கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 5, 2023
பார்வையிட்டோர்: 1,435 
 
 

(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தபால்காரர், சைக்கிளில் இருந்து இறங்காமலே, லாவகமாக அந்தக் கடிதத்தை வீசியெறிந்தபோது, மாடக் கண்ணுவின் மளிகைக் கடை, படுவேகத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. கடைப் பையன்கள், சரக்குகளைக் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். கல்லாவில் உட்கார்ந்து ரூபாய் நோட்டுக்களை வாங்கிப் போட்டுக் கொண்டிருந்தான் மாடக்கண்ணு வியாபார டெக்னிக் தெரிந்தவன் அவன். முண்டியடித்துக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், பொறுமை இழந்து வேறு கடைக் குப் போக முடியாதபடி முதலிலேயே, அவர்களிடமிருந்து ரூபாய்களை வாங்கிப் போட்டுவிட்டான். இனிமேல் சரக்குகளை சாவகாசமாகக் கொடுக்கலாம்,

கடிதத்தைப் பிரித்துப் படித்த மாடக்கண்ணு கொதித்துப் போனான். கடையை ஒட்டினாற்போல் இருந்த ஸ்டுலில் உட்கார்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருந்த அறுபதைத் தாண்டிய ஐயாசாமியைப் பார்த்து, “பாத்திங்களா.. மாமா… இந்த பெருமாள் பயல் பண்ணியிருக்கிற அக்கிரமத்தை… வயசுப் பொண்ணு என்கிறதையும் மறந்துட்டு…”

அனுபவப்பட்ட ஐயாசாமி, அவனைக் கண்களால் அடக்கி விட்டு, வெளியே வரச் சொன்னார். இருவரும், ஒர் ஒரத்தில் நின்று கொண்டார்கள். சென்னையில் வேலை ப்ார்க்கும் டாக்டர் மகனைப் பார்த்துவிட்டுப் போக வந்திருக்கும் அவர், மாடக்கண்ணுவை, கடிதத்தை உரக்கப் படிக்கும்படிச் சொன்னார். அவன் உரக்கப் படித்தான். – “அன்பும் ஆசையும், பாசமும் பட்சமும் நிறைந்த சிரஞ்சீவி மகன் மாடக்கண்ணுக்கு, நானாகிய உன் அம்மா தர்மம்மாள் – மேலத்தெரு, முத்துலட்சுமி மூலம் எழுதும், சுகசேமக்கடிதம் என்னவென்றால், இங்கு, எல்லாம் வல்ல காத்தவராயன் கிருபையால் நானும், அன்னக்கிளியும் செல்லத்துரை, சீமைத்துரையும், உன் பெரியப்பா, பெரியம்மை, பிள்ளைகள்; சாமி, கருப்பன், லட்சுமனன், சரோஜா, செல்லக்கிளியும், உன் சித்தப்பா, சித்தி பிள்ளைகளும், இன்னும் நம் இனஜன பந்துக்கள் எல்லோரும் நல்ல சுகம். இதுபோல் உன் சுகத்தையும், ஐயாசாமி அண்ணாச்சி, அவர் மகன் பெண்டாட்டி சுகத்தையும், கண்ணால் பார்க்கவும், காதால் கேட்கவும் ஆசையோடு இருக்கிறேன்.

“மேல்படி, மாடக்கண்ணு அறியும் விஷயம் என்னவென்றால், நான் இனிமேல் உயிர் வாழ்ந்து பிரயோஜனமில்லை. அன்னக்கிளி வயலுக்குப் போயிருக்கும்போது தீவட்டித் தடிப்பய பிள்ளை பெருமாள், காதல் சினிமாப் பாட்டைப் பாடி கிண்டல் பண்ணியிருக்கான். உடனே அன்னக்கிளி, நல்லதங்காள்போல் அழுது புரண்டு என்னை ஏன் கிண்டல் பண்ணுகிறாய் என்று சொன்னதுக்கு, அந்த கழுத களவாணிப் பயமவன் உடனே விசிலடிச்சானாம். சாயங்காலம் நான் கண்டித்துக் கேட்டால், அவனும், அவன் அம்மாக்காரியும், அவளுக்குத் தோப்புக்கரணம் போடும் புருஷன்காரனும் என்னை மிரட்டினார்கள். உன்னையும் திட்டினார்கள். ஆகையால் நீ, இந்தக் கடிதத்தைத் தந்தி போல் பாவித்து, உடனடியாக ஊர் வந்து சேரவும். அன்னக்கிளி அழுது கொண்டே இருக்கிறாள். இவர்களை அடக்கினால்தான் நாம் தெருவில் நடக்கலாம். நீ வருவது வரைக்கும் நாங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருப்போம். எப்படியாவது வந்து நம் குலமானத்தைக் காப்பாத்து. உடனே வரவும்.

இப்படிக்கு,
உன் அன்புள்ள அம்மா,
தர்மம்மாள்.”

கடிதத்தைப் படித்த மாடக்கண் ணு, கைகளைத் தட்டிக் கொண்டான். தோளில் அடித்துக் கொண்டான். காலால் தரையை உதைத்துக் கொண்டான். வார்த்தைகளைச் சுமந்து நின்ற அவன் வாய், தானாகப் பேசியது:

“பாத்தியரா மாமா… அநியாயத்தை. என் தங்கச்சிய. வயசுப் பொண்ணு என்கிறதையும் பார்க்காம. அந்தப் பெருமாள் பயல் கிண்டல் பண்ணியிருக் கான்… அவன் கையை காலை ஒடிச்சாத்தான் எனக்குக் கைகால் இருக்கிறதா அர்த்தம். மாமா. நான் நியாயஸ்தன். நீரே சொல்லும்.”

ஐயாசாமி நிதானமாகப் பதில் அளித்தார்: “மாடக்கண்ணு உனக்கு இப்போ ஒடுற பாம்பைப் பிடிக்கிற வயசு. வாலிப வேகத்துலே பேசுறது தப்பு. மாமா சொல்றதைக் கேளு. ரெண்டு நாளைக்கு ஆறப்போடுவோம். அப்புறம் யோசிப்போம்…”

“இதுல யோசிக்கறதுக்கு என்ன மாமா இருக்கு? அன்னக்கிளியை, மெட்ராஸிலே ஒரு ஆபீஸர் பையனுக்கு குடுக்கலாம்னு நினைச்சிருக்கேன். இந்தச் சமயத்துலே பெருமாள் பய இப்படிப் பண்ணுணால்… நாலு பேரு என்ன நினைப்பான்? எவ்வளவு அசிங்கமா இருக்கு?”

“என்னடா அசிங்கம்? தாய் மாமா மகள்னு சும்மா சின்னப் பயபிள்ள சின்னத்தனமா விளையாடியிருப்பான். இதைப் போயி பெரிசாக்குறியே…”

“என்ன மாமா அப்படிச் சொல்லிட்டிரு. தாய் மாமா மவனா இருந்தா என்ன? அவங்களுக்கும் எங்களுக்கும் இழவும் கிடையாது. எட்டுங் கிடையாதுன்னு ஆனப்போ விளையாட்டு எதுக்கு? அதுல்லாம் இல்ல. நாங்க என்ன பண்ண முடியும் என்கிற இளக்காரம் – கொழுப்பு…”

“டேய்… ஆத்திரப்படாதே. பொறுத்தவரு பூமியாள்வார்!” “சும்மா கிடங்க மாமா… நான் இன்னும் ரெண்டு நாளையில ஊருக்குப் போயி, போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுக்கப் போறேன்.” “ டேய்… அப்படிப் பண்ணக் கூடாது.டா… போலீஸ்ல நீ கம்ப்ளெயிண்ட் குடுத்தால், அவங்க வேணுமின்னு வம்புக்காவது “அன்னக்கிளிக்கும், பெருமாளுக்கும் காதலு. அதுல அவன் பாடியிருக்கான்னு சாதிப்பாங்க. கோர்ட்ல. அவங்க வக்கீலு உன் தங்கச்சிய கூண்டுல நிக்க வச்சி. நீ பெருமாளை எத்தனை தடவ எங்கெல்லாம் சந்திச்சன்னு அசிங்கமா கேட்டாங்க. இது வயசுப் பொண்ணு விவகாரம். அம்பலத்துக்குப் போகக் கூடாது…”

“அதுவுஞ் சரிதான். பர்மா பஜாருல போயி ஒரு கத்தி வாங்கப் போறேன். ஊருக்குப் போயி, விசிலடிச்ச பெருமாளோட வாயைக் கிழிப்பேன். முழங்கால் சிப்பியை எடுப்பேன். அவன் அகப்படலன்னா… அவன் தங்கச்சி கையைப் பிடிச்சி இழுப்பேன். அப்புறம் விசிலடிப்பேன்.”

டேய்… ஏடாகோடமாய் பேசாதடா… அவங்களே அவள் கையை, உன் கைல பப்ளிக்கா வைக்கிறேன்னு சொன்னபோது மறுத்துட்டு. இப்போ பலவந்தமா கையை இழுக்கறது வீரமாடா?”

ஐயாசாமி எதைச் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்ட மாடக்கண்ணு சிறிது சங்கடப்பட்டான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவன்போல், “நீரு ஆயிரம் சொன்னாலும் சரிதான்; அதுக்கு மேலே சொன்னாலும் சரிதான். நாளக்கழிச்சி ரயில் ஏறப் போறேன். அவங்களப் பழிவாங்கப் போறேன்.”

ஐயாசாமி இதற்குமேல் பேசுவதில் அர்த்தமில்லை என்பதைப் புரிந்துகொண்டு ஒன்றும் பேசவில்லை. சிறிது நேரத்தில் புறப்பட்டு விட்டார்.

அன்னக்கிளியைக் கிண்டல் செய்ததாகக் கூறப்படும் பெருமாள், மாடக்கண்ணுக்கு அத்தை மகன். ஒரளவு வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவன். நொடித்துப் போயிருந்த மாடக்கண்ணுவின் குடும்பத்தை அவர்கள் உதாசீனப் படுத்தினார்கள். குடும்பத்தின் மூத்த மகனான மாடக்கண்ணு, வாலிபனானதும் சென்னைக்கு வந்து, வண்ணாரப்பேட்டையில் ஒரு மளிகைக் கடையில் சேர்ந்தான். எப்படியோ விரைவில் சொந்தமாகக் கடை வைத்தான். இரண்டு ஆண்டுகளில் ஊரில், ஐந்து ஏக்கர் நஞ்சை நிலத்தை வாங்கி விட்டான்.

சொந்தமாக வீடு கட்டிவிட்டான். இதுவரை பாராமுகமாய் இருந்த அத்தைக் காரி பெண் கொடுக்க முன்வந்தாள். ஆனால், மாடக் கண்ணுவின் அம்மாவுக்கு விருப்பம் இல்லை. மாடக்கண்ணுவின் தம்பி செல்லத்துரையும், அத்தை வீட்டில் பெண் எடுப்பது பெரும்பாவம் என்று வாதாடினான். அத்தைக்காரி கொதித்தெழுந்தாள். அன்றிலிருந்து ஒரே சண்டை. வரப்புத் தகராறு வந்தது; வாய்த் தகராறு வந்தது. கடைசியில் இரண்டு குடும்பங்களும் ஜென்மப் பகை ஆயின.

இந்தச் சமயத்தில் இப்படிப்படட கடிதத்தைப் பார்த்த மாடக்கண்ணு, தன் தன்மானத்திற்குச் சவால் விடப்பட்டிருப்பதாகக் கருதினான். வழக்கமாக, போர்ட்டருக்கு ஒரு ரூபாய் கொடுத்து, இடம் பிடிக்கும் அவன், எமர்ஜன்ஸியை முன்னிட்டு, முன்னதாகவே டிக்கெட் ரிசர்வ் செய்தான். இதற்கிடையே, தான் வந்து இரண்டில் ஒன்றைப் பார்த்துப் போவதாகவும், தங்கையைக் கிண்டல் செய்து தடியனின் பல்லை உடைக்கப் போவதாகவும், அது வரை தைரியமாக இருக்கும்படியும் அம்மாவுக்குக் கடிதம் போட்டான்.

மாடக்கண்ணு ஒரு டிரங்க்’ பெட்டியில் துணிமணிகளை எடுத்து வைத்தான். பட்டணத்துக்காரன் என்பதைக் கிராமத்தில் காட்டும் தோரணையில் புல்பாண்ட் போட்டு ஒரு சட்டையை இன் செய்து கொண்டான். கூலிங் கிளாஸ் மாட்டிக்கொண்டான். ஐயாசாமியும், ஊரில் இருக்கும் மனைவிக்குச் சேதி சொல்லி அனுப்ப வந்திருந்தார். அவன் புறப்படுகிற அந்தச் சமயத்தில் ஒரு கடிதம் வந்தது. மாடக்கண்ணு, அவசர அவசரமாகப் பிரித்து, உரக்கப் படித்தான்.

“அன்புமிகு அருமை மகன் மாடக்கண்ணுவிற்கு,

உன் அன்பு அன்னை, புலவர் பட்டத்திற்குப் படித்தும் வேலை கிடைக்காமல், பிறந்த மண்ணில் நாட்களைப் பயனின்றிக் கழித்துக் கொண்டும் – அதே நேரத்தில் உன் உறுதுணையால் சென்னையில் உயர்நிலைப்பள்ளி ஒன்றில் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையிலும் உயிர் வாழும் புலவர் புனிதவதி மூலம் வரையும் மடல். நலம். நலம் காண விழைகின்றேன்.

“மகனே மாடக்கண்ணு உன் அன்பின் கடிதம் கிடைத்தது. நான் எழுதிய சென்ற கடிதத்தில், ஒரு பெரும் பிழை நேர்ந்து விட்டது. வருந்துகிறேன். சென்ற கடிதம், எட்டாவது வகுப்பை மூன்று தடவை முட்டிப் பார்த்துத் தோல்வி கண்ட அசடு முத்துலட்சுமியால் எழுதப்பட்டது என்பதை நீ அறிவாய். அவள், நான் சொன்னதைப் புரியும் பக்குவம் இல்லாது, விவரங்களை மாற்றி எழுதி, பெரும் பாவம் செய்தனள்!

“மகனே, நடந்தது இதுதான்.

உன் அத்தைக்காரி என்று சொல்லப்படுபவளின் மகளான மேனாமினுக்கியும் – உன் அருமைத் தங்கையின் பெயரைக் கொண்டவளுமான அன்னக்கிளி, நம் வயல் வழியாக வரப்பில் ஒயிலாக நடந்துகொண்டே, காதற் பாட்டுக்களைக் கூவிக்கொண்டு, இதர பெண்களுடன் கொட்டமடித்துக் கொண்டே அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, பேதமைப் பண்புகளை மறந்தவளாய், இழிவான முறையில் கையைக் காலை ஆட்டிக்கொண்டு போயிருக்கிறாள். வயலில் இருந்த உன் இளவலாம் செல்வன் செல்லத்துரை, அவளைத் திருத்த வேண்டும் என்ற துய நோக்கில், பெண்களுக்கு அழகு அடக்கம் என்று அவன் பாட்டுக்குப் பேசியிருக்கிறான். அந்த இரண்டும் இல்லாத அன்னக்கிளி, உடனே சினந்து கொதித்து, உன் இளவலை உன் கண்ணினும் இனிய தம்பியைத் திட்டியிருக்கிறாள். மாலையில் அவள் அன்னையும் தந்தையும் சுற்றம் சூழ நம் இல்லம் வந்து என்னை ஏசினர். பெருமாள், நம் அன்னக்கிளியை – உன் உயிரினும் மேலான இனிய தங்கையை இரண்டு நாட்களுக்குள் நையாண்டி செய்யப் போவதாகச் சபதங் கொண்டுள்ளான். ஆகையால் மகனே! ஓடி வா. உடனே வா! தாய்

சொல்லைத் தட்டாதே தயங்காமல் ஓடி வா!

இவ்வண்,
உன் ஆருயிர் அன்னை,
தர்மம் அம்மையார்.”

பின்குறிப்பு:

புலவர் புனிதவதி நல்ல பெண். அறிவாளி. உன் நண்பர்களை விசாரித்து, அங்கு உயர்நிலைப்பள்ளி ஒன்றில் பணி கிடைக்க ஏற்பாடு செய்துவிட்டு வா. இதற்காக, நீ இரண்டு நாள் தாமதமாக வந்தாலும் பாதகமில்லை.

அன்னை, த – அ.

மாடக்கண்ணு சிரமப்பட்டுக் கடிதத்தைப் படித்து முடித்தான். ஐயாசாமியும், கஷ்டப்பட்டு விவகாரத்தைப் புரிந்து கொண்டார். சிறிது மெளனம் சாதித்த மாடக்கண்ணு, பிறகு “பாருங்க மாமா… அநியாயத்தை… என் தம்பி. அத்தை மகள் கெட்டுப் போயிடக் கூடாதே என்கிறதுக்காக கண்டிச்சிருக்கான். எவ்வளவு திமிரு இருந்தால் இதைப் புருஞ்சிக்காம, அவங்க எங்க நடைவாசல்ல வந்து திட்டியிருப்பாங்க… நான் ஊருக்குப் போயி ரெண்டுலே ஒண்ணு பார்த்துட்டு வந்துடறேன்…”

மாடக் கண் ணு முன்னை விட அதிகமாகக் கொதித்துப் போயிருப்பதைப் பார்த்து முதலில், ஐயாசாமி ஆச்சரியப்பட்டார். பிறகு சிறிதுநேரம் மெளனியானார். அதற்குப் பிறகு வயிறு குலுங்கச் சிரித்தார்.

“ஏன் மாமா சிரிக்கிறீரு…?”

“மாடக்கண்ணு. இந்த மனசு இருக்கே… அது ஒரு செம்மறி ஆடு. எதை எதை நியாயமாக்கணும்னு நினைக்கிறோமோ, அது அதை நியாயந்தான்னு நம்மள நம்ப வைக்கிறதுக்கு, ஆயிரங் காரணங்களை ஜோடிக்கும்… முந்தாநாளு, அன்னக்கிளியை, பெருமாள் கிண்டல் பண்ணுனான் னு, அதை தப்புன்னு நியாயப்படுத்திக் கத்தினே. இப்போ அதுக்கு எதிர்மாறாய், உன் தம்பிதான், அத்தை மகளை கிண்டல் பண்ணுண் வன்னு தெரிஞ்சதும் கிண்டல் பண்ணுவதையே உன் மனசு நியாயப்படுத்தப் பாக்குது. இந்த மனசு இருக்கே… அது அவரைக் கொடி மாதிரி, எதுல படற வைக்கிறோமோ அதுல படரும்.”

மாடக்கண்ணு சிறிது யோசித்தான். ஐயாசாமி சொல்வதில் அர்த்தமிருப்பது போல் தெரிந்தது. முந்தாநாள் வேறுவிதத்தில் நியாயம் பேசிய அவனின் அதே மனம், இப்போது தன்னை அறியாமலே, சிறிதும் வெட்கம் இல்லாமல் சட்டையை மாற்றிக் கொண்டது அவனுக்கு விசித்திரமாகவும், வெறுப்பாகவும் தெரிந்தது. தூக்கிய டிரங்க்’ பெட்டியைத் தரையில் வைத்துக் கொண்டே, ஐயாசாமியைப் பார்த்தான். அவர் சொன்னார்:

“நான் சொல்றத நல்லா கேளுடா. உன் குடும்பத்துக்கும்… உன்னோட அத்தை குடும்பத்துக்கும் ஜென்ம விரோதம் வாரதுக்கு அடிப்படைக் காரணமே பாசந்தான். அன்னக்கிளியை நீ கட்டிக்கணுங்கற அன்பு நிறைவேறாமல் போச்சி. அந்த அன்பை, அத்தைக்காரி பகையாய் மாத்திட்டாள். இது இயற்கைதான். உன் மேல. உசிர வைச்சிருக்கிற உன் அத்தை மவ அன்னக்கிளி, உன் தம்பி செல்லத்துரையைப் பார்த்ததும், இவன்தான் நம்ம அத்தானோட சேரவிடாமல் தடுத்திட்டான் என்கிற ஆத்திரத்துல, “உன் அண்னன் கிடைக்காமல் போனதால், நான் வாழாம போகப் போறதில்ல’ என்பதைக் காட்டிக்கிற மாதிரி பவுசு செய்திருப்பாள். இதை, செல்லத்துரையும் பாசத்தால கண்டிக்கப் போயிருப்பான். விவகாரம் இதுதான். இப்போ. நீ கூட அதிகமா கோபப்படுறதுக்கும் காரணமிருக்கு.”

என்ன காரணம் மாமா?”

“நீயும் உன் அத்தை மகள விரும்புற. நாம உயிர வச்சிக்கிட்டு இருக்கிற அன்னக்கிளியா அடக்கமில்லாமல் நடந்துகிட்டா என்கிற ஆத்திரத்துலதான் கோபப்படுற. தம்பியை திட்டினதுக்காக இல்ல… மூளையையும் மனசையும் ஒண்னுக்கு ஒண்னு அடிமையாய் வச்சாத்தான், நியாயத்த நியாயமாய் பார்க்கமுடியும்…”

மாடக்கண்ணு பெட்டியை ஒர் ஒரமாகத் தள்ளிவிட்டு, கடைக்காரப் பையனைப் பார்த்து, “டிக்கெட்ட கேன்ஸல் பண்ணிட்டு வாடா!” என்றான்.

ஐயாசாமி குறுக்கிட்டு, “புறப்பட்ட பயணத்தை நிறுத்தாதடா… அத்தை பொண்ணு கழுத்திலே மூணு முடிச்சி போட்டு அந்தப் பய மவளையும் கூட்டிக்கிட்டு வா. நாளைக்கு நானும் ஊருக்கு வாரேன். நீ அவள் கையை பலவந்தமாய் இழுக்கிறதுக்கு அவசியமில்லாம பண்ணிடுறேன். பய மவள், புண்னாக்கை மாடு பாக்கறது மாதிரி, உன்னை ஆசையோடு பார்ப்பாள்!”

ஐயாசாமி, வாய் குலுங்கச் சிரித்தார். நானந்தோய்ந்த புன்னகையைப் படரவிட்டுக் கொண்டே, மாடக்கண்ணு ஊருக்குப் புறப்பட்டான்.

– ஒரு சத்தியத்தின் அழுகை – முதல் பதிப்பு : 1981, மணிவாசகர்பதிப்பகம், சென்னை-600108

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *