கதையாசிரியர்:
தின/வார இதழ்: மணிக்கொடி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 27, 2023
பார்வையிட்டோர்: 5,817 
 

(1934ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று இரவெல்லாம் நல்ல மழை.

காற்றும் மழையும் இருளுடன் சேர்ந்து ஒரு பெரிய கூத்து நடத்தி விட்டுச் சென்றன.

இரவு பூராவும் “ஹோ! ஹோ!” என்று ஓலம். பேயின் எக்காளச் சிரிப்பு. கத்தி வீச்சு மின்னல்கள். சடசடா என்ற குமுறல்கள் குடலைக் கலக்கின.

மழைநின்றது.

காற்று ஓய்ந்தது.

சொட்டுச் சொட்டென்று நீர்த் துளிகள்.

வீட்டு வெளிச்சத்தில் ஒளி பெற்று, ஜன்னல் உயரம் உயிர் பெற்று மறுபடியும் இருள் துண்டமாக மறைந்தன.

வீட்டிலே நிசப்தம்-

இந்த ஓலத்திலே அதன் நிரந்தர சப்தத்திலே தூங்கிக் கொண்டிருந்த எனக்கு மழை ஓய்ந்ததும் விழிப்பு வந்தது.

அந்த நிசப்தம்! அந்த மௌனம்! என் மனத்திலே என் னென்னவோ குவிந்து மறைந்தன. ஒன்றோடொன்று ஓடித் தளர்ந்துமறையும் எண்ணக் குவியல்கள்.

திடீரென்று…

தூளியிலிருந்து குழந்தை…என் குழந்தை…

“அம்பி! அம்பி! குச்சியை எடுத்துண்டு வா…சீமா எடுத்துண்டு வா…” வீறிட்டு அழுகை…

“என்னடா கண்ணே…அழாதே..” என்று என் மனைவி எழுந்தாள்.

“அம்பி! இந்தக் குச்சிதான் ராஜாவாம்… சாமிடா…நீ கொட்டு அடி, நான் கும்படறேன்…”

“நான்தான் கும்பிடுவேன்…” ஒரே அழுகை…

நான் படுக்கையை விட்டு எழுந்திருந்தேன்…ஜன்னலருகில் சென்று நின்றேன்…

சிதறிய கருமேகங்களிடையே நட்சத்திரங்கள் கண் சிமிட்டின.

உள்ளே நிசப்தம்…

தாயின் மந்திரந்தான்.

குழந்தை எந்தக் கனவு லோகத்திலோ முல்லைச் சிரிப்புடன் மகிழ்ந்து தூங்கினான்.

தாய்…அவளுக்கு என்ன கனவோ!

என்ன கனிவு! என்ன ஆதரவு! அந்தத் தூக்கத்தின் புன்சிரிப்பு!

குழந்தையின் உதட்டிலே ஒரு களங்கமற்ற, கவலையற்ற மெல்லிய நிலவுச் சிரிப்பு.

தாயின் அதரங்களிலே கனிவு, ஆதரவிலே அவற்றின் கனியான சிரிப்பு…

என் மனதில் சாந்தி…

புதிய ஒளி

அன்று விடியற்காலம். கீழ்த் திசையிலே தாயின் ஆதரவு, குழந்தையின் கனவு-இரண்டும் கலந்த வான் ஒளி.

என் மனதில் ஒரு குதூஹலம்.

எனக்கு முன் என் குழந்தையின் மழலை…

பூவரச மரத்தடியிலே… “இந்தக் குச்சுதான்டா சாமி…நான்தான் கும்பிடுவேன்…”

– மணிக்கொடி 16-09-1934, புதிய ஒளி, முதற் பதிப்பு: டிசம்பர் 1953, ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *