கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 8, 2023
பார்வையிட்டோர்: 2,893 
 

(1966ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மேல் மாடி வெட்ட வெளியில் கைகள் இரண்டையும் சேர்த்துத் தலைக்கடியில் வைத்துக் கொண்டு இருந்தாள் கல்யாணி. 

நீல வானில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கண் சிமிட்டிக் கொண்டிருந்த நட்சத்திரங்களுக் கிடையில் பூர்ண சந்திரன் ஊர்ந்து கொண்டிருந்தான். அதில் பார்வை யைச் செலுத்திச் சிந்தனையில் ஆழ்ந்திருந்தாள் அவள். உள்ளே இருந்தபடியே அவளுடைய தீவிர சிந்தனையைக் கவனித்துக் கொண்டிருந்த விசுவம் எழுந்து வந்து அவள் அருகில் அமர்ந்து, “என்ன மனோராஜ்யம் செய்துகொண்டிருக்கிறாய் கல்யாணி?” என்று அவள் கையைப் பற்றி யெடுத்தான். 

சாவதானமாகத் திரும்பிப் பார்த்தாள் கல்யாணி. 

“அதை உங்களைக் கூப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று வாயெடுத்தேன். அதற்குள் நீங்களே கேட்டு விட்டீர்கள்! உம்…வந்து…நாளைக் காலையில் அம்மா வருகிறாள்…!” 

”அம்மா வருகிறாள்!” என்று அவள் சொன்ன சொற் களுக்குள் முக்கிய காரியமாக ‘வரப் போகிறாள் ‘ என்பது தெளிவாகத் தெரிந்தது. இருந்தும் “என்ன விசேஷம்? வெறுமனே உன்னைப் பார்த்துவிட்டுப் போவதற்குத்தானே கல்யாணி?” என்று கேட்டான் விசுவம். 

“அவள் அந்த நினைவுடன்தான் வருவாள். ஆனால் அவள் புறப்படும்போது நானும் போகலாமென்று இருக்கிறேன். ஒரு வாரமாக மறுபடியும் ஜுரமும் முதுகு வலியும் ஆரம்பித்து விட்டன…” 

“ஏன் இவ்வளவு நாட்களாக என்னிடம் அதைச் சொல்லவில்லை?” 

“சொல்லி உபயோகம்? ‘நோய் திரும்பிக் கொள்ளாமல் பார்த்துக்கொள். ஆகார பலத்தில்தான் உன் ஆயுசு’ என்று எச்சரித்துத் தான் டாக்டர்கள் வெளியே அனுப்பினார்கள். ஆகாரத்தில் குறைவே யில்லாமல் இருக்கும் போதும் வியாதி திரும்பி விட்டால், நமக்கு அர்த்தம் புரியவில்லையா?” என்று கேட்டாள். 

“என்னமாவது பிதற்றாதே, கல்யாணி! நாளைக்கு ஆஸ்பத்திரிக்குப் போனால் போச்சு!” 

“பிரயோசனமே யில்லை! என் நிலைமை எனக்குத் தெரியாதா? அந்தப் பைசாச நோய் என்னை மட்டிலுமே உண்டு பசி தணியட்டும், உங்களொருவரையும் பற்றாமல்!” 

“இந்த மாதிரி என்னிடம் பேச உனக்கு எப்படி மனம் வந்தது கல்யாணி ? உன் இஷ்டப்படி யெல்லாம், நீ சொன்ன படி யெல்லாம் ஆடினேன்…” 

விசுவம் அழுதே விட்டான். 

தன் கண்களில் நீர் வழிய, அவன் கண்ணீரைத் துடைத்தாள் கல்யாணி. “வருத்தப்படாதீர்கள். ஒரு அளவோடு என் மீது நீங்கள் பாசம் வைத்திருந்தால் அது நீடூழி காலம் நாம் வாழ சம்மதித்திருக்கும்! அபரிமித ஆசை வைத்தீர்கள். தெய்வத்துக்கும் பொறுக்கவில்லை. உடைத் தெறிந்து விட்டது ! என் வரையிலும் என்னுடைய மனசை நான் திடப்படுத்திக் கொண்டு விட்டேன்…” 

“கல்யாணி! வீட்டிலுள்ள சகலமும் போகட்டும். நீ நீ பிழைத்தால் போதும். வைத்தியம் செய்கிறேன் – தைரியமாக இரு. நாம் பிழைத்து விடுவோம் என்ற நம்பிக்கை வை” என்று மனமுருகிச் சொன்னான் விசுவம். 

துக்கம் குடி கொண்டிருந்த கல்யாணியின் முகத்தில் புன்னகை பிறந்தது. “நீங்கள் உங்கள் உயிரையே கொடுப்பதானாலும், என்னைப் பிழைப்பிக்க இனி சாத்தியமில்லை. செய்யக் கூடியது என்ன என்றால், என் குழந்தையை அவனுடைய தாய் தகப்பனாரை இந்த பேய் பற்றி உறிஞ்சாமல் தடுக்க வேண்டும்.” 

“அவனுடைய தாய் அவனுடைய தாய் நீ தான் கல்யாணி…” 

“இல்லை லக்ஷ்மிதான் அவனுடைய தாய் இனிமேல் நான் ஊருக்குப் போன மறு நாள் அவள் வந்து விடுவாள். என் மீது வைத்திருக்கும் அன்பை, அவளிடம் வைத்துச் சுகமாக வாழுங்கள். குழந்தை மீது அவள் வாஞ்சை எனக்குத் தெரியும். குறைவில்லை…” 

“போதும் நிறுத்து, கல்யாணி! உன் பிடிவாதத்துக்குக் கட்டுப்பட்டு உன் மனசு நிம்மதியடைந்து, உடம்பு தேவலை யானால் போதும் என்று இன்னொரு கல்யாணம் என்ற பைத்தியக்காரக் காரியத்தையும் செய்து…” 

“நன்றாக இருக்கிறதே! பைத்தியக்காரக் காரியமா அது? செய்யவேண்டிய முக்கியமான காரியத்தை யல்லவா செய்திருக்கிறோம்? என்றைக்கு டாக்டர் டி. பி. என்றாரோ அன்றைக்கே நான் நிச்சயித்த காரியம் அது. என் குழந்தை யும், நீங்களும் சௌக்கியமாக இருப்பீர்கள் என்ற நிம்மதி யுடன் என் பிராணன் போகவேண்டாமோ?” 

“கல்யாணி?” என்று அவள் வாயைப் பொத்தினான் விசுவம். 

அவன் கையை விலக்கி விட்டு, “வாயை விட்டுச் சொல்லாமலிருந்தால் வருகிற யமன் திரும்பிப் போய்விட மாட்டான். அம்மாவிடம் ஒரு நாடகம் நடத்தி ஊருக்குப் புறப்பட வேண்டும். நீங்கள் ஏதாவது உளறி விடாதீர்கள்” என்றாள் கல்யாணி. 

“நீ சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை கல்யாணி! கண்மூடித்தனமாக நீ சொல்வதை யெல்லாம்…” 

“அப்படியில்லை. நமது வம்சம் விளங்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தில் செய்கிறேன். தெளிவாகச் சொல் கிறேன் கேளுங்கள். நோய் திரும்பாமல் நான் நன்றாகவே இருப்பதாக வைத்துக் கொண்டாலும் மேற்கொண்டு புத்திரப் பேறு என்பதோ, வாழ்க்கையில் ஒரு மலர்ச்சி என்பதோ எனக்குக் கிடையாது. அப்படி இருக்க, வாழ்வு மலர என்று என் மனமார ஒரு பெண்ணை உங்களுக்கு மணம் புரிவித்து, அவளை வஞ்சிப்பது எவ்வளவு பெரிய பாவம் ? நினைத்துப் பாருங்கள்! பிழைத்து எழுவேன் என்ற நம்பிக்கை யில்லாத போது செய்ய வேண்டியதை செய்தேன். பெருந்தன்மைக்கும் என் ஆத்மசாந்திக்குமாக இப்போது மூன்று மாதங்களாக அசட்டுக் காரியம் செய்தோமே என்று வருந்தினேன். ‘இல்லை. நல்ல காரியம்தான் செய்தாய். நீ வருத்தப்படுவது தான் அசட்டுத்தனம்!’ என்கிறது விதி. டி.பி. என்றாலே ஆற்றங்கரைப் பிள்ளையார் சங்கதிதான். அதிலும் எனக்குப் பகவான் கொடுத்திருப்பது… ஐயைய எதற்காக இப்பொழுது அழுகிறீர்கள்? அழுது என்ன பயன்? அதோ குழந்தை எழுந்திருக்கிறான். அவனுக்குப் பாலைக் கொடுங்கள்” என்று கணவனைத் தூண்டினாள் கல்யாணி. 

வேதனை மண்டிய மனத்துடன் எழுந்து சென்று குழந் தைக்குப் பால் கொடுத்து படுக்க வைத்தான் விசுவம். 

பிறகு விடிய விடியத் தூக்கமற்றுப் பேசியதையே திரும்பத் திரும்பப் பேசிக் கணவன் மனத்தை ஒருவாறு ஆற்றி அவன் சம்மதத்தைப் பெற்றுக்கொண்டு பொழுது புலரும் சமயத்தில் துயிலில் ஆழ்ந்தாள் கல்யாணி. 

“கல்யாணி!” என்ற குரல் கேட்டுக் கண் விழித்துப் பார்த்தபோது தாயாரும், கணவரும் தலைமாட்டில் நிற்பதைக் கண்டு திகைத்துப் போய், “அடாடா! எவ்வளவு நேரம் தூங்கி யிருக்கிறேன் ? அப்பா வரவில்லையா அம்மா?” என்று தாயாரை வரவேற்றாள். 

அப்புறம் நான்கு நாட்கள் வரையில் சந்தோஷமாக அந்த வீட்டில் வளைய வந்தாள். கணவனுக்கு இஷ்டமான சமையல், சிற்றுண்டிகளைச் செய்யச் சொல்லிக் கையால் கொடுத்தாள். குழந்தைக்கு விதம் விதமான ஆடை அலங் காரம் செய்து கண்குளிரக் கண்டு மகிழ்ந்தாள்; ஆனந்தக் கண்ணீர் விட்டாள். ‘என் அப்பனே! என் ஆயுசையும் சேர்த்து நீ என்றும் சிரஞ்சீவியாக, மார்க்கண்டனாக இரு என்று தனது அருமை மகனுடைய தலையைத் தொட்டு ஆசீர்வதித்தாள். 


மறு நாள் காலையில் லக்ஷ்மி வரும் கடிதம் கிடைத்தது. அன்றிரவு குழந்தை தூங்கிய பிறகு போட் மெயிலுக்குக் கிளம்பினாள் கல்யாணி. பொங்கி வந்த துக்கத்தைத் துணி யினால் வாயில் அடைத்துக் கொண்டு கல்யாணியை டாக்ஸி யில் ஏற்றினான் விசுவம். 

குழந்தை மாடியில் தனியாக இருக்கிறான். போங்கள். நான் அடுத்த வாரம் வந்து விடுவேன்” என்றாள், ஏதோ அவசரமாகத் திரும்பி வருபவள் போல. 

விசுவம் ஒன்றும் பேசவில்லை. டாக்ஸிக்குள் இருந்த கல்யாணியைப் பார்க்கப் பார்வையைக் கூர்மையாக்கினான். கண்ணீர் மறைத்தது. டாக்ஸி டிரைவரிடம், “போகலாம், அப்பா!” என்றாள் கல்யாணி. 

பிரமை பிடித்து நின்று கொண்டிருந்த விசுவத்தைப் பிள்ளைப் பாசம் ‘மாடிக்கு வா!’ என்று அழைத்தது. 

வாசல் கதவைத் தாளிடும் போது “கல்யாணி! நீ க்ஷயரோகி என்பதற்காக உன்னைத் துரத்திவிட்டுக் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு என் உயிரைக் காத்துக் கொள்கிறேனா? ஐயோ, சித்ரவதையே! இதைவிட நீ இறந்துபோய்-உன் சடலத்தை அனுப்பிவிட்டுத் தாள் போட்டால் எவ்வளவோ நிம்மதியாக இருக்கும் ! இதற்குத் தான் என் மேல் அவ்வளவு பாசம் வைத்திருந்தாயா?” என்று குலுங்கக் குலுங்க அழுது கொண்டு மாடிக்குப் போனான் விசுவம். 


இரவுப் பொழுது சிவராத்திரியாக இருந்தது அவனுக்கு. மை கொட்டாமல் குழந்தையைப் பார்த்தான். ஆமாம்- கல்யாணியின் முகம்தான்; நினைவுக்குக் கொஞ்சம் வைத்து விட்டுப் போயிருக்கிறாள்! 

எங்கோ கோழி கூவியது. 

‘ஓ! பொழுது விடிகிறதா! விடியட்டும். லக்ஷ்மீகரமாக வீடு விளங்க ஒரு லக்ஷ்மி வரப் போகிறாளாக்கும்! வரட்டும்! ஒருவருக்கொருவர் என்ன பேசிக் கொண்டார்களோ – கடிதத் தில், யாருக்குத் தெரியும்?’ 

“லக்ஷ்மி!” 

‘பெயர் அழகு ; பெண் அழகு; குணம் குரூபம்! என் கல்யாணியை வீடுவிட்டு ஓடும்படி செய்த கோரமான குரூபம்? கல்யாணி! வீட்டை விட்டு வேண்டுமானால் உன்னால் ஓடிவிட முடிந்தது-லக்ஷ்மிக்கும் துரத்த முடிந்தது; எங்கே, என் மனத்தைவிட்டு, ஓடு பார்ப்போம்! இல்லை-லக்ஷ்மியாமே, அவளால்தான் என் மனத்திலிருந்து அவளைத் துரத்த முடியுமா?’

இவ்வித எண்ணங்கள் தீவிர கதியில் சுழன்றன அவன் நெஞ்சில்! 

மனம் தெளியும் சமயத்தில், “அக்கா!” என்றுப் பதறிப் பயந்து கொண்டு மாடி அறைக்குள் விரைந்தாள் லக்ஷ்மி. 

உதறிக் கொண்டு எழுந்தான் விசுவம். 

“அக்கா எங்கே? போய்விட்டாளா ஊருக்கு” என்று படபடத்தாள் லக்ஷ்மி. 

 “போய் விட்டாள் ” என்று நிதானமாகப் பதில் சொன்னான் விசுவம்.

– உயிரின் அழைப்பு, முதற்பதிப்பு: 1966, சாரதி பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *