங்களை பரிசோதிப்பார்கள்.

கர்ப்பினிகள் குழந்தையை நல்லபடியாக பெற்றெடுத்த சில மாதங்களில், யாராவது திருமணமாகி பல வருடங்களாகியும் குழந்தைப் பேறற்ற தம்பதிகள் காப்பகத்திற்கு வந்து அந்த குழந்தையை தத்தெடுப்பதற்குரிய சட்ட நடவடிக்கைகளை முடித்து விட்டு, தாய்க்கு ஒரு தொகை பணமும் கொடுத்துவிட்டு, அருட்சகோதரி மேரி மூலமாக குழந்தையை பெற்றுக் கொண்டு குதூகலத்தோடு போய்விடுவார்கள். நான் அங்கிருந்த காலத்தில் பலரும் தங்கள் குழந்தையை தத்து கொடுத்து விட்டு காப்பகத்திலிருந்து சென்றார்.

எனக்கு பெறுமாதம் வந்தது முள்ளந்தண்டு வலியும் குத்தும் பேயாய் படுத்தியது. அம்மா அருகில் இல்லையென்ற ஏக்கத்தோடே நிமிடங்களை யுகமாய் கடக்க வேண்டி இருந்தது.

அந்த நடு இராத்திரியில் என்னை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வண்டியின் அலறல் சத்தம் இப்போதும் என் காதுக்குள் ஒலிக்கிறது. வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டேன்…ஆண் குழந்தை. என் நிம்மதியை கெடுக்க வந்தவன் என்று திட்டிக் கொண்டேயிருப்பேன். இரண்டு நாட்களில் என்னையும் குழந்தையையும் மீண்டும் காப்பகத்திற்கே கூட்டிக் கொண்டு சென்றார்கள்.

சிரித்துக் கொண்டே என் முலைகளின் பால் குடிப்பான். என் ஒற்றை விரலை தன் பிஞ்சுக் கைகளால் பற்றிக் கொண்டே தூங்குவான்.அவனுக்கு எப்போதும் தன்னை என் மார்புச் சூட்டில் அணைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அவனுக்கு, தான் எப்படிப் பிறந்தானென்று தெரியுமா? தனக்கு அப்பா யாரென்று தெரியுமா? அவன் என் வயிற்றில் வந்து துலைந்ததால் நான் பட்ட பாடு? என் குடும்பம் பட்ட அவமானம்? என் அம்மா வடித்த கண்ணீர்? என்ன தான் தெரியும்? இல்லையென்றால் நான் அவனை யாருக்காவது தத்துக் கொடுத்து விட்டு எப்போது ஓடித் தப்புவேன் என்ற எண்ணத்தோடு இருக்கிறேன் என்பது தான் தெரியுமா? அவன் எதுவும் அறியாமல் நிம்மதியாக தூங்குவான்.

ஒரு நாள் அப்படி அவன் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த போதே காப்பகத்திற்கு வந்திருந்த ஒரு நடுத்தர வயது தம்பதியருக்கு அவனை தத்துக் கொடுப்பதற்கான ஆவணப் பதிவுகளெல்லாம் நடந்தது. அவர்கள் ஏதோ வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதாக அருட்சகோதரி மேரி கூறினாள். அவர்கள் எங்கிருந்து வந்தால் எனக்கென்ன எண்ணத்தில் காட்டுகின்ற இடத்திலெல்லாம் கடகடவென கையொப்பம் போட்டேன். நடப்பது எதுவும் தெரியாது அந்தப் பாலகன் தன் பிஞ்சு விரல்களால் என் ஒற்றை விரலை பிடித்துக் கொண்டே கண்மூடிக் கிடந்தான்.

எனக்கு வேண்டியதெல்லாம் என்னை அவமானப் படுத்திய எல்லாருக்கும் நான் வாழ்ந்து காட்டவேண்டும். இந்தச் சுமையை இறக்கி விட்டு எங்காவது சென்று இடைநிறுத்திய கல்வியை தொடர வேண்டும். வேலையொன்றில் சேர்ந்து கைநிறைய சம்பாதிக்க வேண்டும்.

பதிவுகளெல்லாம் பூர்த்தியாகிய பின் குழந்தையை கொண்டு செல்ல வந்திருந்த பெண்ணிடம் அவனை நீட்டடுகின்ற போது மனதில் ஏதோ இனம்புரியாத மெல்லிய சோகம் துளிர்விட்டது. அந்த பெண் புன்முறுவலோடு இரண்டு கைகளாலும் குழந்தையை ஏந்திக் கொண்டாள். அப்போதும் அவன் என் கைவிரலை விடமால் இறுக பற்றிக் கொண்டே தூக்கிக் கொண்டிருந்தான். மெதுவாக அந்தப் பிஞ்சு விரல்களிடமிருந்து என் விரலை விடுவித்துக் கொண்டேன். 30000 ரூபா பணம் கொடுத்தார்கள்.

அப்பாடா எப்படியோ என்னை பிடித்த சனியன் இன்றோடு தொலையப் போகிறது என்ற எண்ணம் தான் எனக்கு. அவர்கள் குழந்தையை தூக்கிக் கொண்டு அருட்சகோதரி மேரியிடம் விடைபெற்றுக் கொண்டு வெளியில் நின்ற கறுப்புக் கார் ஒன்றில் ஏறிப் புறப்பட்டார்கள்.

முப்பது வெள்ளிக் காசுக்காக யேசுவை காட்டிக் கொடுத்த யூதாசை விட முப்பதாயிரம் ரூபாயை வாங்கிக் கொண்டு பெற்ற பிள்ளையையே தத்துக் கொடுத்த நான் நான் பெரும் பாவி தானே?

அன்று நான் செய்த தவறை நினைத்து காலம் முழுவதும் கண்ணீர் விடுவேன் என்று அப்போது எனக்குத் தெரியாது. என் ஆண் குஞ்சுக்கு இப்போது பதினொரு வயது. அவன் எங்கிருப்பானோ? எப்படி இருப்பானோ? பெற்றெடுத்தவள் தன்னை தத்துக் கொடுத்த கதையெல்லாம் அவனுக்கு தெரிந்திருக்குமோ? ஒருவேளை அது அவனுக்கு தெரிந்திருந்தால் என்னை ஒரு இரக்கம் இல்லாத பாதகி என்று தானே நினைத்துக் கொண்டிருப்பான்?

ஓ நான் இரக்கமில்லாதவள் தானே? பாதகி தானே? கல் நெஞ்சக்காரி தானே? இல்லையென்றால் அந்த பாலகனின் கள்ளமற்ற சிரிப்பை கண்டும், என்னை அன்பொழுக பார்க்கும் அவனின் சின்னக் கண்களை கண்டும் இம்மியளவேனும் இரங்காது இருந்திருப்பேனோ?

உன் அம்மாவை மன்னித்து விடடா என் செல்லமே! நான் அன்று இருந்த நிலைமையில் அப்படி தவறாக முடிவெடுத்து விட்டேனடா என்னை மன்னிப்பாயா? என்னை அம்மா என்று கூப்பிடுவாயா?

எனக்கு ஒரு முத்தம் தருவாயா?

“ஏனம்மா அழுறீங்க? ”என்று கேட்கிறான் இனியன்.

“ஒன்றுமில்லை. அம்மாவிற்கு கண்னுக்குள் ஏதோ தூசு விழுந்துட்டு. நீ போய் தங்காவோட விளையாடு”

அதெல்லாம் நடக்கும் போது எனக்கு பத்தொன்பது வயது. அந்த வயதில் எந்தப் பெண்ணாக இருந்தாலும் நான் எடுத்த இதே முடிவைத்தானே எடுத்தாக வேண்டும்? நானே வாழ நாதியில்லாமல் இருந்து கொண்டு குழந்தையையும் கையுமாக என்ன செய்வது? வீட்டிற்கும் போக இயலாது. ஊருக்குள் தலைகாட்டவே முடியாது. வீதிவீதியாக சென்று பிச்சை தான் எடுத்திருக்க வேண்டும் அல்லது யாரையும் பார்த்து பல்லிளிருத்திருக்க வேண்டும். அதுற்கு என் பிள்ளையை அந்தப் பணக்கார குடும்பத்திற்கு தத்துக் குடுத்ததே நல்லது. இப்போது அவன் எங்கிருந்தாலும் வசதிவாய்ப்புகளோடு மகிழ்சியாக இருப்பான். இனி அவனை நினைத்து அழக்கூடாது…

இடைநிறுத்திய கணினி கற்கை நெறியை பூர்த்தி செய்து விட்டு வவுனியாவில் ‘காமன்ஸ்’ ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த போது பல ஆண்கள் என்னை காதலித்தார்கள். வாழ்கையில் ஒரு முறை செய்த பிழையை இன்னொரு தடவை செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

அப்போது தான் இவர் நோர்வேயில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த போது அருட்சகோதரி மேரி மூலமாக எனக்கு அறிமுகம் ஆனார். என்னை பற்றி முழுவதுமாக அறிந்த பிறகும் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். முறையாக எங்கள் வீட்டிற்கு சென்று பேசினார். பின்னர் இருவரும் சில தடவைகள் சந்தித்துக் கொண்டோம். ஆடம்பரமின்றி எங்களுக்கு திருமணமும் நடந்தது.

நான் எந்த நாளும் என் மூத்தவனின் நினைவிலேயே மூழ்கிப் போய் துன்பப் படுவது அவருக்கும் நன்றாகத் தெரியும். ஒரு நாள் இரவிரவாக நான் அழுது கொண்டிருந்த போது “ உன் பிள்ளை இப்போது எங்கிருக்கிறான் என்பதை அறிந்து கொள்ள முயற்சி செய். எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை உரியவர்களோடு தொடர்புகொண்டு பேசி, உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் நான் உன்னை கூட்டிக் கொண்டு சென்று அவனை சந்திக்க வைக்கிறேன். அவர்கள் சம்மதித்தால் நீ அவனை நம்முடைய வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்தாலும் எனக்கு சம்மதம்” என்று சொன்னார்.எனக்கு அது ஆச்சரியமாக தான் இருந்தது.

நானும் இலங்கையில் உள்ள அருட்சகோதரி மேரியோடு அழைத்து பேசினேன். “சிஸ்டர் இப்பயெல்லாம் எனக்கு என் பிள்ளை நினைப்பாகவே இருக்குது. என் குழந்தை எங்கேயிருக்கிறான்? நான் ஒருமுறையாவது அவனை பார்க்க வேண்டும்” என்று கதறி அழுதேன்.

“நான் இப்போது காப்பகத்தில் இல்லையம்மா. நான் வேறு பணிக்கு இடம் மாற்றப்பட்டு இரண்டு வருடங்களாகிறது. அவர்களின் முகம் கூட எனக்கு சரியாக நினைவில் இல்லை. தொடர்புகளும் இல்லை. அவர்கள் இப்போது எங்கேயிருக்கிறார்கள் என்ற விடையங்கள் எல்லாம் எனக்குத் தெரியாதம்மா”

“சிஸ்டர் முடிந்தால் எனக்காக இந்த உதவியை மட்டும் செய்யுங்கள்…”

சிறிது நேரம் மெளனம்…

“சரி உனக்காக நான் காப்பகத்தில் பேசுறேன். பழய பதிவுகளை எடுத்து பார்த்து அவர்களுடைய விபரங்களை கேட்டறிகிறேன். ஆனால் இந்த விடயம் எவ்வளவு பாரதூரமானது என்பது உனக்கு தெரியும். ஆனாலும் உன்னில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது. எனக்கு கொஞ்சம் கால அவகாசம் கொடு .விபரங்கள் கிடைத்ததும் நானே உனக்கு அழைத்துப் பேசுவேன்” என்று கூறினார். ஆனால் இன்றுவரை அருட் சகோதரி மேரி எனக்கு திரும்ப அழைக்கவே இல்லை.

வாறது இவற்ற கார் போல தான் இருக்கு. ஓ.. இவர் தான்.

“இனியன் …நித்திலா…. அப்பா வாறேர்”.

இவர் காரில் என்னையும் பிள்ளைகளையும் ஏற்றிக் கொண்டு வேகமாக பயணித்து ஒரு சொப்பிங் மாலின் வாகன தரிப்பிடத்தில் நிறுத்துகிறார்.கிறிஸ்மஸ் சீசன் என்பதால் கூட்டம் நிரம்பி வழிகிறது. இப்போது நாங்கள் குழந்தைகளுக்கான ஆடைகள் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும் கண்ணாடி அறையில் நிற்கிறோம்.

நான் பதினொரு வயது ஆண் குழந்தைகளுக்கான ஆடைப் பகுதிக்குள் கண்களை ஊர விடுகிறேன். அந்த பொம்மைக்கு மாட்டியிருக்கும் சிவப்பு நிற சேர்ட் என் மூத்த ஆண் குஞ்சுக்கு உடுத்தினால் அழகாக இருக்கும். அவனுக்கு நாளைக்கு பிறந்த நாள்.

அவனுடைய ஒவ்வொரு பிறந்தநாளுக்கும், பண்டிகைகளுக்கும், ஆடைகளை வாங்கி வாங்கி வைப்பதால் என்ன தான் இவளுக்கு வந்து விடப் போகிறது? என்று என் கணவர் கூட நினைக்கலாம். நான் அவனுக்காக வாங்கும் ஆடைகளை உடுத்திக் கொண்டு தானே அவன் என் கனவுகளில் வருகிறான்.

என்றோ ஒரு நாள் என் பிள்ளையை சந்திக்க நேர்ந்தால் அவனுக்காக நான் ஆசையாக வாங்கிய ஆடைகளை பார்த்தாலாவது என் இத்தனை ஆண்டுகால காத்திருப்பும் தவிப்பும் அவனுக்கு புரிந்து விடாதா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *