காட்டுப் பூனைகளும் பச்சைக் கிளிகளும்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 9,137 
 

அறையின் நான்கு பக்கச் சுவர்களும் என்னை நோக்கி நகர்கின்றன. மெதுமெதுவாக நகர்கின்றன. இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்தச் சுவர்களுக்குள் நான் நசுங்கிச் சாகப் போகிறேன்.

தலை சுற்றுகிறது. நெஞ்சு விம்மித் தணிகிறது. இதயம் படபடக்கிறது. தேகம் குப்பென்று வியர்க்கிறது. கைகளால் கண்களைப் பொத்திக்கொண்டு நான் வீரிட்டு அலறுகிறேன்.

சுவரில் மாட்டப்பட்டிருக்கும் மணிக்கூட்டில் நேரம் காலை எட்டு மணி. அதன் ‘டிக்டிக்’ சத்தம் பெரிது பெரிதாகிக் கொண்டே வருகிறது. என்னை நெருங்கி நெருங்கி வருகிறது. ஏ.கே 47இன் சத்தம்போல் என் காதைப் பிளக்கிறது.

“சும்மா சத்தம் போடாதையடி பிள்ளை…” அம்மா அடுப்படியிலிருந்து பலமாகக் கத்துகிறா.

கண்களைப் பொத்தியிருந்த கைவிரல்களைச் சிறிது விரித்து, நீக்கலினூடாகப் பார்க்கிறேன். இப்போது சுவர்கள் பின்புறமாக நகரத்தொடங்குகின்றன. சிறிது நேரத்தில் மீண்டும் தமது இடத்தில் பொருந்திக் கொள்கின்றன.

நேரம் எட்டு ஐந்து.

ரியூசன் வகுப்புக்கு நேரமாகிறது. வசந்தி, கவிதா, பூரணி, நான் எல்லோரும் சேர்ந்துதான் சைக்கிளில் ரியூற்றறிக்குப் போவோம். இண்டைக்குக் ‘கெமிஸ்றி கிளாஸ்’. ஸேர் ஒன்பது மணிக்கெல்லாம் வந்துவிடுவார்.

“அம்மா, அம்மா….. கதவைத் திறவுங்கோ……. நேரமாச்சு. நான் ரியூசனுக்குப் போகவேணும்.”

“……..”

நான் கதவைப் பட படவெனப் பலமாகத் தட்டுகிறேன்.

“இவளோடை பெரிய கரச்சல்…. ரியூசனுக்குப் போறநேரம் வந்திட்டால் அலட்டத் தொடங்கி விடுவள்” அம்மா முணுமுணுக்கிறா.

‘கிணிங்… கிணிங்….’

தெருவிலே நிண்டு வசந்தி பெல் அடிக்கிறாள். என்னைக் கூட்டிக் கொண்டு போகத்தான் வந்திருக்கிறாள்.

“அம்மா கதவைத் திறவுங்கோ….. ஏன் பூட்டி வைச்சிருக்கிறியள்? வசந்தி என்னை விட்டிட்டுப் போகப் போறாள்.”

அவள் என்னை விட்டிட்டுப் போனா, நான் தனியாகத்தான் போகவேணும். இனிமேல் நான் அந்தப் பக்கம் தனியாகப் போகமாட்டன். எனக்குப் பயமா இருக்கு….. தனியாக அவங்கடை ‘சென்றி’யைத் தாண்டிப் போறதெண்டா…. வசந்தி கூட வந்தாப் பயமில்லை.

“அது வசந்தியில்லைப் பிள்ளை, வேறையாரோ தெருவிலை பெல் அடிச்சுக் கொண்டு போகினம். நீ சும்மா சத்தம் போடாமல் இரு.”

அம்மா பொய் சொல்லுறா. வசந்தியின் பெல் சத்தம் எனக்குத் தெரியும். போறது வசந்திதான். கதவைத் தட்டித் தட்டி அம்மாவைக் கெஞ்சிக் கெஞ்சி நான் சோர்ந்து போகிறேன். கதவைத் தட்டிய கைகள் வலிக்கின்றன.

வசந்தி போயிருப்பாள். ரியூசன் தொடங்கிற நேரமாச்சு. அவள் தனியாகத்தான் போனாளோ….. அல்லது கவிதா, பூரணி எல்லாரும் சேர்ந்து போயிருப்பினமோ…? எப்படிப் போனாலும் அவங்கள் சும்மா விடமாட்டாங்கள். சென்றியிலை சோதிச்சுத்தான் அனுப்புவாங்கள். ஐ.சியைத் திருப்பித் திருப்பிப் பார்த்து….. ஸ்கூல் பாய்க்குகளைக் கொட்டிக் கிளறி, கேள்வியள் கேட்டு…..

சின்னராசு கார் ஓட்டிவரும் சத்தம் கேட்கிறது. யன்னல் பக்கம் சென்று வெளியே பார்க்கிறேன். யன்னலின் ஒரு பக்கக் கதவு உடைஞ்சு தொங்குது, இழுத்துப் பூட்ட ஏலாது.

“அடே சின்னராசு, இங்கை வாடா……. அச்சாப் பிள்ளையெல்லே…. இந்த அறைக் கதவைத் திறந்து விடடா.”

அவனுக்கு நான் சொல்லிறது கேட்கேல்லை. விர்ரென்று வேகமாய் அவன் கார் ஓட்டும்போது வாயிலிருந்து எச்சில் பறக்கிறது…. தூவானமாய்த் தெறிக்கிறது. கால் இடறி விழப்போகும் நேரத்தில சமாளித்துக் கொண்டு கியரை மாற்றுகிறான்.

ரிவேர்ஸ் கியர் – பின்புறமாக வேகமாய் ஓட்டிவந்து விறாந்தையின் முன் நிற்பாட்டுகிறான்.

அவன் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் விறாந்தையில் தொங்கும் கிளிக்கூண்டின் பக்கம் போவான்.‘ரிவிரஸ’ இராணுவ நடவடிக்கையின் போது நாங்கள் ஊரைவிட்டு ஓடி வன்னிக்குப் போயிருந்த காலத்திலை ஒரு கிளி பிடிச்சனாங்கள். திரும்பி வரேக்கை அதையும் கொண்டுவந்திட்டம். அது என்ரை செல்லக்கிளி.

சின்னராசு தினமும் கிளி சாப்பிடுகிறதுக்கு ஏதாவது கொண்டுவந்து கொடுப்பான். அது சாப்பிடுவதை வேடிக்கை பார்ப்பான். வெகு நேரமாய்க் கிளியுடன் பேசுவான். அவனைக் கண்டு விட்டால் கிளிக்கும் குதூகலம் பிறந்து விடும், ஏதேதோ பேசும்.

யன்னலினூடாக வீட்டின் முன்புறத்தைப் பார்க்க முடியாது. அதனாலை சின்னராசு என்ன செய்யிறான் எண்டு என்னால் பார்க்க முடியவில்லை.

சின்னராசு மீண்டும் காரை ஸ்ராட் செய்கிறான்.

“அடே என்ரை ராசாவெல்லே… கதவைத் திறந்துவிடடா….” நான் மீண்டும் அவனிடம் கெஞ்சுகிறேன்.

“முடியாதக்கா…. திறந்து விட்டால் மாமி என்னைப் பேசுவா” என்று சொல்லிக்கொண்டே கார் ஓட்டிய வண்ணம் அவன் விரைகிறான்.

எனக்கு மீண்டும் தலை சுத்துகிறது. திடீரெண்டு நாலு பக்கச் சுவர்களும் கைகோர்த்துக்கொண்டு என்னைச் சுற்றி வட்டமாய்ச் சுழல்கின்றன…. “ஐயோ.. ஐயோ….” நான் கண்களை மூடிக்கொண்டு வீரிட்டு அலறுகிறேன். நெஞ்சு படபடக்கிறது. தேகம் வியர்வையில் நனைகிறது. மயக்கம் வருகிறது. நான் நிலத்திலே சாய்கிறேன். எவ்வளவு நேரம் மயங்கிக் கிடந்தேனோ எனக்கே தெரியாது.

விழித்தெழுந்தபோது உடம்பெல்லாம் வலியெடுக்கிறது; சோர்வாக இருக்கிறது.

இப்ப ரியூசன் முடிஞ்சிருக்கும். முந்தி வடக்குச் சந்தியிலை “சென்றி” இருந்தபொழுது எங்களுக்கு எந்தக் கரச்சலும் இல்லை. பனை வடலியளுக்குப் பின்னாலிருந்து எழும்பி வருகிற சூரியனை ரசித்தபடி நாங்கள் ரியூசன் வகுப்புகளுக்கு போறனாங்கள். சென்றிப் பக்கம் போகாமலே ரியூற்றறிக்குப் போகலாம். இப்ப இடத்தை மாத்திப் போட்டாங்கள். எங்கடை வீட்டிலை இருந்து நாலு வளவு தள்ளி சென்றி போட்டிருக்கிறாங்கள்.

போன மாசத்திலை ஒரு நாள் மையல் பொழுது… “றக்” ஒண்டிலை வந்து அந்தப் பெரிய வீட்டுக்கு முன்னாலை இறங்கி னாங்கள். வீட்டையும் வளவையும் சுத்திச் சுத்திப் பாத்தாங்கள். அடுத்த நாள் மரங்கள் தறிச்சு விழுத்துகின்ற சத்தங்கள் கேட்டுது. பனையளைத்தான் தறிச்சவங்கள். பனை யாழ்ப்பாணத்தின் சின்னம்; கற்பகதரு எண்டு எங்கடை ஆக்கள் சொல்லிறவை. இவையளுக்குப் பனையளைத் தறிச்சாத்தான் பாதுகாப்பாம்!

தெருவிலை மண்மூடையள்…. மரக்குத்தியள்…. தகரங்கள்…. பெயின்ற் அடிச்ச தார்ப் பீப்பாக்கள்… துவக்கோடை நிக்கிற இளவட்டங்கள்… கொச்சைத் தமிழ் மிரட்டல்கள்.. வெறித்த பார்வைகள்…. கொஞ்சல்கள்… காவல் அரண் ஒன்று புதிதாய் முளைத்தது.

அங்கு ஒரு நெட்டையன். பெயர் சறத். எந்த நாளும் சொட்டைக் கதைதான் கதைப்பான். அவனுக்குத் தமிழ் எழுத வாசிக்கவும் கொஞ்சம் கொஞ்சம் தெரியும்.

“சிங்களம் பேசத் தெரியுமா?” எண்டுதான் முதலில் கேட்பான். இல்லையென்று சொன்னால் கொச்சைத் தமிழிலே கதைப்பான்.

தமிழ்ப் பெட்டையள் நல்ல வடிவாம். இங்கை பெம்பிளைப் பிள்ளையள் எல்லாருக்கும் சைக்கிள் ஓடத் தெரியுமாம். உங்கடை அம்மாமாருக்கும் சைக்கிள் ஓடத் தெரியுமோ எண்டு ஒரு நாள் கேட்டான். எங்கடை ‘ஐ. சி.யை’ வாங்கி வச்சுக்கொண்டு கனநேரமாய்த் தராமல் கதைச்சுக்கொண்டே இருந்தான்.

வசந்திக்குக் கோபம் வந்திட்டுது. “ரியூசனுக்கு நேரமாச்சு, ஐ.சி. யைத் தாருங்கோ. தராட்டில் பெரியவனிட்டை றிப்போட் பண்ணுவம்” என்று படபடத்தாள்.

“நான் தான் இங்கை பெரியவன்” எண்டு சொல்லிச் சிரித்தான் அவன்.

அந்தச் சென்றியைக் கடந்து போறதெண்டா எல்லாருக்கும் சங்கடம்தான். வண்டில்களில், சைக்கிள்களில், தலைச்சுமைகளில் கஷ்டப்பட்டுக் கட்டியேத்திக் கொண்டுபோற சாமான்களை செக் பண்ணிறதெண்டு கொட்டிச் சிந்துவாங்கள். சைக்கிள் செயின் கவர்களைக் கழட்டிச் செக்பண்ணிப்போட்டு நிலத்திலை போடுவாங்கள்; நாங்கள்தான் அதைப் பூட்டவேணும்…… கொழுப்பு…

அண்டைக்கு எங்களைச் செக் பண்ணிற நேரத்திலை வேறையொருத்தரையும் செக்பண்ணாமல் போகவிட்டாங்கள். எல்லாரும் எங்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே போச்சினம். சந்தேகக் கண்கள்…. எங்களுக்குக் கூச்சமாய் இருந்தது.

கொஞ்சநாளில் ரியூசன் வகுப்பிலை எங்களைப் பற்றிக் கிசுகிசுப்பு… நாங்கள்தான் வலிய வலியப் போய் சென்றியிலை நிண்டு சிரிச்சுச் சிரிச்சுக் கதைக்கிறமாம்.

பின் வாங்கிலை இருக்கிற சிவராசன் சொன்னான், “எங்கடை ஊர்ப் பெட்டையள், தெரிஞ்சதுகள் எண்டு ஆசையாய் நாங்கள் ஏதும் பகிடி கதைச்சால், எங்களை முறைச்சுப் பாக்கிறாளவை…. அவங்களோடை இளிச்சு இளிச்சு நளினம் பேசிறாளவை.”

“அதுமட்டுமில்லையடா, எங்களைப்பற்றி அவங்களிட்டை றிப்போட் பண்ணுறாளவை” என்றான் பக்கத்தில் இருந்த வேல் முருகு.

அப்போது வசந்தி என்னுடைய காதுக்குள்ளை சொன்னாள், “உவையளுக்கு எங்கடை நிலைமை எங்கை தெரியப்போகுது? அவங்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் இருக்க முடியுமோ? அவங்களோடை சிரிச்சுக் கதைச்சா செக்கிங் குறையும், பிரச்சினை இருக்காது. நாங்கள் மனசுக்குள்ளை எரிஞ்சுகொண்டுதான் வெளியிலை சிரிக்கிறம் எண்டது உவையளுக்குத் தெரியாது.”

கொஞ்ச நாட்களில் எல்லாம் பழகிப்போய்விட்டது. சென்றியில் எங்களுக்கு பெரிதாய் செக்கிங் ஏதும் இருப்பதில்லை. தனியாய்ப் போகும் போதும் பயமிருக்காது. அதனால் ரியூற்றறிக்குப் போகும்போது சேர்ந்து போக வேண்டுமென்ற நிலைமையும் இல்லை. இப்போது அங்கு ஐ.சி.யை எங்களிடம் கேட்க மாட்டார்கள். ஆனாலும் அந்த இடத்தில் சைக்கிளை ஓட்டிச் செல்வதற்கு எவருக்கும் அனுமதியில்லை. இறங்கி உருட்டிக்கொண்டுதான் போகவேணும்.

வசந்தி ஒருநாள் என்னிடம் கேட்டாள், “சென்றியிலை நிக்கிற சறத்தைப்பற்றி நீர் என்ன நினைக்கிறீர்?”

“நல்ல ஆள்மாதிரித்தான் தெரியுது” என்றேன்.

“அவனோடை நீர் அடிக்கடி கதைக்கிறீராம். அவன் உமக்கு லெட்டர் குடுத்தவனாம்; போய்ஸ் கதைக்கினம்”

“என்ன வசந்தி நீரும் அதை நம்புறீரே?” லெட்டர் எனக்குக் குடுக்கேல்லை. போறவழியிலை போஸ்ற் ஒபீஸிலை போஸ்ற் பண்ணச் சொல்லித்தான் தந்தவர்…… சத்தியமாய் வேறையொண்டும் இல்லை.” நான் அழுதுவிட்டேன்.

சின்னராசு யன்னல் பக்கம் பரபரப்புடன் ஓடிவருகிறான். யன்னல் கம்பிகளைப் பிடித்தபடி தாழ்ந்த குரலில் கிசுகிசுக்கிறான். “அக்கா, அக்கா ஆமிக்காறங்கள் தெருவிலை நிக்கிறாங்கள். வீடுவீடாய் செக் பண்ணப்போறாங்களாம். எனக்குத் தெருப்பக்கம் போகப் பயமாய் இருக்கு; அதுதான் இங்கை ஓடிவந்தனான்.”

எனக்குத் தலைக்குள் ஏதோ செய்கிறது. சுவர் ஓரமாய் மறைந்து நின்று தெருப்பக்கம் பார்க்கிறேன். சறத்தின் தலை தட்டிப் படலைக்கு மேலால் தெரிகிறது. அவனருகே நிற்பவன் சுமதிபாலா. அவர்கள் என்னைத்தான் நோட்டம் விடுகிறார்கள். சறத் என்னைக் கண்டிட்டான். தலையில் அணிந்திருக்கும் தொப்பியை முன்புறமாகச் சரித்து தன்னுடைய முகத்தை மறைக்க முயற்சிக்கிறான். என்னைக் கூர்ந்து பார்க்கிறான். அவனது கையில் ரி. 56 இருக்கிறது. துவக்கின் விசையில் அவனது சுட்டுவிரல் பதிவது நன்றாகத் தெரிகிறது.

எங்கோ இருந்து வந்த காட்டுப் பூனையொன்று முன்விறாந்தைப் பக்கம் போகிறது.

“மியாவ், மியாவ்”

“எடே சின்னராசு, கிளிக்குச் சாப்பாடு போட்டனியே? கிளிக்கூடு திறந்தபடியே கிடக்கு… பூனை உலாவுதடா கவனம்.”

சின்னராசு என்னை விநோதமாய்ப் பார்க்கிறான். “என்னக்கா மறந்து போனியளே? இப்ப கிளி அங்கை இல்லை… போன கிழமை அது செத்துப்போச்சு…”

ஓ….. ஓமோம், எனக்கு நினைவுக்கு வருகிறது…. கொஞ்சம் கொஞ்சமாய் புகை மூட்டத்துக்குள் தெரிவது போல் நினைவு வருகிறது. நான் விம்மி விம்மி அழுகிறேன்.

அண்டைக்கு நான் தனியாத்தான் போனனான். சென்றியிலை சறத்தும் சுமதிபாலாவும்தான் நிண்டவங்கள். என்ரை சைக்கிளைப் பறிச்சு உள்ளுக்குக் கொண்டுபோய் வச்சிட்டாங்கள். சைக்கிளைத் தரச்சொல்லி நான் கெஞ்சி மன்றாடினன். உள்ளுக்குப் போய் எடுக்கச் சொன்னாங்கள்.

நான் தயங்கித் தயங்கி…. பயந்து பயந்து… ஐயோ எனக்கு மயக்கம் வருகுது, தேகம் நடுங்குது, வேர்க்குது, நெஞ்சு படபடக்குது. ஓர் அடியைக்கூட என்னால் எடுத்துவைக்க முடியவில்லை.

ஓ, அதுக்குப் பிறகு…அதுக்குப் பிறகு……. உச்சந் தலைக்குள் ஏதோ கிழிந்து சிதறி…. எழும்ப முடியாமல்…. எழும்பி, நடக்க முடியாமல் தள்ளாடித் தள்ளாடி, சைக்கிளை உருட்டிக் கொண்டுதான் வீட்டுக்கு வந்தனான்.

விறாந்தையிலை சைக்கிளைச் சாத்தினபோது அம்மா கவலையோடு சொன்னா, “உவன் சின்னராசு வந்து கிளிக்குச் சாப்பாடு போட்டுக் கொண்டிருந்தவன். கூட்டுக் கதவைப் பூட்ட மறந்திட்டான். காட்டுப் பூனையொண்டு திரிஞ்சது…. கிளியைக் கடிச்சுக் குதறிப் போட்டுது பிள்ளை……”

எனக்கு நெஞ்சு விறைச்சுப் போச்சு.

அம்மா என்ன சொல்லிறா… ஒருவேளை.. ஒருவேளை?

என்னுடைய தேகம் நடுங்குது.

கிளி இரத்த வெள்ளத்தில் குற்றுயிராய்க் கிடக்கிறது. அதன் அடிவயிற்றின் கீழ் காட்டுப் பூனை பதித்த கோரச்சுவடுகள்….

மயங்கி நிலத்திலே சாய்கிறேன்.

என்னைச் சுற்றியிருக்கும் சுவர்கள் சுழல்கின்றன., என்னை நெரிப்பதற்கு மெது மெதுவாய் நெருங்கி வருகின்றன.

“ஐயோ….. ஐயோ”

கண்ணில் தெரியுது வானம் – 2001

– ஞானம் 2001

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *