கதையாசிரியர்:
தின/வார இதழ்: சுதேசமித்திரன்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 1, 2023
பார்வையிட்டோர்: 3,639 
 

(1967ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செல்லம்மாளுக்கு என்ன வயசு இருக்கும் என்பது அந்த ஊரில் யாருக்குமே தெரியாது. அவள் வயசு அவளுக்கே தெரியாது. அதைத் தெளிவுபடுத்தக்கூடிய ஜாதகமோ, குறிப்போ எதுவுமே கிடையாது.

அவள் வயசை திட்டமாகத் தெரிந்து வைத்திருந்தவர் ஒருவர்தான்; அவளுடைய அண்ணாச்சி பரமசிவம் பிள்ளை. ஆனால், அந்த விஷயத்தை எதிலும் குறித்து வைக்காமலே அவர் இறந்து போய்விட்டார். அவர் போயும் வருஷங்கள் பல ஆகிவிட்டன. அந்தக் கணக்கும் அவளுக்கு மறந்து விட்டது.

செல்லம்மாளுக்கு வயசு எழுபது இருக்கலாம், எண்பதா கவே இருந்து விடலாம் அல்லது, எழுபதுக்கும் எண்ப துக்கும் இடைப்பட்ட எதுவாக வேண்டுமாயினும் இருக் கலாம். அது அவளுக்கே நிச்சயமாகத் தெரியாததனால், ‘ஏளா, உனக்கு வயசு என்ன இருக்கும்?’ என்று அவளிடம் யாராவது அவ்வப்போது விசாரிக்கிறபோது, அந்த நேரத் தில் தனக்குத் தோன்றியதை அவள் சொல்லி வைப்பாள்; எழுபதுக்கும் எண்பதுக்கும் இடைப்பட்ட ஏதாவது ஒரு எண்ணாகத்தான் இருக்கும் அது.

அவள் இப்படி ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு எண்ணைச் சொல்வதனால், தனது வயசு விஷயத்தில் செல்லம்மா பொய் சொல்கிறாள் என்று நினைக்கக் கூடாது. அப்படி நினைத்தால் அது முழுத் தவறுதான். எழுத்து – படிப்பு வாசனை இல்லா மல், ஞாபகசக்தியும் திடமாக இராது. தங்கள் வயசைக் கூடச் சரியாகத் தெரிந்துகொள்ள இயலாத நிலையிலே இன்னும் எத்தனையோ பேர் – குறைந்த வயசுக்காரர்கள் கூட-இருக்கிறார்கள். ஆகவே, வயசு முதிர்ந்து, தள்ளாமையில், ‘பொழுது எப்ப விடியும்? நாள் எப்ப கழியும்?” என்று காலத்தைச் சுமையாகத் தாங்கிக்கொண்டு, செயல் இழந்து – செயல் திறம் எதுவுமற்று – எப்படியோ வாழ்ந்துகொண் டிருக்கிற பென்னம் பெரிய மனுஷியை ‘பொய்சொல்லி” என்று மதிப்பிடவே கூடாது.

கைலாசத்தின் நினைப்பு அதுதான்; அவன் அவளுக்கு ஏதோ ஒரு வகையில் உறவு. அவள் முதுமையில் அவனுக்கு ஒரு மரியாதை.

பொதுவாக எல்லோருக்கும் செல்லம்மாளிடம் தனி மதிப்பும் மரியாதையும் உண்டு. அவள் ரொம்ப வயசான பெரிய மனுஷி. ‘கோயில் மாதிரி’ அவளிடம் பணியும் பக்தி யும் காட்ட வேண்டும் என்றொரு நினைப்பு. இதுபோக, அவள் பெரிய இடத்திலே பிறந்து வளர்ந்தவள் என்பதற்காக ஒரு மரியாதை. அவள் கல்யாணமாகி வாழவந்த வீடும் குடும்ப மும் அந்த ஊரிலே பெரியவை, கெளரவம் உடையவை என்பதனால் மேலும் அதிகமான மதிப்பு. அவள் கணவன் செயலாக வாழ்ந்து, ‘செயம் செயம் என்று கட்டி அடித் தவர் என்ற பெருமை பெற்றுத் தந்த தனி மதிப்பு – இப்படி யாக அந்த ஊரார் அவளை கௌரவித்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

ஆனாலும் செல்லம்மாளுக்கு அந்த ஊர் மீது நல்ல அபிப்பிராயம் கிடையாது. ‘இதுவும் ஒரு ஊரா?’..’ஒரு ஊரோடு சேர்த்தியா இது! என்று அவள் அடிக்கடி சொல்லு வாள். அங்கு வசிக்கிற – வசித்த-மனிதர்களைப் பற்றியும் அவள் பருமையாகப் பேசமாட்டாள். ‘இவனும் மனுஷனா?’…’சீ இவங்களும் மனுசங்க மாதிரி!’ என்று கசப் புடன் அவ்வப்போது குறிப்பிடுவாள்.

இதற்காக அந்த ஊர்க்காரர்கள் அவளிடம் சண்டைக்குப் போவது கிடையாது. ‘கோயிலு போல இருக்கிற ஒரு பெரியவள் தானே சொல்கிறா? சொல்லி விட்டுப் போகட்டுமே!” என்று பேசாமல் இருந்துவிடுவார்கள்.

ஆனால், செல்லம்மா அந்த ஊரைக் குறைவாகப் பேசுவ தோடு திருப்தி அடைவதில்லை. எங்க ஊருலே அப்படி எங்க ஊரிலே இது என்ன மாதிரி நடக்கும்’ என்று பேச்சுக்குப் பேச்சு புகழுரை தூவிக்கொண்டே இருப்பாள்.

அவள் வசித்து வந்த கானப்பாடி என்கிற ஊர் அவளுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு மட்டமானதாகத் தோன்றியதோ அவ்வளவுக்கு உயர்ந்ததாக, குறைகள் எதுவும் இல்லாததாக, வளங்களும் நலன்களும் நிறைந்ததாக இருந்தது, அவள் பிறந்த ஊரான நல்லூர் – இதுதான் அவள் எண்ணம். அவள் பேச்சில் தீட்ட விரும்பிய சித்திரமும் இதுவே.

இது கானப்பாடிக்காரர்களுக்குப் பிடிப்பதில்லை; அவர் களுக்கு மனவருத்தமும் தந்தது. அவளோடு பேசிக்கொண் டிருக்கிறபோது, இதற்காகக் கோபப்படாமலும், எதிர்த்துப் பேசாமலும் இருந்துவிட்டாலும், பிறகு தங்களுக்குள் வருத்தப்பட்டு, குறை கூறிக்கொள்வார்கள். சிலர் அவளோடு சேர்ந்து பேசுவதுபோல் பேசி, அவளிடமே கிண்டலாகவும் கேலியாகவும் அவளது ஊரைக் குறித்து ஏதாவது சொல்லி வைப்பார்கள். அவள் பாவம், அவர்களுடைய குறும்புப் பேச்சைப் புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் நல்லூர் புராணத்தை வர்ணித்துக்கொண்டிருப்பாள்.

கானப்பாடிக் கோயிலில் திருவிழா நடந்துகொண் டிருந்தது. ஏதோ பேருக்கு நடத்துகிற திருவிழாதான். சப்பரம் என்று ஒன்றைத் தூக்கிக்கொண்டு, கோயில் சிப்பந்திகளும் பட்டரும் முன்னே செல்ல, கூலிக்கு அமர்த்தப் பட்ட ஆட்கள் குடுகுடு என ஓடுவார்கள்.பூ அலங்காரம் நிறைய இராது; சும்மா இரண்டு சரங்கள் சாமி கழுத்தில் கிடக்கும். முன்னொரு காலத்தில் ‘சிறப்பாக எல்லாம் நடந் திருக்கும். இப்பொழுது அப்படி அப்படித்தான். ஊரே அழுதுவடிகிறபோது, தூங்கி வழியும் கோயிலில் உறங்கிக் கிடக்கும் சாமிக்கு இவ்வளவாவது நடைபெறகிறதே என்று உள்ளூர் பக்தர்கள் திருப்திப்பட்டுக்கொள்வார்கள்.

ஆனால், செல்லம்மா அவ்வாறு திருப்தி அடையவில்லை. இப்படித் திருவிழா நடத்துவதைவிட, சாமியை சும்மா கோயிலிலேயே இருக்கும்படி விட்டு விடலாமே!” என்றாள். அத்துடன் வாயை மூடிக்கொண்டாளா? வழக்கம்போல் ‘எங்க ஊரிலே பார்க்கணுமே ஒவ்வொரு திருவிழாவையும் என்று நீட்டி நீட்டிப் பேசலானாள்.

‘இந்த ஊரிலே சாமிக்கு பூவுக்குக்கூடப் பஞ்சம் வந்துட்டுதே! பாவி மட்டை ஊரிலே அரளிப்பூவும் மஞ் சணத்தி இலையும் கூடவா இல்லாமப் போச்சு? அதுகளைக் கட்டி சாமி கழுத்து நிறையப் போட்டால் என்னவாம்? எங்க ஊரிலே இப்படித் தரித்திரம் கொண்டாட மாட்டோம் அம்மா. கோயில் பிராகாரத்திலே நந்தவனம் இருக்கு. ரோசாப்பூ மாதிரி அடுக்கு அரளி-ஒவ்வொரு பூவும் எவ் வளவு அழகா, பெரிசா இருக்கும் தெரியுமா? – பிச்சிப் பூ, இருவாச்சி, ரோசா-எல்லாப்பூக்களும் எப்பவும் கிடைக்கும். சாமிக்கு நிறைய மாலைகள் போட்டு, அலங்காரம் செஞ்சு.. இங்கே தீவட்டிக்குக்கூட தட்டுப்பாடு வந்துட்டுதே. தீவட்டி ஒரு அரிக்கன் லாந்தல், ஒரு பெட்ரோமாக்சு லயிட்டு இந்த மூணும் தானே சப்பரத்து முன்னாலே போகுது? எங்க ஊரிலே சாமி புறப்பட்டா-ஏ அம்மா, ரெண்டு கண்ணு கொண்டு பாக்க முடியாது. எத்தனை தீவட்டிக! பெரிய சக்கரத் தீவட்டி வேறே, எவ்வளவு கியாஸ் லயிட்டுக!

இப்படி வர்ணித்து, அந்தக் காட்சியை மனக் கண்ணால் கண்டு, அகம் மகிழ்ந்து போனாள் அவள். ஒவ்வொரு தடவை யும் இப்படித்தான். கல்யாணம் நடந்தாலும் சரி, இழவு விழுந்தாலும் சரி அல்லது எந்த நிகழ்ச்சியாயினும் சரியே – அவை செல்லம்மாளைத் திருப்திப்படுத்தும் விதத்தில் அமை வது கிடையாது. அமையவும் முடியாது.

விவசாய விஷயம், வேலைக்காரர் பிரச்சினை. வீட்டு வசதி, கடைச் சாமான்கள், காய்கறிகளின் தரம்-இப்படி எந்தப் பேச்சு வந்தாலும் செல்லம்மா எங்க ஊரிலே என்று ஆரம்பித்து, உயர்வாகப் பேசாமல் இருக்கமாட்டாள். அவள் பேச்சின்படி பார்க்கப்போனால், அந்த ஊரில் எல்லாருக்கும் எல்லாம் தெரியும்: எல்லாம் முதல் முதலாக அங்கு வந்து, அனுபவிக்கப்பட்டுவிட்டன என்றுதான் கருத வேண்டியிருக்கும். மற்றவர்கள் நம்புகிறார்களா, நம்புவார் களா என்று எண்ணாமலே, செல்லம்மா தனக்குத் தோன்று வதையெல்லாம் தயங்காது சொல்லிச் சொல்லிப் பழகி விட்டாள். தான் சொல்வதை அவள் நம்பவும் செய்தாள்.

‘இந்த ஊர் பண்ணையார் தோட்டத்தில் தக்காளி பயிர் செய்திருக்கிறாங்க. ஒவ்வொரு பழம் எவ்வளவு பெரிசாக இருக்கு தெரியுமா?’ என்று கைலாசம் அவளிடம் சொன்னான்.

‘இதிலே ஆச்சர்யப்படறதுக்கு என்ன இருக்கு? நான் எங்க ஊரிலே வீட்டோடு இருக்கையிலே தோட்டத்திலே தக்காளி நட்டு வளர்த்தேன். ஒவ்வொரு செடியிலும் ஏகப் பட்ட காயி காய்ச்சுது. ஒவ்வொரு காயும் ஒரு சொம்பு தண்டி இருந்துதே…’ என்றாள் அவள்.

அவள் சின்னப் பெண்ணாக வீட்டோடு இருந்த காலத்தில் அந்த வட்டாரத்திலே ஒரு இடத்தில்கூட தக்காளிப் பயிர் எட்டிப் பார்த்ததில்லை; அவள் ஊரில் அது வளர்ந்திருக்கவே முடியாது என்று கைலாசத்துக்கு நிச்சயமாக மனசில் பட்டது, ஆயினும் அவன் அவளை மறுத்துப் பேசவில்லை. நீ ஏன் இப்படிப் பொய் சொல்கிறே?’ என்று அவளிடம் கேட்கத் துணியவில்லை அவன். எழுபதுக்கும் எண்பதுக்கும் இடைப் பட்ட ஏதோ ஒரு வயசை எட்டிப் பிடித்து, வாழ்க்கைப் பாதையில் தன்னந் தனியாக நடந்து, காலத்தைச் சுமை யாகக் கொண்டு தள்ளாடிச் செல்கிற அந்தப் பெரிய மனு ஷியை ‘ஒரு பொய் சொல்லி’ என்று மதிப்பிடுவதற்கு அவன் மனம் இடம் தரவேயில்லை.

செல்லம்மா வெவ்வேறு சமயங்களிலும், வெவ்வேறு நபர்களிடமும் சொல்லி வந்த – ஓயாது சொல்லிக்கொண் டிருந்த – நல்லூர் பெருமைகளைக் கைலாசம் கேட்டு வந்திருந்ததனால், அவனுள்ளத்தில் அவனை அறியாமலே நல்லூர் மீது ஒரு பற்றுதல் ஏற்பட்டுவிட்டது. ஆச்சி சொல்கிற அளவுக்கு இல்லாதுபோனாலும், ஓரளவுக்கேனும் அது பசுமையான, வளமான, நயமான, நலமான சூழ்நிலையாக இருக்கலாம் என்று அவன் எண்ணினான். ஆச்சியின் மனசில் நிலையான உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றிருந்த நல்லூரை ஒரு தடவையாவது பார்த்துவிட வேண்டியதுதான் என்றொரு ஆசையையும் அவன் வளர்த்து வந்தான். அது நிறைவேறு வதற்கு உரிய வேளையும் பொழுதும் ஒத்து வராமல், காலம் ஓடிக்கொண்டிருந்தது.

திடீரென்று, அவன் எதிர்பாராத ஒரு சமயத்தில், அந்த ‘வேளை அவனை நெருங்கியது. எத்தகைய விசித்திர மான், வேதனை மயமான சந்தர்ப்பம் அது!

ஒருநாள், கைலாசம் செல்லம்மாளை ஊருக்கு வெளியே ரஸ்தாவில் சந்தித்தான். ‘ஆச்சி இந்தப் பக்கமெல்லாம் வர மாட்டாளே? ஏது இன்னைக்கு இப்படி… என்று அவன் மனம் குறுகுறுத்தது. அவளை அணுகி, ‘என்ன ஆச்சி, ஏது இவ்வளவு தூரம்?’ என்று பரிவுடன் விசாரித்தான்.

அவள் குறைகூறும் குரலில் பேசினாள்: ‘எனக்கு இந்த ஊரிலே என்ன இருக்கு? நான் எங்க ஊருக்குப் போறேன். சாகிற வரை அங்கே எங்கியாவது ஒரு திண்ணையிலேயோ, குச்சிலேயோ விழுந்துகிடந்தால் போச்சு. இல்லேன்னு சொன்னா, கோயில் மண்டபம் இருக்கவே இருக்கு!’

‘ஏன் ஆச்சி, நீ இப்படிப் பேசும்படியா என்ன நடந்தது? நீ ஏன் வீட்டைவிட்டு ஊரை விட்டுப் போகணும்? ராசாவுக் குத் தெரியுமா?’ என்று கைலாசம் கேள்விகளை அடுக்கினான்.

‘எனக்கு வீடும் இல்லே. ஊரும் இல்லே. நான் பிறந்து வளர்ந்த ஊருதான் எங்க ஊரு. அங்கேதான் நான் சாகணும்’ என்று சொன்ன முதியவள் கசந்துகொண்டாள்: ‘ராசா! ஊம்ங்! வீட்டுக்கு ராணி அவன் பெண்டாட்டி தான். பெண்டாட்டியாத்தா பெரியாத்தான்னு, அவள் சொல்லைக் கேட்டு நடக்கிறவன் என்னை ஏன் மதிக்கப் போறான்?’

கைலாசம் அவள் கையைப் பிடித்து, “வா ஆச்சி. வீட்டுக்குப் போகலாம். ராசாகிட்டே நான் விசாரிக்கிறேன்’ என்று சொல்லவும், அவளுக்குக் கோபம் வந்துவிட்டது. சீ போ!” என்று சீறிக் கையை உதறினாள். ‘எனக்கு இந்த ஊரிலே ஒட்டும் இல்லே, உறவும் இல்லே. நான் எங்க ஊருக்குப் போறேன்’ என்று கூறி முன்னே நடந்தாள்.

என்ன செய்வது என்று புரியாமல் திகைத்து நின்ற அவன் பார்வையில், சிறிது தொலைவில் வந்த ராசா அங்கேயே நின்று தன்னை அழைப்பது பட்டது. கைலாசம் அவனிடம் போனான்.

‘அம்மாவுக்கு கொஞ்ச நாளாகவே மனசு சரியாயில்லை. இரண்டு நாளா வீட்டிலே ஒரே ரகளை. இன்னிக்கு ரொம்ப முத்திட்டுது. நான் எங்க ஊருக்குப் போறேன்னு கிளம் பிட்டா. அங்கே சோலையும் சுனையும் குளுகுளுன்னு இருக் கிறமாதிரித்தான்! பாலும் தேனும் பெருகி ஓடுகிற மாதிரித் தான்! போகட்டும், போகட்டும். அங்கே இருக்கற நிலை மையை நேரிலே தெரிஞ்சுக்கட்டுமே என்று செல்லம்மாளின் மகன் ராசா புலம்பினான். பிறகு, ‘கைலாசம், நீ எனக்கு ஒரு உதவி செய்யணும். அம்மா தனியாப் பயணம் போக முடியாது. நீயும் அவளோடு போயிட்டு வா. இந்தா ரூபாய்’ என்று பத்து ரூபாயை அவனிடம் கொடுத்தான்.

‘ரூபாய் எதுக்கு? என் கிட்டே பணம் இருக்கு என்றான் கைலாசம்.

‘இதுவும் இருக்கட்டுமே’ என்று சொல்லி அவனை அனுப்பிவைத்தான் ராசா.

மெதுவாக நடந்துகொண்டிருந்த செல்லம்மாளை எட்டிப் பிடிக்கக் கைலாசத்துக்கு நேரமோ சிரமமோ தேவைப்பட வில்லை. அவளிடம் ‘நானும் கூட வந்து, உன்னை ரயிலில் ஏற்றி விடுகிறேன். டிக்கட் எடுத்துக்கொண்டு, ரயிலில் ஏறுவது உனக்குச் சிரமமாக இருக்குமே? என்று சொன்னான்.

அவள் அலட்சியமாகச் சிரித்தாள். ‘என்ன சிரமம்? நான் ஆத்தங்கரை வழியாகவே எவ்வளவு தூரம் நடந்திருக் கேன்! எங்க ஊரிலேயிருந்து ரயில் கெடிக்கு அஞ்சு மைலு. அந்தப் பாதையைக்கூட நடந்தே கடந்திருக்கேன்!’ என்றாள்.

‘அப்போ உனக்கு இவ்வளவு வயசு ஆகியிருக்காதே! உடம்பிலே பலம் இருந்திருக்கும்’ என்று அவன் கூறவும், அவள் ரோஷத்துடன் ‘இப்பவும் எதுவும் குறைஞ்சு போகலே’ என்றாள்.

தனது பிறந்த வீட்டைப் பற்றியும், தான் வளர்ந்த நல்லூர் பற்றியும், தன் உறவினர் பற்றியும் அவள் பெருமை பெருமையாகப் பேசியவாறே நடந்தாள். ரயிலில் போகிற போதும் அந்தப் பெருமைகளையே கூறிக்கொண்டிருந்தாள்.

கைலாசம், வழக்கம்போல் பொறுமையாய்க் கேட்டு வந்தான். தாங்கள் பிறந்த வீடும், ‘கன்னியராய்க் கனவுகள் கண்டு காலம் கழித்த இடமும் பெண்களுக்கு எப்பொழுதும் பெருமைக்குரிய விஷயங்களாகவே இருக்கின்றன. அநேகருக்கு அந்தப் பெருமை அளவுக்கு அதிகமாக இருந்து விடுகிறது. பொதுவாகவே, பெண்கள் தாங்கள் பிறந்த வீட்டைச் சேர்ந்தவர்களையும், அவ்வூர்க்காரர்களையும் உயர் வாகக் கருதுவது இயல்பாக இருக்கிறது. பல பெண்களிடம் இந்த உணர்ச்சி அளவில் பெரிதாகி வளர்கிறது. அவர்கள் தாங்கள் வாழ வந்த இடத்தையும் அங்கே இருப்பவர்களை யும் மட்டமாக மதிப்பதும், குறைவாகப் பேசுவதும் சுபாவ மாகி விடுகிறது. செல்லம்மா ஆச்சியும் இந்த ரகத்தைச் சேர்ந்தவள்தான் – இப்படி எண்ணினான் கைலாசம்.

‘நீ ஏன் என் கூடவே வாறே?’ என்று செல்லம்மா அவனிடம் கேட்டாள்.

‘உங்க ஊரைப் பார்க்கணுமின்னு எனக்கு ரொம்ப நாளாவே ஆசை. இப்போ உன் கூடவே வந்து பார்ப்பது விசேஷம் இல்லியா? அதனாலே தான்’ என்றான் அவன்.

அவள் அவன் முகத்தைப் பார்த்தாள். ஒன்றும் பேச வில்லை. தனக்குத் துணையாக அவன் வருவது நல்லதுதான் என்று அவள் எண்ணியிருக்க வேண்டும். இருந்தாலும் அவள் சுபாவம் சும்மா இருக்கவில்லை!

‘ரயிலடியிலே மூக்கத்தேவன் வண்டி காத்துக் கிடக்கும். என்னைக் கண்டதுமே, ஆச்சி வாங்க, ஆச்சி வாங்க’ன்னு ஓடி வருவான். என் கிட்டே காசு கூடக் கேட்கமாட்டான். ‘வண்டி தயாரா இருக்கு’ம்பான்’-இந்த விதமாகக் கனவை- -அல்லது முன்னொரு காலத்தில் நிகழ்ந்ததன் நினைவை – அவள் சொல்லாக்கி மகிழ்ந்தாள்.

அவர்கள் ரயிலை விட்டு இறங்கும்போது நடுப்பகல் மணி 12.10. வெயில் கடுமையாகக் காய்ந்துகொண்டிருந் தது. சுற்றிலும் வறண்ட பொட்டல் காடு. அது ஒரு காட்டுப்புற ஸ்டேஷன். இங்கிருந்து சில மைல் தூரம் போய்த்தான் எந்த ஊரையும் அடைய வேண்டும். நல்லூரைச் சேர ஐந்து மைல் கடக்க வேண்டும்.

பஸ் போக்குவரத்து சிலந்தி வலைபோல் சகலவிதமான ஊர்களையும் தொட்டுப் பரவிக்கிடக்கிற இந்து நாட்களிலே கூட நல்லூருக்கு நேரடியான பஸ் தொடர்பு கிடையாது; வேறு எங்கோ போகும் ‘ரூட் பஸ்’ஸில் இடம் பிடித்து, நாலாவது மைலில் இறங்கி, ஒரு மைல் தூரம் நடந்தே தீர வேண்டும் என்பதை அறிந்ததும் கைலாசத்துக்குப் பகீர் என்றது. ஒரு மணிக்குத்தான் பஸ் வரும்” என்று கேள்விப் பட்டதும் அவன் குழப்பம் அதிகரித்தது.

அதுவரை என்ன செய்வது? சாப்பாடு? குடிக்கக்கூட நல்ல தண்ணீர் கிடைக்காத இடமாக இருந்தது அது. ஸ்டேஷனில், ஒரு தகர டப்பாவில் வைத்திருந்த ‘குடி தண்ணீர்’ வெயிலில் கொதிப்பேறியிருந்தது. ‘அதைக் குடித்தால் தாகம் தணியாது; தொண்டை கட்டிக்கொள்ளும்’ என்று செல்லம்மா சொன்னாள்.

அங்கு வண்டி எதுவும் கண்ணில் படவேயில்லை. ‘இப்ப வெல்லாம் வாடகை வண்டிங்க ஸ்டேஷனுக்கு வர்ரதே யில்லே. முன்னாடியே சொந்தக்காரங்களுக்குக் கடுதாசி போட்டிருக்கணும். அவங்க ரயிலுக்கு வண்டி கொண்டு வரு வாங்க என்று ஒருவன் சொன்னான். ‘இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ளே தான் காரு வந்திடுமே! என்றும் தைரியம் கூறினான்.

‘அதுவரை இங்கியே காத்துக்கிடப்பானேன்? மலையாள ஓடு போட்டிருக்கு, வெக்கை ஜாஸ்தி. இங்கே உக்காந்து கிடக்கறதைவிட, மெதுமெதுவா நடந்தே போயிடலாம் என்று செல்லம்மா சொன்னாள். கடுமையான வெயிலில், நிழலே இல்லாத பாதையில், வெறுங் காலோடு நடக்க முடியாது என்று கைலாசம் எவ்வளவோ எடுத்துச் சொல்லி யும் அவள் பிடிவாதமாக நடக்கத் தொடங்கினாள்.

வெயில் தலையைத் தீய்த்தது. புழுதிமண் ரஸ்தா கால் களைப் ‘பதம் பார்த்தது. கானல் அலை அலையாய்ப் பறந்து கொண்டிருந்தது. தள்ளாமை, பசிக்கிறக்கம் எல்லாம் கூடி அவளைத் தகித்தன. அவளுக்குக் கண்கள் சரியாகத் தெரிய வில்லை. இங்கே மரநிழல் கூட இல்லியே!’ என்று முனகினாள் அவள்.

அங்கங்கே சிற்சில முள் மரங்களும், ஒற்றைப் பனைகளும் தான் நின்றன.

செல்லம்மாவினால் நடக்க முடியாது என்று நிச்சய மானதும், கைலாசம் அவளை மெதுவாகத் தாங்கி, ஒரு பனை மரத்தடியில் படிந்திருந்த சிறு நிழலில் கொண்டு சேர்த்தான். அவள் அங்கேயே உட்கார்ந்துவிட்டாள்.

‘ரொம்ப ரொம்ப நேரமாக் காத்திருக்கிறோமே’ என்று எண்ணத் தூண்டிய அளவு காலம் ஊர்ந்து நகர்ந்த பிறகு, பஸ் வந்தது. இந்த இடத்தில் நிறுத்துவானோ, மாட்டானோ என்ற சந்தேகம் கைலாசத்துக்கு.

பஸ்ஸில் கூட்டம் எதுவுமில்லை. இடம் நிறைய இருந்தது. அதனால் தானோ என்னவோ, அவன் கையைக் காட்டியதும், டிரைவர் பஸ்ஸை நிறுத்திவிட்டார். அவன் சிரமத்துடன் ஆச்சியை பஸ்ஸில் பஸ்ஸில் ஏற்றினான். அவள் ஒரு ஸீட்டில் சோர்ந்து முடங்கிப் படுத்துக்கொண்டாள்.

பஸ் ஓடிய பாதை வறண்ட பாலை நிலம் போல் தானிருந்தது. ‘இந்த வழியிலே இவ நடக்கவா? சுருண்டு விழுந்திடுவா’ என்று கைலாசம் எண்ணினான். ‘இவளுக்கு ஏன் இந்த வம்பு? உள்ளதைத் தின்னுக்கிட்டு வீட்டோடு கிடக்கிறதுக்கு இல்லாமே?’ என்று அவன் மனம் முணு முணுத்தது.

இறங்க வேண்டிய இடம் வந்ததும் கைலாசம் செல்லம்மாளை மெதுவாக பஸ்ஸிலிருந்து பிடித்து இறக்கினான்.

அந்த இடம் வெறிச்சோடிக் கிடந்தது. நடக்க வேண்டி யதுதான்; வேறு வழி இல்லை. ‘ஆச்சி!’ என்று தயக்கத்துடன் அவள் முகத்தைப் பார்த்தான் அவன்.

‘உம். எங்க ஊரு இன்னும் கொஞ்ச தூரத்திலே தான். நடந்து போயிடலாம்’ என்று, தலைமீது சேலை முந்தானை யைப் போட்டுக்கொண்டு நடக்கலானாள் அவள். ஊரை அணுகிவிட்ட உற்சாகம் அவளிடம் காணப்பட்டது.

வழியில் ஒரு சிறு கடை தென்பட்டது. அதில் பசியைத் தீர்க்கக்கூடிய உணவு வகை இல்லாது போயினும், வாழைப் பழமும் வேர்க்கடலையும் சோடாவும் கிடைத்தன. கைலாசம் திருப்தி அடைந்தான். செல்லம்மா இரண்டு பழம் மட்டும் போதும் என்று சொல்லிவிட்டாள்.

வேர்த்து விறுவிறுத்து அவர்கள் ஊர் எல்லையை அடைந்தபோது இரண்டு மணிக்கு மேலேயே இருக்கும். ‘நான் இந்த அம்மன் கோயில் மண்டபத்தில் இருக்கேன்.நீ நடுத்தெருவுக்குப் போயி,மஞ்சக் காவி அடிச்ச பெரிய வீடு ஒண்ணு இருக்கும். அங்கே எங்க பெரியம்மை மகன் பாண்டியன் பிள்ளை இருப்பாரு, அவரை உங்க அக்கா கூப் பிடுறாள்னு சொல்லி, கோயில் திறவுகோலையும் எடுத்துக் கிட்டு வரச் சொல்லு. ஒரு தம்ளரிலே பாலும், ஒரு செம்பிலே தண்ணீயும் கொண்டுவரச் சொல்லு’ என்று செல்லம்மா அவனிடம் கூறினாள்.

அவன் நடந்தான்.

தமிழ் நாட்டின் தெற்குக் கோடியில் உள்ள, வறுமை கொலுவிருக்கும் பலப்பல குக்கிராமங்களைப் போல்தான் அந்த ஊரும் இருந்தது. சில வீடுகள் இடிந்து பாழடைந்து காணப்பட்டன; இன்னும் சில இடிந்துவிழத் தயாராக நின்றன. கோயிலும் விழிப்புடன் காட்சி தரவில்லை. கோயில் தேர் கறையான் பற்றி, கவனிப்பாரற்றுச் சிதைவுற்று நின்றது. தெப்பக்குளம் பாசி பிடித்த அழுக்கு நீருடன் நாறிக் கிடந்தது. மேலத் தெரு, நடுத்தெரு, கீழத் தெரு என்று பெயர் பெற்றிருந்தவை ஒழுங்கான தெருக்களாகவே இல்லை.

‘தெப்பக்குளத்தில் குளிப்பது பற்றியும், கோயில் பெருமை பற்றியும் ஆச்சி எவ்வளவோ சொன்னாளே!’ என்று கைலாசம் எண்ணினான். ‘இந்த ஊரைப் பற்றியும்தான்! என்றது அவன் மனம் இதைவிட கானப்பாடி எவ்வளவோ பெரியது. வசதிகள் உடையது… அவன் உள்ளம் எடை போட்டுக்கொண்டிருந்தது.

பாண்டியன் பிள்ளை வீட்டில்தான் இருந்தார். அவருக்கு ஐம்பது வயசுக்கு அதிகமாகவே இருக்கும் என்று தோன்றியது. கைலாசத்தைக் கண்டதும், யார்- என்ன என்று விசாரித்தார். அவன் விஷயத்தைச் சொன்னான்.

‘அக்கா இங்கியா வந்திருக்கா? ஏன் வீட்டுக்கு வரலே’? என்று பதட்டம் காட்டினார் அவர்.

‘அவளால் நடக்க முடியலே, கோயிலில் இருக்கிற. நீங்க பாலும், கோயில் திறவுகோலும் எடுத்துக்கிட்டு…’

அவர் வறண்ட சிரிப்பு சிரித்தார். ‘இந்த ஊரிலே இந்த நேரத்திலே பாலுக்கு எங்கே போறது? நல்ல காலத்திலேயே பாலு ஒழுங்காக் கிடைக்காது. பக்கத்து ஊருக்குப் போயி வாங்கியாரணும். சாயங்காலம் ஆறு மணிக்குமேல் தான் பாலைப் பார்க்க முடியும்’ என்றார். ‘இருக்கட்டும், கடுங் காப்பி போட்டு எடுத்துக்கிட்டுப் போகலாம். கொஞ்ச நேரம் திண்ணையிலே இரியும், தம்பி’ என்று கைலாசத்திடம் சொன்னார். தலையைச் சொறிந்தார்.

‘அக்கா ஏன் இப்ப திடீர்னு புறப்பட்டு வந்தா? தள்ளாத வயசிலே? ஊம்ங் அவ எப்பவும் பழைய காலத்தையே மனசிலே வச்சுக்கிட்டு இருக்கிறா. ஊரும் காலமும் ரொம்ப மாறிப் போச்சு. இந்த ஊரு குட்டிச் சுவராயிக்கிட்டு வருது. கிழடு கட்டைகள் தான் வேறே வழியில்லாம இங்கே கிடக்குதுக. இளவட்டங்க எல்லாம் டவுணு, பட்டண மின்னு எங்கெங்கியோ போயிட்டுதுக. இந்தப் பட்டிக் காட்டிலே, இருக்கிற ஏழெட்டு வீடுகளுக்குள்ளேயே மூணு கட்சி, ‘உன்னை எனக்குப் பிடிக்காது. என்னை உனக்குப் பிடிக்காது; அவன் வீட்டை எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்காது’னு ! கோயில் விஷயத்திலும் தகராறுதான். இப்ப ஒரு மாசமா அம்மனுக்குப் பூசையே நடக்கலே. போட்டியும் பொறாமையும்தான் காரணம்..’

அவர் குறைகளை அடுக்கிக்கொண்டிருந்தார். அந்த வட்டாரத்தில் உள்ள அநேகம் கிராமங்களையும் சுற்றிப் பார்த்திருந்த கைலாசம், ‘ஒண்ணுக்கு ஒண்ணு அண்ணனாகத் தான் இருக்கு. கிராமங்க உருப்படா நிலையிலே இருக்கறதிலே அதிசயமேயில்லே’ என்று எண்ணினான். ஆச்சிக்கு இந்த ஊரு அதிசயப் பூமியாகப் பட்டிருக்குது!’ என்று அவன் மனம் சிரித்தது. இப்போ அவ என்ன செய்துக்கிட்டிருக்காளோ?’ என்றும் தவித்தது.

செல்லம்மா கோயிலில் தனியாக விடப்பட்டதும், மண்டபத்துத் தூணில் சாய்ந்துகொண்டு, சௌகரியமாகக் காலை நீட்டி உட்கார்ந்தாள். அருகில் நின்ற வேப்பமரம் ளுமையும், மென்காற்றும் பரப்பிக்கொண்டிருந்தது. வெயிலில் வந்த களைப்புக்கு அது அருமையான பரிகாரமாக இருந்தது.

அவள் சும்மா வெறித்துப் பார்த்தபடி இருந்தாள். தானா கவே சிரித்துக்கொண்டாள். ‘யாரு, மூக்கத் தேவனா? ஏன் ரயிலடிக்கு வண்டி கொண்டாரலே?’ என்று உரக்கக் கேட்டாள். அங்கே அது யாரு? ஓகோ எல்லாரும் ஆச்சி யைப் பார்க்க வந்திருக்கிங்களா? வராம இருக்க முடியுமா? இந்தக் கையினாலே எவ்வளவு சோறு ஆக்கிப் போட்டிருக் கிறேன்.உங்க எல்லாருக்கும்? இன்னும் போடத்தானே போறேன்! அம்மனுக்குப் பூசை நடத்தணும், செவ்வரளிப் பூமாலை நிறைய வேணும். இளநி, பாலு, தயிரு எல்லாம் வாங்கிட்டு வாங்க…’ அவள் வாய் ஓயாது அடுக்கிக் கொண்டே இருந்தது.

‘அம்மா லோகநாயகி! உன்னைத் தேடி வந்துட்டேன், நீ என்னை மறக்கலே; நானும் உன்னை மறக்கலே என்று அடைத்துக் கிடந்த கதவுகளுக்குப் பின்னால் குடியிருந்த அம்மனை நோக்கிப் பேசினாள். இந்தக் கைலாசம் என்ன, போனவன் ஒரே போக்காப் போய்ட்டான்? தம்பியைக் கூட்டிக்கிட்டு வர இத்தனை நேரமா?’ என்று முனகினாள். ‘எனக்கு என்னமோ ஒரு படியா வருது. சித்தெ நேரம் தலையைக் கீழே சாய்க்கிறேன்’ என்று படுத்தாள். ‘அம்மா லோகநாயகி, காப்பாத்து, தாயே!’ என்பதுதான் அவளுடைய கடைசிப் பேச்சாக ஒலித்தது.

கைலாசம், பாண்டியன் பிள்ளையோடு வந்தவன், ஆச்சி கிடந்த கோலத்தைக் கண்டு பதறிப் போனான். ‘ஆச்சி! ஆச்சி!’ என்று கூவியவாறு. அவளைத் தொட்டு உலுக்கினான். மூக்கருகே கை வைத்துப் பார்த்தான். ‘ஆச்சி, இதுக்குத் தானா இந்த ஊருக்கு வந்தே?’ என்று அலறினான்.

செல்லம்மாளைத் தொட்டுப் பார்த்த பாண்டியன் பிள்ளையும் உண்மையைப் புரிந்துகொண்டார். ‘உம். அக்கா ஆயுசு இப்படி முடியணுமின்னு இருந்திருக்கு, பாருமேன். பிறந்த மண்ணிலே வந்து மண்டையைப் போடணுமின்னு உசிரைப் புடிச்சி வச்சிருந்திருக்காளே!’ என்று அவர் புலம்பினார். அவருக்கு ஒரு பெரிய வருத்தம் – தன்னைப் பார்த்துப் பேச வேண்டும் என்று ஆசைப்பட்ட அக்காவை உயிரோடு பார்த்துப் பேச முடியாமல் போய்விட்டதே என்று.

மனிதர்களையும், அவர்களுடைய வாழ்வின் போக்குகளையும், ஒவ்வொருவரையும் படாதபாடு படுத்தி எப்படி எப்படியோ ஆட்டிவைக்கிற மனம் என்கிற விஷயம் பற்றியும் எண்ண அலைகள் கைலாசத்தின் உள்ளத்தில் எழுந்தன; புரண்டன; குழம்பின. பல பேர் நிகழ் கால வாழ்க்கையைச் சரியாக அனுபவிப்பதே இல்லை; அவர்களை அனுபவிக்க விடுவதில்லை அவர்களுடைய மனம். இன்றும் பலர் சென்றுபோன காலத்தின் இனிய நினைவுகளில் மட்டுமே வாழ்க்கையைக் காண்கிறார்கள். வேறு பலர் இனி வரக்கூடிய எதிர்காலக் கனவுகளில் வாழ்வின் குளுகுளுப்பைக் காண்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் நிகழ்காலம் சுட்டெரிக்கும் கோடை வெயிலாகவே படுகிறது என்று நினைத்தான் அவன். ஒரு வேளை, நிகழ்காலத்தின் வெறுமையும் வறட்சியுமே இவர்களை நினைவுலகத்துக்கும் கனவுலகத்துக்கும் துரத்தி அடிக்கிறதோ என்னவோ?- இப்படியும் ஒரு எண்ணம் புரண்டு கொடுத்தது.

நிகழ்கால வெறுமையில் இதயம் வெதும்பிய செல்லம்மா ஆச்சியின் மனம், இறந்துபோன காலத்தின் நினைவுகளில் இன்பம் கண்டது. அவற்றை மோகனமாகவும் பசுமையாக வும் காண்பதற்கு அவளுடைய கற்பனை துணை புரிந்தது. வெயிலில் திரியும் பிரயாணி பசுஞ்சுனைகளையும் குளிர் சோலை களையும் மாயைத் தோற்றமாகவும், மயக்கு நிழல்களாகவும் கண்டு, உண்மை என நம்பித் திரிவதுபோலவே ஆச்சியும் நடந்துகொண்டாள்.

‘தமிழ் ஐயா ஒருவர் சொன்னாரே. கஸ்தூரி மான் இனிய நறுமணத்தை நுகர்கிறது. அது தனக்குள்ளிருந்தே கிளம்பு கிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல், மான் அந்த வாசனை யைத் தேடி ஓடுகிறது.ஓடி ஓடிச் சாகிறது என்று. அதே மாதிரித்தான், ஆச்சியின் நல்லூர் அவள் மனவெளியில் தான் இருந்திருக்கிறது. அதை அவள் புரிந்துகொள்ளவில்லை. தான் பிறந்து வளர்ந்த நல்லூர் கிராமத்தில் அந்த சொர்க்கம் இருக்கிறது என்று நம்பி, வீணாக வந்து சேர்ந்தாள். அதனா லும் நஷ்டமில்லை. அவள் ஆத்மா திருப்தி அடைந்திருக்கும்!’ இப்படி அவன் மனம் கருதியது.

‘என்னய்யா,இப்படி இடிஞ்சு போயி உட்கார்ந்துட்டா? உம். மேலே நடக்க வேண்டிய காரியங்களைக் கவனிப்போம்’ என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டு பாண்டியன் பிள்ளை கைலாசத்தையும் முடுக்கினார்.

‘ஆமா. முதல்லே ராசாவுக்குச் சொல்லியனுப்பணும்’ என்று பரபரப்பு காட்ட ஆரம்பித்தான் கைலாசம்.

– சுதேசமித்திரன், தீபாவளி மலர்,1967

– அருமையான துணை, முதற் பதிப்பு: நவம்பர் 1991, கிறுஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *