நான் விரும்பிய மிகச் சிறிய கதை

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 2, 2012
பார்வையிட்டோர்: 27,718 
 

பாரிஸ் நகரத்தில் மிக அழகான பெண் ஒருத்தி இருந்தாள். அவளைத்தான் உலகிலேயே மிக விலை உயர்ந்த தாசி என்று சொன்னார்கள். அவளை அடைய, அவளுடன் (சந்தேகமில்லாமல் இன்பமாக) ஒரு மாலைப் பொழுதை கழிப்பதற்கு மிகுந்த பணம் தேவையாக இருந்தது.

நகரத்தின் அருகிலே ஒரு பெரிய மிலிட்டரி காம்ப் இருந்தது. அதில் இருந்த எல்லா ஆண்களின் கனவு அந்தப் பெண்ணுடன் ஒரு தினம்.

அவர்களில் ஒருவன் ஒரு நாள் மாலை மற்றவர் எல்லாரையும் திரளாகக் கூப்பிட்டு இவ்வாறு சொன்னான். “நண்பர்களே! நாம் எல்லோரும் குணத்திலும், உருவத்திலும், மனப்பான்மையிலும் வேறுபட்டவர்களாக இருந்தாலும் நம்மிடம் ஒரு ஆசை மட்டும் பொதுவாக இருக்கிறது. அது மிஸ் —-உடன் ஒரு இரவாவது இன்பமாகக் கழிப்பது. அதற்கேற்ற செல்வம் நம் ஒருவரிடமும் இல்லை. ஆனால் இவ்வளவு பேர் இருக்கிறோம். நாம் எல்லோரும் ஆளுக்கு ஒரு ஃபிராங்க் போட்டு ஒரு நிதி திரட்டுவோம். போட்டவர்கள் பேரை எல்லாம் சீட்டுகளில் எழுதிக் குலுக்கி ஒரு சீட்டு தேர்ந்தெடுப்போம். எவன் பெயர் வருகிறதோ அவன் மற்றவர்களின் பிரதி நிதியாக, திரண்ட பணத்தை எடுத்துக் கொண்டு அவளிடம் சென்று வரட்டும். வந்து தன் அனுபவத்தை மற்றவர்களிடம் சொல்லட்டும்.”

இதற்கு அவர்கள் எல்லோரும் ஒப்புக்கொள்ள, மிகப் பெரிய வசூல் நிதி சேர்ந்தது. எல்லோர் பெயரும் சீட்டுக்களில் எழுதப்பட்டு ஒரு பெரிய ட்ரம்மில் குலுக்கப்பட்டு, ஒரு பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அதிர்ஷ்டம் அடித்தது ஒரு சாதாரண சோல்ஜருக்கு. அவன் அளவிலா ஆனந்தம் அடைந்து சுத்தமாகத் தலை வாரிக் கொண்டு ஷூஸ் பாலிஷ் போட்டுக் கொண்டு தன் மிகச் சிறந்த ஷர்ட் அணிந்து கொண்டு சேகரித்த பணத்தை எடுத்துக் கொண்டு மற்றவர்களின் பொறாமைப் பெருமூச்சுகள் தொடர அந்தப் பெண்ணை நோக்கிச் சென்றான்.

அந்த மிக அழகான பெண்ணுடன் அவன் அந்த மாலை நிஜமான கனவில் மிதந்தான். அவள் சிநேகிதமும், அவள் மென்மையும் அவள் வடிவமும் அவள் உடம்பின் சில்க்கும் அவள் வாசனையும் அவள் இன்பமான பேச்சும் பேச்சுக்குப் பின் மூச்சும்….

கடைசியில் அவளிடமிருந்து விடைபெறுகையில் அந்தப் பெண் அவனை “நீ யார்?” என்று கேட்டாள்.

“ஏன் கேட்கிறாய்?” என்றான்.

என்னைப் பிரபுக்களும் அரச குமாரர்களும்தான் பார்க்க வருவார்கள். உன்னைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை” என்றாள்.

அவன் “நான் ஒரு சாதாரண சோல்ஜர்” என்றான்.

“அப்படியா! உனக்கு இவ்வளவு பணம் எப்படிக் கிடைத்தது? எங்கேயாவது…”

“இல்லை இல்லை” என்று அந்த இளைஞன் தன் காம்ப்பில் நடந்ததை முழுவதும் சொல்லி விட்டான்.

அதைக் கேட்ட அவள் ஆச்சரியப்பட்டாள். “என்னை நினைத்து பல்லாயிரக் கணக்கானவர்கள் உருகுகிறார்களா? என்னிடம் இவ்வளவு பேர் ஆசை வைத்திருக்கிறார்களா? உன் கதை என் நெஞ்சைத் தொடுகிறது… அதற்காக நான் உனக்கு ஒரு பரிசு அளிக்கப் போகிறேன்… மறக்க முடியாத பரிசு… உலகத்திலேயே மிக விலை உயர்ந்த பெண்ணுடன் நீ ஒரு இரவை முழுக்க முழுக்க இலவசமாகவே கழித்தாய் என்று இருக்கட்டும். எனக்கு உன் பணம் வேண்டாம்….”

இவ்வாறு சொல்லி அந்தப் பெண் அவனிடம் அவனுடைய ஒரு ஃபிராங்க்கை திருப்பித் தந்து விட்டாள்!

Print Friendly, PDF & Email

2 thoughts on “நான் விரும்பிய மிகச் சிறிய கதை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *