நிஜத்தில் நடக்குமா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 9,071 
 

மாலை நேரம். மஞ்சள வெய்யில் கண்ணைக் கரித்தது. சாலை போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே இருந்தது. வண்டி ஓட்டுவது மிகுந்த சிரமமாயிருந்தது.ரவிக்கு வீடு வந்து சேர்ந்தால் போதும் என்றாகிவிட்டது. ஸ்கூட்டி தெருமுனை திரும்பும் போதே தன் வீட்டின் முன்பு கூட்டமாய் பரபரப்புடன் தெரிந்தது.

வண்டியின் வேகத்தைக் கூட்டினான்.வீடு வந்ததும் வண்டி யை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான்.

எதிர் வீட்டு கனகம்மாள், “தம்பி நல்லவேளை நீங்க சீக்கிரமா வந்துட்டீங்க. பார்வதிக்கு மத்தியானத்திலிருந்தே உடம்பு சரியில்லை. ஒரே வாந்தி. நா கசாயம் கூட வச்சிக் கொடுத்தேன்.ஒண்ணுத்துக்கும் அசைய மாட்டீங்குது. சீக்கிரமா டாக்டர் கிட்டே போகணும். நீங்க கிளம்புங்க. ஒரு நொடி லெ வீட்லே சொல்லிட்டு வந்தர்றறேன்.”

கனகம்மா கிளம்பினாள். அக்கம் பக்கம் வீட்டிலிருந்து வந்தவர்கள் மெல்ல கலைந்தனர்.

ரவி பார்வதி அருகே வந்து, “ என்ன பண்ணுது பார்வதி?”

“முடியலங்க வயிறு ரொம்ப வலிக்குதுங்க. சீக்கிரமா டாக்டர் கிட்ட போலாங்க.” அவள் துடித்தாள்.

“இதோ புறப்படலாம்.” என்று கூறிவிட்டு பக்கத்து வீட்டுப் பையனை ஒரு ஆட்டோவை அழைத்து வரச்சொன்னான்.

சில நிமிடங்களில் ஆட்டோ வந்து நின்றது. பக்கத்து வீட்டுப் பெண்கள் கைத்தாங்கலாய் ஆட்டோவில் ஏற்றினார்கள். நின்று கொண்டிருந்தவர்கள், “பாவம் ரொம்பவும் முடியல போலிருக்கு” என்று பேசிக் கொண்டனர்.

ஆட்டோ கிளம்பியது. கூட்ட நெரிசலையும் சிக்னல்களையும் தாண்டி ஆஸ்பத்திரியை அடைந்தது.

ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகமாகயிருந்தது. டாக்டர் அப்போதுதான் வந்திருந்தார்.

ரவியைப் பார்த்ததும் நின்று, “என்ன ரவி. யாருக்கு உடம்பு சரியில்லை.”

“மிஸ்ஸசுக்குதான். ரொம்ப முடியல்ல. வயிறு வலிக்குதாம்”

“அப்படியா உள்ள வாங்க”

அவனுக்கு ஒரே ஆச்சர்யமாயிருந்தது. இவ்வளவு பேர் காத்திருக்க தன்னை உடனே அழைத்தது சந்தோசமாக இருந்தது.

டாக்டர் பரிசோதித்தார்.

“ ரவி நீங்க இவங்கள அழைச்சுட்டு பின்பக்கம் போய் ப்ளட் டெஸ்ட் ஆப்டம் ஸ்கேன் ஒண்ணு பண்ணிட்டு அடமிட் ஆய்க்கங்க. ரிப்போர்ட் வரட்டும். அதுவரைக்கும் வலியில்லாம இருக்க மாத்திரை கொடுத்திருக்கேன் உள்ள பார்மஸில வாங்கிக்கங்க.”

“ சார் அட்மிஸன் அவசியமா? மாசகடைசி நீங்க சொல்றதப் பாத்தா ஏகப்பட்ட செலவாகும் போலிருக்கு.”

“என்ன விளையாடறீங்களா. உங்களுக்கென்ன சார். நம்ம பங்களா பக்கத்திலே வீடு கட்டீட்டிருக்கீங்க… வீடு எந்தலெவலுக்கு இருக்கு.”

“அது ஒரு பக்கம் இருக்கு லோன்ல தான் வீடுகட்டறேன். லிண்டல் லெவலுக்கு வந்தாச்சு. அடுததது கான்கிரீட் போடணும் பணம் எதிர்பார்த்துட்டிருக்கேன். இநத நேரத்திலே, அவளுக்கு இந்த மாதிரி உடம்பு முடியாம…. அதான் என்ன பண்றதுன்னு தெரியலே?”

“டோன்ட் வொரி காசப்பத்திக் கவலப்படாதிங்க. ஒருபைசா செலவு பண்ண வேண்டாம் எல்லாம் நல்லா ஆனதுக்கப்புறம் பாத்துக்கலாம். இப்போதிக்கு அவங்களுக்குத் துணையாயிருந்தா அதுவே போதும் “

பார்வதியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான் ரவி.

“என்னம்மா வலி பரவாயில்லையா?”

“ம். அவர் தொட்டதுமே வலியே போயிடுச்சு போலிருக்கு.”

“என்னடி சொல்றே?” என கேக்க வேண்டும் போலிருந்தது.

என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. எல்லாம் முடிந்து எப்போது அறைக்கு வந்து படுத்தோம் என்பதே புரியவில்லை.

கதவு தடதட வென்று தட்டும் ஒலி கேட்டது.

“சார் பால்” என்று வாய்கிழிய கத்துவது மட்டுமே கேட்டது.

எழுந்ததும் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. தான் எழுந்தது தன் வீட்டில் ஆஸ்பத்திரியுமில்லை ஒரு மண்ணுமில்லை. இத்தனை சந்தடியிலும் எருமை மாதிரி தூங்குகிறாள் பார்வதி. அப்ப அவளுக்கு ஒன்றுமில்லையா? இதுவரை நடந்தது முழுவதும் கனவா?

பிறகு நிஜத்தில் எங்காவது இதுபோல நடக்கிற காரியமா?

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *