அக்டோபர் 2

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 13, 2017
பார்வையிட்டோர்: 7,922 
 

இங்கொருவரும் அங்கொருவருமாக நாளைய பண்டிகையைக் கொண்டாட தயாராகிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் மொழி சிதைந்து ஒற்றை எழுத்துகளில் இருந்தது…. உங்களுக்காகத் தமிழில்…

மலர்களும், வாசனைப் பொருட்களும், திருவுருவப் பொம்மைகளும் கடைவீதியில் கொட்டிக் கிடந்தன… அருகில் உள்ள ஊர்களிலிருந்து வந்தவர்கள் அவரவர் விருப்பப்படியும், வண்ணத்திலும், வடிவத்திலும் வாங்கிக் கொண்டனர்…

ழ தன் தாத்தாவின் கைப்பிடித்து அந்தக் கடை வீதியை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்…. இதுதான் அவள் முதல் முதலாக இவ்வளவு தூரம் தாத்தாவுடன் வெளியே வந்தது…. வயது ஆறு இருக்கும். “ ழ “ வின் கண்கள் விரிய எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டிருந்தாள்… தாத்தா ஒரு கடையின் முன் நின்று தனக்குப் பிடித்த ஒரு உருவ பொம்மையை வாங்கிக் கொண்டார்…. கடைக்காரரிடம் தான் கொண்டுவந்த சில பழங்களையும் சிறிது தானியத்தையும் ஈடாகக் கொடுக்க அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்…. ஆட்டுப் பால் எங்கே கிடைக்கும் என்று கேட்க கடைகாரர் கை காட்டினார்… சிறிது ஆட்டுப் பால், நிலக்கடலை வாங்கிக் கொண்டார். அவர் கும்பிடும் ‘சாமிக்குப் பிடித்த உணவு வகைகள் அவை….‘

ழ தாத்தாவிடம் இருந்து அந்த திருவுருவப் பொம்மையை வாங்கிப் பார்த்தாள். அதன் தலை வழு வழுப்பாக முடி இல்லாமல் இருந்தது.. இரண்டு காதுகளும் பெரிதாக இருந்தது…. இரண்டு கண்களுக்குமுன் வட்டமாக இரண்டு வளையமும் அதிலிருந்து வரும் ஒன்று இருபுறமும்

நீளமாகப் போய் இரண்டு காதின்மேல் வளைந்து இருந்தது… மூக்கு மிகப் பெரிதாக இருந்தது…. சிரித்தபடி திறந்த வாயில் ஒன்றிரண்டு பற்கள் மட்டுமே… ‘ழ‘ விற்கு விநோதமாக இருக்க தாத்தாவிடம் கேட்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்… அவர்கள் வசிக்கும் இடம் செல்ல இன்னும் வெகு தூரம் நடக்க வேண்டும்… போகும் பொழுது கேட்டுக்கொள்ளலாம் என்று மவுனமாக இருந்தாள்… தாத்தா கடைவீதியில் தனக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக்கொண்டு இருப்பிடம் நோக்கி நடக்கத் துவங்கினார்…

ழ அவர் கையைப் பிடித்து இழுத்தாள்…

“என்ன ழ…? “

கையில் உள்ள உருவத்தைப் பார்த்து “இது என்ன..?“ என்றாள்

“இதுன்னு சொல்லக்கூடாது, தப்பு.. கன்னத்துலே போட்டுக்கோ, அவரு, அவருதாம்மா ‘சாமி‘ நமது அடிமை விலங்கு முறித்தவர்… நாளை அவருக்குப் பிறந்த நாள்…“

“எனக்கு சாமி பத்திச் சொல்லு… “ என்றாள் தாத்தாவின் கையைப் பிடித்து இழுத்து….

சந்தையை விட்டு வெளியே வந்தபின் பார்த்த தாத்தாவின் பார்வையில் சுற்றிலும் வறண்ட சம நிலம், சிவப்பாக… ஆகாசத்திலும் செந்நிறம்… இரண்டு சூரியன்கள்… தன் இருப்பிடம் செல்ல பல மணி நேரம் நடக்க வேண்டும்… அந்தப் பரந்தவெளி தாண்டி வெகு தூரத்தில் தெரியம் பச்சை சோலை தாண்டி உள்ள மலைக்குச் செல்ல வேண்டும்… ழ-விற்கு சொல்லிக் கொண்டே போனால் நேரம் போவது தெரியாது… தான் வாழையடி வாழையாக செவி வழியாக கேட்டறிந்ததை சொல்ல ஆரம்பித்தார்..

(ஆர்வத்தில் இடைமறித்தால் தாத்தா சொல்வதை நிறுத்திவிடுவார் என்பது ‘ழ‘வுக்குத் தெரியும்… நீங்களும் சற்று பொறுமையாகக் கேளுங்கள்…)

“கிட்டத்தட்ட பல நூறு ஆண்டுகள் முன்.. சுமார் ஒரு ஆயிரம் வருடங்கள் முன் இருக்கும்… சாமி வாழ்ந்த காலம்…. நம் மக்கள் எல்லாம் நிறைய இருந்தாங்க.. ஒரு இருபது கோடி (இருபது கோடி என்றால் என்ன என்று ‘ழ‘ மனதுக்குள் நினைத்தாள்… இப்பொழுது இருப்பதைவிட பல மடங்கு அதிகம் என்று மட்டும் புரிந்து கொண்டாள்) ஆனா அந்த மக்கள் அவங்க இஷ்டத்துக்கு எதுவும் செய்ய முடியாது.. அவங்களை ஒரு சக்திவாய்ந்த கூட்டம் அடிமையாக நடத்திக் கொண்டிருந்தது… நம் மக்களை விட அவர்கள் அதிக உயரமும், வெள்ளை நிறத்திலும் இருந்தார்கள்… தந்திரசாலிகள் கூட…. நம் மக்களிடையே இருந்த சின்னச் சின்ன வேற்றுமைகளை பெரிதாக்கி பிரிவனைகளை உண்டாக்கி வஞ்சகத்தாலும், சூழ்ச்சியாலும் நம்மையே ஆளும் நிலைக்கு வந்து விட்டார்கள்…. சுமார் 200 ஆண்டுகளுக்குமேல் இவர்கள் நம்மை அடிமைகளாகவும், இரண்டாம்தர மக்களாகவும் நடத்திய பொழுது இங்கொன்றும் அங்கொன்றுமாக சில எதிர்ப்புகள் தோன்ற ஆரம்பித்தன…. “

தாத்தா கொஞ்சம் மூச்சு வங்கிக் கொண்டார்… ழ அமைதியாக அவருடன் நடந்து வந்தாள்…

தாத்தா தொடர்ந்தார்….

“இந்தக் கால கட்டத்தில்தான் ‘சாமி‘ தோன்றினார். வெகு தூரத்தில் இருந்து கடல் மார்கமாக கப்பலில் வந்து இறங்கினார்… (கையில் ‘ழ‘வின் அழுத்தத்திலிருந்து கடல், கப்பல் என்பது புரியவில்லை என்று தாத்தா உணர்ந்தார்.) கடல் என்றல் ஒரு பெரிய நீர் நிலை…. பல நூரு காதம் தூரம் பரவி இருக்கும்…. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை நீலமாக

இருக்கும்… அதில் மிதந்து வரும் ஒரு பெரிய கலம்தான் கப்பல் என்று விளக்கினார்… சாமியை வரவேற்க நிறைய மக்கள் காத்திருந்தனர்….“

“அன்றிலிருந்து ஒரு முப்பத்தி இரண்டு வருடம் தொடர்ந்து நம்மை அடிமைபடுதியவர்களை எதிர்த்துப் போராடினார்… அவர் சொல்வதை அந்த நாடே கேட்டது… சாமி நில் என்றால் அந்த நாடே நின்றது… ‘ஒத்துழைக்காதே“ என்றால் ஒத்துழைக்க மறுத்தது…… “அடிமைப்படுத்தியவர் விற்கும் பொருட்களை வாங்காதே“ என்றால் வாங்க மறுத்தது.. அவரின் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு விரல் அசைப்பும் கேட்டு இருபது கோடி மக்கள் ஒருங்கே நடந்தனர்…. தனது போராட்டத்தில் முக்கியமாக அஹிம்சை எனும் கொள்கையை அடிப்படையாக கொண்டு, வன்முறையை தவிர்த்துப் போராடினார்… அதுவரை அனைத்துப் போர்களும், போராட்டங்களும், வன்முறையும், மிகுந்த உயிர் சேதமும் இல்லாமல் இருந்ததில்லை…. ஆனால் சாமி நடத்திய போராட்டத்தில் அவர் சார்பாக எந்த உயிர்க்கும் தீங்கு விளைவிப்பதை அவர் அனுமதிக்க வில்லை…. அஹிம்சை, சத்தியம், உண்ணா நோன்பு, ஒத்துழையாமை இவைகளை ஆயுதமாகக் கொண்டு நம் மக்களுக்கு அடிமைப் பிடியிலிருந்து விடுதலை வாங்கிக் கொடுத்தார்… அந்த சாமியுடைய பிறந்த நாளைத்தான் நாளை நாம் கொண்டாடுகிறோம்…. “

தாத்தா இந்தக் கதையை சில உப கதைகளுடன் சொல்லி முடிக்க அவர்கள் இருக்கும் இருப்பிடம் வந்து சேர்ந்தனர்…… அந்த மலை அடிவாரதிலிருந்து அதிலுள்ள குகைகளுக்குச் செல்ல வேண்டும்….

சற்று தொலைவில் ஏதோ அரவம் கேட்க ‘ழ‘ அந்தப் பக்கம் என்ன என்று பார்க்கச் சென்றாள்… தாத்தா அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவர்கள் குகைக்கு உள்ளே சென்று விட்டார்.

அரவம் கேட்ட இடத்தில் சிலர் கும்பலாக நின்று கொண்டு ஒருவர் தலைமையில்.

“‘சாமி“ என்று ஒன்றும் இல்லை… எல்லாம் வெறும் கட்டுக் கதை…. ஒருவர் சொன்னால் இருபது கோடி மக்கள் கேட்கிறார்களாம், கத்தி இன்றி, சண்டை இன்றி யுத்தத்தில் வெற்றி பெற்றார்களாம், அதுவும் ஒருவர் தலைமையில் 32 வருடங்கள் போரிட்டார்களாம் அவர் உண்ணா நோன்பு இருந்து போரிட்டாரம்.. எல்லாம் கட்டுக் கதை… மூட நம்பிக்கை… சாமி என்பதெல்லாம் பொய்… அவர் கடலிலிருந்து வந்தாராம்…. சுத்தப் பொய், யாரும் இதை நம்பாதீர்கள்.. நீங்கள் யாரவது கடலைப் பார்த்திருக்கிறீர்களா…..?“ என்று முழக்க மிட்டுக் கொண்டு இருந்தார்…

நாளை அக்டோபர் 2,

காந்தி ஜெயந்தி,

வருடம் 3015…

பூமியில் அல்ல……

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *