பில்லி சூனியம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 5, 2024
பார்வையிட்டோர்: 2,806 
 
 

ஊரிலிருந்து ரமா தன் தாய் வீட்டிற்கு வந்திருந்தாள். “மாமாவுக்கு ஒரு மாசமா ஒடம்புக்கு செரியில்லை”என அழுதாள். 

“டெய்லியும் போன்ல பேசறியே சொல்லியிருந்தா ஓரெட்டு வந்து பாத்திருப்பமில்ல” சுகர் அதிகமாகி நடக்கவே சிரமப்படும் அவளது தாய் விசாலாட்சி கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு சென்று மருமகனைப்பார்ப்பது நடக்காத காரியம் என்றாலும் பேசுவது எளிதென்பதால் பேச்சில் மட்டும் சிக்கனம் பார்க்காமல் பேசினாள்.

    “ஏம்மா பில்லி சூன்யம்னு சொல்லறாங்களே… அது நெசந்தானா….?” கேட்ட மகள் ரமாவை துணி துவைத்துக்கொண்டிருந்த தாய் படக்கென நிமிர்ந்து பார்த்து, “ஏங்கண்ணு?”எனக்கேட்க, “சும்மா ஒரு டவுட், அதான்” என்றாள் சிக்கனமாக ரமா.

    “எனக்கு பத்து வயசு இருக்கறப்ப எங்கப்பாவுக்கு திடீர்னு ஒடம்புக்கு செரியில்லாமப்போச்சு. கூரைச்சாலைல தோட்டத்துல தான் குடியிருந்தோம். ஒடம்பு நாளுக்கு நாள் உருகிட்டே வந்து ஆளையே நடமாட்டமில்லாம மொடக்கிப்போடுச்சு. எங்கம்மாவும் போகாத கோயிலில்ல, வேண்டாத சாமியில்ல. ஆஸ்பத்திரிக்கு போனாலும் ஒரு நோயுமில்லேன்னு டாக்டருக சொல்லிப்போட்டாங்க. இப்படியிருகற போது ஒரு நாளு, கழி கிண்டற கவைய கூரைல உள்ளிருந்து சொருகினப்ப வெளிப்பக்கம் பொத்துன்னு என்னமோ சத்தங்கேட்டு போயி பாத்த எங்கம்மா, அங்க கெடந்த ஒரு பொட்டலத்த எடுத்து வந்து சந்தேகத்துல எரியற அடுப்புல போட்டங்காட்டிக்கு ஒரே ரத்தமா உருகி போச்சாமா. அதுக்கப்பறம் எங்கப்பா தருத்தினம் புடிச்சவராட்டா ஒரு வேளைக்கு நாலு பேர்த்தோட சோத்த சாப்புட்டாருன்னா பாத்துக்குவே. இதைய சூன்யமில்லாம வேற என்னன்னு சொல்லறது? நீயே சொல்லு” அடை மழை பெய்ந்து ஓய்ந்தது போலிருந்தது விசாலாட்சியின் பேச்சு.

    “மாமாவுக்கு யாராச்சும் பண்ணியிருக்காங்களான்னு எனக்குத்தெரியேணும். அதுக்காக வேண்டித்தான் இப்ப முக்கியமா வந்தேன்” சொல்லி மீண்டும் அழுதாள் ரமா.

    ” நம்ம ஊருல இருந்த வைத்தியகாரன், அவன பைத்தியகாரன்னு சொல்லுவாங்க. அவம் பேரு கூட பிசவன். சூனியம் எடுக்கறவன். அவன் குட்டிச்சாத்தான வெச்சு ஊட்டு மேல கல்லு போடறதா ஊரே ஒன்னு சேர்ந்து ஊரவுட்டே தொரத்தி உட்டுட்டாங்க. இப்ப ஒரு பக்கம் இருக்கறான்னு கேள்விப்பட்டேன். நம்ம அருக்காணி பொண்ணுக்கு உனக்கு மாதிரியே பத்து வருசம் கொழந்தை இல்லாம பிசவம் போயி அவ ஊட்டு வாசல்ல பொதைச்சு வெச்சத எடுத்த பெறகு அஞ்சு கொழந்தைக பொறக்கிலியா? அவன் கெட்டிக்காரன். உன்னப் பாத்தாலே மாப்பிள்ளைக்கு இருக்கற பிரச்சினைய சொல்லிப்போடுவான். நீ போயி உனக்கு புடிச்ச அரிசிம்பருப்பு சோறு ஆக்கி வெச்சிருக்கறேன். எருமைத்தயிறு நல்லா கத்தி போட்டு அறுக்கற மாதர தெவஞ்சு கெடக்குது. வடக்கல்லுல உனக்குப்புடுச்ச கத்திரிக்கா உருளக்கெழங்கு பொறியலும் இருக்குது. வட்டல்ல போட்டு சாப்புட்டு போட்டு பெட்ல படுத்து தூங்கு. நாளைக்கு காத்தாளைக்கு நேரத்துலயே போயி பாத்துப்போட்டு வந்திருவோம். அப்படி சூனியம் கீனியம் இருந்தா இங்கிருந்தே எங்கிருக்குதுன்னு சொல்லிப்போடுவான். அவ்வளவு கெட்டிக்காரன்னா பாத்துக்கவே” என தாய் கூறியதைக்கேட்டு நிம்மதியடைந்தவளாய் சமையல் கட்டுக்குள் புகுந்தாள் ரமா‌.

    ரமா , அவளது தாய் விசாலாட்சி, பக்கத்து வீட்டு பாப்பாத்தி சித்தி என மூவரையும் அழைத்துக்கொண்டு தனது காரில் ஐந்து கிலோ மீட்டர் தள்ளி இருந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் புதிதாக விவசாய நிலத்தை அழித்து சைட் போட்ட பகுதியில் கட்டியிருந்த ஒத்தை வீட்டிற்கு முன் இருந்த விளம்பர பலகையைப்பார்த்து நிறுத்தினான் ரமாவின் தம்பி சந்திரன்.

    வீட்டின் முன் பலர் நின்று கொண்டும், அங்கே போடப்பட்டிருந்த சேரில் அமர்ந்து கொண்டும் இருந்தனர். குழந்தைகள் சிலருக்கு பாடம் அடித்துக்கொண்டிருந்தார் அறுபது வயது மதிக்கத்தக்க பிசவன். பிசவனுக்கு குழந்தைகள் இல்லை. பில்லி சூனியம் செய்பவர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகள் பிறக்காது. குட்டிச்சாத்தான்களை குழந்தைகளாக நினைத்துக்கொள்வார்கள் என சிறு வயதில் பெரியவர்கள் கூறுவதை ரமாவும் கேட்டுள்ளாள்.

    அடங்காத குழந்தைகளை ‘குட்டிச்சாத்தான், ஒரு நிமிசங்கூட சும்மாவே இருக்க மாட்டேங்குது. இது வந்து எப்புடி எம்பட வயித்துல பொறந்துதோ?’ என அம்மாக்கள் பேசுவதைக்கேட்காமல் இருப்பவர்கள் தமிழ் நாட்டில் இருக்க மாட்டார்கள். எந்த ஒரு வார்த்தையும் நடக்காமல் பேசப்படுவதில்லை. 

    ‘கழுத்தளவு தண்ணீல நின்னு மந்திரஞ்சொல்லி வாங்குன வரத்துல ரெண்டு குட்டிச்சாத்தான் கெடைச்சதுன்னும், அதுகளுக்கு வேலை கொடுத்துட்டே இருக்கோணும்னு சொல்லுவாங்க. ஒரு படி கடுக எறைச்சு எண்ணச்சொல்லிடுவாங்களாம். என்ன வேலை கொடுத்தாலும் செய்யுமாம்’ விசாலாட்சி ரமாவிடம் சொன்னாள்.

    விரும்பிய பெண்களை தன் வசப்படுத்த, வசதியான ஆண்களை பணத்துக்காக பெண்கள் வசப்படுத்த, சொத்துக்களை பெற்றோரிடமிருந்து பிரச்சினையில்லாமல் எழுதி வாங்க, எதிரிகளுக்கு விபத்து ஏற்படுத்த, மன நலம் பாதிக்கச்செய்து சொத்துக்களை அபகரிக்க, நன்றாக வாழ்வோரை நாசமாக்கி சந்தோசப்பட, தொழில் லாபம் அதிகரிக்க, வேறொருவரால் செய்யப்பட்ட சூன்யத்தை எடுக்க, போட்டியில் வெற்றி பெற என பலர் வந்திருப்பதால் பிசவனுக்கு பணம் பெட்டியை நிரப்பியது.

    விசாலக்கா நல்லா இருக்கறயா? உம்பட மகன் சந்திரான் வந்திருக்கிறானா? ” என விசாலாட்சியைப்பார்த்ததும் நலம் விசாரித்தார் பிசவன்.

    “வாப்பா சந்திரா. என்னைய ஊருட்டு முடுக்குன கூட்டத்துல உன்னையும் பாத்தனில்ல. இப்பப்புரியுதா? என்ற அருமை என்னன்னு? எருமத்தயிரக்கொடங்கொடமா குடிச்சு மூளைய கொழுப்பு மூடுன உனக்கெங்க புரியப்போகுது. ஊர்ல இருந்தபோது உங்கம்மாகுட்ட எருமப்பால் ஊட்டுக்கு வாங்காதீங்கன்னு சொன்னா எங்க கேக்கறாப்ல” நக்கலாகப்பேசி நமட்டுச்சிரிப்பை சிரித்து வந்த காரணத்தைக்கேட்டு சிறிது மௌனமானவர், ரமாவை மட்டும் தனியாக வீட்டிற்குள் கூட்டிச்சென்றார்.

    வெளியே வந்த ரமா பேயறைந்தது போல நின்றாள். உடனே நேராக காரை பேருந்து நிலையத்துக்கு விடச்சொல்லி சென்னைக்கு செல்லும் பேருந்தில் ஏறி கிளம்பினாள்.

    வீட்டிற்குச்சென்றதும் பிசவன் சொன்ன, ஒரு மாதமாக படுக்கும் பெட்டிற்கு அடியே கிடந்த கணவனின் சகோதரியின் சூட்கேசைத்தேடினாள். அங்கு காணவில்லை.

    “ஏங்க நான் ஊருக்கு போனதுக்கப்புறம் உங்க தங்கச்சி வீட்டுக்காரர் நம்ம வீட்டுக்கு வந்தாரா? என கணவன் சங்கரனைக்கேட்டாள் ரமா.

    “இன்னைக்கு காலைல வந்தவரு ஒடம்பு சோர்வா இருக்கு உங்க பெட்ல கொஞ்ச நேரம் படுக்கட்டுமான்னு கேட்டாரு. நான் எப்படி வேண்டாம்னு சொல்ல முடியும். படுத்துக்கங்கன்னு சொல்லிட்டு நான் ஹால்ல சோபால இருந்தவன் சோர்வுனால தூங்கிட்டேன். மதியம் பார்த்தா சொல்லாமையே எழுந்து போயிட்டாரு” எனக்கூறிய போது தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைக்காட்டிக்கொள்ளாமல் வீட்டு வேலைகளைச்செய்ய ஆரம்பித்து விட்டாள்.

    ரமாவின் கணவனின் தங்கை வசந்தி கணவர் பரமனுக்கு வேலை போய் விட்டதால் வாழ வழியின்றி தன் மாமனார் வீட்டிலிருக்கும் ஒரு போர்சனில் மாமியார் மட்டும் தனியாக இருக்க, அங்கேயே குழந்தைகள் இரண்டு பேருடன் வந்து தங்கி விட்டனர். மேலும் இரண்டு போர்சனில் வரும் வாடகையை வாங்கி ரமாவின் மாமியார் மரகதம், மகள் குடும்பத்தைக்காப்பாற்றுகிறார். அவர்கள் வந்து ஒரு மாதமாகிறது. இந்த ஒரு மாதமாக வேலைக்குப்போக முடியாத அளவுக்கு சங்கரனுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது.

    பிசவன் சொன்னது போல் தினமும் தேங்காய் தொட்டியை காயவைத்து அதில் நெருப்பிட்டு தனலாக்கி அதில் கட்டிச்சாம்பிராணியை உடைத்து தனலில் தூவி மாலை நேரம் வீட்டில் காட்டினாள். அடுத்த நாள் மளிகைக்கடைக்கு சென்று வரும்போது பரமனுக்கு அடிபட்டு கை முறிந்தது. மருத்துவ மனைக்குச்சென்று கட்டுப்போட்டு சிகிக்சை பெற்று வந்ததிலிருந்து ரமாவை ஒரு எதிரியைப்பார்ப்பது போல் முறைத்து, முறைத்துப்பார்த்தான்.

    இரண்டு நாட்களுக்குப்பின் சங்கரன் எப்போதும் போல வேலைக்கு செல்லத்துவங்கியது ரமாவுக்கு மட்டும் மகிழ்ச்சியளித்தது. 

    ஒரு மாதம் பின் ரமா அடிக்கடி வாந்தி எடுத்தாள். மருத்துவரிடம் சென்று காட்டும் போது குழந்தை உருவாகியிருப்பதைக்கேட்டு அளவில்லாத மகிழ்ச்சியடைந்தனர் ரமாவும், சங்கரனும். திருமணமாகி பத்து வருடங்களாக குழந்தை இல்லாமலிருந்தவர்களுக்கு எதிர்பாராத தருணத்தில் குழந்தை உருவானது ஆச்சர்யமாகவும் இருந்தது.

    இந்த செய்தியைக்கேட்ட சங்கரனின் தங்கை வசந்தி தேம்பி, தேம்பி அழுதாள். “என்னோட மூத்த பையன் ஜாதகத்துல மாமனுக்கு குழந்தை பிறந்தா உசுருக்கு ஆபத்துன்னு எங்க சோசியர் சொன்னாரு. இந்தக்குழந்தை உருவாகப்போற நேரம் வந்ததுனாலதானோ என்னமோ ஒரு மாசமா அண்ணனுக்கு ஒடம்பு செரியில்லாமப்போனதுக்குக்கு காரணமாயிப்போச்சு. அதனால….” என்றவளை ஓடிச்சென்று அவளது வாயைப்பொத்தினாள் ரமா.

    “பேசாதே. இதுக்கு மேல ஒரு வார்த்தை கூட அபசகுனமா பேசாதே. இந்த வீட்டு மேல ஆச வெச்சுத்தானே, வாரிசு வந்தா வீடு கெடைக்காதுன்னு நெனைச்சுத்தானே நீ அழறே?” என கோபமாகக்கேட்டாள் ரமா.

    “ஐயயோ அப்படி நாஞ்சொல்லுவேனா? கூடப்பொறந்த அண்ணனுக்கு சதி பண்ணுவேனா?” என்றாள் பதறியபடி வசந்தி.

    “வேண்டாம். எங்களுக்கு இந்த வீடே வேண்டாம். ஒரு குழந்தை கெடைச்சாப்போதும். என்னோட கணவன் நல்லா இருந்தா போதும். நாங்க அடுத்த வாரமே வேற வாடகை வீடு பார்த்து போயிடறோம். இந்த வீட்டை நாளைக்கே உங்க பேர்ல கிரையம் பண்ணக்கையெழுப்போட்டிடறோம்” என ரமா கூறியதைக்கேட்டதும், முகம் மலர்ந்த வசந்தி “அப்புறம் ஒன்ன மறந்துட்டேன். நேத்துப்பார்த்த சோசியர் ஒருத்தர் இந்த வீட்ட நீங்க எனக்கு கொடுத்துட்டு வேற வீட்டுக்குப்போனா குழந்தை தங்கும்னு சொல்லிட்டாரு. அப்படியே பண்ணிருங்க” எனக்கூறியவள் திரும்பி கண்ணீரைத்துடைத்தபடி சிரித்துக்கொண்டாள்.

    இரண்டு விசயங்கள் சம்மந்தமாகவும் வசந்தி கூறிய படி இரண்டு சோதிடர்களையும் அவள் சந்திக்கவில்லை, சொத்தை அபகரிக்கப்போடும் நாடகம் இதுவென்பது அவளுக்கும், அவளது கணவன் பரமனுக்கு மட்டுமே தெரியும்.

    ‘கணவனின் குடும்பத்தினரால் தனக்கும், தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் என்ன கெடுதல் வேண்டுமானாலும் நடக்கலாம். இதுவரை மறை முகமாக பாதிப்புகளை உருவாக்கியவர்கள் இனி மேல் நேரடியாகவே இடையூறு செய்யத்துணிவார்கள்’ எனும் பயத்தில் வீடு மாற முடிவெடுத்தாள் ரமா.

    தொலைக்காட்சியில் பில்லி சூனியம் எனும் நாடகம் பார்த்துவிட்டு அசதியில் சோபாவிலேயே ஆழ்ந்து தூங்கி கனவுலகில் வாழ்ந்த ரமா காலிங்பெல் அடித்ததும் விழிப்பு நிலைக்கு வந்தாள்.

    எழுந்து போய் கதவைத்திறந்த போது கணவரின் தங்கை வசந்தியும், அவளது கணவர் பரமனும் நின்று கொண்டிருந்தனர்.

    “என்ன அண்ணி பகல்லியே தூக்கமா? கடவுளாகப்பார்த்து உங்களை சமைக்காம தூங்க வெச்சிருக்கோணும்னு வேண்டிகிட்டேன். ஏன்னா நான் சமைச்ச பிரையாணியத்தான் உங்க பிறந்த நாளான இன்னைக்கு நீங்க சாப்பிடோணும்னு செஞ்சு எடுத்துட்டு வந்தேன். ஆனா ஒரு கண்டிசன். நான் தான் உங்களுக்கு ஊட்டி விடுவேன். அப்புறம் இன்னொரு சந்தோசமான செய்தி. வளசரவாக்கத்துல வீடு வாங்கிட்டோம். ஒரு வீடில்லை. ரெண்டு வீடு. எதுக்குன்னு நெனைக்கறீங்களா? ஒன்னு எங்களுக்கு. இன்னொன்னு உங்களுக்கு. அதுக்கு மொத்த பணத்தையும் எங்க வீட்டுக்காரர் தான் கொடுப்பேன்னும், உங்க கிட்ட ஒத்த ரூபா கூட வாங்கக்கூடாதுன்னு சொல்லிட்டாரு” என சொன்ன வசந்தியை மகிழ்ச்சியில் கட்டியணைத்துக்கொண்டாள் ரமா.

    Print Friendly, PDF & Email

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *